இஸ்லாத்தில்
சமூக அமைதி
பாகம்: 2
-
சையித்
குதுப் (ரஹ்)
சட்டத்தின் நீதி:
இஸ்லாமிய அரசாங்கத்தில் நீதியின் உறைவிடம் சட்டமேயாகும்!
இந்தச் சட்டம் அனைத்து வகை முன் முடிவுகளினின்றும் முற்றிலும் விடுபட்டதாகும். மேலும்
இந்தச் சட்டம் முற்றும் அறிந்த முதல்வனாகிய ஏக இறைவனால் வகுத்தளிக்கப்பட்டதுமாகும்.
இந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்காக, வெளிப்படையான
செயல்பாட்டையும், சட்ட சாசனத்தையும், நீதிபதியின் மனசாட்சியையும், சமூகத்தின் கீழ்படிதலையுமே
இஸ்லாம் சார்ந்துள்ளது.
முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் அநீதியைத்
தடுத்திட கடமைப்பட்டவர் ஆவர். ஆட்சியாளர் வரம்பு மீறும் போது அவரைத் தடுப்பதும், தவறிழைக்கும்போது
திருத்துவதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். இந்தப் பொறுப்பினை சரிவர நிறைவேற்றாதோர்
பாவம் புரிகின்றனர் என்பதே இஸ்லாமின் கண்ணோட்டமாகும்.
இஸ்லாமின் பார்வையில் உச்சநீதி என்பதன் பொருள்:
உலகியல் செல்வ - செல்வாக்குகளுக்கு தாழ்பணியாத - வளைந்து நெளிந்து கொடுத்து பணிந்து
போகாத நேர்மையாகும். அந்த உச்ச நீதியின்பால் கவனத்தை ஈர்க்கின்ற ஏராளமான இறைவசனங்கள்
குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. இதோ அவற்றிலிருந்து சில எடுத்துக்காட்டுகள்:
"விசுவாசிகளே!
நீங்கள் நீதியின் மீது உறுதியாக நிலைத்திருங்கள். நீங்கள் அல்லாஹ்விற்காக (உண்மையைக்
கொண்டே) சாட்சி சொல்பவர்களாக இருங்கள். அது உங்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோருக்கோ
அல்லது உங்களின் நெருங்கிய உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! (நீங்கள் யாருக்காக
சாட்சி கூறுகின்றீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாயினும் சரி, ஏழைகளாயினும் சரி (நீங்கள்
உண்மையையே கூறுங்கள்). ஏனெனில், அல்லாஹ் அவ்விருவருக்கும் நன்மையை நாடுவதில் உங்களைவிட
மிக்க மேலானவன். எனவே நீதி செய்வதை விடுத்து மனோ இச்சையை நீங்கள் பின்பற்றாதீர்கள்.
மேலும், நீங்கள் சாட்சியத்தை மாற்றி கூறினாலும், அல்லது சாட்சியளிக்க மறுத்தாலும்,
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்."
(அல் குர்ஆன் 4:135)
"விசுவாசிகளே!
நீதியை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த
ஒரு பிரிவினரின் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட
வேண்டாம். நீதி செலுத்துங்கள். அதுவே பயபக்திக்கு மிகவும் நெருக்கமானதாகும். அல்லாஹ்வை
அஞ்சுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்."
(அல் குர்ஆன் 5:8)
".....நாம்
எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சிரமப்படுத்த மாட்டோம். நீங்கள் பேசும் போது
அதனால் பாதிக்கப்படுபவர் உங்கள் நெருங்கிய உறவினராக இருந்த போதினும் நீங்கள் நியாயத்தையே
போசுங்கள். அல்லாஹ்வுக்கு நீங்கள் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு
கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு போதிக்கின்றான்."
(அல்
குர்ஆன் 6:152)
"......எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த வேதக்
கட்டளைப்படி தீர்ப்பு வழங்கவில்லையோ, நிச்சயமாக அவர்கள்தான் அநியாயக்காரர்கள்!"
(அல் குர்ஆன்
5:45)
"......அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான்
நம்புகிறேன். மேலும், உங்களிடையே நீதிவழங்கும் படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்
ஒருவன் தான் எங்களுக்கும் உங்களுக்கும் இறைவன் ஆவான்......"
(அல் குர்ஆன்
42:15)
"அன்றி, நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின்
பொருளைத் தவறான முறையில் உண்ணாதீர்கள். (உங்கள் தரப்பு பொய்யானது என) நீங்கள் அறிந்திருந்தும்,
பிற மனிதர்களின் பொருள்களில் எதனையும் அநியாயமாக (அபகரித்து) விழுங்குவதற்காக அதிகாரிகளிடம்
(இலஞ்சம் கொடுக்க) அந்நோக்கத்துடன் செல்லாதீர்கள்."
(அல் குர்ஆன்
2:188)
"இறுதித் தீர்ப்பு நாளில் இறைவனிடம் மிகுந்த
விருப்பத்திற்கும் நெருக்கத்திற்கும் உரித்தான மனிதன் நீதியான ஆட்சியாளனாகவும், இறைவனால்
மிகவும் வெறுக்கப்படவும் இறைவனை விட்டு வெகு தூரம் அகன்றிருக்கவும் செய்கிற மனிதன்
அக்கிரமக்கார ஆட்சியாளனாகவும் இருப்பர்."
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
இஸ்லாமிய ஆட்சியின் நீதிபரிபாலனம் சம்பந்தப்பட்ட
ஏராளமான சான்றுகள் வரலாறு நெடுகிலும் இடம் பிடித்துள்ளன. நீதிபதியின் மனசாட்சியும்,
முஸ்லிம்கள் கொண்டிருந்த விழிப்பும்தான் இந்த நீதி போதனையை வளர்த்தன. (நாமிங்கே விவாதித்துக்
கொண்டிருப்பது அதன் வரலாறு குறித்த விஷயம் அல்ல என்பதால் விளக்கம் தவிர்க்கப்படுகிறது)
தங்களது சட்டம் தெய்வீகமானது என்றும், அது தங்களுக்கும் தங்கள்
ஆட்சியாளர்களுக்கும் சம உரிமைகளை தரவல்லதாகும் என்றும், பயபக்தியுள்ள நீதிபதிகள் தெய்வீகமான
இறைச்சட்டங்களையே பயன்படுத்துவார்கள் என்றும் குடிமக்களுக்கு அழுத்தமான நம்பிக்கை ஏற்படும்
போதுதான் சமூகத்தில் அச்சமற்ற பாதுகாப்புணர்வும் அமைதியும் நிலைபெறுகிறது.
பாதுகாப்பு:
அச்சமற்ற பாதுகாப்புணர்வு தோன்றவில்லையென்றால் அமைதி
ஏற்படாது. சமூகத்தின் பாதுகாப்பிற்காக ஒவ்வொருவரும் தம் பங்கு பணிகளை ஆற்றவே செய்வர்.
ஏனெனில், சமூகத்தின் அங்கத்தினர் அனைவரும் பாதுகாப்பு பெற்றவர்களாக திகழும் போதுதான்,
அச்சமூகம் ஆக்கப்பூர்வமாக செயலாற்றுகிறது என்று பொருள்படும். எனினும், சமூக அமைதிக்கு
உத்தரவாதம் தருகின்ற இறைச்சட்டத்தையும் சிலர் நிராகரிக்கக்கூடும்.
இஸ்லாமிய சட்டத்தை மீறிடும் குற்றத்திற்குரிய தண்டனை,
நீதியான - சட்டப்பூர்வமான பதிலடியேயாகும் என்கிற அறுதியான எண்ணம் நியாய உணர்வுமிக்க
குடிமக்களின் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும். தண்டனை எவ்வளவு தான் கடுமையானதாக இருந்தபோதினும்,
அது முன் முடிவுகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும். ஏனெனில், இறைசட்டங்கள் தீமைகளுக்கும்,
குழப்பங்களுக்கும் எதிராக அக்கறையோடு பொதுநலன்களை உறுதிப்படுத்தவே செய்கின்றன. இத்தகைய
உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் அது முதன் முதலாக மனித உயிர் என்பதையே பரிசீலிக்கின்றது.
மகத்தான மனித உயிரை அநியாயமாகப் பறித்து விடாதீர்கள் என குர்ஆன் ஆணையிடுகின்றது.
"(படுகொலை
செய்வதை) அல்லாஹ் விலக்கியிருக்க, நீங்கள் எம்மனிதரையும் அநியாயமாக கொலை செய்து விடாதீர்கள்......"
(அல் குர்ஆன் 17:33)
நியாயமின்றி கொலை புரிபவருக்குரிய தண்டனை, மரண தண்டனையேயாகும்.
வேண்டுமென்றே திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்ற படுகொலைக்கு பழிவாங்குதல் கட்டாயமாகும்.
பதிலடி என்பது இஸ்லாமிய நீதியின் தனிச் சிறப்பாக விளங்குகிறது. இதனை குர்ஆன் விரிவாகவே
எடுத்துக் கூறியுள்ளது.
".......தவறுதலாகவேயன்றி
ஒரு விசுவாசி இன்னொரு விசுவாசியைக் கொலை செய்வது ஆகுமானதல்ல......."
(அல் குர்ஆன் 4:92)
"எவனொருவன்,
ஒரு விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்கின்றானோ, அவனுக்குரிய கூலி நரமேயாகும். அதில்
அவன் நிரந்தரமாக தங்கியிருப்பான். மேலும், அல்லாஹ் அவன் மீது கோபம் கொண்டு, அவனை சபித்து,
அவனுக்கு மகத்தான வேதனையையும் ஆயத்தப்படுத்தி வைத்திருக்கின்றான்."
(அல் குர்ஆன் 4:93)
"இறைநம்பிக்கையாளர்களே!
கொலைக்காக பழிதீர்ப்பது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவனுக்கு பதிலாக
சுதந்திரமானவனும், அடிமைக்கு பதிலாக அடிமையும், பெண்ணுக்குப் பதிலாக பெண்ணும் (பழிவாங்கப்பட
வேண்டும்) எனினும், (கொலையுண்ட) அவனுடைய சகோதர(பாத்தியஸ்த)ர் மூலம், (கொலையாளியான)
அவனுக்கு ஏதேனும் மன்னிப்பு வழங்கப்பட்டால், அப்பொழுது (கொலையுண்டவரைச் சார்ந்தோர்)
மிக கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். மேலும், (இதற்காக நிர்ணயிக்கப்படும்) நஷ்டஈட்டை
கொலையாளி பெருந்தன்மையுடனும், நன்றிப் பெருக்குடனும் செலுத்திவிட வேண்டும். இது உங்கள்
இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும். எனவே, இதற்குப் பின்னரும் யார்
வரம்பு மீறுகிறாரோ அவருக்குக் கடுமையான வேதனையுண்டு."
"அறிவார்ந்தவர்களே!
கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலம் உங்களுக்கும் வாழ்வுண்டு. (இத்தகைய குற்றங்கள்
பெருகாமல்) நீங்கள் உங்களை (தீமைகளிலிருந்து) காத்துக் கொள்ளலாம்."
(அல் குர்ஆன் 2:178,179)
"......எவரேனும்
அநியாயமாக கொலை செய்யப்பட்டுவிட்டால், கொலையுண்ட அவரின் வாரிசுக்கு (பதிலுக்கு பதில்
செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்துள்ளோம். எனினும், (பழிக்குப் பழியாக)
கொலை செய்வதில் அவர் வரம்பு மீறிட வேண்டாம். நிச்சயமாக (கொலையுண்டவரின் வாரிசுதாரரான)
அவர் நீதியைக் கொண்டு உதவி செய்யப்பட்டவராவார்."
(அல்
குர்ஆன் 17:33)
உயிர் காப்பது மட்டுமின்றி உடைமை, மானம்-மரியாதை
என்பனவற்றின் பாதுகாப்பிற்கும் இஸ்லாமிய சட்டம் பொறுப்புணர்வோடு உத்திரவாதமளிக்கின்றது.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவதை தண்டனைக்குரிய குற்றமாகவே
இஸ்லாம் காண்கிறது.
'ஒரு முஸ்லிமின் இரத்தமும், அவரது உடைமையும், மான
மரியாதையும் புனித மிக்கவையாகும். விபச்சாரம் மற்றும் விபச்சார பழி கூறுதல் என்பனவற்றிற்கான
தண்டனையின் மூலம் மானம்-மரியாதையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது' என்று அண்ணல்
நபி (ஸல்) அறிவித்துள்ளார்கள்.
திருட்டுக் குற்றத்திற்கான தண்டனையில் சொத்தின்
பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றம் புரிபவர்களை எடுத்துக் காட்டான
வகையில் தண்டிக்க வேண்டுமென குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.
"திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு,
அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக - அவர்களின் கரங்களைத் தரித்துவிடுங்கள். அல்லாஹ்
மிகைத்தவனும், ஞானம் மிக்கவனுமாக இருக்கின்றான்."
(அல் குர்ஆன்
5:38)
மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்களும்,
இரகசியங்களும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அனுமதியின்றி எவரும் பிறர் வீடுகளில்
புகுந்திடலாகாது என குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.
"இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடையதல்லாத அடுத்தவர்
வீடுகளில், அவர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு முகமன் (ஸலாம்) கூறாதவரை அவற்றுள்
பிரவேசிக்காதீர்கள். அதுவே உங்களுக்கு நன்மையாகும். நீங்கள் நற்போதனை பெறுவதற்காகவே
இது உங்களுக்குக் கூறப்படுகிறது.
ஒருவேளை அவ்வீடுகளில் எவரையும் நீங்கள் காணாவிடில்,
உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரையில் காத்திருங்கள். மேலும், 'திரும்பிச் சென்று விடுங்கள்'
என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால் அவ்வாறே திரும்பி விடுங்கள். அதுவே உங்களுக்கு மிகவும்
பரிசுத்தமானதாகும். மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவனாவான்."
(அல் குர்ஆன்
24:27,28)
பிறர் இரகசியங்களை துருவித்துருவி ஆராய்வதையும்
உளவு பார்ப்பதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.
"இறைநம்பிக்கையாளர்களே! சந்தேகமான பல எண்ணங்களை
நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நிச்சயமாக அவ்வெண்ணங்களில் சில பாவங்களாகவே
இருக்கும். (அது போல் பிறர் குறைகளை) துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள்.
மேலும், உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேசவும் வேண்டாம். உங்களில் எவராவது தம்முடைய
இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்ண விரும்புவாரா? இல்லை! அதனை நீங்கள் வெறுப்பீர்கள்.
இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக (தன் அடியார்கள்) பாவத்திலிருந்து
மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அவன் மிகுந்த கிருபையாளனாவான்."
(அல் குர்ஆன்
49:12)
முஸ்லிம்களிடையே பரஸ்பர ஆதரவும், நன்மதிப்பும் நிலைத்திருக்க
வேண்டும் என்றும், எவரும் எவரையும் கேலி செய்யக்கூடாதென்றும் குர்ஆன் ஆணையிட்டுள்ளது.
(காண்க 49:11)
இத்தகைய குற்றங்களுக்கு இன்னின்னது தான் தண்டனை என குர்ஆனில்
குறிப்பிடப்படாத போதும் இஸ்லாமின் சட்ட சாசனத்தில் இவற்றிற்குரிய தண்டனைகள் வரையறுக்கப்பட்டே
இருக்கின்றன. மேலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு தண்டனைகளை விதித்திட நீதிபதிகளுக்கு
அதிகாரம் உள்ளது. மேலும், சாட்சியமளிப்பவர் உண்மையாளராக இருந்தாலேயன்றி அவரது சாட்சியம்
ஏற்கப்பட மாட்டாது. சந்தேகத்திற்கிடமான நிலையில் எவரும் தண்டனைக்குள்ளாக்கப்படலாகாது.
தண்டனை நிறைவேற்றப்படவும் கூடாது என்பது குர்ஆனின் பொதுவிதியாகும். (காண்க 49:12)
தீயவர்களின் சொல்லையும்-விளக்கத்தையும் ஏற்கும்
முன்னர் அது பற்றி தெளிவான விசாரணையை மேற்கொண்டு அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள
வேண்டியது விசுவாசிகளின் கடமையாகும்.
"விசுவாசிகளே!
தீயவன் ஒருவன் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டு வந்தால், அதனை தீர விசாரித்துக் கொள்ளுங்கள்.
(இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்து விடக்கூடும்.
பின்னர், நீங்கள் செய்தவற்றுக்காக நீங்களே கைசேதத்திற்கு ஆளாவீர்கள்."
(அல்
குர்ஆன் 49:6)
உலகத் தேவைகள்:
மனிதனின் உலகத் தேவைகளின் முக்கியத்துவத்தை இஸ்லாம்
அங்கீகரித்துள்ளது. அவற்றிற்குரிய இடம் முக்கியமானதாக இருப்பினும், மனிதனின் ஒட்டுமொத்த
மேம்பாட்டிற்குரிய ஒரே ஒர் அடிப்படையாக இஸ்லாம் அவற்றை கருதவில்லை.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனிதன் என்பவன் ஆன்மீகமும்
உலகியலும் கலந்த ஓர் உயிரினமாவான். ஆன்மீகத் தேவைகளின் ஏற்புடைமை இஸ்லாமை இதர உலகியல்
சித்தாந்தங்களிலிருந்து வேறுபடுத்தியுள்ளது. எனவே, இஸ்லாமின் அணுகுமுறையும், வாழ்க்கையைப்
பற்றிய விளக்கங்களும் மிகுந்த பயனளிப்பவையாய்த் திகழ்கின்றன. மேலும், அவை மெய்யானதும்
பரந்து விரிந்த விசாலமானவையுமாகும். தனிமனிதத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை என்றால்,
சட்டங்களும் உத்தரவாதங்களும் இருந்தும் அவை பயனளித்திடாது என்பதை இஸ்லாம் தெள்ளத் தெளிவாக
விளங்கி வைத்துள்ளது. அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்திட வழி வகையற்ற ஒரு மனிதரிடமிருந்து,
அவர்தம் உலகியலும் ஆன்மீகமுமான ஆற்றலின் வெளிப்பாட்டையோ மேம்பாட்டையோ எதிர்பார்க்க
முடியாது. கும்பி கூழ் வேண்டி தவிக்கும் போது கொள்கைக் கொடி பறக்கச் சாத்தியமில்லை.
ஒவ்வொருவருக்கும் மிக கண்ணியமானதோர் வாழ்க்கைத் தரத்தை இஸ்லாம் உறுதி செய்கிறது. சமூக
ஒற்றுமைக்கு இது மிகமிக அவசியமானதாகும்.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், உழைப்பு மனிதனை முழுமைப்படுத்தவும்,
அவனுக்கு வாழ்வாதாரத்தை வழங்கவும் செய்கிறது. 'நேர்மையான - உழைப்பாளனை இறைவன் நேசிக்கிறான்'
என்று அண்ணல் நபி (ஸல்) திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள். 'தனது சொந்த கரங்களால் உழைத்து
சம்பாதித்த உணவுதான் மிகச் சிறந்த உணவாகும்' என்றும் அண்ணலார் அறிவித்துள்ளார்கள்.
உழைத்தவனுக்குரிய ஊதியத்தை அவனது வியர்வை உலரும் முன்னே கொடுத்துவிட
வேண்டும் என்று இஸ்லாம் ஆணையிட்டுள்ளது. மாலிக்கீ மத்ஹபைச் சேர்ந்த சில சட்ட
வல்லுநர்களின் கருத்துப்படி, தொழிலாளியின் கூலி, முதலாளி ஈட்டுகின்ற இலாபத்தின் சரிபாதியாக
இருக்க வேண்டும் என்பதாகும். இதற்கு ஆதாரமாக - விளைச்சலில் சரிபாதியை கூலியாக தருவதாகக்
கூறி அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஃகைபர்வாசிகளை நிலத்தில் வேலைக்கமர்த்தியதை அவர்கள்
எடுத்துக்காட்டுகின்றனர்.
உழைக்க முடியாதபடி எவரும் பலவீனப்பட்டிருப்பின், இஸ்லாமிய அரசாங்கமே
அவர்களுக்கு உணவும் இன்ன பிற வசதிகளும் வழங்கிடல் வேண்டும். கலீஃபா உமர் (ரழி) அவர்களின்
கஜானாவிலிருந்து, பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் தலா நூறு திர்கம் ஒதுக்கப்பட்டிருந்தது.
குழந்தை நடைபயிலத் துவங்கும் போது இத்தொகை இரட்டிப்பாகவும், வாலிபத்தை அடையும் போது
மேலும் பல மடங்கு உயர்த்தப்பட்டும் வந்தது. யூதர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து
வயோதிகர்களுக்கும் ஏழை - எளியவர்களுக்கும் கலீஃபா உமர் (ரழி) அவர்கள் உதவித்தொகை (பென்ஷன்)
வழங்கி வந்தார்கள். இஸ்லாமிய அரசில், சாதிமத பேதமில்லாத குடிமக்களுக்கான ஒரு சமஉரிமையே
இங்கு பிரதிபலிக்கின்றது.
வறுமை, ஆதரவின்மை, கடன் சுமை போன்ற நிர்க்கதியான
நிலைகளில் அரசிடமிருந்து உதவி பெற தனிமனிதனுக்கு உரிமையுள்ளது. இந்த உதவியைப் பெற தகுதியுள்ள
அனைவருக்கும் நாட்டின் கஜானாவான பொதுநிதிக் கருவூலத்திலிருந்து உதவித் தொகை கிடைத்தேயாக
வேண்டும்.
உணவும் தண்ணீரும் உயிர் வாழ இன்றியமையாத் தேவை என்பதால்,
உணவு கேட்டு போராடுவதற்குக் கூட இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் தனிமனிதனுக்கு உரிமையுள்ளது.
சமூகத்தில் பலர் பட்டினி கிடக்க, உணவுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்படுமானால், அவற்றை
பறிமுதல் செய்து வறியவர்களுக்கு வழங்கிட வேண்டியது சமூகத்தின் கடமையாகும் என்று இப்னு
ஹஸம் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவிகரமாக
இருப்பதும், அதே குடும்பத்தைச் சேர்ந்த வறியவர்களுக்கு நிவாரண உதவிகளை அளிப்பதும் கட்டாயமாகும்.
தனது உற்றார் உறவினரின் உதவியைப் பெற ஒவ்வொருவருக்கும் உரிமையுள்ளது. இவற்றிற்கெல்லாம்
மேலாகத்தான் நாட்டின்-அரசாங்கத்தின் நிவாரண நடவடிக்கைகள். ஆக, இஸ்லாமிய அமைப்பு ஒவ்வொருவருக்கும்
கண்ணியமானதோர் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தி விடுகிறது. இத்தகைய உறுதிப்பாடு சமூக
அமைதிக்கு இன்றியமையாததாகும். ஏனெனில் அது கொடிய வறுமைப் பிணியையும், விரக்தியையும்
இல்லாததாக்கி விடுகிறது.
சமூகத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு:
இஸ்லாமிய அமைப்பின் பரந்து விரிந்த சமூக நீதி அனைவருக்கும் போதுமான
வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்கிறது. 'ஒவ்வொருவருக்கும் அவரவர் உழைப்பிற்கும் தேவைக்கும்
ஏற்ப' என்கிற உமர் இப்னு அல்-கத்தாப் (ரழி) அவர்களின் பிரதான அறிவிப்பு இதனைத் தெளிவு
படுத்துகிறது. இந்த சமூக நீதி என்பதன் பயன்பாடு இஸ்லாமல்லாத சமூகங்களில் வெற்றி காணவில்லை.
ஏனெனில் அங்கு செயல்படுத்தப்படுவதெல்லாம் இதன் ஒரு பகுதி மட்டுமேயாகும். இதன் காரணமாகவே
பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு முழுமையான பரிகாரம் அங்கு ஏற்படவில்லை.
சமூகத்தின் சமத்துவம், சமூக நீதிக்கும் அதன் மூலம் சமூக அமைதிக்கும்
இன்றியமையாததாகும். அனைத்து உத்திரவாதங்களும் - பாதுகாப்பு ஏற்பாடுகளும் நிலையானதொரு
சமூக ஒற்றுமைக்கான வழிவகைகளேயாகும். இந்த ஒற்றுமை இஸ்லாமின் அரசியல் அமைப்பிலும் சிரமமின்றி
முறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பொருளாதார பங்கீட்டில்தான் இது மிகையாக வெளிப்போந்திடுகிறது.
"அச்சிற்றூர்க்காரர்களிடமிருந்து
அல்லாஹ் தன் தூதருக்கு மீட்டுக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும், (அவனது) தூதருக்கும்,
(அவர்) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப் போக்கர்களுக்கும்
உரியவையாகும். மேலும், உங்களிலுள்ள செல்வந்தர் களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல்
இருப்பதற்காக (இவ்வாறு பங்கீடு செய்யும் படி கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும். நம் தூதர்
உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ
அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக
அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்."
(அல் குர்ஆன் 59:7)
கலீஃபா உமர் (ரழி) அவர்கள் இந்தத் தத்துவத்தை அப்படியே
செயலில் காட்ட விழைந்தார்கள். சமுதாயத்தின் செல்வங்கள் அனைத்தையும் கைப்பற்றி, முறையாகப்
பங்கீடு செய்து, மறு வினியோகம் செய்தல் என்பதே உமரின் திட்டமாகவிருந்தது. அன்று அதனை
எவரும் எதிர்த்திடவுமில்லை. காரணம் சமத்துவத்தின் அந்தத் தத்துவம் குர்ஆனுக்கு உட்பட்டதாகவே
இருந்தது.
இஸ்லாமிய நாடு தனது பொருளாதார நிலைகளுக்கேற்ப இந்தத்
தத்துவத்தை செயல்படுத்தலாம். தனியார் சொத்துகளுக்கு உச்ச வரம்பு விதித்து கட்டுப்படுத்தவும்,
சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப வினியோகத்தை வரைமுறைபடுத்தவும் இந்தத் தத்துவம் அனுமதியளிக்கிறது.
எனினும், இஸ்லாமிய சமூக அமைப்பின் ஓர் அம்சம் என்கிற நிலையில் தனியார் சொத்துரிமையை
இஸ்லாம் அங்கீகரிக்கவும் செய்கிறது.
இரண்டாவது தத்துவத்தின்படி குடிமக்களின் நலன்களைக்
காப்பதற்கான உத்தரவாதத்தைத் தர வேண்டியது நாட்டின் தலையாய கடமையாகும். பொது செலவினத்திற்காக
வருமான வரி மட்டிலுமின்றி மூலதனச் சுங்கம் வசூலிக்கவும் அரசாங்கத்திற்கு அதிகாரமுள்ளது.
அத்தகைய சுங்க வரியை பின்னர் திரும்பக் கொடுக்க வேண்டியதுமில்லை.
மூன்றாவது தத்துவத்தின் படி, பொது நலத்தை மேம்படுத்தவும்,
ஊழலைத் தடுக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளலாம்.
சட்ட விரோதமானவற்றை ஊக்கப்படுத்துகின்ற அனைத்தும் சட்ட விரோதமாகவே கருதப்படும். அதுபோல்
சட்டப்பூர்வமானவை எதனையும் ஊக்கப்படுத்துகின்ற யாவும் அங்கீகரிக்கவும் படுகின்றன. எடுத்துக்காட்டாக,
விபச்சாரம் மற்றும் அதன்பால் தூண்டக்கூடியவை யாவும் தடுக்கப்படுகின்றன. தன்னார்வத்
தொண்டும், சீர்திருத்தப் பணிகளும் ஆர்வமூட்டப் படுகின்றன.
இந்த அடிப்படையில் ஆய்ந்து பார்க்கும் போது, பொருளாதார
நெருக்கடியும் ஏற்றத்தாழ்வுகளும்தான் பல்வேறு சமூகத் தீமைகளுக்கு இட்டுச் செல்கிறது.
எனவே பொது திருப்தியை உறுதிப்படுத்த தனியார் சொத்துக்களுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்த
வேண்டிய நிலை ஏற்படுகிறது.
நான்காவது தத்துவத்தின்படி, வட்டியும் அதனுடன் தொடர்புடைய
யாவும் சட்டவிரோதமானவையாகும். சமூகப் பொருளாதார சூழ்நிலைகளுக்கேற்ப மாறிவரும் இலாபத்தை
இஸ்லாம் அங்கீகரிக்கின்றது. உழைப்புடன்தான் அது தொடர்பு கொண்டுள்ளது. எனினும், வட்டி
உழைப்புடன் தொடர்பு கொண்டதல்ல. அதற்கும் சூழ்நிலை மாற்றங்களுக்கும் எந்த தொடர்பும்
கிடையாது. வட்டிக்கு தடைவிதிப்பதன் மூலம், வட்டி வணிகர்களுக்கு பணத்தை இரட்டிப்பாக்கிடும்
வாய்ப்பு அற்றுப்போகிறது. வறியவர்களின் நெருக்கடிகளைச் சுரண்டலுக்கு சாதகமாக்கி வட்டிக்கு
கடன் கொடுப்பதற்கான வாய்ப்புதான் அவர்களுக்குப் பறிபோகிறது. வட்டி இல்லையேல் வங்கி
வைப்புகள் இலாபத்தைத் தராதுதான். ஆனாலும், இது சமூகத்தில் உழைப்பு வளர துணை புரியும்.
ஐந்தாவது தத்துவம், ஏக போகத்தின் மீதான தடையாகும்.
நுகர்வோரின் தேட்டங்களுக்கெதிராகச் செயல்படும் இந்த ஏகபோக உரிமையை கட்டுக்குள் கொண்டு
வந்து மட்டுப்படுத்த வேண்டியது சமூகத்தின் சுமுகமான நிலைபாட்டிற்கு அவசியமானதாகும்.
ஏக போகத்தை நிலை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நேர்மையற்ற - அதிகப்படியான - செலவுகள்
யாவும் சந்தையில் விலையேற்றமாக பிரதிபலிக்கிறது. அது சமூகத்தை பாதிக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதன்
மூலம் பொருளாதாரத் துறையை சமூக அமைதிக்கான ஊடகமாக - கருவியாக - ஆக்கிவிடுகிறது இஸ்லாம்.
ஆறாவது தத்துவம், பொதுத்துறைகளைப் பற்றியதாகும்.
இன்றைய சொல் வழக்கில் இதனை 'தேசியமயம்' என்று சொல்லலாம். பண்டைய காலத்தில், காற்றும்
நீரும் நெருப்பும் மேய்ச்சல் நிலங்களும் பொதுவிலிருந்தன. உயிர் வாழ இவை தவிர்க்கவியலாதவையாக
இருப்பதால் இவையாவும் பொதுச் சொத்துகளாகவே ஆகின்றன. இந்த அளவுகோலை வைத்துப் பார்க்கும்
போது தாதுப்பொருட்களும் கனிமங்களும் அடங்கிய பூமிக்கடியிலுள்ள வளங்கள் யாவும் பொதுச்
சொத்தாகவே இருந்திடல் வேண்டும் என்பதுதான் மாலிக்கீ மத்ஹபின் கண்ணோட்டமாகும்.
நிலம் தனியார் சொத்தாக இருக்கலாம். ஆனால், அதனடியிலுள்ள
கனிமங்களும் இன்ன பிறவும் பொதுச் சொத்தாகவே இருந்திடல் வேண்டும். இந்தத் தத்துவம் பொருளாதார
சமத்துவத்தின் ஒரு முக்கிய காரணியை இல்லாததாக்கிவிடும் என்பதில் ஐயமில்லை. எனினும்
இத்தகைய வளங்களை நாட்டுடைமையாக்குவது என்பது, ஏகபோக வாதிகள் மற்றும் கொள்ளை இலாப சுரண்டல்வாதிகள்
ஆகியோரின் சுயநலத் தேட்டங்களை முறியடிக்க துணைபுரியவே செய்யும்.
ஏழாவது தத்துவம், வீண் விரயத்தைத் தடை செய்கிறது.
இஸ்லாம், ஆசைகளை அடக்கி ஒடுக்கி வைத்திடும் நடைமுறை சாத்தியமற்ற ஒரு வாழ்க்கையின் பக்கம்
அழைப்பு விடுக்கவில்லை. மாறாக, வாழ்க்கை சுகங்களை அனுபவித்திடத்தக்க நல்வழிகளை வகுத்து
அதன்படி இன்புற, இஸ்லாமை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களுக்கு முழு சுதந்திரத்தையும் அது
வழங்கியுள்ளது. அதுபோல் பிறர் அனுபவிப்பதை தடுப்பதையும் இஸ்லாம் விலக்கியுள்ளது. இருந்தாலும்கூட
வீண்விரயத்தையும் வெட்டி பந்தாவையும் இஸ்லாம் வெறுக்கவே செய்கிறது.
"......உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண்
விரயம் செய்யாதீர்கள். ஏனெனில், அல்லாஹ் அளவுக்கதிகமாக விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
(நபியே!) நீர் கேட்பீராக! அல்லாஹ் தன் அடியார்களுக்காக
வெளிப்படுத்தியுள்ள அழகலங்காரத்தையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது
யார்? இன்னும் நீர் கூறும், அவை இவ்வுலக வாழ்க்கையில் விசுவாசிகளுக்கு அனுமதிக்கப்பட்டவையே,
எனினும், மறுமையில் அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்......"
(அல் குர்ஆன்
7:31,32)
ஆடம்பரம் இஸ்லாமில் கண்டிக்கப்பட்டுள்ளது. அது மனிதனின்
மன மெய்மொழிகளை மட்டுமின்றி தார்மீக நெறிகளையும், சமூக அமைப்பையும் சேர்த்து சீர்குழைத்து
விடுகிறது. ஆடம்பரமும் அனாவசிய செலவுகளும்தான் நாடுகள் பலவற்றின் வீழ்ச்சிக்கு காரணமாய்
அமைந்துள்ளன என்பதற்கு வரலாறு கட்டியங்கூறுகிறது. குர்ஆனும் இதற்கு சாட்சியாக விளங்குகிறது.
"நாம் ஓர் ஊரை (அதனில் தீமை மிகைத்ததன் காரணமாக)
அழிக்க நாடினால், (முதலில்) அதிலுள்ள சுகபோக வாசிகளை (நேர்வழியை பின்பற்றி வாழுமாறு)
ஏவுவோம். ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப்படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது
அவ்வூரின் மீது (வேதனை பற்றிய) நம் வாக்கு உண்மையாகி விடுகிறது. அப்பால் அதனை நாம்
அடியோடு அழித்து விடுகிறோம்."
(அல் குர்ஆன் 17:16)
எட்டாவது தத்துவம் பதுக்கலைத் தடை செய்கிறது. இந்தப்
பொருளாதாரக் குற்றத்தை குர்ஆன் கடுஞ்சொல்லால் கண்டனம் செய்துள்ளது.
"........எவர்கள் பொன்னையும் வெள்ளியையும்
சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாது இருக்கின்றார்களோ,
அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று (நபியே!) நற்செய்தி கூறுவீராக!
நரக செருப்பில் அவை பழுக்கக் காய்ச்சப்பட்டு, அவற்றைக்
கொண்டு அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும்
நாளில், இதுதான் உங்களுக்காக நீங்கள் சேமித்தது, ஆகவே, நீங்கள் சேமித்து வைத்ததை சுவைத்துப்
பாருங்கள் (என்று அவர்களுக்கு கூறப்படும்)."
(அல் குர்ஆன்
9:34,35)
பதுக்கலின் காரணமாக பொருளாதார நெருக்கடியும், பஞ்சமும்
ஏற்பட்டு சமூகத்தில் பாதுகாப்பும் அமைதியும் சீர்குலைகிறது. பதுக்கல்காரர்களுக்குரிய
தண்டனையை, மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கைவரை ஒத்தி வைத்திடலாகாது. அதனை கட்டுப்படுத்த
வேண்டியது தேசத்தின் கடமையாகும். உலோபித்தனத்திற்கும் பதுக்கலுக்கும் குர்ஆன் தடைவிதித்துள்ளது.
"உலோபியைப் போல் செலவே செய்யாமல் உம் கையை
உம் கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர்...."
(அல் குர்ஆன்
17:29)
"அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்.
இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும் நன்மை
செய்யுங்கள்....."
(அல் குர்ஆன்
2:195)
அறிஞர்கள் சிலரது கருத்துப்படி ஜகாத் கொடுக்கப்பட்டு
விட்டால் எஞ்சிய செல்வத்தைப் பதுக்கல் சொத்தாகக் கருதிடலாகாது. ஜகாத்தின் மூலம் செல்வந்தர்களிடமிருந்து
மிகுதியான வருவாயை ஈட்டிக் கொள்ளும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளது என்பதே இவர்களின்
வாதமாகும்.
இறைத்தூதர் (ஸல்) இது குறித்து என்ன சொல்கிறார்
என்பதைப் பாருங்கள்:
"ஒரு வெள்ளி நாணயத்தையோ தங்க நாணயத்தையோ சம்பாதித்து,
பின்னர் அதை கடனாகக் கொடுக்கவோ, இறைவழியில் செலவழிக்கவோ வழிவகை காணாதிருப்பவன் கஞ்சனாவான்.
அவனுக்கு மறுமையில் தண்டனையுமுண்டு."
(அல் ஹதீஸ்)
தரிசு நிலத்தைக் கையகப்படுத்தி வேளாண் பயிரிடுபவருக்கு
அந்நிலம் சொந்தமாகிவிடும். அது போல், சொந்த நிலத்தை தரிசாக விட்டு விட்டால், பின்னர்
அதற்கு உரிமை கோர இயலா நிலையும் நேர்ந்திடும். எங்கும் எவரும் எதனையும் பயனற்ற வகையில்
முடக்கிப் போட்டிடல் ஆகாது என்பதே இதன் கருத்தாகும்.
ஒன்பதாவது தத்துவத்தின் படி, சொத்துரிமையை இஸ்லாம்
வகைப்படுத்தித் தந்துள்ளது. சேமிப்பு என்பது மனிதனின் இயல்பான தேட்டமாகும். தனது ஆற்றலையும்
உழைப்பையும் செலவிட தனி மனிதனுக்கு ஆர்வம் வரவேண்டுமானால், அவனுக்கு சேமிக்கும் உரிமை
இருந்தாக வேண்டும். அத்துடன் தனியார் சொத்துரிமையும் அவசியமாகும். முயற்சியை திருவினையாக்கி
விடும் விஷயத்தில் சமூகத்தை விட்டும் தனிமனிதன் சுதந்திரமானவனாக ஆகிடல் வேண்டும். சுருங்கச்
சொன்னால், இஸ்லாமின் தனியுடைமை சம்பிரதாயம் மிதமானதும், மனித இயற்கைக்கு ஏற்புடையதுமேயாகும்.
சமூகத்தையும் தனிநபரையும் அது ஒரே நேரத்தில் கருத்திற் கொள்கிறது.
பத்தாவது தத்துவம், ஜகாத் என்னும் கட்டாயக் கொடையாகும்.
இஸ்லாமின் பொருளியல் சித்தாந்தம் இது ஒன்றே என்றொரு விமர்சனமும் இருந்து வருகிறது.
செல்வத்தின் ஒட்டுமொத்த மதிப்பு அல்லது சரியான மூலதனத் தொகை
இவற்றிலிருந்து இரண்டரை சதவிகிதத்தை கட்டாயக் கொடையாக வழங்கிட வேண்டும். இதனை செல்வந்தர்களிடமிருந்து
இஸ்லாமிய அரசு வசூலிக்கும். குர்ஆனின் கூற்றிற்கிணங்கவே இது செலவிடப்படும். ஜகாத் என்றால்
ஏழை எளியவர்களுக்கு தனவந்தர்கள் மனமுவந்து அளித்திடும் ஒரு தானமாகும் என்றெண்ணுவது
இஸ்லாமுக்கு ஏற்புடையதன்று.
கல்விக்கூடங்கள், கல்விப்பணியாளர்களின் ஊதியம்,
மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள், உணவு மற்றும் பரிபாலனம் என்பனவற்றிற்காக நாடு செலவிடும்
தொகையை அரசாங்கத்தின் கருணைக் கொடை என்று எவரும் கருத மாட்டார்கள். அது சமூகத்தின்
உரிமையும் அரசாங்கத்தின் கடமையுமாகும். ஜகாத்தின் நிலையும் இதுவே. மேற்சொன்ன இரண்டரை
சதவிகிதம் தவிர நாட்டின் இதரத் தேவைகளுக்காகவும் மூலதனத்தின் மீது வரிவிதிக்க அரசுக்கு
அதிகாரமுள்ளது. இப்படி விதிக்கப்படும் வரி அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயக் கொடையே
அன்றி கருணைக் கொடையல்ல!
தற்போது தனவந்தர்கள் நேரடியாகவே ஏழை எளியவர்களுக்கு
ஜகாத்தை விநியோகித்து வருகின்றனர், ஜகாத்தை வசூலித்து முறையாக விநியோகித்திடும் ஓர்
இஸ்லாமிய அரசு இல்லாததே இதற்குக் காரணமாகும். உலகின் சில பகுதிகளில் இஸ்லாமின் பெயரால்
சில அரசாங்கங்கள் இயங்கி வந்தாலும்கூட அவை பெயரளவில் ஆனவையே! அவையும் தன் அதிகார எல்லைக்குள்
அறவே ஜகாத்தை செயல்படுத்துவதில்லை.
ஜகாத் வினியோகத்தின் தற்போதைய நடைமுறை இஸ்லாமிய போதனைகளின் இலட்சியத்தை
நிறைவேற்றவில்லை. ஜகாத்தின் நோக்கமே சமூக மேம்பாடுதான். அறியாமை காரணமாகவும், தவறாக
புரிந்து கொள்ளப்பட்டதன் விளைவாகவும் ஜகாத் எனும் ஓர் முழுமுதற் உரிமை இன்று மனமிறங்கித்
தரப்படும் ஈகையாக உருமாறி தரம் குன்றிக் கிடக்கிறது.
தொடர்ச்சி மூன்றாம் பாகத்தில்.......
குறிப்புகள்:
·
‘இஸ்லாத்தில் சமூக அமைதி” எனும் இத்தலைப்பு "இஸ்லாமும் உலக அமைதியும்" எனும் ஷஹீது சையித் குதுப் (ரஹ்) எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment