Friday, December 1, 2017

அபூதர்(ரழி): 'சமூக அநீதி எதிர்ப்'பின் உத்வேகமூட்டும் குறியீடு! (பகுதி 1)

அபூதர்(ரழி): 'சமூக அநீதி எதிர்ப்'பின் உத்வேகமூட்டும் குறியீடு! 

(பகுதி 1: அறிமுகம்)

-    இமாம் முஹம்மது அல் ஆஸி

-    தமிழில்: சம்மில்



கலைச்சொற்கள்:

·         அலை: (அலைஹிஸ்ஸலாம் என்பதன் சுருக்க வடிவம்) இறைவனின் சமாதானம் அவர்மீது என்றென்றும் படரட்டுமாக (பொதுவாக நபிமார்களையோ அல்லது நபித்தோழர்களில் சிலரையோ பிரஸ்தாபிக்க நேரும் தருணங்களில் மொழியப்படும் கௌரவ வார்த்தை இது).

·         ஆயதுன் / ஆயத்: (பன்மை: ஆயாதுன்) குர்'ஆன் வசனங்களைக் குறிக்கப் பிரயோகிக்கப்படும் ஒரு பதம் / ஓர் அத்தாட்சி / இறை அதிசயம்.

·         இக்ரா': வாசிப்பீராக! என்ற பொருளில் வரும் குர்'ஆனிய கட்டளை.

·         இத்தகுல்லாஹ்: நேர்பொருள்: இறைவனை பயந்துகொள்ளுங்கள். இறை பிரக்ஞையைப் பேணிக்கொள்ள வேண்டிய முறைப்படி பேணிக்கொள்ளுங்கள்.

·         இஜ்திஹாத்: மனித பகுத்தறிவைப் பிரயோகித்து, நடைமுறைச் சூழல்களில் சந்திக்கநேரும் சட்ட சிக்கல்கள், பிரச்சினைகளுக்கான தீர்வுகளை   இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களிலிருந்து உருவிப்பெறும் செயல்முறை.

·         உம்மத் / உம்மதுன்: (பன்மை: உமமுன்) வெகுஜனம் / ஒரு சமூகம் / ஒரு இனம் / (ஒரே மதத்தைச் சேர்ந்த இருவேறு) குழுக்கள்.

·         க'பதுல்லாஹ்: மக்கா நகரில் இருக்கும் அல்லாஹ்வின் இறை இல்லம்.

·         கலீஃபா: இறைத்தூதரின் பிரதிநிதி (கலீஃபதுர் ரஸூல்) என்ற அந்தஸ்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பரிபாலனைசெய்யும் ஆட்சியாளர்.

·         ஃகுத்பா: ஜும்'ஆ பிரசங்கம்.

·         தகஷ்ஷுஃப்: கறாரான, கண்டிப்பான, கட்டுத்திட்டத்துடன்கூடிய வாழ்க்கைப் போக்கு.

·         நசரானி: (பன்மை: நசாரா) கிறிஸ்தவன்.

·         அஷ்-ஷாம்: சமகால சிரியா, ஜோர்டான், லெபனான், ஃபலஸ்தீன் ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு.

·         ஃபிக்ஹு: இஸ்லாமிய சட்டவியல்.

·         ஃபுகஹா: (ஒருமை: ஃபகீஹ்), நேர்பொருள்: இஸ்லாமிய சட்டவியல் அறிஞர்கள். விரிவானப் பிரயோகத்தில், இஸ்லாமிய மார்க்க மேதைகளுக்கும் இது பொருந்தும்.

·         மிஸ்ர்: சமகால எகிப்து நாட்டின் ஒரு பகுதியை உள்ளடக்கிய நிலப்பரப்பு.

·         முஜ்தஹிது: இஜ்திஹாத் மேற்கொள்ளத் தகுதிபடைத்த அறிஞர்.

·         முஷ்ரிக்: (பன்மை: முஷ்ரிக்கீன் / முஷ்ரிக்கூன்) நேர்பொருள்: இறைவனுக்கு இணை கற்பிப்பவர். ஷிர்க் குற்றத்துக்கு உரித்தானவர். (பார்க்க: ஷிர்க்).

·         யஹீதி: (பன்மை: யஹூத்) யூதன்.

·         ரழியல்லாஹு அன்ஹும்: இறைவன் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக.

·         ஜம்ஜம்: மக்கமா நகரில் இருக்கும் இறை இல்லமான க'பதுல்லாஹ்வில் சாசுவதமாகச் சுரந்துகொண்டிருக்கும் புனித நீரூற்று.

·         ஷிர்க்: நேர்பொருள்: இறைவனுக்கு இணை கற்பித்தல். இறைவனின் நிலையிடத்தில் அவனுக்குப்பகரமாக பிறிதொரு பொருளையோ நபரையோ கொள்கையையோ சரிநிகர் சமானமாக நிலைநிறுத்திக்கொள்வது. (இங்கே இறைவனின் நிலையிடம் என்பது, வணக்க வழிபாடுகள், சடங்கு சாங்கியங்களில் அவனைச் சேவிப்பதைக் குறிப்பது மட்டுமல்ல. மாறாக, அவனது திருநாமங்கள் உணர்த்திநிற்கும் பண்புகளைக் குறிப்பதும்கூட).

·         ஸுஹுது: லௌகீக அலங்காரங்கள், அபிலாஷைகள், சபலங்களைத் துறந்துவாழும் கறாரான வாழ்க்கை நெறி. இவ்வாழ்க்கை நெறியின் பின்பற்றாளரைச் சுட்டுவதற்கு அரபிமொழியிலே ஸாஹித் என்ற பதம் பிரயோகிக்கப்படுகிறது.

·         ஹதீஸ்: இறைத்தூதரின்(ஸல்) சொல், செயல், அங்கீகாரம் அடங்கிய மரபுரீதியான அறிவிப்பு.

·         ஹிஜாஸ்: மக்கா, மதீனா ஆகிய இரு புனித ஸ்தலங்களை உள்ளடக்கிய அரேபிய தீபகற்பத்தின் நிலப்பரப்பு.

அபூதர்(ரழி): 'சமூக அநீதி எதிர்ப்'பின் உத்வேகமூட்டும் குறியீடு!
(பகுதி 1: அறிமுகம்)


மனித சமூகத்தில் மிகத்தீவிரமான, குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்திய காலகட்டம்தான் நமது முதல் தலைமுறையின் காலகட்டம். அம்மாற்றங்களின் வீச்சானது, அக்கால அரேபியத் தலைமுறைகள்மீது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் வரவிருந்த சமூகங்கள் என்றரீதியிலே நம்முடைய சமூகங்கள்மீதும் அளப்பரிய செல்வாக்கை ஏற்படுத்திற்று. தவிரவும், நமக்குப் பின்னர் முகிழ்க்கவிருக்கும் தலைமுறைகள்மீது மிதமிஞ்சிய செல்வாக்கைத் தக்கவைக்கப்போகும் ஒரு காலகட்டமாகவும் இது உணரப்படுகின்றது.

இந்தக் காலகட்டத்தை வெவ்வேறு பகுப்புகளாகப் பிரித்துக்கொள்ளலாம். ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும்கூட, மேற்படி வரலாற்றுக் காலகட்டத்திலிருந்து படிப்பினைகளைப் பெற இயலாதவர்களாகவே இதுகாறும் முஸ்லிம்கள் இருந்துகொண்டிருக்கின்றனர். இது அரேபியாவின் அசமந்தம் மட்டுமல்ல, இப்பூவுலகின் மற்றனைத்து 'இஸ்லாமிய' பாகங்களின் சிந்தனைத் தேக்கநிலையும்கூட.

اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ

“அல்லாஹ்வே பற்றுறுதிகொண்டவர்களின் பாதுகாவலன்; சீர்திருத்தவாதி; வழிகாட்டி; கல்வியாளன். அவர்களை அந்தகாரம் மற்றும் இருண்மையின் காலநேரம், மனோபாவங்கள், சமூகங்களிலிருந்து விடுவித்து அறிவொளியின், ஞானத்தின் மனோபாவங்கள் மற்றும் சமூகங்களுக்கு அவன் இட்டுச்செல்கிறான்.”
(அல் குர்'ஆன் 2:257)

சகோதர, சகோதரிகளே! நாம் கற்றுணர்ந்துகொள்ள வேண்டும்; 'தக்வா'வின் குணாதிசயத்தை நாம் மீட்கொணர வேண்டும்; அதனைப் பற்றிப்பிடித்தே ஆகவேண்டும். அதாவது, அல்லாஹ்வின் அதிகாரமும் அவனது சர்வவல்லமையும் மட்டும்தான் நமது பிரக்ஞையை ஆட்படுத்திடும் கூறுகளாக அமைந்திருக்கவேண்டும். இவற்றுக்கு முன்னால் மற்றனைத்து அதிகாரங்களும் துச்சம். இதுதான் 'தக்வா'வின் ஆணிவேர்!

லௌகீக அதிகாரங்கள், அதன் செல்வாக்குகள், அரசாங்கங்கள், ஆட்சியாளர்கள், அரச பரம்பரைகள், வம்சாவளிகள், இராணுவங்கள் முதலானவற்றைக் கொண்டு எங்களை அச்சுறுத்த முயலாதீர்கள். இவை அனைத்துமே நமது மனங்களை நீர்த்துப்போகச் செய்துகொண்டிருக்கின்றன; நமது சமூகங்களின் வீரியமிகு இயக்கத்துக்கான முட்டுக்கட்டையாய்த் திகழ்ந்துகொண்டிருக்கின்றன. இப்படிக் கீழடங்கிச் சென்றுசென்றே நாம் தரைமட்டத்தை எட்டிவிட்டோம். இதற்குமேல் நம்மால் சீரழிய இயலாது. நாம் கண்திறந்து பார்ப்பதற்கும் செயல்பாடுகளை நோக்கி நம் மனங்களை முடுக்கிவிடுவதற்குமான காலம் இன்னும் கனிந்துவிடவில்லையா என்ன?

நமது வரலாற்றை புறவயமான, நாணயமான, திறந்த மனத்துடன் இப்பொழுது நாம் மீளாய்வுக்கு உட்படுத்துவோம். பிரிவினைக்கு இட்டுச்செல்லும் 'உணர்ச்சிவய'க் கூறுகளிலோ எதிர்படுதலுக்கு வழிகோலும் கடும்போக்குவாதங்களிலோ பிறரைக் களங்கம் உள்ளவர்களாகவும் தங்களை மாசுமறுவற்றவர்களாகவும் உருமாற்றிவிடும் தன்முனைப்புடன்கூடிய 'புனிதவான்க'ளின் விவகாரங்களிலோ நாம் மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் இல்லை.

நெடுங்காலமாகவே இத்தகைய விவகாரங்களைக் கொண்டுதான் நமது காலத்தையும் நேரத்தையும் நாம் விரயம் செய்துகொண்டிருக்கிறோம். நமது கால, நேரங்களை இத்தகைய விவகாரங்கள் ஒட்டுமொத்தமாகக் கபளீகரம் செய்துவிட்டன. எந்த அளவுக்கெனில், அகவயப் பார்வையுடன் நம்மை நாமே பரிசீலனைச் செய்துகொள்வதற்கான தகுதிகூட நம்மிடம் இப்பொழுது இல்லாமல் போய்விட்டது.

நம்மில் ஒருவரின் நிலைப்பாடு சரி என்றால், அதனை நாம் மனமுவந்து ஆமோதிப்போம்; விதந்து கூறுவோம்; கண்ணியப்படுத்துவோம். அதுவே தவறாகிப்போனால் அதனை இனங்கண்டுகொள்வோம்; அழகிய முறையில் சுட்டிக்காட்டுவோம்; பிழைகளைச் செப்பம்செய்ய முயற்சிசெய்வோம். நாம் செய்யவேண்டியது இதுதான்.

“ஒரு முஸ்லிமுக்கும் பிறிதொரு முஸ்லிமுக்கும் இடையிலான உறவுமுறை என்பது ஒரே நிர்மாண அமைப்பைப் போன்றது; அவற்றின் ஒவ்வொரு பாகங்களும் இன்னபிற பாகங்களைத் தாங்கிப் பிடித்தவண்ணம் இருக்கும்.”

அல்லாஹ்வின் தூதரைச் சூழவிருந்த நம்முடைய முதல் தலைமுறை முஸ்லிம்களின் வாழ்க்கையை இப்பொழுது பரிசீலனைக்கு உட்படுத்துவோம். மரபார்ந்த பின்னணியிலிருந்து அல்லது தத்தம் மரபுகளை மேலோங்கச்செய்ய வேண்டும் என்ற 'விடாக்கண்டர்'களின் நிலைப்பாட்டிலிருந்து இவ்வரலாற்றுப் பாடத்தை நாம் அணுகப்போவது கிடையாது. இப்படிப்பட்ட அணுகுமுறைதான் நம்மில் சிலரை ஒரு துருவத்திலும் இன்னும் சிலரைப் பிறிதொரு துருவத்திலும் எதிராளிகள்போல நிறுத்திவைத்திருக்கிறது. பரஸ்பர நெகிழ்வுத்தன்மையுடன் ஒருவரோடு ஒருவர் இணைந்து பணியாற்றுவதற்குத் தேவையான தகுதியை இந்த இரு சாராருமே இழந்துவிட்டிருக்கின்றனர்.

இன்றுபோலவே, அனைத்து வாரங்களிலும் பரிமளம் கமழச்செய்யும் இந்த நாள் - ஜும்'ஆ நாள் - 'தக்வா'வுக்கான நாள். இந்த நன்னாளில், அல்லாஹ்வின் சர்வவல்லமையும் அதிகாரமும் மட்டுமே நமது பிரக்ஞையை ஆட்படுத்தியிருக்க வேண்டும். மற்றவர்களின், மற்றவைகளின் அதிகாரங்களெல்லாம் இங்கே அற்பம்! 

மைய விவகாரத்துக்குள் இப்பொழுது பிரவேசிப்போம். நேரம் மிகச் சொற்பமாகவே இருக்கிறது. இந்தச் சொற்ப நேரத்தில், ஆரம்பகால வரலாற்றின் சில இன்றியமையாத விவகாரங்கள் மீதும், அவ்விவகாரங்களில் ஆதிக்கம்செலுத்திய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மனிதர் மீதும் இயன்றமட்டும் வெளிச்சம்பாய்ச்ச முயல்வோம்.

அல்லாஹ்வின் தூதரது வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில், அதாவது, அவர்களின் பால்யம் மற்றும் பதின்பருவத்தில், அரேபிய தீபகற்பமானது ‘மதப்பற்று’ கொண்டிருந்த ஒரு சிறுபான்மைக் கூட்டத்தினரின் வாழிடமாகத் திகழ்ந்துவந்தது. இந்தச் சிறுபான்மையினரை நாம், முஷ்ரிக்கீன்’ என்று பொத்தாம் பொதுவாகக் கட்டம்கட்டிவிட முடியாது. 'முஷ்ரிக்கீ'னின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணத்தின் எல்லைக்கோட்டுக்கு வெளியே நிற்பவர்கள் இவர்கள். இவர்கள் வேறு யாருமில்லை, யஹீதிகள், நசரானிகள்!

இவர்களில் சிலர், மதீனாவிலும் யெமனிலும் அரேபிய தீபகற்பத்தின் வடக்குப் பகுதிகளிலும் வசித்துவந்தனர். இவர்களைப் போலவே, அரேபிய தீபகற்பத்தை வாழிடமாக வரித்துக்கொண்டிருந்த பிறிதொரு சிறுபான்மையினரையும் நம்மால் இனங்கண்டுகொள்ள முடிகிறது. இக்கூட்டத்தார் 'அல்-ஹனீஃபிய்யா' என்று அழைக்கப்பட்டுவந்தனர். இப்ராஹீம்(அலை), இஸ்மாயீல்(அலை) ஆகியோரின் காலகட்டத்திலிருந்து தப்பிப்பிழைத்து வந்திருந்த ஒழுகலாறுகள், சடங்கு-சாங்கியங்களின் மீதமிச்சத்தைத்தான் இவர்கள் பின்பற்றிக்கொண்டிருந்தனர். காலம் கடந்துவந்திருந்த இந்த வழக்காறுகளை, அல்-ஹிஜாஸ் மற்றும் அரேபியாவின் அற்பசொற்பமான மக்கள் தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டிருந்தனர்.

ஹனீஃபிய்யா மரபைப் பின்பற்றி ஒழுகிக்கொண்டிருந்த பல்வேறு கோத்திரங்களுள் ஒன்றுதான் அபூதர்ரின்(ரழி) கோத்திரம். அஷ்-ஷஹ்ர் அல்-ஹராம் என்ற வருடத்தின் நான்கு புனித, யுத்தம் புரியத் தடைவிதிக்கப்பட்ட மாதங்களின் வரம்புகளை ஏனோ இவரது கோத்திரத்தால்மட்டும் பேணிநடந்துகொள்ளவே இயலவில்லை. இப்ராஹீம்(அலை) அவர்களின் காலத்தில்தான், இந்த நான்கு புனித மாதங்களுக்கும் அஷ்-ஷஹ்ர் அல்-ஹராம்’ என்ற சிறப்பந்தஸ்து வழங்கப்பட்டது. பின்னர், குர்'ஆன் ஆயத்துகள் வாயிலாக நபிகளார்(ஸல்) காலத்தில் அது மீள்ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ 


"திண்ணமாக, அல்லாஹ்வின் குறிப்பேட்டில், வானங்கள், பூமியைப் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கைப் பன்னிரண்டாக உள்ளது; அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமிக்கவை. இதுவே நேரானப் பாதை ஆகும்."
(அல் குர்ஆன் 9:36)

இவ்வாறாக, மேற்படி கோத்திரம்மட்டும் அஷ்-ஷஹ்ர் அல் ஹராம் மாதத்தின் புனிதத்தைத் தொடர்ந்து களங்கப்படுத்திக்கொண்டே இருந்தது. ஏனெனில் இவர்கள் சுதந்திர ஆன்மாக்கள். இவர்களின் இயக்கவியலை இன்று நாம் சவூதி அரேபியா என்கிற அரசியல் கோத்திரத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். இந்தக் கோத்திரமும் அஷ்-ஷஹ்ர் அல் ஹராமை முந்தைய நாள்களில் பலமுறைக் களங்கப்படுத்தியிருக்கிறது. எனினும், பெரும்திரள் முஸ்லிம்கள் இங்கே காற்றடிக்கும் திசையில் கரைந்துபோகிறவர்களாக இருக்கும்பட்சத்தில், இதுகுறித்த விழிப்புணர்வை நம்மால் எப்படி ஏற்படுத்திட முடியும்?

'அஷ்-ஷஹ்ர் அல் ஹராம்' பற்றிய தன்னுணர்வைக்கூட நம்மில் பலரால் இன்று தக்கவைத்துக்கொள்ள இயலவில்லை. ஆனால், அந்தக் காலத்திலேயே அபூதர், அவருடைய சகோதர், தாய் ஆகியோர் இவ்விவகாரத்தைத் துலக்கமாகக் கையாண்டுவந்திருக்கின்றனர். அஷ்-ஷஹ்ர் அல் ஹராமை களங்கப்படுத்திவிடக்கூடாது என்கிற ஒரே காரணத்துக்காக அவர்கள் தங்கள் சொந்தக் கோத்திரத்துடனான உறவுமுறைக்கே முழுக்குப்போட்டுவிட்டனர். இன்றைய காலகட்டத்திலே, தான் சார்ந்திருக்கும் யதேச்சதிகாரக் குடும்பக் கட்டமைப்பு அல்லாஹ்வின் கட்டளைகளையும், அவனது ஏவல் விலக்கல்களையும் பட்டவர்த்தனமாக மீறிக்கொண்டிருக்கிறது என்பதைத் தன்னுணர்வுள்ள ஒரு சவூதி பிரஜை உணர்ந்துகொள்வாரேயானால், சவூதி சர்வாதிகாரத்துக்கு உட்பட்ட நிலப்பரப்பிலிருந்து அவர் துரிதகதியில் வெளியேறிவிடுவார். இப்படிப்பட்ட தான்தோன்றித்தனமான, யதேச்சதிகார அமைப்புமுறையின் கீழ் நிச்சயம் அவரால் காலம்தள்ள இயலாது. அபூதர்ரின் விவகாரமும் அதுபோன்றுதான்.

அபூதர்ரால் அவரது கோத்திரத்துடன் ஒத்திசைவு காண இயலவில்லை. அவர்களின் 'கோத்திர ஒருமைப்பாடு' ‘Clannish Solidarity’ நிலைப்பாட்டை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால், அவர்களைவிட்டும் தன்னை முற்றுமுழுதாகச் சேய்மைப்படுத்திக்கொண்டார். திண்ணமாக இதற்கு நெஞ்சுரம் தேவை. எல்லோராலும் இதனைச் செய்துவிட முடியாது. சில மனிதர்களால் யதார்த்தத்தை மெய்யுணர்ந்துகொள்ள முடியும். ஆனால், எதிர்நீச்சல்போடுவதற்கும் சுதந்திரமான மனத்துடனும் மனசாட்சியுடனும் வாழ்ந்திடுவதற்குத் தோதான எதிர்வினையை ஆற்றுவதற்கும் அவர்களால் இயலாமல்போய்விடும்.

மக்கமா நகரையே கொந்தளிப்புக்கு ஆட்படுத்தியிருந்த காலச்சூழல் அது. 'மக்காவில் ஏதோ விந்தை அரங்கேறிக்கொண்டிருக்கிறது' என்ற செய்தி, எட்டுத்திக்கும் பரவிப் படர்ந்ததுபோல், மக்காவுக்கு வெளியே வடக்குத் திசையின் ஒரு பகுதியை நோக்கியும் பரவிச்செல்கிறது. செய்தியைச் செவியுற்ற மறுகணமே, மக்காவின் வினோதச் சூழல் குறித்து அறிந்துவருவதற்காக அனீஸ் என்ற தன்னுடைய சகோதரரை அங்கே அனுப்பிவைக்கிறார் அபூதர். முன்னவரும் அவ்வாறே தன்னால் இயன்ற தகவல்களை அங்கிருந்துச் சேகரித்துக்கொண்டு வருகிறார். 'மக்காவிலே ஒரு விஷமி சூழ்ச்சி செய்துகொண்டிருக்கிறார்' என்பதாக மக்கத்துச் சமூகம் கறுவிக்கொண்டிருக்கிறது என்கிற தகவலை அபூதர்ரிடம் அவர் தெரிவிக்கிறார்.

நபிகளாரைத்தான் அவர்கள் "விஷமி" என்று அங்கே தூற்றிக்கொண்டிருந்தனர். இந்த "விஷமி"யான முஹம்மதுக்கு(ஸல்) அவர்கள் "சப்'யீ" என்கிற பிறிதொரு பெயரையும் சூட்டியிருந்தனர். இன்றைய வட்டார வழக்கில் கூறுவதென்றால், அந்தச் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் உங்களைப் பார்த்து, 'நீ ஒரு சப்'யீ' என்று கூறினால், 'நீ ஒரு துரோகி; உண்ட வீட்டுக்கு இரண்டகம்செய்யும் கயவன்' என்று கூறுவதைப்போன்று இரண்டும் அர்த்தத்தில் சமமானதே.

அபூதர்ரின் சகோதரர் அனீஸ் மக்காவைச் சென்றடைந்தத் தருணத்தில், அதன் கொந்தளிப்பான சூழலின் தகிப்பைத் தன்னுள் இயல்பாகவே அவர் உணரத்தொடங்கினார். அதுபோது அவர் சுற்றுமுற்றும் உசாவினார். 

'அந்த மனிதர் யார்?'

'அவர் ஒரு ‘சாஹிர்'’ என்றனர் சிலர்.

இப்படி ஒவ்வொரு சாராருமே, 'அவர் ஒரு காஹின், கத்தாப், மஜ்னூன்...' என்பதாக வசைமொழிகளை அடிக்கொண்டே சென்றனர்.

அதாவது, அவர் ஒரு செப்பிடுவித்தைக்காரர், சூனியக்காரர் அல்லது மனநிலைப் பிசகியவர் அல்லது மதம்சார் ஒழுகலாறுகளை எங்கிருந்தோ கற்றுக்கொண்டு வந்திருப்பவர் போன்ற கடுகடுத்த வசவுச்சொற்களை அவர்மீது வீசி எறிந்தனர். இதன் வாயிலாக, நபிகளாரின் தூதுச்செய்தி உணர்த்திய உள்ளீட்டிலிருந்து வெகுஜன கவனத்தை மடைமாற்றுவதற்கு அவர்கள் வெகுவாகப் பிரயத்தனப்பட்டனர்.

ஆக, அனீஸ் தன்னுடைய சகோதரரிடம் திரும்பிவருகிறார். மக்காவிலே ஊடாடிநிற்கும் அசாதாரணச் சூழலின் யதார்த்தத்தை அவரிடம் துல்லியமாக எடுத்தியம்புகிறார். இந்த அசாதாரணச் சூழலும் மனித மனங்களைக் கவர்ந்திழுக்கும் அதன் அளப்பரிய விசையும் மக்காவைத் தாண்டி வெளியில் சென்றுவிடக்கூடாது என்பதில் மக்காவாசிகள் சிரத்தையுடன் இருந்தனர். வெளிப்பகுதி மக்கள் இந்தத் தகவலை அறிந்துகொள்வதில் மக்காவாசிகளுக்கு உடன்பாடு இல்லை.

இத்தகைய நடத்தைகள் ஒன்றும் பிரத்தியேகமானது அல்ல. நம் காலத்திலும் இதுதான் நிலைமை. உங்கள் அகக்கண்களை சற்றுத் திறந்துப் பாருங்கள். 'நியாயங்க'ளின் கிளர்ச்சியானது அதிகார வர்க்கத்தின் கழுகுப் பார்வையில் எங்கேனும் தென்பட நேரிட்டால், யதேச்சதிகாரிகள் அதனை வெளிதெரியாதவாறு ஒடுக்கிவிட முற்படுவார்கள்; அவச்சொல்லினூடாக அதனைக் களங்கப்படுத்திடுவார்கள்; இழிவானப் பட்டப்பெயர்களை அதற்குச் சூட்டிவிடுவார்கள். அல்லாஹ்வின் தூதரால் மொழியப்படும் நியாயங்கள் ஆகட்டும்; அவருடைய சமகாலப் பிரதிபலிப்பாய்த் திகழும் நம் காலத்து மாந்தர்களால் மொழியப்படும் நியாயங்கள் ஆகட்டும், அதிகார வர்க்கத்துக்கு இரண்டுமே சமானம்தான். அவற்றை மேலெழும்ப விடாமல் முடக்கிப்போடுவதுதான் அதிகார வர்க்கத்தின் முதன்மை இலக்கு.

மக்காவின் நிகழ்வுகள் குறித்த தனது சகோதரனின் விவரணைகளை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்த அபூதர்ரின் மனத்தினுள் மக்கா செல்லவேண்டும் என்ற எண்ணம் அனிச்சையாகவே முகிழ்க்கிறது. 'நானே நேரடியாக மக்காவுக்குச் சென்று அங்கே நடந்துகொண்டிருப்பவற்றை கண்டுவரப்போகிறேன்' என்பதாகக் கூறுகிறார். அப்படியே செய்கிறார். மக்காவுக்குச் செல்கிறார்; அங்கே க’பத்துல்லாஹ்வை தனது வாழிடமாக வரித்துக்கொள்கிறார்.   

இப்படி, அந்தக் கால விவகாரங்கள் பலவற்றை நாம் பன்முறைக் கடந்துவந்திருக்கிறோம் என்கிற நிலையில், மக்காவுக்கும் க’பதுல்லாஹ்வுக்கும் பிரயாணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு அவை வரையறுக்கப்பட்டிருக்கின்றன என்று பிரகடனம்செய்யும் எந்த ஒரு தகவலையும், சொல்லப்போனால், அற்பசொற்பமான தகவலைக்கூட இதுகாறும் நாம் கடந்துவந்திருக்கவில்லை அல்லது வாசித்திருக்கவில்லை.

அபூதர்ரின் வாழ்க்கை நிகழ்வே இதற்கான முதன்மைச் சான்று. விவகாரத்தின் உண்மைநிலையை தானே நேரில் சென்று கண்டடைய வேண்டும் என்ற உள்ளக்கிடக்கைக்குச் சொந்தக்காரர்தான் அபூதர். அதனால், யாருடைய தயவும் இன்றி தானே க’பாவுக்குச் செல்கிறார்; சூழவும் நோட்டம்விடுகிறார்; அங்குள்ள நிலவரங்களை ஆய்ந்தறிகிறார். தனது சிந்தைத் திறன் குறித்தெல்லாம் அவருக்குக் கவலையில்லை; என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும், அவ்வளவுதான்.

முழுமையாக ஒரு மாதகாலம் க’பத்துல்லாஹ்விலேயே அவர் தங்கிவிடுகிறார். அந்த ஒரு மாதமும் ஜம்ஜம் நீராதாரம்தான் அவரது உணவாக இருந்தது என்று வரலாற்றுத் தரவுகள் சான்று பகர்கின்றன. ‘மகாத்மியம் பொருந்தியது’ என்று தான் கருதிக்கொள்ளும் ஒன்றைத் தேடிக் கண்டடைந்துகொள்வதில் ஒரு மனிதனின் ஆத்மசுத்தியையும் மனோதிடத்தையும் பாருங்கள். ஜம்ஜம் நீர் மட்டும்தான் ஒருமாதகாலமும் அவரது உணவு! தவிரவும், துணைவன் என்று சொல்லிக்கொள்ள தன்னுடன் யாரும் இல்லாத நிலையில்தான் இந்த ஒருமாதகாலத்தையும் அவர் கழித்திருக்கிறார்.

இந்தச் சங்கல்பம்தான் அவரை அறுதியாக அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறது; பற்றுறுதிகொண்ட ஒரு முஸ்லிமாக அவரை உருமாற்றுகிறது; நபிகளாரின் அன்புக்குப் பாத்திரமானவராக அவரை மிளிரச்செய்கிறது.

இவ்வார்த்தைகளை நாம் இயம்பும் வேளையிலே, நூற்றாண்டுகள் கடந்துவந்திருக்கும் கடும்போக்குவாத சார்புநிலைத் தகவல்களால் நிரம்பிவழியும் மனோபாவங்கள் பலவற்றினூடாக நாம் பிரயாணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைத் துலக்கமாக நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. நான் முன்னர் இயம்பியிருப்பதை மீளவும் இங்கே நினைவுபடுத்துகிறேன். இந்த விவகாரங்களை எல்லாம் நம் மனத்தைக்கொண்டும் சிந்தையைக்கொண்டும் அணுகிடவேண்டுமே தவிர நம் மரபுகளைக்கொண்டும் உணர்ச்சிகளைக்கொண்டும் அணுகிடக்கூடாது.

அல்லாஹ்வின் தூதருடைய சஹாபிகளுள் ஒருவரான இந்த மனிதரின் வாழ்க்கை நிகழ்வுகளை நீங்கள் கடந்துவரும் தருணங்களிலெல்லாம், அலாதியான பாணியிலே அல்லாஹ்வின் தூதர் இவரைக் கண்ணியப்படுத்தியிருப்பதை நீங்கள் இனங்கண்டுகொள்வீர்கள். தன்னைச் சூழவும் வீற்றிருப்பவர்களுடன் உட்கார்ந்துகொண்டு சில நேரங்களிலே அல்லாஹ்வின் தூதர் சம்பாஷிப்பது வழக்கம். அப்பொழுது அபூதர் அங்கே இல்லாததை அவர் உறுதிப்படுத்திவிட்டால், 'எங்கே அபூதர்?' என்று கரிசனையுடன் உசாவுவார்.

அபூதர்ரை கண்ணியப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ள ஹதீஸொன்றை இங்கே பிரஸ்தாபிக்கிறேன். அந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) பின்வருமாறு இயம்புகிறார்:

"அபூதர்ரைவிட இயல்பான, திராணியுள்ள, வெளிப்படைப் பேச்சுக்காரர் வேறெவருக்கும் எந்த ஒரு விருட்சமும் இதுகாறும் நிழல் கொடுத்ததில்லை; எந்த ஒரு நிலப்பகுதியும் இதுகாறும் வாழிடம் வழங்கியதில்லை."

இந்த ஹதீஸ், உட்பிரிவுவாதங்கள் அனைத்தையும் சடுதியாகப் பின்னுக்குத் தள்ளுகிறது. தவிரவும், இது ஏதோ ஒருசில உட்பிரிவுகள், மத்ஹபுகள், முஜ்தஹிதுகள், ஃபுகஹாக்களின் ஏகபோகமும் அல்ல. மாறாக, இது இஸ்லாத்தின் அடிப்படையை நோக்கி நம்மை மீளச்செய்கிறது. ஆதலால், அனைத்துத் தரப்பினரும் இதற்கு உரிமை கோரலாம்; ஏகமனதாக இதனை ஏற்றுக்கொள்ளவும் செய்யலாம்.

தன்னுடைய சமகாலத்தவர்களுக்கு மத்தியிலே, 'சாதிக் அல்-லஹ்ஜாஹ்' என்ற சிறப்புப் பெயர்கொண்டு அழைக்கப்பட்டுவந்தவர்தான் அபூதர்(ரழி). இதனை, புழக்கத்திலிருக்கும் சாமானிய மொழியில் கூறுவதென்றால், 'தனது அபிப்பிராயங்களைப் பொட்டில் அடித்தாற்போல் வெளிப்படுத்துபவர்' என்று பொருள்.

அபூதர் தொடர்பிலான பிறிதொரு நிகழ்வையும் இவ்விடத்திலே பிரஸ்தாபிப்பது ஏற்புடையதாக இருக்கும் எனக் கருதுகிறேன். அரேபியாவின் வடக்குப் பகுதியிலே, பைஸாந்தியர்கள் என்று அறியப்படுபவர்கள் அந்தக் காலத்தில் 'வெல்லமுடியாத ஒரு வல்லதிகார'மாகக் கோலோச்சிக்கொண்டிருந்தார்கள். இவர்களை எதிர்த்துப் போர் புரிவதற்கான யுத்த முஸ்தீபுகளிலே முஸ்லிம்கள் தங்களை மும்முரமாக ஈடுபடுத்திக்கொண்டிருந்த தருணம். நபிகளார்(ஸல்), தானே முன்னின்று முஸ்லிம்களின் போர்ப்படையை வழிநடத்திச் செல்வதென தீர்மானித்திருந்தார்கள். 

அச்சமயம், தனக்கு அணுக்கமான சிலரினூடாக சிற்சில தகவல்கள் அவரது செவிகளை எட்டியவண்ணம் இருக்கின்றன. 'இன்னார் யுத்தத்துக்கு வரவில்லை.', 'இன்ன நபர் இதுகாறும் தனது பிரசன்னத்தை ஊர்ஜிதம்செய்யவில்லை; அவர் வரமாட்டார் போலிருக்கிறது.' போன்ற முணுமுணுப்புகள் காற்றில் கலந்த ரீங்காரங்களாய் எட்டுத்திக்கும் ஒலித்துக்கொண்டிருந்தன.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக நபிகளார்(ஸல்) பின்வருமாறு இயம்பினார்கள், 'ஒரு மனிதர் தன்னெழுச்சியாக இந்த யுத்தத்தில் பங்கெடுத்துக்கொள்வார் எனில், அவருக்கு எனது வாழ்த்துகள்! ஏனெனில், அவரது இந்த நடவடிக்கை சுய-விருப்பத்தின், சுய-ஊக்குவிப்பின் அடிப்படையில் ஆனது.'  

இவ்வார்த்தைகளை நாம் சரியானக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள முனைவோம் எனில், அதன் அடிநாதம் இப்படித்தான் அமையும்: 'அவர்களது பிரச்சன்னத்தின் உபத்திரவங்களைவிட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாத்துவிட்டான். ஏனெனில், அங்க அவயவங்கள், மனித உயிர்களைப் பணயம் கேட்கும் பகீரதப் பிரயத்தனத்தில் தானாகப் பங்கெடுத்துக்கொள்ள விருப்பமில்லாதவர்களை யுத்த களத்தை நோக்கி உங்களால் வலிந்து இழுத்துவர இயலாது; அப்படி இழுத்துவரவும் கூடாது.' இறைப்பாதையிலே பிரயத்தனங்கள் மேற்கொள்வதில் சுணக்கம் காட்டுபவர்களை நோக்கிய நபிகளாரின் இடித்துரை இது.

முஸ்லிம் படையணி மதீனாவின் வடக்குத் திசையில் அமைந்திருந்த தபூக் என்ற பகுதியை நோக்கி நகரத் துவங்கியது. இப்பகுதியை இன்றைய 'புவி-அரசியல்' நிரப்பரப்புடன் ஒப்பிட்டுப்பார்த்தால், அரேபிய தீபகற்பத்தின் வடக்கே நிலைகொண்டிருக்கும் சமகால ஜோர்டானின் ஒரு பகுதியைச் சுட்டுவதாகவே அது அமைந்திருக்கும்.

இந்தப் பிரயாணத்துக்கு இடையேதான் அபூதர் தங்களண்டை இல்லாததை நபிகளார் உணர்ந்துகொள்கிறார்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தபூக்கை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருந்த வேளையிலே, தங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அல்லது தங்களுடன் இணைந்துகொள்ள வேண்டும் என்ற பேரார்வத்தில் விரைந்துகொண்டிருந்த ஒரு பிம்பத்தை தொலைதூரத்திலே அவர்கள் பார்க்கின்றனர்.

நகர்ந்துகொண்டிருந்த அந்தப் பருப்பொருளை, மனிதரை மற்றெவரும் இனங்கண்டுகொள்வதற்கு முன்னரே நபிகளார் அவரை அடையாளம் கண்டுகொண்டுவிட்டார்.

'அது அபூதர்ராக இருக்கட்டும்!!'.

எதிர்பார்ப்பின் பெருக்கத்தால் நபிகளாரின் நாவில் முகிழ்த்த வார்த்தைகள் இவை. நேரம் செல்லச்செல்ல தொலைதூர பிம்பத்தின் சொரூபமும் தெளிவாகவும் பெரிதாகவும் உருப்பெற்றது. அண்மையில் நெருங்கிய அந்த பிம்பம் நபிகளாரின் யூகத்தைச் சடுதியாக ஊர்ஜிதம்செய்தது. ஆம். அது அபூதர்ரேதான்!

துருப்புகளுடன் தன்னை இணைத்துக்கொள்வதற்குத் தேவையான உபகரணங்களைத் துரிதகதியில் தெரிவுசெய்ய இயலாததே அபூதர்ரின் இந்தக் காலதாமதத்துக்கான காரணம். எனவே, கண்ணியத்தைத் தேடித் தரும் இந்த இராணுவ நடவடிக்கையில் தன்னையும் ஓர் அங்கத்தினனாகப் பிணைத்துக்கொள்வதையிட்டு, கையில் கிடைத்த ஓட்டையுடைசல்களை எடுத்துக்கொண்டு முழுவீச்சில் நடந்தே வந்துவிட்டார்.

இப்படி, அபூதர் குறித்துப் பேசுவதற்கு அதீத சங்கதிகள் இருக்கின்றன. நபிகளாரின்(ஸல்) இறப்புக்குப் பின்பும் தொடர்ந்து பல்லாண்டுகள் வாழப்போகிறவர் இவர்; நபிகளாரின் வாழ்நாளில், அவருடனேயே இருந்து இஸ்லாமிய அறவழிப் போராட்டத்தை அவருடன் பகிர்ந்துகொண்ட முஸ்லிம்களுடன் வருங்காலங்களைக் கழிக்கப்போகிறவரும் இதே அபூதர்தான். ஆனால், பிற்காலத்தில் நடந்தது என்ன? அவ்வரலாற்றுச் சூழலில் நாம் எவற்றையெல்லாம் அவதானிக்கபோகிறோம்?

சகோதர, சகோதரிகளே! உங்கள் மரபுகளையும், உம்மத்தைப் பிளவுபடுத்தும் இன்னபிற தகவல்களையும் தயவுகூர்ந்து இங்கே ஓரம்கட்டிவிடுங்கள். இது 'தக்வா'வுக்கானத் தருணம். எனது வார்த்தைகளை நான் இயம்பும் தருணத்திலும், செவிசாய்க்கவேண்டியவற்றுக்கு நீங்கள் செவிசாய்க்கும் தருணத்திலும் அல்லாஹ்வின் அதிகாரம் மற்றும் வல்லமையை நாம் இடையறாது அவதானித்துக்கொண்டே இருக்கவேண்டும்.


அபூதர்ரும் இன்னபிற சஹாபாக்களும் (ரழியல்லாஹு அன்ஹும்) சமூகப் படிநிலையின் ஒரே மட்டத்தில் வீற்றிருந்த அல்லாஹ்வின் தூதரது காலகட்டத்தில், அவர்களுக்கு இடையே வகுப்புரீதியிலான பிளவுகள், ஏற்றத்தாழ்வுகள் என்று ஏதும் இருந்ததில்லை. அங்கே, அல்லாஹ்வின் தூதர் மட்டும்தான் அனைத்து முஸ்லிம்களுக்குமான இமாம், தலைவர், ஆட்சியாளர், முடிவெடுக்கும் பொருப்பில் வீற்றிருந்தவர். இதிலே எவ்வித கருத்துமுரண்பாடுகளும் எவருக்கும் இருந்ததில்லை. இப்படி, தியாகங்கள், போராட்டங்களின் வாழும் உதாராணமாய்த் திகழ்ந்த நபிகளார்(ஸல்) ஒரு பரம ஏழையாகவே மரணிக்கிறார்.

அவருக்குப் பிறகு, அபூபக்கர்(ரழி) தலைமைப் பொருப்பை ஏற்றுக்கொள்கிறார். இஸ்லாத்தைத் தழுவிக்கொள்வதற்கு முந்தைய காலகட்டங்களில் என்னதான் ஓர் தனவந்தராக இருந்தாலும், தனது மரணவேளையில் நபிகளாரைப் போல சர்வ ஏழ்மையில்தான் இவரது ஆன்மாவும் பிரிந்துசெல்கிறது. இவரது மரணத் தருவாயில், இஸ்லாமிய அரசாங்கத்தின் கஜானாவில் ஒரே ஒரு நாணயம் மட்டுமே இருப்பிலிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அது தினாரோ திர்ஹமோ, 'இஸ்லாமிய கஜானா'வை ஆக்கிரமித்திருந்தது ஒரே ஒரு நாணயம் மட்டும்தான்! தவிரவும், அந்தக் காலத்தில் புவியியல்ரீதியிலே முஸ்லிம்கள் ஒன்றும் விஸ்தாரமாகப் பரவியிருக்கவில்லை. உலகின் செல்வக் கொழிப்பானப் பகுதிகளுக்குள் முஸ்லிம்கள் காலடி எடுத்துவைக்காதக் காலகட்டம் அது. அரேபியாவின் பாலை மணல்தான் அதுகாறும் அவர்களின் உறைவிடம்.

இரண்டாம் கலீஃபா உமரின்(ரழி) ஆட்சிக்காலத்தில் நிலைமை அப்படியிருக்கவில்லை. வளப்பமான, செல்வக்கொழிப்பான, டாம்பீகத்துக்குக் குறைவில்லாத மிஸ்ர், ஈராக், அஷ்-ஷாம் போன்ற பகுதிகளிலே முஸ்லிம்கள் தங்கள் பிரசன்னத்தை ஊர்ஜிதம் செய்துகொண்ட காலகட்டமாக அது உருப்பெற்றது.

முஸ்லிம்களைக் கடும் சோதனைக்கு ஆட்படுத்தப்போகும் நிலப்பரப்புகள் என்றும்கூட இவற்றை வருணிக்கலாம். தங்கள் கொள்கை உறுதியில், பெறுமானங்களில், மனோதிடத்தில், அல்லாஹ்வின் தூதரால் வார்த்தெடுக்கப்பட்ட தங்கள் பற்றுதலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இவர்கள் சோதிக்கப்பட்டனர். என்றாலும், பொருளாதார வளப்பத்தால் மேலெழும்பவிருந்த பிரச்சினைகள் அனைத்தும் உமரின்(ரழி) நிர்வாகத் திறனால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது என்றுதான் கூறவேண்டும்.

இதனை ஓர் சீறிய செயல்திட்டத்தின் வாயிலாக அவர் சாத்தியப்படுத்தினார். இந்தச் செயல்திட்டத்தை முப்பெரும் பகுப்புகளாகப் பிரித்துக்கொள்ளலாம். அவற்றுள் ஒன்று, இஸ்லாமிய ஆளுகைக்கு உட்பட்ட செழுமையானப் பிரதேசங்களிலிருந்து வந்துசேர்ந்த தனிநபரின் - அசையும், அசையா - சொத்துகள் தொடர்புடையது. புதிதாக ஈட்டப்பெற்ற மேற்படி ‘தனிநபர் நிலப்பகுதிக’ளை இஸ்லாமிய கருவூலத்துக்குச் சொந்தமான உடைமைகளாக அவர் ஆர்ஜிதப்படுத்திக்கொண்டார். "இது எனக்கு மட்டும்தான் சொந்தம்" என்று எந்த ஒரு தனிநபரும் அதன்மீது உரிமை கோரிவிட முடியாது. உமரின் முன்னால்நின்று அப்படிக் கேட்பதற்கு எந்த மனிதருக்கும் நெஞ்சுரம் இருக்கவில்லை. அவர் படைத் தளபதியோ தளகர்த்தரோ சமூகத்தின் கனவானோ செல்வச் சீமானோ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். "இது என்னுடைய நிலம்" என்று உமரின் முன்னின்று எவராலும் வீறிடமுடியாது; வீறிடவும் இல்லை. அந்த நிலங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. உமரின் கொள்கை இதுதான்!

நபிகளாரால் வார்த்தெடுக்கப்பட்டக் கொள்கைப் பிடிப்பில், பெறுமானங்களில், பற்றுறுதியில் முஸ்லிம்களை நிலைத்திருக்கச்செய்த உமரின் செயல்திட்டத்தின் இரண்டாவது அம்சம், சமூகத்தின் 'செல்வாக்குள்ள நபர்கள்' தொடர்புடையது. அதாவது, முதல் தலைமுறை முஸ்லிம்களான சஹாபாக்கள் அல்லது நபித்தோழர்கள் சம்பந்தப்பட்டது.

இவர்கள் விஷயத்தில் ஓர் அலாதியான அணுகுமுறையை உமர் கையாண்டுவந்தார்.

'நீங்கள் இவ்விடத்தைவிட்டு எங்கும் வெளியேறிவிடக்கூடாது'

உமரின் செயல்திட்டம் அவர்களுக்கு இட்ட கட்டளை இதுதான்.

'நீங்கள் மக்கா, மதீனாவின் பரப்பெல்லைக்குள்தான் சஞ்சரித்துக்கொண்டிருக்க வேண்டும்; அஷ்-ஷாம், ஈராக், மிஸ்ர் ஆகிய பெருநகரங்களுக்குக் குடிபெயர்ந்துச் செல்வதற்கெல்லாம் உங்களுக்கு அனுமதி இல்லை.' என்ற கறாரான நிபந்தனையை அவர்கள்மீது விதித்திருந்தார் உமர். அவர்களும் இதற்கு உடன்பட்டனர்.

உமரின் ஆழ்மனம் நபித்தோழர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்ததே இதற்கானக் காரணம். ஏனெனில், இங்கிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றால், 'அல்லாஹ்வின் தூதரது தோழர்கள்' என்ற தற்பெருமையும் கீர்த்தியும் ஏற்படுத்திவிடும் 'கெளரவ பிம்பத்தின்' மாய வலையில் அவர்கள் லாவகமாக அகப்பட்டுவிடக்கூடும் என்று சஞ்சலப்பட்டுக்கொண்டார் உமர். அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது. தப்பித்தவறி அவ்வாறு நடந்துவிட்டால், அதிகாரத்துக்கான போட்டியிலே ஒருவருக்கொருவர் முழுமுனைப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வர். இதையே இன்றைய பேச்சுவழக்கில் கூறுவதென்றால், 'அதிகார மைய'ங்களின் மீளெழுச்சிக்கு அவை இலகுவாக வழி அமைத்துக் கொடுத்துவிடும். அவ்வாறு நடந்துவிடக்கூடாது; நடக்கவும் இல்லை.

மூன்றாவது செயல்திட்டம், வாழ்க்கைப் பாணி தொடர்புடையது. முஸ்லிம் அதிகாரிகள், ஆளுனர்கள், மக்கள் பிரதிநிதிகள், முடிவெடுக்கும் பொருப்பில் வீற்றிருந்தவர்கள் ஆகியோர்மீது ஓர் கறாரான வாழ்க்கை நெறியை உமர் வலிந்து திணித்தார். இந்த வாழ்க்கை நெறியை 'ஸுஹ்து' என்றும் 'தகஷ்ஷுஃப்' என்றும் வரையறுத்துக்கொள்ளலாம். அதாவது, கட்டுத்திட்டமான, கொள்கைப் பிடிப்புடன்கூடிய வாழ்க்கை முறை.

இப்படி, அல்லாஹ்வின் தூதரது காலகட்டத்தில் இழையோடிய அதே 'இஸ்லாமிய சமூகச் சூழல்' உள்ளபடி அப்படியே உமரின் காலகட்டத்திலும் தொடர்ந்து நீடித்தது. இவற்றையெல்லாம் அபூதர் தெளிவாக அவதானித்துக்கொண்டிருந்தார்.

உமருக்குப் பிறகு மூன்றாம் கலீஃபாவாக உஸ்மான்(ரழி) தெரிவுசெய்யப்படுகிறார். இந்தப் பகுதியைக் கடந்துவரும் தருணத்தில்தான் முஸ்லிம்கள் கட்டுமீறிய சார்புநிலைப்பாட்டை நோக்கி உந்தப்படுகின்றனர். இந்த வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் புறவயமானப் பார்வைகொண்டு பகுப்பாய்வு செய்திடும் அளவுக்கு முஸ்லிம்கள் முதிர்ச்சிபெற்றிருக்கவில்லை. இவ்வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் நம்மைச் சார்ந்தவைதானே. ஒருசிலர் இழைக்கும் தவறுகளால் அனைவருக்குமே ஒருசேர பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.

'இருப்பவர்க'ளுக்கும் 'இல்லாதவர்க'ளுக்கும் இடையே ஓர் விகாசமான விரிசல் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை முதன்முறையாக முஸ்லிம்கள் அவதானிக்க நேர்ந்தது உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்தில்தான். இந்த விரிசலின் வீச்சானது காலக்கிரமத்தில் சடுதியாக அதிகரித்தது. இஸ்லாமிய ஆளுகைக்குக் கீழ் வந்துசேர்ந்த புதிய எல்லைப்பகுதிகளில் நியமிக்கப்பட்டிருந்த ஆளுநர்கள் முதன்முதலாகச் சுயநலன் கருதிச் செயல்படத் துவங்கியதும் இதே காலகட்டத்தில்தான்.

ஈடிணையற்றப் பொருளாதார வளங்களை தான்தோன்றித்தனமாக அவர்கள் ஈட்டத் துவங்கியது விவகாரத்தை மேலும் மோசமடையச்செய்தது. இப்படி நாம் கூறுவதற்கு, சில தனிநபர்களின் விகற்பமான நடத்தை நமக்கு உணர்த்துவதுபோல, ஒரு சாரார்மீது மற்றொரு சாரார் வசவுச்சொற்களையோ கொச்சைமொழியையோ பிரயோகிக்க வேண்டும் என்று அர்த்தம் ஆகாது.

ஆக, இந்த 'நிஜஉலக மெய்மைக'ளையெல்லாம் அபூதர் துலக்கமாக அவதானித்துக்கொண்டுவருகிறார். அவருக்கும் சரி, அவருடன் அந்தக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக்கும் சரி இவை வரலாறு அல்ல; நமக்குத்தான் இவை அனைத்துமே வரலாறு. ஆதலால், அவற்றிலிருந்து இயன்றமட்டும் நாம் பாடங்களையும் படிப்பினைகளையும் உருவிப்பெற முயலவேண்டும்.

சமூகப் படிநிலையில், ஒருசாரார் மட்டும் செல்வச்சீமான்களாக உருப்பெற்றுக்கொண்டிருப்பதும் இன்னோர் சாரார் ஏழைபாழையின் கையறுநிலை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதும் அபூதர்ரின் சிந்தையை வெகுவாக நெருடியது. ஏதோ தவறு நடந்துகொண்டிருப்பதாக அவரது உள்மனம் முணுமுணுத்துக்கொண்டே இருந்தது. சாத்வீகம் பேணிக்கொள்ள அவரது மனசாட்சி இடம்கொடுக்கவில்லை. வெகுண்டெழுகிறார். பரவிப் படர்ந்துவரும் இந்தப் புதிய வகை 'டாம்பீக முஸ்லிம்க'ளுடன் வார்த்தைப் போரில் ஈடுபடுகிறார். வரலாற்றின் இந்தப் பகுதியிலே முஸ்லிம்களுக்குத் தேவையான அதீத படிப்பினைகள் விரவிக்கிடக்கின்றன. எனினும், இவற்றினூடாக தங்கள் வாழ்வைச் செப்பனிடுவதற்கோ புனருத்தாரணம் செய்துகொள்வதற்கோ அவர்கள் தயாராக இல்லை.

குறுக்குவழியை, அநீதியை நோக்கிய ஆகர்ஷணம் என்பது அனைத்துக் காலகட்டங்களுடனும் பொருந்திப்போகும் ஓர் பிரத்தியட்சமான உண்மை. 'அதிகாரம்' அறநெறியைச் சீரழித்துவிடும்! இதனை நமது சொந்த வரலாற்றில், சுய சமூகக் கட்டமைப்பில், நமது பிரதிநிதித்துவ அரசாங்கங்களில் நாம் தொடர்ந்து அவதானித்துக்கொண்டுதான் வருகிறோம். எனினும், இவ்விவகாரத்தை இன்றைய தேதியிலே நாம் எப்படிக் கையாளப்போகிறோம்? "எதுவுமே நடந்துவிடவில்லை; இதன்மூலமாக நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடப்போவதில்லை." என்றரீதியிலே இவ்விவகாரத்தைக் கடந்துவிடப்போகிறோமா? ஆம். அப்படிச் செய்தாலும் செய்துவிடுவோம். ஆனால், பொட்டில் அடித்தாற்போல் தனது வாதத்தைப் பதிவுசெய்யும் அபூதர்ரோ நம்மைப் போன்றவர் அல்ல; 'கண்டும் காணாமல்’ சென்றுவிடும் விட்டேற்றியான பேர்வழி அல்ல அவர்.

தவறுகள் அரேங்கேறிக்கொண்டிருப்பதையும் அநீதி இழைக்கப்படுவதையும் தானே நேரடியாக அவதானிக்கிறார். துரிதகதியில் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்கிறார். இவை தொடர்பில், நீங்களே நேரடியாகச் சென்று நமது வரலாற்று ஆக்கங்களைப் புரட்டிப்பார்த்துக்கொள்ளலாம். அத்தகைய ஆக்கங்கள், சுன்னி, ஷியா ஆகிய இரு இஸ்லாமிய மரபுப்பின்னணியிலும் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. இந்த வரலாற்றுத் தகவல்களெல்லாம் நமக்கு உணர்த்துவது என்ன?

நபிகளார்(ஸல்), அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) ஆகியோருக்குப் பின்னர் முகிழ்த்த காலகட்டங்களிலிருந்தே, இஸ்லாத்துக்குப் புறம்பான வகையில், நியாயப்படுத்திக்கொள்ளவே இயலாத அளவில், அநீதியான வழிமுறையில் சொத்து சுகங்களைச் சேகரித்துவைத்திருந்த பல்வேறு 'இஸ்லாமிய' ஆளுமைகளை நமது வரலாற்றுப் பக்கங்கள் பதிவுசெய்திருக்கின்றன. பிரசித்தமான சஹாபாக்களான ஸுபைர் இப்னு அல்-அவ்வாம்(ரழி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரழி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரழி) ஆகியோர்கூட இதற்கு விதிவிலக்கல்ல.

பரலோகத் துணைவனின் ராஜ்ஜியம் நோக்கி மீளாப் பயணம் மேற்கொள்ளும் முன்னர் தனது தோழர்களிடம் நபிகளார்(ஸல்) இயம்பிச்சென்ற கீழ்க்கண்ட நன்மாராயத்தை, தன் காலத்து 'பிரசித்த'மான ஆளுமைகளிமும் ஆட்சியாளர்களிடமும் அபூதர் நினைவூட்டிக்கொண்டே இருந்தார்.

"நான் இப்பொழுது விட்டுச்செல்லும் அதே நிலைமையிலே எவரொருவர் என்னை மறுமைநாளில் சந்திக்கின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்."

ஆனால், நபிகளார் விட்டுச்சென்ற அதே நிலைமையில் அறுதிவரை அவர்கள் நீடித்திருக்கவில்லை. நபிகளாருடன் வாழ்ந்த காலமெல்லாம் அவர்கள் வினயமாகவே தொழிற்பட்டார்கள். பொருளாதாரத்தை ஈட்டித்தரும் உபாயங்கள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவர்களிடம் இருந்ததில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் எளிய மக்களாக, ஏழைகளாக வாழ்ந்தார்கள். ஆம். நபிகளார் காலத்து யதார்த்தம் இதுதான்.

எனினும், பின்தோன்றிய ஆண்டுகளில், இவர்களில் சிலரிடம் அபரிமிதப் பொருளாதாரம் குவியத் தொடங்கியது. அதுவே அவர்களை விமர்சனங்களுக்கும் கேள்விக்கணைகளுக்கும் உட்படுத்தியது. தங்கள் செல்வ வளம், சொத்து சுகங்கள் குறித்து பதிலளித்தே தீரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அவர்கள் ஆளாகினர்.

இவ்விடத்தில்தான் நமக்குள் தன்னெழுச்சியாகவே ஒரு கேள்வி முகிழ்க்கிறது. அல்லாஹ்வின் தூதரும் சரி, அவரைத் தொடர்ந்துவந்த முதல் கலீஃபாவும் சரி, அவருக்குப்பின் வந்த இரண்டாம் கலீஃபாவும் சரி பரமஏழ்மையிலேயே மரணிக்கின்றனர்; தங்களுக்கென்று எந்த ஒன்றையும் அவர்கள் விட்டுச்சென்றதாகத் தெரியவில்லை. எனினும், மூன்றாம் கலீஃபாவோ அளப்பரிய பொருளாதார அம்பாரத்தின் உரிமையாளராக மரணத்தைத் தழுவிக்கொள்கிறார். இந்த இருதுருவங்களை ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை ஓரளவுக்கு நமக்குப் புலப்பட்டுவிடும்.

ஆம். இடைப்பட்ட காலத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. இதே தவறுதான் வெவ்வேறு பரிமாணங்களில் நாளதுதேதிவரை நம்மை உருக்குலையச்செய்துகொண்டிருக்கிறது. இந்தப் பிறழ்வை இனங்கண்டுகொண்டு அதனைச் சீர்செய்யவேண்டுமானால், மேற்படி வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் ஆத்மசுத்தியான உள்ளத்துடனும் புறவயமான பார்வையுடனும் நாம் அணுகிட வேண்டும். எனினும், அப்படிச் செய்ய நம்மால் இயலவில்லை; அதற்கு நாம் தயாராகவும் இல்லை.

அல்லாஹ்வுடைய தூதரின் கீழ்க்கண்ட கூற்று, இதுகாறும் நாம் கடந்துவந்த வாதங்கள் அனைத்தையும் மெருகூட்டுவதாக அமைந்திருக்கிறது:

"தனது சுற்றாடலில் இருப்பவர் பட்டினியோடு படுக்கைக்குச் செல்லும் நிலையில், அது தனக்கு நன்றாகத் தெரிந்திருந்தும்கூட, வயிறு புடைக்க உணவு உட்கொண்டுவிட்டுத் துயில்கொள்ளச் செல்பவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல."

அவர் இறைவனின் உண்மைப் பற்றாளர் அல்ல; ஒரு 'முஃமின்' அல்ல !!!

ஃகுத்பாவின் உபரித் தகவல்கள்

இப்பூவுலகிலே, பிரத்தியட்சமான ஒரு கூட்டத்தார் அம்பாரம் அம்பாரமாகச் சேகரித்துவைத்திருக்கும் செல்வக்குவியல்களும் அபரிமிதப் பொருளாதார வளங்களும் ஆசிய, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெரும்திரள் முஸ்லிம்களை பசி, பட்டினியில் உழலவைத்திருக்கின்றன; தரமானக் கல்விச் சூழலைவிட்டும் அவர்களைச் சேய்மைபடுத்திவிட்டன; கல்வி அறிவிலே பின்தங்கியவர்களாக அவர்களை உருமாற்றிவிட்டன.

'இக்ரா' எனும் இறைக் கட்டளையைப் பிரதிபலித்திடும் ஓர் ஆதர்ச சமூகமாகத்தானே நாம் இருந்திருக்க வேண்டும். விண்ணுலகிலிருந்து மண்ணுலகுக்கு வந்துதித்த முதல் வார்த்தைதான் இந்த 'இக்ரா'. இந்த முதல்வார்த்தைக்குச் சொந்தம் கொண்டாடும் ஒரு சமூகம் யதார்த்தத்தில் தீட்சண்ய பார்வைகொண்ட, அறிவார்ந்த, சிந்தையைச் சரியாகப் பிரயோகிக்கத் தெரிந்த, முற்போக்கான ஒரு சமூகமாகத்தானே விளங்கியிருக்க வேண்டும். எனினும், நம்மை நாமே அகவயப் பார்வையுடன் உற்றுநோக்கும்போது, நிலைமை தலைகீழாக மாறியிருப்பதை நம்மால் அவதானித்துக்கொள்ள முடிகிறது; கல்விப் படிநிலையின் அடிவிளிம்பிலே நாம் தத்தளித்துக்கொண்டிருப்பது பட்டவர்த்தனமாக நமக்குப் புலப்படுகின்றது. இந்த ஆற்றாமைக்குக் காரணம் என்ன? 'இருப்பவர்க'ளுக்கும் 'இல்லாதவர்க'ளுக்கும் இடையிலான விரிசலும் ஓரவஞ்சனையும் அதிகரித்துக்கொண்டே செல்வதுதானே இதற்கானக் காரணம்.

அபூதர்ரின் இயல்பான, வெளிப்படை மனப்பாங்கையும் அபூபக்கர், உமரின் கட்டுத்திட்டத்துடன்கூடிய கொள்கைச் சமரசமற்ற வாழ்க்கைப் போக்கையும் பின்னுக்குத் தள்ளிவிட்ட ஓர் 'படாடோப வகைமை'யைச் சார்ந்த, அதிகார வர்க்க மேட்டுக்குடிகள் நம்மைச் சூழவும் காணக்கிடைக்கின்றனர். இவர்கள், 'சமூக நீதி' சார்ந்த நபிகளாரின் ஹதீஸ்கள் வெகுஜன புழக்கத்தில் ஆதிக்கம் செலுத்தாத அளவுக்குப் பார்த்துக்கொள்கின்றனர். இது, தங்கள் நிலைப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவர்களுக்கோர் இன்றியமையாத தேவை.

‘சமூக நீதி’ குறித்துப் பேசும் அல்லாஹ்வின் தூதரின்(ஸல்) மனோநிலையைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு முதிர்ச்சிபெற்ற முஸ்லிம்கள் எவரேனும் நம்மத்தியில் இருக்கின்றனரா? நமக்குச் சொந்தமான வளங்களைச் சூறையாடிக் கொழுத்துக்கொண்டிருப்பவர்களை நோக்கி நியாயத்தின் வார்த்தையை உரக்கப் பேசுவதற்கானக் குறைந்தபட்சத் தகுதியும் திராணியும்கூட முஸ்லிம்களிடத்தில் வாய்க்கப்பெற்றிருக்கவில்லையே! அவர்கள் வாய்மூடிய மௌனிகளாக, விட்டேற்றிகளாக இருப்பதற்கானக் காரணம் என்ன? 

'இத்தகுல்லாஹ்' என்று உங்களிடம் இயம்பப்படும்போது, 'தக்வா'வின் நிபந்தனைகளை அக்கணம் நீங்கள் பேணிக்கொள்பவர்களாக இருக்கும்பட்சத்தில், அதனைக் கண்ணியப்படுத்துபவர்களாக இருக்கும்பட்சத்தில் கீழ்க்கண்ட கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், 

முஸ்லிம்களின் இன்றைய தேக்கநிலைப்பாட்டுக்குக் காரணம் என்ன? 

நமது வரலாற்று ஓட்டத்தில் அப்படி என்னதான் நடந்திருக்கும்? 

மனோதிடம் இல்லை; கொள்கைப் பிடிப்பு இல்லை; இஸ்லாமிய அடிப்படை இல்லை. அதிகார வர்க்கத்துக்குக் கூஜாதூக்குவதில் மட்டும் முன்னணியில் நிற்கின்றனர்; அவர்களின் கட்டளைகள் என்று வரும்பட்சத்தில் மட்டும் கூட்டத்தோடு கோவிந்தாப் போடுகின்றனர்.

நூற்றாண்டுகள் கடந்துவந்திருக்கும் மரபுகள், ஒழுகலாறுகள், வழக்காறுகள், பாவனைகள், இயந்திரத்தனமான சடங்குகள் ஆகியவற்றின் அபரிமிதச் செல்வாக்கால் செல்லரித்துப்போய்விட்ட 'இறை பிரக்ஞை'யை மீட்கொணர்வதற்குத் தகுதி படைத்தவர்களாக நாம் உருமாறவேண்டும். மேற்படி கீழறுப்புக் கூறுகள் அனைத்துமே தக்வாவின் மகோன்னத உந்துசக்தியைச் செல்லாக்காசாக ஆக்கிவிட்டது. 

பட்டவர்த்தனமான, நிறுவனமயப்பட்ட, நூற்றாண்டுகள் பழமையான இந்தப் பிறழ்வினை இனங்கண்டுகொள்வதற்கு முஸ்லிம்களால் ஏன் முடியவில்லை? அதனை அடையாளப்படுத்த வேண்டிய முறைப்படி அடையாளப்படுத்திட முஸ்லிம்களுக்கு ஏன் அருகதை இல்லாமல் போயிற்று?

இந்தப் பணியைச் செவ்வனே முன்னெடுத்துச்செல்வதற்கு நமக்கு அல்லாஹ்வின் உதவி தேவை. அல்லாஹ்வுடன் இருப்பவர்கள், அல்லாஹ்வின் உண்மைப் பற்றாளர்கள், சேவகர்களால் மட்டுமே இந்த வெற்றிடத்தை நேர்த்தியாக நிரப்பிட இயலும்.

இறைவன் நன்கறிந்தவன்!

தொடரும்… இன்ஷா அல்லாஹ்.


கலைச்சொற்கள் தொடர்பிலான மேலதிகப் புரிதலுக்கு வாசிக்க:

1.      Muhammad Abu Zahra,The Four Imams’.
2.      Hamid Enayat, ‘Modern Islamic Political Thought’.
3.      Sayyid Muhammad Husayn Tabataba’I, ‘Shi’ite Islam’.
4.   முஹம்மது அபு ஸஹ்ரா, 'இமாம் அபூ ஹனீஃபா: வாழ்வும் பணிகளும்'.
5.   கலோனல் குலாம் சர்வர், ஹஸ்புல்லாஹ் ஹாஜி அப்துர் ரஹ்மான், 'இஜ்திஹாத்: நவீன காலச் சட்டச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்துவதன் அவசியம்.'
6.      John Penrice, ‘A Dictionary and Glossary of the Qur’an, with Copious Grammatical References and Explanations of the Text.’
7.      Oxford Essential Arabic Dictionary (English – Arabic; Arabic – English).

No comments:

Post a Comment