Sunday, December 31, 2017

அபூதர்(ரழி): 'சமூக அநீதி எதிர்ப்'பின் உத்வேகமூட்டும் குறியீடு! (பகுதி 3)


அபூதர்(ரழி): 'சமூக அநீதி எதிர்ப்'பின் உத்வேகமூட்டும் குறியீடு!
(பகுதி 3)

-    இமாம் முஹம்மது அல் ஆஸி

-    தமிழில்: சம்மில்


சகோதர, சகோதரிகளே! நமது வரலாற்றுப் பிரச்சினைகள், விவகாரங்களில் எல்லாம் நாம் கற்றுணர்ந்துகொள்ள வேண்டிய பாடங்கள், படிப்பினைகள் என்று எண்ணிறந்த விஷயங்கள் மண்டியாய்க் கிடக்கின்றன. கேட்பாரற்றுக் கிடக்கும் இத்தகைய விவகாரங்கள், பிரச்சினைகளை ஏறெடுத்தும் பார்த்திடாத நிலையிலேயே பற்பல நூற்றாண்டுகளை, தலைமுறைகளை நாம் கடந்துவந்திருக்கிறோம். விதிக்கு விலக்கான நம்மில் சிலரைத் தவிர.

நமது வரலாற்று அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அந்தப் படிப்பினைகளைக் கொண்டு நமது வாழ்வை நாம் புடம்போடுவதற்கும், அதன் அடிப்படையில் நம்மை நாமே பக்குவப்படுத்திக்கொள்வதற்கும் நம்மில் சிலருக்கு அதற்கான வாய்ப்பையும் தனது கிருபையையும் இறைவன் வழங்கியிருக்கிறான். இம்முயற்சியானது, நமது அன்றாட வாழ்வின் இடுக்கண்கள், பிரச்சினைகளைச் சூதானாமாக எதிர்கொள்வதற்கு நமக்குப் பாதைச் சமைத்துக் கொடுக்கின்றது; அதன் விளைவுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதற்கும் துணைபுரிகின்றது.

எப்படியிருந்தாலும், குர்ஆனைத் திறந்துபார்ப்பதற்கும், தலைமுறைகள், நூற்றாண்டுகளாக நமது முதுகை முறித்துக்கொண்டுவரும் எண்ணிறந்த வரலாற்றுப் பிரச்சினைகளை 'குர்ஆனிய வழிகாட்டல்'களைக் கொண்டு உய்த்துணர்ந்துகொள்வதற்கும் நம்மில் சொற்ப தொகையினரே சித்தமாயிருக்கிறோம்.

நமது வரலாற்று அனுபவங்களில் வளப்பமாக நிரம்பியிருக்கும் அத்தகைய விவகாரங்களின் அத்தியாயங்களைப் புரட்டிப்பார்த்துப் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் நம்மில் 99.9% முஸ்லிம்கள் தோல்வி அடைந்துவிட்டனர் என்றால், ஒட்டுமொத்தாக அனைத்து முஸ்லிம்களுமே தோற்றுப்போய்விட்டனர் என்பதாக அவசரகதியில் ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர். இந்த மனப்போக்கின் வரம்பெல்லைக்கு வெளியே நின்றுகொண்டு, நிகழ்வுகளைச் சாதகமானக் கண்ணோட்டத்தில் அணுகிடும் அளவுக்கு முஸ்லிம்கள் இன்னமும் முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை போலும்.

அல்லாஹ்வின் உதவி, வழிகாட்டலைக்கொண்டு முதல் தலைமுறை முஸ்லிம்களின் காலச்சூழலுக்கு இப்பொழுது நாம் இடம்பெயர்ந்து செல்வோம். நாம் எவற்றை இயம்பினாலும், நமது அபிப்பிராயங்களை நாம் எவ்வாறு வெளிப்படுத்தினாலும், விண்ணிலிருந்து இறக்கி அருளப்பட்ட இறைவார்த்தைகளுடைய அர்த்தங்களின் நிஜஉலக இயக்கவியலை நேரடியாகப் பார்த்து, அனுபவித்து, உணர்ந்துகொண்டு, அதன்படி தங்கள் வாழ்வைச் செறிவூட்டிக்கொள்வதற்கான பாக்கியத்தைப் பெற்றிருந்தவர்கள்தான் இந்த முதல் தலைமுறை முஸ்லிம்கள் என்பதை நாம் அங்கீகரித்தே ஆக வேண்டும்.

அந்தத் தலைமுறையினுள் நடைபெற்ற சில நிகழ்வுகளினூடே நம் பயணத்தை இப்பொழுது நாம் தொடரலாம். வெறுப்பை உமிழும் மனநிலையிலோ பிறர் மனத்தைப் புண்படுத்திடும், பிறரை ஓரம்கட்டிவிடும் நோக்கிலோ இவ்விவகாரங்களை நாம் அணுகப்போவது கிடையாது. பிரயோகிக்கக் கூடாத வார்தைகளையெல்லாம் இங்கே நாம் பிரயோகிக்கப்போவதும் இல்லை.

எவரும் திறந்துபார்க்கத் துணிந்திடாத நமது வரலாற்று அத்தியாயங்களுள் ஒன்றையே இங்கு நாம் திறந்துபார்க்கத் தலைப்படுகிறோம். ஒருசிலர் இவ்விவகாரங்கள் குறித்துப் பேசுகின்றனர். எனினும், அதுசார்ந்த தங்கள் வாதங்களை அவர்கள் வெளிப்படுத்திடும் தினுசோ அத்துணை சௌகரியமாக இருக்கவில்லை. அவர்களில் சிலருக்கு இவற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தீவிர உந்துதல் இருக்கிறது. ஆனால், தெரிந்துகொண்டவற்றை அவர்கள் வெளிப்படுத்திடும் விதம்தான், அதனைச் செவிமடுத்துக்கொண்டிருக்கும் பிற மக்களின் ஆர்வத்தைச் சடுதியில் சீர்குலைத்துவிடுகிறது. அப்படிச் செவிமடுத்துக்கொண்டிருப்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி. 

இங்கே நாம் விளம்பவிருக்கும் வரலாற்று அத்தியாயம், இருபெரும் ஆளுமைகளின் வாழ்க்கையைப் பற்றியது. இந்த ஆளுமைகள் - வார்த்தையின் அனைத்துப் பொருளிலும் - 'சஹாபா' என்ற வரைவிலக்கணத்துக்குள் அடங்கிவிடுவர். அவர்களில் ஒருவர், உஸ்மான் இப்னு அஃப்பான்(ரழி), மற்றொருவர் அபூதர் அல்-கிஃபாரி(ரழி). 

முந்தைய பகுதிகளில் நான் ஏற்கெனவே விவரித்திருந்தவற்றை மீளவும் ஒருமுறை இங்கே நினைவுறுத்துகிறேன். இந்த இரண்டு சஹாபிகளுக்கு இடையிலும், அபிப்பிராயப் பேதம் என்பது சிற்சில விவகாரங்களில் சாசுவதமாகவே இருந்துவந்தது. இஸ்லாமிய சமத்துவம், ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையிலே, நடக்கக்கூடாத ஏதோ ஒன்று நடந்துகொண்டிருப்பதாக முஸ்லிம்கள் தங்களுக்குள் உணர்ந்துகொள்ளத் தொடங்கியிருந்த ஒரு காலச்சூழல் இது. 

இவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமானப் படிப்பினை ஒன்றிருக்கிறது. கலீஃபா என்றரீதியிலே உஸ்மானுக்கும்(ரழி), பிரசித்திபெற்ற நபித்தோழர் என்றரீதியிலே அபூதர்ருக்கும்ரழி) இடையே ஏற்றத்தாழ்வைத் தோற்றுவித்த 'லௌகீக அந்தஸ்து'டன் தொடர்புடைய படிப்பினைதான் அது. 

சமூக ஏற்றத்தாழ்வை அப்பட்டமாகப் பிரதிபலித்த இந்த இழை, முஸ்லிம்களின் மனசாட்சியை பாரதூரமாக நெருடியது. ஆட்சியாளரின் கொள்கைகள் துன்மார்க்கத்தின்வழி சென்றுகொண்டிருப்பதை முதன்முதலாக முஸ்லிம்கள் அவதானிக்கத் தொடங்குகின்றனர். இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அபூதர், ஆட்சியாளர்களின் இந்தப் பிறழ்வினை முஸ்லிம்களிடம் அம்பலப்படுத்திவிட எத்தனிக்கிறார். ஆனால், எப்படிச் செய்தார் அதனை? அதுதான் இங்கே முக்கியம்.

பற்பல முஸ்லிம்களுக்கு இது, உணர்வுகளை உசுப்பிவிடும் ஒரு விவகாரமாகவே இதுகாறும் இருந்துகொண்டிருக்கிறது. இந்த உணர்வுத் தளைகளிலிருந்து மேற்படி விவகாரத்தை முதலில் நாம் விடுவிக்க வேண்டும். நாம் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அது நமக்குப் பேருதவியாக அமையக்கூடும். நபிகளாரால் அவ்வாறு பயிற்றுவிக்கப்பட்டு வந்தவர்கள்தான் இந்த இரண்டு ஆளுமைகளுமே. உணர்ச்சிக் கொந்தளிப்பினூடாக அன்றி புறவயப் பார்வையினூடாக விவகாரங்களைக் கையாளுவதன் நிமித்தம் நபிகளாரின் பாசறையில் பாடம் பயின்றுவந்தவர்கள் இவர்கள்.

தங்கள் நலன்களுக்கு இயைந்தார்போல் முஸ்லிம்களைப் பிளவுபடுத்தியதன் வாயிலாகவோ வெகுஜனங்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தூண்டிவிடுவதன் வாயிலாகவோ தங்கள் கருத்து வேற்றுமைகளை பைசல்செய்ய இவர்கள் முயலவில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் தூதரால் வார்த்தெடுக்கப்பட்ட குணாம்சம் அவர்களிடம் ஆழமாக வேர்விட்டிருந்தது. அதுவே அவர்களை ஒன்றிணைக்கவும் செய்தது.

இன்றோ, முதிர்ச்சி அடைந்த முஸ்லிம்களுக்கு இடையேகூட, இது சாத்தியமற்ற ஓர் அம்சமாகிவிட்டிருக்கிறது. 'முதிர்ச்சி அடைந்த முஸ்லிம்கள்' என்று நான் கூறுவது இங்கே இஸ்லாமிய இயக்கங்களைச் சார்ந்த முஸ்லிம்களையும், வலுவான 'இஸ்லாமிய' பின்னணிக்குச் சொந்தமான முஸ்லிம்களையும்தான். இவர்களுக்கு மத்தியிலே கருத்து முரண்பாடுகள் நிலவிவந்தால், பரஸ்பரம் ஏன் இவர்கள் சந்தித்துக்கொள்ளக் கூடாது? நபிகளாரின்(ஸல்) தலைமுறையைச் சார்ந்த, மேற்காட்டிய இரண்டு முஸ்லிம் ஆளுமைகளுக்கு இடையிலும் அவ்வாறு கருத்துவேறுபாடுகள் நிலவிய வேளையிலே அவர்கள் பரஸ்பரம் சந்தித்துக்கொள்ளத்தானே செய்தனர். ஒருவரோடு ஒருவர் சம்பாஷித்துக்கொண்டனர். அதனூடாகக் கருத்து வேற்றுமைகளை களைந்துவிட முற்பட்டனர்.

அவர்களது கருத்து முரண்பாடுகள், 'மற்ற முஸ்லிம்களிடத்திலெல்லாம் நான் இயல்பாக அளவளாவமாட்டேன்; அவர்களின் வாசஸ்தளங்களுக்கெல்லாம் நான் செல்ல மாட்டேன்; அவர்களோடு கைக்கோத்தெல்லாம் என்னால் மார்க்கக் கட்டளைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாது; அவர்களுக்கு எதிராக அவர்களைப்போலவே ஒரு கூட்டமைப்பை நான் உருவாக்கப்போகிறேன்' என்பன போன்ற தீவிர மனப்போக்கின் பக்கம் அவர்களை இட்டுச்செல்லவில்லை. அவர்கள் பரஸ்பரம் சந்தித்துக்கொள்ளத்தான் செய்தனர்.

'இணக்கம் காண இயலாத பகாசுர விவகாரம்' என்றரீதியிலே அவர்களுக்கு மத்தியில் பதற்றத்தை உண்டுபண்ணிய இரண்டு முக்கிய விவகாரங்களை இங்கு குறிப்பிடலாம். அவற்றுள் ஒன்று 'ஸகாத்'துடன் தொடர்புடையது. பணம், பொருளாதாரத்துடன் தொடர்புடைய முக்கிய விவகாரம் இது.

இவ்விவகாரம் தொடர்பிலே உஸ்மானின்(ரழி) கூற்று பின்வருமாறு அமைந்திருக்கிறது:

'ஒரு முஸ்லிம் ஸகாத் கொடுத்துவிட்டார் எனில், அதுவே அவருக்குப் போதுமானது. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இஸ்லாமிய அரசாங்கத்துக்கும் வெகுமக்களுக்கும் ஆற்றிவிட வேண்டிய கடப்பாட்டை அத்தருணம் அவர் நிறைவேற்றிவிட்டவர் ஆகிறார்.' 

ஆம். அவர் செய்யவேண்டியது அவ்வளவுதான். ஸகாத்தை கொடுத்துவிட்டார் அல்லவா; முடிந்துவிட்டது விவகாரம்.

அபூதர்ரோ(ரழி) இக்கூற்றை வன்மையாக மறுதலித்தார்: 

'இல்லை. ஸகாத் கொடுத்துவிட்டால் மட்டும் போதாது. பொருளாதாரரீதியிலே ஒரு முஸ்லிமுக்கு அதைவிடவும் அதிகப்படியான பொருப்புகள் இருக்கின்றன. பற்றுறுதிகொண்ட ஒரு முஸ்லிமின் 'கொடுத்துப் பழகிய' குணாதிசயத்தை வெறுமனே 'ஸகாத்' என்ற ஒற்றைக் கடப்பாட்டின் பரப்பெல்லைக்குள் குறுக்கிவிட முடியாது.'

இப்புள்ளியிலே அவர்கள் இருவரும் கறாராகவும் தீவிரமாகவும் விடாப்பிடியாகவும் கருத்து முரண்பட்டனர். இதே உக்கிரத்தில் அவர்கள் கருத்துமுரண்பட்ட பிறிதொரு விவகாரம், முஸ்லிம்களின் கருவூலம்மீது ஆட்சியாளருக்கும் இஸ்லாமிய அரசாங்கத்துக்கும் இருக்கவேண்டிய வரம்புகள், செல்வாக்கு தொடர்புடையது.

இங்கே நாம் மதச்சார்பற்ற, நெறிபிறழ்ந்த ஓர் குட்டிச்சுவர் அரசாங்கத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கவில்லை. மாறாக, இஸ்லாமிய அரசாங்கத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். முஸ்லிம்களின் கருவூலம்மீதான அல்லது 'பைத் அல்-மால் அல்-முஸ்லிம்மீன்' மீதான இஸ்லாமிய அரசாங்கத்தின் அதிகார, நிர்வாக வரம்புகள் எப்படிப்பட்டவை? அவர்களது கருத்து முரண்பாட்டின் மையக் கேள்வியே இதுதான்.

சகோதர, சகோதரிகளே. உஸ்மான்(ரழி), அபூதர்(ரழி) ஆகியோர்மீது இங்கு நான் அதிகமதிகம் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் என்ற ஒரே காரணத்துக்காக, இதனை எனது தனிப்பட்டப் பிரச்சினையாக தயவுகூர்ந்து புரிந்துகொண்டுவிடாதீர்கள். இரண்டு முக்கிய சஹாபிகளை உள்ளடக்கிய, இஸ்லாமிய வரலாற்றின் பிரசித்திபெற்ற ஒரு விவகாரத்தையே இங்கு நாம் சலித்தெடுத்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து முஸ்லிம்களும் ஆய்ந்தறிந்துகொள்ள வேண்டிய பொதுவான விவகாரம் இது.

உஸ்மான்(ரழி), அபூதர்(ரழி) ஆகியோருக்கு இடையே பாகுபாட்டையும், ஓரவஞ்சனையையும் துளிர்விடச்செய்ததும், இஸ்லாமிய மேலங்கிக்குள் மறைந்துகொண்டு அவற்றை நியாயப்படுத்த எத்தனித்ததுமான இந்த 'அந்நிய ஒழுகலாறு', தற்கால இஸ்லாமிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல்களில் வேண்டுமென்றே ஓரம்கட்டப்படுகிறது அல்லது அவை கண்டும் காணாதரீதியிலே கடந்துசெல்லப்படுகிறது.

'இந்தத் தகவல்களெல்லாம் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?' என்ற கேள்வியை முஸ்லிம்கள் அனிச்சையாக இங்கே முன்வைக்கக்கூடும். அப்படிக் கேட்டவர்கள், கேட்பவர்கள் அநேகரை நான் நன்கறிவேன். ஆனால், இக்கேள்வியை அவர்கள் நம் முகத்துக்கு நேராகக் கேட்பது கிடையாது. அப்படியே சுற்றித்திரிந்து, கண்களில் தென்படும் பிற முஸ்லிம்களிடம், ஏதோ விண்ணானத்தைக் கண்டுபிடித்துவிட்ட ஜம்பத்தில் மேம்போக்காக இக்கேள்வியை வீசிவிட்டுச் செல்வார்கள்.

இவர்களுக்கான எனது பதில் இதுதான். இத்தோடு இதனை நான் பலமுறை கூறியாயிற்று. பரவாயில்லை, மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன். இவை அனைத்தும் மைய நீரோட்ட இஸ்லாமிய வரலாற்றுப் புத்தகங்களிலிருந்தே எடுத்தாளப்படுகிறது. அல்-மஸ்வூதியின் 'முருஜ் அத்-தஹப்'பை ஓர் உதாரணமாக இங்கே குறிப்பிடலாம். இன்னோர் உதாரணம், இப்னு அல்-அஸீர் எழுதிய அல்-காமில்.

இவைகள் எல்லாம் மைய நீரோட்ட இஸ்லாமிய புத்தகங்களே அன்றி ஏதோ அறிவிலிகளாலோ கடும்போக்குவாதிகளாலோ எழுத்தப்பட்ட முகவரி அற்ற புத்தகங்கள் அல்ல. அவ்வளவு இலகுவாக எவரும் உள்நுழையத் துணிந்திடாத ஒரு தகவல் தளத்திலிருந்தே இந்த விவரங்களெல்லாம் உங்களை வந்தடைந்துகொண்டிருக்கின்றன.

ஆக, மேற்படி ஆளுமைகளுக்கு இடையே ஒன்றுக்கு மேற்பட்ட விவகாரங்களில் கருத்து முரண்பாடுகள் நிலவிவந்தன. ஆனாலும் அவர்கள் பரஸ்பரம் சந்தித்துக்கொள்ளத்தான் செய்தனர். அவர்களின் சம்பாஷணையை வார்த்தைக்கு வார்த்தை மேற்கோள் காட்டுவது இங்கு உசிதமாக இருக்கும் எனக் கருதுகிறேன். நெடுநீள உரையாடலாக அது நிச்சயம் அமையாது.

அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்ட கணத்தில் என்ன நடந்தது? உஸ்மான்(ரழி), அபூதர்(ரழி) ஆகியோருடன் சேர்த்து வேறொரு நபரும் அவர்களுடன் அங்கே இருந்ததாக வரலாற்றுப் புத்தகங்கள் பிரஸ்தாபிக்கின்றன.

அந்தச் சந்திப்பில், உஸ்மான்(ரழி) கூறிய அல்லது கேள்விக் கோவையாக முன்வைத்த வாசகத்தைக் கீழே தருகிறேன்:

"தனது பொருளாதாரம், செல்வ வளத்திலிருந்து, தான் வழங்கிட வேண்டிய ஸகாத்தை முழுவதுமாக வழங்கிவிட்ட ஒரு முஸ்லிமை எடுத்துக்கொள்ளுங்கள். பொருளாதார விஷயத்தில் இதையும் மீறி அவருக்கு மேலதிகமாக ஏதேனும் கடப்பாடு இருக்கிறதா என்ன? அல்லது இதற்கும் அதிகமாக தனது பொருளாதாரம், செல்வ வளத்திலிருந்து பகிர்ந்தளித்திட வேண்டும் என்று அவருக்கு ஏதேனும் நிர்ப்பந்தம் இருக்கிறதா என்ன? இன்னபிற தேவையுடையோருக்கும் அவரது சொத்துகள்மீது ஏதேனும் உரிமை இருக்கிறதா?"

உஸ்மான்(ரழி) கேட்ட கேள்விகள்தான் இவைகளெல்லாம். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அங்கிருந்த பிறிதொரு நபரான கா'அப் அல்-அஹ்பார் பின்வருமாறு கூறுகிறார்:

"அமீருல் முஃமினீன் அவர்களே, ஸகாத்தை முறையாக வழங்கிவிட்ட அந்த மனிதர்மீது, பொருளாதாரரீதியிலே வேறெந்தக் கடப்பாடும் விதியாக்கப்பட மாட்டாது."

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த அபூதர்(ரழி) வெடுக்கென்று அவர்மீது சாடுகிறார்:

'நீ பொய்யுரைக்கிறாய், யூதனின் மகனே!'

கடுமையான வார்த்தைகள் அல்லவா இவை!! அதற்கென்ன இப்பொழுது? ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லையே? நியாயமும் மனசாட்சியின் நிரூபணமும் தன்னிச்சையாக வெளிப்படுவதற்கு, கடுமையான வார்த்தைகள் முட்டுக்கட்டையாக இருக்க வேண்டுமா என்ன? கருத்து முரண்பாடு கொண்ட முஃமின் ஒருவர், தனது இஸ்லாமிய மனோபாவத்தினூடாக வெளிப்படுத்திடும் தன்னெழுச்சியான ஒரு எதிர்வினையாகத்தான் இதனை நாம் கருதிக்கொள்ள வேண்டும்.

கா'அப் அல்-அஹ்பார் ஒரு யூதக் குடும்பத்திலிருந்து வந்தவர். நமக்குத் தெரிந்த அளவில் இவர் ஒரு பத்ரியீன் - பத்ருப் போரில் பங்கெடுத்துக்கொண்டவர் - கிடையாது. அல்லாஹ்வின் தூதரை, உயிரைப் பணயம்வைத்து ஆதரவளித்துவந்த முஹாஜிரீன்கள், அன்ஸாரிகளில் ஒருவரும் அல்ல இவர். பிறகு எப்படி, யூதக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரால், அதுவும் இஸ்லாத்தின் தற்காலச் செல்வாக்கைப் புரிந்துவைத்துக்கொண்டு சாவதானமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒருவரால் பற்றுறுதிகொண்ட முஸ்லிம்களின் முக்கியத்துவம் வாய்ந்த, சூட்சுமங்கள் நிறைந்த கலந்துரையாடல் ஒன்றில் லாவகமாக மூக்கை நுழைக்க முடிகிறது? நமது இஸ்லாமிய வரலாற்றின் 'புரிந்துகொள்ள இயலா புதிர்க'ளில் இதுவும் ஒன்று.

ஆக, கா'அப் அல்-அஹ்பாருக்குக் கடுமையான வார்த்தைகளைக் கொண்டு மறுமொழி அளிக்கிறார் அபூதர். அத்துடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. இறைமறையிலிருந்து வசனமொன்றையும் அவர் மேற்கோள் காட்டுகிறார்: இதனூடாக கா'அப் அல்-அஹ்பாரை இடித்துரைக்க முயல்கிறார்.

அவர் மேற்கோள் காட்டிய வசனம்:

لَّيْسَ الْبِرَّ أَن تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِر

"மேற்கை நோக்கியோ கிழக்கை நோக்கியோ உங்கள் முகங்களைத் திருப்பிக்கொள்வதில் – அதற்காகப் போட்டிபோட்டுக்கொள்வதில் - அல்ல உங்கள் புண்ணியம்; மாறாக, புண்ணியம் (அல்-பிர்) என்பது அல்லாஹ்வையும் மறுமை நாளையும்… பற்றுறுதிகொள்வதிலேயே இருக்கிறது"

(அல் குர்ஆன் 2:177)

ஆக, அபூதர்(ரழி) இங்கு தனது மனசாட்சியின் நெருடல்களை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டிருக்கவில்லை; தனது இயல்பான ஆளுமையை வெளிக்காட்டியதோடு மட்டுமே அவரது பணி இங்கு நின்றுவிடவில்லை. மாறாக, ஒரு குர்ஆனிய அறிவுறுத்தலையும் இதனூடாக அவர் முன்னிறுத்துகிறார். அதுவும், ஓர் இஸ்லாமிய கலந்துரையாடல் களத்தில்!!

எப்படிப்பட்ட 'இஸ்லாமிய' கலந்துரையாடல் களம் இது? அபூதர்ரின் மனோபாவம் நமக்கு நினைவூட்டக்கூடிய 'சுயக் கட்டுப்பா'ட்டின் தலைமுறையான முதல் தலைமுறை முஸ்லிம்களின் பாதையிலிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய பாதையிலிருந்தும், குர்ஆனின் வழிகாட்டல்களிலிருந்தும் பிறழ்ந்துவிட்டிருந்த அபிப்பிராயங்களால் நிரம்பியிருந்த ஓர் கலந்துரையாடல் களம் அது.

அதன்பிறகு, அங்கிருந்தவர்களிடம் உஸ்மான்(ரழி) பின்வருமாறு உசாவுகிறார்,
'இஸ்லாமிய அரசாங்கத்தின் பரிபாலனத்தைப் பொறுத்தவரை, அதன் தேவைக் கருதி 'பைத் அல் மா'லிலிருக்கும் பணத்தை, ஆட்சியாளர்களாக, அதிகாரிகளாக, அரசாங்கக் கொள்கைகளின் ஜவாப்தாரிகளாக இருக்கும் நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்; அதிலே ஏகமானப் பணத்தை எங்கள் அரசாங்கப் பிரதிநிதிகளுக்காக, காரியதரிசிகளுக்காக, ஆளுநர்களுக்காகச் செலவுசெய்துவிடுகிறோம்; மீதமிருக்கும் சொற்ப தொகையினை உங்களுக்காகச் செலவுசெய்கிறோம். அப்போது, எங்களது இந்த நடத்தையில் ஏதேனும் பிறழ்வை நீங்கள் காண்பீர்களா?'

மறுபடியும் பாருங்கள். இது ஒரு அப்பாவித்தனமானக் கேள்வி. இதற்காக, அவரது ஆத்மசுத்தியை நாம் சந்தேகத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்பதல்ல. 'ஆத்மசுத்தி' குறித்த சந்தேகத்துக்கு கிஞ்சித்தும் இடம் அளிக்காத ஒரு மனிதரிடமிருந்துதான் இத்தகைய கேள்விகள் முகிழ்த்திருக்கின்றன. அவரது மதியூகத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் வேண்டுமானால் நாம் சந்தேகத்துக்கு உட்படுத்தலாம். ஆனால், அவரது உளத்தூய்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது.

உஸ்மானின்(ரழி) மேற்படி கேள்விகளுக்கு, அதே நபரான கா'அப் அல் அஹ்பார் சற்றைக்கெல்லாம் பதிலளிக்கிறார்,

'அத்தகைய நடத்தையில் எவ்விதத் தவறும் இல்லை.'
 
அபூதர் மீண்டும் இடைமறிக்கிறார்:

'யூதனின் மகனே, எங்கள் மார்க்க விவகாரங்களில் உனது அறிவீனமான அபிப்பிராயங்களை நீ துடுக்காகவும் துணிச்சலாகவும் செருகிக்கொண்டிருக்கிறாய்.'

அபூதர்ரின் இந்த இயல்பான கொந்தளிப்புக்குக் காரணமும் இருக்கிறது. அவரது கடிந்துரையில் சில உண்மைகள் பூடகமாக மறைந்திருக்கின்றன. கா'அப் அல் அஹ்பார் ஒரு 'புதுவரவு'; இஸ்லாத்தைப் புதிதாகத் தழுவிக்கொண்டவர். அல்லாஹ்வுடைய தீனுல் இஸ்லாத்தின் வெற்றிக்காக, போராட்டத்தின், தியாகத்தின் வாயிலாக கடந்த காலங்களில் அவர் எவ்வித பங்களிப்பையும் ஆற்றியது கிடையாது. பிறகு எங்கிருந்து அவருக்கு இத்துணை துடுக்குத்தனமும் உரிமையும் வந்தது. இதுதான் அபூதர்ரைக் கிளர்ந்தெழச் செய்தது.

'நபிகளாருடனேயே வாழ்ந்து, தூதுச் செய்தியின் இயல்பினை அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்டு வந்தவன்போல உனது வார்த்தைகளையும் அபிப்பிராயங்களையும் இங்கே வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாய். எவ்வளவு தைரியம் உனக்கு! இஸ்லாத்தின் 'புதுவரவு'தானடா நீ!!'   

சஹாபாக்களின் தலைமுறையைச் சார்ந்த ஒரு மனிதரின் மேற்படி குணாதிசயமும், உளப்பாங்கும் உங்களுக்கு விந்தையை வரவழைக்கலாம். இறுதிநாள் வரை வரவிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கும் ஓர் முன்மாதிரித் தலைமுறை, முன்னுதாரணத் தலைமுறை சஹாபாக்களின் இந்த முதல் தலைமுறைதான் என்று அநேக முஸ்லிம்கள் நம்மிடம் விதந்து கூறுகின்றனர். இது உண்மையென்றால், அந்த முதல் தலைமுறையுடன் தொடர்புடைய இத்தகைய வரலாற்று உண்மைகளை ஏன் இவர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை?

சஹாபாக்கள் குறித்து, 'இவர்கள்தாம் நமது மூல முன்னுதாரணங்கள்' என்று நம்மிடம் இவர்கள் கூறினால், அதிலே நமக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை; அதனை நாம் மனமுவந்து ஆமோதிக்கிறோம். இப்படிப் பெருமைபாராட்டும் இவர்கள், பிறகு எதற்காக சஹாபாக்களுடன் தொடர்புடைய சர்வ முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரலாற்றுத் தகவல்களை எல்லாம் நம்மைவிட்டும் சேய்மைப்படுத்த முயல்கிறார்கள்? சஹாபாக்கள் அனைவருமே ஒற்றை அபிப்பிராயத்தில் கருத்து உடன்பட்டவர்களாக இருக்கவில்லை; மாறாக, மாறுபட்ட அபிப்பிராயங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தனர். இவர்களின் இந்த 'மாறுபட்ட அபிப்பிராயங்க'ளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள நாம் முயற்சிசெய்ய வேண்டும். அப்படிச் செயய்வில்லை எனில், அவர்களைப் பிளவுபடுத்திய அதே வேற்றுமைகளை முன்னிறுத்தி நாமும் இங்கு பரஸ்பரம் சண்டையிட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

மைய விவகாரத்துக்கு வருவோம். அபூதர்ருக்கும் கா'அப் அல் அஹ்பாருக்கும் இடையேயான காரசார உடையாடலின் போக்கினை இப்பொழுது ஓரளவுக்கேனும் உங்களால் ஊகித்துக்கொள்ள முடிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இவற்றையெல்லாம் அவதானித்துக்கொண்டிருந்த உஸ்மான்(ரழி), அபூதர்ரைக் காட்டமாகக் கடிந்துகொள்கிறார்:

'எனக்கு நீ இழைத்துக்கொண்டிருந்த தீவினைகள், அதன் வரம்புகளை எல்லாம் இப்பொழுது தாண்டிவிட்டன.' 
 
இதற்கான நேர்பொருள் அர்த்தம் இதுதான்:

'எனது முகத்தில் இனி ஒருபோதும் நீ முழிக்க வேண்டாம். களங்கத்தையும் பாதிப்பையும் எங்கள்மீது நீ போதுமான அளவு ஏற்படுத்திவிட்டாய்; தொடர்ந்தும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறாய்.'

இன்று நடப்பதுபோன்று, அவரை நிலவறையில் வீசி எறியுங்கள் என்றோ, காவலாளிகளை உள்ளே அழைத்துவந்து அவரைக் கைதுசெய்யுங்கள் என்றோ அதிகார ஆங்காரத்துடன் உஸ்மான்(ரழி) உறுமிடவில்லை. அவர் கூறியதெல்லாம்:

'உனது தான்தோன்றித்தனமானப் போக்கானது அதன் வரம்புகளை இப்பொழுது மீறிவிட்டது. எங்கள்மீது இழைக்கப்படும் களங்கத்தையும் பாதிப்பையும் இனி ஒருபோதும் எங்களால் சகித்துக்கொள்ளவே இயலாது. இப்பொழுதே இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். எங்காவது கண்காணாத இடத்துக்குச் சென்றுவிடு. அப்படியாவது உனது முகத்தில் முழிக்காமல் இருக்க முடியுமா என்று பார்க்கிறேன்.'

அபூதர்ரும் அப்படியே செய்கிறார். மதீனாவைவிட்டு வெளியேறிய அவர் அஷ்-ஷாம் நகர் நோக்கிப் பயணப்படுகிறார். கடுகளவும் குறைந்திடாத சங்கல்பத்துடன்; திடசித்தத்துடன்; காலநேரத்தின் நிர்ப்பந்தங்களால் மாற்றம்பெறாத தீர்மானத்துடன்!

ஆளுநர் என்றரீதியிலே அஷ்-ஷாம் நகரை அப்போது மு'ஆவியா பரிபாலித்துக்கொண்டிருக்கிறார். அஷ்-ஷாம் நகருக்கும் மதீனா நகருக்கும் இடையே அன்றைய தேதியில் ஏகப்பட்ட வேறுபாடுகள் இருந்தன. அல்லாஹ்வின் தூதரது(ஸல்) காலகட்டத்திலிருந்த அதே சுயக்கட்டுப்பாடு, கொள்கைப் பிடிப்பு, கட்டுத்திட்டத்துடன்கூடிய வாழ்க்கை நெறி ஆகியவை இன்னமும் மதீனாவில் எஞ்சியிருந்தன. அத்துடன் சேர்த்து, நபிகளார் விட்டுச்சென்ற 'சமத்துவச் சூழ'லைச் சீரழிக்கும் விதமாக அதிகாரம், செல்வக்கொழிப்பின் ஒருங்கமைந்த கலவையும் அங்கே பரவிப் படர்ந்திருந்தன.

ஆனால், அஷ்-ஷாம் நகரின் நிலைமை அப்படியிருக்கவில்லை. அபூதர் அந்நகரைச் சென்றடைந்த தருணத்திலெல்லாம் நிலைமை அங்கே தலைகீழாக மாறிப்போயிருந்தது. அதிகாரம், செல்வ வளப்பத்தின் ஒருங்கிணைந்தச் செல்வாக்கால் டமஸ்கஸ் நகரின் ஒட்டுமொத்த 'இஸ்லாமிய' சூழலுமே நீர்த்துப்போயிருந்தது.

அங்கே ஆளுநராய் இருந்த மு'ஆவியாவை அபூதர் சென்று சந்திக்கிறார்; உஸ்மானிடம்(ரழி) உரையாற்றிய அதே தொனியில், அதே மிடுக்கில் மு'ஆவியாவிடமும் அவர் உரையாற்றுகிறார். 

"ஏற்கெனவே பணக்காரனாக இருந்த ஒருவனை நீபெரும் பணக்கார’னாக உருமாற்றிவிட்டாய்; ஏழைப்பாழையாக இருந்த ஒருவனை நீ மேலதிக ஏழ்மைநிலை நோக்கி நெட்டிவிட்டாய்!!"

மு'ஆவியாவின் முகத்துக்கு நேராக அபூதர் முழங்கிய உண்மையின் வாசகங்கள் இவை. இன்றைய தேதியில் சோஷலிஸ்டுகள், இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் என்று பலவர்ணப் பெயர்களில் தங்களை அழைத்துக்கொள்பவர்கள், இஸ்லாமிய வரலாற்றில் இப்படியும் ஒரு ஆளுமை இருந்திருக்கிறார் என்பதை அறிந்திருப்பார்களேயானால் தங்களுக்காக அவரை என்றைக்கோ உரிமைக் கோரியிருப்பார்கள்!

இவர்களது அனுபவங்கள், வியாக்கியானங்கள் எல்லாம் இப்பொழுது நமக்குத் தேவையில்லை. இவர்கள் எதனைச் சார்ந்திருக்கிறார்கள், எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை நாம் நன்றாகவே அறிவோம். தங்கள் கொள்கைகள், நம்பிக்கைகளுக்காக உயிர்துறந்த அவர்களில் சிலரை நாம் மனமுவந்துப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். அதே நேரத்தில், இவர்களின் 'சாதனைக'ளெல்லாம் எந்தவொரு முஸ்லிமையும் ஒரு மார்க்சியவாதியாகவோ, இடதுசாரியாகவோ இன்னபிற கொள்கைப் பற்றாளராகவோ உருமாற்றிவிடாது; மாற்றிவிடவும் கூடாது. அதற்கு நம்மைப் பற்றி - நாம் யார், நமது கொள்கை எப்படிப்பட்டது என்பதை - முதலில் நாம் புரிந்துணர்ந்துகொள்ள வேண்டும்.

அவ்வாறு, நமது செழிப்பான வரலாற்று அனுபவங்களிலிருந்து, நம்மை நாமே உய்த்துணர்ந்துகொள்ளத் தவறியதன் விளைவாகவே முஸ்லிம்களில் அநேகர் இன்று மாற்று சிந்தனைகள், யோசனைகள், கொள்கைகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பிற்பாடு, அந்தக் கொள்கைகளின் பெயராலேயே அவர்கள் அடையாளப்படுத்தவும் படுகிறார்கள்; மார்க்சியவாதி, இடதுசாரி, கம்யூனிஸ்டு.....இத்யாதி.  

தலைப்புக்குத் திரும்புவோம். அஷ்-ஷாம் நகரில் சஞ்சரித்துக்கொண்டிருந்த அபூதர், காலக்கிரமத்திலே அங்கிருந்த செல்வச் சீமான்களிடமும் உரையாற்றத் தொடங்கிவிடுகிறார். இது சாதாரண விஷயம் அல்ல. நமது இன்றைய காலகட்டத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். பேச்சு சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், செயல்பாட்டுக்கானச் சுதந்திரம், ஒருங்குதிரள்கள், போராட்டங்கள், பேரணிகளுக்கானச் சுதந்திரம் என்று ஜனநாயகத்தின் பெயரால் இவ்வனைத்து சுதந்திரங்களும் இன்று நமக்கு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழல் இருந்தும்கூட, ஒரு சராசரி, ஏழை மனிதனால் இன்று தனவந்தன் ஒருவனோடு சரிநிகர் சமானமாக நின்று உரையாற்ற முடியும் என்று நினைகிறீர்களா? நிச்சயம் முடியாது. ஆனால், அன்றைக்கு இருந்தச் சமூகக் கட்டமைப்பின் இயல்பானது இதனைச் சாத்தியப்படுத்தியது.

அபூதர்ரின் இந்தச் சந்திப்புகள் எல்லாம், அன்றைய சமூகச் சூழலில் அதிர்வலைகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தியதை நாம் மறுக்கவில்லை. என்றாலும், அரேபியாவிலிருந்து வந்து அஷ்-ஷாம் நகரில் குடிபுகுந்திருக்கும் அபூதர் போன்ற ஒரு மனிதருக்கு, அந்நகரின் தனவந்தர்களைச் சந்தித்து உரையாடுவதில் எவ்வித சிக்கலும் இருக்கவில்லையே.

அவர்களிடம் அபூதர் பின்வருமாறு விளம்பினார்:

"உங்கள் பொருளாதாரச் சேகரத்தைப் பொறுத்தவரை, அது 'கன்'ஸுக்கும் 'இஃப்திஃகா'ருக்கும் சமதையாக இருக்கிறது"

அல்-கன்ஸ், அல்-இஃப்திஃகார் இரண்டுமே குர்ஆனிய பதங்கள். எனினும், இவை குர்ஆன், சுன்னாஹ் இரண்டிலுமே காணக்கிடைக்கின்றன. 'கன்ஸ்' என்ற வார்த்தைக்கு பணம், செல்வ வளங்களைச் செலவுசெய்யாமல் பதுக்கிவைப்பது, இரகசியமாகச் சேமித்துக்கொண்டிருப்பது என்பதாகவும், 'இஃப்திஃகார்' என்ற வார்த்தைக்கு பணம், செல்வ வளங்கள், சொத்து சுகங்கள்மீது ஏகபோகம் கோருவது என்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது.

அபூதர் இங்கே பிரஸ்தாபிக்கத் தலைப்படும் குர்ஆனிய ஆயத் இதுதான்:

".......தங்கம், வெள்ளியின் சேகரத்தில் முழுமுனைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக; ஏகமான, உக்கிரமான வேதனையொன்று மறுமைநாளில் அவர்களுக்காகக் காத்திருக்கிறது!!"

(அல் குர்ஆன் 9:34)

எள்ளி நகையாடும் தொனியில் வெளிப்பட்டிருக்கும் ஒரு இறை நிந்தனையாகவே இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது. குர்ஆனிய வழிகாட்டல்களால் பட்டை தீட்டப்பட்டிருக்கும் முஸ்லிம் ஒருவரினது மனசாட்சியின் வெளிப்பாடுதான் மேற்படி மறைவசனம்.

இது தொடர்பிலே, நபிகளார்(ஸல்) பின்வருமாறு இயம்பியிருக்கிறார்கள்,

"எவரொருவர் பொருள் பதுக்கலில் ஈடுபடுகிறாரோ அல்லது பொருள்கள்மீது ஏகபோகம் கோருகிறாரோ அவர் திண்ணமாக பெரும்பாவம் இழைத்துவிட்டார்."    

தீட்சண்யப் பார்வையுடன் இவ்விவகாரத்தை நாம் அணுகுவோமானால், அபூதர்ரின் மேற்படி இஸ்லாமிய நிலைப்பாட்டையும் அதன் அடியோட்டமாய்த் திகழும் தூதுச்செய்தியின் அடிப்படையையும் இங்கு தெளிவாக நம்மால் உய்த்துணர்ந்துகொள்ள முடியும்.

அஷ்-ஷாம் நகரின் பெரும் செல்வந்தர்களாகிய 'மேட்டுக்குடி முஸ்லிம்க'ளை நோக்கி அபூதர்ரால் உதிர்த்துவிடப்பட்ட வார்த்தைகள்தாம் இவைகளெல்லாம். அவரின் இந்தச் செய்கைக்கு அங்கே எந்தத் தடையும் இருந்ததாகத் தெரியவில்லை. இதை இன்றைய காலகட்டத்தில் சற்று நீங்கள் முயற்சிசெய்து பாருங்களேன். பணம், பொருளாதாரக் கொழிப்பில் திளைத்துக்கொண்டிருக்கும் இன்றைய இஸ்லாமிய உலகின் கோடீஸ்வரன் ஒருவனை நீங்கள் சந்திக்கச் செல்லுங்கள். அவனை உங்களால் சந்தித்துவிட இயலுமா? அப்படியே சந்தித்தாலும் அவனுடன் உட்கார்ந்துப் பேசத்தான் உங்களால் முடியுமா?

குர்ஆனிய வழிகாட்டல்கள், நபிகளாரின் முன்னுதாரணங்கள் ஆகியவற்றால் புடம்போடப்பட்ட ஒரு மனோபாவத்துக்கும் குணாதிசயத்துக்கும் சொந்தக்காரர்களாக, உண்மைப் பற்றாளரின் வரைவிலக்கணத்தைப் பூர்த்திசெய்பவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில், சமகால முஸ்லிம் சமூகத்தின் இத்தகைய 'மேட்டுக்குடி' வகையறாக்களை அணுகிடுவதற்கான, அவர்களோடு சமதையாக உட்கார்ந்துகொண்டு சம்பாஷிப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு மறுக்கப்படுவதன் காரணத்தை நன்றாக நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்? ஆனால், அபூதர்ருக்கு அப்படியொரு வாய்ப்பு அன்றைக்கு வழங்கப்பட்டது.

சமூகத்தின் தனவந்தர்களை, மேட்டுக்குடிகளைச் சென்று சந்திப்பதற்கு அவருக்கு எந்தத் தடையும் அன்றைக்கு இருக்கவில்லை. இதனூடாக நமக்கு உணர்த்தப்படும் செய்தி என்ன? 'நாங்கள்தான் முன்மாதிரி முஸ்லிம் சமூகம்' என்று ஒருவர் மாற்றி மற்றொருவர் பொருமிக்கொண்டிருக்கும், தங்களுக்குள்ளாகவே மார்தட்டிக்கொண்டிருக்கும் இன்றைய சமூகங்களுக்கும், அன்றைய காலகட்டத்தில் விகாசமாக ஊடாடிநின்ற 'இஸ்லாமிய' சமூகச் சூழலுக்கும் இடையே ஏகமான வித்தியாசங்கள் இருந்திருக்கின்றன.

செல்வச் சீமான்கள், சமூகத்தின் மேட்டுக்குடிகளை அவர் நேரடியாகவே சென்று சந்திக்கிறார்; அவர்களை அறிவுறுத்துகிறார்:

"சமூகத்தின் தனவந்தர்களே! ஏழைகள், அன்னக்காவடிகள் மீது அனுதாபம் காட்டுங்கள்; காருண்யம் காட்டுங்கள். அவர்கள் மீதான உங்கள் கரிசனையை செயல்வடிவில் நிரூபித்துக்காட்டுங்கள்."

அதாவது, நாம் முன்னர் இயம்பியிருக்கும் குர்ஆன் ஆயத்துடைய அர்த்தங்களைத்தான் அபூதர் இங்கே வேறுவார்த்தைகளில் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்:

"பொருளாதாரம், செல்வ வளங்களை அம்பாரம் அம்பாரமாக ஒருங்கு சேர்த்துக்கொண்டு சமூகத்தின் சமத்துவம், சமூக நீதிக்கு ஊறு விளைவித்துக்கொண்டிருக்கும் வர்க்கத்தினர்களே உங்களுக்கு நான் நற்செய்தி கூறுகிறேன்....."


அனுதினமும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள், அன்றாடங்காய்ச்சிகள், ஏழைப்பாழைகள், தாளவியலா வறுமையில் உழன்றுகொண்டிருப்பவர்கள் ஆகியோரால் நிரம்பியிருந்த ஒரு சமூகக் கட்டமைப்பு அது. இத்தகையோரின் ஆற்றாமையை கண்டும் காணாமல் தங்கள் அன்றாட வாழ்வை சுகபோகமாகக் கழித்துக்கொண்டிருந்த 'முஸ்லிம்க'ளையே அபூதர் அங்கு எச்சரித்துக்கொண்டிருந்தார்.

"…….உங்களுக்கு நான் நற்செய்தி பகர்கிறேன். சுவாலைவிட்டு எரியும் நெருப்பினால் ஆன இரும்புப் பாளங்கள் உங்கள் உச்சந்தலையையும், விலாப்புறங்களையும், முதுகுப்பகுதியையும் விடாப்பிடியாக அழுத்திக்கொண்டே இருக்கப்போகிறது…."

கீழ்க்கண்ட கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், 'மேற்காட்டிய இயக்கவியலின் வெளிப்பாடாய்த் திகழவேண்டிய ஓர் முன்னுதாரண முஸ்லிம் சமூகம் இன்றைய உலகில் எங்கேனும் காணக்கிடைக்குமா?' நிச்சயம் கிடைக்காது. ஆனால், அன்றைக்கு இருந்தது. ஆம். அல்லாஹ்வின் தூதரது முதல் தலைமுறையின் சமூகத்தைத்தான் கூறுகிறேன். இன்றைய தேதியில் கானல்நீராகிப்போய்விட்ட ஒரு சமூகக் கட்டமைப்பு அது. அல்லாஹ்வின் தூதரை 'உணர்ச்சிவயப்பட்டு' உரிமைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் நம் தலைமுறையில் அப்படியொரு சமூக அமைப்பு இல்லை என்பது மிகப்பெரும் வாய்ப்புக்கேடு!

அபூதர்ரின் இவ்வனைத்து மக்கள் சந்திப்புகள், தொடர்புகள், அதனால் உருவெடுத்த அமளிதுமளிகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும், 'மஸ்ஜிதுகளுக்கெல்லாம் சென்று முஸ்லிம்களை அங்கே நீ சந்திக்கக் கூடாது' என்றோ 'அவர்களோடெல்லாம் பொதுவெளியில் இத்தகைய விவகாரங்களை நீ கலந்துரையாடக் கூடாது' என்றோ 'இவை எல்லாமும் சராசரி சமானியர்களிடம் பரிந்துரைக்கப்படக் கூடாத யோசனைகள்' என்றோ எவரும் அவருக்குக் கட்டளைப் பிறப்பிக்கவில்லை; அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. இன்றைய தேதியில் நம்மை நோக்கி வீசப்பட்டுக்கொண்டிருக்கும் வெற்று வசைகள் போன்ற எதுவுமே அபூதர்மீது அன்று வீசப்படவில்லை.

முஸ்லிம்கள் அன்று அனுபவித்துவந்த சுதந்திரமானது, பிரத்தியேக இயக்கவியல் ஒன்றுக்கு வழி அமைத்துக் கொடுத்தது. அதாவது, அபூதர்ரை நோக்கி முஸ்லிம்கள் சாரிசாரியாக ஆகர்ஷிக்கப்படுவதற்கு இந்தச் சுதந்திரமானது ஒரு வடிகாலாக அமைந்தது.

நகரின் இந்த அசாதாரணச் சூழல் குறித்த தகவல்கள் எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மு'ஆவியாவை வந்தடைகின்றன. அதிகாரத்தின் அரியணையில் வீற்றிருப்பவர்களிடம் தகவல்கள் வந்துசேரும் அதே பாணியில், அதே சொல்லாட்சியில்தான் மேற்படி தகவல்களும் அவரிடம் வந்துசேர்ந்தன.

'பெரும்திரள் மக்கள் இயக்கம் ஒன்று உருவெடுத்துக்கொண்டுவருகிறது. அதிகாரம், செல்வ வளம் குறித்து அதுகாறும் முஸ்லிம்கள் கொண்டிருந்த பார்வையும் அபிப்பிராயங்களும் இதனூடாக மாற்றம்காணத் தொடங்கியிருக்கின்றன.'

மு'ஆவியா பேச்சுவார்த்தைக்காக அபூதர்ருக்கு அழைப்புவிடுக்கிறார்; அவரிடம் உட்கார்ந்து பேசுகிறார்.

'அபூதர்ரே! நான் சொல்வதைக் கேள். நீ செய்துகொண்டிருப்பவற்றை எல்லாம், கிளர்ச்சியை ஊக்குவிக்கும் உனது நடவடிக்கைகளை எல்லாம் இத்துடன் நீ நிறுத்திக்கொள்வதுதான் சிலாக்கியம்.'


மு'ஆவியா குறித்த எனது மடக்கமான விமர்சனங்களை நாளதுதேதிவரையில் நீங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறீர்கள். எனினும், இந்தக் குறிப்பிட்ட பகுதியைப் பொறுத்த அளவில், அபூதர்ரின் விஷயத்தை அதிகாரத்தின் அரியாசனத்தில் வீற்றிருக்கும் ஏனைய சர்வாதிகாரிகளின் பாணியில் அவர் அணுகிடவில்லை. இவ்விடத்தில் இதனை வலியுறுத்தியே ஆக வேண்டும். அதாவது, 'அவர்களைச் சுற்றி வளைத்திடுங்கள்; அனைவரையும் கைதுசெய்து சிறைக் கொட்டடிகளில் அடைத்துவிடுங்கள்; அவர்கள்மீது சித்திரவதைகளை அவிழ்த்துவிடுங்கள்.....' போன்ற அதிகார ஆணவக் கட்டளைகளெல்லாம் இங்கு இல்லை.

அவர்கள் இருவருமே பரஸ்பரம் கருத்து முரண்பட்டனர் என்பது உண்மைதான். என்றாலும், பிறிதொரு விஷயத்தையும் இங்கே வலியுறுத்தி ஆகவேண்டியிருக்கிறது. அபூதர் விவகாரத்தில், உஸ்மானுடைய(ரழி) மனோபாவத்துடன் மு'ஆவியா போன்றோரின் மனோபாவத்தை ஒப்பிட்டுப்பார்க்கவே முடியாது. அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக எதையும் செய்யத் துணிபவர்தான் மு'ஆவியா.

மு'ஆவியாவின் மேற்படி கூற்றுக்கு அபூதர் எங்ஙனம் எதிர்வினை ஆற்றினார்? 'இதுகுறித்து யோசித்துப்பார்ப்பதற்கு எனக்குச் சிறுது கால அவகாசம் வேண்டும்; இத்தகைய பிரச்சாரங்களையெல்லாம் நான் முன்னெடுத்திருக்கவே கூடாது; நான் தலைமறைவாகிவிட்டால்தான் என்ன? இதே கருத்துகளையும் அபிப்பிராயங்களையும் ஏன் பிறிதொரு உபாயங்களின்வழி நான் மக்களிடம் தெரியப்படுத்திடக் கூடாது, அதாவது, 'ஹல்காஹ்'வை / கல்வி வட்டாரங்களை நிறுவிடுவதன் வாயிலாக ஏன் எனது பிரயாசைகளை நான் தொடர்ந்திடக் கூடாது?' போன்று, இன்று நாம் முன்வைத்திடும் சால்ஜாப்புகள் எவற்றையுமே மறுமொழியாக அவர் முன்வைத்திடவில்லை.

மு'ஆவியாவுக்கான அபூதர்ரின் 'ரோமம் சிலிர்க்கவைத்த' எதிர்வினை இதுதான்:

"அல்லாஹ்வின்மீது சத்தியமாக! குறிப்பிட்ட ஒரு வர்க்கத்திடம் / வகுப்பாரிடம் மட்டுமே அபரிமிதமாகக் குவிந்துகிடக்கும் இந்தப் பணமும், செல்வ வளங்களும், சொத்து சுகங்களும், கருவூலங்களின் செழிப்பானச் சேகரங்களும் அனைத்து மக்களுக்கும் சமானமாகப் பகிர்ந்தளிக்கப்படும்வரை எனது நடவடிக்கைகளை நான் நிறுத்திக்கொள்ளப்போவதில்லை. ஏனெனில், இவைகளெல்லாம் அனைத்து மக்களுக்கும் சொந்தமானவை; ஒரு தனிப்பட்ட நபருக்கோ, குறிப்பிட்ட ஒரு வகுப்பினருக்கோ மட்டுமே சொந்தமானவை அல்ல. ஆதலால், நான் கூறியவை அனைத்தும் நிறைவேற்றப்படும்வரையில் எனது இயக்கம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்; மௌனம் காப்பது என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது."

நறுக்குத்தெறித்தாற்போல் கூறிவிட்டார். பிறகென்ன? இப்படிப்பட்டத் தருணங்களில், அதிகாரத்தில் இருப்பவர்களின் நாவில் வழக்கமாக முகிழ்த்திடும் வாக்கியம்தான் மு'ஆவியாவின் நாவிலும் முகிழ்த்தது:

"எல்லோருக்கும் ஒரு விலை இருக்கிறது!"

என்ன அர்த்தம் இதற்கு? ஆட்சியாளர்களின் வழக்கமான திருகுதாளங்களுக்கு அபூதர்ரும்கூட விதிவிலக்கல்ல. அவரது பற்றுதலும் திடசித்தமும் சோதனைக்கு உள்ளாகப்போவதை இதனூடாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

அபூதர்ரை எப்படியாவது விலைக்கு வாங்கிவிட வேண்டும். இதுதான் மு'ஆவியாவின் உள்ளக்கிடக்கை. அதற்காக என்ன செய்தார் அவர்? அரசாங்கத் தூதுவர் ஒருவரிடம் ஆயிரம் தீனார்களைக் கொடுத்தனுப்பி, அபூதர்ரிடம் அதனை ஒப்படைத்துவிடுமாறு பணிக்கிறார். முன்னவரும் அவ்வாறே, சந்தியாகாலம் ஒன்றில் அபூதர்ரைச் சென்று சந்தித்து பணத்தை அவரிடம் ஒப்படைத்துவிடுகிறார்.

அடுத்த நாள், அதே மனிதர் திரும்பிவந்து அபூதர்ரிடம் பின்வருமாறு கூறுகிறார்:

"தயவுகூர்ந்து என்னை மன்னித்துவிடுங்கள். சிறிய தவறு நடந்துவிட்டது. அந்தப் பணம் உங்களுக்குச் சேர வேண்டியதல்ல; வேறொரு நபருக்குக் கொடுக்கப்பட வேண்டியது. சிரமம் பார்க்காமல் என்னிடம் அதனை இப்பொழுது திருப்பி அளித்துவிட முடியுமா?"

சகோதர, சகோதரிகளே! இப்படிப்பட்ட தருணங்களில்தான் ஒரு மனிதனுடைய இயல்பான குணாம்சம் பட்டவர்த்தனமாக வெளிப்படுகிறது. அபூதர் அந்த மனிதரிடம், 'எனக்கு நீங்கள் மூன்று நாள்கள் அவகாசம் தர வேண்டும்.' என்பதாக வேண்டுகோள் விடுக்கிறார். ஏனெனில், அந்திக்கும் பகலுக்கும் இடையிலான அந்தச் சொற்பமான நேரத்திலும்கூட, தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் அந்தத் தொகை முழுவதையும் அவர் தேவையுடையோருக்கே வழங்கிவிட்டிருந்தார்.

தூதுவர் வெறுங்கையுடன் மு'ஆவியாவிடம் திரும்பிவருகிறார். நடந்ததை அவரிடம் விவரித்துக் கூறுகிறார்.

'முந்தைய நாள் இரவு நான் கொடுத்துவிட்டு வந்தப் பணம் தற்சமயம் அவரிடம் இருக்கவில்லை; அதனை ஏற்கெனவே அவர் தேவையுடையோருக்குக் கொடுத்துவிட்டார்.'

இப்படிப்பட்ட மனிதரை நாம் எவ்வளவு கஜகர்ணம்போட்டாலும் விலைக்கு வாங்கிவிட முடியாது என்பதை அக்கணம் மு'ஆவியா உணர்ந்துகொள்கிறார். மற்றவர்களைப் போன்றல்லாத மாறுபட்ட ஒரு மனிதர் இவர் என்பது புலனாகிவிட்டது. துரிதகதியிலே இவ்விவகாரம் குறித்து மதீனாவில் இருக்கும் கலீஃபாவுக்குத் தகவல் தெரிவிக்கிறார்.

"இவை இப்படியே தொடர்ந்துகொண்டிருக்குமானால், நிலைமை கைமீறிப்போவதை யாராலும் தடுக்க முடியாது. அபூதர்ரை நாம் என்னதான் செய்யலாம்?"

இதற்கான கலீஃபா உஸ்மானின்(ரழி) பதில்:

"அவரை மதீனாவுக்கே திருப்பி அனுப்பிவிடுங்கள்."  

மதீனாவுக்கு அவரை எப்படி அனுப்பிவைத்தார்கள் தெரியுமா? நீங்களெல்லாம் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதனை நான் ஏற்கெனவே பிரஸ்தாபித்திருக்கிறேன். தேவைக்கருதி இங்கு மீண்டுமொரு பிரஸ்தாபிக்கிறேன். சேணம் பொருத்தப்படாத ஒரு கழுதை அல்லது குதிரைமீது பலாத்காரமாக அவரை ஆரோகணிக்கச்செய்தனர். பின்பு, அதே நிலையில் அப்படியே அவரை மதீனாவரைக்கும் அழைத்துச்சென்றனர். அதாவது, வைக்கோல் கற்றை ஒன்றை பொதிசுமக்கும் கழுதைமீது ஏற்றி அனுப்பினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் ஆனது இவர் நிலைமையும். வேறு எங்கேனும் சென்றுவிடக் கூடாது என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்வதற்காக கறாரான பந்தோபஸ்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். இப்படியாக, அஷ்-ஷாம் நகரிலிருந்து கிளம்பிய அவர் நைந்துபோன பழந்துணியாக மதீனாவை வந்தடைந்தார்.

சிசிலி நாட்டைச் சேர்ந்த ஐந்து காவற்படையினரை இந்தப் பிரயாணத்தில் மு'ஆவியா ஈடுபடுத்தியிருந்தார். மதீனாவுக்கு அபூதர் பத்திரமாகச் சென்றுசேர்வதை ஊர்ஜிதம் செய்துகொள்வதற்காக.

நூற்றாண்டுகளை அல்லாஹ் நமக்கு வழங்கியிருந்தும்கூட, இவற்றிலிருந்து நமக்கானப் பாடங்களை கற்றுக்கொள்ளத் தகுதி அற்றவர்களாகவே இன்னமும் நாம் இருந்துகொண்டிருக்கிறோம். 'கருத்து வேறுபடுதல்' என்பது ஆகுமாக்கப்பட்ட ஒன்றுதான். பரஸ்பரம் கருத்து முரண்பட்டுக்கொள்ள தாராளமாக நமக்கு அனுமதி இருக்கிறது. கருத்து வேற்றுமைகளைப் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளலாம்; அதுகுறித்து ஒருவரோடு ஒருவர் கதைக்கவும் செய்யலாம். இவ்வாறு முகத்துக்கு நேராகப் பேசிப் பழகுவதுதான் எல்லோருக்கும் நன்மை பயக்குவதாக இருக்குமே தவிர, வஞ்சக நோக்கங்கள், இரகசியப் பேச்சுவார்த்தைகளிலெல்லாம் யாருக்கும் எவ்வித நன்மையும் விளையப்போவது கிடையாது.

அதிகார மமதையில் தலைகால் தெரியாமல் ஆடிக்கொண்டிருக்கும் இன்னும் சிலரோ மசூதிகளிலிருந்தும், சொந்த நாடுகளிலிருந்தும் மக்களைப் பலாத்காரமாக வெளியேற்றுகின்றனர். இப்படிச் செய்வதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நாடுகடத்தல், நாட்டின் ஏழை எளிய அப்பாவி மக்களை அகதிகள் அந்தஸ்துக்கு உயர்த்தி அவர்களை நாட்டைவிட்டும் விரட்டியடித்தல், அவர்களுக்கான குடியுரிமைகளை மறுத்தல் முதலான இவர்களின் யதேச்சதிகாரக் கொள்கைகளை எங்ஙனம் இவர்கள் நியாயப்படுத்துவார்கள்? இதற்கான வியாக்கியானங்களை இஸ்லாமிய மூலாதாரங்களிலிருந்து இம்மி அளவேனும் இவர்களால் எடுத்தியம்பிட முடியுமா?

இவை எல்லாமும் நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருப்பவைதான். இவற்றின் உக்கிரமானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்பொழுது அதிகரித்துவிட்டிருக்கிறது. நாமோ, அப்படி எதுவுமே நடக்காததுபோன்று நமது அன்றாடத்தைச் செலவிட்டுக்கொண்டிருக்கிறோம். மேற்படி உலக நிகழ்வுகள் குறித்தெல்லாம் நாம் வாய்திறந்து பேசிவிடக் கூடாது; இவற்றை எல்லாம் அம்பலப்படுத்திவிட நாம் எத்தனிக்கவும் கூடாது. ஏனெனில், அப்படிச் செய்த ஆளுமைகள் எல்லாம் கடந்த காலங்களிலே காணாமல் போயிருக்கிறார்கள்; துடைத்தழிக்கப்பட்டிருக்கிறார்கள். "நாங்கள் இஸ்லாத்தின் விற்பன்னர்கள்" என்று கொக்கரித்துக்கொண்டிருந்தவர்களின் கைகளாலேயே!!

ஃகுத்பாவின் உபரித் தகவல்கள்:

அன்றொரு நாள். அது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள். ஆஷுரா நாள். இமாம் ஹுஸைனின்(ரழி) நினைவு நாள். கர்பலா எனும் இடத்தில்வைத்து அவர் அகோரமாகக் கொல்லப்பட்ட நாள். சற்றொப்ப 1400 ஆண்டுகளுக்கு முன்னால், இதே நாளில் முஸ்லிம்களின் கைகளாலேயே அவர் கொல்லப்பட்டார். அவரது நினைவுநாளான அன்றைய தினத்தில் முஸ்லிம் தேசமொன்றின் இராணுவங்களும் துருப்புகளும் சகோதர முஸ்லிம்களைக் குரூரமாகக் கொன்று குவித்தன. இந்த அவலங்களை எல்லாம் கையறுநிலையிலேயே நாமெல்லாம் அன்று அவதானித்துக்கொண்டிருந்தோம். யெமன் தேசம் தீக்கிரையாகிக்கொண்டிருந்தது.

இதுகாறும் போர்ச் சந்தடிகள் அங்கே நின்றபாடில்லை. அந்நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்களும் குழந்தைகளும் இப்பொழுது நடுத்தெருவுக்கு வந்துவிட்டாயிற்று. இதற்கெல்லாம் ஜவாப்தாரி யார்? இங்கே இஸ்ரேலை நாம் குற்றம்பிடிக்க முடியாது. யெமன் நாட்டு எல்லைகளில் குவிக்கப்பட்டிருப்பது இஸ்ரேலிய வீரர்கள் அல்ல. நயவஞ்சகத்தனமான 'இஸ்லாமிய அங்கீகாரம்' ஒன்றினூடாக தனது இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம்தான் இதற்கான முழுமையானக் காரணம். இவர்கள்தான் யெமனிலே இப்பொழுது ஈவிரக்கமின்றி குண்டுமாரிப் பொழிந்துகொண்டிருக்கின்றனர். அங்கே இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கும் வெடிகுண்டு வேட்டுச் சத்தத்தின் சூத்திரதாரிகள் இவர்கள்தான்.

அதுவும் எந்தக் காலச்சட்டகத்தில் இவற்றையெல்லாம் செய்துகொண்டிருக்கின்றனர்? மேற்படி இராணுவ நடவடிக்கையை இவர்கள் முடுக்கிவிட்டு இத்துடன் மாதங்கள் பல வெருண்டோடிவிட்டன. ஆனாலும், இப்பொழுது ஹஜ்ஜின் தறுவாய் இல்லையா? இது 'ஷஹ்ர் அல்-ஹராம்' மாதம் இல்லையா? இதுவெல்லாம் அவர்களுக்குத் தெரியாதா என்ன? நிச்சயம் தெரியும். ஆனாலும், இவை குறித்தெல்லாம் அவர்களுக்கு எள்ளளவும் கரிசனைக் கிடையாது.

இஸ்லாமிய நாள்காட்டியைப் பொறுத்தவரை, 'முஹர்ரம்' என்பது புனிதமான, அபயம் அளிக்கக்கூடிய காலசட்டகங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ஆனால், முஸ்லிம் உயிர்களையும் 'ஷஹ்ர் அல் ஹரா'மையும் இஸ்லாமிய விழுமியங்களையும் கிஞ்சித்தும் சட்டைசெய்யாத ஓர் யதேச்சதிகார கும்பலிடம் இவற்றையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது?

யெமனின் இடர்களை உங்களால் உய்துணர்ந்துகொள்ள இயலவில்லை எனில், பாலஸ்தீனின் காஸாவைப் பாருங்கள். அந்நிலப்பரப்பைப் பல பத்தாண்டுகளாகவே துயரங்களும் இடர்களும் ஓயாமல் பதற அடித்துக்கொண்டிருக்கின்றன.

பொருளாதாரத் தடைகள், வறுமை, பசி-பட்டினியை உக்கிரமாக்கும் கொள்கை முடிவுகள்...இத்யாதி! இப்படி, போர்த்தொடுப்பின் அனைத்துப் பரிமாணங்களும் உங்கள் கண்முன்னேயே அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம்கள்மீது கட்டவிழ்த்துவிடப்படும் ஒடுக்குமுறைக்கு இதுபோன்று இன்னும் ஏராளமான நிகழ்வுகளை உதாரணங்களாக முன்வைக்கலாம். வெறும் தொடக்கம்தான் இவைகளெல்லாம். முடிவுகள் அல்ல!

ஏன் இப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன? முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இத்தகைய விவகாரங்களைவிட்டும் தங்களை முற்றுமுழுவதுமாகச் சேய்மைப்படுத்திக்கொண்டுள்ளனரே, எதற்காக? ஏனெனில், இன்றைய மிம்பர்கள் அனைத்துமே இவைகளைவிட்டும் வெகுதூரத்தில் விலகிநிற்கின்றன; மிம்பர்களில்வைத்து இவ்விவகாரங்கள் எல்லாம் இன்று பிரசங்கம்செய்யப்படுவதே கிடையாது!

உங்களைப் பண்படுத்திக்கொள்ளும் எண்ணத்திலெல்லாம் மருந்துக்குக்கூட நீங்கள் மசூதிகளுக்குச் சென்றுவிடக் கூடாது. இல்லை, அதுவெல்லாம் சரிப்பட்டு வராது. அங்கே சென்றுவருவதன் வாயிலாக பேதமை மட்டும்தான் உங்களிடத்தில் அதிகரித்திருக்க வேண்டுமே தவிர சிந்தனைவாதிகளாக உங்களை அது உருமாற்றிவிடக் கூடாது. ஒட்மொத்த இஸ்லாமிய உலகமும் இன்று அப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது!

மசூதிகளை இப்படி இவர்கள் நிர்வகித்துக்கொண்டிருக்கும் விதம்தான், இஸ்லாமிய நாடுகளிலும் உலகின் இன்னபிற பகுதிகளிலும் இறைந்து கிடக்கும் முஸ்லிம்களின் கண்ணீருக்கும் இரத்தத்துக்கும் வியர்வைக்குமான முதன்மைக் காரணம். உண்மை, நீதி, துணிச்சலான-ஆக்கபூர்வ எதிர்வினை, ஊக்குவிப்பின் வார்த்தைகள் முதலியவற்றுக்காக வெகுஜன முஸ்லிம்கள் இன்று தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களிடத்தில் உண்மையின் வார்த்தைகளை இரைந்து பேசிடும் அளவுக்கு, 'ஆக்கிரமிப்'புக்கு ஆட்பட்டிருக்கும் அல்லாஹ்வின் தூதரது மிம்பர்களுக்கும் மசூதிகளுக்கும் இன்று தீரமில்லாமல் போயிற்று. தொலைந்துபோய்விட்டிருக்கும் நபிகளாரின் அந்த தீரத்தை நாமெல்லாம் இன்று மீட்டெடுக்கத் தலைப்படாதவரை, நம்மைப் பீடித்திருக்கும் இன்றைய இடர்களெல்லாம் திண்ணமாக நம்மைவிட்டு விலகப்போவதில்லை!

இறைவன் நன்கறிந்தவன்!!

சமூக அநீதிக்கு எதிரான அபூதர்ரின் போராட்டம் அடுத்த பகுதியில் தொடரும்....! இன்ஷா அல்லாஹ்….!!

No comments:

Post a Comment