Thursday, July 7, 2016

எது இஸ்லாமிய இயக்கம்?

எது இஸ்லாமிய இயக்கம்?

-     உவைஸ் அஹ்மது



மிகப் பலரும் நம்பியிருப்பது போல 'இஸ்லாமிய கட்சிகள்' எதையும் நாம் - மிகச் சரியான பொருளில் - "இஸ்லாமிய இயக்கம்' என்று கருத முடியாது.

ஒரு 'கட்சி' எனும்போது அது தனக்கேயுரிய அங்கத்துவம், கட்சி அறிக்கை, உறுப்பினர் கட்டணம், இன்ன பிற நிறுவன உறுப்புகள் போன்றவற்றை கொண்டவொரு தனித்துவ அமைப்பாக இருக்கிறது.

உறுப்பினர் கட்டணம் செலுத்தாதவர் கட்சியிலிருந்து விலக்கப்படுவார். அதே போல், கட்சி அறிக்கைக்கு இணங்காத எவரும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்.

அத்தகையோரின் அபிப்பிராயங்கள் எத்துணை நியாயமானவையாக இருந்தாலும் அவை கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

எந்தவொரு கட்சிக்கும் இது பொருந்தும்.

இத்தகைய இஸ்லாமிய கட்சிகளை "பகுதியளவு இஸ்லாமிய இயக்கங்கள்" என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சரியான பொருளில் இஸ்லாமிய இயக்கம் என்பது ஓர் திறந்த அமைப்பாகும். முஸ்லிம்கள் அனைவரும் அதன் உறுப்பினர்களே. அதற்கென்று உறுப்பினர் படிவமோ கட்டணமோ இல்லை.

இது ஒரே சமயத்தில், ஒரு விதத்தில் அனுகூலமாகவும் ஒரு விதத்தில் சிக்கலாகவும் இருக்கிறது.

நாம் இங்கு வெறும் 'கட்சி', 'இயக்கம்' என்ற இரண்டு வார்த்தைகளுக்கு இடையே உள்ள மிக நுணுக்கமான வேறுபாடுகளை விளக்குவதற்குப் பிரயத்தனப்படவில்லை.

சற்று ஆழமாகச் சிந்தனையை செலுத்தினால், நாம் இங்கு விளக்கவரும் முக்கியப் பண்புசார் வேறுபாடுகள் நன்கு புலப்படும்.

முதன்மையான அனுகூலம் என்னவெனில் இஸ்லாமிய இயக்கத்தின் பலமென்பது முழு உம்மத்தின் பலமாகும்.

அடுத்ததாக, ஒரு இஸ்லாமியக் கட்சியைத் தடைசெய்ய முடிவது போல் எவரும் இஸ்லாமிய இயக்கத்தைத் தடைசெய்துவிடவோ முற்றாக அழித்துவிடவோ முடியாது.

கட்சித் தலைமையகம் அல்லது உத்தியோகபூர்வ கட்டமைப்பு என்று இருக்கும்போது மட்டுமே அதனைத் தடை செய்வது சாத்தியமாகும்.

ஆனால் நாம் மேலே விளக்கிய பொருளிலான இஸ்லாமிய இயக்கத்தை அவ்வாறு முடக்க முடியாது.

இஸ்லாமிய வரலாற்றின் மீது முழுமைத்துவப் பார்வை செலுத்திப் பார்ப்பீர்களாயின் இக்கருத்து தெளிவுபட விளங்கும்.

இதிலுள்ள ஒரு சிக்கல் என்னவென்றால், மக்கள் ஒரு கட்சியுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது போல், மிக எளிதாக இஸ்லாமிய இயக்கத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் காண முடியாது.

காரணம் அதற்கென்று ஒரு உத்தியோகபூர்வ கட்டமைப்பு இருப்பதில்லை.

கட்சிகள் என்றால் மக்கள் அதன் அலுவலகத்திற்கு சென்று வருவார்கள்; அதற்கென்று ஒரு அதிகாரப் படிநிலை அமைப்பு இருக்கும்.

ஆனால் இஸ்லாமிய இயக்கத்தில் அப்படியொன்று இல்லை. உண்மையைச் சொல்வதென்றால் இஸ்லாமிய இயக்கம் சமூகத்தில் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்;

அதேவேளை அதனை ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்த முடியாது என்பதால் அது 'எங்கும் இல்லை' என்றும் சொல்லலாம்.

இவ்வாறு அரூபமான கருத்துக்களாகப் பேசுகையில் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கடினமானதாக தெரியலாம்.

எனினும், வரலாற்றிலும் சமகாலத்திலும் நாம் காணும் கட்சிகளையும் இயக்கங்களையும் மேலே முன்வைக்கப்பட்ட அடிப்படைச் சட்டகத்திற்குள் வைத்து நோக்குவதற்கு முயலுவீர்களாயின் நாம் விளக்கவரும் முழுக்கருத்தும் மெல்ல புரிபடத் துவங்கும்.

இறைத்தூதர்கள், முஜத்திதுகள், முஜாஹிதுகள் எனச் சகலரது போராட்ட வரலாறுகளும் இதற்குச் சான்று பகர்வதைப் புரிந்து கொள்ள முடியும்,

'இஸ்லாமிய இயக்கம்' என்பது இஸ்லாத்தின் சமூக-அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக உம்மத்திற்குள் செயற்கையாக உருவாக்கப்படும் 'அரசியல் கட்சி' அல்ல என்பதே நாம் கூற வரும் அடிப்படையான செய்தி.

மாறாக அந்தக் குறிக்கோள்களுக்காக முழு உம்மத்தையும் அதன் ஒட்டுமொத்த வளங்களையும் அணிதிரட்டுவதையே 'இஸ்லாமிய இயக்கம்' பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இந்தப் பொருளில் பார்த்தால், முதலாவது இஸ்லாமிய இயக்கத்துக்குத் தலைமை தாங்கியது வேறு யாருமல்ல, நம்முடைய அண்ணல் நபிகளார் தான்.

ஆனால், அரசியல் குறிக்கோள்களுக்காக 'அரசியல் கட்சி' பாணி குழுக்களை உருவாக்கும் இன்றைய அணுகுமுறையின் வேர்களை நீங்கள் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய ஐரோப்பாவின் சூழமைவில் காணலாம். கம்யூனிச, ஃபாசிச - நாஜி கட்சிகளே இந்த அணுகுமுறையின் முன்னோடிகள்.

அல்லாஹ்வின் நாட்டத்தை இந்த உலகில் நிலைநாட்டுவதற்காகவும், நீதியின் மீதமைந்த சமூக அமைப்பை நிறுவுவதற்காகவும் 'நன்மையை ஏவித் தீமையைத் தடை செய்தல்' உள்ளிட்ட இஸ்லாத்தின் அரசியல் குறிக்கோள்களை மெய்ப்படுத்திக் காண்பதற்காகவும் ஒட்டுமொத்த உம்மத்தையும் அதன் முழு வலிமையோடு எழுச்சிபெறச் செய்து, அல்லாஹ்வின் பாதையில் முன்னேறச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் கூட்டு உழைப்பே அதன் சரியான பொருளில் இஸ்லாமிய இயக்கமாகும்.

எல்லாவற்றிலும் போல் இதிலும் நபிகளார் தான் நமக்கு முன்மாதிரி.

நபிக்குப் பிந்தைய புத்தாக்க (தஜ்தீத்) முயற்சிகளும் கூட நாம் கூறவரும் கருத்துக்களை உறுதிசெய்வனவாகவே இருப்பதைக் காணலாம்.

அதேவேளை, மேலே குறிப்பிடப்பட்ட இஸ்லாத்தின் குறிக்கோள்களை அவற்றின் முழுமையான பரிமாணத்தில் சாதிப்பதற்கு இன்றைய 'அரசியல் கட்சி' அணுகுமுறை மிகப் பொருத்தமானது இல்லை என்பதை அல்ஜீரியா, எகிப்து, துருக்கி என உலகின் பல்வேறு பகுதிகளிலும் 'இஸ்லாமிய கட்சிகளுக்குக்' கிடைத்த கடந்த ஒரு நூற்றாண்டு கால அனுபவம் மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.

'இஸ்லாமியக் கட்சிகள்' தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலமோ, அல்லது வேறு சிலர் கனவு காண்பது போல் இராணுவக் கலகங்களை நிகழ்த்தியோ ஒருபோதும் இஸ்லாத்தின் குறிகோள்களைச் சாதிக்க முடியாது. இவை போன்ற பிழையான கற்பிதங்கள் - ஒரு விதத்தில் - இஸ்லாத்தை திரிபு படுத்துவதாகவே அமைகின்றன.


குறிப்பு: இப்பதிவு சகோதரர் உவைஸ் அஹ்மது அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment