Sunday, June 23, 2019

மீண்டும் அபூ தர் ... VII

மீண்டும் அபூ தர் ...

அலீ ஷரிஅத்தி

தமிழில்: சம்மில்
அத்தியாயம் 7
(இறுதி அத்தியாயம்)

இந்தப் பிடிவாதக்கார, திமிரான, இறையச்சமுள்ள, தன்னுணர்வுள்ள மனிதருக்கு எதிராக எந்தத் திருகுதாளங்களும் செல்லுபடியாகாது. பலவந்தம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவர் உஸ்மானுக்கு எழுதினார்: டமஸ்கஸ் உங்களுக்கு வேண்டுமென்றால் அபூ தர்ரை இங்கிருந்து வெளியேற்றிவிடுங்கள், ஏனெனில் சிக்கல்கள் பெருத்துக்கொண்டிருக்கின்றன, காயம்பட்ட தலைகள் எல்லாம் பிளந்துவிட்டன, ஒரு பெருங்கலவரம் நெருங்கிவிட்டது. ‘மதீனாவுக்கு அனுப்பிவைக்கும்படி உஸ்மான் அவருக்குக் கட்டளையிட்டார்.’

ஒட்டகம் ஒன்றின் முதுகில் பொதிகள் சுமப்பதற்கான மரத்தால் ஆன சேணத்தில் அவரை உட்காரவைத்தனர், அதோடு மதீனாவுக்கு அவரைக் கொண்டுசெல்வதற்காகப் பல காட்டுமிராண்டி அடிமைகளையும் ஈடுபடுத்தியிருந்தனர். டமஸ்கஸ்ஸிலிருந்து மதீனாவரை வழியில் எங்கும் நிற்கக் கூடாது என்று முஆவியா கட்டளையிட்டிருந்தார்.

சவாரிக்காரர் மதீனாவை நெருங்குகிறார், தளர்ச்சியாக, காயமடைந்தவராக. நகரத்தின் அண்மையில், சலாஅ மலையில் அலீயையும் அவருக்குப் பக்கத்தில் உஸ்மானையும் வேறு பல மக்களையும் அவர் பார்க்கிறார். சிறு தொலைவிலிருந்து அவர் கத்துகிறார், “நாசகார, முடிவற்ற ஒரு கலகம் குறித்து மதீனாவுக்கு நான் நற்செய்தி பகர்கிறேன்.”

அபூ தர்ரிடமிருந்து வரும் எவ்வொரு மார்க்கத் தீர்ப்பையும் எவரும் பின்பற்றக் கூடாது என்று கலீஃபா உத்தரவிட்டார். என்றாலும், ஒன்றன் பின் ஒன்றாக, மார்க்கத் தீர்ப்புகளை அபூ தர் வழங்கிக்கொண்டுதான் இருந்தார். டமஸ்கஸ்ஸில் அவர் பார்த்தவை போராட்டத்தில் அவருக்குக் கூடுதல் துடிப்பையும் அதிக துணிச்சலையும் கொடுத்தன. உமருடைய கிலாஃபத் சம்மேளனத்தின் தலைவராக இருந்த அப்த் அல்-ரஹ்மான் இப்னு அவ்ஃப் இறந்ததன் பின் அவரது பூர்வீகச் சொத்துகள், அதாவது எக்கச்சக்கமான தங்கமும் வெள்ளியும், உஸ்மான் முன்னிலையில் அம்பாரமாய்க் குவிக்கப்பட்டன. “அப்த் அல்-ரஹ்மான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார், அவர் வாழும்போதும் நன்றாக வாழ்ந்தார், மரணித்த பின்பும் தனக்குப் பின்னால் இத்துணைச் செல்வத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.” என்று உஸ்மான் கூறியதாக அபூ தர் கேள்விப்படுகிறார்.

கிளர்ச்சியும் ஆவேசமும் அடைந்த அபூ தர் உஸ்மான் வீட்டை ஒண்டியாக ஆக்கிரமிக்கிறார். செல்லும் வழியில், ஓர் ஒட்டகத்தின் எலும்பைப் பார்க்கிறார். அதை எடுத்து தன்னோடு கொண்டுசெல்கிறார். உஸ்மானைப் பார்த்து உரக்கக் கத்துகிறார், “மரணிக்கும்போது இவ்வளவு தங்கம், வெள்ளியை விட்டுச்சென்ற ஒரு மனிதரையா கடவுள் ஆசீர்வதித்திருக்கிறார் என்கிறாய்?”

உஸ்மான் மென்மையாகப் பதில் அளிக்கிறார், “ஸகாத்தை வழங்கிவிட்ட ஒரு மனிதருக்கு மேலதிக (மத) கடப்பாடுகளும் இருக்கின்றனவா என்ன?”

அபூ தர் கின்ஸ் பற்றிய வசனத்தை ஓதிவிட்டுக் கூறுகிறார், “இங்கு பிரச்சினை ஸகாத் இல்லை; தங்கம், வெள்ளியைப் பதுக்கிவைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிட மறுக்கிறார்களே அவர்கள்தான்.”

உஸ்மானுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த, முன்னாள் யூதனான காஅப் அல்-அஹ்பார் என்ற மத குரு கூறுகிறார், “இந்த வசனம் வேதம் வழங்கப்பட்டவர்கள் (யூத, கிறிஸ்தவர்கள்) சம்பந்தப்பட்டது; அது முஸ்லிம்களோடு தொடர்புடையது அல்ல.” 

அபூ தர் அவரைப் பார்த்து இரைகிறார், “யூதனின் மகனே! எங்கள் மார்க்கத்தை எங்களுக்கே கற்பிக்க விழைகிறாயா நீ? உன் தாய் உனக்காகத் துக்கப்படட்டும்!” உஸ்மான் கூறினார், “தனது ஸகாத்தைக் கொடுத்துவிட்ட ஒரு மனிதர் தங்கத்தால் ஆன ஒரு செங்கல்லையும் வெள்ளியால் ஆன ஒரு செங்கல்லையும் கொண்டு மாளிகை ஒன்றைக் கட்டினாலும் அது குற்றம் ஆகாது.” பின்னர் காஅபை நோக்கித் திரும்பி அவரது அபிப்பிராயத்தைக் கேட்கிறார். காஅப் தனது அபிப்பிராயத்தை இப்படி வெளிப்படுத்துகிறார், “ஆம், மாட்சிமை பொருந்தியவரே. நீங்கள் சொல்வது சரிதான்!” அபூ தர் அவரைத் தாக்குகிறார்.

காஅப், அச்சத்தால் உஸ்மான் பின்னால் ஒளிந்துகொண்டதோடு கலீஃபாவின் அடைக்கலத்தில் தன்னைப் பாதுகாத்தும் கொள்கிறார். காட்சி முடிந்தது! ஒட்டுமொத்த வரலாற்று நாடகத்தின் காட்சி! ஒரு புறத்தில் தங்கம், பலவந்தம், அப்த் அல்-ரஹ்மானின், உஸ்மானின், காஅப் அல்-அஹ்பாரின் தோற்றங்கள் பிரதிபலித்த ஆளும் மதம் - எவ்வளவு சரியான, துல்லியமான வாக்கியம்!, தங்கத்தின், பலவந்தத்தின் ஆதரவாளர்கள் மற்றும் அவற்றின் மதம், பலவந்தத்தின் பின்னால் மறைந்திருந்து அதை நியாயப்படுத்தியவர்கள். இவற்றை எதிர்கொள்பவரோ சுரண்டல், எதேச்சாதிகாரம், வெளிவேஷம், வரலாற்றாலும் வரலாற்றின் ஒடுக்கப்பட்ட வகுப்பினரான கடவுள் மற்றும் மக்களாலும் பழிக்கப்பட்ட மத வெளிப்பாடு ஆகியவற்றுக்குப் பலியாகியிருக்கும் அபூ தர்.

  தனி ஆள், நிராயுதபாணி, ஒடுக்கப்பட்டவர் ஆகியவற்றோடு பொறுப்புள்ளவராக, தாக்குபவராக இருந்த அபூ தர் பலவந்தத்தின் அடைக்கலத்திலிருந்து காஅபை வெளியேற்றி ஒட்டகத்தின் எலும்பினால் ரத்தம் பீறிடும் அளவுக்கு அவர் தலையில் கடூரமாகத் தாக்குகிறார்.

உஸ்மான் கூறுகிறார், “எவ்வளவு சலிப்பை உண்டுபண்ணிவிட்டாய் அபூ தர், எங்களைவிட்டுப் போய்விடு.”

அபூ தர் சொன்னார், “உங்களை எல்லாம் பார்ப்பதற்கே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. நான் எங்கு செல்ல வேண்டும்?”

“ரபாதாவுக்கு.”

நபிகளாரால் வெளியேற்றப்பட்ட மர்வான் இப்னு ஹகம், அபூ தர்ரை வெளியேற்றுவதற்காக அமர்த்தப்பட்டிருந்தார். அலீ விவகாரத்தைக் கேள்விப்படுகிறார். வருந்துகிறார். ஹஸன், ஹுசைன், அகீல் ஆகியோரை அழைத்துக்கொண்டு அவரை வழியனுப்ப வருகிறார். மர்வான் அலீக்கு முன்னால் நின்றவராக, “கலீஃபா அபூ தர்ரை வழியனுப்பத் தடை விதித்திருக்கிறார்.” என்கிறார். அலீ, சவுக்கு ஒன்றை பயன்படுத்தி, அவரைக் கடந்து, ரபாதாவரை அபூ தர்ருடன் செல்கிறார். 

ரபாதா, யாத்திரிகர்களின் பாதையில் இருந்த, தண்ணீரோ சாகுபடியோ அற்ற ஓர் சுட்டெரிக்கும் வனாந்தரம்; அது, ஹஜ்ஜைத் தவிர்த்த ஏனைய நேரங்களில் வெறுமையாகவும் நிசப்தமாகவும் ஆகிவிடும். அங்கே தனது கிழிந்த கூடாரத்தை அவர் அமைத்து தன்னிடம் இருந்த ஓரிரு ஆடுகளைக் கொண்டு தனது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறார்.

மாதங்கள் கடந்தன. வறுமை அதிகரித்துக்கொண்டிருந்தது, பட்டினியோ மேலும் திமிரெடுத்தது. ஒவ்வொன்றாக, அவரது ஆடுகள் எல்லாம் மரித்தன, அவரும் அவரது குடும்பமும்கூட வனாந்தரத்தின் தனிமையில் மரணத்தை எதிர்கொண்டனர்.

அவர் மகள் இறக்கிறாள். அதைப் பொறுமையோடு சகித்துக்கொள்ளும் அவர் கடவுளுடைய பாதையின் அர்ப்பணமாக அதைக் கருதுகிறார். சில நாள் கழித்து, பசிகொண்ட ஓநாய் அவர் மகனைத் தாக்குகிறது. தனது பொறுப்பை உணர்கிறார். மதீனாவுக்குச் சென்று உஸ்மானிடம் முடக்கப்பட்டிருந்த தனது ஊதியத்தைக் கோரினார். உஸ்மான் அவருக்குப் பதில் அளிக்கவில்லை. வெறுங்கையுடன் திரும்புகிறார். அவர் மகனின் பிரேதம் விறைத்துக்கிடந்தது. தனது கைகளாலேயே அவரை அடக்கம்செய்கிறார். அபூ தர்ரும் உம்மு தர்ரும் தனிமையாக இருந்தனர். வறுமை, பட்டினி, தள்ளாமை ஆகியன அபூ தர்ரின் உடலை மிகவும் பலவீனப்படுத்தின. ஒரு நாள் தனது வலிமையின் விளிம்புக்கு வந்துவிட்டதாக அவர் உணர்ந்துகொள்கிறார். உம்மு தர்ரிடம் கூறுகிறார், “எழுந்துவா. நமது பசியைத் துளியூண்டு தணிக்கும் அளவுக்காவது ஏதோ சில புல் இதழ்கள் இந்த வனாந்தரத்தில் நம் கண்ணில் தென்படுகிறதா என்று பார்ப்போம்.” ஆணும் பெண்ணும், கூடாரத்தின் பரப்பிலிருந்து வெகு தொலைவில் சென்று தேடியும் எதுவும் கிட்டவில்லை. அவர்கள் திரும்பும்பொழுது அபூ தர் வலுவிழந்துவிடுகிறார். மரணம் அதன் அறிகுறியை அவர் முகத்தில் வெளிப்படுத்தியது. அதைப் புரிந்துகொண்ட உம்மு தர் பதைபதைப்புடன் கேட்கிறார், “உனக்கு என்ன ஆயிற்று, அபூ தர்?”

“பிரிவு சமீபித்துவிட்டது! எனது சடலத்தை வழியில் விட்டுவிட்டு என்னைப் புதைப்பதில் உனக்கு உதவும்படி வழிப்போக்கர்களிடம் கேட்டுப்பார்.”

“ஹாஜிகள் எல்லோரும் சென்றுவிட்டபடியால் வழிப்போக்கர்கள் எவரும் இல்லை.” “அப்படி இருக்காது. எழும்பி மலை உச்சிக்குச் செல். எனது மரணத்துக்குச் சில மக்களாவது வருவார்கள்.”

உம்மு தர், சற்றுத் தொலைவில் சவாரிசெய்த மூன்று குதிரையோட்டிகளை மலை உச்சியிலிருந்து பார்க்கிறார். அவர்களுக்குச் சைகை செய்கிறார். அவர்கள் நெருங்கி வந்தனர்.

“உங்களைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இங்கு ஒரு மனிதர் மரித்துக்கொண்டிருக்கிறார். அவரைப் புதைப்பதில் எனக்கு உதவி செய்து உங்கள் சன்மானத்தைக் கடவுளிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.”

“யார் அவர்?”

“அபூ தர்.”

“நபிகளாரின் தோழரான அந்த மனிதரா?”

“ஆமாம்.”

“எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும் அபூ தர்!”

அவர்கள் அவருக்கு முன்னால் நின்றனர். அதுவரை அவர் உயிரோடுதான் இருந்தார்.  அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார், “உங்களில் அரசாங்கத்தின் தூதுவராகவோ ஒற்றர்களாகவோ இராணுவ வீரர்களாகவோ இருப்பவர்கள் என்னை அடக்கம்செய்ய வேண்டாம். என்னைச் சுற்றி மூடுவதற்கு எனது மனைவியிடமோ என்னிடமோ ஒரு துணியைக் கொடுத்தால், அதுவே எங்களுக்குப் போதுமானது.”

உதவியாளர்களில் அரசாங்கப் பதவி வகிக்காத ஒரு இளைஞர் மட்டும் முன்வந்து கூறினார், “எனது தாயால் நெய்யப்பட்ட துணி ஒன்று என்னிடம் உள்ளது.” அபூ தர் அவருக்காகப் பிரார்த்தித்துவிட்டுச் சொன்னார், “அதை வைத்து என்னைச் சுற்றுங்கள்.”

அவர் மனம் அமைதியானது, எல்லாமே முடிவுக்கு வருகிறது. அவர் கண்களை மூடினார், அவற்றை மீண்டும் திறக்கவே இல்லை. வழிப்போக்கர்கள் அவரை ரபாதாவின் தகிக்கும் மணலுக்கு அடியில் அடக்கம்செய்தனர். அந்த இளம் உதவியாளர் அவரது புதைகுழிக்கு அருகில் நின்றுகொண்டு வாய்க்குள்ளே முணுமுணுக்கிறார், “அல்லாஹ்வின் தூதர் மிகச் சரியாகச் சொன்னார்!”

அவர் தனியாக நடப்பார், தனியாக மரிப்பார், தனியாகவே உயிர்ப்பிக்கப்படுவார்!   

“எப்பொழுது?”

“எழும்புதல் நிகழும் அந்த உயிர்த்தெழுதலின் நாளில்.”

“அதோடு, ஒவ்வொரு சகாப்தத்தின் எழுச்சியில், ஒவ்வொரு தலைமுறைக்கு மத்தியில்.”

“இப்பொழுதும், மீண்டும் ஒரு முறை அபூ தர், அனாதரவாகக் கிடக்கும் வரலாற்றின் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ள எல்லா பிரசித்தவான்களுக்கு மத்தியில், நம் காலத்தில், நம் மத்தியில், தனியாகவே உயிர்ப்பிக்கப்படுவார்.”


முற்றிற்று

No comments:

Post a Comment