அபூ தர்: சமூக அநீதி ஏதிர்ப்பின் உத்வேகமூட்டும் குறியீடு
ஆசிரியர் அணிந்துரை
-
முஹம்மது
எச். அல் ஆஸி
- தமிழில்: சம்மில்
‘சமூக அநீதி எதிர்ப்பு’, ‘அதிகாரத்திடம் உண்மையை
உரக்கப் பேசுதல்’ போன்ற பேசுபொருள்கள் எல்லாம் பதைபதைப்பை உண்டுபண்ணக்கூடிய,
பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களாகவே காலம்காலமாக நிலைபெற்று
வந்திருக்கின்றன. இந்தக் குறைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட சமூகத்துடனோ மதத்துடனோ சித்தாந்தத்துடனோ
வரலாற்று யுகத்துடனோ மட்டுமே நம்மால் குறுக்கிவிட முடியாது. அடிப்படையில் இது
மானுட இயல்புடனும் சமூகப் பெறுமானங்களுடனும் தொடர்புடைய ஒன்றாகும். அதிகாரமும்
செல்வக் கொழிப்பும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற மேட்டிமை வகுப்பினரை, சமூகத்தின்
தனவான்களை எதிர்க்கத் துணிவதால் தளிர்த்திடும் விளைவுகளைக் கூடியமட்டும்
தவிர்த்துக்கொள்ளத் தலைப்படும் சுயநலப் போக்கு, அல்லது, சிலர் கூறுவது போன்று
இயற்கை நிலை தனிமனித உளவியலிலும் வெகு மக்கள் தளத்திலும் ஆழமாகப்
படர்ந்துவிட்டிருக்கிறது.
பொருளாதார ஏற்றத்தாழ்வும், இனரீதியிலான
ஓரவஞ்சனையும், நீதிக்கான அளவுக்கோலிலிருந்து அல்லது சமூக நீதியின்
நியமங்களிலிருந்து பிறழ்ந்து சென்றுவிட்ட அரசாங்கப் பரிபாலனமும் இன்று அதிகாரபூர்வ
கொள்கைகளாக நிலைகொண்டிருக்கின்றன என்றால் அதற்குக் காரணமாக, உடந்தையாக
இருப்பவர்கள் முடிவெடுக்கும் முக்கியப் பொறுப்புகளில் வீற்றிருக்கும் உயர்
அதிகாரிகள்தான். இவர்களின் குட்டுகளை அம்பலப்படுத்திவிட எத்தனிப்பதால் ஏற்படும்
தீவிளைவுகளை சராசரி மனிதர் ஒருவர் – அவர் ஆணோ பெண்ணோ – தீவிரமாகக் கணக்குப்
போட்டுப் பார்க்கிறார். தனது உத்தியோகத்தை இழக்க நேரிடலாம் அல்லது அரசாங்கத்தின்
காபந்து முகமைகளோ காவல் துறையினரோ தன்மீது புனைவு வழக்குகளை இட்டுக்கட்டலாம்
அல்லது போலிக் குற்றச்சாட்டுகளினூடே தான் சிறைவாசம் அனுபவிக்க நேரிடலாம் அல்லது
நிசப்தமாகக் கொலைசெய்யவும் படலாம். கள யதார்த்தங்கள் நிழலாடிடும் இந்தப்
பரந்துபட்ட வாக்கியங்கள், செல்வம் கொழிக்கும் சமூகங்களுடன் எந்த அளவுக்குப்
பொருந்திப் போகிறதோ அதே அளவு அன்னக்காவடி சமூகங்களுடனும் பொருத்தம் பாராட்டத்தான்
செய்கிறது. புராதனச் சமூகங்களிலும் நவீனச் சமூகங்களிலும் ஒருசேர வேர்விட்டிருக்கும் ஓர்
நிதர்சனத் தோற்றப்பாடு இது.
பொருள்முதல்வாத, மதச்சார்பற்ற சமூகங்களைப்
பொறுத்தவரை, சமூக நீதித் தளத்திலிருந்து பிறழ்ந்து செல்வோருக்கு எதிராக அறைகூவல்
விடுப்பது என்பது பீதியை உண்டுபண்ணச் செய்யும் ஒரு காரியமாக அங்கு
நிலைபெற்றுவிட்டது. சொல்லப்போனால், அந்தச் சமூகங்களிலெல்லாம் ‘பீதி உணர்வு’ என்பது
மக்களின் இயல்பு வாழ்கையுடனேயே இரண்டறக் கலந்துவிட்டது; வெகு இயல்பான ஒரு
மனப்பான்மையாக அவர்களிடையே அது உருக்கொண்டுவிட்டது. விதிவிலக்குகளும் ஆங்காங்கே
இருக்கத்தான் செய்தன. என்றாலும், சர்வாதிகாரிகளின் யதேச்சதிகாரத்தையும் பொருளாதார ஜாம்பவான்களின்
கொடுங்கோன்மையையும் அம்பலப்படுத்திவிடும் விஷயத்தில் “வாய்மூடி மௌனம்
பேணிக்கொள்”ளும் மனோபாவமே பொத்தாம்பொதுவில் புழக்கத்தில் இருக்கிறது. இத்தகைய
யதேச்சதிகாரிகளும் பெருமுதலைகளும் வக்கிரம் இழையோடும் தங்கள் நிர்வாகத்தின் குரூர
முகத்தை ஜனரஞ்சகம் தொனிக்கும் கபடப் பிரச்சாரத்தினூடே மூடி
மறைத்துக்கொண்டிருக்கின்றனர்.
நமது இஸ்லாமிய வரலாற்றைப்
பொறுத்தவரை, பொதுவாகச் சொல்வதென்றால், அதன் சர்வ முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி
ஒன்றை நாம் அலட்சியப்படுத்திவிட்டோம் அல்லது அதுகுறித்துப் பாராமுகமாக
இருந்துவிட்டோம் என்றுதான் கூறவேண்டும். தீர்க்கமான முறையில் அதனைப்
பரிசீலித்திருந்தாலோ புரவயமானப் பகுப்பாய்வுக்கு அதனை உட்படுத்தியிருந்தாலோ
பெறுமதிமிக்க படிப்பினை ஒன்றை அதனூடாக நாம் பெற்றுக்கொண்டிருக்கலாம். ஒட்டு மொத்த
மானுடத்தையும் பீடித்திருக்கும் பகாசுரப் பிரச்சினை ஒன்றுக்கான ஆக்கபூர்வ
படிப்பினையாக அது அமைந்திருக்கக்கூடும். அதிகார துஷ்பிரயோகத்தையும் செல்வக்
கொழிப்பு, பொருளாதார வளங்களின் கையாடல்களையும் குவிமையமாகக் கொண்ட படிப்பினைதான்
அது.
கோத்திரரீதியாகவும் வம்சாவழிப் பகையாலும்
பிளவுபட்டுக்கிடந்த, இஸ்லாத்தின் வெற்றிக்குப்பின் புதிதாக இஸ்லாத்தைத்
தழுவிக்கொண்ட அரேபியக் குலங்கள் தொடர்பிலானப் பிரச்சினை ஒன்று நமது உயிரினும்
மேலான அன்புத் தூதர்(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் பூதாகரமாக உருக்கொண்டு
எழுந்தது. இந்தக் குலங்களுக்கு மத்தியிலான ‘அதிகாரக் குவிப்பு’, ‘அதிகாரப்
பகிர்வு’ ஆகிய விவகாரங்களை, உள்ளார்ந்தக் குடிமை யுத்தம் ஏதும் மூண்டுவிடாமல்
சுமூகமாகத் தீர்க்க வேண்டிய இக்கட்டுக்கு இஸ்லாமியச் சமூகம் தள்ளப்பட்டிருந்தது.
அதீத எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் புதுவரவாக இருந்ததாலும் இஸ்லாமிய
மேலங்கியைப் பெயரளவில் தரித்திருந்த அவர்களிடையே கோத்திர மேட்டிமைவாத உணர்வும் (Class Consciousness) வம்சாவழிப் பூசல்களால்
வியாபித்திருந்த பிளவுகளும் காத்திரமாக நிலைகொண்டிருந்ததாலும் குடிமை யுத்தங்கள்
மூண்டு அதன் விளைவாக இஸ்லாமிய நிலப்பரப்புகள் துண்டாடப்பட்டுவிடக்கூடும் என்று
முன்கூட்டியே கணித்திருந்ததாலும் அத்தகைய பாதகம் ஏதும் ஏற்பட்டுவிடாமல்
தடுப்பதற்காகவும் அபூ பக்கர், உமர் ஆகியோரின் தலைமைத்துவத்துக்கு முன்னுரிமை
அளிக்கப்பட்டது. கோத்திர அந்தஸ்தை ஒரு கையிலும் இஸ்லாத்தின் மேலெழுந்தவாரியான
அம்சங்களை மறு கையிலும் பற்றிக்கொண்டு இரண்டுக்குமிடையே ஊசலாடிக்கொண்டிருந்த
தனிநபர்கள், கோத்திரங்களின் ஒற்றுமையையும் கட்டுக்கோப்பையும் உறுதிசெய்வதே இந்தத்
தலைமைத்துவத் தேர்வின் பிரதான நோக்கம்.
அபூ பக்கரின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமியச்
சமூகத்தை பதற அடித்த – இஸ்லாத்தைத் துறப்பது அல்லது மறுதலிப்பது தொடர்பிலான – ரித்தா
யுத்தங்களை(1) சற்று நினைவுகூர்ந்துப் பாருங்கள். அத்தகைய தகிப்பானச்
சூழலிலும்கூட முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எவ்வித பங்கமும்
ஏற்பட்டுவிடவில்லை. இதே உறுதிப்பாடு உஸ்மான் கலீஃபாவாகப் பதவி
ஏற்றுக்கொள்ளும்வரை அப்படியே நீடித்தது. அதன் பிறகுதான் பிரச்சினைகள்
ஆரம்பமாகின்றன. ஆழமானத் தெறிப்புகளும் கட்டுமீறிய பிறழ்வுகளும் முஸ்லிம் வெகுஜனக்
கட்டமைப்பைத் துளையிட்டு உலுக்கியது உஸ்மானின் ஆட்சிக்காலத்தில்தான்.
உள்விவரங்களுக்குள் எல்லாம் பிரவேசிக்க
விரும்பவில்லை. சுருங்கக் கூறின், இருபத்துச் சொச்சம் வருடங்களாக நாபிகளாரைத் திணற
அடித்துக்கொண்டிருந்த பனி உமய்யா பந்துக்கள் எல்லோரும் இப்பொழுது உஸ்மானைச்
சூழ்ந்து கவிந்திருந்தனர். உஸ்மானின் ஆலோசகர்கள்; சிரியா, ஈராக் உள்ளிட்ட
பகுதிகளின் ஆளுநர்கள் என்று இஸ்லாமிய ஆளுகையின் உயர்மட்ட பதவிகளை இவர்கள்
சிறுகச்சிறுகக் கபளீகரம் செய்யத் தொடங்கினர். இந்தப் பரிணாமமானது, வருந்தத்தக்க
விதத்தில், இஸ்லாமியச் சமத்துவம், சமூக நீதியின் அளவுகோலிலிருந்து ஆட்சியாளர்கள்
பிறழ்ந்து செல்வதைப் பட்டவர்த்தனமாக அம்பலம் ஏற்றியது.
‘பணக்கார ஆளும் வர்க்க’த்தை முதன்முதலாக
முஸ்லிம்கள் அவதானிக்க நேர்ந்தது இப்பொழுதுதான். இதையே நம் காலத்து இடதுசாரி
அரசியல் பாஷையிலிருந்து இரவல்பெற்றுக் கூறுவதென்றால், ‘வர்க்க மேட்டிமைவாதப்
பிரக்ஞை’யின் – Class Consciousness – ஒருவித சலனத்தை உம்மத் தன்னுள் சன்னமாக உணரத் தொடங்கியது. இந்த ஒவ்வாமைக்கு
எதிராக அப்பட்டமாகவும் பொட்டில் அடித்தாற்போலும் உரிமைக்குரல் எழுப்பியவர்தான் அபூ
தர். தனிப்பட்ட வாழ்வின் கறாரான கட்டுத்திட்டம், சமூக வாழ்வின் சமத்துவம்
ஆகியவற்றின் சூட்சுமமான அளவுகோல்களைக்கூட ஆத்மசுத்தியுடனும் உன்னிப்புடனும்
கடைபிடித்து ஒழுகியவர் இவர்.
தீர்க்கமிகு குர்ஆனின் பின்வரும்
ஆயத்தைத்தான் சங்கநாதமாக அவர் அடிக்கொருதரம் முழங்கிக்கொண்டே இருந்தார்:
தங்கம், வெள்ளியை (ஒருங்கு திரட்டி) பதுக்கி வைத்துக்கொண்டு அவற்றை
அல்லாஹ்வின் பாதையில் செலவிட மறுப்பவர்களுக்கு - வதக்கியெடுக்கும் வேதனை குறித்து
நற்செய்தி பகர்வீராக - (பதுக்கிவைத்திருக்கும் செல்வங்கள் அனைத்தும்) அந்நாளில்
சுட்டெறிக்கும் நெருப்புக் குண்டத்தில் பழுக்கக் காய்ச்சப்பட்டு அவர்கள்
நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகுப்பகுதியிலும் (வேதனை விம்மிட) சூடு
போடப்படும்; (ஏக நேரத்தில் அந்த அநியாயக்காரர்களிடம் சொல்லப்படும்:)
‘உங்களு(தடபுடல் வாழ்க்கை)க்காக நீங்கள் ஒன்றுதிரட்டி வைத்திருந்தப் பொக்கிஷங்கள்
இவைதான்! (தன்முனைப்புடனும் தற்பெருமையுடனும்) நீங்கள் சேகரித்துக்கொண்டிருந்த உங்கள்
பொக்கிஷங்களின் (தாளவியலா வேதனையை) இப்பொழுது சுவைத்துப் பாருங்கள்!!
(அல்
குர்ஆன் 34:35)
இந்த ‘இஸ்லாம் விரோத’
பொருளாதாரச் சேகரம் என்பது நபிகளாரின் ஆதர்சத்திலிருந்தும் அவருக்குப் பின் அவரை
அடியொற்றி ஆட்சி செலுத்திய அபூ பக்கர், உமர் ஆகியோரின் ஆதர்சனங்களிலிருந்தும் நிலைமாற்றம் அடைந்த ஓர் கொள்கைப் பிறழ்வாகும்.
காத்திரமாக உருப்பெற்றுவந்த இந்தத் தனிப்பட்ட,
அரசாங்கப் பிசகுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் பீறிட இருப்பதற்கானச் சமிக்ஞைகள்
வெகுஜன முஸ்லிம்கள் புறத்திலிருந்து ஆங்காங்கே, படிப்படியாக வெளிப்படத் துவங்கின.
நினைவில் இறுத்திக்கொள்ளுங்கள், கலீஃபாவாகப் பதவி ஏற்றுக்கொண்ட சற்றைக்கெல்லாம் அபூ
பக்கர், உமர் ஆகிய இரண்டு ஷெய்குகளை அடியொற்றி நடக்கப் போவதாகவும் அவர்களின்
தனிப்பட்ட, அரசாங்கக் கொள்கைகளை அட்சரம் பிசகாமல் பின்பற்றப்போவதாகவும் சத்தியப்பிரமாணம்
செய்துக்கொண்டவர் தான் உஸ்மான். அவற்றின் அநேகக் கூறுகளை தனது முதல் ஆறு ஆண்டுகால
ஆளுகையில் அவர் பின்பற்றி ஒழுகிடவும் செய்தார். எனினும், அவரது இரண்டாம் ஆறு
ஆண்டுகால ஆளுகையில்தான் தனது முந்தைய இரு ஆட்சியாளர்களின் கட்டுத்திட்டமான
வாழ்க்கைப் போக்கிலிருந்தும் தன்னலமற்ற கொள்கைகளிலிருந்தும் தன்னை உள்ளும்
புறமுமாக அவர் அந்நியப்படுத்திக்கொண்டார்.
இப்படி, வல்லோன் இறைவனால்
வகுத்தளிக்கப்பட்டிருக்கும் நெறி முறைகள், அளவுகோல்களுடன் கிஞ்சித்தும்
இயைபுபாராட்டாத இந்த முரண்பாட்டுக்கு உஸ்மான், முஆவியா உள்ளிட்டோரே
பொறுப்புதாரிகளாக ஆகிவிடுவதன் பின்னணியில்தான் இவர்களுக்கு எதிராக அபூ தர்
தெருவில் இறங்குகிறார்; இவர்களை எதிர்த்துக் கேள்விக் கணைகள் தொடுக்கிறார்.
இந்தச் சூழலில்தான் அவர் அதிகாரத்திடம்
உண்மையை உரக்கப் பேசுகிறார்; சமூக அநீதி எதிர்ப்பின் உத்வேகமூட்டும் குறியீடாக
உருவெடுக்கிறார்.
தன்னம்பிக்கை, தீரம், சங்கல்பம் ஆகியவற்றின்
பூரண வெளிப்பாடாய்த் திகழ்ந்திருந்தும்கூட சண்டித்தனமாகக் கீழடங்க மறுத்தாரே அன்றி
அவர் கிளர்ச்சிகளில் ஈடுபடவில்லை; இஸ்லாமியச் சமூகத்துக்கிடையே காழ்ப்புணர்வை
வளர்த்துவிடவும் இல்லை. இன்னொரு விஷயத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அன்றைய
தேதியில், எவரும் லகுவில் சென்று சந்தித்து உரையாடுபவராகவே கலீஃபா உஸ்மான்
இருந்தார். இன்றைய ஆட்சியாளர்கள் போன்று இரகசியமாகவும் வெளிப்படையாகவும்
தொழிற்படும் ஆஜானுபாகு காவலர்களின் பாதுகாப்பிலோ அடுக்கடுக்கான பந்தோபஸ்து
ஏற்பாடுகளின் உத்தரவாதத்திலோ அவர் சஞ்சரித்துக்கொண்டிருக்கவில்லை.
நம் இஸ்லாமிய வரலாற்று விவரங்களுக்குள் நாம்
பிரவேசிக்கும் போதும் வளப்பான அவ்வரலாற்றுப் பகுப்புகளில் சில காலக்கிரமத்தில்
அசட்டை செய்யப்பட்டுவிட்டன அல்லது உரிய முறையில் பயன்படுத்தப்படாமல்
புறந்தள்ளப்பட்டுவிட்டன என்பதை அறிந்துகொள்ளும்போதும் வேதனையும் வருத்தமும்
மனத்தைக் கவ்விக்கொள்கின்றன. இந்த வரலாற்று விவரங்களை எல்லாம் திறந்த மனத்துடனும்
வெளிப்படைத் தன்மையுடனும் அணுகி, நம் வரலாறு அதன் சாதகங்களையும் பாதகங்களையும்
ஒருங்கே பூண்டிருக்கிறது எனும் யதார்த்தத்தை முஸ்லிம்கள்
கிரகித்துக்கொண்டிருந்தால் எத்துணை அனுகூலமாக இருந்திருக்கும்.
தலைசிறந்த, மகத்துவம்மிக்க ஆட்சியாளர்களை நம்
வரலாறு நமக்குக் கொடையளித்திருக்கிறது எனும் அதே நேரத்தில் மகத்துவம் குன்றிய
ஆட்சியாளர்களும் அதன் பக்கங்களில் சிதறிக் கிடக்கத்தான் செய்தனர். மாசுமறுவற்றவர்கள்
என்று யாரும் கிடையாது. குர்ஆன், சுன்னாஹ்வைத் துலாக்கோலாகக் கொண்டே இவர்கள்
எல்லோரையும் நாம் பரீட்சித்துப் பார்க்க வேண்டும். இவர்களில் ஏதேனும் ஒரு
ஆட்சியாளர் தவறுகள் இழைத்திருந்தால், அவற்றை இனங்கண்டு கொண்டு அவற்றிலிருந்து
பாடங்கள் கற்றுக்கொள்ள நாம் முற்பட வேண்டும். அப்படிச் செய்வதாலொன்றும் நம்
இஸ்லாமிய விழுமியங்களோ அதுசார்ந்த நம் அறவாழ்வோ சீர்குலைந்துவிடாது.
இஸ்லாத்துக்கும் இஸ்லாமிய வரலாற்றுக்கும்
இடையிலான வேறுபாடு என்பது கிரகித்துக்கொள்ள இயலா சிரமசாத்தியமான ஒரு
கருத்துப்படிமமாக இன்றைய முஸ்லிம்களிடையே வேரூன்றியிருக்கிறது. இஸ்லாம் என்பது
அப்பழுக்கற்றது; சம்பூர்ணமானது. இஸ்லாமிய வரலாறோ பழுதுகள் நிரம்பியது; அஷ்டகோணலானது.
நமது வரலாற்றில் மண்டிக்கிடக்கும் பழுதுகளை இனங்கண்டுகொள்ளத் தவறுவது என்பது
இஸ்லாத்தையே களங்கம் மிக்கதாகச் சித்தரித்துக் காட்டும் அளவுக்குப் பாராதூரமான ஓர்
அசட்டை ஆகும். இஸ்லாத்தின் ‘பூரணத்துவ’ பரப்பெல்லைக்குள் நமது வரலாற்றை உள்ளடக்க
முயல்வதும் அதுபோன்று எதிர்விளைவுகளை உண்டுபண்ணக் கூடியது தான்.
முத்தாய்ப்பாக ஒருசில வாக்கியங்களை இங்கே
பகிர்ந்துகொள்ள விளைகிறேன். வரலாறு குறித்த நமது புரிதலின் போக்கில் அதிகாரம்
என்பது இன்னமும் செல்வாக்கு செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது. அதிகாரத்தின் தராசு
கொண்டே சஹாபாக்களின் தராதரத்தை நாம் நிர்ணயித்துக்கொண்டிருக்கிறோம். சஹாபாக்களை ‘அதிகாரத்தின் அடிப்படையில் தரம்பிரி’க்கும்
போக்கிலிருந்து என்றைக்கு நம்மை நாமே விடுவித்துக்கொள்கிறோமோ அன்றைக்குத்தான்
பக்குவமடைந்த ஓர் உம்மத்தாக நம்மால் பரிமளிக்க முடியும்.
இதனைத் துணிச்சலாகவும் ஆணித்தரமாகவும்
பதிவுசெய்துகொள்கிறேன்!
குறிப்புகள்:
1. ரித்தா யுத்தங்கள்: வரலாற்றுப் புத்தகங்கள் இவற்றை ‘ஹுரூப்
அர்-ரித்தா’ என்பதாகப் பதிவுசெய்திருக்கின்றன. ‘ரித்தா’ என்பதற்கு
மார்க்கத்தின் போதனைகள், கட்டளைகள், கொள்கைகளை முற்றாகத் துறத்தல் அல்லது நிராகரித்தல்
அல்லது கைவிடுதல் என்பது பொருளாகும்.
No comments:
Post a Comment