Saturday, June 11, 2016

தீவிரவாதம்: குற்றச்சாட்டும் உண்மையும் - பாகம்: 2

தீவிரவாதம்: குற்றச்சாட்டும் உண்மையும்

பாகம்: 2
-     கலாநிதி யூஸுஃப் அல்-கர்ளாவி

- தமிழில்: அ. ஜ. முஹம்மது ஜனீர்




2.   மதத் தீவிரவாதம் பற்றிய கோட்பாடு:

தீவிரவாதம் என்பதை ஒரு வரைவிலக்கணத்துள் கொண்டு வந்து அது பற்றிய சரியான தெளிவைக் காண்பதே அதற்கான பரிகாரம் காண்பதற்குரிய ஆரம்பமாக அமையும். உண்மையான இஸ்லாமிய கோட்பாட்டின் அடிப்படையில் ஷரீஆவுக்கு இயைந்த வகையில் எடுக்கப்படாத தீர்மானங்கள் எவையும் மதிப்பில்லாதவை; தனிப்பட்டோரின் சொந்த அபிப்பிராயங்கள் பெறுமதியற்றவை. இது குறித்துக் குர்ஆன் கூறுகின்றது:

"......உங்களுக்குள் யாதொரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால் அதனை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால்...."
(அல் குர்ஆன் 4:59)

முஸ்லிம் சமூகத்தின் வரலாறு முழுவதும் ஒருமித்த இசைவு (இஜ்மா) என்பது வழக்கில் இருந்து வந்துள்ளது. அதன்படி பிரச்சனைகளை இறைவனிடமும் அவனது தூதரிடமும் ஒப்படைத்தல் என்பது, குர்ஆனையும் இறைதூதரது வழிமுறையையும் கொண்டு தீர்வு காண முனைதலாகும். இவ்வாறாக, அல்-ஷரீஆவின் அதிகாரப்பூர்வ தன்மைக்கு இயைந்த வகையில் தீர்வுகள் காணப்படாத போது - தீவிரவாதிகள் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள - இளைஞர்கள், யாரேனும் ஒரு முஸ்லிம் அறிஞர் அளிக்கும் எந்த ஒரு சட்டவியல் அபிப்பிராயத்தையும் (ஃபத்வா) ஏற்க மாட்டார்கள் என்பது உறுதி. அது மட்டுமின்றி, தம்மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்து, எதிர்த்து நிற்கும் அவர்கள் ஏனையேரை அறிவில்லாதோர் எனவும் பொய்மைகள் புனைந்து கூறுவோர் எனவும் இகழ்வர்.

இமாம் முஹம்மது பின் இத்ரீஸ் அஷ்-ஷாஃபியீ ஒரு நிராகரிப்பாளர் (ராஃபிழீ) எனக் குற்றம் சாட்டப்பட்டார். இந்த கீழ்த்தரமான குற்றச்சாட்டின் காரணமாக கோபம் கொண்ட அவர், அதனை எதிர்த்து ஒரு கவிதை பாடினார்.

"இறைத்தூதரின் குடும்பத்தார் (அஹ்ல் அல்-பைத்) மீது காட்டும் அன்பானது நிராகரிப்பாயின், மனிதவர்க்கமும் ஜின் வர்க்கமும் சாட்சியாக இருந்து கொள்ளட்டும்....நான் நிச்சயமாக ஒரு நிராகரிப்பாளனே!"

என்ற கருத்தில் அமைந்தது அது. பிற்போக்குவாதி எனக் கண்டனம் செய்யப்பட்ட தற்கால இஸ்லாமிய அழைப்பாளர் ஒருவர் கூறினார்:

"குர்ஆனையும் சுன்னாஹ்வையும் பின்பற்றியொழுகி வாழ்ந்து வருவது பிற்போக்குவாதம் ஆயின் நான் பிற்போக்குவாதியாகவே வாழவும், மரணிக்கவும், மீண்டும் உயிர்ப்பிக்கப்படவும் விரும்புகிறேன்."

உண்மையில் பொதுப்பட பரவலாக வழங்கி வரும் 'பிற்போக்குவாதம்', 'மத வைராக்கியம்', 'தீவிரவாதம்', 'மதவெறி', முதலிய சொற்பிரயோகங்களுக்கான சரியான வரைவிலக்கணங்களை அமைத்துக் கொள்வது அவசியம். அதன் மூலம், ஒரு குழுவினரைக் கண்டனம் செய்ய பிறிதொரு குழுவினரால் இச்சொற்பிரயோகங்கள் வெறுமனே பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இயலும். அத்துடன் வலது, இடதுசாரிகளாகத் துருவங்களில் இருக்கும் சிந்தனாவாத, சமூக சக்திகள் தத்தமது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப பல்வேறுபட்ட விளக்கங்கள் அளிப்பதையும் தவிர்த்துக் கொள்ளலாம். ஆக, மதத் தீவிரவாதம் என்பதைச் சரிவர வரையறுத்து, புரிந்து கொள்ளாது விடுவது, மக்களது சுயதிருப்தி காணும் உணர்வுகளுக்கு இடமளித்து, முஸ்லிம்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதாக முடியும். குர்ஆன் கூறுகின்றது:

"சத்தியம் அவர்களுடைய (தவறான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் அழிந்தே விடும்." 
(அல் குர்ஆன் 23:71)

இந்த இடத்தில் நான் இரண்டு முக்கிய அம்சங்கள் மீது உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். முதலாவது அம்சத்தைப் பார்ப்போம். ஒரு மனிதனது இறை பக்தியின் தரம், அவர் வாழ்ந்து வரும் சூழல் முதலியவை, பிறர் குறித்து அவர் செய்யக் கூடிய தீர்மானங்களில் பெரும் செல்வாக்கைப் பதிக்கின்றன. பிறரை தீவிரவாதிகளாகவோ, மிதவாதிகளாகவோ, தாராளவாதிகளாகவோ மதிப்பிட இவ்வாறான ஒரு பின்னணி முக்கிய காரணியாக விளங்குகிறது. மதாபிமானம் மிக்க ஒரு சூழலில் வாழ்ந்து வளர்ந்து வந்த ஒருவர், மார்க்க விவகாரங்களைப் பொறுத்த மட்டில், சின்னஞ்சிறிய தவறுகள் இழைக்கப்படுவதையோ, அலட்சியம் காட்டப்படுவதையோ சகித்துக் கொள்ளக் கூடியவராக இருக்க மாட்டார். தமது சொந்த சூழலின், பயிற்சிகளின் பின்னணியிலிருந்தே காணும் ஒருவர், இரவு வேளைகளை வணக்கங்களில் கழிப்பதிலும், கடமையல்லாத வேளைகளில் நோன்பு வைப்பதிலும் கவனம் செலுத்தாத முஸ்லிம்கள் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படக்கூடும். இது வரலாற்று ரீதியான ஓர் உண்மை.

இறைத்தூதர் (ஸல்), அவர்களது தோழர்கள், தோழர்களைப் பின்தொடர்ந்தோர் (தாபியீன்) ஆகியோரது காலங்களை கருத்தில் கொண்டு மக்களது செயல்களை மதிப்பீடு செய்ய விழையும் ஒருவருக்கு பின்னைய தலைமுறைகளில் வந்த பக்திமான்களது செயல்களும் பயிற்சிகளும் கூட மதிப்பு குன்றியவையாகவே தோன்றும். எனவேதான் பின்னைய காலங்களில் வரும் நேர்வழி காட்டப்பட்டோரது போற்றத்தக்க செய்கைகளாக கருதப்படுகின்றவை ஆரம்ப கால தோழர்களது பார்வையில் பெறுமதி இல்லாதவையாகவே தோன்றும் என்ற கருத்துப்பட பெரியோர் கூறுவர். தமது சம காலத்தவர்களான தாபியீன்களை விளித்து அனஸ் இப்னு மாலிக் (ரழி) கூறியன இங்கு கவனிக்கத்தக்கது:

"பொருட்படுத்தாத தேவையில்லாத அற்பமான செய்கைகள் எனக் கருதி நீங்கள் சில செயல்கள் புரிகின்றீர்கள். ஆனால் இறைதூதரது காலத்தில் இவையே கடுமையான பாவங்களாகக் கருதப்பட்டன."

இதே மாதிரியான ஒரு கருத்தையே ஆயிஷா (ரழி) வெளியிட்டார். புகழ் பெற்ற கவிஞரான லபீத் இப்னு ரபீஆவின் கவிதையடிகள் சிலவற்றை நினைவுகூர்ந்தார் ஆயிஷா (ரழி). அதில் உன்னதமான வாழ்க்கை வாழ்வதற்கென சிறந்த முன்மாதிரிகளைக் காட்டிச் சென்றவர்களது மறைவு குறித்து ஆழ்ந்த கவலை கொண்ட கவிஞர் கூறுகிறார்:

"மக்கள் தான்தோன்றித்தனம் கொண்டோரின் தயவில் விடப்பட்டுள்ளனர். அவர்களது உறவு எப்படியிருக்கின்றது? சொறி, சிரங்கு பிடித்த மிருகங்களுடனான அருவருப்பூட்டும் உறவுபோல் விளங்குகின்றது."

பின்னைய தலைமுறைகளின் நடவடிக்கைகளைக் காண லபீத் உயிருடன் இருந்திருந்தால் எப்படியான உணர்வுகளுக்கு அவர் உள்ளாகியிருப்பார் என விசனப்பட்டார் ஆயிஷா. அதற்கும் பின்னைய காலங்களில் ஆயிஷாவின் மருமகன் உர்வா இப்னு ஸுபைர் இதே கவிதையடிகளை வாசித்து, தனது காலத்தில் ஆயிஷாவும் லபீதும் வாழ்ந்திருந்தால் அவர்களது உணர்வுகள் எவ்வாறு இருந்திருக்கும் என வியந்து கூறுவார்.

இதன் மறுபுறத்தைப் பார்ப்போம். இஸ்லாம் பற்றிய அறிவும், இஸ்லாத்தின் மீதான அடிபணிதலும் குன்றிய ஒருவரை, அல்லது அல்லாஹ் தடுத்தவற்றை நடைமுறைப்படுத்தி, ஷரீஆவை அலட்சியம் செய்து வாழும் ஒரு சூழலில் வளர்ந்து வருகின்ற ஒருவரை எடுத்துக் கொள்வோம். மிகச்சிறிய அளவிலான இஸ்லாமியப் பயிற்சியைக் கூட, மிகத் தீவிரமான ஒரு செய்கையாகவே கொள்வார் அவர். பொதுவாக பெரிய பக்திமான்கள் போலப் பாசாங்கு செய்யும் இவர் போன்றவர்கள், சில குறிப்பிட்ட இஸ்லாமிய வழக்கங்கள் குறித்து வினாக்கள் எழுப்புவர்; அவற்றின் பயன்களை மறுத்துரைப்பர்; இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கு இயைய நடந்து வருவோரைக் கண்டனம் செய்வர்; தடுக்கப்பட்டவை (ஹலால்) என்பன குறித்து வாதப் பிரதிவாதங்களை ஆரம்பித்து வைப்பதில் முன்னணியில் திகழ்வர். இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளியைப் பொறுத்ததாகவே அவர்களது சிந்தனையும் நடவடிக்கைகளும் அமையும்.

இஸ்லாத்துக்கு மாற்றமான கோட்பாடுகளினாலும், பழக்க வழக்கங்களினாலும் கவரப்பட்டுள்ள சில முஸ்லிம்களைப் பொருத்த வரை உணவு, உடை, அலங்காரங்கள் முதலான அம்சங்களில் இஸ்லாம் காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றுதல், ஷரீஆவை அமலாக்கவும் இஸ்லாமிய அரசை நிறுவவும் வேண்டுகோள் விடுதல் முதலியன மதத் தீவிரவாத நடவடிக்கைகளாகவே தோன்றும். இவ்வாறான ஒரு மனிதரின் பார்வையில், தாடிவைத்துள்ள ஒரு முஸ்லிம் இளைஞன், இஸ்லாமிய முறையிலான ஆடை (ஹிஜாப்) அணியும் ஓர் இளம்பெண் ஆகியோர், பெரும் தீவிரவாதிகள் ஆவர். பொதுவான நன்மைகளின் பால் மக்களை ஏவி, தீமைகளிலிருந்தும் தடுப்பதைக் கூட, மதத் தீவிரவாதமாகவும் தனியார் சுதந்திரத்திலான தலையீடாகவும் அவர் கொள்வார். மதத்தின் மீதான விசுவாசம் என்பது, தாம் நம்பிக்கை கொண்டுள்ள மதமே சரியானது என்றும், அது தவிர்த்த ஏனைய மதங்கள் மீதான நம்பிக்கை தவறானது என்றும் கொள்வதாயினும் கூட, இஸ்லாம் தவிர்ந்த ஏனைய மதங்களை விசுவாசிப்போரை நிராகரிப்போர் (குஃப்பார்) எனக் கொள்வதை எதிர்க்கும் முஸ்லிம்களும் உள்ளனர். அவர்கள், இவ்வாறான சிந்தனையைத் தீவிரவாதம் எனவும் மதவெறியெனவும் கூறுவர். நாம் ஒரு போதும் சமாதானம் கண்டு கொள்ள இயலாத விவகாரம் இது.

இனி இரண்டாவது அம்சத்துக்கு வருவோம். கடினமான ஒரு போக்கைக் கையாள்கிறார் என்பதற்காக ஒருவரை மதத்தீவிரவாதி எனக் குற்றம் சாட்டுதல் முறையல்ல. ஒருவர் தனது கருத்துகள் சரியானவை என்றும், ஷரீஆவின்படி தான் செயலாற்றும் முறையே சரியென்றும் கொண்டுள்ளார் என எடுத்துக் கொள்வோம். சட்ட அறிஞர்களின் (ஃபுகஹா) கருத்துகள் அவரது நிலைபாட்டுக்குப் பூரண ஆதரவு அளிக்காவிடினும் கூட தான் சரியெனக் கண்ட முறையில் செயலாற்ற அவர் உரிமையுடையவரே. தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளுக்கும் மேலதிகமாக, இறைவனின் மகிழ்வை நாடியவராக, அவர் வேறு பல கருமங்களையும் ஆற்றுவது கொண்டு தன்மீது மேலும்மேலும் சுமைகளை ஏற்றிக்கொண்டாலும் கூட, தான் சரியெனக் கொண்டு விசுவாசித்தவற்றுக்கு அவரே பொறுப்பாளராவார். இவ்வாரான விவகாரங்களில் மக்கள் நிச்சயம் வெவ்வேறு பட்ட கருத்தினராகவே உள்ளனர். சிலர் இவ்விவகாரங்களை இலகு படுத்தி அமைத்துக் கொள்வர். சிலர் இவற்றில் கடின மனமுடையவராயிருப்பர். எடுத்துக்காட்டாக, இப்னு அப்பாஸ் சமய விவகாரங்களில் இலகுவான ஒரு போக்கைக் கடைபிடித்தார். உமர் கடினமான போக்குடையவராயிருந்தார்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நோக்கும்போது, ஒரு முஸ்லிமைப் பொருத்த மட்டில், தான் சரியெனக் கொண்ட ஒரு செய்கைக்கு இஸ்லாமிய சட்டவியல் பிரிவுகளில் (மத்ஹப்) ஒன்றிலிருந்து, அல்லது குர்ஆன், சுன்னாஹ் ஆகியவற்றிலிருந்து ஆதாரம் பெற்றுக்கொண்ட இஜ்திஹாதிலிருந்து(10) ஆதரவு பெற்றுக் கொண்டால் போதும் என்றே தோன்றுகின்றது. எனவே இஸ்லாத்தின் பெரும் இமாம்களான ஷாபிஃயீ, அபூ ஹனீஃபா, மாலிக், அஹ்மது இப்னு ஹன்பல் ஆகியோருள் ஒருவரது சட்டக் கோவையிலிருந்து பெற்றுக் கொண்ட ஒன்றை ஒருவர் ஏற்று நடப்பாராயின், ஏனைய பல அறிஞர்கள், குறிப்பாக சமகால அறிஞர்கள் முரண்பட்ட கருத்துடையவர்களாக இருக்கின்றார்கள் என்பதற்க்காக அவரை ஒரு தீவிரவாதி என நாம் குற்றம் சட்டலாமா? தனது தனிப்பட்ட வாழ்வுக்கும், நடைமுறைகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் குறிப்பிட்ட ஒரு இஜ்திஹாதை ஒருவர் தேர்வு செய்து கொள்வாரயின் அதனை மறுத்துரைப்பதற்கு நமக்கு உரிமை ஏதும் உண்டா?

முஸ்லிம் சட்டவியல் அறிஞர்களுள் ஏராளமானோர் பெண்களது ஆடைகள் குறித்துப் பேசும்போது, முகமும் கைகளும் தவிர்த்து உடலின் ஏனைய பாகங்கள் அனைத்தும் மறையும் வகையிலேயே ஆடைகள் அமையவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளனர். முகமும், கைகளும் தவிர்க்கப்படுவதற்க்கான அவர்களது ஆதாரம் பின் வரும் குர்ஆன் வசனத்திலிருந்து பெறப்பட்டுள்ளது:

"......(அன்றி, தங்கள் உடலில் பெரும்பாலும்) வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர, தங்கள் அழகையும் (ஆடை, ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும்......."  
(அல் குர்ஆன் 24:31)

இதற்கு ஆதரவாக அவர்கள் பல ஹதீஸ்களையும், சம்பவங்களையும், பழக்க வழக்கங்களையும் எடுத்துக் காட்டுவர். சமகால மார்க்க அறிஞர்களுள் ஏராளமானோர் இந்த முடிவை ஆதரிக்கின்றனர்; நானும் ஆதரிக்கிறேன்.

மறுபுறம், முஸ்லிம் உலகில் சிறப்பிடம் பெற்றுள்ள அறிஞர்களுள் சிலர் முகம், கைகள் என்பனவும் உடலில் மறைக்கப்பட வேண்டிய பகுதி (அவ்ரா) எனக்கொண்டு அவையும் மறைக்கப்பட வேண்டும் என வாதிடுவர். அவர்கள் தமது கூற்றுக்கு ஆதரவாக குர்ஆன், ஹதீஸ், நிலைபெற்றுள்ள மரபுகள் போன்றவற்றிலிருந்து ஆதாரங்கள் காட்டுவர். பாகிஸ்தான், இந்தியா, அரேபியா, வளைகுடா நாடுகள் ஆகிய பிரதேசங்களின் அறிஞர்கள் பலர் இவ்வாறான முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இறைவனையும், மறுமையையும் நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம் பெண்கள் அனைவரும் முகத்திரையும், கையுறையும் அணிய வேண்டும் என அவர்கள் கூறுவர். இக்கருத்தை ஏற்று, அதனை இஸ்லாமிய போதனைகளில் ஒன்றாக ஒரு பெண்மணி கொள்வாராயின் அப்பெண்மணி ஒரு தீவிரவாதியென முத்திரையிடப்படுதல் சரியாகுமா? தனது மகள், மனைவி ஆகியோரின் உடை இவ்வாறே அமைய வேண்டும் என ஒரு மனிதர் கருதுவாராயின் அவரை நாம் தீவிரவாதி எனக் கூறி விடலாமா?

அல்லாஹ்வின் கட்டளைகள் என முழுமையாக நம்பி ஏற்றுக்கொண்ட ஒன்றை யாரேனும் கைவிட்டு விட வேண்டுமென வற்புறுத்த நமக்கு என்னதான் உரிமையுண்டு! நமது விருப்பு வெறுப்புக்களைத் திருப்தி செய்து கொள்வதற்காக, அல்லது தீவிரவாதி எனப் பிறர் எழுப்பக் கூடிய கண்டனங்களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்வதற்க்காக அவரை இறைவனின் கோபத்துக்கு ஆளாக்கலாமா? இவ்வாறான நிலைமையே, பாடல்கள், இசை, ஓவியம், புகைப்படம் முதலிய பல அம்சங்களில் கடுமையான எண்ணங்களைக் கடைபிடிப்போரிடமும் காணப்படுகிறது. இவை குறித்து தெரிவிக்கப்படும் பல்வேறு பட்ட கருத்துக்கள் எனது சொந்த இஜ்திஹாதிலிருந்து மட்டுமின்றி சம கால அறிஞர்களுள் ஏராளமானோரது இஜ்திஹாதிலிருந்தும் வேறுபட்டவையாக உள்ளன. மேலும் அவ்வாறான கருத்துக்கள் பண்டைய, சமகால அறிஞர்களுள் பலர் தெரிவித்துள்ள கருத்துக்களுடன் உடன்படுவனவாகவும் உள்ளன.

தீவிரவாதிகள் என நம்மால் முத்திரை இடப்பட்டுள்ளவர்களின், மிதமிஞ்சியன என நாம் கொள்ளும் நடவடிக்கைகள் பல, உஸூல் அல்-ஃபிக்ஹிலும்(11), சமூகத்தின் மரபுகளிலும் தம் மூலங்களைக் கொண்டுள்ளன. அந்த அடிப்படையிலேயே இக்கருத்துக்கள் நமது சமகால அறிஞர்களுள் பலரால் விளக்கப்பட்டுள்ளன. மேல் சட்டை, முழுக்கால் சராய் என்பனவன்றி கட்டையான 'தவ்ப்' அணிதல், பெண்களுடன் கைகுலுக்க மறுத்தல் முதலியனவற்றை எடுத்துக் காட்டுகளாகக் கொள்ளலாம். இக்கருத்துகளின் விளைவாக, நமது இளைஞர்களுள் இறைபக்தி உணர்வுள்ள பலர், இறைவனின் கருணையை நாடியும், அவனது தண்டனைகளை அஞ்சியும் இவற்றை ஏற்று அதன்படி செயல்படுகிறார்கள். எனவே, முஸ்லிம் நியாயாதிக்கத்தின் அடிப்படையில், இறைவனின் மகிழ்வை நாடியவர்களாக, எந்த ஒரு முஸ்லிமும் பின்பற்றியொழுகும் கடுமையான நடவடிக்கைகளுக்காக, அவர்களை தீவிரவாதிகள் எனக் குற்றம் சுமத்துதல் தகாது. தமது கருத்துக்களை அவர்கள் முற்றாகக் கைவிட்டு விட வேண்டுமென்றோ, தமது நம்பிக்கைகளுக்கு முரண்பட்ட ஒருவழி முறையை அவர்கள் பின்பற்ற வேண்டுமென்றோ வற்புறுத்த நமக்கு எவ்வித உரிமையும் இல்லை. முற்றிலும் சரியான வழிமுறை எனக் குறிப்பிட்ட ஒரு வழியை நாம் தேர்ந்து கொள்வோமாயின், அதற்கு முரண்பட்ட கருத்துகளை உடையவர்களோடு, ஞானம், அமைதி, பொறுமை என்பன கொண்டு, அவர்கள் தமது கருத்துகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன், தக்க ஆதாரங்கள் காட்டி உரையாடுவதே நாம் செய்யக்கூடியது. அதுவே நம் கடமையாகவும் அமையும்.


தொடர்ச்சி மூன்றாம் பாகத்தில்.......

குறிப்புகள்:

10.   இஜ்திஹாத்: அங்கீகாரம் பெற்ற மூலங்களிலிருந்து சட்ட நியதிகளை அமைத்துக் கொள்ளும் ஆக்கப்பூர்வமான சுய முனைவு.
11.   உஸூல் அல்-ஃபிக்ஹ்: இஸ்லாமிய சட்டவியலின் மூலங்கள். உஸூல் ஃபிக்ஹ்: இஸ்லாமிய நியாயாதிக்க ஞானம், அல்லது இஸ்லாமிய மூலங்களிலிருந்து சட்டங்களை வரைந்தெடுத்துக்கொள்ளும் முறைமையும் அவற்றின் சட்ட வலுவை நிலைநிறுத்தலும்.

·          தீவிரவாதம்: குற்றச்சாட்டும் உண்மையும்” எனும் இத்தலைப்பு "நிராகரிப்புக்கும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் இஸ்லாமிய எழுச்சி" எனும் டாக்டர் யூசுப் அல்-கர்ளாவி எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment