Saturday, March 18, 2017

இஜ்திஹாத்

நவீன சட்டச் சிக்கல்களைத் தீர்க்க இஜ்திஹாதை பயன்படுத்துதல்: தோற்றமும் வளர்ச்சியும்

ஹஸ்புல்லாஹ் ஹாஜி அப்துர் ரஹ்மான்

தமிழில்: புன்யாமீன்






இஜ்திஹாத் அல்லது தனி மனித சிந்தனா முயற்சி, ஒரு காலத்தில் இஸ்லாமிய சட்டத்தை - ஷரீஆவை வர்ணிப்பதிலும் விளக்கி வியாக்கியானம் அளிப்பதிலும் ஓர் முக்கிய சக்தியாக விளங்கியது. இஸ்லாத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் சட்ட அமைப்பியல் வரலாற்றின் மிகச் சிறந்த அறிஞர்களுள் சிலர் இஸ்லாமிய ஷரீஆ அமைப்பினுள் சேவையாற்றினர். எனினும், காலப்போக்கில் இஜ்திஹாதிய துடிப்பு வீழ்ந்து, அதற்குப் பதிலாக - சன்னி இஸ்லாத்தில் - கண்மூடிப் பின்பற்றுதல் (தக்லீது), உருவானது. அது தனி மனித வியாக்கியானமளிப்பை மட்டுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அதைத் தடையும் செய்தது [1]. இக்கட்டுரையில் நான், இஜ்திஹாத் அவசியம் எனவும் அது நவீன சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்க வல்லது எனவும் விளக்கிக் காண்பிப்பதற்காக சில முக்கிய வாதங்களை எடுத்துரைக்க முயற்சித்திருக்கிறேன்.

இஜ்திஹாதின் பொருள்

முதலில், இஜ்திஹாத் எனும் சொல்லின் பொருளை விளங்க முற்படுவோம். 'அல்-ஜுஹுத்' எனும் அரபி வேர்ச் சொல்லில் இருந்து எடுக்கப்பட்ட அல்-இஜ்திஹாதிற்கு, ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வதற்கான முழு முயற்சி அல்லது உழைப்பு அல்லது சக்தியை பிரயோகித்தல் என்பது அர்த்தம் [2]. அதுவே 'இஜ்திஹாத்' எனும் அரபி வினைச் சொல்லிலிருந்து பெறப்பட்டால் ஒருவர் தன்னளவில் முழு முயற்சி எடுப்பது எனப் பொருள்படும் [3].

அது இஸ்லாமிய சட்டத்தில் ஒரு கலைச் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் பொதுவான தனி மனித பகுத்தறிவாய்வை குறிப்பதற்கும், பின்னர், ஒப்பீட்டு பகுத்தறிவாய்வு முறைக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது [4].

எனவே கலைச்சொல் ரீதியாக, அல்-இஜ்திஹாத் என்பது சட்ட அறிஞர்கள் ஒரு சட்ட விஷயத்தில் அறிவார்ந்த முடிவு எடுக்க மேற்கொள்ளும் பகுத்தறிவுப் பிரயோகமாகும். அதன் மூலம் இஸ்லாத்தில் ஒரு சட்ட போதனையின் திறன் குறித்த ஓர் முடிவை பெறுதலாகும் [5].

இமாம் முஹம்மது இத்ரீஸ் ஷாஃபியீ இஜ்திஹாதிய கருத்தியலின் மீதான தனது நம்பிக்கைக்கு ஆதரவு அளிக்க ஒரு குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.

"நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை புனித ஆலயத்தின் திசையில் திருப்புவீராக" [6]

இதிலிருந்து இமாம் ஷாஃபியீ முன்வைக்கும் வாதமானது, ஒருவர் தனது மூலைக்கு வேலை கொடுக்காவிட்டால் மஸ்ஜித் அல்-ஹராம் உள்ள திசையை அறிந்து கொள்ள முடியாது. எனவே, மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஓர் மாபெரும் அருட்கொடையான பகுத்தறிவுத் திறனை பிரயோகிக்கச் சொல்லி அல்லாஹ்வே மறைமுகமாக ஊக்குவிக்கிறான். அதாவது சில குறிப்பிட்ட விஷயங்களில் ஓர் அறிவார்ந்த முடிவு பெற அதை பயன்படுத்தச் சொல்கிறான் [7].

ஆகவே, குர்ஆன் மற்றும் சுன்னாஹ்விற்கு அடுத்து மிக முக்கியமான இஸ்லாமிய சட்ட மூலம் இஜ்திஜாதே ஆகும். இஜ்திஹாதிற்கும் இறைவன் இறக்கி அருளியுள்ள ஷரீஆ மூலங்களுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால், இஜ்திஹாத் தொடர்ந்து வளர்ச்சியடையும் ஓர் நிகழ்வாகும்; ஆனால், இறைவேதமும் இறைத்தூதர் இயற்றிய சட்டமும் இறைத்தூதரின் மறைவோடு நின்றுவிட்ட விஷயங்களாகும்.

இந்த வகையில், இஜ்திஹாத் இறைத்தூதுக்கு வியாக்கியானம் அளிக்கும் கருவியாகவும், முஸ்லிம் சமூகம் தமது நீதி, விடுதலை, சத்தியத்திற்கான வேட்கையை அடைய பயணிக்கையில் எதிர்கொள்ளும் சூழ்நிலை மாற்றங்களுக்கு இறைத்தூதை தொடர்பு படுத்தும் உபகரணமாகவும் தொடர்ந்து விளங்கி வருகிறது.

குர்ஆன், சுன்னாஹ் மற்றும் பகுத்தறிவே இஜ்திஹாதிற்கு மதிப்பீட்டு அங்கீகாரம் அளிக்கின்றன. முதல் இரண்டில், சுன்னாஹ் சற்று அதிக குறிப்பாக மதிப்பீட்டு அங்கீகாரம் வழங்குகிறது. எமது அறிவுக்கு எட்டியவரை, இறைத்தூதரின் வாழ்நாளின் போதே இஜ்திஹாத், அதன் நேரடி சட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டது. இதை முஆத் இப்னு ஜபலினது நம்பகமான கூற்று நமக்கு அறிவிக்கிறது:

"மூஆத், நபி(ஸல்) அவர்களால் யெமன் தேசத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்பதவி வகிக்க புறப்படும் சமயம் நபி (ஸல்) முஆதிடம், "நீர் எதன்படி தீர்ப்பளிப்பீர்?" என வினவினார்கள். "இறை வேதத்தின்படி" என அவர் பதிலளித்தார். அடுத்த கேள்வி: "அதில் எந்த வழிகாட்டுதலையும் நீர் கண்டிராவிட்டால்?" "நான் இறைத்தூதரின் வழிமுறையின்படி தீர்ப்பளிப்பேன்" என்றார். "அதிலும் உமக்கு வழிகாட்டுதல் கிடைக்காவிட்டால்?" என மீண்டும் கேட்டதற்கு, "அப்பொழுது, நான் சுய முயற்சி மேற்கொண்டு எனது சொந்த முடிவை எடுப்பேன்" என்றார் முஆத். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், "இறைவனுக்கே புகழனைத்தும். அவனே தனது நபியின் தூதரை தனது நபிக்கு திருப்தியளிப்பதின்பால் வழி நடத்தியுள்ளான்" எனக் கூறினார்கள்.

முஆத் இப்னு ஜபலின் இந்த ஹதீஸ், அல்-கஸ்ஸாலி குறிப்பிடுவது போன்று, இஜ்திஹாதிற்கான ஓர் தெளிவான அதிகாரத்தை வழங்குகிறது. மற்றொரு ஹதீஸின் படி,

"ஒரு நீதிபதி இஜ்திஹாத் செய்து சரியான தீர்ப்பு வழங்கினால் அவருக்கு இரட்டிப்பு கூலி உண்டு. எனினும், அவர் தனது தீர்ப்பில் தவறிழைத்து விட்டால் அவருக்கு ஒரு கூலி கிடைத்துவிடும் [8]."
இந்த ஹதீஸிலிருந்து, முடிவுகள் எதுவாயிருப்பினும் இஜ்திஹாதினால் பாவம் சம்பாதிக்கப்படுவதில்லை எனப் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, இஜ்திஹாதிற்கான அவசிய தேவைகள் உள்ள பொழுது - முடிவுகள் எதுவாக இருந்தாலும் - எப்பொழுதும் போற்றுதலுக்கு உரியனவே; ஒருபோதும் குறை கூறுதலுக்கு உரியவை அல்ல. மற்றொரு ஹதீஸில் இறைத்தூதர்(ஸல்) கூறியதாக அறிவிக்கப்படுவதாவது:

"முயற்சி எடு, பாடுபடு (இஜ்தஹிது). ஏனெனில், ஒவ்வொருவரும் அவர் எதற்காகப் படைக்கப்பட்டாரோ அதை அடைந்தே தீருவார்" [10].

பின்வரும் வார்த்தைகளில் மற்றொரு ஹதீஸும் உள்ளது:

"இறைவன் தனது அடியார் ஒருவருக்கு நன்மை செய்ய நாடினால், அவரை மார்க்கத்தில் விளக்கம் (தஃபக்குஹ்) பெறச் செய்கிறான்" [11]

இது தொடர்பாக, அடிப்படைக் கோட்பாட்டியல் அறிஞர்கள் (உஸூலிய உலமா) மேலும் இரண்டு ஹதீஸ்களையும் காட்டுகின்றனர். அதில் ஒன்று, கல்வி தேடுவதை ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண்ணின் மீதும் கட்டாயக் கடமை ஆக்குகிறது. மற்றொன்று, அறிஞர்களை இறைத்தூதர்களின் வாரிசுகள் என பிரகடனம் செய்கிறது.

மேற்கண்ட இரு ஹதீஸ்களையும் இஜ்திஹாதுடன் சம்பந்தப்படுத்துவதற்கான காரணம், இஜ்திஹாதே இஸ்லாத்தில் படைப்பாற்றல் மற்றும் அறிவுக்கான முக்கிய கருவியாக விளங்குகிறது என்பது தான்.

இஜ்திஹாதிற்கு தொடர்புள்ள குர்ஆனிய வசனங்கள் அனைத்தும் சாத்தியயியல் (ஸவாஹிர்) தன்மை உடையவையாகவே அமைந்துள்ளன. மேலும், அவ்வசனங்கள் மிகுதியாக உள்ளன. மார்க்க அறிஞர்கள் (உலமா) ஒப்பு நோக்கலுக்கு (கியாஸ்) ஆதரவாக மேற்கோள் காட்டும் அதே வசனங்கள் அனைத்தையும் இஜ்திஹாதிற்கு ஆதரவாகவும் குறிப்பிடப்படலாம். மேலும், குர்ஆனின் அத்தியாயம் அத்-தவ்பாவில் கூறப்படுவதாவது:

"ஒவ்வொரு படையிலும் ஒரு பிரிவு பின்தங்கியிருந்தால், அவர்கள் தங்களை மார்க்க விளக்கம் பெறுவதில் ஈடுபடுத்திக் கொண்டு பின்னர் மக்களிடம் திரும்பிச் செல்லும் பொழுது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முடியும். இதன் மூலம் மக்கள் தங்களைத் தீமைகளிலிருந்து பாதுகாக்கப் பழகிக் கொள்ளக் கூடும்." (9:122)

மார்க்கத்தைப் படிப்பதில் முழுமனதாக ஈடுபடுதல் இஜ்திஹாதின் ஆணிவேராகும். அது முஸ்லிம் சமூகத்தினது வாழ்வின் ஓர் தொடர் குணாம்சமாக இருக்க வேண்டும். கல்வி கற்பது ஒவ்வொருவரின் மீதும் உள்ள சுய கடமை என்றபோதிலும் மார்க்க அறிவுத் துறைகளில் புலமை பெறுவது (தஃபக்குஹ்) சமூகத்தை வழிநடத்தி, அறியாமை மற்றும் வழிபிறழ்விலிருந்து காக்க எச்சரிக்கை செய்வோருக்கு அவசியமானது. இதே போன்றதொரு கருத்தில் அத்தியாயம் அல்-அன்கபூத்தில் கூறப்படுவதாவது:

"எவர்கள் நம் வழியில் முயற்சி செய்து பாடுபடுகிறார்களோ அவர்களை நாம் நிச்சயமாக நமது பாதைகளில் வழிநடத்துவோம்" (29:69)

இந்த வசனத்தில் 'சுபுலனா' (நமது பாதைகள்) எனும் சொல் பன்மையில் வந்துள்ளதால் சத்தியத்தை நோக்கி பல பாதைகள் உள்ளன; அவை அனைத்தும் முயற்சி செய்து பாடுபடுவோருக்குத் திறக்கப்படுகின்றன எனும் அர்த்தத்தை இவ்வசனம் வழங்கலாம். மேலும், அத்தியாயம் அந்-நிஸாவில் கூறப்படுவதாவது:

"ஒன்றைக் குறித்து உங்களிடையே சர்ச்சை எழுந்தால், அதை இறைவனிடமும் அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள்" (4:59)

இவ்வசனத்தை அமுல்படுத்த குர்ஆன், சுன்னாஹ் மற்றும் சட்டமளித்தோனின் குறிக்கோள்களை (மகாஸித்) அவசியம் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் இவற்றின் அடிப்படையில் சர்ச்சைகளுக்குத் தீர்ப்புக்கூறி தீர்வளிக்க இயலும்.

இவ்வாறான வழியில் நபித்தோழர்களும் இஜ்திஹாத் செய்து வந்துள்ளனர். அவர்களின் ஒருமித்த கருத்து அதற்கு ஆதரவாக முன்வைக்கப்படுகிறது. சர்ச்சைகளுக்குத் தீர்வு தேடுகையில் அவர்கள் குர்ஆன், சுன்னாஹ்வை அணுகி, அவற்றின் அடிப்படையில் தீர்ப்பளிப்பர். ஆனால், அவற்றிலிருந்து தேவையான வழிகாட்டுதல்களை பெற இயலாவிட்டால் இஜ்திஹாதின் உதவியை நாடுவார்கள்.

நபித்தோழர்கள், இறைத்தூது மூலங்களில் நேரடியாக சட்டத்தை கூறும் வாக்கியம் (நஸ்ஸ்) இல்லாத பொழுது இஜ்திஹாதை பிரயோகித்தனர் எனும் வரலாற்று உண்மை, தொடர் அறிவிப்புகளால் (தவாதுர்) நிறுவப்பட்டுள்ளது. [12]

இஜ்திஹாதிற்கான வாதத்தை கீழ்க்கண்ட யதார்த்த உண்மையிலிருந்து பெற முடிகிறது. அதாவது, ஒருபுறம், ஷரீஆவின் மூல நூல் சட்ட வாக்கியங்கள் (நுஸூஸ்) எண்ணிக்கைக்கு உடபட்டவை; மறுபுறம், சமூக வாழ்வினில் எழும் புதுப்புது அனுபவங்கள் எண்ணிலடங்காதவை. எனவே, அத்தகைய பிரச்சினைகளுக்கு இஜ்திஹாத் மூலம் தீர்வு காண முயற்சி செய்வது சமூகத்திலுள்ள கற்றறிந்தோர் மீது கடமையாகும்.

சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் இஜ்திஹாத் செய்யப்படக் கூடாது என சட்ட அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். அவை,

1.   இறைவனின் இருப்பைக் குறித்து இஜ்திஹாத் செய்யலாகாது. இறைவன் உள்ளான் என்பது மறுக்க முடியாத நிச்சயம் என்பதால், அவனது இருப்பையோ இல்லாமையையோ குறித்த சிந்தனையில் ஈடுபடுவது நிராகரிப்புக்கு வழி வகுக்கும்.

2.   இறைத்தூதர்களின் மெய்மையைப் பற்றி இஜ்திஹாத் செய்யலாகாது. அவர்களின் தூதுத்துவ உள்ளுணர்வை சிந்தனைக்கு உட்படுத்துவது நிராகரிப்புக்கு நிகரானதாகும்.

3.   திருக்குர்ஆனின் நம்பகத்தன்மை குறித்தும் இஜ்திஹாத் செய்யலாகாது. [13]

ஒருவர் இஜ்திஹாத் செய்வதில் ஈடுபடுபவராக (அல்-முஜ்தஹித்) ஆவதற்கு அவர் இஸ்லாமிய மார்க்கம், சுன்னாஹ், ஃபிக்ஹ், மார்க்க சட்ட கோட்பாட்டியல் (உஸூல் அல்-ஃபிக்ஹ்) ஆகியவற்றைப் பற்றியெல்லாம் கற்றறிந்து இருக்க வேண்டும். இது தொடர்பாக, அவர் பின்வரும் பண்புநலன்களை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும்:

1.   அவர் குர்ஆனிய பாடத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும். வசனங்கள் இறக்கியருளப்பட்ட காரணங்களை (அஸ்பாப் அந்-நுஸூல்) அறிந்திருக்க வேண்டும்.

2.   அவர் நபிமொழி, நபிவழிப் பாடத்திலும் புலமை பெற்றிருக்க வேண்டும். அதாவது, உண்மை ஹதீஸ்களை பொய் ஹதீஸ்களிலிருந்து வேறுபடுத்துதல், பலமான ஹதீஸ்களை (ஹஸன்) பலவீனமான ஹதீஸ்களிலிருந்து (ழஈஃப்) வேறுபடுத்துதல் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்.

3.   அவர் ஒருமித்த முடிவின் (இஜ்மா) கோட்பாடுகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

4.   அவர் ஒப்பு நோக்கலின் (கியாஸ்) சட்ட திட்டங்களையும் அதைச் சூழ்ந்துள்ள நிபந்தனைகளையும் தெரிந்திருக்க வேண்டும். [14]

முஜ்தஹிது (இஜ்திஹாது செய்பவர்) அறிவில் மட்டுமல்லாது அறநெறியிலும் சிறந்து விளங்க வேண்டும். அவரிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள் பின்வருமாறு:

1.   அவர் ஒரு நல்ல முஸ்லிமாக இருக்க வேண்டும். அதாவது, வெறும் பெயரளவில் மட்டுமல்லாமல் நடைமுறை முஸ்லிமாகத் திகழ வேண்டும்.

2.   அவர் பயபக்தி மிக்கவராகவும், குர்ஆனிய சட்ட திட்டங்கள் முழுவதையும் பின்பற்றி நடப்பவராகவும் இருப்பது அவசியம்.

3.   அவர் மார்க்க எதிர் நூதன நம்பிக்கைகளின் தாக்கங்களுக்கு ஆளாகியிருத்தல் கூடாது.

4.  அவர் நீதி, நியாயம் மிக்கவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் அநீத பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டவராகவும் விளங்க வேண்டும் [15].

முஜ்தஹிதுகளை (இஜ்திஹாதில் ஈடுபடுவோரை) மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

1.   அல்-முஜ்தஹித் ஃபீ அஷ்-ஷரீஆ: இவர்கள் ஷரீஆ விஷயங்களில் இஜ்திஹாத் செய்தவர்கள். இவ்வகையினுள் நபித்தோழர்கள் முதல் மூன்றாம் இஸ்லாமிய நூற்றாண்டு வரை வாழ்ந்த சட்ட மேதைகள் அடங்குவர்.

2.   அல்-முஜ்தஹித் ஃபீ அல்-மத்ஹப்: இவர்கள் இஜ்திஹாத் செய்து, பிற்காலத்தில் ஏற்பட்ட சட்ட சிந்தனா வழிமுறைகளை தோற்றுவித்தவர்கள்.

3.   அல்-முஜ்தஹித் ஃபீ அல்-மஸாயில்: இவர்களே தற்கால முஜ்தஹிதுகள் (இஜ்திஹாத் வல்லுநர்கள்). சகல மார்க்க விஷயங்களிலும் ஃபத்வா வழங்குபவர்கள். [16]

இஸ்லாமிய சட்டத்தில் இஜ்திஹாதின் தன்மையும், மகிமையும்

இஸ்லாமிய சட்டத்தின் இயல்பு, குறிக்கோள், செயல்பாடு ஆகியவற்றை உற்று நோக்குவதன் மூலம் இஜ்திஹாதின் முக்கியத்துவத்துக்கு மேலும் வலுசேர்க்க முடியும்.

அநேக சட்ட அறிஞர்கள் ஷரீஆவின் குறிக்கோள்களை சமய வழிபாடுகள் (இபாதத்), உலகியல் பரிமாற்றங்கள் (முஆமலாத்) என இரண்டாக வகுத்துள்ளனர் [17]. வழிபாடுகள் (இபாதத்) திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றின் செயல்முறைகள் குர்ஆனிலும் சுன்னாஹ்விலும் விலாவாரியாகக் கூறப்பட்டுள்ளன. எனவே, அவற்றில் விரிவான இஜ்திஹாத் செய்வதற்கான வாய்ப்பு அதிகம் இல்லை [18]. 

உலகியல் பரிமாற்றங்களை (முஆமலாத்) பொறுத்தவரை முக்கியமாக - மனித சமுதாயத்தின் வேறுபாடுகள், தொடர்ச்சியான மாறுதல் நிலைமைகள் ஆகியவற்றால் - அவற்றை மனித பகுத்தறிவால் கண்டறிந்து கொள்ள முடியும். எனவே, முஸ்லிம்களின் உலகியல் உறவுகளை (முஆமலாத்) வரையறுத்துச் சீரமைக்கும் பணி அவர்களிடமே விடப்பட்டுள்ளது. எனில், முஸ்லிம் சமூகம் தனது மனித உறவுப் பிரச்சினைகளைத் தீர்க்க, சமாளிக்க தானே தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். எனினும், இதை குர்ஆன், சுன்னாஹ் வழங்கும் (சில) பொதுவான வழிகாட்டுதல்களின் கட்டமைப்பினுள் செய்து கொள்ள வேண்டும் [19].

இவ்வழிகாட்டுதலின் முக்கியக் குறிக்கோள், இஸ்லாமியச் சட்டத்தின் உயிரோட்டத்தை வரையறுத்துச் சொல்வதாகும். அதன் நோக்கங்களான சமூக நீதியை நிலைநாட்டுதல், மத நம்பிக்கை மற்றும் பின்பற்றும் உரிமையை (சுதந்திரத்தை) உறுதிப்படுத்துதல், சமூகத்தார் அனைவருக்கும் வாய்ப்பு அளித்தல் ஆகியவற்றை முன்னிறுத்துவதாகும் [20].

சமூக நீதியை எவ்வாறு நிலை நிறுத்துவது? என்பதற்கான செயல்திட்டங்களை வகுக்கும் பணி முஸ்லிம் சமுதாயத்திடமே விடப்பட்டுள்ளது. அது இஜ்திஹாதின் வேலையாகும்.
மேலும், இஜ்திஹாதை இஸ்லாமியச் சட்ட வளர்ச்சிக்கான வாகனமாக கருதலாம். நபித்தோழர்கள் இஜ்திஹாதின் வாயிலாக எடுத்த முடிவுகள் ஒருமித்த முடிவாக (இஜ்மா) உருவாகி, அது பிற்காலத்தில் இஸ்லாமிய சட்ட அமைப்பியலின் நான்கு மூலங்களுள் ஒன்றாக கருதப்படலானது. மேலும், இஜ்திஹாதை தொடர்ந்து பயன்படுத்தியதன் மூலமே இஸ்லாமிய சட்ட, சிந்தனா வழிமுறைகள் தோற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டன.

இஜ்திஹாத், நமது பார்வையில், சார்பு தன்மையுள்ள மனித அறிவிலிருந்தே பிறக்கின்றது என்றபோதிலும், அது இஸ்லாமிய சட்ட அமைப்பின் ஓர் தவிர்க்கவியலாத உள் உறுப்பாகும். (வேர்ப் பொருள் ஆகும்) [21]. இவ்வுண்மைக்கு ஏராளமான விஷயங்கள் ஆதரவளிக்கின்றன. அவற்றுள் சில:

1.   குர்ஆனும் சுன்னாஹ்வும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படைகள் மட்டுமே. இவ்வடிப்படை மூலாதாரங்களின் மீது அறிவை பிரயோகிப்பதே சட்டத்தின் அசல் மூல ஊற்றாகும். இக்கருத்தை மிகத் துல்லியமாக எச்.ஏ.ஆர் கிப் பின்வரும் சொற்களில் உரைத்துள்ளார்:

·         குர்ஆனும் சுன்னாஹ்வும் அதிகமாக குறிப்பிடப்படுவதைப் போன்று, இஸ்லாமிய சட்ட சிந்தனையின் மூல ஊற்று அல்ல. அவை அடிப்படை மூல ஆதாரங்கள் மட்டுமே. அசல் மூல ஊற்றின் அடித்தளம் மனச்சாய்விலேயே ஒளிந்துள்ளது. அதுவே மூல அடிப்படை ஆதாரங்களைப் பயன்படுத்தும் முறைகளை நிர்ணயித்துள்ளது [22].

ஷரீஆ என்பது மனித நடத்தையை நிர்வகிப்பதற்காக இறைவன் விதித்த விதிமுறைகளின் முழுத் தொகுப்பாகும். அது அல்-ஹுக்ம் அஷ்-ஷர்ஈயின் ஒட்டுமொத்தத் திரட்டாகும். அது இறை கட்டளை என்ற போதிலும் அதன் விதிமுறைகளுள் சில மட்டுமே - மனித சௌகரியத்துக்காக – துல்லியமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன; மற்றபடி, பொதுவாக மனிதன், தானே அவற்றை அவற்றின் மூலங்களிலிருந்து பெற்றெடுத்துக் கொள்ள வேண்டும் எனும் விஷயம் இஸ்லாமிய சட்ட அமைப்பில் கவனமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வித்தியாசத்தை கருத்தில் கொள்ளும் பொழுது, ஷரீஆ இறைவன் விதித்த சட்டங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு எனும் அந்தஸ்த்தில் புனித கிரந்தங்களில் முற்றிலும் வெளிப்படையாக இல்லை எனும் முடிவுக்கு வர முடிகிறது.

அவ்வாறு இல்லையெனில், புனித மூலங்கள் சட்ட மூலாதாரங்களாக மட்டுமல்லாமல் சட்டமாகவே அமைந்துவிடும். அதாவது, இறை அருளிய சட்ட விதித் தொகுப்பாக விளங்கும் [23].
      
உண்மையில், சட்டக் கருவிகள் சட்டத்தை உரைக்கும் பாணியில் - சட்டவியல் கோணத்தில் - புனித மூலங்கள் சட்டத்தை உரைப்பதில்லை. எனினும், அவற்றினுள்  சட்டம் உள்ளது. சட்ட ரீதியாக துல்லியமில்லாததும், சிலவேளைகளில், திட்டவட்டமில்லாததுமான புனித ஏட்டு வாக்கியங்களுள் சட்டம் புதைந்து கிடக்கிறது. அதனால்தான், சட்டம் ஏடுகளிலிருந்து கறந்து எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவேதான், வேத வாக்கியங்கள் சட்டத்தின் மூலங்களாகக் கருதப்படுகிறதே தவிர சட்டமாகவே எடுத்துக் கொள்ளப்படுவதில்லை [24].

2.   அடுத்து ஒருபுறம், சட்ட விஷயங்கள் பற்றி குறிப்பிட்ட அளவே பேசுகின்றன. மறுபுறம், தற்கால மனித சமூகங்களில் நிகழும் சம்பவங்கள் எண்ணிலடங்காதவை [25]. எனவே, எண்ணிக்கைக்கு உட்பட்ட குர்'ஆன், சுன்னாஹ் வாக்கியங்களுக்கும், எண்ணிலடங்கா முஸ்லிமினது தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்கும் உள்ள இடைவெளியை குறுக்கவே இஜ்திஹாத் அறிமுகப்படுத்தப்பட்டு, தீர்வளிக்க வல்லதாகக் கருதப்படுகிறது [26].

குர்ஆனில் குறிப்பிட்ட அளவிலேயே நேரடியாக சட்ட விஷயங்கள் கூறப்படுகின்றன எனும் கருத்து, குர்ஆன் விரிவான கோட்பாடுகளையே வழங்குகிறது எனும் அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. இவ்விரிவான கோட்பாடுகளிலிருந்து வெவ்வேறு தலைமுறை சட்ட அறிஞர்களும் சட்டத்தைப் பெற்றுக் கொள்ள உதவும் வகையில் அவை அமைந்துள்ளன. இவ்வாறு பெறப்படும் சட்டங்கள் முஸ்லிம்களுக்குப் பொருந்தும். இஸ்லாமிய சட்டம் இறைத்தூதர் (ஸல்) மூலமே இறைவேதத்தில் தனது அடிப்படையைத் தேடிக்கொள்கிறது எனும் சில அறிஞர்களின் கண்ணோட்டத்தை லியோன் ஓஸ்ட்ராக் [27], ஃபிட் ஜெரால்ட் ஏற்க மறுக்கின்றனர். மூலங்கள் இறைவனால் அருளப்பட்டவை என்பதால், அவை புனிதமானவை; முடிவானவை; நிரந்தரமானவை. எனவே மாற்றத்துக்கு உட்படாதவை என நம்பப்படுகின்றன [29].

முஸ்லிம் சட்ட அறிஞர்களும் இதே கண்ணோட்டத்தை முன் வைக்கின்றனர். அவர்களது கூற்றில், குர்ஆன் அடிப்படையில் ஓர் மார்க்க வழிகாட்டி நூல் என்பதால் அது சட்டவியலுக்குச் சிலாக்கியமான குறிப்புரை அல்ல என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். ஓர் வழிகாட்டி நூல் எனும் வகையில், குர்ஆனில் மூன்று வகைக் கட்டளைகள் உள்ளன. நம்பிக்கையின் அம்சங்கள், ஒழுக்கவியல் மற்றும் சமூக, அரசியல் சட்டதிட்டங்கள். குறைந்த எண்ணிக்கையிலேயே சட்ட திட்டங்கள் உள்ளன. அவை முழு வேதத்திலும் பத்து சதவீதத்தைக் கூடத் தாண்டுவதில்லை.

எழுபது விதிமுறைகள் குடும்பவியல் சட்டத்திற்கும், இன்னொரு எழுபது பொதுச் சட்டத்திற்கும், முப்பது தண்டனைச் சட்டத்திற்கும், பதிமூன்று நீதிபரிபாலனை மற்றும் செயல்முறைகளுக்கும், இதுபோன்ற வேறு சிலவற்றிற்கும் குறிப்பிடப்பட்டுள்ளன [30]. ஆகவே முஹம்மது ரஷீத் ரிழா பின்வரும் வாதத்தை முன்வைத்தார்:

"குர்ஆன் பத்து சதவீதமே சட்ட விதிமுறைகளைப் பற்றிப் பேசுகிறது. ஏனெனில், மனிதன் தனது உலகியல் விஷயங்களை சுயமாக நிர்ணயிக்க விசாலமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்; அதை அவன் சுய பகுத்தறிவை (இஜ்திஹாதை) பயன்படுத்தியும், சமூக அனுபவத்தைக் கொண்டும் செய்து கொள்ள வேண்டும் என்பது குர்ஆனின் உள்நோக்கமாகும்." [31]

3.   மூன்றாவது விஷயம், இஸ்லாமிய சட்டம் முழுமை பெற்றதும் அனைத்து இடம், காலம், சூழ்நிலைகளுக்கும் ஆட்சேபனை அற்றதும் ஆகும். எனினும், அது தினமும் மாறும் மனித சமூகத்தின் சவால்களை எதிர்கொள்கிறது [32].

இஸ்லாமிய சட்டத்தின் முழுமைத் தன்மையை ஷாஃபியீயின் கூற்றிலிருந்து விளங்கிக்        கொள்ளலாம். அவர் வாதிட்டதாவது, முஸ்லிம் சமூகத்தினுள் நிகழும் ஒவ்வொரு      பிரச்சினைக்கும் ஷரீஆவினால் குறிப்பிடப்படும் ஒரு சட்டம் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டியதாக உள்ளது. அப்படி அது குறிப்பிடப்படவில்லை எனில், அதை இஜ்திஹாத் மூலம் ஒரு முஜ்தஹித் உருவாக்கித் தர வேண்டும் [33].

மேலும், குர்ஆன் மற்றும் சுன்னாஹ்விலிருந்து இறை ஒழுங்கமைப்பைக் கண்டறிவது முஜ்தஹிதுக்குத் தரப்பட்டுள்ள முக்கியப் பணியாகும். ஏனெனில், அவர்களது ஆய்விலிருந்து பெறப்படும் ஓர் ஒழுங்கமைப்பு இறைநியதியாகக் கருதப்படுகிறது [34]. ஆக, நபி (ஸல்) அவர்கள், முஃப்தி மற்றும் முஜ்தஹிதுகளின் அந்தஸ்து இறை சட்டத்திற்கு வியாக்கியானம் அளிப்போராக (ஷர்ஈ) கருதப்படுகிறது. எனினும், இதை அவர்கள் இறைவனது தரப்பினர் என்ற வகையிலேயே செய்கின்றனர்; அதற்கான தனிப்பட்ட சுய உரிமை அவர்களுக்கு இல்லை [35].

இஸ்லாமிய சட்டத்தின் இயக்கத்துடிப்பு பற்றிய எண்ணம்

எமது அபிப்பிராயத்தில், சமூக மாற்றமும் இஸ்லாமிய சட்டமும் எனும் பிரச்சினையைக் குறித்து முஸ்லிம் அறிஞர்களும் மேற்குலக அறிஞர்களும் முற்றிலும் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளனர். இது, இரு தரப்பினருக்கும் இடையில் மிக மிக கருத்து முரண்பாடுள்ள விஷயமாக இருந்து வந்துள்ளது.

முதலாவதாக, ஹர்குரோஞ், ஷாக்த் போன்ற மேற்குலக பேரறிஞர்களினதும், அநேக மரபுவாத முஸ்லிம் சட்ட அறிஞர்களினதும் கருத்துப்படி, இஸ்லாமியச் சட்டம் - அதன் கருத்து - உருவிலும் அதன் வளர்ச்சி மற்றும் முறைமைகளின் இயல்பிற்கு ஏற்பவும் மாற்றத்துக்கு உட்படாதது; நகர்வற்றது; இறுக்கமானது. எனவே, சமூக மாற்றத்துக்கு ஏற்ப ஒத்தமைக்க இயலாதது [36]. 
இக்கண்ணோட்டத்திற்கு அவர்கள் முன்வைக்கும் முக்கிய வாதங்களின் சாரம் பின்வருமாறு [37]:

1.   இஸ்லாமியச் சட்டம் மாற்றத்துக்கு உட்படாதது. ஏனெனில், இஸ்லாமிய சட்டத்துவம் எதேச்சதிகாரமானது, தெய்வீகமானது, நிரந்தரமானது, இறுதியானது. ஆகையால், சட்டயியல் கருத்துப் படிவங்களிலும் சட்ட நிறுவனங்களிலும் அது மாற்றங்களை அனுமதிப்பதில்லை. இதன் ஓர் விளைவாக, சட்டத்திற்கான ஒப்புதலும் தெய்வீகமானது. எனவே மாற்றமுடியாதது.

2.   இஸ்லாமிய சட்டம் மாற்றத்துக்கு உட்படாதது. ஏனெனில், தனது வடிவமைப்பு காலத்தின் போதுள்ள தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் இயல்பினால் அது சட்ட, சமுதாய மாற்று நிறுவனங்களிலிருந்து, அதாவது வழக்கு மன்றங்கள், அரசு ஆகியவற்றிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது.

3.   அது மாற்றத்துக்கு உட்படாதது. ஏனெனில், போதிய சட்ட மாற்ற முறைமைகளை அது தன்னகத்தே வளர்த்துக் கொள்ளவில்லை.

இரண்டாவதாக, அநேக நவீன முஸ்லிம் சட்ட அறிஞர்கள் மாற்றுக் கண்ணோட்டம் கொண்டுள்ளனர். அதாவது, பொது நலன் கோட்பாட்டை (மஸ்லஹாஹ்) கருத்தில் கொள்ளுதல் போன்ற சட்ட கோட்பாடுகள், நடைமுறையில் இஸ்லாமிய சட்டத்தில் நெகிழ்வு, இஜ்திஹாதின் மீதான வலியுறுத்தல் ஆகிய மூன்றிலிருந்தும் இஸ்லாமிய சட்டம் சமூக மாற்றத்துக்கு ஏற்ப ஒத்தமைக்க வல்லது எனவே இறுக்கமற்றது என வாதிடுகின்றனர் [38].

இப்னு கைய்யிம் இஸ்லாமிய சட்டத்தின் பரிணாமத்தைப் பற்றி விவாதிக்கையில், சட்ட வியாக்கியானம் இட, கால, நோக்க, பண்பாட்டு மாற்றங்களுக்கு ஈடாக மாறவேண்டும் என விளக்குகிறார். மாற்றத்தின் காரணம் மறைந்து போனால் அதன் அடிப்படையில் உண்டான விதிமுறைகளும் மாற வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும். எனவே, உண்மையில் ஓர் ஷரீஆ விதிமுறை அதன் காரணத்தின் அடிப்படையிலேயே உள்ளது. காரணம் அகன்றால் விதிமுறையும் நீக்கப்படவேண்டும் [39].

சில சட்ட அறிஞர்கள், மூல வாக்கியங்களினது விளக்கம் அல்லது வியாக்கியானத்திலேயே மாற்றம் கூடும் என்பதையும் சாத்தியம் என்பதையும் மூன்று காரணங்களுக்காக ஏற்றுக் கொள்கின்றனர். ஒன்று, அவற்றின் காரணத்திலேயே மாற்றம். இரண்டு, அவை எந்த பண்பாட்டின் அடிப்படை மீது நிற்கிறதோ அதில் மாற்றம். மூன்று, தேவை அல்லது பொது நலனுக்குத் தீர்வளித்தல் [40].

ஷாதிபீயின் வாதப்படி, மக்காவில் இறக்கியருளப்பட்ட அடிப்படை கோட்பாடுகள் நிரந்தரமானவை. அவை ஒருபோதும் மாற்றப்படவோ ரத்து செய்யப்படவோ இல்லை. ஏனெனில், அவை அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், ரத்து செய்தலோ (நஸ்ஃக்) குறிப்பிட்ட விவரண நுணுக்கங்களுக்கு மட்டுமே பிரயோகிக்கப்பட்டது. பொதுவான கோட்பாடுகளுக்கு அல்ல [41]. எனினும், தனிப்பட்ட விவகாரங்களில் சட்ட மாற்றம் சாத்தியமாகும். எனவே, இவ்விஷயத்தில் இரண்டு சட்ட நிறுவனங்களை ஈடுபடுத்தும் தேவை உள்ளன. ஒன்று, மார்க்கத் தீர்ப்பு (இஃப்தா), மற்றொன்று நீதித் தீர்ப்பு நிர்ணயம் (கழா).

அவர் நீதித் தீர்ப்பு நிர்ணயம் (கழா), ஃபுத்யா இரண்டையும் நிர்வாகத் துறைகளாக (விலாயத்) கருதினார். அவற்றை நிறுவுவது, அரசை நிறுவுவது போன்று, கூட்டுக் கடமை (ஃபர்ள் கிஃபாயா) ஆகும் எனக் கருதினார் [42].

நவீன வாழ்வை எதிர் கொள்வதில் இஸ்லாமிய சட்டத்தின் இயல்பு பற்றி விவாதிக்கையில் அநேக மேற்குலக அறிஞர்கள் ஓர் நம்பிக்கையற்ற பார்வையிலேயே இஸ்லாமிய சட்டத்தை வழங்குகின்றனர். இவ்விதப் பார்வை இஜ்திஹாதின் 'கதவடைப்பு' எண்ணத்திலேயே வேரூன்றியிருந்தது. எனினும், அக்காலகட்டத்திய இஜ்திஹாதின் கதவடைப்பு பற்றி நிலவுவதாகக் கூறப்படும் எண்ணங்கள் அடிப்படையற்றவையாகவும், பொருத்தமற்றவையாகவும் தோன்றுகின்றன.

இந்த அடைப்பு, அடிப்படை கோட்பாடுகளில் இஜ்திஹாதை (இஜ்திஹாத் முக்லக்) மட்டுமே குறித்துச் சொல்லப்படுவதாகத் தெரிகிறது; மற்ற இஜ்திஹாதிய வடிவங்களை அல்ல [43].

மேற்கூறிய எமது கண்ணோட்டம் ஏராளமான உண்மைத் தகவல்களின் அடிப்படையில் ஏற்பட்டது: ஒன்றாவது, இஜ்திஹாத் செய்ய ஆற்றல் படைத்தவர்கள் மேற்குறிப்பிட்ட காலகட்டத்திலும், அதன் பிறகு என்றென்றும் இருந்து வந்துள்ளனர். பின்னர், சட்ட சிந்தனா வழிமுறைகளின் வடிவமைவின் பிறகு இஜ்திஹாத் முன்னோக்குச் சட்டத்தை வளர்க்க உபயோகிக்கப்பட்டது [44]. மூன்றாம், நான்காம் நூற்றாண்டுகளிலிருந்து முஜ்தஹிதுகள் சட்டத்திற்கு மிக அசலான சுய கண்ணோட்டங்களை எடுத்தியம்பினர்.

இவ்வகையினரின் சம்பூர்ண எடுத்துக்காட்டுகள்: இப்னு ஸுரைஜ் (மறைவு: 306), அத்-தபரீ (ம.301), இப்னு குழைமா (ம.311), இப்னு முன்திர் (ம.316) போன்ற அறிஞர்களாவர் [45]. அக்காலகட்டத்தில் பொதுவாக, நடைமுறையிலிருக்கும் ஓர் சட்ட சிந்தனா வழிமுறையில் இணைந்து கொள்வதும் முன் சென்ற அதிகாரபூர்வ சட்ட அறிஞர்களின் கருத்துக்கு புதிய விளக்கங்கள் அளிப்பதுமே பொதுவான வழக்காக நிலவிய போதிலும், பல சட்ட அறிஞர்கள் - குறிப்பாக ஷாஃபியீ மற்றும் ஹனஃபி வழிமுறையைச் சேர்ந்தோர் - பாரம்பரிய சிந்தனா வழிமுறைகளினால் நிறுவப்பட்ட கொள்கைகளுக்கு வெளிப்படையாகவே முரண்பட்டனர் [46].

இரண்டாவது விஷயம், இக்காலகட்டத்தில் இஜ்திஹாதிய கருத்தியலை விவாதிக்கும் மார்க்க சட்ட கோட்பாட்டியலை (இல்ம் உஸூல் அல்-ஃபிக்ஹ்) எழுதியியம்பும் பணி தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது. எடுத்துக்காட்டாக, ஹனஃபி முன்னோக்கு சட்டக் கொள்கைகள் இக்காலகட்டத்தினில் தீட்டி மெருகூட்டப்பட்ட உச்ச தரத்தை எட்டியிருந்தன. இதை இப்னு குழைமாவின் படைப்புகளிலிருந்து அறிந்து கொள்ள முடியும் [47].

மேலும், ஷய்பானீ, தஹாவி போன்ற இன்ன பிற சட்ட அறிஞர்களினது படைப்புகள் போதிய வளர்ச்சி பெற்ற சட்ட சிந்தனை அமைப்பினைப் பிரதிபலிப்பதில்லை. மாறாக, தலைப்புகளை வரிசைப்படுத்துவதில் சீரற்ற தன்மையும், ஒவ்வொரு முடிவுக்குமான வாத முறையை எடுத்து வைப்பதில் பொடுபோக்கும் காணப்படுகின்றன. இவை, ஆரம்பகால சட்ட அறிஞர்களினது எழுத்துக்களின் குணாதிசயங்களாகிவிட்ட தெளிவு குறைவு மற்றும் பூரணமின்மையை சுட்டிக்காட்டுவதற்குப் போதுமான சாட்சியங்களாகும் [48]. இந்தக் குழப்பம் பிற்கால மார்க்க அறிஞர்களாலேயே களையப்பட்டது.

எடுத்துக்காட்டாக, ஷாஃபியீ ஒப்பு நோக்கலையும் (கியாஸ்) இஜ்திஹாதையும் ஒரே அர்த்தமுடைய, ஒற்ற கருத்தைக் குறிக்கும் இரு அருஞ்சொற் பொருள்களாகக் கருதினார். எனினும், கஸ்ஸாலி, இப்னு ருஷ்த் போன்ற பிற்கால சட்ட அறிஞர்கள் இந்த சிந்தனையை மறுத்துரைத்தனர்.

அவர்கள் பார்வையில், கியாஸை விட இஜ்திஹாத் பொதுவானதாகும். அதாவது, ஒப்புநோக்கல் (கியாஸ்) இஜ்திஹாதின் ஓர் வடிவமாகும். எனவே, முன்னது பின்னதிற்கு உட்பட்டு உள்ளதே தவிர பின்னது முன்னதுக்கு உட்பட்டதல்ல.

இஜ்திஹாத் என்பது ஒருவர் சத்தியத்தைத் தேடி, அதன் பால் வழிகோலும் அடையாளங்கள் மூலம் அதை அடைய எடுக்கும் மிகச் சிறந்த முயற்சியாகும். மாறாக, ஒப்புநோக்கல் என்பதோ, பொது மதிப்பின் அடிப்படையில் அசல் மற்றும் நிகர் பிரச்சினையை ஒப்பிடுதலைக் குறிக்கிறது. எனவே, இஜ்திஹாத் என்பது ஒப்பு நோக்கலைப் போன்றதன்று. உண்மையை எட்டுவதற்கு பல இஜ்திஹாதிய வழிமுறைகள் இருக்கலாம். அவற்றுள் ஒன்றுதான் ஒப்பு நோக்கல் (கியாஸ்) [49].

சட்ட அறிஞர்கள், இஜ்திஹாதை பிரயோகிப்பதற்கு ஆதரவாக பெருவாரியான குர்ஆனிய வசனங்கள், சுன்னாஹ், நபித்தோழர்களின் ஒருமித்த கருத்து (இஜ்மா) மற்றும் மனித பகுத்தறிவை மேற்கோள் காட்டி நியாயப்படுத்துகின்றனர் [50].

இஜ்திஹாத் செய்வதைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்துவதற்காக சட்ட அறிஞர்கள் ஓர் நிபந்தனை விதிவரிசையை உருவாக்கியுள்ளனர். அக்காரியத்தினுள் காலெடுத்து வைக்க விரும்பும் சட்ட அறிஞர்கள் அவற்றையெல்லாம் பூர்த்தி செய்திருக்க வேண்டும். சில வேளைகளில், இந்த நிபந்தனைகளை விவரிப்பதன் மூலம் இரு விஷயங்கள் நிரூபணமாகின்றன. அதாவது, முன் காலத்தைப் போன்றல்லாது பிற்காலத்தில் சட்ட தத்துவத்தின் தகுதித் தேவைகளை அடைவது எளிதாகிவிட்டது என்பதும், அவை இஜ்திஹாதிய செயல்பாடுகளுக்கு தடையாக அமைவதை விட வழியமைத்துக் கொடுத்தன என்பதும் நிரூபணமாகின்றன [51].

ஆக, இக்காலகட்டத்தில் சட்ட அறிஞர்களின் பணி வெறுமனே முன்சென்ற மேதைகளின் ஆக்கங்களுக்கு விரிவுரை அளிப்பதோடு நின்றுவிடவில்லை எனும் முடிவுக்கு வர முடிகிறது [52]. உண்மையில், இவர்கள் முன்னோர்களின் படைப்புகளை மேலும் நன்றாய் உறைந்த, வரையறுக்கப்பட்ட கருத்தியலாக மாற்றியமைத்து உயர்த்தினர்.

இஸ்லாமியச் சட்டம் நவீன காலத்தை எதிர்கொள்வதற்கான மாற்றத் துடிப்பைப் பெற்றுள்ளது என நிரூபிக்க பின்வரும் இரண்டே வாதங்கள் போதுமானது:

1.   முதலாவது, பொது நலன் (மஸ்லஹாஹ்) கோட்பாடாகும். சீர்திருத்தவாதிகள் இஜ்திஹாதை சீர்திருத்துவதில் பொது நலன் (மஸ்லஹாஹ்) கோட்பாட்டை மாற்றாமல் விட்டு வைத்ததன் நோக்கத்திற்குப் பல காரணங்கள் அடிப்படையாக உள்ளன. அவை, இஸ்லாமியச் சட்டத்தின் மாற்றத் துடிப்பு மற்றும் மனிதாபிமான நிலையை நிலைநாட்டுவது குறித்த காரணங்களாகும். மேலும், அவர்களது பார்வையில், இஸ்லாமியச் சட்டம் ஒரு மூடு அமைப்பாக பயன்படுத்தப்படக் கூடாது. ஏனெனில், அதன் மாற்றத் துடிப்பும் உயிர்த்துடிப்பும் காலத்துக்கு ஏற்ப மாறும் திறனைப் பொருத்து அமைந்துள்ளது. அது, 'கால மாற்றம் சட்ட மாற்றத்தை ஏற்படுத்தலாம் (தஃஹய்யுர் அல்-அஹ்காம் பி தஃஹய்யுர் அல்-அஸமான்)' எனும் சொற்றொடரால் குறிப்பிடப்படுகிறது.

தெளிவாக, ஷரீஆவின் பொது கோட்பாடும் நோக்கமும் நிலையானது என்ற போதிலும், பொது நலனுக்கான செயல் வரையறை சூழ்நிலைக்கு ஏற்றவாறே அமைகிறது. எனவே, அது மாற்றத்துக்குரியது. இக்கருத்து அநேக முஸ்லிம் சட்ட அறிஞர்களால் கொள்கை ரீதியாகவும் நடைமுறை விதியாகவும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஷரீஆவின் ஓர் முக்கிய வழிகாட்டி-ஆணையின்படி சட்டங்கள் கால-இட மாற்றத்தின் விளைவாக மாற்றப்படலாம். மேலும், பொது நலன் (மஸ்லஹாஹ்) கோட்பாடும் ஃபிக்ஹு அமைப்பை முஸ்லிம் உலகின் சமுதாய யதார்த்தங்களுடன் தொடர்புபடுத்த முனைந்தது. ஆக, ஃபிக்ஹு வெறுமனே குர்ஆன், சுன்னாஹ் மூலங்களின் அடிப்படையில் மட்டுமின்றி இம்மூலங்கள் பிரயோகிக்கப்படும் நடைமுறைச் சூழ்நிலைகளைப் பொருத்தும் தான் அமைகிறது. மூலத்திற்கும் சூழ்நிலைக்கும் இடையிலான உறவாட்டம் இறுக்கமான இஜ்திஹாதிய கருத்தியலுக்கு ஏற்பு இல்லை என்பதைக் காட்டுகிறது.

2.   அரசியல் ஷரீஆ (ஸியாஸா ஷரீஆ): பொதுவாக, அநேக பாரம்பரிய சட்ட அறிஞர்கள் அரசியல் ஷரீஆ எனும் பதத்தை, சகல கிளைகளையும் உள்ளடக்கிய அரசு நிர்வாகவியலின் கீழ் உள்ள தலைப்புகளை விவாதிக்கும் ஓர் குறிப்பிட்ட இஸ்லாமிய அறிவுத் துறையை குறிக்கப் பயன்படுத்துகின்றனர். இந்த அர்த்தத்தில், இப்பதம், சட்ட அறிஞர்கள் உபயோகிக்கும் இதர சொற்றொடர்களை ஒத்ததாக உள்ளது. சான்றாக, அல்-அஹ்காம் அல்-சுல்தானிய்யா. அரசாட்சிக் கோட்பாடு என இதை மொழி பெயர்க்கலாம்.

மேலும், அரசியல் ஷரீஆ (ஸியாஸா ஷரீஆ) அரசின் சகல துறைகளிலும் கொள்கைகளைப் பின்பற்றுவதையும், சட்டங்களை செயலாக்குவதையும் குறிக்கலாம். அது உள்நாட்டு விவகாரம், வெளியுறவு, அரசியல் சாசனம், நிதியியல், நிர்வாகம், நீதித்துறை எதுவாயினும் சரி. பொது நடப்புகளைத் திறமையாக, சிக்கனமாக நிர்வகிக்க உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் ஷரீஆ (ஸியாஸா ஷரீஆ) எனும் குடைக்குக் கீழ் வரும்.

எனவே, அது சட்டத்தைக் குறித்த விவகாரங்கள் மீது மட்டுமின்றி முழு அரசு விவகார வட்டத்தையும் பற்றி அக்கறை காட்டுவதால், அரசியல் ஷரீஆவினது விஸ்தீரணம் அளவுக்கதிகமாக விசாலம் உடையது. இவ்வகையில், மேற்கண்டவற்றின் ஏராளமான     பிரச்சினைகளைத் தீர்க்க இஜ்திஹாதின் பணியும், பங்கும் மிக முக்கியம் வாய்ந்தது.

இன்றைய முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார, சமுதாய, அரசியல் நிலைமைகள் ஆரம்ப காலத்தினதிலிருந்து முற்றிலும் வேறுவிதமாக மாறியுள்ளன. இந்தச் சூழல் மாற்றம் பற்றி இப்னு ஃகல்தூன் தனது முகத்திமாவில் விவரித்துள்ளார்:

உலகம் மற்றும் தேசங்களினது நிலைமைகள், பண்பாடுகள், குழுப்பிரிவுகள் ஆகியவை எந்தவிதக் குறிப்பிட்ட முறையையோ அல்லது திட்டத்தையோ பின்பற்றுவதில்லை. இவை எப்பொழுதுமே காலத்துக்குக் காலம், சூழ்நிலைக்குச் சூழ்நிலை மாறுபடுகிறது. இந்நியதி மனிதர்கள், காலங்கள், மாகாணங்களுக்குப் பொருந்தும் அளவு நாடுகள், யுகங்கள் மற்றும் அரசுகளுக்கும் பொருந்துகிறது. இதுவே படைப்பினங்களுக்கு இடையிலுள்ள இறை ஒழுங்கமைப்பாக உள்ளது [53].

எனில், இந்த புதிய, மாற்றமடைந்த நிலைமைகள் சட்ட விதிகள் உட்பட வாழ்வின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கின்றன. எனவே சட்ட விதிகள் புதிய தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும். இதை செய்வதற்காகப் பல பேரறிஞர்கள், விரிவாக இஜ்திஹாதை பயன்படுத்தி நெருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளனர் [54].

எனவே முஹம்மது அப்துஹு, ரஷீத் ரிழா, இக்பால், ஷல்தூத் போன்ற பல நவீனகால சட்ட அறிஞர்களும் சிந்தனையாளர்களும் கண்மூடிப் பின்பற்றலை (தக்லீத்) எதிர்த்தனர். இஜ்திஹாதின் 'கதவடைப்பை' மறுத்தனர். அவர்கள் ஷரீஆவும் நவீன நாகரிகமும் ஒத்து இயங்க முடியும் என நம்பினர். மேலும், அவர்களின் பார்வையில், இஜ்திஹாத் இன்று திறந்தே உள்ளது என்பதோடு அது ஓர் தகுதி பெற்ற சட்ட அறிஞர் மீது கட்டாயக் கடமையும் ஆகும் [55].

இந்த நவீன கால அறிஞர்களின் முக்கிய நோக்கம், இஸ்லாமிய சட்ட அமைப்புக்கு நவீன காலத்தில் மறு வியாக்கியானம் அளிக்கப்பட வேண்டும் என்பதே. இவர்கள் இஜ்திஹாதின் எதிர்கால முன்னேற்றத்திற்குப் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவற்றின் சாராம்சம் பின்வருமாறு:

1.   இஜ்திஹாதிற்குப் பல சிறப்பியல் ஃபிக்ஹு துறைப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டால், அது மேலும் சிறந்து விளங்கும். ஒவ்வொரு குழுவும் ஃபிக்ஹில் ஒரு பொதுப் பாடம் படித்து முடித்த பிறகு தமக்கேற்ற ஓர் சிறப்பியல்புத் துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இதன் விளைவாக, ஒவ்வொரு குழுவும் இஜ்திஹாத் செய்வதில் தத்தமது பங்கை ஆற்றி அதை முழுமைப்படுத்த உதவுவர் [56].

2.   ஒரு சட்ட அறிஞர்களின் (ஃபுகஹா) கூட்டுக்குழுவை நிறுவி கூட்டாக இஜ்திஹாத் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வமைப்பு ஓர் சட்ட அறிஞர்களினது மேல்மட்டக் குழுவையும் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அனைத்துப் புதிய பிரச்சினைகளையும் பரிசீலித்துத் தங்கள் தீர்ப்புகளை வழங்க வேண்டும் [57].

3.   இஜ்திஹாத் அரசு ஒத்துழைப்புடன் செய்யப்பட வேண்டும், இதன் மூலம் அதை உடனுக்குடன் அதிகாரபூர்வ சட்டமாக இயற்ற முடியும் [58].

4.   உலக முஸ்லிம்கள் ஓர் சர்வதேச அளவிலான கூட்டுக் குழுவை கூட்டியமைக்க வேண்டும். இக்கூட்டுக் குழுவில் அங்கம் வகிக்கும் பேரறிஞர்கள் இஸ்லாமிய சட்ட அமைப்பியலிலும், இதர சம்பந்தப்பட்ட இஸ்லாமிய அறிவியல்களிலும் புலமைப் பெற்றிருப்பது அவசியம். அத்தகையதோர் குழு புதிய சட்டப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய சட்ட அடிப்படையில் தங்களது வியாக்கியானங்களையும் தீர்ப்புகளையும் வழங்கும் அதிகாரம் பெற்றிருந்து, உலகெங்கிலும் முஸ்லிம் சமூகத்தின் பொது நலனுக்காக ஆலோசனைகள் வழங்கலாம் [59].

மொத்தத்தில் இன்று இஜ்திஹாத் இரண்டு வகையில் சந்தேகமேயின்றி அவசியமானது. ஒன்று, முந்திய தலைமுறைகள் வழங்கியுள்ள சட்டத் தீர்ப்புகள் அக்கால நிலைமைகள், சூழ்நிலைகளை நோக்கில் கொண்டே அமைந்துள்ளன. அந்தச் சூழ்நிலைகள் நவீன காலத்தில் வெகுவாக மாறியுள்ளதால், பழைய தீர்ப்புகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். இதற்கு இஜ்திஹாத் தேவை.

இரண்டு, முன்பு இருந்திராத புதிய சமகால சட்ட, சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளின் சவால்களை சந்தித்து, அதிவேக மாற்ற உலகில் முஸ்லிம் சமுதாயத்திற்கான சட்ட வழிகாட்டுதல் அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக, அறிவுத் துறை தொடர்ந்து மாற்றத்துக்கு உள்ளாகி, பரிணமித்து மிக அதிவேகத்தில் விரிவடையும் இக்காலத்தில் புதிய வழிகாட்டுதல் தேவை. அதற்கு இஜ்திஹாத் அவசியம்.

சாரமும் முடிவுரையும்

மேலே இடம்பெற்ற விவாதத்தின் அடிப்படையில், இஸ்லாமிய சட்டமே மிக சம்பூர்ணமான சட்டம் எனும் முடிவுக்கு வரலாம். இவ்வுண்மை அதன் மாற்றத் துடிப்பு மற்றும் நவீன யுகத்தை சந்திக்கவல்ல ஆற்றலினாலும் நிரூபிக்கப்படுகின்றது. நமது காலத்தில் இஜ்திஹாதினை மறு உயிர்ப்பிப்பதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகளை ஓர் அரசு கையிலெடுத்துச் செய்ய வேண்டும். கல்வி, அரசினது பொறுப்பும் பணியுமாக இருப்பதால், அது ஒரு முஜ்தஹிது கொண்டிருக்க வேண்டிய அவசியமான கல்வி மற்றும் பயிற்சியை அளிக்க வேண்டும். மட்டுமல்லாமல், இந்த ஸ்தானத்தை அடைவதற்குச் சிறப்புத் தகுதிகளை நிபந்தனையாக்கி இருக்க வேண்டும்.

மார்க்க அறிஞர்களும், கல்வியாளர்களும் தத்தமது தனிப்பட்ட திறமைகளில் செய்யும் பங்களிப்புகளினால் மேலும் சிறந்த தீர்வுகளுக்கும் தீட்டப்பட்ட மாற்றுமுறைகளுக்குமான முடிவில்லா தேடுதலுக்கு வழி வகுக்கப்படும்.

மேலும், அரசும் தனது பங்கிற்கு ஓர் முன்னோக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும். பாரம்பரிய கற்றல் முறைகளின் மிகச் சிறந்த பண்பாட்டைப் பாதுகாப்பதிலும், மார்க்க அறிஞர்களின் சட்ட மற்றும் முன்னேற்றத்துக்கான பங்களிப்பை மேலும் புதுத்திறனூட்ட அவர்களை ஊக்குவிப்பதிலும் அரசு பங்காற்ற வேண்டும். இன்று பல இஸ்லாமிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களும் சட்டத் தொழில் துறைகளும் நவீன சட்ட முறைகளில் சட்ட அறிஞர்கள், வழக்குரைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டுள்ளன.

இவைகளோடு இஸ்லாமிய சட்டவியலிலும் (ஃபிக்ஹு) விஞ்ஞான முறையில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வது ஓர் ஆக்கபூர்வமான போட்டிக்கான அடிப்படையை வழங்கும் என நம்பலாம். மட்டுமல்லாமல், இது இரு தரப்பினருக்கும் மத்தியில் மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்துவதற்கான ஊக்கச் சக்தியாகவும் அமையும். மேலும், சிறந்த முஜ்தஹிதுகளாக விளங்குவதற்கான ஓர் திட்டவட்டமான செயல்வரம்பை ஏற்படுத்தவும் உதவும்.

குறிப்புகள் மற்றும் துணைநின்ற நூல்கள்:

1.   கிரெக் நோக்ஸ், "இஜ்திஹாத், பகுத்தறிவு வாயிலான நம்பிக்கையை புதுப்பித்தலுக்கான ஓர் திறவுகோல்" (ஆங்.); ஹம்தர்த் இஸ்லாமிகஸ், தொ.XVIII, எண்.4, பக். 113.

2.   எட்வர்ட் வில்லியம் லேன், ஓர் அரபி-ஆங்கில சொல் அகராதி (ஆங்.); தொ.II, பக். 473.

3.   இப்னு மன்தூர், லிஸான் அல்-அரப், தொ.III, பக். 133.

4.   இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் (ஆங்.), முதல் பதிப்பு, லீடன், 1026 - எஸ். வி. இஜ்திஹாத்

5.   அப்துர் ரஹ்மான் I.தோய், மேலது, ஷரீஆ: இஸ்லாமிய சட்டம் (ஆங்.), பக். 78.

6.   அல் - குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு, யூசுஃப் அலி, 2:48.

7.   அப்துர் ரஹ்மான் I.தோய், மேலது, பக். 78. மேலும் பார்க்க, ஷாஃபியீ ரிஸாலா, அத்., பக். 296, 297.

8.   முஸ்லிம், ஸஹீஹ் முஸ்லிம் (ஆங்.மொ.பெ.), எண். 976, தொ.III, பக். 930.

9.   கமாலி, கோட்பாடுகள் (ஆங்.), பக். 471.

10.  அல்-புகாரி, ஸஹீஹ், தொ.I, பக். 25, 26; மேலும் பார்க்க, கமாலி, கோட்பாடுகள் (ஆங்.), பக். 471.

11.  மேலது., தொ.I, பக். 25, 26; மேலும் பார்க்க, கமாலி, கோட்பாடுகள் (ஆங்.), பக். 471.

12.  கமாலி, மேலது., பக். 472, 473.

13.  அப்துர் ரஹ்மான் I.தோய், மேலது, பக். 78.

14.  மேலது., பக். 79. மேலும் பார்க்க கமாலி, மேலது., பக் 473-475; அப்துர் ரஹீம், முஹம்மதன் சட்டவியல் (ஆங்.), பக். 169-171.

15.  மேலது., பக். 79.

16.  மேலது., மேலும் பார்க்க அப்துர் ரஹீம், மேலது., பக். 170.

17.  ஷாதிபி, தொ.II, பக். 5, இப்னு அப்த் ஸலாம், கவாயித் அல்-அஹ்காம் ஃபீ அல்-மஸாலிஹ் அல்-அனம், கெய்ரோ, 1934, தொ.I, பக். 1.

18.  மேலது.

19.  மேலது.

20.  அஸ்னவி, தொ., பக். 108.
.
21.  முஹம்மது முஸ்லஹுத்தின், இஸ்லாமியச் சட்டத்தின் தத்துவம் கீழைத்தேயவாதியும்: இஸ்லாமிய அமைப்பைக் குறித்த ஓர் ஒப்பாய்வு (ஆங்.), லாஹூர், 1980, பக். 18, 19.

22.  எஸ். ஏ. ஆர். கிப், முஹம்மதனிஸம் (ஆங்.), நியூயார்க், 1962, பக். 74.

23.  வெய்ஸ்ஸ் பெர்னார்ட், 'இஸ்லாமிய சட்டத்தில் வியாக்கியானம் அளித்தல்: இஜ்திஹாதின் கோட்பாட்டுத் தத்துவம் (ஆங்.)', சட்ட ஒப்பீட்டுக்கான அமெரிக்க சஞ்சிகையில், 2-6-1978, பக். 199-212.

24.  மேலது.

25.  இப்னு ஃகல்தூன், முஹத்திமாஹ், பக். 24.

26.  இப்னு கைய்யிம், அல்-ஆலம் அல்-முவக்கிஈன், கெய்ரோ, 1969, தொ.II, பக். 20,21.

27.  லியோன் ஆட்ரோக், அங்கோரா சீர்திருத்தம், லண்டன், 1982, பக். 17.

28.  ஃபிட்ஜெரால்ட், 'ஷரீஆவின் இயல்பும் மூலங்களும்' (ஆங்.), சட்டமும் மத்தியக் கிழக்கும் (ஆங்.) எனும் படைப்பில், தொ.I, வாஷிங்டன், 1955, பக். 87.

29.  என்.ஜே.கோல்ஸன், ஓர் இஸ்லாமிய சட்ட சரித்திரம் (ஆங்.), எடின்பரோ, 1964, பக். 1,2; லேம்மன்ஸ், இஸ்லாம்: நம்பிக்கையும் நிறுவனங்களும் (ஆங்.) லண்டன், 1929, பக். 82; ஜே. என். டி. ஆண்டர்ஸன், நவீன உலகில் இஸ்லாமிய சட்டம், நியூயார்க், 1959, பக். 7.

30.  'அப்துல் வஹ்ஹாப் ஃகல்லத், ஃகுலஸாஹ் தாரீஃக் அல்-தஷ்ரீ அல்-இஸ்லாமி, பெய்ரூட், 1968, பக். 28, 29; ஃபஸ்லுர் ரஹ்மான், இஸ்லாமும் நவீனத்துவமும்: ஓர் சிந்தனைப் பாரம்பரியத்தின் முழுமாற்றம் (ஆங்.), சிகாகோ மற்றும் லண்டன், 1982, பக். 20; ஸையித் ரமழான், இஸ்லாமிய சட்டம் (ஆங்.), பக். 43.

31.  முஹம்மது ரஷீத் ரிழா, அல்-வஹி அல்-முஹம்மதி, கெய்ரோ, 1931, பக். 225.

32.  சுப்ஹி மஹ்மஸ்ஸானி, பக். 105.

33.  ஷாஃபியீ, அல்-ரிஸாலா, பக். 477.

34.  ஷாஃபியீ, அல்-உம்ம், தொ.III, பக். 261, 274.

35.  ஷாதிபி, தொ.IV, பக். 245.

36.  ஸ்நவ்க் ஹர்குரோஞ், லீடன், 1957, பக். 214-256; ஜே. ஷாக்த், இஸ்லாமிய சட்ட ஆராய்ச்சியின் தற்போதைய நிலை (ஆங்.), அட்டி டெல் டெர்ஸோ காங்கிரஸ்ஸோ டீ ஸவூதி அரபி ஏ இஸ்லாமிகியில், நேபில்ஸ், 1957, பக். 621, 622.

37.  முஹம்மது காலித் மஸூத். இஸ்லாமிய சட்ட தத்துவம் (ஆங்.), இஸ்லாமாபாத், 1977, பக். 5.

38.  முஹம்மது ரஷீத் ரிழா, யுஸ்ர் அல்-இஸ்லாம், கெய்ரோ, 1956, பக். 72; தவாலிபி, அல்-மத்ஃகல் இலா இல்ம் உசூல் அல்-ஃபிக்ஹ், பெய்ரூட், 1965, பக். 442, 450.

39.  இப்னு கைய்யிம், தொ.III, பக். 1; இப்னு ஆபிதீன், நஷ்ர் அல்-அர்ஃப் ஃபீ பினாபஃத் அல்-அஹ்காம் அலா அல்-உர்ஃப், டமாஸ்கஸ், 1906, பக். 17.

40.  சுப்ஹி மஹ்மஸ்ஸானி, பக். 110-105.

41.  ஷாதிபி, தொ.IV, பக். 236.

42.  மேலது, தொ.II, பக். 189, 247. ஃபர்ள் கிஃபாயா என்றால் அது கட்டாயம் இல்லை. சிலர் ஏற்கனவே இந்நிறுவனங்களில் ஈடுபட்டிருக்க வேண்டும். இல்லையெனில், அது (அனைத்து) முஸ்லிம்களின் மீது கட்டாயக் கடமை ஆகிவிடும்.

43.  டபிள்யூ. ஹல்லாக், 'இஜ்திஹாதின் வாசல் அடைக்கப்பட்டதா?' (ஆங்.), மத்திய கிழக்கு ஆராய்ச்சிக்கான சர்வதேச சஞ்சிகையில் (ஆங்.), 1984, பக். 10,11.

44.  ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு முதல் தோன்றி தொடர்ந்து வளர்ந்த மார்க்க சட்ட கருத்து (ஃபதாவா) குவியல்களில் இருந்து இதை விளங்கிக் கொள்ளலாம். மேலது., பக். 89, 96, 126.

45.  கோல்ட்ஸீஹர், ஸாஹிரீக்கள் (ஆங்.), பக். 31; அல்-சுப்கீ, தபாகத் அல்-ஷாஃபியீய்யாஹ் அல்-குப்ரா, கெய்ரோ, 1906, தொ.I, பக். 105, 224; தொ.II, பக். 89, 92, 126 மற்றும் 131.

46.  மேலது., பக். 26.

47.  ஹல்லாக், 'இஜ்திஹாதின் வாசல் அடைக்கப்பட்டதா?' (ஆங்.), பக். 19.

48.  பார்க்க ஒய், மெரான், 'சட்ட சிந்தனை நூல்களின் வளர்ச்சி' (ஆங்.), ஸட்டியா இஸ்லாமிகாவில், 1969, பக். 74, 78, 79.

49.  கஸ்ஸாலி, தொ., பக். 54; இப்னு ருஷ்த், கிதாப் அல்-முஹத்திமாஹ், கெய்ரோ, பு.ப.தொ.I, பக். 25.

50.  அஹ்மது ஹஸன், இஸ்லாமிய சட்ட அமைப்பியலில் ஒப்பீட்டுப் பகுத்தறிவாய்வு (ஆங்.), பக். 39-49.

51.  ஹல்லாக், 'இஜ்திஹாதின் வாசல் அடைக்கப்பட்டதா?' (ஆங்.), பக். 9, 10.

52.  என்.ஜே.கோல்ஸன், ஓர் இஸ்லாமிய சட்ட சரித்திரம் (ஆங்.), பக். 81, 84.

53.  இப்னு ஃகல்தூன், முஹத்திமாஹ், பக். 24, மேற்கோள் மஹ்மஸ்ஸானி, இஸ்லாமிய சட்ட அமைப்பியலின் தத்துவம் (ஆங்.) 1991, தொ. 81, பக். 240.

54.  அப்த் வஹாப் ஸாலெஹ் பாபியேர், 'சமகால இஸ்லாத்தில் பல்வேறு சிந்தனை ஓட்டங்கள்' (ஆங்.), முஸ்லிம் உலகம் (ஆங்.) 1991, தொ.81, பக். 240.

55.  மஹ்மஸ்ஸானி, 'முஸ்லிம் தேய்மான வீழ்ச்சியும் மறுஎழுச்சியும்' (ஆங்.), பக். 188.

56.  முதஹ்ஹரி, இமாமிய்யாவில் இஜ்திஹாத் (ஆங்.), பக். 44, 45; மால்கம், இஸ்லாமிய சீர்திருத்தம் (ஆங்.), பக். 183; கமால் ஃபரூகி, இஸ்லாம்: இன்றும் நாளையும் (ஆங்.) பக். 356, 357.

57.  முதஹ்ஹரி, மேலது., பக். 46; யூசுஃப் அல்-கர்ளாவி, இஜ்திஹாத், பக். 140, 141; அஹ்மது ஹஸன், இஸ்லாத்தில் இஜ்மா கோட்பாடு (ஆங்.), பக். 244; அல்வானி, உஸூல் அல்-ஃபிக்ஹ் அல்-இஸ்லாமி, பக். 69.

58.  அஹ்மது ஹஸன், ஆரம்பகால வளர்ச்சி (ஆங்.) பக். 233; ஸஃபர், பங்களிப்பு (ஆங்.), பக். 87.


59.  பார்க்க அமீனா, பரிணாமம் (ஆங்.), பக். 142.


   குறிப்பு: இக்கட்டுரை, "இஜ்திஹாத்: நவீனகாலச் சட்டச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்துவதன் அவசியம்" எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.