Monday, December 5, 2016

பொருப்புகளைச் சுமப்பதனால் எதிர்கொள்ளும் சவால்கள்

பொருப்புகளைச் சுமப்பதனால் எதிர்கொள்ளும் சவால்கள்

பாகம் - 2
- இமாம் முஹம்மது அல்-ஆஸி

தமிழில்: சம்மில்



முதல் ஃகுத்பா:

சகோதர, சகோதரிகளே! அல்லாஹ்வை மறுக்கின்ற மக்களுக்கும் அல்லாஹ்வை எதிர்க்கின்ற மக்களுக்கும் மத்தியில் கஷ்டங்களிலும், இன்னல்களிலும், துன்பங்கள் நிறைந்த நேரங்களிலும் அல்லாஹ் ஒருவனையே நோக்கி மீளும் முஸ்லிம்களே! நம்மைச் சூழவும் அரங்கேறிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளும் அதன் ஒருங்கமைந்த தொகுப்புகளும் முஸ்லிம்களிடம் வாய்க்கப்பெற்றுள்ள இஸ்லாமிய சுய-நிர்ணய உரிமை, தன்னம்பிக்கை, திடவுறுதி ஆகியவற்றை மடைமாற்றுவதற்காகவும் தோல்வியடையச் செய்வதற்காகவுமே நடைபெற்று கொண்டிருக்கிறது.

நாம் வசிக்கும் உள்ளூர் பகுதியில் துவங்கி நம் பிராந்திய வட்டாரத்திலிருந்து உலகளாவிய தொடர்புகள் வரை (நமக்கெதிராக) நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து வித கபடச்செயல்களையும் ஒன்று விடாமல் விளக்கிக் கூறுவதென்பது இயலாத காரியமே. இருப்பினும், இதுபோன்று துரிதகதியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சகல விதமான முன்னேற்றங்களுக்கும் அதன் வளர்ச்சிக்குமான முக்கிய நோக்கம் என்பது பற்றுறுதி கொண்ட முஸ்லிம்களிடம் அமையப்பெற்றுள்ள திடவுறுதியையும் சுய-நிர்ணய உரிமையையும் ஒட்டுமொத்தமாக அவர்களிடமிருந்து அகற்றுவது என்ற ஒற்றைக் கருத்திலேயே குவியமடைகிறது. அல்லாஹ்வுடனான தொடர்பிலே இருக்கும் நாம்; அவனுடைய துணையைக் கொண்டும் உதவியைக் கொண்டும் செயல்படும் நாம் இம்மாதிரியான சூழலுக்கு மத்தியிலே நமது செயல்பாடுகள் குறித்தறிய நம்மை இங்கே நிலைநிறுத்தியுள்ளது அல்லாஹ்வுடைய விருப்புறுதி ஒன்றே என்பதை மனதில் நன்கு பதிய வைத்துக்கொள்வதோடு எச்சூழ்நிலையிலும் உறுதியிழந்து தள்ளாடிவிடவோ அல்லது தோல்வி மனப்பான்மையால் பின்வாங்கிவிடவோ கூடாது.

இத்தகைய நிகழ்வுகள் நம்முடைய இத்தலைமுறைக்கு ஒன்றும் பிரத்தியேகமானதல்ல. அல்லாஹ்வின் தூதரோடு நம்மை இணையச் செய்யும் பாலம் என்ற ரீதியிலே பல்வேறு தலைமுறையினர் நமக்கு முன்னர் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். இவர்களும் கூட, காஃபிர்களின் விழிகளையும் முஷ்ரிக்குகளின்  விழிகளையும் பார்த்து "எங்கள் நாயன் அல்லாஹ் ஒருவனே" என்று கர்ஜித்து கூறியவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அதே அளவு தாக்குதல்கள், இன்னல்கள், எதிர்ப்புகள், வசைமொழிகள் முதலியவற்றை அனுபவித்துவிட்டுத் தான் இவ்வுலகை விட்டுப் பிரிந்திருக்கின்றனர்.

அல்லாஹ் (சுப்ஹானா) கூறுகிறான்:

إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَان تَذَكَّرُو فَإِذَا هُم مُّبْصِرُون ا
                                                                                    

"நிச்சயமாக அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னத்தைப் பற்றிய பூரண பிரக்ஞையுடன் (தக்வா) இருக்கிறார்களே அத்தகையவர்கள் ஷைத்தானுடைய செல்வாக்கினால் தீண்டப்படுவார்களேயானால், அதுசமயம் அவர்கள் (அல்லாஹ்வின்) நினைவுகூரலை நோக்கி மீண்டு விடுவார்கள்; (இதன் விளைவாக) அவர்கள் (அகப்) பார்வையைப் பெற்றுவிடுகிறார்கள்"

(சூறா அல்-ஆஃராப் 7:201)

நிச்சயமாக அல்லாஹ்வின் அதிகார பிரசன்னத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான நடத்தையைக் கொண்டும் அணுகுமுறையைக் கொண்டும் எவர்கள் இவ்வுலக வாழ்வை நெறிப்படுத்திக் கொள்கிறார்களோ - குறிப்பாக நம்மைச் சூழவும் அரங்கேறிக்கொண்டிருக்கும் இத்தகைய நிகழ்வுகளுக்கும் வளர்ச்சிகளுக்கும் மத்தியில் - அவர்கள்தான் அல்லாஹ்வுடைய தண்டனையும் கடுமையான வேதனையும் பீடித்துக் கொள்வதை விட்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்பவர்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّ الَّذِينَ اتَّقَوْا
"நிச்சயமாக அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னத்தைப் பற்றிய பூரண பிரக்ஞையுடன் (தக்வா) இருப்பவர்கள்…..”

இதுதான் இறையச்சத்தின் உணர்வு. நீங்கள் அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னத்தைப் பற்றிய பூரண விழிப்புடனேயே செயலாற்றுகிறீர்கள். அல்லாஹ்வின் மீது தங்களைத் திணித்துக் கொள்பவர்களைப் பற்றியோ அல்லது திணிக்க முயலுபவர்களைப் பற்றியோ அல்லது அல்லாஹ்வுக்காக தங்களைத் தாங்களே அர்பணித்தவர்கள் போல பாவனைச் செய்பவர்களைப் பற்றியோ நீங்கள் எவ்வித சிரத்தையும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை.

إِنَّ الَّذِينَ اتَّقَوْا

"நிச்சயமாக அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னத்தைப் பற்றிய பூரண பிரக்ஞையுடன் (தக்வா) இருப்பவர்கள்…..”

இவ்வகை மனிதர்கள்; குறிப்பாக இவ்விசித்திர மக்கள் கூட்டம் "அல்லதீ நத்தக்கவ்". இங்கே "தக்வா" எனும் பதம், இத்தகைய நிகழ்வுகளுக்கும் விவகாரங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் மத்தியிலே அல்லாஹ்வைப் பற்றிய பூரண பிரக்ஞையுடன் செயலாற்றிவரும் அம்மக்கள் திரளை வரையறுப்பதை விடுத்து, ஆங்காங்கே அவ்வப்போது துச்சமாகப் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற மாற்று அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் தளர்வான வார்த்தையாக பயன்படுத்தப்படவில்லை.

இராணுவ தொழிற்பாடுகளைப் பற்றிய தகவல்களை நீங்கள் செவியேற்கின்றீர்கள்; யுத்த அறிவிப்புகளைச் செவியேற்கின்றீர்கள்; மனிதாபிமானமற்ற பிரச்சாரங்களைச் செவியேற்கின்றீர்கள்; தீவிரவாதிகள் இவ்வுலகின் எப்பேர்பட்ட இருள்படிந்த மூலையில் செயலாற்றிக்கொண்டிருந்தாலும் அவர்களை நோக்கி விரைந்து செல்வோம் எனும் ஜனாதிபதிகளின் அறிக்கைகளை செவியேற்கின்றீர்கள்; இன்னும் பழமைவாத, மதச்சார்பற்ற, அரசியல் சார்ந்த, மதம் சார்ந்த, இவாஞ்ஜெலகோ இயக்கம் ஆகியவற்றின் கூட்டமைப்பில் உருவெடுத்துள்ள ஒரு மாபெரும் சக்தியின் வஞ்சகத் தொழிற்பாட்டினை நீங்கள் தெளிவாக மெய்யுணர்ந்து கொள்கிறீர்கள். இவையனைத்தையும் செவியேற்றுக்கொண்டும் அவதானித்துக்கொண்டுமிருக்கும் உங்கள் உள்ளங்களில் அல்லாஹ்வின் அதிகார பிரசன்னத்தைப் பற்றிய பிரக்ஞை இல்லாதுபோனால், "இன்னல்லதீ நத்தகவ்" என்ற இறைவசனத்தின் அர்த்தங்கள் மேற்கோளாக சிறப்பித்துக் கூறுபவர்களில் ஒருவராக இருப்பதை விட்டும் நீங்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு விட்டீர்கள்.

தரை விரிப்பில் பொத்தல்கள் ஏற்படும் அளவுக்கு நீங்கள் தொழுது கொள்ளலாம்; அதிக எண்ணிக்கையிலே நீங்கள் நோன்பும் நோற்றுக் கொள்ளலாம். எனினும் நீங்கள் செயலூக்கமாக, உணர்வு பூர்வமாக, மனோவியல் ரீதியாக அல்லாஹ்வின் அதிகார பிரசன்னத்தைப் பற்றிய பிரக்ஞையுடன் இல்லையெனில் இவ்விறைவசனத்தின் நிஜ உலக தொழிற்பாடுகளை விட்டும் நீங்கள் சேய்மைப்பட்டு விட்டீர்கள்.

إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَان تَذَكَّرُو

"நிச்சயமாக அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னத்தைப் பற்றிய பூரண பிரக்ஞையுடன் (தக்வா) இருக்கிறார்களே அத்தகையவர்கள் ஷைத்தானுடைய செல்வாக்கினால் தீண்டப்படுவார்களேயானால், அதுசமயம் அவர்கள் (அல்லாஹ்வின்) நினைவுகூரலை நோக்கி மீண்டு விடுவார்கள்;……”

அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னம் பற்றிய மூலோபாய முக்கியத்துவத்தை தங்கள் உள்ளங்களிலும் இதயங்களிலும் தக்கவைத்துக்கொண்டுள்ள இந்த "முத்தக்கீன்கள்", இவர்கள் ஷைத்தானின் செல்வாக்கினால் தீண்டப்படுவார்களேயானால்; ஷைத்தானின் உளவியல் ரீதியான, இடைவெளி விட்டு நிகழ்கிற அத்தகைய செல்வாக்கினால் தீண்டப்படுவார்களேயானால்; நினைவிலிருத்திக் கொள்ளுங்கள், "அல்லதீ னத்தகவ்" என்ற இக்கூட்டத்தார் மீது தொடர்ச்சியான, நீடித்திருக்கும் செல்வாக்கினை ஷைத்தானால் தக்கவைத்துக் கொள்ள முடியாது.

இதனால்தான் அல்லாஹ் - தபாரக்க வத'ஆலா - தெரிவுசெய்யப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு நமக்கு கற்றுத் தருகிறான். அவன் பேசுவதைக் கவனியுங்கள்! "இன்னல்லதீ னத்தகவ் இதா மஸ்ஸஹுமுஷ் ஷைத்தானி ததக்கரூ" "இந்த முத்தகீன்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டால், ஷைத்தானால் பீடிக்கப்பட்டால் அல்லது ஷைத்தான் இவர்கள் மீது செல்வாக்கு செலுத்தினால்" என்பன போன்ற வார்த்தைகள் இவ்விறைவசனத்தில் பயன்படுத்தப்பட வில்லை. அல்லாஹ் நமக்கு மிகவும் நுட்பமான, துல்லியமான, கணக்கீடு செய்யப்பட்ட வார்த்தைகளை வழங்கியுள்ளான் என்றபோதிலும் சில நேரங்களில் நமது உள்ளங்கள் இவ்வித அர்த்தங்களை நடைமுறைப்படுத்தத் தயாராக இல்லை அல்லது துரிதகதியில் செயலாற்ற முனையும் மனித இயல்பின் காரணமாக அல்லாஹ்வின் வழிகாட்டுதலிலுள்ள நுட்பத்தினைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம் அல்லது கவனிக்கத் தவறி விடுகிறோம்.

சகோதர, சகோதரிகளே! அல்லாஹ் கூறுகின்றான்:

إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَان

ஷைத்தானுடைய தோன்றி மறையும் தாக்கத்தால் நாம் பாதிக்கப்படுவோம் அல்லது தொடப்படுவோம் அல்லது பீடிக்கப்படுவோம் எனில், நம்மிடமிருக்கும் தக்வா, ஷைத்தானுடைய செல்வாக்கின் பெருநீளத் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.


إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَان

"மஸ்" مَسَّ என்ற வார்த்தையின் பொருள் என்ன? து எத்தகைய தாக்கம்? நம்மோடுள்ள ஷைத்தானின் இத்தொடர்பு தான் என்ன? நாம் அல்லாஹ்வுடன் இருக்கிறோம்; அவனுடைய அதிகார பிரசன்னத்தைப் பற்றிய பூரண பிரக்ஞையோடிருக்கிறோம்; அவனது விருப்புறுதியை நடைமுறைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹ்வால் நமக்கு இறக்கியருளப்பட்ட அவனது வசனங்களை அடிக்கொருதரம் பாராயணம் செய்வதல்ல இதன் பொருள். இது - வெறுமனே இவ்வசனங்களை வாய் ஜாலங்களாக ஒப்பிப்பதென்பது - ஒரு தோல்வி! மாறாக இவ்வார்த்தைகள் அன்றாட வாழ்வின் நடத்தையாக மாற வேண்டும். இந்த நடத்தையினுள் ஓர் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். இவ்வழிகாட்டுதல் நேராக மனிதனை அல்லாஹ்வை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும்.

நம்மீது ஆதிக்கம் செலுத்தும் ஷைத்தானுடைய மேம்போக்கான இத்தொடர்பின் எதார்த்தத்தை அல்லாஹ் விவரிக்கின்றான். அது தொடர்பில் இங்கே பிரயோகிக்கப்படும் வார்த்தை "மஸ்ஸஹும்" . மேலும் "மஸ்" எனும் பதம், சில நேரங்களில் நாம் விளங்கிக் கொள்ள முற்படுவது போன்று நம்முடைய துல்லியமற்ற புரிதலின் பரப்பெல்லைக்கு உட்பட்டதல்ல. நம்மீது ஏற்பட்டுள்ள ஷைத்தானின் இந்தத் தாக்கம் பெளதிக ரீதியானதல்ல. ஏனெனில், அத்தகைய (பெளதிக ரீதியான) தாக்கங்களைக் கடந்து செல்ல முதிர்ச்சி பெற்றவர்களாகவே நாம் இருக்கிறோம். ஆனால் இதுவோ மீவியற்பியல் ரீதியான, பெளதிக தாக்கத்திற்கும் அப்பார்பட்ட ஒன்றாக இருக்கிறது அல்லது நம் வாழ்வினுள் ஊடுருவும் பொருட்டு ஷைத்தானுக்கு வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட அளவிலான உளவியல் ரீதியானதோர் தாக்கமாக தன்னை அடையாளப்படுத்துகிறது.

ஷைத்தான் நமது உளவியல், உள்ளுணர்வுகள், உள்ளார்ந்த சிந்தனைகள், விருப்புறுதி ஆகியவற்றில் எவ்வாறு அத்துமீறி நுழைய முயற்சிப்பான் என்பதை, நம்மால் புரிந்து கொள்ள இயலுமாயின், வேறு சில இறைவசனங்கள் மூலம் அல்லாஹ் நமக்கு விளக்கிக் கூறியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

إِن يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهُ
                                                                                    (சூறா ஆல-இம்ரான் 3:140)

"(இராணுவத் தொடர்பாலும் அதன் எதிர்மறை முடிவுகளாலும் உருவெடுத்த) கடுமையான உளவியல் அதிர்வுகளை ஏற்படுத்த வல்ல ஓர் தாக்கம் உங்களுக்குள் இழையோடியது என்றால்..."

நினைவிலிருத்திக் கொள்ளுங்கள், இங்கே அவன் ரணங்களைப் பற்றிப் பேசவில்லை; போர்க்களத்தில் மனித உடல் தாங்கி நிற்கும் பெளதிக ரீதியான வெட்டுக்காயங்களையும் கீறல்களையும் பற்றிப் பேசவில்லை; மேற்கூறப்பட்ட எந்த ஒன்றினைப் பற்றியும் அல்லாஹ் - சுப்ஹானா - அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் பற்றுறுதி கொண்ட ஒரு முஸ்லிமின் குணாதிசயமானது, உடல் ரீதியான வேதனைகளைக் கடந்து செல்ல முதிர்ச்சி பெற்றதாக இருக்க வேண்டும் என்பதே அவனுடைய எதிர்பார்ப்பு.

إِن يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهُ

இவ்வசனம்; இவ்வுத்தரவு; முதிர்ச்சியின் வெளிப்பாடாய்ப் பரிணமிக்கும் இவ்வாக்குமூலம் போர்களத்தில் இறக்கியருளப்பட்டது. போர்களங்களே இல்லாத ஏதோ ஒரு அயல் உலகில் நாம் வாழவில்லை. அல்லாஹ்வோடும், நமது உள்ளத்திற்கும் இதயத்திற்கும் அவன் கூற விரும்பும் செய்திகளோடும் நமக்கு ஏற்பட்டுள்ள பிணைப்பின் வலிமை தான், நம்மைச் சூழவும் நிலைகொண்டுள்ள (அனைத்து வகை யுத்தங்களையும் உள்ளடக்கிய) கள மெய்மைகளோடு நமக்கிருக்கும் தொடர்பின் வலிமைக்குத் தோதான வகையிலே இத்தகைய அர்த்தங்களை வெளிக்கொணரும். ஊடகங்களின் வாய்களில் துவங்கி பேரழிவையும் பெரும் நாசத்தையும் உண்டாக்கும் ஆயுதக் கிடங்குகள் வரை நமக்கெதிராக பிரயோகிக்கப்படும் அனைத்து வித உபகரணங்களையும், தொடுக்கப்படும் பல்வேறு யுத்தங்களையும் அத்தகைய மெய்மைகளுக்கோர் உதாரணமாகக் கூறலாம்.

إِن يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهُ

நீங்கள் பாதிப்புக்குள்ளானால்; உங்களுடைய மனவுறுதியில், உச்சபட்ச உந்துசக்தியில், உத்வேகத்தில் பாதிப்புக்குள்ளானால்; அபரிமித பாதிப்புகளை உங்கள் மீது ஏற்படுத்தும் அளவுக்கு போர்க்களத்தில் நேரடியாக பிரசன்னமாகியிருந்ததன் விளைவுகள் உங்கள் ஆழ்மனதில் ஊடுருவிச் சென்றால், மனதிலிருத்திக் கொள்ளுங்கள்! இவ்வியக்கவியலின் எதிரொலியானது, அத்தருணத்தில் உங்களைச் சூழவிருந்த மக்களின் உளவியலையும், மனவுறுதியையும், உந்துசக்தியையும், சேர்த்தே பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது.

إِن يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهُ

உங்கள் மீது திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்புச் செயல்பாடுகளின் விளைவாக, உங்கள் ஆழ்மனதில் நீங்கள் அனுபவிக்க நேர்ந்தது போன்று மனோதிடத்தைக் குன்றச் செய்யும்படியான இதே அளவிலான பாதிப்பு, நீங்கள் சார்ந்துள்ள உங்களுடைய சமூகப் படிநிலை அமைப்பையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. இந்த இயக்கவியல், இவ்விறைவசனம் இறக்கியருளப்பட்ட உஹுதுப் போர்க்களத்தின் அச்சூழமைவோடு மட்டும் பொருந்திப்போகக்கூடிய ஒன்றல்ல. மாறாக, யுத்தங்கள் பிரகடனப்படுத்தப்படும் இன்றைய உலகுக்கும் இது முற்றிலும் பொருத்தமானதே.

இன்றியமையா தேவையுடைய இத்தகைய இறைவார்த்தைகளைப் பற்றிய நம்முடைய புரிதலை சுத்திகரிப்பு செய்வதன் நிமித்தம் மற்றுமொரு வசனத்தில்; நம்மைச் சுற்றியுள்ள இப்பூவுலகின் மெய்மைகளோடு நடைமுறை தொடர்பிலிருப்பவர்களைப் பற்றியும், அல்லாஹ்வின் உரையாடல்களோடும் அவனது வார்த்தைகளோடும் மனோவியல் ரீதியான உறவுமுறையினை ஏற்படுத்திக்கொண்டவர்களைப் பற்றியும் அல்லாஹ் விவரிக்கின்றான்.

நாம் ஜீவித்துக் கொண்டிருக்கும் நம்முடைய இன்றைய காலச்சூழலில் எந்த ஒரு தனிப்பட்ட மனிதரிடமும் எளிதில் இதுபோன்ற அம்சங்களை ஒருமித்துக் காணவியலாது. இங்கே சில முஸ்லிம்கள் குர்'ஆனிய வசனங்களை - அர்த்தங்களை விளங்கிக்கொள்ளாமல் - நல்ல காதுக்கினிய ராகத்தில் கேட்டு தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்ள முற்படும் அதேநேரம் இப்பூவுலகின் மெய்மைகளை விட்டும் தங்களைத் தாங்களே சேய்மைப்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய முஸ்லிம்களிடம், நீங்கள் (ஏழைகள் வாழும்) குடிசைப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று கூற வேண்டாம். இத்தகைய முஸ்லிம்களிடம், சுற்றியுள்ள அதிகாரத் தரகர்களை உசுப்பிவிடும் கருவி எது; எவ்விடயங்கள் அவர்களை கிளர்ச்சியடையச் செய்கின்றன என்பனவற்றைக் குறித்து நீங்கள் உங்கள் கண்களைத் திறக்க வேண்டும்; விழிப்படைந்து கொள்ள வேண்டும் என்றும் கூற வேண்டாம். முடியாது! இவற்றைக் கொண்டு இவர்களை தொந்தரவு செய்ய முடியாது. மனித சமூகத்திற்கு அல்லாஹ்விடமிருந்து வரும் நிஃமா, ஹைர் ஆகியவற்றை விட்டும் சேய்மைப்படுத்தப்படும் மக்கள் மீது, இயற்கை நிகழ்வாக அல்லாமல் மனிதர்களின் கைகளால் திணிக்கப்படுகின்ற செயல்திட்டங்களையும் திட்டமிட்டு இயற்றப்பட்ட கொள்கைகளையும் உள்ளடக்கிய இத்தகைய வேத வசனங்களின் வீச்செல்லைக்கு மேற்கூறப்பட்ட முஸ்லிம்களின் சிந்தனைப் பரப்பை விரிவடையச் செய்ய உங்களால் இயலாது.

முன்னொரு காலத்தில், இப்பூவுலகின் மெய்மைகளோடு தங்களது வாழ்வைப் பிணைத்துக் கொண்டு வாழ்ந்து மறைந்த அவ்வகை மனிதர்களைப் பற்றி அல்லாஹ் (சுப்ஃஹானா) தன்னுடைய - மனிதனோடு உறவாடும் - வார்த்தைகளில் பின்வருமாறு கூறுகிறான்.

     مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّه
                                                                                       
"......அவர்களை இன்னல்களும் துன்பங்களும் பிணிகளும் பீடித்துக்கொண்டதோடு, (இன்னல்கள் பலவற்றால்) கடுமையாக அலைக்கழிக்கப்பட்டார்கள். எந்தளவிற்கெனில் அல்லாஹ்வின் தூதரும் அவரோடிருந்த பற்றுறுதிகொண்டவர்களும் 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்?' என்று (என்ற கேள்வியை முன்வைத்து) அரற்ற ஆரம்பித்துவிட்டார்கள்..."
(சூறா அல்-பகரா 2:214)

இது அல்லாஹ் நம்மிடம் கூறுவது.

நாம் ஒருவித செல்வாக்கினால் பீடிக்கப்படுகின்றோம். நம்மீது ஏற்பட்டுள்ள இச்செல்வாக்கானது முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அளவுக்கொன்றும் உக்கிரம் மிகுந்ததல்ல. இச்செல்வாக்கானது நம்முடைய மனத்தின் ஆணிவேரில் ஊடுருவி நமது பற்றுறுதியை கீழறுப்புச் செய்துவிடப் போவதில்லை. என்றபோதும், தனிநபர் என்ற ரீதியிலே நாம், நம்மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் இச்செல்வாக்கினைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவுக்கேனும் பிரக்ஞையோடு இருத்தல் அவசியம்.

مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ

நாம், நம்முடைய செயல்நோக்கத்திலும் உளவுறுதியிலும் ஊடுருவிச்செல்லும் சகல வித சிந்தனைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளோம். இப்பாதிப்பானது, இருக்க வேண்டிய முறைப்படி, மேம்போக்கான ஒன்றுதான்.

مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ

இவ்வசனத்தில் வரும் "பஃஸா" எனும் பதம், மனிதனுடைய கைகள் முற்படுத்திய தாங்கிக்கொள்ளவியலா துன்பங்களையும் சிரமங்களையும் குறிக்கவே வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. யுத்தங்களை இதற்கோர் உதாரணமாகக் கூறலாம். இன்னும், "அத்-தர்ராஅ" என்பது கடவுளுடைய தொழிற்பாடுகளால் உருவெடுக்கக்கூடிய துன்பங்களையும் சிரமங்களையும் குறித்து நிற்கிறது. இயற்கைச் சீற்றங்களை இதற்கோர் உதாரணமாகக் கூறலாம். இவையனைத்தும் நமது சங்கற்பத்தை கீழறுப்பு செய்யவல்லதோர் தாக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளன; நமது மருங்கை நோக்கி வீசுகின்ற காற்றை நிறுத்த வல்ல ஆற்றல் பெற்றனவாக இருக்கின்றன.

مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا

அதுமட்டுமல்ல! நிலைகுலைவாலும் நாம் அல்லல்படுவது போல் தெரிகிறது. எப்படி நில நடுக்கத்தின் போது பூமியானது உறுதியிழந்து ஆட்டம்காணுமோ அது போன்று நடுக்கம் மேலோங்குகிற மனநிலையை நாம் உணர்கிறோம். நமது உடலின் மீது அல்லாமல் உளவியலின் மீது ஷைத்தான் ஏற்படுத்திய செல்வாக்கின் ஒட்டுமொத்த தாக்கம் காரணமாக இதுபோன்றே நாம் உணர்கிறோம்.

مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا

இம்மாதிரியான விளக்கங்களை விட மேலதிகமாக உங்களுக்கு என்ன வேண்டும்? மெய்மையை விட்டும் வெருண்டோடுபவர்களுக்கு இவ்விளக்கங்கள் பயனளிக்குமா? அல்லது வாழ்வின் எதார்த்த உண்மைகளுக்குத் தோதான அல்லாஹ்வுடைய வேத வசனங்களின் ஆழிய அர்த்தங்களை விட்டும் வெருண்டோடுபவர்களுக்கு இவ்விளக்கங்கள் பயனளிக்குமா? நிச்சயமாக பயனளிக்காது. இவர்கள் மெய்மறதியில் உழன்று கொண்டிருப்பவர்கள்.

நாம் அல்லாஹ்வுடன் இருக்கிறோமா; உலக வாழ்வில் நமக்குச் சவால்விடும் இத்தகைய உண்மைகளுக்கு நெருக்கமாக இருக்கிறோமா; நாம் எங்கிருக்கிறோம் என்பதை துலக்கமாகப் புரிந்துணர்ந்துகொண்டவர்களுக்கே அல்லாஹ்வுடைய இவ்வசனங்களும் இதன் ஆழிய அர்த்தங்களும் பயனளிக்கும். இதே உண்மைகளைப் பற்றித்தான் நாம் சென்று போன வாரங்களிலும், மாதங்களிலும், வருடங்களிலும் இடையறாது கேட்டு வருகிறோம்.

حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّه

இவையனைத்தும் (அனைத்துவித இன்னல்களும் சிரமங்களும்) அதன் ஒருங்கிணைந்த நிலையில் தனது தாக்குதலைத் தொடுத்தது. எந்தளவிற்கெனில் அல்லாஹ்வின் நபியாகிய அவரும் அவருடன் பற்றுறுதியோடிருந்தவர்களும் ஆற்றாமை நிலையின் உக்கிரம் தாளாமல் பின்வரும் கேள்வியையே முன்வைக்கத் துவங்கிவிட்டனர்: "அல்லாஹ்வின் உதவி எப்பொழுது தான் வரும்?" என்பதாக.

இதில், நம்மிலே பெரும்பான்மைபினரால் கவனத்தில் கொள்ளப்படாத அல்லது நம்மிலே பெரும்பான்மையினரால் இனம்கண்டுகொள்ளப்படாத நுண்ணியத் தகவல் ஒன்றிருக்கிறது. உடல் அனுபவித்து வரும் அல்லல்களைப் பற்றி கிஞ்சிற்றும் அக்கறைக் காட்டாத, அதேநேரத்தில் மனவலிமைக் குன்றுதலைப் பற்றி அதிகமதிகம் சிரத்தை எடுத்துக் கொள்ளும் தியாகம் புரிகின்ற முஸ்லிம்களிடமிருந்தும், இரத்தம் சிந்துகின்ற முஸ்லிம்களிடமிருந்தும் தான் இக்கேள்வியானது முறைப்படுத்தப்படுகிறது.

حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّه

சுணக்கமான, செயலற்ற நடத்தையின் பின்னால் தங்களை தாங்களே மறைத்து வைத்துக்கொண்டும், உலகத்து நிகழ்வுகளின் அரங்கிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாது பின் இருக்கைகளை தெரிவு செய்துகொண்டுமிருந்த அத்தகைய தருணங்களில் இவர்கள் அல்லாஹ்வின் வெற்றியை யாசிக்கவில்லை அல்லது சூழவும் அரங்கேறிக்கொண்டிருக்கும் நிஜ உலக நிகழ்வுகளுக்கு நேரெதிரான நிலைப்பாட்டை எடுத்ததனூடே மன ஆறுதல் அடைந்துகொண்டிருந்த அத்தகைய தருணங்களில் இவர்கள் அல்லாஹ்வுடைய வெற்றியையும் அவனுடைய உதவியையும் கேட்டு மன்றாடவில்லை. எவ்விடத்தில் உடலும் மனதும் அல்லல்பட்டதோ அவ்விடத்திலேயே இவர்கள் காணக்கிடைத்தனர். அத்தகையதோர் நெடியகால போராட்டத்தின் பிற்பாடு; ஷைத்தானுடைய மேம்போக்கான அத்தகைய தொடர்பின், செல்வாக்கின் பிற்பாடு பொறுமையிழந்தவர்களாய் இவர்கள் வெளித்தோன்றலானார்கள்.

அல்லாஹ்வின் நபியாகிய அவர் தானே தனது நிலைப்பாட்டை விட்டும் வெளித்தோன்றி "மத்தா நஸ்ருல்லாஹ்?", "அல்லாஹ்வின் வெற்றி எப்பொழுது வரும்?" என்று அரற்றலானார். நேரடியாக அல்லாஹ்விடமிருந்து வந்த இக்கேள்விக்கான பதில்:

أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
"அலா இன்ன நஸ்ருல்லாஹி ஃகரீப்",
"நிச்சயமாக அல்லாஹ்வின் வெற்றி மிகச்சமீபமாக உள்ளது; அது கைகளுக்கெட்டும் தொலைவில்தான் உள்ளது "

அல்லாஹ்வுடைய தூதர், அவருடன் பற்றுறுதியோடிருந்தவர்கள் ஆகியோரின் பாதையிலே தங்களை நிலைநிறுத்தியுள்ளவர்கள் மட்டும் தான் இவ்வார்த்தைகளைப் புரிந்துணர்ந்து கொள்ள தகுதி படைத்தவர்கள். நேரம் தவறாது மஸ்ஜிதுகளுக்கு செல்வதன் மூலமோ அல்லது சடங்கு சம்பிரதாயங்களை மையப்படுத்திய சிலவகை இஸ்லாமிய ஒருங்குதிரள்களுக்குச் செல்வதன் மூலமோ தங்களது மனசாட்சியை திருப்தி படுத்த விளையும் "மகிழ்வாய் வாழ்வது அதிர்ஷ்டம்" முஸ்லிம்களிடம் இம்மாதிரியான வசனங்களை நீங்கள் பன்முறை ஓதிக் காண்பிக்கலாம்இம்மாதிரியான செயல்பாடுகளின் ஊடாக 'தங்களது இஸ்லாம் ஆழமானது' என்பதை இவர்கள் இலகுவாக நிரூபித்து விடலாம் அல்லவா.

நாம் மீள்பரிசீலனை செய்துகொண்டிருக்கும்; மீளவும் புத்துயிர்பிக்க முயன்று கொண்டிருக்கும் அல்லாஹ்வின் தூதர், அவருடன் பற்றுறுதியோடிருந்த முஸ்லிம்கள் ஆகியோரது வருடங்கள் நெடுகிலுமான "முதுகெலும்பை முறிக்க வல்ல" போராட்டச் சூழலோடு, மேற்கூறப்பட்ட 'முஸ்லிம்களின்' சுணக்கமான தொழிற்பாடுகளையும் சுகபோகச் சூழலையும் எவ்வாறு ஒப்பீடு செய்து பார்க்க முடியும்.

அல்லாஹ்வின் தூதர், அவருடன் பற்றுறுதியோடிருந்த முஸ்லிம்கள் ஆகியோரது தோழமையிலும் அவர்களது பாதையிலும் நாம் தொடர்ச்சியாக நிலைத்திருப்போமெனில் இவ்வசனங்கள் மேற்கோள் காட்டும் கூட்டத்தினருள் நாமும் உள்ளடங்குவோம் என்பது திண்ணம்.

மீண்டும் முதல் ஆயத்:

إِنَّ الَّذِينَ اتَّقَوْا
"நிச்சயமாக அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னத்தைப் பற்றிய பூரண பிரக்ஞையுடன் (தக்வா) இருப்பவர்கள்…..”

இவ்விறைவசனத்தின் உள்ளீடானது, "தக்வா"வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய உயிரோட்டமுள்ள; துடிப்பானதோர் அர்த்தமாகத்தான் தன்னை அடையாளப்படுத்துகிறதே தவிர இக்காலச் சூழலில் மக்கள் மனதினுள் உழன்றுகொண்டிருக்கும் அர்த்தமற்ற இயந்திரகதியிலான அசைவுகளாக அல்ல. ஆம்! இக்காலகட்டத்து முஸ்லிம்களின் மனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. காஃபிர்களாலும் முஷ்ரிக்குகளாலும் உற்பத்தி செய்யப்பட்ட, வடிவமைக்கப்பட்ட, வழிநடத்தப்பட்ட, வழிகேட்டுக்கிட்டுச் செல்லப்பட்ட இந்த வெகுஜன மனநிலையானது பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்! பற்றுறுதி கொண்ட முஸ்லிம்களாகிய நம்மைச் சார்ந்தவர்களுக்கென்று இறக்கியருளப்பட்ட அல்லாஹ்வுடைய வேத வசனங்களின் அர்த்தங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ
"நிச்சயமாக அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னத்தைப் பற்றிய பூரண பிரக்ஞையுடன் (தக்வா) இருக்கிறார்களே அத்தகையவர்கள் ஷைத்தானுடைய செல்வாக்கினால் தீண்டப்படுவார்களேயானால்……”

நினைவிலிருத்திக் கொள்ளுங்கள்! இவ்வசனங்களை நீங்கள் படிக்கும் பொழுதும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் பொழுதும் நினைவு கூறுதலின் நிமித்தம் குர்'ஆனை அணுகும் பொழுதும் நம்முடைய இக்காலச் சூழலுக்கு முற்றிலும் ஏற்புடைய வகையிலே எவ்வாறு இவ்வசனங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன என்பதனை நீங்கள் ஆய்ந்தறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஏனெனில் "தக்வா" என்பது இன்று இன்றியமையாதது. மேலும், ஷைத்தானுடைய இந்த "மஸ்"ஷைத்தானுடைய இந்தச் செல்வாக்கு; இருக்கவேண்டிய முறைப்படியான மேம்போக்கான இச்செல்வாக்கு நம்மைச் சூழவும் காணக்கிடைக்கின்றது. அல்லாஹ்வுடைய வார்த்தைகளின் இத்தகைய பன்முகப் பரிமாணங்களையும் அதன் வீச்செல்லையையும் ஆய்ந்தறிந்து கொள்ளப் பிரயத்தனப்படும் ஒவ்வொருவர் மீதும் இச்செல்வாக்கின் கொடிய தாக்கமானது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَان

நம் உள்ளுணர்வுகளிலும் உள்ளார்ந்த சிந்தனைகளிலும் ஊடுருவியுள்ள ஷைத்தானுடைய இச்செல்வாக்கு அல்லது மேம்போக்கான ஷைத்தானின் இத்தொடர்பு; இது எளிதில் புறமுதுகிடக்கூடிய தற்காலிகமான ஒன்றே.

إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِّنَ الشَّيْطَان تَذَكَّرُو
“…..அத்தகையவர்கள் ஷைத்தானுடைய செல்வாக்கினால் தீண்டப்படுவார்களேயானால்……”

அல்லாஹ்வை நாம் அணுகுவதற்கும், அவனது நினைவை நம் பக்கம் மீட்டெடுப்பதற்கும், அவனது பாதையில் மீளவும் நம்மை நிலைநிறுத்திக்கொள்வதற்கும் இவ்வகை இயக்கவியலே நமக்குத் தேவைப்படுகிறது. நாம் சிந்தனையற்றோராக இருப்போமெனில் இவற்றை நம்மால் செய்ய இயலாது. மீண்டும் சொல்கிறேன்நம் வாழ்வில் அல்லாஹ்வின் நினைவையும் அவனது அதிகார முக்கியத்துவத்தின் பிரசன்னத்தையும் நமக்கு உணர்த்தும் வகையிலான அத்தகைய தவறுகளை நாம் செய்யவில்லை எனில் இவ்வசனத்தின் இயக்கவியலை நம்மால் புரிந்துணர்ந்துகொள்ள இயலாது.

تَذَكَّرُو
“….அதுசமயம் அவர்கள் (அல்லாஹ்வின்) நினைவுகூரலை நோக்கி மீண்டு விடுவார்கள்……”

நம் இயலுணர்வை நோக்கியும், நம் மனத்தை நோக்கியும், நம்மோடிருக்கும் அல்லாஹ்வின் பிரசன்னத்தை நோக்கியும் மீண்டு வரும் தருணம் இதுதான்.

فَإِذَا هُم مُّبْصِرُون ا
“……(இதன் விளைவாக) அவர்கள் (அகப்) பார்வையைப் பெற்றுவிடுகிறார்கள்……”

இதன் விளைவாக நாம் பார்க்கத் துவங்குகிறோம். நம்மைச் சூழவும் அரங்கேறிக்கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய துல்லியமான மதிப்பீட்டைப் பெறத் துவங்குகிறோம். அவற்றைக் குறித்த நுண்ணறிவையும் மேலதிகத் தகவல்களையும் ஈட்டத் துவங்குகிறோம். நாம் கடந்து செல்ல வேண்டிய செயல்முறை இதுதான்.

(இதனை வைத்துக் கொண்டு சில மக்கள் அவசரகதியில் இறுதிமுடிவுக்கு குதித்துவிட முற்படுவது போல அல்லது இத்தகைய நுட்பமான தகவல்களை அசட்டையாக கையாள்வது போல) அல்லாஹ்வுடன் அன்னியோன்னியமான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதன் நிமித்தம் தவறு செய்ய நமக்கு முழுஉரிமமும் வழங்கப்பட்டுள்ளது என்பதாக இதற்கு அர்த்தம் அல்ல.  இல்லை! அல்லாஹ்வுக்காக நாம் மேற்கொள்ளும் நம்முடைய தியாகத்தின் ஊடாகவும், (அல்லாஹ்வின் பாதையில் உயிர்நீத்தலான) உச்சபட்ச தியாகத்தை மேற்கொள்ளும் அளவுக்கு தியாகத்தின் அவ்வீச்செல்லையை சென்றடைந்த நம்மவர்களின் வாழ்க்கைப் பாதையை புரிந்துகொள்வதன் ஊடாகவும் மட்டுமே இவ்வாக்கியத்தின் ஆழிய நடைமுறை அர்த்தங்களை நம்மால் புரிந்துணர்ந்துகொள்ள முடியும்.

சென்று போன மாதங்களிலும் வருடங்களிலும் இத்தகைய பகுதிகளைத்தான் நாம் நுண்ணாய்வு செய்து வருகிறோம். இது நிறுவப்பட்டதோர் உண்மையாகிவிட்டது. முஸ்லிம்களின் உடம்புகளிலிருந்து இரத்தம் பீரிட்டு ஓடுகின்ற விஸ்தாரமான நிலப்பரப்புகளைக் கொண்ட பல்வேறு பகுதிகள் இப்பூவுலகில் உள்ளன. இத்தகைய பகுதிகளிலிருந்து தான் ஷைத்தான் நமது ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமிய சங்கற்பத்தை கீழறுக்கும் பொருட்டு நம் மனவுறுதியினுள் நழுவிச் செல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறான். நாம் அல்லாஹ்வுடைய இப்பாதையிலே நிலைபெற்றும் அவனது இவ்வார்த்தைகளை நினைவுகூர்ந்து கொண்டும் இருப்போமெனில், அவன் நம்மை இத்தகைய தவறுகளில் நிலைத்திருப்பதை விட்டும் பாதுகாத்துக் கொள்வதோடு மீளவும் இம்மாதிரியான தவறுகள் புரிவதை விட்டும் தடுத்துக் கொள்வான்.

இம்மாதிரியான தவறுகள் நம்மை விட்டும் சேய்மைப்படுத்தப்படும். இச்செயல்முறையின் ஊடாக நாம் மேலதிக அறிவையும் மேலதிக தகவல்களையும் மேலதிக அகவயத்தையும் பெற்றுக்கொள்கிறோம். இத்தகைய பகுதிகளைப் பற்றிய அறியாமை மிகுதியில் நாம் திளைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதே அவர்களின் - நமது எதிரிகளின் - எதிர்ப்பார்ப்பு. அவர்களிடம் முறைப்படுத்தப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. அதனை அவர்கள் முப்பது அல்லது நாற்பது வருடங்களின் பிற்பாடே வெளிக்கொணருவர். சில நிகழ்வுகள் வரலாறு எனும் கோவைக்குள் செல்லும் வரை தங்களிடமுள்ள ரகசியத் தகவல்களை ஒருபோதும் அவர்கள் பொதுமக்களிடம் வழங்க மாட்டார்கள்; அதனை பகிரங்கபடுத்தவும் மாட்டார்கள்.

இத்தகைய தகவல்கள் இப்பூவுலகின் சமூக மெய்மைகளை பறைசாற்றக் கூடியதாக மட்டும் இருக்கவில்லை. மாறாக எதிர்காலத்தை நோக்கிய இவர்களின் வஞ்சகத் திட்டங்களை தோலுரித்துக் காட்டக் கூடியதாகவும் இருக்கிறது. சூட்டிகையான மனத்திற்குச் சொந்தக்காரரான ஒருவர் இன்றைய உலகில் உயர்ரக கல்வி அறிவைப் பெற்றுக்கொள்வதன் நிமித்தம் வெளிப்பிரதேசங்களுக்கு பிரயாணம் மேற்கொள்ள வேண்டுமெனில் அவர் பலதரப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அதன் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளையும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. என்றால், இது - வார்த்தைகளின் அனைத்து அர்த்தங்களிலும் - அல்லாஹ் மனித வர்க்கத்துக்கு வகைசெய்துள்ள அருட்கொடைகளுக்கெதிரான ஓர் பகிரங்க யுத்தம் என்றே கூற வேண்டும்.

நம்மைச் சூழவும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பல்வேறு அனர்த்தங்களுக்கும் திரிபுபடுத்தப்பட்டத் தகவல்களுக்கும் நாம் முகம்கொடுப்போமெனில், இதுகாறும் கூறிவந்த விடயங்கள் எதுவுமே நாளுக்கு-நாள், நேரத்திற்கு-நேரம் நம் சிந்தையினுள் முகிழ்க்கும் நமது அன்றாட வாழ்வின் வீரியமிக்கச் சிந்தனைகளாக மாறப்போவதில்லை. அல்லாஹ்வுடைய தூதரும் (ஸல்) முன்தோன்றியத் தலைமுறையினரான பற்றுறுதி கொண்ட முஸ்லிம்களும் போராட்டத்தினூடாக தாங்களே தங்களுடைய உரிமைகளையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்ட வாழ்வின் அக்குவியப் புள்ளிக்கு நம்மை நாம் இட்டுச் செல்லாத வரை நம்முடைய இந்த ஆற்றாமை நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

"(நபியே!), அவர்கள் உன்னிடம்இது எப்பொழுது நிகழும்என்று கேட்பார்கள். சொல்லுங்கள்: பொறுத்திருங்கள்! அது விரைவில் நிகழக்கூடியதே!”

அகூலு கௌலி ஹாதா…..

முதலாம் ஃகுத்பா முடிவடைந்தது.

இரண்டாம் ஃகுத்பா:

பற்பல முஸ்லிம் உயிர்களை சோதனைக்குட்படுத்திய; பற்பல இஸ்லாமிய செயல்பாடுகளைச் சிதைத்துச் சின்னபின்னமாக்கிய நெடியகால விவகாரம் ஒன்று நிலுவையில் இருக்கிறது. வெகுசில நபர்கள் மட்டுமே இத்தகு விவகாரங்களைப் பற்றி உரையாற்றுவார்கள் எனும் அதே நேரத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான நபர்கள் இவ்விவகாரங்கள் தொடர்பில் உண்மைகளை பூசிமெழுகவே முயற்சிப்பார்கள்.

மக்கா-மதீனாவை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களைப் பற்றிய விவகாரமே அது. சென்ற வாரத்தில் அந்நிலப்பரப்பின் ஆட்சியாளர்கள் தங்களது சொந்த நாட்டிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை வெளியேற்றியிருக்கின்றனர்.

முதலாம் உலகப்போரின் விளைவுகள் ஏற்படுத்திய முடிவின் வாயிலாகத் தோற்றம் பெற்ற ஒரு நாடுதான் இது. இவ்வுலகப்போர் ஏற்படுத்திய பிறிதொரு பாதிப்பு யாதெனில், ஒருங்கிணைக்கப்பட்ட காத்திரமானதோர் இஸ்லாமிய அரசாக கோலோச்சியிருக்க வேண்டிய நிலப்பரப்பானது குடையப்பட்டும் துளைகளிடப்பட்டு துண்டாடப்பட்டும் பல்வேறு பகுதிகளாகச் சிதறடிக்கப்பட்டன என்பதே. இன்று நம்மத்தியில் இடம்பெயர்க்கப்பட்டதும் சுரண்டப்பட்டதும் சிதைக்கப்பட்டதுமான 65 அல்லது 66 தேசிய-அரசுகள் காணக்கிடைக்கின்றன.

அதிலே ஒன்றுதான், மக்கா-மதீனாவில் நிலைகொண்டுள்ள முஸ்லிம்களின் முதல் மற்றும் இரண்டாம் ஹரமை - இரு புனித சரணாலயங்களை - இரும்புக் கவசங்களைக் கொண்டு கட்டுக்குள் வைத்திருக்கும் அந்த தேச-அரசு. தங்களது எசமானர்களின் திருப்பெருத்தத்தையும் ஆதரவையும் பெறுவதற்காக இப்பொழுது அவர்கள் தங்களுள் சிலருக்கு எதிராகவே செயலாற்ற முனைப்பு காட்டி வருகின்றனர். இத்தகைய கரைபடிந்த அத்தியாயங்களைத்தான் நாம் கடந்து மூன்று தசாப்தங்களாக வாழ்ந்தும் அனுபவித்தும் வருகின்றோம். இருப்பினும், சில முஸ்லிம்கள் கடந்த மூன்று வருட அல்லது கடந்த மூன்று மாதகால இடைவெளியில் தான் இவ்விவகாரங்களைக் குறித்து விழிப்படையும் பொருட்டு தங்களது கண்களை திறக்க ஆரம்பித்துள்ளனர். ஏன்? வெளிப்படையாகவும் நேர்மையாகவும் கூறுவதென்றால் இதுதான் முஸ்லிம்களின் இன்றைய நிலவரம். சகோதர சகோதரிகளே! நமக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் பேரிடைவெளியொன்று நிலவுமாயின் இதுபோன்று தான் இருக்கும் நமது தொழிற்பாடுகளும்.

இந்த ஷையாதீன்களை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வுக்கும் நமக்கும் மத்தியில் ஏற்பட்டுள்ள இடைவெளிதான் இவர்களின் ஆடுகளம். அனைத்துவகையான விஷமச் செயல்களையும் இவர்கள் அரங்கேற்றுகிறார்கள்; அனைத்துவித அனர்த்தங்களையும் இவர்கள் உருவாக்கி விட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து யுத்தத்துக்கும் இவர்கள் அபரிமித நிதியாதரவினை நல்கி வருகிறார்கள்; முஸ்லிம்களுக்கு எதிராக காஃபிர்கள் முன்னெடுக்கும் யுத்தத்துக்கு இவர்கள் நிதியுதவி அளிக்கிறார்கள்; முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம்கள் முன்னெடுக்கும் யுத்தத்துக்கும் இவர்கள் நிதியுதவி அளிக்கிறார்கள்; இன்னும், தங்களது சுற்றுவட்டாரத்தில் பிரச்சன்னமாகியுள்ள எதேச்சதிகார அரசாங்கங்களுக்கு இவர்கள் பாரிய அளவிலே நிதியுதவி அளிப்பதோடு இப்பூவுலகின் எதிர்மருங்கில் பிரசன்னமாகியிருக்கும் கொடுங்கோன்மை ஆட்சியமைப்புகளுக்கும் நிதியுதவி அளிக்கிறார்கள். 1980-களில் நிக்கராகுவா அரசாங்கத்திற்கும், '80' மற்றும் '90' களில் ஈராக் அரசாங்கத்திற்கும் அளப்பரிய அளவிலே நிதியாதரவினை நல்கி வந்தவர்கள் இவர்கள்தான்தங்களது எசமானனான 'அங்கிள் ஸாமின்' (அமெரிக்கா) ஆதரவையும் ஆசிர்வாதத்தையும் கொண்டு முஸ்லிம்களின் கைகளிலிருந்து கா'பாவையும் அல்-மஸ்ஜித் அன்-நபவியையும் பற்றியிலுத்து பறிமுதல் செய்தவர்கள் இதே ஆட்சியாளர்கள்தான்.

இத்தகைய நிகழ்வுகள் அல்லாஹ்வுக்காக புதிய பணியாளர்களையும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களுக்காக புதிய மாணவர்களையும் உற்பத்தி செய்யும் என்பதில் நமக்கு பரிபூரண நம்பிக்கை உள்ளது. இவையனைத்தையும் செய்துவிட்டு அவர்கள் அத்துணை எளிதாக நழுவிச் சென்று விட முடியாது. அவர்களது நாட்களும் மாதங்களும் வருடங்களும் இப்பொழுது எண்ணப்படுகின்றன. ஆனால், நினைவிலிருத்திக் கொள்ளுங்கள், அல்லாஹ்வுக்கும் நமக்கும் மத்தியிலே ஏற்பட்டுள்ள பேரிடைவெளியை நீங்கள் இடையறாது பேணிவரும் பட்சத்தில், மக்கா-மதீனா மீதான அவர்களது ஆக்கிரமிப்புச் செயல்பாடுகள் நீடித்து நிலைத்திருப்பதன் நிமித்தம் மேலதிக கால அவகாசத்தை இதனூடாக நீங்கள் அவர்களுக்கு வழங்குகிறீர்கள் என்றே அர்த்தம்.

வாஷிங்டனிலுள்ள அரசாங்கத்தையும், டெல் அவீவிலுள்ள அரசாங்கத்தையும், ரியாதிலும் ஜித்தாவிலும் நிலைபெற்றுள்ள அரசாங்கத்தையும் நாம் சமானமாகக் கருதினால் இதற்காக ஏன் நம்மீது சிலர் ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும்? சில மக்களை இது வருத்தத்திற்குள்ளாக்கக் காரணம் என்ன? அல்லாஹ்விடமிருந்து வரும் ஒளி அவர்களுக்குத் தேவையில்லை என்றபோதும், இதனை விளங்கிக் கொள்வதற்கு அவர்கள் நபிகளாரின் (ஸல்) மெய்யான பின்பற்றாளர்களாகவும் நீதியை புரிந்துகொள்ளக்கூடிய மக்களாகவும் இருந்தாலே போதுமானது. தங்களிடத்தில் அமையப்பெற்றுள்ள பொதுஅறிவையும் தீட்சண்யப் பார்வையையும் பிரயோகித்து இங்கே காணக்கிடைக்கும் பொதுத் தளத்தினை கண்டடைய முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து அவர்கள் வருத்தத்திற்குள்ளாவதேன்? அடக்குமுறையாளர்கள் சமமானவர்களே என்ற கண்டடைவுக்கு நாம் வந்துசேர்ந்தால் அவர்கள் ஏன் வருத்தம் தெரிவிக்கிறார்கள்?

நம்மத்தியில் ஊடுருவியிருக்கும் அடக்குமுறையாளரிடமிருந்து நம்மை நாம் விடுவித்திக்கொள்வதே நமது மூலோபாயப் பணி. குறிப்பாக நமது மசூதிகளை தேசியமயமாக்கியவர்கள், நமது மிம்பர்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் ஆகியோரிடமிருந்து. இது தொடர்பில் எவரும் வருத்தத்திற்குள்ளாகக் கூடாது.

அசட்டையான முஸ்லிம்களினூடாக இப்பணி நிறைவேறப்போவதில்லை; மாறாக, அல்லாஹ்வுடைய இத்தகைய பரந்துபட்ட அர்த்தங்களை தங்களது உள்ளங்களில் வேரூன்றச் செய்துள்ள அத்தகைய முஸ்லிம்களின் உள்ளாற்றல் மூலமே இது சாத்தியம்! இதனைச் சாத்தியப்படுத்தும் எதிர்காலத்தை நினைத்து நாம் புளகாங்கிதம் அடைவோம்!

அல்லாஹும்ம அரினல் ஹக்க ஹக்கன் வ ரிஸிக்னத் திபா'ஆ
வ அரினல் பாதில பாதிலன் வ ரிஸிக்னஜ் தினா'பா..………………..

ஃகுத்பா நிறைவுபெற்றது!


குறிப்பு:

1.       "பொருப்புகளைச் சுமப்பதனால் எதிர்கொள்ளும் சவால்கள்" (Challenges that comes from Carrying Responsibility) என்ற இந்த ஜும்’ஆ உரை, அமெரிக்காவின் வாஷிங்டன் டி. சி இஸ்லாமிய மையத்திற்காக அப்பகுதி முஸ்லிம்களால் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ இமாமாக நியமனம் செய்யப்பட்ட முஹம்மது அல்-ஆஸி அவர்களால் அவ்விஸ்லாமிய மையத்திற்கு வெளியே அமையப்பெற்றுள்ள சாலையோர நடைமேடையில் வைத்து 30-05-2003 அன்று நிகழ்த்தப்பட்டது. இமாம் முஹம்மது அல்-ஆஸியின் மேலதிக ஆங்கில ஃகுத்பாக்களுக்கு www.islamiccenterdc.com என்ற இணையதளப்பக்கத்தினப் பார்வையிடவும். (அவ்விஸ்லாமிய மையத்தின் உள்ளே பிரவேசிக்க இமாமவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணத்தால், 1983-ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரையில் ஏறக்குறைய 33 ஆண்டுகளாக இமாம் முஹம்மது அல்-ஆஸி அவர்கள் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு சந்தடிகளுக்கும் மத்தியிலும் இச்சாலையோர நடைமேடையில் வைத்தே தனது ஜும்'ஆ தின சொற்பொழிவினை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது).