Tuesday, June 18, 2019

மீண்டும் அபூ தர் ... VI


மீண்டும் அபூ தர் ...

அலீ ஷரிஅத்தி

தமிழில்: சம்மில்
அத்தியாயம் 6

இஸ்லாத்தின் பாஷையில், முஸ்லிம்களின் பாஷையில் அல்ல, அல்லாஹ்வுடைய பாதை என்பது மக்களின் பாதை. ஏன்? சமூக விவகாரங்கள் பற்றியும் சமூக நிலைப்பாடு பற்றியும் (சித்தாந்த நிலைப்பாடு அல்ல) பேசும் எல்லா வசனங்களிலும் அல்லாஹ்வும் வெகுஜனமும் அல்லது மக்களும் (நாஸ்) ஒரே அணியில் இருக்கின்றனர். இஸ்லாத்தின் கடவுளுக்குத் தனக்கென்று குறிப்பிட்டுச் சொல்லும்படியான நேர்த்திக்கடன், காவுகொடுப்பு, தூபமிடல் அல்லது சாம்பிராணியிடல் எதுவும் கிடையாது. வெகுஜனத்துக்கும் சமூகத்துக்குமானதுதான் (தனிநபருக்கானது அல்ல) கடவுளுக்கானதாக, கடவுளுக்கு மட்டுமே சேருகின்றதாக ஆகிறது. “கடவுளுக்கு நீங்கள் அழகிய கடன் கொடுத்தால் ... (64:17) என்றால், “மக்களுக்கு நீங்கள் அழகிய கடன் கொடுத்தால் ...” என்று அர்த்தம். மால் அல்லாஹ், பைத் அல்லாஹ், லில்லாஹ் எல்லாம் மக்களின் சொத்து, மக்களின் வீடு என்பதாகப் பாரபட்சமில்லாமல் உணரப்பட்டிருக்கிறது சமூகத்தில். “மக்களுக்காகக் கட்டமைக்கப்பட்ட முதல் வீடு புண்ணியமான பெக்காவில் (மக்கா) இருக்கிறது. (3:96)”, அதாவது கஅபா, அது மக்களுக்கானது, ஏனெனில் மக்கள் கடவுளின் குடும்பத்தில் உள்ளவர்கள். இந்த நோக்கில் விஷயங்களைப் பார்க்காதவர்களும் இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதற்குச் சிரமப்படுகிறவர்களும் ஏனைய மதங்கள் தங்கள் இறைவன் குறித்து வழங்கியிருக்கிற ஒரு தெய்வீக உலகப் பார்வை மற்றும் சித்தரிக்கப்பட்ட வடிவங்களின் செல்வாக்கின் கீழ் இருப்பவர்கள். போராட்டம் தொடங்குகிறது.

அபூ தர் நபிகளாரின் நெருங்கிய, ஆத்மார்த்தமான தோழரின் அந்தஸ்தில் இருக்கிறார், அதற்கான உரிமத்தை நபிகளாரே அவருக்கு வழங்கியிருக்கிறார்: “மார்பகமெல்லாம் நிரம்பி வழியும் அளவுக்கு அதிகம் கல்வி கற்ற ஒரு மனிதர் அவர்.”, “அபூ தர்ரைவிட மேலான உண்மையாளர் எவருக்கும் இந்நீலவானம் நிழல் கொடுத்ததில்லை, எவரையும் இந்த இருண்ட பூமி சந்தித்ததும் இல்லை.”, “அபூ தர்ரின் பணிவும் இறையச்சமும் மர்யமுடைய மகன் ஏசுவை ஒத்திருக்கிறது.”, “பூவுலகைவிட விண்ணுலகில் அபூ தர் அதிகம் பிரசித்தமானவர்.”

அபூ தர், இந்த பூமி மீது, இந்தச் சமூகத்தில், தனியாக நடப்பார், தனியாக மரணிப்பார், இன்னும், தீர்ப்பு நாளின் வனாந்தரத்தில், கல்லறைகள் திறக்கும்போது, கூட்டம் கூட்டமாகச் சடலங்கள் எழும்பும்போது, வனாந்தரத்தின் ஒரு மூலையில் தனியாக உயிர்ப்பிக்கப்பட்டவராய் கூட்டத்தில் இணைந்துகொள்வார்!”

மசூதி ஒன்றில் உட்கார்ந்துகொண்டு, ஒன்றன் பின் ஒன்றாக, நடைமுறை வாழ்வில் கைவிடப்பட்டிருந்த வசனங்களையும், பொருத்தமற்றதாக ஆகிவிட்டிருந்த, எவற்றின் பொருத்தப்பாடு கஷ்டங்களையும் தலைவலிகளையும் உண்டுபண்ணுமோ அத்தகைய குர்ஆன் விவகாரங்களையும் அல்லது நபிகளாரின் வழக்கங்களையும் அவர் மக்களிடத்திலே ஓதிக் காட்டுவார்.

உஸ்மான் காலத்தில் காரசாரமாகப் போய்க்கொண்டிருந்த விவாதங்களெல்லாம் குர்ஆனைத் தொகுப்பது, குர்ஆனைச் சீராக்குவது, குர்ஆனின் கையெழுத்துப் பிரதிகளைச் சரிபார்ப்பது, குர்ஆனின் திருத்தமான, மூலப் பிரதி ஒன்றைத் தயார் செய்வது, முடிவற்ற விவாதங்களாய்ச் சுழன்ற குர்ஆன் பாராயணம், எழுத்திலக்கணம், உயிரெழுத்துகள் மற்றும் உச்சரிப்புப் புள்ளிகள், வாசிப்பு, உச்சாடனம், விதண்டாவாதங்கள், இடையூறுகள், உணர்ச்சிவசங்கள், ஆட்சேபணைகள், உடன்பாடுகள் .... அபூ தர்ரோ குர்ஆனிலிருந்து ‘பத்திரப்படுத்துதல்’ (கின்ஸ்)தொடர்பான விவாதத்தை முன்னிறுத்தினார். கின்ஸ் பற்றிய வசனத்தை, அவ்வசனத்தின் முதல் பகுதியை அவர் ஒவ்வொரு கணமும் ஓதிக்கொண்டே இருந்தார்: “விசுவாசிகளே, திண்ணமாக யூத மத குருக்கள் மற்றும் சந்நியாசிகளில் அநேகர் மக்களின் உடைமைகளை வீணாகக் கபளீகரம்செய்து கடவுளின் பாதையைவிட்டும் (அவர்களை) தடுக்கின்றனர்” (9:34)

அவரின் இந்த நடத்தை இடையூறுகளை உண்டுபண்ணிற்று. கலீஃபாவே குர்ஆனை ஒன்றுதிரட்டுவதிலும் தொகுப்பதிலும்தான் ஈடுபட்டிருந்தார்; குர்ஆன் மீது பற்றுறுதி கொண்டவர்கள் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருந்தனர்.

குர்ஆனை நினைவுகூரும்போதெல்லாம் அது கிலாஃபத் பற்றிய ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட நினைவை எழுப்பிவிடுகிறது. கிலாஃபத்துக்கு எதிரான அவநம்பிக்கை, முரட்டுத்தனம், விமர்சனம், தூண்டிவிடல், தாக்குதல், கண்டனம் ஆகியவற்றுக்கு வழிவகுத்த அபூ தர்ரின் குர்ஆன், கலீஃபாவின் அமைப்பின் குரலை ஆட்சேபிக்க வைத்தது, “அபூ தர்ரே! மத குருக்கள் மக்களின் உடைமைகளைக் கபளீகரம்செய்யும் இந்த வசனமும் ‘பத்திரப்படுத்துதல்’ தொடர்பான இந்த வசனமும் மட்டும்தான் குர்ஆனில் இருக்கிறதா?”

எனினும், ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஓர் வேதனை இருக்கும், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு கோஷம் இருக்கும் என்பது அபூ தர்ருக்குத் தெரியும். குர்ஆன் என்பது வெறுமனே ‘ஒரு புனித வஸ்து’ அல்ல, அது ஒரு ஒளி, ஒரு வழிகாட்டல் என்பதை இனம்காண்பவர்கள் அந்த நாளின் வசனங்களையே சார்ந்திருக்க வேண்டும். (அதாவது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அம்மக்களுடனும் பொருந்தும் வசனங்களை). “என்ன வினோதம்! குர்ஆனை ஓதுவதைவிட்டும் கலீஃபா என்னைத் தடுக்கிறாரா என்ன?” என்று அபூ தர் பதில் அளித்தார். இறை வெளிப்பாடு, ஓரிறைக் கொள்கை மீது விசுவாசம், சிலை வழிபாடு, உயிர்த்தெழுதல், ஆன்மாவின் நித்தியத் தன்மை, முஹம்மதின் நபித்துவம் ஆகியவற்றுக்கெல்லாம் இப்பொழுது வேலை இல்லை, ஏனெனில் இவ்விவகாரங்கள் எல்லாம் ஏற்கெனவே தெளிவாக்கப்பட்டுவிட்டன; இன்றைய விவகாரம், முரண்பாடும் வர்க்க ஏற்றத்தாழ்வும்தான். ஆக, அந்நாளுக்குத் தோதான ஒரு வசனமான இந்த வசனத்தை அடுத்து, மீண்டும், சமூகப் பொருத்தப்பாட்டின் அடிப்படையில் நபிகளாரின் வழக்கங்களை அவர் நினைவுகூரத் தொடங்கினார், நபிகளாரின் வார்த்தைகள் பற்றிப் பேசத் தொடங்கினார்: “மாதங்கள் கடந்துவிடும் ஆனாலும் புனித நபியின் வீட்டில் அடுப்பு எரிவதற்கான எந்த அறிகுறியும் இருக்காது.”

“அல்லாஹ்வின் தூதரது வீட்டில் பெரும்பாலான நேரங்களில் உணவாக இருந்தவை தண்ணீரும் பேரீச்சம்பழங்களும்தான்.”, “நபிகளார் வீட்டுக் கட்டாந்தரையின் சரிபாதி மணல் கம்பளமாக இருந்தது.”, “அடிக்கடி வயிற்றைச் சுற்றிக் கல்லைக் கட்டிக்கொள்வதனூடாகப் பசியைக் கொண்டு தன்னைச் சோதித்தார், பசியின் அமில வினையைத் தான் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக.”, “அவரது ஆடைகள், உணவு, வீடு ஆகியன மசூதியின் ஸஃப்ஃபா (திண்ணை) தோழர்களான எங்களுக்கு ஆசுவாசம் அளித்தன. எங்களுக்கு குடும்பமோ வீடுவாசலோ இருக்கவில்லை, மேலும், பெரும்பாலான நேரங்களில் பட்டினிதான். ஒவ்வொரு இரவும் எங்களில் ஒரு கூட்டத்தார் அவருடன் அமர்ந்து சாப்பிடுவோம். தனது வீட்டில் அவர் உணவு சமைத்தால், தன்னுடன் சேர்ந்து சாப்பிட வருமாறு எங்களுக்கு அழைப்பு விடுப்பார். அங்கு உணவாக இருந்ததெல்லாம் கோதுமை மாவிலிருந்து சமைக்கப்பட்ட கவளமும் பேரீச்சைகளும்தான்.”

“பதுக்கும் பணமெல்லாம் அதன் உரிமையாளருக்கான நெருப்பாக ஆகப்போகிறதே அன்றி வேறில்லை.” என்று அவர் கூறுவார். “அவ்வப்போது அல்லாஹ்வுடைய தூதரின் மனைவிமார் அல்லல்கள், பட்டினியைப் பற்றிப் புலம்பவும் புகார் கொடுக்கவும் செய்வர். அவர்களுடன் அவர் ஒப்பந்தம் செய்துகொள்வார், ‘ஒன்று, இவ்வுலகை நேசித்து என்னை விவாகரத்து செய்யுங்கள் அல்லது என்னையும் பட்டினியையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.’, “நபிகளாரின் ஆருயிர் மகள் வேலை செய்து பட்டினியால் அவதிப்பட்டார், இருந்தும் தங்களுக்கு ஒரு பணியாள் தேவை என்ற, கடவுளின் மிக விருப்பத்துக்கு உரிய படைப்புகளான அலீ மற்றும் தனது மகளின் வேண்டுகோளை, தனது அபிப்பிராயப்படி, அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. (ஃபாத்திமா) ஸஹ்ராவின் வறுமைக்காக அவர் அழுதார், என்றாலும் அவருக்கு ஒரு தீனார்கூட அவர் உதவி செய்யவில்லை.”

கேள்வி மேல் கேள்வி மேல் கேள்வியாய்ச் சிந்தனைகளைத் துரிதமாக நிரப்பும் என்பது தெளிவு: பிறகு எதற்காகக் கலீஃபா உஸ்மான் ரோமத்தால் ஆன அங்கியை அணிந்திருக்கிறார்? கலீஃபாவின் அரண்மனையில் உள்ள வர்ணமயமான விரிப்பில் இனிமையான உணவு பதார்த்தங்கள் எல்லாம் எதற்காகப் பரத்தி வைக்கப்பட்டிருக்கின்றன? பிறகு எதற்காக, கலீஃபாவைத் தெரிவுசெய்த சம்மேளனத்தின் தலைவரும் உஸ்மானைக் கலீஃபாவாக நியமித்தவருமான அப்த் அல்-ரஹ்மான் இப்னு அவ்ஃபின் பாரம்பரியம் மேன்மேலும் வளர்த்தெடுக்கப்படுகிறது? இவரது செல்வங்கள் மலைபோல் குவிக்கப்பட்டபோது, தரையில் இருந்த மக்களைவிட உயரத்தில், பிரசங்க மேடையில் நின்றிருந்த கலீஃபாவையே அது மறைத்துவிட்டது. பாகப்பிரிவினைக்காக இவரது பெரிய தங்கக்கட்டி கோடாலி ஒன்றின் உதவியுடன் உடைக்கப்பட்டது.

பிறகு எதற்காக, கிலாஃபத் சம்மேளனத்தின் ஓர் அங்கத்தினரான ஸுபைர், தனக்குச் சேவகம் செய்பவர்களாகவும் தங்கள் தினக்கூலியை அவரிடம் கொடுப்பவராகவும் இருந்த ஆயிரம் அடிமைகளை தன் வசம் வைத்திருந்தார்? பிறகு எதற்காக, கலீஃபாவின் குடும்ப அங்கத்தினர்களுள் ஒருவரும் டமஸ்கஸ்ஸில் கிலாஃபத்தின் ஆளுநராகவும் இருந்த முஆவியா பச்சை மாளிகையைக் கட்டினார்? அவரைச் சுற்றி இருப்பவர்களும் அவரோடு இணங்கிச் செல்பவர்களுமான துதிபாடிகள், கவிஞர்கள், ‘உலமாக்கள்’ மற்றும் நபித்தோழர்கள் எல்லாம் எதற்காக ‘கற்பனைக் கதைகள்’ சொல்லி அன்பளிப்புகள் பெறுகிறார்கள்? அதோடு, இறைவனின் வேதத்தையும் நபிகளாரின் மரபுகளையும் ஷைஃகைனின் (அபூ பக்கர், உமரின்) வழிமுறைகளையும் பின்பற்றப்போவதாக வாக்குறுதி அளித்த உஸ்மான் எதற்காக சீஸர்கள், மன்னர்களின் மரபுகளை மட்டுமே பின்பற்றிக்கொண்டிருக்கிறார்? பிறகு ஏன் அப்படி? எதற்காக இப்படி? நாள்படநாள்பட மேல்தட்டு மனப்பான்மை, சுரண்டல், ஊதாரித்தனம், வறுமை, தூர விலகல், சமூக-வர்க்க ரீதியான முறிவுகள் அல்லது விரிசல்கள் எல்லாம் அதிகரித்துக்கொண்டே சென்றன. இதனால், இன்னும் விசாலமாக உருவெடுத்த அபூ தர்ரின் பிரச்சாரம் சிறுமைப்படுத்தப்பட்டோரையும் சுரண்டப்பட்டோரையும் மேலும் கிளர்ச்சியடையச் செய்தது. தங்கள் வறுமை என்பது எதோ நெற்றியில் எழுதப்பட்டுவிட்ட இறை நாட்டமோ, தலையெழுத்தின் நியதியும் பரலோகத்தின் விதியுமோ அல்ல, கின்ஸ் (மூலதனத்தின் பதுக்கல்) ஒன்றுதான் அதற்குக் காரணம் என்பதைப் பட்டினியில் உழன்றோர் அபூ தர்ரிடமிருந்து கற்றுக்கொண்டனர்.

செய்ய வேண்டியது என்ன?

கறாரான, இறையச்சமுள்ள அபூ தர்ரைப் பொறுத்தவரை, ஒன்றுமில்லை! ‘நாங்கள் அவற்றை எடுத்துக்கொள்வோம்!’ என்று உஸ்மானை அவர் மிரட்டுவதற்கோ, ‘நாங்கள் தருகிறோம்!’ என்று உஸ்மான் அவரை ஆசைகாட்டுவதற்கோ ‘அவசியம்’ இல்லை. அவரது மனைவி உம்மு தர். இவரும் புனித நபியின் தோழியர்களில் ஒருவர்தான். போராடுகிற, பொறுப்புள்ள ஒரு மனிதர் சகித்தே தீர வேண்டிய இன்னல்களையும் துறவற வாழ்வையும் வறுமையையும் சகித்துக்கொள்வதற்காகத் தனது கணவருக்கு அவர் ஒத்தாசை செய்கிறார். ஏனெனில், இஸ்லாம் (நடைமுறையில்) இருந்த அந்தக் காலகட்டத்தில் பெண் ஒருவர் அதுகாறும் ‘பலவீனமான பிறவி’யாக ஆகியிருக்கவில்லை.

மதீனாவின் ஆழத்தினுள் அபாயம் அதன் பற்களைத் தீட்டிக்கொண்டது. இப்பொழுது ஆட்சி செய்யும் குடியேறிகள், மூத்த நபித்தோழர்களின் புனித பிம்பத்திடம் சரணாகதி அடைந்துவிட்ட, தங்கள் சொந்த துயரத்தையும் பிறரது பிறழ்வையும் சுமந்துநின்ற இழிவுபடுத்தப்பட்டோர் துணிந்துவிட்டனர். உஸ்மான் அபாயத்தை உணர்கிறார். என்ன செய்வது? மதீனாவில் இன்னமும் நபிகளாரின் நினைவு எஞ்சியிருக்கிறது, மக்களுக்கும் அபூ தர்ரைத் தெரியும்.

அவரை டமஸ்கஸ்ஸுக்கு அவர் நாடுகடத்தினார், முஆவியாவிடம் அனுப்பினார். ஆரம்பம் முதல் டமஸ்கஸ் மக்கள் இஸ்லாத்தை பனி உமய்யாக்களிடமிருந்தே கற்றிருந்தனர். அபூ தர்ரைக் கடிவாளமிடுவது முஆவியாவுக்கு மிக இலகுவாக இருந்தது. டமஸ்கஸ்ஸில், ரோமர்களை அடியொற்றி, உஸ்மானைவிட சொகுசான மேல்தட்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார் முஆவியா. ஏற்றத்தாழ்வு, அசுத்தம், ஒடுக்குமுறை, இஸ்லாமிய விழுமியங்களின் மீறல் ஆகியன நிதர்சனமாகவும் அகம்பாவத்துடனும் துலங்கியது. இந்த நேரத்தில்தான், ரோம, ஈரானியக் கட்டடக் கலைஞர்கள் துணைகொண்டு பச்சை மாளிகையைக் கட்டுகிறார் முஆவியா. முடியாட்சியின் முதல் மாளிகை இதுதான்; ஆடம்பரமானது, அழகானது. அதை நிறைவுசெய்வதில் மனத்தை ஒருமுகப்படுத்தியிருந்த முஆவியா தனது மேஸ்திரிகளையும் தொழிலாளிகளையும் மேற்பார்வையிடுவதற்காக அடிக்கொருதரம் அங்கே பிரசன்னமாகிவிடுவார். அபூ தர்ரும் அதுபோல் நாள் தவறாமல் ஆஜராகிப் பின்வருமாறு முழங்குவார்: “முஆவியாவே இந்த அரண்மனையை உன் கைக்காசில் நீ கட்டினால், அது ஊதாரித்தனம். அதையே மக்கள் பணத்தில் செய்தால், அது தேசத் துரோகம்!". பக்குவப்பட்ட, பொறுமையான ஒரு அரசியல்வாதியாக இருந்தால், அவர் யோசித்தது போன்று, தீர்வு ஒன்றைக் காண்பதற்காக இதைச் சகித்துக்கொள்ளத்தான் செய்வார்.

முஆவியா ஒரு நாள் அபூ தர்ரைத் தனது வீட்டுக்கு அழைத்தார். மரியாதை, அன்பின் வரம்புகளையெல்லாம் தாண்டி அவர் உபசரித்தார் என்றாலும் அபூ தர் தனது முரட்டுத்தனமான முகபாவத்தையோ ஆவேசமான தொனியையோ துளியும் குறைத்துக்கொள்ளவில்லை. அறுதியாக, நிலைமை அச்சுறுத்தலின் புள்ளிக்குச் சென்றது:

“அபூ தர்ரே, உஸ்மான் அனுமதியின்றி நபிதோழர்களுள் ஒருவரை நான் கொன்றுவிட்டிருந்தால் அது நீயாகத்தான் இருப்பாய், எனினும் உனது சாவுக்கு உஸ்மானிடம் அனுமதி பெற நான் கடமைப்பட்டிருக்கிறேன். அபூ தர்ரே, நீ செய்வது உன்னை விலக்கிவைக்கிறது, மேலும், ஏழைகளையும் கீழ்த்தட்டு மக்களையும் எங்களுக்கு எதிராக நீ உசுப்பிவிடுகிறாய்.”

அபூ தர் மறுமொழி அளிக்கிறார், “நபிகளாரின் வழக்கங்களையும் நடத்தையையும் பின்பற்றி நடந்துகொள், உன்னை விட்டுவிடுகிறேன். மறுப்பாயானால், என் உடலில் ஒரு இறுதி மூச்சு எஞ்சியிருந்தாலும் அந்த ஒரு மூச்சைக்கூட நபி மரபு ஒன்றை உரைப்பதற்காக நான் பயன்படுத்தியே தீருவேன்.”

அபூ தர்ரின் பிரச்சாரம் பரவியது. தங்களை ஆட்சி செய்யும் ரோமாபுரி ஆட்சி அமைப்பையே இஸ்லாமாக நினைக்கத் தொடங்கியவர்கள் சிறுகச்சிறுக இஸ்லாத்தின் உண்மை முகத்தைக் கண்டடைந்தார்கள். மத விசுவாசத்துடன் நீதியையும் சுதந்திரத்தையும் நாடும் கொந்தளிப்பானது உள்ளத்தில் மூளுகிறது. மதத்தினூடாக வறுமை மற்றும் இழிநிலையின் நியாயத்தை ஏற்றுக்கொண்டவர்கள், முதல் முறையாக அபூ தர்ரிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள்: “வறுமை ஒரு கதவு வழியாக நுழையும்போதெல்லாம், மதம் மற்றொன்றின் வழியாக வெளியேறிவிடும்.”

மசூதியானது கடவுள், மக்கள், அபூ தர்களின் வீடாகவும் போராட்டத்தின் தளமாகவும்தான் இன்னமும் இருக்கிறது. முஆவியாவுக்கு அதன் மேல் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அலீயின் மரணத்துக்குப் பிறகே கடவுளும் கடவுளின் குடும்பமான மக்களும் இல்லாத ஒரு காலி இடமாகவும், கிலாஃபத்தின் தளமாகவும், கிலாஃபத்தின் கைக்கூலி மத குருமாரால் கையாளப்படும் ஒரு பொறியாகவும் மசூதிகள் மாறின! சிறுமைப்படுத்தப்பட்டோர் பேரெழுச்சியோடும் நம்பிக்கையோடும் அவரைச் சூழ்ந்திருந்தனர். உரிமைகளோடு சங்கமித்திருந்த உண்மைகளைப் பற்றி அவர் பேசினார்; நீதியின் துணைவனாக இருந்த ஒரு இஸ்லாத்தைப் பற்றிப் பேசினார்; மக்களுக்கான ஆகாரங்களைப் பற்றியும் சிந்தித்த, மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்த ஒரு கடவுளைப் பற்றிப் பேசினார். கிறக்கத்தில் இருந்த மக்களை அவர் எழுச்சியூட்டியதோடு முற்றுப்பெறாத பச்சை மாளிகையைத் தகர்ப்போம் என்றும் அச்சுறுத்தினார்.

முஆவியா ஜிஹாதுக்காக அபூ தர்ரை சைப்ரஸுக்கு அனுப்பினார். அவர் வெற்றி பெற்றுவிட்டால், முஆவியாவுக்கு அது ஓர் கெளரவமாகவும் வெற்றியாகவும் ஆகிவிடக்கூடும் என்பதோடு இஸ்லாத்தைக் கெளரவிக்கும் ஒரு மரியாதையாகவும் அது இருக்கும்! அபூ தர் கொல்லப்பட்டுவிட்டாலோ அவரது ரத்தத்தால் தனது கைகள் மாசுபடாமலேயே அவரது எல்லா கெடுதலிலிருந்தும் விடுவிக்கப்பட்டவராகிவிடுவார் முஆவியா. (ஜிஹாதின் இப்படிப்பட்ட துஷ்பிரயோகங்கள் காரணமாகத்தான்) ஷியாயிசம் பின்னாளில் தீர்ப்பு ஒன்றை வழங்கியது, “உண்மையான, நீதியான இமாம் தலைமை ஏற்காத ஜிஹாத் தடை செய்யப்பட்டது.” ஆனால், அபூ தர் ஆரோக்கியமாகத் திரும்பிவிடுகிறார். அதோடு, படையணியிலிருந்து தயக்கமில்லாமல் மசூதிக்குச் சென்ற அவர் தனது பணியைத் தொடங்கினார்! முஆவியாவுக்கு அபூ தர்ரைத் தெரியும், அடிமைகளின் விடுதலையையும் வயிறு காய்ந்தோரின் பசியை ஆற்றுவதையும் பற்றி அவர் எந்த அளவு யோசித்தார் என்பது தெரியும். அடிமை ஒருவரை அவர் நியமிக்கிறார், இந்தத் தங்கப் பையுடன் அபூ தர்ரிடம் செல், இதை வாங்கவைப்பதில் அவரை நீ வென்றுவிட்டால், நீ சுதந்திரமானவன்!” அடிமை அபூ தர்ரிடம் செல்கிறார். அபூ தர் மறுத்தபோதும் அடிமை வலியுறுத்தினார், அழுதார், கெஞ்சினார். அபூ தர்ரின் பதிலோ “முடியாது!” என்பதாக மட்டுமே இருந்தது. அறுதியாக அவர் கூறினார், “அபூ தர்ரே, கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். இந்தப் பணத்தை வாங்கிக்கொள், ஏனெனில் இந்தப் பணத்தை உன்னிடம் கொடுப்பதில்தான் எனது சுதந்திரம் இருக்கிறது.” அபூ தர் தயங்காமல் சொன்னார், “இருக்கலாம். ஆனால், இந்தப் பணத்தை உன்னிடமிருந்து வாங்குவதில்தான் எனது அடிமைத்தனம் இருக்கிறது.”

தொடர்ச்சி ஏழாம் பாகத்தில் ...

No comments:

Post a Comment