மனித அறிவு விருத்தி செய்துள்ள எல்லாத் துறைகளின்
நோக்கிலும் சீறாவை ஆய்வு செய்வது முற்றிலும் சட்டபூர்வமானவொரு முறைமைதான்.
இன்னும் சொல்வதென்றால், அவ்வாறு எல்லாக் கோணங்களில்
இருந்தும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டியது ஒரு வகையில் சமூகக் கடமையென்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில், நம்முடைய ஈருலக வெற்றிக்காக திருக்குர்ஆனின்
வழிகாட்டல்கள் மீதும், நபிகளாரின் முன்மாதிரியான (சுன்னா-சீறா) மீதுமே நாம்
பெரிதும் சார்ந்திருக்கிறோம்.
அவற்றில்தான் நம்முடைய ஈடேற்றமும், வெற்றியும் தங்கியிருக்கின்றன.
நம் வாழ்வின் சகல துறைகளுக்கும் அவற்றை வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகக் கொள்வதை இத்தகைய
பல்துறை ஆய்வுகளே சாத்தியப்படுத்தும்.
இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சமும்
உண்டு. அதாவது, நீங்கள் எந்த நோக்கில் ஆய்வு செய்ய முயலுகிறீர்கள் என்பதையும் தாண்டி,
உண்மையிலேயே அது "ஆய்வு" தானா அல்லது ஏற்கனவே எடுத்துக் கொண்ட முன்முடிவுகளை
நிறுவுவதற்கு மேற்கொள்ளப்படும் திரிபு முயற்சியா என்பதுவே அது.
நேரடிச் சான்றுகளும், தர்க்க ரீதியிலான தொடர்பு
படுத்தல்களும் தான் ஆய்வையும் திரிபையும் வேறுபடுத்தும் அம்சங்கள். வலிந்து திணிக்க
முனைபவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது / கூடாது.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுள் சில உண்மையானவை
- இயல்பானவை - ஏற்கத்தக்கவை; மற்ற சிலவோ வலிந்து திணிக்கும் முயற்சிகள் - அரை உண்மைகள்
- அடிப்படையற்ற திரிபுகள். ஓரியண்டலிஸ்டுகளின் பல ஆய்வுகள் இவ்வகையில் வரும்.
திருக்குர்ஆனை ஆய்வு செய்வதென்றாலும், சீறாவை ஆய்வு
செய்வதென்றாலும் இவ்வம்சங்கள் தான் எந்தவொரு ஆய்வினையும் ஏற்புடையதாகவோ, நிராகரிக்க
வேண்டியதாகவோ ஆக்குகின்றன.
அதே போல், வெறும் உலகாயத நோக்கில் மேற்கொள்ளப்படும்
ஆய்வுகளில் 'அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னம்' ஒருபோதும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.
அதே சமயம், பற்றுறுதி கொண்ட முஸ்லிம்கள் திருக்குர்ஆனையும், சீறாவையும் ஆய்வு செய்யும்
வேளைகளில் அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னத்தை எல்லாவிடத்தும் காண்பார்கள்.
இதன் மூலம் நான் நாடுவது, இயற்கை விதிகளை மீறிய
அதிசயங்களையோ, அல்லாஹ்வின் நேரடி வெளிப்படையான தலையீடுகளையோ மட்டுமல்ல. அவையும் உண்டு
தான். எனினும், விதிவிலக்குகளாக. வெகு அரிதான சந்தர்ப்பங்களில் அதிகாரச் சமநிலையை நேராக்குவதற்காகவும்,
வேறு சில காரணங்களுக்காகவும் இவ்வாறு இயல்பை மீறி அல்லாஹ்வின் தலையீடுகள் நிகழ்கின்றன.
எனினும், வரலாற்றில் எக்கட்டத்திலும் அது எப்போதும் ஒரு பொதுப்போக்காக இருந்ததில்லை
என்பதை நான் மனம்கொள்ள வேண்டும்.
'அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னம்' என்பதன் மூலம்
நான் நாடுவது எதையென்றால், பற்றுறுதி கொண்ட முஸ்லிம்கள் இறைவனின் நாட்டத்தை நிலைநாட்டும்
போராட்டத்தில் இரத்தமும் சதையுமாக ஈடுபட்டிருக்கும் வேளைகளில், இறைவன் வகுத்துள்ள இயலுலக
மற்றும் சமூக விதிகள் எப்படியெல்லாம் அவர்களின் கரங்களை வலுப்படுத்துகின்றன என்பதையே.
இது சிலருக்கு கருத்து மயக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
எனவே, இதனை வேறு வார்த்தைகளில் சற்று விரித்துரைக்க முயலுகிறேன்.
"அல்லாஹ் உலகைப் படைத்து, அதற்கான இயங்கு விதிகளை
வகுத்தளித்து விட்டு தனது அரியாசனத்தில் சென்று அமர்ந்து விட்டான். இனி உலக வாழ்வைப்
பொறுத்தவரை, மனிதர்களின் காரியங்களுக்கும் அவனுக்கும் தொடர்பில்லை; அடுத்து அவன் தலையிடப்போவது
மறுமையில் மட்டும் தான் (அல்லது இயற்கை விதிகளை மீறும் வகையில் வெகு அரிதாக நிகழும்
இறை அதிசயங்களின் போது மட்டும் தான்)"
-என்பது இஸ்லாமியப் பார்வை அல்ல.
மாறாக, மனிதர்களின் எல்லாக் காரியங்களிலும் அல்லாஹ்வின்
அதிகாரப் பிரசன்னம் நீக்கமற நிறைந்திருக்கிறது. அல்லாஹ்வின் இந்த அதிகாரப் பிரசன்னம்
குறித்த கூர்மையடைந்த பிரக்ஞை தான் 'தக்வா' எனப்படுகிறது.
'மறுமையில் அல்லாஹ் தண்டிப்பான்' என்ற அச்சம் தான்
தக்வா என்பதாக பொதுவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. நான் கூற வரும் விடயத்தைப் புரிந்து
கொள்வதை சிலபோது கடினமாக்குவதும் இதுதான்.
மாறாக, 'இங்கு - இப்போது' - இவ்வுலக வாழ்விலேயே
'அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னம்' நீக்கமற நிறைந்திருக்கிறது; நான் வரம்பு மீறல்களில்
ஈடுபடும்போது என்னைத் தண்டித்து நீதியை நிலைநிறுத்தும் அல்லாஹ்வின் அதிகாரத்தை நான்
இங்கும் சந்திக்க வேண்டியிருக்கும்' என்பதையும் உள்ளடக்கியவொரு கூருணர்வுதான் தக்வா.
இதுவே அதன் மெய்ப்பொருள்.
இறைவனின் நாட்டத்தை உலகில் நிலைநாட்டுவதற்காக பற்றுறுதி
கொண்ட முஸ்லிம்கள் தமது உடல் - பொருள் - ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து ஓர் போராட்டத்தில்
ஈடுபட்டிருக்கும் சூழ்நிலைகளில், மேற்குறித்த 'அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னம்' மற்றெப்போதைக்
காட்டிலும் மிகத் துலக்கமாகத் தொழிற்படுவதை அவதானிக்க முடியும்.
அதாவது அப்போராட்டத்தின் அதிகாரச் சமன்பாட்டைப்
பொறுத்தவரை, 'அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னம்' பற்றுறுதி கொண்ட முஸ்லிம்களின் பக்கம்
நிற்பதைக் காண முடியும்.
இவ்வாறு சொல்வதால், 'இதுவும் இயற்கை விதிகளை மீறிய
அல்லாஹ்வின் தலையீடான இறை அதிசயம் என்பதற்குக் கீழ்தானே வரும்?!' என்று சிலருக்குத்
தோன்றலாம். அவ்வாறல்ல.
அல்லாஹ் வகுத்தளித்த இயலுலக, சமூக விதிகளின் நுட்பமான
தளங்களுக்கு உள்ளாகவே அல்லாஹ்வின் இத்தலையீடு நிகழும். இதன் மூலம் பற்றுறுதி கொண்ட
முஸ்லிம்களின் / நீதியாளர்களின் கரங்கள் வலுப்படுத்தப்படும்; அநீதியாளர்களின் / நிராகரிப்பாளர்களின்
கரங்கள் பலவீனப்படுத்தப்படும்.
வரட்டுத் தனமான உலகாயத ஆய்வுகளில் நான் மேற்குறிப்பிட்ட
எதையும் நீங்கள் காண மாட்டீர்கள். அவற்றைப் பொறுத்தவரை, 'உலக நிகழ்வுகள் எவற்றிலும்
அல்லாஹ்வுக்கு எந்தப் பங்கும் இல்லை. எல்லாவற்றையும் சட விதிகளே தீர்மானிக்கின்றன.
ஒருவேளை சட ரீதியில் நீங்கள் பின்தங்கியவர்களாக இருப்பீர்கள் என்றால், கைசேதப் படுவதைத்
தவிர உங்களுக்கு வேறு வழியில்லை, தோல்வியும் பின்னடைவும் தான் உங்களின் தலைவிதி' என்றாகும்.
ஆனால், நான் மேலே விளக்கிய வகையில் - இஸ்லாமிய நோக்கில்
அது அவ்வாறு அமைவதில்லை.
"நம்பிக்கையிழக்க வேண்டாம், அச்சப்பட வேண்டாம்
- பற்றுறுதி கொண்ட முஃமீன்களாக இருப்பின் நீங்களே மேலோங்குவீர்கள்"
"எத்தனையோ சிறு கூட்டங்கள் அல்லாஹ்வின் அனுமதி
கொண்டு பெரிய கூட்டங்களை வென்று மேலோங்கியிருக்கின்றன"
"மேலும், நாம் உலகில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு
உதவிசெய்யவும், அவர்களைத் தலைவர்களாகவும் அதிகாரத்தைப் பெற்றவர்களாகவும் ஆக்கிடவும்
நாடினோம்"
போன்ற இறை வசனங்களை பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்.
அவை எல்லாவற்றிலும் அல்லாஹ்வின் அதிகாரப் பிரசன்னமானது,
இயற்கை விதிகளை மீறிய வண்ணம் மட்டுமே தொழிற்பட்டாக வேண்டும் என்ற எந்தவொரு அவசியமுமில்லை.
மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அல்லாஹ்வின்
அதிகாரப் பிரசன்னம் இயலுலக-சமூக விதிகளின் நுட்பமான தளங்களுக்கு உள்ளாகவே தொழிற்பட்டு,
நீதியாளர்களின்-பலவீனர்களின்-ஒடுக்கப்பட்டோரின் கரங்களை வரலாறு நெடுகிலும் வலுப்படுத்தியிருக்கிறது.
இனியும் அதுவே தொடரும்.
இறைவன்
நன்கறிந்தவன்!
No comments:
Post a Comment