Thursday, July 7, 2016

இஸ்லாத்தில் சமூக அமைதி - பாகம்: 3

இஸ்லாத்தில் சமூக அமைதி

பாகம்: 3

-    சையித் குதுப் (ரஹ்)
-    தமிழில்: அபூ முஜாஹித்


சட்டமும் அமைதியும்:

இஸ்லாமியச் சட்டங்களின் குணாதிசயங்களையும், அதன் மீது மக்கள் கொண்டிருக்கும் நன்மதிப்பையும் பயன்படுத்தித்தான் இஸ்லாமிய சமூகத்தில் அமைதி நிறுவப்படுகிறது. சமூகத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் நிதர்சனமாக்கிட அது மிகுந்த பயனளிக்கத்தக்கதாகும்.

ஒவ்வொரு சமூகத்திற்கும் அதனதன் சொந்த சட்டங்கள் நடைமுறையில் இருந்து வருவது இயல்பு. சமூக தொடர்புகளையும் செயல்பாடுகளையும் வரைமுறைப்படுத்துவதும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதுமே சட்டத்தின் தர்மமாகும். மக்கள் மனமுவந்து சட்டத்தை ஏற்கவும், சட்டப்பூர்வமாக அமையப்பெற்ற அரசின் மீதும் ஆட்சியின் மீதும் முழுநம்பிக்கை வைக்கவும் வேண்டும். அத்துடன் தமது நலன்கள் யாவும் பாதுகாக்கப்படும் என்கிற அழுத்தமான அசைக்க முடியாத நம்பிக்கையும் அவர்களுக்கு இருந்தாக வேண்டும். சட்டத்தின் தர்மத்தை நிர்வகித்திட இந்த சூழல் இன்றியமையாததாகும்.

பொதுவாக மக்கள் சட்டத்தை மீறுவது என்பது ஒரு சாதாரண நிகழ்வாகும். இந்த சட்டமீறல் தான் சமூகத்தில் காணப்படுகிற அனைத்து ஒழுங்கீனங்களுக்கும் மூலகாரணமாகும். குறிப்பாக மூன்று காரணங்களால் மக்கள் சட்டத்தை மீறுகின்றனர்.

ஒன்று: சட்டம் நீதியானதல்ல என்கிற எண்ணம் மக்களிடம் எழும்போது அவர்கள் சட்டத்தை மீறுகின்றனர். குறிப்பிட்ட ஒரு தனி நபருடையவோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தினுடையவோ வர்க்கத்தினுடையவோ நலன்களை மட்டும் பாதுகாக்கின்ற சட்டங்கள் ஒரு போதும் நீதியானவையாக இருக்கமாட்டா. செல்வந்தர்களைப் பாதுகாக்கவும், எளியவர்களை வலியவர்களும், கீழோரை மேலோரும் சுரண்டுவதற்கான ஒரு துணைச் சாதனமே இந்தச் சட்டம் என மக்கள் கருதுவதைத் தவிர்க்க முடியாது.

இரண்டு: சட்டத்தின் ஆன்மாவிற்கும், அந்தச் சட்டம் பயன் படுத்தப்படுகிற சமூகத்தின் ஆன்மாவிற்குமிடையே வேறுபாடு தோன்றும்போது அந்தச் சட்டத்தை மக்கள் புறக்கணிக்கின்றனர்; மீறுகின்றனர். சமூகத்தின் தார்மீக தரத்தை மேம்படுத்தவோ, உலகியல் தேவைகளுக்கு நிறைவு காணவோ ஆற்றலில்லா சட்டங்கள் மக்களால் நிராகரிக்கப்படுவது தவிர்க்கமுடியாததே! இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சமூகத்தின் நிலைமைக்கும், தேவைகளுக்கும் ஏற்ப பொருந்தி வராத சட்டங்கள் புறக்கணிப்பிற்கும் - நிராகரிப்பிற்கும் உரியது என மக்கள் அதனை இனங்காணுகின்றனர்.

மூன்று: தான் என்கிற அகம்பாவத்தோடு தனது ஆணவத்தை உயர்த்திப் பிடிக்கவும், எதிலும் தன்னை முன்னிருத்தி எடுத்துக்காட்டவும் ஆசைப்படுகிறவர் நடைமுறையில் உள்ள சட்டங்களை மீறுவதுண்டு. இத்தகையவர்கள் தனது சுயநலத்தைக் காத்துக் கொள்வதற்காக, சமூக ஸ்தாபனங்களை தன்வயப்படுத்தவும் மற்றவர்களை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் செய்வர். ஒரு தனி மனிதனோ, வர்க்கமோ, இயக்கமோ இயற்றுகின்ற சட்டங்களை மீறுவதன் மூலம் இவர்கள் உவகையடைகின்றனர். உரிமை மறுக்கப்பட்டவர்களை இந்த நிராகரிப்பானது திருப்திப்படுத்தத்தானே செய்யும்!

முழுமையற்றதும், நன்மை தீமைகளைப் பிரித்தறிய முடியாததுமான சட்டங்கள் மீறப்படும் போதுதான் சமூகத்தில் அமைதிக்குப் பங்கம் நேர்கிறது. மனிதச் சட்டங்கள் எதற்கும் இந்த நிலையை சமாளித்திடும் ஆற்றல் அறவே கிடையாது. குறிப்பாக மேற்சொன்ன முதலாவதும் மூன்றாவதுமான குறைபாடுகளை மதச்சார்பற்ற சட்டங்கள் அனைத்திலும் காண முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் இயற்றுகிற சட்டங்களுக்கும், கம்யூனிச நாடுகளில் தொழிலாளிவர்க்கத்தினர் இயற்றுகிற சட்டங்களுக்குமிடையே வேறுபாடுகள் எதுவும் கிடையாது.

முதலாளித்துவ - ஜனநாயக நாடுகளில், தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்க்கான உரிமை சாதாரண குடிமக்களுக்கு இருக்கிறது, என்றாலுங்கூட இந்த சுதந்திரம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டதேயாகும். தங்களது வாழ்க்கைத் தேவைகள் யாவும் முதலாளித்துவ சார்புடைய வேட்பாளர்களின் கரங்களிலேயே உள்ளன என்பதை உணர்த்திடும் வாக்காளர்கள் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த முன்வர மாட்டார்கள். அதாவது உண்மையாகவும் நேர்மையாகவும் தங்களது வாக்குரிமையை செலுத்த முன்வர மாட்டார்கள். தனிப்பட்ட வர்க்கங்களிலிருந்து உருப்பெறுகிற நாடாளுமன்றங்கள் இயற்றிடும் சட்டங்கள் சாமானிய மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்திடும் என்று கருதுவது அறிவுடைமையாகாது. இங்கு இயற்றப்படும் சட்டங்கள் அந்தத் தனிப்பட்ட வர்க்கத்தினரைப் பாதுகாப்பதற்குரியனவாகவே இருக்கும்.

தொழிலாளி வர்க்கம் இயற்றிடும் சட்டத்தின் நிலையும் இதுதான். பூர்ஷ்வா இனத்தின் அழிவே கம்யூனிச நாட்டு சட்டமியற்றுதலின் நோக்கமாக இருந்தது. சுருங்கச் சென்னால், யார் ஆண்டாலும் சட்டம் ஆளும் வர்க்கத்திற்குட்படாதவர்களுக்கு எதிராக ஏவப்படும் ஆயுதமாகவே இருக்கும்.

இதுவரை நாமிங்கே மேற்கொண்ட ஒப்பு நோக்குதல், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் ஏற்ப சட்டமியற்றுகின்ற அனைத்து நாடுகளுக்கும் பொருந்தத்தக்கது ஆகும். பிற நாடுகளின் சட்டத் தொகுப்புகளை போலித்தனமாக பயன்படுத்துகிற நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

மக்களின் பாரம்பரிய சம்பிரதாயங்கள், சட்டத்தின் ஆன்மாவுமடன் பொருந்தியே ஆக வேண்டும் என்பதில்லை. ஏனெனில், அதன் காரணமாக மக்கள் தேவைகளும் அவர் தம் விருப்பு வெறுப்புகளும் நிறைவேற்றப்பட முடியாமற் போய் விடுகிறது. புராதனமும் நவீனமுமான அனைத்துச் சட்டத் தொகுப்புகளிலும், இந்தக் குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன.

இஸ்லாமிய சட்டங்கள் எவ்வித குறைபாடுகளுமற்ற முற்றிலும் பரிபூரணமானவையாகும். எந்த ஒரு தனிநபரிடத்திலும் - வகுப்பினரிடத்திலும் இஸ்லாம் பாகுபாடு காண்பதில்லை. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எல்லாம் வல்ல ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவன்தான் உண்மையான ஆட்சியாளனும் சட்டமியற்றும் அதிகாரமுள்ளவனுமாவான். மனிதர்கள் யாவரும் அவன் முன் சமமானவர்களே. இஸ்லாமிய விதிமுறைகளின் படி இங்கு ஆட்சி புரிபவர்கள் அந்த இறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற அவனது பிரதிநிதிகளாவர்.

மனிதர்களிடையே பாகுபாடு காண்பதற்கோ, வர்க்க பேதங்களை பாராட்டுவதற்கோ இஸ்லாமில் கிஞ்சிற்றும் இடமில்லை. மனிதர்கள் அனைவருக்கும் உரிமைகளும் கடமைகளும் உள்ளன. சட்டத்தின் முன் யாவரும் சமமானவர்களே! வர்க்கமுறை இஸ்லாமில் இல்லாத காரணத்தால், அரசியல் பொருளாதார துறைகளில் இஸ்லாமிய சட்டங்கள் கையாளப்படும் போது வகுப்புவாரியான மோதல்களோ, பதற்றங்களோ தோன்றுவதில்லை. இஸ்லாமிய சட்டத்தில் அத்துமீறல்களோ அநியாயங்களோ இல்லாத காரணத்தால் அதனைச் செயல்படுத்திடும் சமூகங்களில் எதிர்ப்புக்காட்டக் கூடியவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். ஒருபோதும் திருப்தியடையாத எதிலுமே மனநிறைவு காணாத ஒரு சிலர் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். 'விதிவிலக்கு'களை பொருட்படுத்தத் தேவையில்லை.

மேலும், இஸ்லாமின் சட்ட விதிகள் முஸ்லிம்களுக்கு அந்நியமானவையன்று. அது அவர்களின் நம்பிக்கையின் ஓர் பகுதியும் அன்றாட வாழ்க்கையின் வழிகாட்டியுமாகும். சடங்கு ரீதியான வழிபாடுகள் அவர்களின் ஆன்மீகத் தேவைகளையும், சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் அவர்களின் உலகியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றன.
மனிதத் தேவைகளை சமூகக் கடமைகளுடன் இணைத்திடுவதும், தொல்லை தரத்தக்க ஊறுவிளைவிக்கும் செயல்பாடுகளை தடுத்து நிறுத்துவதும்தான் இஸ்லாமிய சட்டங்கள் இயற்றப் பெற்றதன் நோக்கமாகும். பொதுமக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்திட வேண்டியது இஸ்லாமிய அரசாங்கத்தின் கடமையாகும்.

தனது ஆளுமையையும் மேன்மையையும் உயர்த்திக் காட்டுவதற்காக கலகத்தை உருவாக்குவது சட்டவிரோதமானதாகும். தமக்கும் தமது சமூகத்திற்கும் சட்டத்தை வகுத்தளித்தவன் அதி உன்னதமான இறைவனேயாவான் என்பது இஸ்லாமிய சமூகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும். எனவே தற்பெருமைக்கோ, தற்புகழ்ச்சிக்கோ சமூகத்தில் எவ்வித மதிப்பும் இராது. இந்த உணருதல்தான் மனிதனிடமுள்ள மேன்மையையும், மகத்துவத்தையும் ஆளுமையையும் முழுமைப்படுத்துகிறது. இஸ்லாமிய சட்டத்தின் முன்னுள்ள சமத்துவம் என்பது ஒரு தத்துவம் மட்டுமல்ல அது ஓர் யதார்த்தமாகும்.

மக்கள் ஆட்சியாளர்களுக்குத் தரும் ஆதரவும், கீழ்ப்படிதலும் நிபந்தனைக்குட்பட்டதே! ஆட்சியாளர் இஸ்லாமிய விதிமுறைகளை அட்டியின்றி கடைபிடிக்கவும் செயல்படுத்தவும் வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும். இந்த நிபந்தனைக்கு மாறு செய்யும் ஆட்சியாளருக்கு முஸ்லிம்கள் கட்டுப்பட மாட்டார்கள். கொள்கை ரீதியான இந்த தனிசிறப்பு இஸ்லாமுக்கு மட்டும்தான் உண்டும்.

ஆட்சியாளருக்கும் குடிமக்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் முகிழும் போது ஆட்சியாளரின் தன்னிச்சையோ, பழியுணர்ச்சியோ அன்றி இஸ்லாமிய சட்டங்களின் உறைவிடமான குர்ஆனும் நபியின் வழிமுறைகளும்தான் இறுதி முடிவினை உறுதி செய்திடும். இதனை குர்ஆன் நயம்பட எடுத்தியம்புகிறது.

"விசுவாசிகளே! அல்லாஹ்வுக்குக் கீழ்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களுள் ஏதாவது ஒரு விஷயத்தில் (கருத்து வேறுபாடு) பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறவர்களாக இருந்தால் - அதனை அல்லாஹ்விடமும் (அவனது) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் உங்களுக்கு மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்."  
(அல் குர்ஆன் 4:59)

அமைதியின் மீதும் பாதுகாப்பின் மீதுமுள்ள தேட்டம் மெய்ப்பட வேண்டுமானால் குர்ஆனின் கட்டளைகளை இனம் கண்டறிந்து அவற்றை நடைமுறையில் பேணிடவும் வேண்டும்.

மேற்சொன்ன தத்துவங்கள் அனைத்தும், சமூகத்தில் சமத்துவத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்துவதற்காக உள்ளவையாகும். இறைச்சட்டங்களைக் திறமையாகக் கையாண்டு, அதனை கடைபிடித்தொழுகி, அந்தச் சட்டங்களுக்கேற்ப கடமைகளை நிறைவேற்றுவதே இஸ்லாமிய அரசின் பொறுப்பாகும். இஸ்லாம் நிறைவானதொரு வாழ்க்கைத் திட்டமாகும். அதனில் சிலதை விடுத்து சிலதை மட்டும் ஏற்பது இஸ்லாமாகாது.

முற்றும்.

குறிப்புகள்:
·         ‘இஸ்லாத்தில் சமூக அமைதி” எனும் இத்தலைப்பு "இஸ்லாமும் உலக அமைதியும்" எனும் ஷஹீது சையித் குதுப் (ரஹ்) எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment