Friday, July 1, 2016

சமூக அமைதி தொடர்

இஸ்லாத்தில் சமூக அமைதி

பாகம்: 1

சையித் குதுப் (ரஹ்)

தமிழில்: அபூ முஜாஹித்


மனித சமூகங்களில் ஆசைகளும் அபிலாஷைகளும் தேட்டங்களும் விருப்பு வெறுப்புகளும் என்றென்றும் பின்னிப் பிணைந்தும், சமூகங்களிடையே ஒன்றுக்கொன்று வேறுபட்டும்தான் கிடக்கின்றன, தனி மனிதனும் குடும்பமும் சமூகத்துடன் இயைந்தும், தத்தமது பங்கு பணிகளுக்குரிய வட்டங்களில் வாழ்ந்து கொண்டும் வருகின்றனர்.

தனிமனிதர்களுக்கிடையேயான தொடர்பு என்பது மோதல் மற்றும் போராட்டத்தின் பாற்பட்டதாகும் என்றும், தனிமனிதனுக்கும் அரசாங்கத்திற்குமிடையேயான தொடர்பு அடக்குமுறை மற்றும் பலாத்காரத்தின் பாற்பட்டதாகும் என்றும் சில சமூக சித்தாந்தங்கள் வாதிடுகின்றன. ஆனால், முஸ்லிம் சமூகத்தின் உறவுகள் சகோதரத்துவ வாஞ்சையுடன் கூடிய நேயம் மிக்கதாய் இருத்தல் வேண்டும் என்றும், பரஸ்பர அமைதியும் பாதுகாப்பும் மிக்கதாய் திகழ்ந்திடல் வேண்டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

தனிமனிதர்களானாலும் சரி, சமூகங்களானாலும் சரி அவை நிலை கொள்ள வேண்டுமானால், கடமைகள், உரிமைகள், லாப நஷ்டங்கள் மற்றும் உழைப்பு ஊதியம் என்பனவற்றில் சமன்பாடு காணப்படுதல் வேண்டும் என்பதே இஸ்லாமின் நிலைபாடாகும். மனிதர்கள் யாவரும் தங்களின் செயல்பாடுகள், எண்ணங்கள் யாவற்றையும், நிலையான முன்னேற்றத்தையும் அகிலங்களின் அதிபதிக்கே அர்ப்பணம் செய்வதை இலக்காகக் கொண்டவர்களாக திகழ்ந்திடல் வேண்டும். இதன் காரணமாக தனி மனிதர்கள் என்கிற நிலையிலும், சமூக அடிப்படையிலும் செய்கின்ற அனைத்து செயல்பாடுகளையும் ஒருமுகப்படுத்துகின்ற விரிவான அமைதியை நோக்கி தத்தமது பங்களிப்புகளை வழங்கிட தனி மனிதர்களும் சமூக அமைப்புகளும் கடமைப்பட்டுள்ளனர். இத்தகையதொரு இஸ்லாமிய சமூகத்தில், சுய விருப்பு வெறுப்புகளின் பேரில் தோன்றிடும் தற்காலிக சச்சரவுகள் சில இருந்தாலும் கூட அங்கு அமைதியே ஆதிக்கம் பெற்று கோலோச்சிக் கொண்டிருக்கும்.

மேற்கத்திய சித்தாந்தங்கள், அவை உருப்பெறுகின்ற உலகாதாயத்தின் பாற்பாட்ட உலகியல் சுற்றுச் சூழல்களுடன் பொருந்தி வரத்தக்கதாக இருக்கலாம். எனினும் அங்கு தற்காலிக பலன்களை தராத எதுவும் புறக்கணிக்கவே படுகின்றன. ஆணவம் ஒன்றைத் தவிர வேறு எந்தவொரு மனிதப் பண்பும் அங்கு ஏற்கப்படுவதில்லை. உலகியல் வாதத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அத்தகைய சமூகங்களில், உழைப்பு மற்றும் உற்பத்தி என்பனவற்றின் கோட்பாடுகளுக்கு உட்பட்ட விதிமுறைகளுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் மதிப்பும் தரப்படுவதில்லை. இதன் காரணமாகவே அங்கு வர்க்கப் போராட்டம் தவிர்க்க முடியாமல் தலைதூக்கி விடுகிறது.

அதே நேரத்தில், நமது சமூக வாழ்க்கையை ஆளுவது இறைவன் வகுத்தளித்த இஸ்லாமிய சட்டங்களாக இருப்பதால் (நமக்கு நாமே சட்டமியற்றும் சுய அதிகாரம் கொண்டவர்களாக இல்லாததால்) உலகாதாய வாதம் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகவோ, வர்க்கப் போராட்டம் தலைதூக்கவோ செய்வதில்லை. உலகியல் வாதமும் எதிர்மறை வர்க்க உணர்வுகளும் இஸ்லாம் அல்லாத சமூக கோட்பாடுகளின் உடன்பிறப்புகளாகவே திகழ்கின்றன. காரணம், இச்சமூகங்களின் இலட்சியமானது உலகப் பொருள்வளம் ஒன்றே என்பது தான். தனிமனிதனையோ சமூகத்தையோ அழித்துவிட்டு நிறைவான அமைதியை அடைந்திட முடியாது. அமைதி என்பது அனைவரது நலனுக்கும் உரித்தானதாகும்.

தனிமனித நலனையும், சமூக நலனையும் பேணவே இஸ்லாம் சட்டத்தை அமல்படுத்துகின்றது. உச்சபட்ச நீதியே அதன் நோக்கமாகும். இஸ்லாமியச் சட்டம் எந்த ஒரு தனிமனிதருக்கோ அல்லது வகுப்பினருக்கோ முன்னுரிமை தருவதில்லை. இஸ்லாம் அல்லாத சமூகங்களை பீடித்திருக்கும் சமூக சச்சரவுகளை விட்டும் விசுவாசிகளைப் பாதுகாப்பதே அதன் உத்தேசமாகும். மகத்தான நீதியின் பாற்பட்ட உச்சகட்ட அமைதியே இஸ்லாமின் இலக்காகும். அதனை இஸலாம் எவ்வாறு அடைகிறது என்பதை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

அன்பும் கருணையும்

தனிமனிதனின் மனசாட்சியிடமும், மனித நேய வாஞ்சையிடமும் தான் இஸ்லாம் தனது நற்செய்திகளை போதிக்கின்றது. மனித இனம் ஒரே ஆன்மாவிலிருந்து தோன்றியதே என்றும், தங்களைப் படைத்தவனின் பக்கமே அவர்கள் திரும்பிச் சென்றிட வேண்டும் என்றும் இஸ்லாம் மனிதர்களுக்கு நினைவூட்டுகின்றது. இந்த உணர்வு, மனிதர்களை நேசம் மற்றும் அமைதியின் பால் திருப்பி விடுவதுடன் அமைதியை நிறுவுவதற்காக நிச்சயிக்கப்பட்டிருக்கும் சட்டவிதியினை மனமுவந்து ஏற்கும்படியும் செய்கின்றது. இத்தகைய மனிதர்கள் சமூக நீதியையும், சமூகத்தை நேர்வழியின் பால் சுமூகமாக இட்டுச் செல்வதையும் உறுதிப்படுத்துகின்றனர். இதனை அருள்மறை குர்ஆன் தெளிவுபட விவரிக்கின்றது:

"மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன்தான் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்தே அவருடைய மனைவியையும் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உல்கில்) பரவச் செய்தான். ஆகவே, அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளை) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும், இரத்தக்கலப்புடைய உங்கள் உறவினர்களையும் (ஆதரியுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்."

(அல் குர்ஆன் 4:1)

மனிதர்கள் யாவரும், இறைவன் படைத்த ஒரே மனிதரின் சந்ததியினரே ஆவர். எனவே, இந்த உறவுமுறைக்கு முன்னால் அனைத்து வேற்றுமைகளும், சண்டை சச்சரவுகளும் அழிந்து ஒழிந்து போக வேண்டும். இந்த உறவுமுறை மனிதர்கள் யாவரையும் நிற-மத-மொழி-தேச வேறுபாடுகளின்றி ஐக்கியமாக்கி ஒன்றுபடுத்தி விடுகிறது.

இயல்பாகவே சத்திய விசுவாசிகளுக்கிடையே இந்த உணர்வு உறுதிமிக்கதாய்த் திகழும். அவர்களின் ஒன்றுபட்ட நம்பிக்கையே இதற்குக் காரணமாகும். இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வேறு எதனையும் விட வலிமை மிக்கது விசுவாசிகளுக்கிடையேயான உறவேயாகும். 'விசுவாசிகள் ஒருவருக்கொருவர் சகோதரர்களேயாவர்' என்று குர்ஆன் (49:10) பிரகடனப்படுத்துகின்றது. இறைத்தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: 'விசுவாசிகள் ஒருவருக்கொருவர் அன்பான தோழமையுடனும் பாசம் மிகுந்த கருணையுடனும் வாழ்ந்திடக் கூடியவர்களாவர். அவர்கள் ஓர் மனித உடலுக்கு ஒப்பானவர்கள். உடலில் ஓர் உறுப்புக்கு ஏற்படுகின்ற பிணி ஒட்டுமொத்த உடலையும் வருத்துகின்றது. உடல், ஜுரம் கண்டும் அயராது கண் விழித்தும் துன்புறுகின்றது; பரிதவிக்கின்றது' என்று கூறிய நபியவர்கள் இந்த இலட்சியத்தின் பால் விசுவாசிகளை ஆர்வமூட்டுகின்றார்கள். நீங்கள் ஒருவரையொருவர் வெறுக்காதீர்கள். ஒருவர் மீது மற்றொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பரஸ்பரம் மோதிக்கொள்ளாதீர்கள். இறையடியார்களே நீங்கள் சகோதரர்களாகவே வாழுங்கள்.
தனக்கும் தனது சகோதரருக்குமிடையே வேறுபாடு காண்பவர் சத்திய விசுவாசியாக இருப்பதற்குச் சாத்தியமில்லை என்றும் அண்ணலார் (ஸல்) அவர்கள் உணர்த்தியுள்ளார்கள். மேலும், 'மூன்று நாட்களுக்கு மேல் சத்திய விசுவாசிகள் பிணக்குக் கொண்டிருத்தல் ஆகாது' என்றும் இறைத்தூதர் (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள். எந்த ஒரு முஸ்லிமும் மூன்று நாட்களுக்கு மேல் பிணக்குக் கொண்டிருத்தலாகாது. பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் முகமன் (ஸலாம்) கூறிக்கொள்ளவும் வேண்டும். எனினும், முதன்முதலில் யார் முகமன் (ஸலாம்) கூறுகின்றாரோ அவரே சிறந்தவராவர். (நபிமொழி)

கருணை என்பதற்கு வழங்கப்பட்டிருக்கும் அந்தஸ்து மிக உன்னதமானதாகும். கருணையை தனது சிறப்புப் பண்பாக இறைவன் அடிக்கடி அறிவித்துக் கொள்கிறான் இந்தப் பண்பினை இறைவன் தனது தூதருக்கும் வழங்கியிருந்தான். என்வேதான் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அன்பின் திருவுருவாகவும் கருணைக் கடலாகவும் திகழ்ந்தார்கள். அருள்மறைக் குர்ஆன் இதனை தெளிவுற எடுத்தியம்புகிறது.

"(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் இரக்கமுள்ளவரானீர். கடுகடுப்பானவராகவும் கடின சித்தமுள்ளவராகவும் நீர் இருந்திருப்பீரானால், உம்மிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீர் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கக் கோருவீராக. மேலும், (போர் - சமாதானம் முதலிய) ஏனைய காரியங்களிலும், அவர்களுடன் கலந்தாலோசித்தும் வருவீராக. பின்னர், (எந்த ஒரு விஷயத்திலும்) நீர் முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்புச் சாட்டுவீராக. நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்."

(அல் குர்ஆன் 3:159)

கருணை மிக்க ஓர் தூதரைத்தான் இறைவன் தன் அடியார்களின் மீது நியமனம் செய்துள்ளதாகவும் குர்ஆன் கூறுகின்றது:

"(விசுவாசிகளே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகிவிட்டால், அது அவருக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கின்றது. அன்றி, உங்கள் நலங்களையே அவர் பெரிதும் விரும்புகின்றார். இன்னும், இறைநம்பிக்கையாளர்களின் மீது மிகுந்த கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்."
(அல் குர்ஆன் 9:128)

கடுஞ்சித்தம் என்பதை இறைநிராகரிப்பு மற்றும் நெறிமீறல் என்பனவற்றின் அடையாளமாகவே காண்கிறது திருக்குர்ஆன்:

"(நபியே! மறுமையின்) நியாயத் தீர்ப்பை பொய்ப்பிப்பவனை நீர் பார்த்தீரா? அனாதைகளை விரட்டுகிறவன் அவன்தான். அவன் ஏழைகளுக்கு (உணவளிப்பதுமில்லை) உணவளிக்க (பிறரைத்) தூண்டுவதுமில்லை."
(அல் குர்ஆன் 107:1-3)

கருணை என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானதன்று. அது முழு மனித குலத்திற்கும் உரித்தானதாகும். இது குறித்து அண்ணல் நபி (ஸல்) இவ்வாறு கூறுகிறார்கள்:

"பூமியிலுள்ள அனைத்தின் மீதும் கருணை காட்டுங்கள். அவ்வாறு நீங்கள் கருணை காட்டுவீர்களானால், நாளை சுவனத்தில் நீங்களும் கருணை காட்டப்படுவீர்கள்."
(அல்-ஹதீஸ்)

மெய்யாகவே கருணை என்பது உயிரினங்கள் அனைத்திற்கும் உரியதாகும். தாகத்தால் தளர்ந்து விட்ட நாய் ஒன்றிற்கு நீர் புகட்டிய மனிதனின் பாவங்களை இறைவன் மன்னித்தருளியதாக இறைத்தூதர் (ஸல்) விளக்கமளித்துள்ளார்கள்.
அனைத்து உயிரினங்களிடமும் ஐக்கியப்படுதலின் மூலமாகவும், அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனின் ஏகத்துவத்தின் மீதுள்ள அழுத்தமான அசைக்க முடியாத நம்பிக்கையின் மூலமாகவும்தான் இந்த நிறைவான கருணையின் இலக்கினை எட்டிட இயலும், பூமியில் இறைவனின் பிரதிநிதியாகவும், தலை சிறந்த உயிரினமாகவும் திகழ்ந்திடும் மனித குலத்திற்கு இதுவே இசைவான நம்பிக்கையாகும்.

தனிப்பட்ட - சமூக அணுகுமுறைகள்

மனித மனங்களில் அன்பையும் நேசத்தையும் வளர்த்திடுவதற்காக, முஸ்லிம்களின் தனிப்பட்ட மற்றும் சமூக அணுகுமுறைகளுக்குரிய நன்னடத்தை விதிகளை இஸ்லாம் பரிந்துரைத்துள்ளது. சட்டத்தையும் சட்ட அமைப்பையும் பயன்படுத்திடும் முன் அமைதியைக் கைக் கொள்வதற்காக இந்த விதிமுறைகளையே இஸ்லாம் ஆரம்ப வழிமுறைகளாகக் காண்கிறது. சமூகத்தில் மனநிறைவையும், மகிழ்வையும், கருணையையும், கழிவிரக்கத்தையும், தன்னம்பிக்கையையும் உருவாக்குவதே நன்னடத்தையின் நோக்கமாகும். நன்னடத்தை என்பது சட்ட நடவடிக்கையின் தேவையை இல்லாமலாக்கி விடுகிறது.

முதலாவதாக, இஸ்லாம் கர்வத்தையும், ஆணவத்தையும், பெருமையடித்தலையும் கண்டிக்கிறது.

"(பெருமை கொண்டு) உன்முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகம்பாவக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்.
உன் நடையில் (பெருமையோ கர்வமோ இன்றி) நடுநிலையை கடைபிடிப்பாயாக! உன் குரலையும் தாழ்த்திக் கொள்வாயாக!...."
(அல் குர்ஆன் 31:18,19)

"பூமியில் நீர் பெருமையாக - கர்வங்கொண்டு நடக்காதீர். ஏனெனில், நிச்சயமாக பூமியை பிளந்து விடவோ, அல்லது மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவோ உம்மால் முடியாது."
(அல் குர்ஆன் 17:37)

இறைத்தூதர் (ஸல்) கூறுகிறார்கள்:

"நீங்கள் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள் என்றும் பரஸ்பரம் அத்துமீறவோ, அகம்பாவம் கொள்ளவோ வேண்டாம் என்றும் இறைவன் எனக்கு போதனை செய்துள்ளான்."
(அல்-ஹதீஸ்)

இது விஷயத்தில் இஸ்லாமும் மனித இயற்கையும் ஒன்றுபடுகின்றன. தற்பெருமை, தற்புகழ்ச்சி, அகம்பாவம் என்பனவற்றை வெறுப்பது மனித இயல்பாகும். இத்தகைய குணமுடையோர் மக்களால் வெறுக்கப்படவே செய்வர். மேலும், மகத்தான மனித மாண்புகளை சிதைப்பதும், மனித உணர்ச்சிகளையும் நன்மதிப்புகளையும் அழித்திடக் கூடியதுமான அனைத்தையுமே இஸ்லாம் தடுத்துள்ளது. இதனை தெளிவாகவே குர்ஆன் விவரித்தும் உள்ளது. (காண்க: குர்ஆன் 49:11, 12)

இருநபர்கள் மூன்றாவது ஒருவரின் முன்னிலையில் அவருக்குப் புரியாத வகையில் இரகசியமாகப் பேசிக் கொள்வதை இஸ்லாம் தடுத்துள்ளது. மனித உணர்வுகளுக்கு இஸ்லாம் எந்த அளவுக்கு மதிப்பளித்துள்ளது என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
அதாவது, மூவர் சபையில் ஒருவரை விடுத்து இருவர் மட்டுமே உரையாடுவதால், மூன்றாமவர் புறக்கணிப்பிற்கு ஆட்படுவதும் அவரது உணர்வுகள் காயம்படவும் கூடும். மேலும், அது ஐயங்களுக்கும், அவநம்பிக்கைகளுக்கும் வழிவகுக்கும். இது பாரதூரமான பின் விழைவுகளைக் கூட தோற்றுவிக்கலாம். இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டுதான் இஸ்லாம் இந்த நற்போதனையை வழங்கியுள்ளது.

தமது நற்செயல்களையும், பரோபகாரங்களையும் தம்பட்டமடிப்பதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது. ஏனெனில் இது பிறருக்கு மனக்கஷ்டத்தை தரக்கூடும் என்பதே காரணமாகும். மேலும், இச்செயல் பரோபகாரத்தின் நன்மையைப் பயனற்றதாக ஆக்கி விடுவதுடன் நன்றிப் பெருக்கிற்கு பதிலாக வெறுப்புணர்வினை தோற்றுவிக்கவும் செய்திடும்.

"விசுவாசிகளே! அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளை செலவழிப்பவனைப் போல், கொடுத்ததை சொல்லிக் காண்பித்தும், நோவினை செய்தும் உங்கள் தான தருமங்களை பாழாக்கி விடாதீர்கள். (த்தகைய)வனின் உதாரணம், ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன் மீது சிறிது மண் படிந்திருந்தது. எனினும், பெரும் மழை ஒன்று பொழிந்து அதனை கழுவித் துடைத்து வெறும் பாறையாக ஆக்கிவிட்டது. இவ்வாறே அவன் செய்த தானத்தின் நன்மையை அவனது பெருமை அழித்துவிடும். ஆகவே, அவர்கள் (தான-தருமம்) செய்ததிலிருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடைய மாட்டார்கள். மேலும், அல்லாஹ் தன்னை நிராகரிக்கும் மக்களை (அவர் தம்) தீவினைகள் காரணமாக நேரான வழியில் செலுத்தவும் மாட்டான்."
(அல் குர்ஆன் 2:264)

இத்தகைய நன்னடத்தை விதிகளை மீறலாகாது என கட்டளையிடுவதோடு மட்டுமின்றி, மக்களுக்கு மத்தியில் நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்துவதற்குரிய நேர்த்தியான அறிவுறுத்தல்களையும் இஸ்லாம் வழங்கியே உள்ளது.

"(நபியே! எனக்கு வழிப்பட்ட) எனது அடியார்களுக்கு நீர் கூறும்: அவர்கள் (எம்மனிதருடன் பேசிய போதிலும்) எது மிக அழகானதோ அதையே பேசட்டும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளை கூறும்படிச் செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்க விரோதியாகவே இருக்கின்றான்."
(அல் குர்ஆன் 17:53)

"......நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறெதனையும்) வணங்காதீர்கள். தாய் தந்தையருக்கும், சொந்த பந்தங்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள். எம்மனிதரிடமும் நல்ல (வார்த்)தை சொல்லுங்கள். தொழுகையை கடைபிடித்து வாருங்கள். ஜகாத்தைக் கொடுங்கள்."
(அல் குர்ஆன் 2:83)

"(எவராலும்) உங்களுக்கு முகமன் (ஸலாம்) கூறப்பெற்றால், (அதற்கு பதிலாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள், அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான்."  
(அல் குர்ஆன் 4:86)

அறிமுகமற்றவராயினும் சரி, நண்பனாயினும் சரி, எவரிடத்தும் ஒருபோலவே சலாம் உரைத்து முகமன் கூறிட முஸ்லிம் கடமைப்பட்டுள்ளார். சாந்தி சமாதானத்தின் தேட்டங்களை அது வெளிப்படுத்துகின்றது. தீய செயல்களுக்குப் பகரமாக நற்செயல்களையே அளித்திடல் வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.
"நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது எவருக்கும் உமக்குமிடையே பகைமை இருந்ததோ, அவர் (உம்முடைய) உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார்."
(அல் குர்ஆன் 41:34)

எவரேனும் உங்களுக்குத் தீங்கிழைத்த போதும் நீங்கள் அவருக்கு நல்லதையே செய்யுங்கள் என்பதே இதன் கருத்தாகும். மேலும் பூமியில் பணிவுடன் நடப்பவர்களையும், அறிவீனர்களுடன் வாதம் புரியாதிருப்பவர்களையும் இறைவனின் மெய்யடியார்களாக இறைமறை வர்ணிக்கின்றது.

"இன்னும், அளவற்ற அருளாளனின் அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள், அறிவிலிகள் அவர்களுடன் வாதம் புரிய முற்பட்டால் ஸலாம் - முகமன் - கூறி விலகிப் போய் விடுவார்கள்."
(அல் குர்ஆன் 25:63)

பிறரின் தவறுகளை மன்னித்திடவும், பொறுமையையும் தன்னடக்கத்தையும் கடைபிடிக்கவும் இஸ்லாம் விழைகிறது.

"விசுவாசிகளே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், இன்னும் உங்கள் பிள்ளைகளிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள். நீங்கள் அவர்களின் குற்றங்களை மன்னித்து, அவற்றை பொருட்படுத்தாதும் விட்டுவிட்டால் (அது உங்களுக்கு நன்மை பயக்கும்). நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (உங்களின் குற்றங் குறைகளையும் அவ்வாறே அவன் மன்னித்து விடக்கூடும்)."
(அல் குர்ஆன் 14:64)

"(அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ள) அவர்கள் பெரும் பாவமான காரியங்களையும், மானக்கேடான விஷயங்களையும் விட்டு விலகி (இருப்பதுடன்) தங்களுக்கு கோபமூட்டப்பட்ட போதும் (கோபமூட்டியவரை) மன்னித்து விடுவார்கள்." 
(அல் குர்ஆன் 42:37)

பரஸ்பர உறவினில் தயாளமும் காருண்ணியமும்தான் முன்னுரிமை பெறுகின்றன. கொடுக்கல் வாங்கல்களிலும், உரிமைகளை பெறுவதிலும் தாராளத்தன்மையுடனும் விட்டுக் கொடுக்கும் பாங்குடனும் நடந்து கொள்பவர்களுக்குத்தான் இறையருள் கிட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) உணர்த்தியுள்ளார்கள். நேர்மை நியாயத்தின் முக்கியத்துவத்தை குர்ஆன் எடுத்தியம்புகின்றது.

"இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து (அது சமயம் கொடுக்கல் வாங்கல் பரிவர்த்தனை செய்ய அவசியம் ஏற்பட்டு) எழுத்தரை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்குப் பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவர்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்) யாரிடத்தில் அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம். எவனொருவன் சாட்சியத்தை மறைக்கிறானோ நிச்சயமாக அவனது இதயம் பாவத்திற்குள்ளாகிறது. இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நங்கறிவான்." 
(அல் குர்ஆன் 2:283)

விரோத - குரோத உணர்வுகளைத் தோற்றுவிக்கின்ற அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. முறையற்ற இலாப - நஷ்டங்களுக்கு வழி வகுத்திடும் சூதாட்டமும், மனம் மற்றும் சிந்தை என்பனவற்றின் கட்டுப்பாடுகளை இழக்கச் செய்கின்ற மதுபானமும் அவ்வாறே தடுக்கப்பட்டுள்ளது.

"போதைப் பொருட்கள், சூதாட்டம் என்பனவற்றின் வாயிலாக உங்களுக்கிடையே பகைமையையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதும், இறைவனை நினைவுகூர்வதை விட்டும் அவனிடம் இறைஞ்சுவதை விட்டும் உங்களைத் தடுப்பதும் ஷைத்தானின் வேலையாகும். (இதனையுணர்ந்து) நீங்கள் அவற்றை விட்டும் விலகிட வேண்டாமா?" 
(அல் குர்ஆன் 5:91)
எனக் குர்ஆன் மனிதர்களைப் பார்த்துக் கேட்கிறது.

கூட்டுறவும்நட்புறவும்

தனிப்பட்டதும், சமூக ரீதியிலானதுமான நன்னடத்தை விதிகளை வகுத்தளித்து விட்டு, தனிமனிதனை சமூகத்துடன் பிணைத்து விடுகிறது இஸ்லாம். தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் சில பொறுப்புகள் உள்ளன. அவற்றின் இலக்கு பொதுநலன் ஆகும். சமூகத்தில் தனி மனிதனுக்குள்ள சுதந்திரம் என்ன என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய விதிமுறைகளின் படி, சமூக இலக்கினை அடைந்திட தனிநபர் ஒவ்வொருவரும் ஒத்துழைத்திட வேண்டும். சமூகத்தில் பலவீனமாக இருப்பவர்களை பாதுகாத்திட முஸ்லிம் சமூதாயம் கடமைப்பட்டுள்ளது.

"எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். யாசிப்போரை விரட்டாதீர்."
(அல் குர்ஆன் 93: 9,10)

"(நபியே! மறுமையின்) தீர்ப்பை பொய்யாக்குகிறவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா? அவன்தான் (திக்கற்ற) அநாதைகளை விரட்டுபவன். அவன் ஏழைகளுக்கு (உணவளிப்பதுமில்லை) உணவளிக்கத் தூண்டுவதுமில்லை."  
(அல் குர்ஆன் 107:1-3)

"அநாதைகளை அவர்கள் திருமண வயதை அடையும் வரை (அவர்களின் முன்னேற்றம் கருதி) கண்காணித்துக் கொண்டிருங்கள். அவர்கள் (திருமணப் பருவத்தை அடைந்ததும் தங்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் திறனாற்றல்) அறிவைப் பெற்றுவிட்டதாக நீங்கள் கருதினால் அவர்களிடம் அவர் தம் சொத்துகளை ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் (பருவமடைந்து) பெரியவர்களாகி (தம் பொருட்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று எண்ணி, அவர்களின் சொத்துகளை அவசர அவசரமாகவும், வீண் விரயமாகவும் விழுங்காதீர்கள். இன்னும், (அந்த அனாதைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளவர்) செல்வந்தராக இருந்தால் (அந்த சொத்துகளிலிருந்து ஊதியம் பெறுவதை) தவிர்த்துக் கொள்ளட்டும். ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். மேலும், அவர்களின் பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது அவரகளின் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (உண்மையாக) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்."  
(அல் குர்ஆன் 4:6)

ஏழை எளியவர்களையும், பலவீனர்களையும் அரவணைத்து உதவிட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டுகின்ற நபிமொழிகள் ஏராளமாக இருக்கின்றன.

வட்டி தடுக்கப்பட்டுள்ளது. அது சமூகத்தை நெருக்கடிக்குள்ளாக்கிவிடும் என்பதே இதன் காரணமாகும். அத்தியாவசியமான சூழ்நிலைகளில் தங்களை நாடிவரும் ஏழைகளைச் சுரண்டுவதற்காக அதிகப் பணத்தை ஈடாக்கி கடன் கொடுக்கும் செல்வந்தர்களை விடக் கொடிய அநியாயக்காரர்கள் வேறு எவரும் இருக்க முடியாது என்பதே இஸ்லாத்தின் கூற்றாகும். வட்டியை புறந்தள்ளவும் வெறுத்தொதுக்கவும் வேண்டும் என குர்ஆன் அறைகூவல் விடுக்கின்றது.

"எவர்கள் வட்டியை உண்ணுகிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாய்) எழ மாட்டார்கள். இதற்குக் காரணம் அவர்கள், 'நிச்சயமாக வியாபரமும் வட்டியைப் போன்றதே' என்று கூறியதனாலேயாகும். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்திருக்கின்றான். ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகி விடுகின்றாரோ, அவருக்கு, முன்னர் வாங்கியது உரித்தானது என்றாலும் அவரது காரியம் அல்லாஹ்விடம் இருக்கின்றது. ஆனால் யார் (நற்போதனை வந்த பின்னரும் இந்தப் பாவத்தின் பால்) திரும்புகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்."
(அல் குர்ஆன் 2:275)

"விசுவாசிகளே நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும், நீங்கள் விசுவாசிகளாக இருந்தால், வட்டியில் மீதமுள்ளதை வாங்காமல் விட்டு விடுங்கள். ஆகவே (கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் போர் புரிவதாகப் பிரகடனம் செய்து விடுங்கள். ஆனால் (பாவமன்னிப்புக் கோரி வட்டித் தொழிலிலிருந்து) நீங்கள் மீண்டு விட்டால், அப்பொழுது உங்களுடைய செல்வங்களில் அசல் தொகைகள் உங்களுக்கு உரியவையே, நீங்கள் (பிறருக்கு) அநியாயம் செய்யாத நிலையில், நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்."
(அல் குர்ஆன் 2:278,279)

ஏழை எளியவர்களுக்கு வட்டியில்லாக் கடன் பெறும் உரிமையுள்ளது. இதற்கு சமூகத்தில் ஒற்றுமையும், கூட்டுறவும், தயாளமும் நிலை கொண்டிருத்தல் வேண்டும். கடன் பெற்றுள்ள வறியவருக்கு அதனை திருப்பி செலுத்த உரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குர்ஆன் அறிவுறுத்துகின்றது.

"அன்றியும், கடன்பட்டவர் (அதனைத் திருப்பிச் செலுத்த இயலாத) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதி ஏற்படும் வரை காத்திருங்கள். இன்னும், (கடனை தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டு விடுவீர்களானால் - (அதன் நன்மைகளைப் பற்றி) நீங்கள் அறிந்திருப்பீர்களானால் - அது உங்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும்."
(அல் குர்ஆன் 2:280)

கடனளிப்பவர் பரிவும் கருணையும் கொண்டு, கடன் பெற்றவருக்கு சலுகை காட்டிட வேண்டுமென்றும் இஸ்லாம் விதித்துள்ளது. வட்டி வணிகம் புரிகிறவர்களும் ஏகபோகவாதிகளும் கடும் சாபத்திற்கு உரியவர்களாவர். நுகர்வோரிடமிருந்து கொள்ளை இலாபத்தை ஈட்டி சமூக ஒழுங்கிற்கும் ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கின்றவர்கள் சமூக விரோதிகளேயாவர். 'ஏகபோக மயமாக்கலை புரிபவர் பாவியாவர்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அளவை - நிறுவைகளில் மோசடி செய்து லாபம் காண்பதும் தடுக்கப்பட்டுள்ளது.

"அளவை - நிறுவையில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோரென்றால் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்குவார்கள். ஆனால், மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைவு செய்(து நஷ்டமுண்டாக்கு)வார்கள்." 
(அல் குர்ஆன் 83:1-3)

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்றும், பரஸ்பரம் ஒத்துழைப்புடன் திகழ வேண்டுமென்றும் குர்ஆன் கற்பிக்கின்றது.
"மேலும், நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வின் (வேதமாகிய) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்து விடாதீர்கள். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) பகைவர்களாய் (பிரிந்து) இருந்த பொழுது, அவன் உங்கள் இதயங்களுக்குள் (இஸ்லாத்தின் மூலம்) அன்பினையூட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக் கிடங்கின் விளிம்பின் மீது இருந்தீர்கள். அதிலிருந்தும்  அவன் உங்களை காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவு படுத்துகிறான்." 
 (அல் குர்ஆன் 3:103)

"நீங்கள் நற்செயல்களிலும், பயபக்தியிலும் ஒருவருக்கொருவர் துணை நில்லுங்கள், தீயனவற்றிற்கோ பகைமைக்கோ துணை போகாதீர்கள்
(அல் குர்ஆன் 5:2)
என்று குர்ஆன் வேண்டுகின்றது.

இறைவனுக்கு வழிபட்டு அடிபணிந்து வாழ்ந்திட வேண்டும் என்கிற பொதுவான நோக்கமும் முஸ்லிம்களை ஐக்கியப்படுத்துகின்றது. இறைவனுக்கு கீழ்படிதல் என்பது இஸ்லாமின் அமைதிக் கோட்பாட்டினுடைய உயிர்நாடியாகும்.

வாழ்க்கையின் இலட்சியம்

தனிமனிதர்களும், சமூகமும் தம்மை பொதிந்திருக்கும் சுய ஓடுகளைக் களைந்து விட்டு - முட்டைக்குள்ளிருந்து குஞ்சு வெளிவருவது போல - வெளிதோன்றிடல் வேண்டும். இதையே வேறுவார்த்தைகளில் சொல்வதானால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை விடுத்து வெளிவர வேண்டும். இதற்கு ஆர்வமூட்டுவதன் மூலமாகவே இஸ்லாம் சமூகத்தில் அமைதியை வளர்க்கின்றது.

செயலின் குறுகிய வட்டத்திற்குள், நெறுக்குதல்களுக்கு ஆட்பட்டு வாழ்ந்திடும் போது, ஆற்றல்கள் ஒடுக்கு முறைக்கு உள்ளாகின்றன. இதன் பயன்தான் பதற்றமாக பரிணமிக்கின்றது. எதிர்பார்ப்புகள் சிறுத்துவிடும் போதும், வாழ்க்கையின் இலட்சியம் மங்கிவிடும் போதும் அமைதியின்மை தோன்றுகிறது. சுயநலம், வர்க்க நலம், தேச நலம் என்பன யாவும் மனிதனின் குறுகிய வாழ்க்கை இலட்சியத்தின் பிரதிபலன்களாகும். இஸ்லாம் தனிமனிதர்களையும் சமூகத்தையும் வர்க்கத்தயும் தத்தமது தற்காலிகமான உலகியல் தேட்டங்களிலிருந்து விடுவித்து வாழ்கையின் நிறைவான இலட்சியத்தை நோக்கி இட்டுச் செல்கிறது.

பொதுநலன் கருதி, தன்னிச்சையாக தன்னை பொதுவாழ்வில் ஈடுபடுத்திக் கொள்ளவும், வர்க்கமும் தேசமும் கொண்டிருக்கும் குறுகிய கருத்துகளைக் களைந்து, ஒட்டுமொத்த மனித குலத்தின் ஐக்கியத்தை உயர்த்திப் பிடிக்கவும் தனிமனிதனுக்கு உரிமையுள்ளது. இந்தக் கண்ணோட்டத்தின்படி, தனிமனிதனும் சமூகமும் நிலை கொண்டிருப்பது தங்களின் சுயநலங்களுக்காக அல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நன்மைக்காகவே என்றாகி விடுகிறது.

முஸ்லிம்கள் பூமியில் அறங்காவலர்களும் இறைவனின் பிரதிநிதிகளும் ஆவர். இதனடிப்படையில் தங்களின் வாழ்க்கை மகத்தானதொரு இலட்சியத்திற்கான ஊடகம் மட்டுமேயாகும் என்கிற உணர்வு அவர்களுள் உருப்பெறுகிறது. இதனை குர்ஆன் இவ்வாறு சித்தரிக்கின்றது.

"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்......."
(அல் குர்ஆன் 3:110)

"...(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகாவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்." 
(அல் குர்ஆன் 3:104)

இதே கருத்தினை இறைவன் தன் திருமறையின் மற்றுமொரு இடத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளான்:

"(சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்களான அவர்கள் பாவங்களிலிருந்து மீண்டு) பாவமன்னிப்புக் கோருகிறவர்கள், (அல்லாஹ் ஒருவனையே) வணங்குபவர்கள், (அவனை) புகழ்ந்து துதிப்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், குனிந்து சிரம் பணிந்து வணங்குபவர்கள், நன்மை செய்யுமாறு மக்களை ஏவுபவர்கள், தீமையை விட்டும் தடுப்பவர்கள், அல்லாஹ் விதித்துள்ள வரம்புகளை பேணிப் பாதுகாப்பவர்கள், இத்தகைய நம்பிக்கையாளருக்கு (சொர்க்கத்தைக் கொண்டு நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!
(அல் குர்ஆன் 9:112)

எல்லாம் வல்ல இறைவன் முஸ்லிம்களை உருவ வழிபாடு போன்ற அறியாமைகளிலிருந்து விடுவித்து, தெளிவான நன்மைகளின் பக்கம் அழைத்துச் செல்கிறான். எனவே அவர்கள் தங்களின் வாழ்க்கை வளங்கள் அனைத்தையும் இறைவனுக்கு நன்றிக்கடனாக அர்ப்பணித்திடல் வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்கு மகத்தான நற்கூலி கிடைத்திடும்.

முஸ்லிம்கள் இறைவழியில் போராடக் கடமைப்பட்டவர்களாவர். உலகில் இறைவாக்கு மேலோங்கிட வேண்டும் என்பதே அந்தப் போராட்டத்தின் இலட்சியமகும். இந்த திசை நோக்கி அவர்கள் செல்லவில்லையென்றால், அவர்களின் தனிப்பட்ட தேட்டங்களும், எண்ணங்கள்-எதிர்பார்ப்புகளும் அர்த்தமற்று - பயனற்றுப் போய்விடும்.

"உலகில் கொடுமைகள் - அக்கிரமங்கள் ஒழிக்கப்படும் வரையிலும், நீதியையும் இறைநம்பிக்கையையும் நிறுவிடும் வரையிலும் நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்"
(அல் குர்ஆன் 8:39)
எனக் குர்ஆன் ஆணையிடுகிறது.

"இறைவாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காக போர் புரிகிறவன் இறைவழியில் தான் போரிடுகின்றான்"
என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

பலவீனர்களைப் பாதுகாக்க வேண்டியது முஸ்லிம்களின் பொறுப்பாகும் என்று இறைமறை குர்ஆன் அறிவிக்கின்றது:

"பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) 'எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் வசிக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக' என்று பிரார்த்தனை செய்கிறார்கள்"
(அல் குர்ஆன் 4:75)

யார் தவறிழைத்தாலும் அதனை சீர்படுத்திட முஸ்லிம்கள் கடமைப்பட்டுள்ளனர். அவர்கள் பூமியின் நலனை பாதுகாக்கின்ற இறைவனின் படைவீரர்களாவர். எங்கேனும் ஒரு தவறு காணப்படுமானால் அதனை எவ்வகையிலேனும் தடுத்திட ஒரு முஸ்லிம் கடமைப்பட்டுள்ளான் என்று இறைத்தூதர் (ஸல்) அறிவித்துள்ளார்கள். அக்கிரமக்காரனைத் தடுக்காதவன் தண்டனைக்குரியவனாவான் என்றும் அண்ணல் நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.

"இறைவன் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவவும், தீமையை தடுக்கவும், அக்கிரமக்காரனை தடுத்து நிறுத்தி நேர்வழியின்பால் இட்டுச் செல்லவும், அவனை நீதிக்கு பணிய வைக்கவும் வில்லை என்றால், இறைவன் உங்களிடையே பகைமையை உண்டுபண்ணி விடுவான்"

என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இத்தகைய பொறுப்புகளை முஸ்லிம்களின் மீது சுமத்துவதோடு அல்லாமல், அவர்களின் தாங்கும் சக்திக்கு ஏற்றபடி செயலாற்றிட தக்க வழிவகையினை அமைத்துக் கொடுக்கவும், சரியானவற்றைத் தெரிவு செய்திடும் சுயநிர்ணய உரிமையை வழங்கவும் செய்து அவர்களுக்குள்ள திறனாற்றலை வளர்க்கவும் செய்கிறது இஸ்லாம். அதாவது இஸ்லாமின் இலட்சியங்களையோ அல்லது தமது சுயவிருப்பங்களையோ எதை வேண்டுமானாலும் தெரிவு செய்து கொள்வதற்கான சுதந்திரம் முஸ்லிம்களுக்கு உண்டு என்பதே இதன் பொருளாகும்.

"(நபியே!) நீர் கூறுவீராக: உங்கள் தந்தையரும், உங்கள் சந்ததியினரும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவியரும், உங்கள் குடும்பத்தினரும், எவற்றை நீங்கள் ஆசையோடு சம்பாதித்தீர்களோ அத்தகைய உங்களின் வியாபாரமும், எதனைக் கொண்டு நீங்கள் மகிழ்ந்து ஆனந்தமடைகிறீர்களோ அத்தகைய உங்களின் வீடுகளும், அல்லாஹ்வை விடவும் அவனது திருத்தூதரை விடவும், அவனுடைய பாதையில் போர் புரிவதை விடவும் உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருக்குமானால், அல்லாஹ் தன்னுடைய (தண்டனை பற்றிய) கட்டளையைக் கொண்டு வரும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். (இத்தகைய) பாவிகளை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்."
(அல் குர்ஆன் 9:24)

மனித நலன்களை அக்கறையோடு பாதுகாக்கிறவர்களைப் பற்றி குர்ஆன் கூறுகிறது:

".....பூமியில் நாம் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தால், அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள், ஜகாத்தை கொடுத்து வருவார்கள். மேலும், நன்மையை ஏவி, தீமையை தடுக்கவும் செய்வார்கள்."   
(அல் குர்ஆன் 22:41)

"நீங்கள் மனித குலத்திற்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவ்வாறே உங்களை நாம் நடுநிலையான சமுதாயமாக ஆக்கி வைத்தோம்."
(அல் குர்ஆன் 2:143)

இவையாவும், இறைவனுக்காக மட்டுமே புரிந்திடத் தகுதியான வழிபாடுகளாகும் என்பதை குர்ஆன் அறிவிக்கின்றது.

"என்னை வணங்குவதற்காக மட்டுமே நான் மனிதர்களையும் ஜின்களையும் படைத்துள்ளேன். அவர்களிடமிருந்து எனக்கு எந்த தேவையுமில்லை. அவர்கள் எனக்கு உணவளிக்கவும் வேண்டியதில்லை"  
(அல் குர்ஆன் 51:57)

அரசியலமைப்பு

இஸ்லாம், சமூக அமைதியின் அடித்தளமாக காண்கிற மானுட மாண்புகளையே நாம் இதுவரை விவரித்து வந்தோம். ஒதுக்கித் தள்ளி விடமுடியாத அளவு இவற்றிற்கு முக்கியத்துவம் இருந்த போதிலும், சமூகத்தை இயங்கச் செய்வதும், கட்டுக்குள் வைத்திருப்பதும் இவை மட்டுமே அல்ல.

கட்டாயக் கடமைகளையும், விருப்பச் செயல்களான நற்கருமங்களையும் இஸ்லாம் ஒன்றிணைக்கின்றது. சமூகத்தின் நியாயமான தேவைக்கும் கூடுதலாகவே வழங்கிட சட்டத்தின் மூலம் தனது குடிமக்களை ஆர்வமூட்டி வேண்டிக் கொள்கிறது. சமூக அமைதிக்குரிய செயற்களத்தின் பொது விதிமுறையைத்தான் இஸ்லாம் இங்கும் கடைப்பிடிக்கிறது. சமூகத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, வாழ்க்கைத் தரம், பாதுகாப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தும் கடமையைத்தான் நீதித்துறை செய்து வருகிறது.

இஸ்லாமிய அரசியல் அமைப்பு முறையில் ஆட்சியாளருக்கும் - குடிமக்களுக்கும் இடையேயான தொடர்பு, நீதியின் பாற்பட்டதாகும். மேலும் அது மனநிறைவிற்குட்பட்ட தார்மீகத் தொடர்பாகவும் திகழும். மக்களாதரவும் அவர்களின் ஒத்துழைப்பும் இன்றி இஸ்லாமிய ஆட்சியாளரால் அதிகாரத்திற்கு வர இயலாது. மேலும், இறைவனுக்கு வழிப்பட்டு இறைச்சட்டங்களை அமல்படுத்தும் காலம்வரை மட்டுமே ஆட்சியாளரால் அதிகாரத்தில் இருந்து வர இயலும்.

மக்களாதரவு மற்றும் இறைச்சட்டங்களை அமல் படுத்துதல் என்பனவற்றின் அடிப்படையிலான ஓர் அரசாங்கம், தனது குடிமக்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்த்திட கடமைப்பட்டுள்ளது. அரசுக்கெதிரான கண்டனங்களும், கலக வாஞ்சையும் இங்கு குறைந்திருக்கும். ஏனெனில், இஸ்லாமிய போதனைகளின் அடிப்படையில்தான் இங்கு சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அவற்றின் செயல்பாடும் இஸ்லாமிய வழிகாட்டுதலுக்கு உட்பட்டே இருக்கும் என்பதால் அநீதி இழைக்கப்பட மாட்டாது. மேலும், பரஸ்பர கலந்தாலோசனையின் மூலம் ஆட்சி புரிவதுதான் இஸ்லாமிய அரசியலமைப்பின் முறைமையாகும். கலந்தாலோசித்து காரியங்களை செய்கிறவர்கள்தான் முஸ்லிம்கள் என்று குர்ஆன் அறிவுறுத்துகின்றது.

"....அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை ஏற்று தொழுகையை நிலைநாட்டுவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்."

(அல் குர்ஆன் 42:39)

கலந்தாலோசித்துத்தான் காரியங்களை ஆற்றிட வேண்டும் என்றும் குர்ஆன் ஆணையிட்டுள்ளது.

".....அன்றி (யுத்தம் சமாதானம் முதலிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக! (யாதொன்றையும் செய்திட) நீர் முடிவு எடுத்து விட்டால் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக.......!"
(அல் குர்ஆன் 3:159)

கலந்தாலோசித்தல் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டப் போதிய ஒரு வடிவம் இஸ்லாமிய சட்டவியலில் காணக் கிடைக்காத போதினும், பரஸ்பர ஆலோசனைகள் நல்ல அரசாங்கத்திற்கு இன்றியமையாததாகும் என இஸ்லாம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும் ஏற்ப, கலந்தாலோசனையின் முறைமைகள் வேறுபடுவது இயற்கையான ஒன்றாகும். கலந்தாலோசித்தல் என்பதன் பொருள் அரசியல் தீர்மானங்களில் முஸ்லிம்கள் பங்கு பெற்றிருத்தல் வேண்டும் என்பதேயாகும். இதன் காரணமாக, எதுவொன்றிலும் முடிவெடுக்கப்பட்ட பின்னர் அதிருப்தி தோன்றிடும் வாய்ப்பு அருகிப் போய்விடும். அனைவருக்கும் பாத்தியப்பட்ட இறைச்சட்டங்கள் தான் இஸ்லாமில் உள்ளன. யாவரும் இறைவனின் அடிமைகளேயாவர். எனவே சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே!
ஆட்சியாளர்கள் இஸ்லாமிய சட்டத்தின் மீது பற்றுக் கொண்டு அதனை கடைபிடித்து பேணிக்காத்து வரவேண்டும். அதன் அடிப்படையிலேயே குடிமக்கள் ஆட்சியாளர்களின் மீது பற்றுக் கொண்டு அவர்களுக்குக் கீழ்படிந்து வருவார்கள். 'இறைவேதத்ததை கடைபிடித்து வரும் காலம் வரை, உங்களுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றிருப்பவர் ஓர் கருப்பு நிற அடிமையாய் இருப்பினும் நீங்கள் அவருக்குக் கீழ்படியுங்கள்' என்பதுதான் தன் சமூகத்தவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) வழங்கிய அறிவுரையாகும்.

இறைவேதத்திற்குட்பட்ட வகையில் யார் ஆட்சிபுரியவில்லையோ அத்தகையவர்களை இறைவன் வன்மையாகக் கண்டிக்கின்றான்.

".....அல்லாஹ் அறிவித்திருக்கும் கட்டளைகளின் பிரகாரமே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் அருளிய கட்டளைகளின் பிரகாரம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள், நிச்சயமாக பாவிகளேயாவார்கள்."
(அல் குர்ஆன் 5:147)

'இறைவேதத்திற்கு முரணான, எதிரான சட்டங்களை அங்கீகரிப்பவர்கள் உண்மை விசுவாசிகளாக ஆக முடியாது' என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது.
இறைச்சட்டங்களை அமல்படுத்தாத ஆட்சியாளர்களுக்கு எதிராக அறப்போர் புரிவது முஸ்லிம்களின் மீது கடமையாகும். இறைவாக்கினை நிராகரித்திடும் ஆட்சியாளர்களை ஏற்றுக் கொள்ள ஒருபோதும் முஸ்லிம்களுக்கு அனுமதி கிடையாது.

ஆளுவோருக்கும் - ஆளப்படுவோருக்குமிடையே அமைதியும் ஒத்துழைப்பும் நிலைபெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரமும், தன்னிச்சையான பங்களிப்பும், உளப்பூர்வமான பற்றுதலும் தான் இஸ்லாமிய ஆட்சிமுறையின் தனிச்சிறப்புகளாகும். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் காலகட்டமும், தொடர்ந்து வந்த நாற்பெரும் கலீஃபாக்களான அபூபக்கர், உமர், உஸ்மான் மற்றும் அலீ (ரழி) ஆகியோரின் காலகட்டங்களும் இதற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அரசியல் அமைப்புமுறை என்பது அனைத்துலக அமைதி எனும் கனவை நனவாக்கிடுவதற்கான ஒரு கருவியேயாகும்.

தொடர்ச்சி இரண்டாம் பாகத்தில் ...

No comments:

Post a Comment