Sunday, October 25, 2020

சுயவழிபாடு என்னும் இணைவைப்பு!

 சுயவழிபாடு என்னும் இணைவைப்பு!

பொருளாதாரம், சொத்துசுகங்கள், மெய்மறதிவாழ்வு அதன் விக்கிரகங்கள்!

தொகுப்பு: அபூதர்


தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவைக் கொண்டுதான் தாம் செல்வத்தைச் சம்பாதித்தோம் என்று பலர் எண்ணுகிறார்கள். காறூனும் இவ்வாறுதான் கூறினான்: இச்செல்வங்கள் அனைத்தும் என் அறிவால்தான் எனக்குக் கிடைத்துள்ளன. (28:78)’

ஒரு பேச்சுக்கு உங்களை மிகத் திறமையானவர் என்றும் உங்களின் வியக்கத்தக்க திறமையின் மூலம் செல்வங்கள் பலவற்றை நீங்கள் சேகரித்துவிட்டீர்கள் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு இந்தத் திறமையை வழங்கியவன் யார்? இந்த ஆற்றலைக் கொண்டு உங்களைச் சிறப்பித்தவன் யார்?

உங்களிடம் இருக்கின்ற யாவற்றையும் அல்லாஹ்வின் பக்கம் இணைப்பதே சரியானது. ஏழையாக இருந்த நம்பிக்கையாளன் செல்வச்செருக்கு கொண்ட தன் நண்பனுக்கு இதைத்தான் தெளிவுபடுத்தினான்.

நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது, அல்லாஹ் நாடியவையே நடக்கும், அல்லாஹ்வையன்றி யாரிடத்திலும் எவ்வித ஆற்றலும் இல்லை என்று ஏன் கூறவில்லை? நான் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாக நீ கருதினால் என் இறைவன் உன் தோட்டத்தைவிடச் சிறந்த ஒன்றை எனக்கு வழங்கலாம். வானத்திலிருந்து ஆபத்தை இறக்கி உன் தோட்டத்தை வெட்டவெளியாக்கிவிடலாம் அல்லது நீங்கள் பெற முடியாதபடி தண்ணீர் வற்றிவிடலாம்.’ (18:39,40)

அவன் எதிர்பார்த்ததே நிகழ்ந்தது. வானத்திலிருந்து இறங்கிய ஆபத்து அவன் தோட்டத்தை ஒன்றுமில்லாத வெட்டவெளியாக்கிவிட்டது. அவன் வெட்கப்பட்டு வருத்தத்துடன் கூறலானான்: அந்தோ, நான் என் இறைவனுக்கு இணைவைக்காமல் இருந்திருக்கக் கூடாதா! அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு உதவிபுரியும் கூட்டத்தார் யாரும் இருக்கவில்லை. தானே பழிவாங்கக்கூடியவனாகவும் அவன் இல்லை. (18:42,43)’ 

இவன் அல்லாஹ்வுக்கு இணையாக யாரை ஆக்கினான்? தன்னை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக்கொண்டான். தன் மனஇச்சையைக் கடவுளாக்கி வழிபட்டுவந்தான்.

பொதுவாக மனிதன் தன் நலனில் பெரும் அக்கறை கொண்டவன். தன் தேவையை நிறைவேற்றுவதற்காக ஓடக்கூடியவன். ஆனாலும் இந்த ஓட்டம் அவனது வெளியைச் சுருக்கிவிடுகிறது. தன் தேவையைத் தவிர வேறு எதையும் அவன் அறியாதவனாக ஆகிவிடுகிறான். தன் உள்ளத்திலோ நடத்தையிலோ அல்லாஹ்வுக்கென அவன் எந்த இடத்தையும் அளிப்பதில்லை. தன்னை முதலாமானவனாகவும் இறுதியானவனாகவும் அவன் எண்ணிக்கொள்கிறான்.

தற்கால நாகரிகம் இவ்வகையான மனிதர்களையே உருவாக்கியிருக்கிறது. அவர்கள் இந்த மண்ணோடு ஒட்டிவிட்டார்கள். இதற்கு அப்பால் இருக்கின்ற எதையும் அவர்கள் பார்ப்பதில்லை.

அவர்கள் மறுமைநாளை மிக தூரமான ஒன்றாகக் கருதுகிறார்கள். அதைக் குறித்து சிந்திப்பதோ பேசுவதோ அறிவாளிகளின் வேலை அல்ல என்றும் அது மூடநம்பிக்கையின் ஓர் அம்சம் என்றும் கருதுகிறார்கள். இவர்களைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்:

அவர்களுக்கு உலக வாழ்வின் உதாரணத்தைக் கூறுவீராக. அது நாம் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனால் பூமியின் தாவரங்கள் செழித்துவளர்ந்து, பின்னர் அவை காற்றால் அடித்துச் செல்லப்படும் காய்ந்த சருகுகளாகிவிடுவதைப் போன்றதாகும். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான். (18:45)

தோட்டக்காரர்மீது அல்லாஹ் கோபம் கொண்டது அவர் வைத்திருந்த தோட்டத்தின் காரணமாக அல்ல. சிந்தனையற்ற மூடனாக இருந்தான் என்பதால் அவன் அல்லாஹ்வின் கோபத்துக்கு ஆளானான்.

பாருங்கள், அவன் கூறுவதை:

அவன் தனக்குத்தானே அநீதி இழைத்தவனாகத் தன் தோட்டத்தினுள் நுழைந்தான். அவன் கூறினான், ‘இது என்றைக்காவது அழிந்துவிடும் என்றோ மறுமை என்றாவது நிலைபெறும் என்றோ நான் கருதவில்லை. ஒருவேளை நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டுசெல்லப்பட்டால் இதைவிடச் சிறந்த இடத்தையே பெறுவேன்.’ (18:35,36)

நிராகரிப்புக்கும் கர்வத்துக்கும் கூலியாக அவனுக்கு இவ்வாறெல்லாம் வழங்கப்பட வேண்டுமா? இந்த மூடன் மறுமையில் நரகத்தின் எரிபொருளாக இருப்பதற்கே உகந்தவன், இந்த உலகில் அவனுக்கு இழப்பு ஏற்பட்டதைப் போல.

இதன் அடிப்படையில் இந்தச் சம்பவத்தின் இறுதியில் இறைவனின் விமர்சனமாக இடம்பெறும் வசனத்தை நாம் புரிந்துகொள்கிறோம்: செல்வங்களும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் அலங்காரங்கள்தாம். நன்மையைப் பொறுத்து நிலையான நற்காரியங்களே உம் இறைவனிடம் மிகச் சிறந்ததாகும்; நம்பிக்கை வைப்பதற்கும் மிக ஏற்றதாகும். (18:46)’

தூய்மையான, கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழும்படி தூண்டும் பின்வரும் ஹதீஸும் இந்த வகையைச் சார்ந்ததுதான்: நபியவர்கள் கூறினார்கள், யார் மறுமையை நோக்கமாகக் கொண்டுள்ளாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் தன்னிறைவை ஏற்படுத்திவிடுவான். அவரது விவகாரங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து வைப்பான். உலகம் அவரை நோக்கி வரும். யாருடைய நோக்கம் உலகமாக இருக்குமோ அவருக்கு முன்னால் அல்லாஹ் வறுமையை ஏற்படுத்துவான். அவரது விவகாரங்களைச் சிதறடிப்பான். அவருக்கு விதிக்கப்பட்டதைத் தவிர உலகிலிருந்து வேறு எதையும் அவர் பெற முடியாது. அவர் ஏழ்மைநிலையில்தான் மாலைப் பொழுதை அடைவார். ஏழ்மைநிலையில்தான் காலைப் பொழுதை அடைவார். எந்த அடியார் தன் உள்ளத்தோடு அல்லாஹ்வை நோக்கி வருவாரோ அல்லாஹ் அடியார்களின் உள்ளங்களை அன்பாலும் இரக்கத்தாலும் அவர் பக்கம் திருப்புவான். நன்மையான ஒவ்வொன்றையும் அவருக்கு விரைந்து அளிப்பான்.

No comments:

Post a Comment