Sunday, May 28, 2017

ரமழானில் தக்வா: அல்லாஹ்வின் அதிகாரத்துக்கு முன் மற்றனைத்து அதிகாரங்களும் துச்சம்!


ரமழானில் தக்வா: அல்லாஹ்வின் அதிகாரத்துக்கு முன் மற்றனைத்து அதிகாரங்களும் துச்சம்!

-    இமாம் முஹம்மது அல்-ஆஸி

தமிழில்: சம்மில்


பற்றுறுதிகொண்ட சகோதர சகோதரிகளே! ரமழான் மாதம் என்பது, பற்பல அம்சங்களில், அதன் உள்ளுறை ஆற்றல்களை உட்கிரத்துக்கொள்வதில் தோல்வியடைந்தவர்களாலும் அதன் வெளிப்புற 'இயந்திரவியல்' சடங்குகளை கர்மசிரத்தையுடன் பேணுபவர்களாலும் நசித்துவருகிறது. முதலில், நோன்பிருப்பது என்றால் என்ன, உங்கள் கட்டுமீறிய வேட்கையைவிட்டும் தவிர்ந்திருப்பது என்றால் என்ன போன்ற கேள்விகளுக்கு விடைகாண முற்பட வேண்டும்.

நாள்முழுக்கக் கட்டுப்படுத்திய வேட்கையை, பொழுதுசாய்ந்தவுடன் தறிகெட்டபோக்கில் நிறைவேற்ற முனைவதா ரமழானின் பொருள்? அல்லது, நோன்பின் கறாரான பௌதிகக் கூறுகளையும் தாண்டி, நாம் பகுத்துணர்ந்துகொள்வதையிட்டு இதற்கு வேறுபல அர்த்தங்களும் இருக்கின்றனவா?

தனது வார்த்தையின் வாயிலாக அல்லாஹ் நம்மை அறிவுறுத்துகையில்,

 لَعَلَّكُمْ تَتَّقُونَ
......நோன்பிருப்பதன் குறிக்கோள், அல்லாஹ்வின் தக்வாவை (பிரயாசையினூடாக) அடைந்துகொள்வதே....
(அல் குர்ஆன் 2:183) 

மக்கள், தக்வா எனும் பதத்தை பிரயோகிக்கும்போதெல்லாம், அது முஸ்லிம் திரளுக்கு மத்தியிலாக இருந்தாலும் சரி, அல்லாஹ்வின் அதிகாரம் குறித்து மிகஅரிதாகவே சிந்திக்கின்றனர். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பௌதிக - சடவாத அதிகாரம், மனத்தின் உள்ளுறை ஆற்றலை மிகைக்கும் சடத்துவத்தின் ஆற்றலதிகாரம், பற்றுறுதியைப் புறந்தள்ளும் லௌகீக உந்துதல் முதலியவை குறித்த கருத்தாக்கங்களை பூதாகரமாக முன்னிறுத்தும் உலகின் ஓர் பகுதியில்தான் நம்மில் பெரும்பாலானோர் வாழ்ந்துவருகிறோம்; அத்தகைய வாழ்க்கைமுறையை அனுசரித்துச்செல்ல நம்மை நாமே பழக்கப்படுத்தியும்விட்டோம்

நம்மை நோக்கிய அல்லாஹ்வின் அறிவுறுத்தல் என்பதோ மேற்படி கூற்றுகளுக்கு முற்றிலும் மாற்றமாகவே தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அதிகாரங்களின் மேற்கூரிய அனைத்து சடவாத சித்தரிப்புகளையும் தனது ஒற்றை அதிகாரம் மிகைத்துவிடும் அல்லது செல்லாக்காசாக்கிவிடும் எனும் பாலபாடத்தையே அவன் ரமழான் மாதத்தில் நமக்குக் கற்றுத்தர விளைகிறான்.

ஆத்மசுத்தியுடன் நோன்பிருக்கும் முஸ்லிம்கள், அல்லாஹ்வின் அதிகாரமான இந்த ஒற்றை அதிகாரம் குறித்துமட்டுமே அதிகமதிகம் கரிசனைகொள்ள வேண்டும். புரியும்படிக் கூறுவதென்றால், ஆயுதம் தரித்திருக்கும் மக்கள் குறித்த பீதியில் நாம் உறைந்திருக்கிறோம்; பௌதிக உபாயங்களைப் பிரயோகித்துச் சண்டையிடுவதையே நாம் வல்லமைமிக்கதாகக் கருதுகிறோம். இதன் காரணத்தினால்தான், நம்மிடையே புழக்கத்திலிருக்கும் மொழிநடையில், 'அதிகாரம்' எனும் பதத்தை நாம் பிரயோகிக்கநேரும் தருணங்களிலெல்லாம், அதனை ஓர் வல்லரசைச் சுட்டவே பெரும்பாலும் பிரயோகித்துக்கொண்டிருக்கிறோம்.

ஒரு சராசரி மனிதரைப் பொறுத்தவரை, இன்றைய அரசியல், சமூக அமைப்பியலில், வல்லதிகாரம் என்றாலே துரிதகதியில் அவர் நாவில் முகிழ்ப்பது 'அமெரிக்கா' என்ற வார்த்தையாகத்தான் இருக்கும். நோன்பிருக்கும் ஒரு முஸ்லிம், இந்த வரைவிலக்கணத்தின் அஸ்திவாரத்தையே உடைத்தெறிகிறார்; லௌகீக வல்லதிகாரத்தின் இருப்பை அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்; அதனைக் கேள்விக்குறி ஆக்குகிறார்.
 
முஸ்லிம்களின் மனத்திலும் மனசாட்சியிலும் நீக்கமற நிறைந்துள்ள ஒரே வல்லதிகாரம் அல்லாஹ் மட்டும்தான். இன்னும் நுட்பமாகக் கூறுவதென்றால், நோன்பை நீங்கள் கடைப்பிடித்தொழுகும் நிலையில், இப்பூவுலகின் இராணுவப் படையொன்றை ஓர் வல்லதிகாரமாகக் கருதிக்கொள்வீர்களானால், நீங்கள் 'ஷிர்க்' குற்றத்துக்கு ஆளாகிவிட்டீர்கள்! எவ்வளவு துணிச்சல் இருந்தால், அதுவும் நோன்பிருக்கும் நிலையில், பிற சடவாத அதிகாரங்களைக் கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பீர்கள்?!

كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டது போன்றே உங்களுக்கும் அது கடமையாக்கப்பட்டுள்ளது....
(அல் குர்ஆன் 2:183)
காரணம்,

لَعَلَّكُمْ تَتَّقُونَ
“.......இடையீடு ஏற்படுத்துவதும், பிரக்ஞையை மடைமாற்றுவதுமான மற்றனைத்து அதிகாரங்களைவிடவும் அல்லாஹ்வின் அதிகாரத்தை உயர்த்திப்பிடிக்கும் மனசாட்சி, பிரக்ஞை, எண்ணவோட்டம், நடத்தையொழுங்கு ஆகியவை உங்கள் போக்கை செப்பனிடுவதற்காக......”
(அல் குர்ஆன் 2:183)
நோன்பின் இந்தப் புரிதலுடனும் தீட்சண்யப் பார்வையுடனும் உங்களைச் சூழவும் காணக்கிடைக்கும் முஸ்லிம்களின் நிலைமையை உற்றுநோக்குங்கள். ரமழான் மாதத்தில் இவர்களில் எத்தனை பேர், மற்றனைத்து அதிகாரங்களைவிட, முதன்மைப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுப்பதற்கும் தகுதியுடைய ஒரே அதிகாரம் அல்லாஹ்வின் அதிகாரம் மட்டுமே என்பதை ஆத்மசுத்தியுடன் அங்கீகரிக்கின்றனர்; அதற்குத் தோதான பயிற்சியை மேற்கொள்கின்றனர்?! பள்ளிவாசல்களில் எத்தனை ஃகுத்பாக்கள், நோன்பின் இந்த வியூகத்தை விளக்கிகூறும் வகையிலே நிகழ்த்தப்படுகின்றன?

இதனைப் பிறிதொரு கோணத்திலும் அணுகலாம். இந்தச் சடவாத உலகில், தனிநபர்கள் எவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்கிறார்கள்? ஒரு தனிமனிதரைப் பொறுத்தவரை, அவர் தனது உடல்வலிமையைப் பிரயோகித்து அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்கிறார். நீங்கள் கட்டுமஸ்தான ஆகிருதிக்குச் சொந்தக்காரராக இருப்பதால், சர்வவல்லமைப் பொருந்திய ஒரு நபராக நீங்கள் பாவிக்கப்படுகிறீர்கள். சமூகங்கள் எவ்வாறு வலுப்பெற்று விளங்குகின்றன? தொழில்நுட்பம், போர் விமானங்கள், அணுவாயுதங்கள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளிட்ட பௌதிக சக்திகளைக்கொண்டு தங்கள் இராணுவங்களைக் கட்டமைத்திருப்பதால், உலக அரங்கிலே அத்தகைய சமூகங்கள் சர்வவல்லமைப் பொருந்திய சமூகங்களாகக் கருதப்படுகின்றன.

இந்தச் சமூகங்கள் அனைத்தும் லௌகீகரீதியிலே வல்லதிகாரம் படைத்தவையாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், இவைகளைக் குறித்த பிரமையிலேயே நமது ரமழான் மாதத்தை நாம் கடந்துசெல்ல வேண்டும் என்பது அல்லாஹ்வின் நோக்கம் அல்ல. அதிகாரம் தொடர்பிலான முற்றிலும் மாறுபட்ட நமது அணுகுமுறையை பகுத்தறிந்துகொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இதனை எப்படி மேற்கொள்வது? ரமழான் மாதத்திலே, நமது பற்றுறுதிக்கு உரம் ஊட்டவிருக்கும் 'தக்வா'-வினூடாகத்தான்!

இந்நோன்பின் வாயிலாக யதார்த்தத்தில் நாம் எதனை அடைந்துகொள்ளத் தலைப்படுகிறோம்? ரமழான் மாதத்தில், நம்முள் எத்தகைய ஆக்கக்கூறுகளை நாம் கட்டியெழுப்புகிறோம்? தசைவலிமை என்பது இங்கே ஒரு பொருட்டல்ல; ஏனெனில், எவ்வளவுதான் கட்டுமஸ்தான ஆகிருதியாக இருந்தாலும், அது ரமழான் மாதத்தில் அல்லல்களுக்கு உட்பட்டே ஆகவேண்டும். அவ்வாறே, நமது இராணுவமும் இம்மாதத்தில் பொருட்படுத்தத்தக்க ஓர் அம்சமாக இருக்கமுடியாது; ஏனெனில், அதுவும்கூட இம்மாதத்தில், பௌதிகரீதியிலான நசிவுக்கு ஆட்படலாம். அப்படியென்றால், இந்த ரமழான் மாதத்தில், எத்தகைய ஆக்கக்கூறுகளை நாம் கட்டமைக்கின்றோம்? அல்லாஹ்வின் அதிகாரத்தை ஏகபோகமாக அங்கீகரிக்கவல்ல நமது சுய-நிர்ணய உரிமை, சங்கல்பம், உளவுறுதி ஆகியவற்றைத்தான் இம்மாதத்தில் நாம் கட்டியெழுப்புகிறோம்!


நீங்கள் கைப்பற்றியிருக்கும் அதிகாரம், பிற மக்களை அடக்கி ஒடுக்குவதையிட்டு உங்களை உந்துகிறது என்றால், உங்கள் அதிகாரத்தை நொடிப்பொழுதில் மிகைத்துவிடும் அல்லாஹ்வின் அதிகாரம் குறித்த பிரக்ஞையை மீட்கொணர அத்தருணத்தில் நீங்கள் முயற்சிசெய்ய வேண்டும். எப்பொழுது ஒரு முஸ்லிம், 'தக்வா'-வின் இந்த வியாக்கியானத்தை முழுமையாகப் புரிந்துகொள்கிறாரோ அக்கணப்பொழுதிலேயே மேற்படி சடவாத, லௌகீக அதிகாரங்கள் அனைத்தும் துச்சமாகிவிடுகின்றன. தவிரவும், ஒரு முஸ்லிமின் சிந்தனைகள், மனசாட்சி, உணர்வுகளின் மீது அவைகளால் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது.

பிறிதொரு வசனத்தில் அல்லாஹ், பின்வருமாறு கூறுகின்றான்:

اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ
....அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னத்தை அவதானிக்க வேண்டிய வழிமுறையில் அவதானித்துக்கொள்ளுங்கள்....
(அல் குர்ஆன் 3:102)

இது குறித்து அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல்) வினவப்பட்டபோது, அவர் 'தக்வா'-வின் ஓர் வரைவிலக்கணமாக தனது இருதயத்தைச் சுட்டிக்காட்டி, 'தக்வா-வானது இவ்விடத்தில் பிரசன்னமாகியிருக்கிறது' என்றார். இந்தத் தக்வா, மானுட இருப்பை ஊர்ஜிதம் செய்யும் தசைப் பகுதியினூடாக உணரப்படுவதல்ல; சமூகங்கள் கட்டமைத்துள்ள பகாசுர இராணுவப் படாடோபங்களினூடாக உணரப்படுவதும் அல்ல. மாறாக, தக்வா-வின் வீரியம் என்பது மனித உளவியல், இருதயம், விழிப்புணர்வு, அகத்தூண்டுதல் ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்படும் இறை-பிரக்ஞையினூடாகவே உணரப்படுகிறது.

ரமழானின் இயந்திரகதியிலான சடங்குகளால் பீடிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் நம் மத்தியில் பரவலாகக் காணக்கிடைக்கின்றனர். அவர்கள், பகல் வேளைகளில் உணவு, தண்ணீர், சிற்றின்பம், வேட்கை ஆகியவற்றைவிட்டும் தவிர்ந்திருக்கின்றனர். என்றாலும், அவர்களில் எத்தனை பேர், 'தக்வா'-வின் ஒழுங்குமுறையைக் கொண்டு தங்கள் குணாதிசயத்தைச் செப்பனிடுகின்றனர்? இவை தொடர்பில், அல்லாஹ்வின் தூதரவர்கள் (ஸல்), 'எவர்கள் நெறிபிறழ்ந்த பேச்சுகள், அவதூறு பரப்புதல், பொய்யுரைத்தல், அசத்தியத்தை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புக்காட்டுதல், பித்தலாட்டத்தை முழுநேர நிகழ்ச்சி நிரலாகக்கொண்டு செயல்படுதல் முதலியவற்றைவிட்டும் தவிர்ந்திருக்கவில்லையோ, அவர்கள் வெறுமனே உணவு மற்றும் தண்ணீரைவிட்டும் தவிர்ந்திருப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்வித தேவையும் இல்லை.' என்பதாகக் கூறுகிறார்.

ஆக, ரமழானின் இம்மாதம், அநாயாசமாகக் கடந்துசெல்லும் அளவுக்கு இலகுவான மாதம் அல்ல. இப்போதெல்லாம், நாள்முழுமைக்கும் உணவு, தண்ணீரைவிட்டும் தவிர்ந்திருப்பதும் அதைவிடவும் இரட்டிப்பான உணவு, தண்ணீரைக் கபளீகரம் செய்வதைக்கொண்டு இரவு நேரங்களில் எதிர்வினையாற்றுவதும் ஓர் வாடிக்கையாகவே மாறிவிட்டது. இதன் மூலம் தனது சொற்கள், செயல்பாடுகளினூடாக ஒரு முஸ்லிமின் குணாதிசயம் அசத்தியத்தைத் தவிர வேறெதனையும் வெளிப்படுத்திடவில்லை. இதனை நாம் நோன்பு என்றோ, ரமழான் என்றோ, அஸ்-ஸியாம் என்றோ, தக்வா என்றோ திண்ணமாகக் கூறமுடியாது.

அதிகாரம் படைத்தவர்கள், தங்கள் ஊடகங்கள் மற்றும் ஆஸ்தான உலமாக்களினூடாக மரபார்ந்த முஸ்லிம்கள், கலாச்சாரச் சுழிக்குள் புதைந்துகிடக்கும் முஸ்லிம்கள், வழக்காறுகளால் பீடிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்கள் ஆகியோரை வெளிப்புற, சடவாத நோன்பை நடைமுறைப்படுத்துவதையிட்டு நிச்சயம் ஊக்குவித்துக்கொண்டே இருப்பார்கள்.


அவர்கள், பொழுது புலரும்முன்னே துயிலெழுந்து, குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஸகர் நேரத்திலே உங்கள் காதுகளுக்கு விருந்தளிப்பார்கள்; ஃபஜ்ர் தொழுகைக்கான அதான்-ஐ உங்களுக்காக அவர்கள் உரத்துமுழங்குவார்கள்; பகல்பொழுது நெடுகிலும் குர்ஆன் பாராயணத்தைக்கொண்டு தங்கள் ஊடகங்களின் அலைவரிசைகளை நிரப்பியவண்ணம் இருப்பார்கள்; பொழுதுசாய்ந்ததுமே, இஃப்தார் விருந்தைக் கொண்டாடுவதையிட்டு தங்கள் நிழற்படக்கருவிகளை முஸ்லிம்கள் பக்கம் திருப்புவார்கள்; இத்யாதி. ரமழான் மாதம் முழுமைக்கும் இத்தகைய நிகழ்வுகள் ஒரு தொடர்கதையாகவே இருக்கும். இவை எதுவுமே உங்கள் தக்வா-வைச் செறிவூட்டப்போவதுமில்லை, உங்கள் குணாதிசயத்தை மேம்படுத்தப்போவதுமில்லை!


ரமழான் நோன்பின் செயற்கையான, மேம்போக்கான அவதானிப்பை களிப்புடன் மேற்பார்வையிடுவதுதான் இவர்களின் விருப்பமே தவிர, ரமழான் மாதம் மற்றும் தக்வா உணர்த்திநிற்கும் பாடங்களையும் படிப்பினைகளையும் நீங்கள் கற்றுணர்ந்துகொள்ள வேண்டும் என்பது இவர்கள் விருப்பம் அல்ல. இங்கே பாடங்கள் என்று நாம் கூறுவது யதார்த்தத்தில், இப்பூவுலகின் ஏகபோக அதிகாரமான அல்லாஹ்வின் வல்லதிகாரத்தை ஆத்மசுத்தியுடன் சுவீகரித்துக்கொள்வதையே குறிக்கிறது.


இப்பாடங்களை நீங்கள் புரிந்துணர்ந்துகொள்ளக் கூடாது என்பதே இவர்கள் விருப்பம். ஏனெனில், ரமழானை அவ்வாறு நீங்கள் பிறிதொரு பரிமாணத்தில் புரிந்துகொள்ளத் தலைப்படும் பட்சத்தில், இவர்களின் அச்சுறுத்தும் இராணுவ பிம்பம் சுக்கல் நூறாகச் சிதறிவிடுகிறது; அத்துடன், சர்வவல்லமை பொருந்திய அல்லாஹ்வின் பிம்பம் உங்கள் மனத்திலும் மனசாட்சியிலும் ஆழப்பதிந்துவிடுகிறது.

“உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டது போன்றே உங்களுக்கும் அது கடமையாக்கப்பட்டுள்ளது.”

எதற்காக,

لَعَلَّكُمْ تَتَّقُونَ

“....மற்றனைத்து அதிகாரங்களைவிடவும் அல்லாஹ்வின் அதிகாரத்தை உயர்த்திப்பிடிக்கும் மனசாட்சி, பிரக்ஞை, எண்ணவோட்டம், நடத்தையொழுங்கு ஆகியவற்றை நீங்கள் சுவீகரித்துக்கொள்வதற்காக....”
(அல் குர்ஆன் 2:183)


மேற்படி சங்கல்பத்தைத்தான் உங்களுக்குள் நீங்கள் கட்டமைத்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் வலிமை என்பது அவர்களின் சுய-நிர்ணய உரிமை, சங்கல்பம் ஆகியவற்றில் அமைந்திருக்கிறதே தவிர கட்டுமஸ்தான ஆகிருதியில் அல்ல. இந்தச் சங்கல்பத்தை ரமழான் மாதத்தில் எந்த ஒரு முஸ்லிம் மெய்யாகக் கட்டமைத்துக்கொள்கிறாரோ அவரே நோன்பை - அதன் உள்ளுறை அர்த்தத்தில் – முழுமையாக நோற்றவராகிறார்; அதன் பிரதிபலனை முழுமையாக அடைந்தவராகிறார்.


ரமழான் மாதத்தில் நாம் உணவைவிட்டும் தண்ணீரைவிட்டும் இன்னபிற பௌதிக இன்பங்களைவிட்டும் தவிர்ந்திருக்கிறோமே, எதற்காக? 'நீங்கள் உங்கள் உணவைவிட்டும் தண்ணீரைவிட்டும் துணைகளைவிட்டும் என்னுடையத் திருப்திக்காகத் தவிர்ந்திருங்கள்.' என்று இறைவன் கூறுகிறான். இக்கட்டளையை ரமழான் மாதத்தில், அல்லாஹ்வின் திருப்தியைமட்டுமே நாடி ஆத்மசுத்தியுடன் நிறைவேற்ற முனைபவர் எவரேனும் இருக்கின்றனரா? இந்தச் செயல்முறையினூடாகத் தங்கள் சங்கல்பத்தையும், சுய-நிர்ணய உரிமையையும் செறிவூட்டிக்கொள்பவர் எவரேனும் இருக்கின்றனரா?


முஸ்லிம்களின் செயலூக்கமும் உத்வேகமும் இம்மாதத்திலே மட்டுப்படுத்தப்படுகிறது. காரணம், அவர்களில் அற்பசொற்பமான விதிவிலக்குகளைத் தவிர பெரும்பாலானோர் வெறுமனே நியதிகளையும் ஒழுங்குமுறையையும் பேணிநடக்கும் 'சமத்துப்பிள்ளைகள்'-ஆக இம்மாதத்தில் உருமாறிவிடுகிறார்கள்! ஏனெனில், 'இயந்திரவியல்' முஸ்லிம்கள் இன்று தங்கள் இயந்திரகதியிலான சடங்குகளால் இப்பூவுலகையே நிரப்பிவிட்டார்கள் அல்லவா.


ரமழான் நோன்பை இவர்கள் வெறுமனே பௌதிகரீதியில் அவதானித்துவருவதையும் மேற்படி நசிவுக்கான பிறிதொரு காரணமாகக் கொள்ளலாம். இதனால், புனிதமிக்க ரமழானில் இவர்களின் மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய ஆக்கக்கூறானது, இவர்களைவிட்டும் வெகுசேய்மையில் சென்றுவிடுகிறது. இங்கு 'ஆக்கக்கூறு' என்று பிரஸ்தாபித்திருப்பது யதார்த்தத்தில், ரமழான் மாதத்தில் உணரப்படும் தக்வா-வின் செழுமையைத்தான்.


மானுட உள்ளத்தின் அபிவிருத்தியே ரமழானின் முக்கிய இலக்கு. ஏனெனில், மனித உடலின் அப்பகுதியில்தான் முஸ்லிம்களின் சர்வவல்லமைப் பொருந்திய அதிகாரம் குடிகொண்டிருக்கிறது. இந்த உள்ளத்தினுள், இறைவன் குறித்த பிரக்ஞை நீக்கமற நிறைந்திருக்குமானால், இப்பூவுலகின் எப்பேற்பட்ட பகாசுர சக்திகள் ஒன்றுகூடி, முஸ்லிம்களின் முதுகெலும்பை முறித்துவிட நாடினாலும், ஒருசிறிய துரும்பைக்கூட அவர்களால் அசைத்துவிட முடியாது. இதற்காகத்தான், ரமழானின் ஆழிய அர்த்தங்களை கர்மசிரத்தையுடன் அவதானிப்பதுகுறித்து அடிக்கொருதரம் நாம் நினைவுறுத்திக்கொண்டிருக்கிறோம்.

நம்மை நாமே பண்படுத்திக்கொள்வதையிட்டு, இந்த ரமழான் மாதத்தை நாம் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; உந்துசக்தி, உளஉறுதி, சுய-சங்கல்பம் உள்ளிட்ட மானுட ஆக்கக்கூறுகளை மேன்மேலும் அதிகரித்திட இம்மாதத்தில் நாம் பிரயத்தனப்பட வேண்டும். இல்லையெனில் பழக்கவழக்கங்கள், வழக்காறுகள், மரபுகள் முதலானவற்றின் அழுத்தம் காரணமாக உள்ளீடற்ற ஒரு வெற்று மாதமாகத்தான் ரமழானை நாம் கடந்துசெல்வோம்; அர்த்தமற்ற ஒரு நோன்பைத்தான் மாதம் முழுமைக்கும் நாம் நோற்றிருப்போம். ரமழான் மாதத்தின் பொடுபோக்கான நம்முடைய இந்த நடத்தை, அதனைத் தொடர்ந்துவரும் மாதங்களிலும் அப்படியே தொடரும். இறைவனின் மாதத்தை அர்த்தமற்றதாக, உள்ளீடற்றதாக மாற்றிய நாம், தொடர்ந்துவரும் மாதங்களையும் அவ்வாறே விரயம் செய்வோம்.

"உங்கள் நோன்பு எனக்கே உரித்தானது; அதற்கான பிரதிபலனை நானே உங்களுக்கு வழங்குவேன்." என்று அல்லாஹ் (சுப்ஹானா) கூறுவதாக நபிகளார் (ஸல்) நவின்றுள்ளார்கள். ரமழானின் இத்தகைய அர்த்தங்களை தெளிவாக அவதானித்துக்கொள்ளுங்கள். இதன் மூலம், அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னத்தை இம்மாதத்திலே நீங்கள் மெய்யுணர்ந்துகொள்ளலாம்; தவிரவும், கீழ்க்காணும் இறைவழிகாட்டலுக்கான உங்கள் எதிர்வினையை ஆக்கபூர்வமாகவும் ஆத்மசுத்தியுடனும் நீங்கள் அமைத்துக்கொள்ளலாம்.

"எனது சேவகர்கள் என்னைக் குறித்து உம்மிடம் வினவினால், நான் அவர்களுக்கு மிகவும் அருகாமையில் இருக்கிறேன். என்னை அழைப்பவருக்கு நான் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன். ஆதலால், அவர்கள் என்னிடமே மனமுவந்து கேட்க வேண்டும்; என்மீது பற்றுறுதிகொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்கள் பண்பட்டவர்களாக மாறலாம் / நேர்வழியில் செலுத்தப்படலாம்."
(அல் குர்ஆன் 2:186)

அல்லாஹ்விடமே உங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்துங்கள், அவனது மறுமொழி குறித்து நீங்கள் பூரணநம்பிக்கையுடன் இருக்கும்பட்சத்தில்..!

ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் யுத்தம்புரிந்திருக்கிறார்கள் என்பது நீங்களும் நானும் நன்கறிந்த ஒரு விஷயம்தான். முஸ்லிம்களின் வலிமையையும் சங்கல்பத்தையும் வெளியுலகுக்குப் பறைசாற்றிய இஸ்லாமிய வரலாற்றின் முதல் யுத்தம் ரமழான் மாதத்திலேயே நிகழ்ந்தது. எதற்காக இந்த ஏற்பாடு? ஏனெனில், முஸ்லிம்கள் தங்களகத்தே கொண்டிருந்த சுய-நிர்ணய உரிமையை அது மேன்மேலும் உறுதிப்படுத்தும் என்பதற்காக.

ரமழான் மாதத்தில், நீங்கள் பிரயாணம் மேற்கொண்டாலோ அல்லது உடல் உபாதைகளால் அல்லல்பட்டுக்கொண்டிருந்தாலோ உணவு உட்கொள்வதற்கும் தண்ணீர் பருகுவதற்கும் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், யுத்தத்திலிருந்து தவிர்ந்திருப்பதற்கான எவ்வித அனுமதியும் இம்மாதத்திலே முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை, வருடத்தின் நான்கு மாதங்கள் அவர்களுக்கு யுத்தம்புரிய தடைவிதிக்கப்பட்ட மாதங்களாகும்: துல் கஅதா, துல் ஹஜ், முஹர்ரம், ரஜப். இஸ்லாமிய நாள்காட்டியில், ‘காபந்துக்கான மாதங்கள்’ பட்டியலில் ரமழான் மாதம் இடம்பெறவில்லையே ஏன், என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே எப்பொழுதேனும் கேட்டுக்கொண்டது உண்டா?

நடப்புநிலையோடு பின்னிப்பிணைந்திருக்கும் இன்றைய 'துதிபாடி' முஸ்லிம்களின் சிந்தனைகளை நீங்கள் கருத்தில்கொண்டால், அவர்கள் நம்மிடம், 'ரமழான் என்பது சாந்தமான போக்குக்கும், கண்டும்காணாமல் இருப்பதற்கும், பங்களிப்பின்மைக்கும் உரியதொரு மாதமாகும்' என்பதாகக் கூறுவார்கள். ஆனால், அல்லாஹ்வின் வார்த்தைகளோ இதற்கு முற்றிலும் முரணானவை. இன்றைய முஸ்லிம்களிடம் அவன், 'உங்கள் கற்பிதம் முற்றிலும் பிழையானது. ரமழான் என்பது உளஉறுதிக்கும் பங்களிப்புக்கும் செயல்பாடுக்கும் ஈடுபாடுக்கும் உரிய மாதமாகும்.' என்பதாக விளக்கமளிக்கிறான்.

இதன் காரணத்தினால்தான், 'காபந்துக்கான மாதங்கள்' எனும் வகைமையினுள் ரமழான் மாதம் உள்ளடங்கவில்லை. அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கும் பரவலாக வியாபித்திருக்கும் இன்றைய முஸ்லிம்களின் மனப்பான்மைக்கும் மத்தியிலே ஓர் ஆழிய விரிசல் தென்படுவதைத் தெளிவாக நம்மால் அவதானிக்கமுடிகிறது. பத்ரு யுத்தம் ரமழானில் - ரமழான் மாதத்தின் மத்தியப் பகுதியில் - அரங்கேற்றப்பட்டது இந்த விரிசலை ஈடுகட்டத்தான்!

தங்கள் வல்லமை மற்றும் அதிகாரம் என்பது தங்கள் சுய-ஒழுங்கிலும் சுய-சங்கல்பத்திலும் அதனைக் கட்டமைத்து வலுவூட்டுவதிலுமே அமைந்திருக்கிறது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ளும் தருணத்தில், எத்தகைய யுத்தங்களையும் முன்னெடுப்பதையிட்டு இம்மாதத்தில் தங்களைத் தகவமைத்துக்கொள்வார்கள்; சால்ஜாப்புகளை முன்வைத்து விவகாரங்களை அசட்டை செய்யமாட்டார்கள். 

நாம் வாழும் இப்பூவுலகிலே, ரமழானின் மேற்படி அர்த்தங்களை அவதானிக்க வேண்டிய முறைப்படி அவதானித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்களும் நம் மத்தியில் இருக்கவேயிருக்கின்றனர். அல்லாஹ்வின் பிரசன்னத்தை உணர்த்தவல்ல தங்கள் உள்ளுறை ஆற்றலில் துவங்கி அவனது பிரசன்னத்தை ஊர்ஜிதம்செய்யும் யுத்தகளம் வரை, அது ரமழான் மாதமாக இருந்தாலும் சரி, தங்கள் பங்களிப்பை நல்கிட அவர்கள் தயார்நிலையில் இருக்கின்றனர்.

இம்மாதம் நெடுகிலும், முஸ்லிம்களின் போலிப் பிரதிநிதிகள், சம்பிரதாயங்களைத் தீவிரமாக முன்னெடுத்த வண்ணம் பம்பரம்போல் சுழன்றுகொண்டிருப்பர். எனினும், இறைவனால் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை ஷைத்தான்களுக்குத் தாரைவார்ப்பதே அவர்களின் உள்ளுறை நோக்கம்.

இவைகளெல்லாம் அதன் போக்கில் நடந்துகொண்டேயிருக்கட்டும். அல்லாஹ்வின் பிரச்சன்னத்தில் நாம் தொழிற்பட்டுக்கொண்டிருக்கும்வரை, அவன் நம்முடன் இருக்கும்வரை, இவை எதுவுமே அவனை நோக்கிய நமது பிரயாசைகளில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது!

இறைவன் நன்கறிந்தவன்!