Thursday, October 12, 2017

'ஹதீஸ் புனைவு' ஓர் சுருக்கமான அலசல் (பகுதி: 2)


'ஹதீஸ் திறனாய்வு' ஓர் மீள்பார்வை
-    டாக்டர் முஹம்மத் முஸ்தபா அஸமி
-     தமிழில்: அ. ஜ. முஹம்மது ஜனீர்
-     சுருக்கத் தொகுப்பு மற்றும் செம்மையாக்கம்: அபு தர்
  

திறனாய்வின் தொடக்கம்

‘திறனாய்வு’ என்பதை, எது சரி எது பிழை என்பதைப் பிரித்தறிந்துகொள்வதற்கான ஒரு பதமாகக் கருதுவதாயின், அது நபிகளாரின் காலத்திலிருந்தே ஆரம்பமாகிவிட்டது என்றுதான் கூறவேண்டும். எனினும், அன்றைய காலகட்டத்தில், நபிகளாரிடமே நேரடியாகச் சென்று, அவர்கள் கூறியதாகப் புழக்கத்தில் இருப்பவற்றை அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்வதாக அது அமைந்தது. திமாம் பின் த'அலபா ஒருமுறை நபிகளாரிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தூதர் என்னிடம் வந்து இன்னின்ன விஷயங்களைக் கூறினார்.' என்றார். 'அவர் உண்மையே கூறினார்' என்று நபிகளார் அதற்கு மறுமொழி அளித்தார்கள்.

இருண்மையிலிருந்து தெளிவுபெற்றுக்கொள்வதன் நிமித்தம் இப்படிப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அலீ, உபை இப்னு க'அப், அப்துல்லாஹ் இப்னு அம்ர், உமர், இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் முதலானோர் வாயிலாக அறியமுடிகிறது. ஹதீஸ் குறித்து தெளிவுபெற்றுக்கொள்வது அல்லது திறனாய்வு மேற்கொள்வது போன்ற செயல்முறைகள் நபிகளாரின் காலத்திலேயே தோற்றம் பெற்றுவிட்டதைத்தான் மேற்படி தகவல்கள் நமக்கு உணர்த்துகின்றன.

நபிகளாரிடம் சென்று தெளிவுபெற்றுக்கொள்ளும் இப்போக்கு, அவர்களின் மறைவுடன் அனிச்சையாகவே முடிவுக்குவந்துவிட்டது. என்றாலும், அதற்குப் பின்னரும்கூட நபிகளார் காட்டிய வழிமுறையைப் பின்பற்றி ஒழுகுவதென்பது, ஒவ்வொரு தனிப்பட்ட முஸ்லிம்மீதும், சமூகத்தின்மீதும், அரசாங்கத்தின்மீதும் கட்டாயக் கடமையாகவே இருந்துவந்தது. எனவே, பிற்காலத்திய முஸ்லிம்கள், நபிகளாரின் கூற்றுகளாக உரைக்கப்படுவனவற்றைக் கர்மசிரத்தையுடன் கையாண்டுவந்தனர்; அவற்றை ஆய்வுகளுக்கு உட்படுத்தி உண்மைநிலையை அறிந்துகொள்வதில் பேணுதலாக இருந்துவந்தனர்.

இஸ்லாத்தின் பரவலாக்கத்துடன் சேர்த்து, ஹதீஸ் பரவலாக்கத்தின் வீச்செல்லையும் விரிந்துகொண்டே சென்றது. இஸ்லாமிய படையெடுப்புகளில் ஏராளமான நபித்தோழர்கள் தங்களை முனைப்புடன் ஈடுபடுத்திக்கொண்டனர். சீறிய ஆசிரியர்களாய்த் திகழ்ந்த வர்கள் ஒவ்வொருவரும் ஸுன்னா குறித்த அறிவைப் பரப்புவதில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
குர்ஆன், ஸுன்னாவின் பரவலாக்கத்தில் அதீத கரிசனைகொண்டிருந்த உமர் (ரழி), அத்துறையில் மேதைமைப் பெற்றிருந்த ஏராளமானோரை இஸ்லாமிய உலகின் பல்வேறு திக்குகளுக்கும் அனுப்பிவைத்தார். ஹதீஸ் பரவலாக்கத்துக்கான பிறிதொரு முக்கியக் காரணியாக உமரின் இந்த நடவடிக்கையையும் குறிப்பிடலாம். இப்படி, ஹதீஸ் பரவலாக்கத்துடன் சேர்த்து தவறுகள் இழைக்கப்படுவதற்கான சாத்தியங்களும் சடுதியாக அதிகரித்துச்சென்றதால், திறனாய்வுக்கான அவசியமும் அக்காலச்சூழலில் இன்றியமையாததாக மாறிப்போனது.

இந்தச் சூழலில்தான், முஸ்லிம் சமூகம் சில முக்கியப் பிரச்சினைகளை எதிர்கொண்டது. அவற்றுள் பிரதானப் பிரச்சினை, உஸ்மானின் (ரழி) கொலையும், அதன் நீட்சியாக அலி (ரழி), முஆவியா ஆகியோருக்கிடையே முகிழ்த்த பகைமைத் தீயும். இது, முஸ்லிம் சமூகத்தின் உள்விரிசலை மேன்மேலும் அதிகரித்தது. இந்தக் களேபரங்களுக்கு மத்தியில்தான், அரசியல் அடிப்படையில் ஒவ்வொரு சாராரையும் புகழ்ந்தோ, இகழ்ந்தோ ஹதீஸ்களைப் புனைந்துகூறும் முயற்சி தொடங்கியது.

பிரச்சினைகளும், வாதப் பிரதிவாதங்களும், கருத்து மோதல்களும் உருவெடுக்கும் இடங்களிலெல்லாம், சுயநலன் கருதிச் செயல்படுவோர் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள முயல்வதும், முஸ்லிம்களுள் சிற்ந்தவர்களாகத் தங்களைச் சித்திரித்துக்காட்ட எத்தனிப்பதும் இயல்பான ஒரு போக்குதான். அன்றைய சூழலில் நடந்ததும் அதுதான்.

இந்தக் காலகட்டத்தில், ஹதீஸ் கற்கும் துறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ‘திறனாய்வு’ தொடர்பில் பல்வேறு பிராந்தியக் கல்வி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டன. அவற்றுள் முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருதப்பட்டவற்றுள் ஒன்று, மதீனாவை மையமாகவைத்து இயங்கிக்கொண்டிருந்தது; மற்றொன்று ஈராக்கை.

ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டுக்குப் பின், ‘ஹதீஸ் திறனாய்வு’ புதியதொரு படித்தரத்தை எட்டியிருந்தது. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டின் அறிஞர்கள் ஹதீஸ், ஸுன்னா ஆகியவற்றின் சேகரிப்புக்கென முன்னெப்போதும் இல்லாத வகையில், பரந்துபட்ட அளவிலே பயணங்களை மேற்கொண்டனர்.

இரண்டாம் நூற்றாண்டு துவங்கி, தொடர்ந்துவந்த சில நூற்றாண்டுகளிலேயே ஹதீஸ் கற்கும் மாணவரொருவர் அதனை சேகரிப்பதையிட்டு நெடுந்தூரப் பயணங்கள் மேற்கொள்ளவேண்டியது அத்தியாவசியமாகிவிட்டது. தொடக்கால அறிஞர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தமது சொந்த பிரதேசத்தின் அறிஞர்களிடமிருந்தே ஹதீஸ்களைக் கற்றுவந்தனர். இதனால், திறனாய்வுகளும் அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்துக்குள்ளேயே சுருங்கிவிட்டிருந்தன. எனினும், பிற்காலத்து முஸ்லிம்களின் நிலை அப்படியிருக்கவில்லை. அவர்கள், ஹதீஸ் கற்றுக்கொள்வதையிட்டு ஆயிரக்கணக்கான அறிஞர்களைத் தேடி இப்பூவுலகெங்கும் நெடும்பயணம் மேற்கொண்டனர். இதனால், திறனாய்வின் பரப்பெல்லையும் குறிப்பிட்டப் பிரதேசங்கள் மற்றும் அதன் அறிஞர்களைத் தாண்டி வெகுவாக விரிவடைந்தது.

ஹதீஸ் திறனாய்வின் முறைமை

ஹதீஸ்களின் கருப்பொருளைப் பொறுத்தவரை, அதுதொடர்பிலே பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டிருப்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வழிமுறைகளை, ஒற்றைத் தலைப்பின் கீழ் 'ஒப்பீடு' என்பதாக வகுத்துக்கொள்ளலாம். சம்பந்தப்பட்ட எல்லா ஹதீஸ்களையும் சேகரித்து, அவற்றைக் கர்மசிரத்தையுடன் ஒப்பீடுசெய்வதன் வாயிலாக அறிஞர்களின் மதியூகத்தை மதிப்பிடும் செயல்முறையாகும் இது.

தாபி'ஈன்களில் ஒருவரான அய்யூப் அல்-ஸக்தியானீ, மேற்படி செயல்முறைத் தொடர்பிலே பின்வருமாறு இயம்புவது வழக்கம், 'உமது ஆசிரியரின் தவறுகளை இனம்கண்டுகொள்ள வேண்டுமாயின், நீர் ஏனையோருடன் அமர வேண்டும்'. பிறிதொரு அறிஞரான இப்னு முபாரக்கும் இதுபோன்று, 'அதிகாரபூர்வ கூற்றைத் தெரிவுசெய்துகொள்ள வேண்டுமாயின், அறிஞர்கள் பலரது கூற்றை ஒப்பிட்டு நோக்க வேண்டும்.' என்பதாகக் கூறுவதுண்டு.

ஹதீஸ்களின் தரப்படுத்தல் பணியானது பெரும்பாலும் இவ்வழிமுறையிலேயே நிகழ்த்தப்பட்டது; இஸ்லாத்தின் தொடக்க காலகட்டத்திலிருந்தே இது பயன்பாட்டிலும் இருந்துவருகிறது.

ஒப்பீடுசெய்வதன் நிமித்தம் கையாளப்பட்டிருக்கும் வழிமுறைகளுள் சில பின்வருமாறு:

1.   ஒரே ஆசிரியரின் கீழ் கல்விகற்ற பல மாணவர்கள், தாங்கள் கற்றுக்கொண்ட ஹதீஸ்களை ஒப்பீடுசெய்தல்.

2.   ஒரே ஆசிரியரின் நாவில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முகிழ்த்த ஒரே கருப்பொருள் தாங்கிய கூற்றுகளை ஒப்பீடுசெய்தல்.

3.   நினைவிலிருக்கும் சேகரத்தையும், எழுத்து வடிவ சேகரத்தையும் ஒப்பீடுசெய்தல்.
4.       ஹதீஸ்களையும், அவை தொடர்பிலான குர்ஆன் வசனங்களையும் ஒப்பீடுசெய்தல்

அபூபக்கரும் ஒப்பீடும்

அபூபக்கரிடம்(ரழி) ஒருமுறை சென்று தனது கோரிக்கையை முன்வைத்த மூதாட்டி ஒருவர், தனது பேரன் விட்டுச்சென்ற சொத்திலிருந்து தனக்குக் கிடைக்கவேண்டிய பங்குகுறித்து வினவினார். அதற்கு அபூபக்கர்(ரழி), 'உங்களுக்குக் கிட்டவேண்டிய பங்குகுறித்து அல்லாஹ்வின் வேதத்தில் எந்தத் தகவலையும் நான் கண்டுகொள்ளவில்லை; அல்லாஹ்வின் தூதரும் இதுகுறித்து எதுவும் கூறியதாக நான் அறியமாட்டேன்.' என்றார். பின்னர் நபித்தோழர்களிடம் இதுகுறித்து வினவினார்.

'நபிகளாரின் கூற்றுப்படி, மூதாட்டிக்கு அச்சொத்திலிருந்து ஆறில் ஒரு பங்கு கிடைக்கும்' என்று முகீரா கூறினார். அதற்கு, 'உங்கள் கூற்றை ஊர்ஜிதம்செய்வதையிட்டு வேறு எவரேனும் இங்கு பிரசன்னமாகியிருக்கின்றனரா?' என்று அபூபக்கர் கேட்டார். அச்சமயம், முஹம்மது பின்-மஸ்லமா அல்-அன்ஸாரீ முகீராவின் கூற்றை ஊர்ஜிதப்படுத்தினார். இதனைச் செவியுற்ற அபூபக்கர், அந்த மூதாட்டிக்கு தனது பேரன் விட்டுச்சென்ற சொத்திலிருந்து ஆறில் ஒரு பங்கை வழங்கினார்.

நான்காம் நூற்றாண்டின் பேரறிஞரான அல்-ஹாகிம் மேற்படி நிகழ்வுகுறித்துப் பேசுகையில், 'நபிகளாரின் ஹதீஸை ஏற்று நடைமுறைப்படுத்துவதில் கர்மசிரத்தையுடன் செயல்பட்ட முதல் நபித்தோழர் அபூபக்கர் ஆவார்.' என்பதாகக் கூறுகிறார். அவர், நபிகளாரின்(ஸல்) ஸுன்னா ஒன்றைச் செவியுற்ற மாத்திரத்தில், அதனை அப்படியே கண்களை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளவில்லை; மாறாக, பிறிதொரு சாட்சியத்தினூடாக ஊர்ஜிதம்செய்துகொண்ட பின்னரே அதனை ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டார்.

உமரும் ஒப்பீடும்

இரண்டாம் கலீஃபா உமர்(ரழி), பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒப்பீட்டு முறைமையைக் கையாண்டிருக்கிறார். அபூ மூஸா அல்-அஷ்அரி ஒருமுறை உமரின் வீட்டுக்கு விஜயம்செய்தார். அங்கே, வீட்டு வாசலில் நின்றுகொண்டு மும்முறை சலாம் கூறினார். பதில் கிடைக்காததால் திரும்பிச் செல்ல அவர் ஆயத்தமானார். அத்தருணத்தில், உமரிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. 'அபூ மூஸாவே, உம்மை வீட்டினுள் பிரவேசிக்கவிடாமல் தடுத்தது எது?' என்று அவரிடம் கேட்டார். இதற்கு, 'வீட்டுவாசலில் நின்றுகொண்டிருக்கும் உங்களில் ஒருவர், வீட்டினுள் இருப்பவரிடம் மும்முறை அனுமதிகோர வேண்டும்; அனுமதி கிடைக்காவிட்டால் அந்த இடத்தைவிட்டும் அகன்றுவிட வேண்டும் என்று நபிகளார் கூற நான் கேட்டிருக்கிறேன்.' என்பதாக அபூ மூஸா பதிலளித்தார். இதனைச் செவியுற்ற உமர், நபிகளாரின் பெயரால் முன்வைக்கப்பட்ட இக்கூற்றை ஊர்ஜிதம்செய்யாவிட்டால் அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரிக்கைவிடுத்தார். சற்றைக்கெல்லாம், தனது கூற்றுக்கு சாட்சிபகரும் விதத்தில் ஒருவரை அழைத்துவந்தார் அபூ மூஸா. அந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட உமர், 'நபிகளாரின் ஸுன்னாவை அறிவிப்புச்செய்வதில் ஒவ்வொருவரும் கர்மசிரத்தையுடன் செயல்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவே நான் இவ்வாறு நடந்துகொண்டேன்.' என்பதாக அபூ மூஸாவுக்கு அறிவுரை வழங்கினார்.

அபூஹுரைராவும் ஒப்பீடும்

அபூஹுரைரா(ரழி) ஒருமுறை நபிகளார்(ஸல்) கூறியதாக, 'ஜனாஸா தொழுகை நிறைவேற்றப்படும்வரை மரணித்தவரின் பூதவுடலுடன் இருப்பவருக்குறிய நன்மை ஒரு கீராத் ஆகும்; அந்த உடல் அடக்கம்செய்யப்படும்வரை காத்திருப்பவருக்குரிய நன்மை இரண்டு கீராத் ஆகும்.' என்ற ஹதீஸை அறிவிப்புச்செய்தார். இதனைச் செவியுற்ற அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி), நபிகளார்குறித்து அறிவிப்புச்செய்பவற்றில் கவனம் தேவை என்பதாக அவருக்கு எச்சரிக்கை விடுத்தார். சற்றைக்கெல்லாம், இப்னு உமரின் கரம்பிடித்து ஆயிஷாவிடம் அழைத்துச்சென்றார் அபூஹுரைரா. அங்கே ஆயிஷா(ரழி), அபூஹுரைராவின் மேற்படி கூற்றை உறுதிப்படுத்தினார்.

இதே வழிமுறையைத்தான், நபித்தோழர்களுக்குப் பின்னர் வந்த தாபி'ஈன்களில் பலரும் கையாண்டுவந்தனர். இதற்கு உதாரணமாக, இப்னு அபூ முலைகா, அஸ்-ஸுஹ்ரி, ஷுஅபா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

காலதாமதமான ஒப்பீடு

ஒருமுறை ஆயிஷா(ரழி), அப்துல்லாஹ் இப்னு அம்ரிடம் சென்று ஹதீஸ் கேட்டுவரும்படி தனது மருமகன் உர்வாவைப் பணித்தார். அதன்படி அவரும் அபுதுல்லாஹ்விடம் சென்று ஹதீஸ் குறித்து வினவினார். 'அறிவு எவ்வாறு இப்பூவுலகிலிருந்து அகற்றப்படும்?' என்ற வினாவுக்கு விடையளிக்கும் விதத்தில் வரும் வாக்கியம், மேற்படி செயல்முறையினூடாக அவர் கற்றுக்கொண்ட ஹதீஸ்களுள் ஒன்றுதான்.

அதன்பின் உர்வா, தான் கற்றுக்கொண்டவற்றில் அறிவுகுறித்த மேற்படி ஹதீஸை ஆயிஷாவிடம் வந்து ஒப்பித்தார். இந்த 'ஒப்பித்தல்' ஏனோ ஆயிஷாவைத் திருப்திபடுத்திடவில்லை. ஒரு வருடம் கழிந்துவிட்டிருந்த நிலையில், அப்துல்லாஹ் இப்னு அம்ரின் மீள்வருகை பற்றிய செய்தி ஆயிஷாவின் காதுகளுக்கு எட்டுகிறது. அவரிடம் மீளவும் சென்று ஹதீஸை, குறிப்பாக அறிவுகுறித்து முன்னர் வினவப்பட்ட அதே ஹதீஸை கேட்டுவரும்படி இம்முறையும் உர்வாவைப் பணிக்கிறார் ஆயிஷா. உர்வாவும் அப்படியே செய்கிறார்.

பின்னர் ஆயிஷாவிடம் திரும்பிவந்த அவர், அறிவுகுறித்து முன்னர் இயம்பிய அதே ஹதீஸை மாற்றங்கள் ஏதுமின்றி உள்ளபடியே அப்துல்லாஹ் அறிவித்திருப்பதாக அவரிடம் கூறுகிறார். இதனைச் செவியுற்ற ஆயிஷா, 'எனது அனுமானம் சரியென்றால், அவர் உண்மையையே உரைத்திருக்கின்றார். ஏனெனில், முன்பு கூறியவற்றில் இடைச்செருகலாக எதுவும் இணைக்கப்படவில்லை; வாக்கியங்களை வெட்டிச் சுருக்கவுமில்லை.' என்பதாகப் பதிலளித்தார்.

எழுத்தில் பதியப்பட்ட ஹதீஸ்களுடன் நினைவிலிருக்கும் ஹதீஸ்களின் ஒப்பீடு

இந்த ஒப்பீட்டு முறைமை தொடர்பில் இமாம் புஹாரி பின்வருமாறு இயம்புகிறார், 'இது ஒரு சரியான வழிமுறைதான். ஏனெனில், அறிஞர்களின் பார்வையில் நினைவாற்றாலைவிட எழுத்தில் பதியப்பட்ட திரட்டுகள் உறுதிமிக்கவை. உதாரணமாக, சில நேரங்களில் ஹதீஸொன்றை வாய்மொழியாகக் கூறிய ஒரு நபர், பின்னர் அதனை ஊர்ஜிதம்செய்வதையிட்டு தொகுப்புகளை நாடிச் செல்வார். வாய்மொழி ஹதீஸில் முரண்பாடுகள் எழுமாயின், தொகுப்பிலிருக்கும் வாசகமே ஆதரபூர்வமானதாக ஏற்றுக்கொள்ளப்படும்.'

அப்துர் ரஹ்மான் இப்னு உமர் ஒருமுறை, அபூஹுரைராவை ஆதாரமாகவைத்து ஹதீஸொன்றை அறிவிப்புச்செய்தார். இந்த ஹதீஸ், அபூஸயீத் வாயிலாகப் பெறப்பட்டது; ளுஹர் தொழுகையோடு தொடர்புடையது. அப்துர் ரஹ்மான் பிரஸ்தாபித்திருக்கும் இந்த அறிவிப்பை அபூஷுரைஹ் ஏற்க மறுத்துவிட்டார். இம்மறுப்பை மனத்தில் சுமந்துகொண்டு ஊர் திரும்பிய அப்துர் ரஹ்மான், தனது திரட்டுகளை நுண்ணாய்வுசெய்தார்; தன்மீதே பிழையிருப்பதாகப் பின்னர் உணர்ந்துகொண்டார். துரிதகதியில் இதுகுறித்து அபூஷுரைஹுக்குக் கடிதமொன்றையும் எழுதினார். தனது மாணவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பிற மாணவர்களுக்கும் இந்தத் தவறைச் சுட்டிக்காட்டும்படி வேண்டுகோள் விடுத்தார். நினைவிலிருக்கும் அறிவிப்பைவிட எழுத்தில் பதியப்பட்ட அறிவிப்புக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இந்த நிகழ்வினூடாகப் புலனாகிறது.

குர்ஆன் வசனங்களுடன் ஹதீஸ் ஒப்பீடு:

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்குப் பராமரிப்புப் பணம் வழங்குவது தொடர்பில், ஃபாத்திமா பின்த் கைஸ் ஹதீஸொன்றை அறிவிப்புச்செய்திருக்கிறார். அதனைக் குர்'ஆன் வசனங்களுடன் ஒப்பீடுசெய்துபார்த்த உமர்(ரழி), பொருத்தப்பாடு இல்லாத காரணத்தால் நிராகரித்துவிடுகிறார். ஆயிஷாவும்கூட இதே வழிமுறையைத்தான், பற்பலச் சந்தர்ப்பங்களில் பிரயோகித்துவந்திருக்கிறார்.

ஹதீஸ் திறனாய்வில் 'அக்ல்'-ன் (பகுத்தறிவின்) பங்கு

ஹதீஸ் திறனாய்வின் ஒவ்வொரு காண்டத்திலும் பகுத்தறிவு பயன்படுத்தப்பட்டுவந்துள்ளமையை அல்-முஅல்லிமீ-அல்-யமானீயின் கூற்றின் வாயிலாக நம்மால் அவதானிக்க முடிகிறது. ஹதீஸ் கற்றல், கற்பித்தல், அறிவிப்பாளர்களை மதிப்பீடுசெய்தல், ஹதீஸின் ஆதார வலுவை மதிப்பிடுதல் முதலான ஒவ்வொரு கட்டத்திலும் பகுத்தறிவு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நபிகளார்(ஸல்) வலதுபுறமாகச் சாய்ந்து உறங்குவதுகுறித்தும், உறங்கும்முன்பும் துயிலெழுந்த பின்பும் குறிப்பிட்ட சில பிரார்த்தனைகள் புரிவதுகுறித்தும், நீர் அருந்தும்போது குவளையை வலது கரத்தில் ஏந்தி மூன்று மிடர்களில் அருந்திவிடுவது குறித்தும் ஹதீஸ் நூல்கள் தகவல்களை எடுத்தியம்புகின்றன. இக்கூற்றுகள் அனைத்தையும் நாம் பகுத்தறிவு நோக்கில் அணுகினால், துயில்கொள்ள எத்தனிக்கும் ஒரு மனிதர் வானம் பார்த்தவராகவோ அல்லது வலது, இடதுபுறம் சாய்ந்தவராகவோகூட துயில்கொள்ளலாம். இது அவரவரின் சௌகரியத்தைப் பொறுத்தது. உறங்குவது, நீர் அருந்துவது, பிரார்த்தனைப் புரிவது போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட வழிமுறைதான் சாத்தியம் என்று எவராலும் அறுதியிட முடியாது. அறிஞர்கள், பகுத்தறிவு நோக்கில் ஹதீஸ்களை நுண்ணாய்வுக்கு உட்படுத்தியது இப்படித்தான்.

அல்-காதிப் அல்-பக்தாதீ கூறுவார்:

"வாசகங்கள் அனைத்தும் மூன்று வகைமைகளுக்குள் அடங்கிவிடும். பிழையெனக் கருதி நிராகரிப்பது அவற்றுள் ஒன்று. காரணம், பகுத்தறிவு (அக்ல்) அதனை ஏற்க மறுக்கின்றது."

இறைவன் நன்கறிந்தவன்!

No comments:

Post a Comment