பதுக்கும் பணம் நரகின் எரிபொருள் ஆக
வேண்டுமா?!
சம்மில்
ஆடம்பரத்தில்
திளைத்திருக்கும் நிராகரிப்பாளர்களை என்னிடம் விட்டுவிடுவீராக. அவர்களுக்குச்
சிறிது காலம் அவகாசமளிப்பீராக. நிச்சயமாக மறுமையில் நம்மிடத்தில் கனமான
சங்கிலிகளும் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பும் தொண்டையில் விழுங்க முடியாத
உணவும் இன்னும் அதிகப்படியாக வேதனைமிக்க தண்டனையும் இருக்கின்றன. பூமியும்
மலைகளும் ஆட்டம்காணும் நாளில் இந்த வேதனை நிராகரிப்பாளர்களுக்கு
ஏற்படக்கூடியதாகும். அப்போது மலைகள் பரப்பப்பட்ட மணற்குவியலாக ஆகிவிடும் (73:11-14).
நோய்கள், உபாதைகள், விபத்துகளால் பாதிக்கப்பட்டுப் பொருளாதாரப் பற்றாக்குறையால் மருத்துவர்
பரிந்துரையைப் பின்பற்ற இயலாதவர்கள், வறுமையால்
பீடிக்கப்பட்டு அன்றாட உணவுக்கே அல்லல்படுபவர்கள்,
பொருளாதாரமின்றிப் பெண்மக்களை
மணமுடித்துக் கொடுக்க இயலாமல் பரிதவிப்பில் உழல்வோர்; கல்விக்குப் பணம் கொடுக்க இயலாமல் உதவி வேண்டி அலைக்கழிவோர் ... இப்படி, பொருளாதாரப் பற்றாக்குறை என்னும் புதைசேற்றில் அமிழ்ந்துகொண்டிருக்கும்
சகோதர, சகோதரிகளுக்கு உதவிசெய்யுங்கள் என்று பெருவசதி
படைத்தோரிடம் (குறிப்பாக, மேம்போக்கான மார்க்க அடையாளங்களைத்
தக்கவைத்துக்கொண்டிருக்கும் “கனவான்களிடம்”) வேண்டுகோள் விடுத்தால்
பூசிமெழுகுவதையும் தட்டிக்கழிப்பதையும் கண்டும்காணாமல் கடந்துசெல்வதையும்தான்
பெருவாரியாகக் காண முடிகிறது. பாவனைகளுக்குப் பின்னால்தான் எத்துணை உலோபித்தனம்!
உலகாயத மோகம்!!
இறைவனின் பாதையில் செலவுசெய்யாமல் இருக்க உங்களுக்கு
என்ன நேர்ந்தது? வானங்களும் பூமியும் இறைவனுக்கே
உரித்தானவை … இறைவனுக்கு அழகிய கடனளிப்பவர் யார்? அவன் அதனை அவருக்குப் பன்மடங்காக்கித் தருவான். அவருக்குக் கண்ணியமான
கூலியும் உண்டு (57:10,11).
செல்வவளம் படைத்தோரும் பிறருக்கு உதவ வசதி படைத்தோரும்
தங்கள் வறிய சொந்தங்களுக்கும் ஏழைகளுக்கும் இறைவன் பாதையில் புலம்பெயர்ந்து
வந்தோருக்கும் உதவ முன்வராமல் இருந்துவிட வேண்டாம் ... (24:22).
பணக்காரர்களின் பணத்தைப் பொறுத்தவரை அதில் ஸகாத்தைத்
தவிர்த்த ஏனைய கடமை ஒன்றும் இருக்கிறது – நபிகளார் (ஸல்).
இன்னும் அவர்களின் பொருளாதாரத்தில் கேட்போருக்கும்
கேட்காதோருக்கும் உரிமை உண்டு (51:19).
இன்னும், இறைவன் உங்களுக்குக்
கொடுத்திருக்கும் பொருளிலிருந்து நீங்கள் அவர்களுக்குக் கொடுங்கள் (24:33).
அவர்களுடைய செல்வங்களும் பிள்ளைகளும் இறைவனின்
தண்டனைக்கு எதிராக (அந்நாளில்) அவர்களுக்கு எவ்வகையிலும் உதவிகரமாக இருக்காது
(3:10).
நன்மை என்பது உங்கள் முகங்களைக் கிழக்குத் திசை
நோக்கியோ மேற்குத் திசை நோக்கியோ திருப்பிக்கொள்வதில் இல்லை. மாறாக, நன்மை என்பது ... தம் செல்வத்தின் மீது ஆசையிருந்தும் அதனை
உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும்
யாசிப்போருக்கும் அடிமைகளை (கைதிகளை) விடுதலைசெய்வதற்கும் செலவுசெய்வதும் ...
ஆகும். இத்தகையவர்கள்தாம் உண்மையாளர்கள்; இவர்கள்தாம் இறை
விழிப்புள்ளவர்கள் (2:177).
... துன்புறுத்தும் வேதனையிலிருந்து ஈடேற்றவல்ல ஒரு
வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? ... உங்கள்
பொருளாதாரத்தையும் ஆன்மாவையும் கொண்டு இறைவன் பாதையில் கடுமையாக உழையுங்கள்.
நீங்கள் அறியக்கூடியவர்களாக இருந்தால் அதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். (அதனால்)
உங்கள் பாவங்களை அவன் உங்களுக்கு மன்னிப்பான் ... (61:10-12).
செல்வத்தை நல்ல முறையில், ஆக்கபூர்வமான, நன்மைகளை அள்ளித்தரும் வழிகளில்
பயன்படுத்துவது உறுதியான நம்பிக்கை கொண்ட உண்மையாளர்களின் அடையாளங்களில் ஒன்றாகும்.
செல்வங்களையும் செல்வாக்கையும் வழிபடக்கூடியவர்களுக்கும் பாவ்லா காட்டும்
நயவஞ்சகர்களுக்கும் வேறு வழிமுறை உள்ளது.
இவர்களைப் பற்றித்தான் இந்த வசனங்கள் கூறுகின்றன: ‘யாருடைய செல்வமும் பிள்ளைகளும் அவருக்கு இழப்பைத் தவிர வேறொன்றையும்
அதிகப்படுத்தவில்லையோ ... (71:21)’, ‘நாங்கள்
செல்வங்களாலும் பிள்ளைகளாலும் மிகுந்தவர்கள். ஆகவே, நாங்கள்
வேதனை செய்யப்பட மாட்டோம் (71:35)’.
இத்தகையோரிடம் மறுமைநாளில் கூறப்படும்: ‘இன்று
உங்களிடமிருந்தோ நிராகரித்தோரிடமிருந்தோ எவ்வித இழப்பீடும் பெறப்படாது. உங்கள்
இருப்பிடம் நரகமாகும். அதுவே உங்களுக்குத் துணையாகும். அது மிகவும் கெட்ட
இருப்பிடமாகும் (57:15).’
அவர்களில் சிலர் தங்கம், வெள்ளியின் பெரும்
குவியலையே கொண்டிருந்தாலும் ஏழைகளுக்கு உதவுவதில் கஞ்சத்தனம் செய்பவராகவே
இருக்கிறார்கள். அவர்களைக் குறித்துதான் கூறப்பட்டது:
அவனைப் பிடியுங்கள். அவனுக்கு விலங்கை
மாட்டுங்கள். பின்னர் அவனை நரகத்தில் தள்ளுங்கள். பின்னர் அவனை எழுபது முழம்
நீளமுள்ள சங்கிலியால் பிணையுங்கள். அவன் மகத்துவம்மிக்க அல்லாஹ்வின் மீது
நம்பிக்கை கொள்ளாமல் இருந்தான். அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டவுமில்லை (69:30-34).
ஏற்றுக்கொள்ளப்படும் விசுவாசத்தின் அடித்தளம் இறைவனை
அறிவதும் தன் சுயத்தை மறுப்பதும் படைப்புகள்மீது கருணை காட்டுவதும் உள்ளத்தின்
மென்மையும் ஆகும். இவற்றிலிருந்து தூரப்பட்டவர்களும் தங்களை உண்மை விசுவாசிகள்
என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் இறுகிய உள்ளம்
கொண்டவர்களாக, சுயநலம்மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
இத்தகைய வெறுக்கத்தக்க ஈமானுக்கு உதாரணமாக இறைவனுக்கு
அளித்த வாக்குறுதிகளை மீறிய இஸ்றவேலர்களைச் சுட்டலாம். அவர்களைக் குறித்து இறைவன்
கூறுகிறான்: ‘அவர்கள் வாக்குமீறியதால் நாம்
அவர்களைச் சபித்து அவர்களின் உள்ளங்களை இறுகச்செய்துவிட்டோம் ... (5:13)’.
அவர்களைப் போன்று ஆகிவிட வேண்டாம் என்று இறைவனும்
தூதரும் நம்மை எச்சரிக்கிறார்கள். ஆனாலும் மார்க்கத்தை மேலோட்டமாகப் பின்பற்றும்
முறையும் ஃபிக்ஹுரீதியான கிளைப் பிரச்சினைகளில் மல்லுக்கட்டும் போக்கும்
பெறுமதியற்ற விவகாரங்களுக்காகப் பயனற்ற, முடிவற்ற
விவாதங்களில் ஈடுபடுவதும் இன்று வழக்கமாகிவிட்டது.
தன்
அண்டையில் இருப்பவர் பசியோடு படுக்கைக்குச் செல்லும் நிலையில், அது தனக்கு நன்றாகத் தெரிந்திருந்தும்கூட வயிறு புடைக்க உணவு
உட்கொண்டுவிட்டுத் தூங்கச் செல்பவர் உண்மை இறைப்பற்றாளர் அல்ல – நபிகளார் (ஸல்).
தங்கம், வெள்ளியைப் பதுக்கி வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிட
மறுப்பவர்களுக்கு - வதக்கியெடுக்கும் வேதனை குறித்து நற்செய்தி கூறுவீராக – (பதுக்கி
வைத்திருக்கும் செல்வங்கள் அனைத்தும்) அந்நாளில் சுட்டெரிக்கும் நெருப்புக்
குண்டத்தில் பழுக்கக் காய்ச்சப்பட்டு அவர்கள் நெற்றியிலும் விலாப்புறங்களிலும்
முதுகுப் பகுதியிலும் (வேதனை அதிகரிக்க) சூடு போடப்படும்; (ஏக
நேரத்தில் அந்த அநியாயக்காரர்களிடம் சொல்லப்படும்:) ‘உங்களுக்காக
நீங்கள் ஒன்றுதிரட்டி வைத்திருந்த பொக்கிஷங்கள் இவைதான்! (தன்முனைப்புடனும்
தற்பெருமையுடனும்) நீங்கள் சேமித்துக்கொண்டிருந்த உங்கள் பொக்கிஷங்களின் வேதனையை
இப்பொழுது சுவைத்துப்பாருங்கள் (9:34,35).
... இத்தகையவன் பொருளைச் சேகரித்து எண்ணிக்கொண்டே இருக்கிறான். நிச்சயமாகத் தன் பொருள் தன்னை நித்தியமாக நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறல்ல! அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ‘ஹுதமா’ என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? அது இறைவனின் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும். அது தேகத்தில் பட்டதும் இதயங்களில் பாயும். திண்ணமாக அது அவர்கள்மீது சூழ்ந்து மூடப்பட்டதாக இருக்கும், நீண்ட கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டவர்களாக (104:2-9).
No comments:
Post a Comment