Monday, April 8, 2019

மீண்டும் அபூ தர் ... III

மீண்டும் அபூ தர் ...

அலீ ஷரிஅத்தி

தமிழில்: சம்மில்

அத்தியாயம் 3


திடுதிப்பென்று, ஒரே நேரத்தில், மக்காவின் குறுகிய சந்து ஒன்றில், முடிச்சு ஒன்றுக்குள் தங்களைப் பிணைத்துக்கொண்ட பெரும் கூட்டம் ஒன்றை ஒரு மூலையில் அனீஸ் பார்க்கிறார். தன்னை அங்கே இட்டுச்செல்கிறார்: விழிப்படைந்த முகத்துடன், தனது ஆன்மாவின் ஆழங்களை உயிர்த்தெழச் செய்த ஒரு பார்வையுடன், திறந்த, நிதானமான ஒரு புருவம், நடுத்தர-அளவு உடம்பு,மிரட்டுகிற ஒரு உருவம், அதே நேரத்தில், ஊக்கமளிக்கும் அன்பு மற்றும் நேசத்துடன், தீர்மானமும் உறுதியும் நிறைந்த ஆண்மைமிகு, கரகரப்பான ஒரு குரல் என்றாலும் அதில் தித்திப்புடன், நிறைந்த கனிவுடன், பயமும் நம்பிக்கையும் நிரம்பியிருந்த, கவிதையைவிட அழகான ஓர் இனிமையான தொனியில், ஆழ்ந்த வார்த்தைகளுடன் ஒரு நபர் மட்டும் அங்கு தனியாக நிற்கிறார். அனீஸ் அவர் முன்னால் நின்றார். அவரது வார்த்தைகளைக் கேட்பதா, அவரது வசீகரத்திடம் தனது உள்ளத்தை ஒப்படைப்பதா, அல்லது வெறுமனே அவரது உடல், பார்வை, நடத்தை, வார்த்தைகள் ஆகியவற்றின் முழு இனிமையையும் அழகையும் அவதானித்துக்கொண்டிருப்பதா? என்ன செய்வதென்று தெரியவில்லை அவருக்கு.

அமளியை உண்டுபண்ணியவாறு கோஷ்டி ஒன்று வந்தபோதும், இந்த மனிதரைப் பார்த்ததால் ஏற்பட்ட பிரமிப்பு நிலையிலேயே  அப்பொழுதும் அவர் இருந்தார். அவரது வார்த்தைகளைக் கேட்காமலும் அவருக்குப் பதில் அளிக்காமலும் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்த ஏச்சுகளையும் முன்-ஜோடிக்கப்பட்ட அவதூறுகளையும் அவரது தலைக்கும் முகத்துக்கும் நேராக அவர்கள் வீசி எறிந்தனர். ‘தூதுச் செய்தியின் வெளிச்ச’த்திலும், ‘இலட்சியத்தை நோக்கிய புரட்சி’யிலும் தங்களால் இழக்க முடியும் என்ற அளவுக்கு எதுவுமே இல்லாத, ஆட்சி அமைப்பாலும் சமூக-அரசியல் நடப்பின் முயற்சிகளாலும் பழிக்கப்பட்டிருந்த நடுநிலையாளர்கள், சிறுமைப்பட்ட மக்களின் அறியாமை அவர்களைக் கொடுங்கோன்மையின் கைகளில் பொம்மைகளாகவும் தங்கள் சொந்தச் சிறைகளுக்கான காவலர்களாகவும் ஆக்கிவிட்டது. பக்கசார்புடையோர் தங்கள் வாய்களில் வைத்திருந்ததை பிரசித்தமான வெகுஜனமோ, அருவருப்பூட்டும் ஆர்வம் மற்றும் கிளர்ச்சியினூடாக, கத்தி வெளியிடுகின்றனர்.

'தனிமைப்பட்டிருந்த தூதரை' கோபத்தில் அல்லது கடுப்பில் அவர்கள் விசையோடு தள்ளினர் அல்லது வசையுடனும் கேலியுடனும் அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அவரைத் தன்னந்தனியே விட்டனர். வான்வெளியின் அமைதியைப் போன்ற ஒரு அமைதியும், மலை ஒன்றின் பொறுமையையும் சமநிலையையும் போன்ற பொறுமையின் சமநிலையும் அவரிடம் இருந்ததால், (அவர் ஹிரா குகையிலிருந்து கீழே வந்திருந்ததுடன் வானிலிருந்து செய்தி ஒன்றையும் கொண்டுவந்திருந்ததால்)ஆத்திரத்தின் தாக்குதல்களும் அறியாமையின் இருள்களும் அவர் முகத்தில் எந்தத் தாக்கத்தையும் உண்டுபண்ணவில்லை, கோபத்துக்கான எந்தக் கீறல்களையும் ஏற்படுத்தவில்லை. அது கனிவாலும் நேசத்தாலும் ததும்பியிருந்தது. அவசர அவசரமாக அவர் மற்றொரு இடத்துக்குச் செல்வார், மற்றொரு கூட்டத்துக்கு மத்தியில் அவரது வார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகும். மறுபடியும், கேட்கப்படாதது, புரியப்படாதது, வசைமொழிகள், குற்றச்சாட்டுகள், மறுபடியும், அவதூறுகள், பரிகாசம். பிறகும் அவர், மீண்டும், வேறு இடங்களுக்குச் செல்வார்; மீண்டும் அவரது வார்த்தைகளின் ஆரம்பம்!

         நகரின் அனைத்துப் பகுதிகளிலும் அவர் சுற்றித் திரிந்தார். தெருக்கள், கடைகண்ணிகளில், ஒன்றுகூடலுக்கான இடத்தில், மசூதிகளில்; மக்களைத் தேடி அவர் எல்லா இடங்களுக்கும் செல்வார். மக்களின் வழிப்பாதையில் அவர் நின்றுகொள்வார். அவர்களின் விடைகள் குறித்தெல்லாம் யோசிக்காமல், அவர்களை அச்சமூட்டுவார், அவர்களுக்கு நற்செய்தி வழங்குவார், அபாயம் ஒன்றைக் குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பார், மோட்சத்துக்கான வழியைக் காண்பிப்பார். ஏனெனில், அவரிடம் ஒரு செய்தி இருந்தது, அவருக்கு ஒரு இலட்சியம் இருந்தது. 'கண்ணியவான்களின் நண்ப'னும் 'தலைக்கனம் பிடித்தவர்களின் எதிரி'யுமான இறைவன் அவரிடம் உரக்கப் பேசினான், "(போர்வை) போர்த்திக்கொண்டிருப்பவரே! கிளம்பிச்சென்று எச்சரிக்கைச் செய்வீராக." (74:1-2); அறியாமையின் அமைதியிலும் கொடுங்கோன்மையின் பாதுகாப்பிலும் துயில்கொள்ளும் மக்களை, இன்னும், ஓநாய்க்கு இடையர்களாக இருப்பதனூடே வறுமையையும் இழிவையும் மேய்த்துக்கொண்டிருக்கும் மக்களை எச்சரிக்கைச் செய்வீராக! நியமிக்கப்பட்டிருக்கும் இடையரே!

         கராரித் பாலைவனத்தின் ஆட்டை அவிழ்த்துவிடு, ஏனெனில் கடவுளின் நகரத்தில் மனிதர்கள் ஆடுபோல் இருக்கும்படி ஆக்கப்பட்டிருக்கிறார்கள்! ஆபிரஹாமின் கடவுள் தனது வானவர்கள் எல்லோரையும் ஆதமின் காலடிக்கு முன்னால் சிரம் பணிய வைத்தான். ஆனால் இப்பொழுது, ஆபிரஹாமின் வீட்டில், ஆதமுடைய பிள்ளைகள் பூமி மீது - கோத்திரங்களுக்கும் வகுப்புகளுக்கும் பாதுகாவலர்களாக இருக்கும் - இப்லீஸின் மிச்சசொச்சங்களின் காலடிக்கு முன்னால் சிரம் பணியும்படி ஆக்கப்படுகிறார்கள்.

         அவர் வாயை அடைப்பதற்காகவும் அவரைப் பேச விடாமல் ஆக்குவதற்காகவும் கேடுகெட்ட உயர்குடிகள் தங்கள் அகெளரவமான, முட்டாள் கூட்டாளிகளைக் கொண்டு முடுக்கிவிட்ட சூறாவளி அவமதிப்புகள், சதித் திட்டம், அச்சுறுத்தல், பரிகாசம் எல்லாவற்றுக்கிடையிலும் அவர் பேசினார், "ஒடுக்கப்படுவோரின் இறைவன்" சொன்னான், "கூறுங்கள்!" கூறுங்கள், "இப்பூவுலகில் உள்ள  ஒடுக்கப்படுவோர் மீது நாம் அருள் பாலிக்க நாடினோம், இன்னும், அவர்களைத் தலைவர்களாகவும் வாரிசுகளாகவும் ஆக்கிவைக்க நாடினோம்." (28:3). அனீஸ் அம்மனிதரைப் பார்க்கிறார், அவரைப் பின்தொடர்கிறார், அவரது வார்த்தைகளைக் கேட்கிறார், அவரது வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கிறார், பிரமிப்பான, அற்புதமான ஒரு வாழ்க்கை. ஆனால், அம்மனிதருடைய வாழ்வின் அற்புதங்களும் அவரது பிரசன்னத்தின் ஈர்ப்பும் நடத்தையின் வசீகரமும் அழகும் அவரது வார்த்தைகளுக்குச் செவிமடுப்பவராக இருப்பதற்குப் பதிலாக அம்மனிதரின் பார்வையாளராக அவர் ஆகிவிடும் அளவுக்கு அவரை அதீதமாகக் கவர்ந்திழுக்கவும் வசப்படுத்தவும் செய்தது.

         அத்துணை அல்லல்களிலும் அவ்வளவு அன்பு; அத்துணை உறுதிப்பாட்டிலும் அவ்வளவு அழகு; அத்துணைச் சஞ்சலத்திலும் அவ்வளவு அமைதி; அத்துணைச் சிக்கல்களிலும் அவ்வளவு எளிமை; அத்துணைக் கலகத்திலும் அவ்வளவு சேவையாற்றல்; அத்துணை வேதனையிலும் அவ்வளவு உற்சாகம்; அத்துணைப் பலவீனத்திலும் அவ்வளவு பலம்; அத்துணை அவமானத்திலும் அவ்வளவு துணிச்சல்; அத்துணைப் பரபரப்பிலும் அவ்வளவு சாந்தம்; அத்துணைப் பொறுமையின்மையிலும் அவ்வளவு பொறுமை; அத்துணைப் பயபக்தியிலும் அவ்வளவு பணிவு; அத்துணை மதியூகம், தர்க்கம், கண்காணிப்பு, தீவிரத்தன்மை, இதிகாசங்கள், சிந்தனை ஆகியவற்றுக்கு மத்தியிலும் அவ்வளவு அன்பு, ஊக்குவிப்பு, உணர்ச்சிகள், நளினம், இதயபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் வெளிப்பட்ட பாக்கள்; இறுதியாக ‘பரலோகத்துக்கு அத்துணை நெருக்கமானவ’ராக இருந்தும் ‘இவ்வுலகுக்கு அவ்வளவு உரியவ’ராகக் காட்சியளித்தமை. கடவுளுக்கான எல்லா வழிபாடுகளையும் நிறைவேற்றியபோதும் உச்சந்தலை முதல்  உள்ளங்கால் வரை கடவுள் பற்றிய உறுதியான தன்னுணர்வில் ஆழ்ந்திருந்தபோதும் மக்களைப் பற்றி யோசிப்பதும் அவர்களுடனேயே முழுமையாக நேரத்தைச் செலவழிப்பதுமாக இருந்தமை எல்லாவற்றையும் நான் என்னவென்று சொல்வது? அத்துணை அதிரடித்தனம், அவ்வளவு உறுதிப்பாடு மேலும் அத்துணை ... எல்லாம் தனிமையில்.

 அப்படி ஒரு கூக்குரலையும் முழக்கத்தையும் அனீஸை நோக்கி எழுப்பிய அந்த மனிதரால், அவரது அற்புதத்தால் அவரது வார்த்தைகளை அனீஸ் கேட்கவில்லை, அல்லது கேட்டார், ஆனால் அவரது வார்த்தைகளின் விந்தையும் அவரது தொனியின் அற்புதமும் அவருக்குள் அப்படியொரு வியப்பை உண்டுபண்ணிற்று. ஏனெனில், கடவுளுடைய வார்த்தைகளை அவர் முதன்முதலாகக் கேட்கிறார் என்பதால் அவற்றின் அர்த்தங்களை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஜுன்துபின் சகோதரரரும் இளம் நாடோடியுமான அனீஸுக்கு அம்மனிதர் சொல்வது புரியவில்லை. என்றாலும் அவரது உறுதியான இயல்பூக்கங்கள் வாயிலாக, ‘நாடோடி ஆன்மா’ ஒன்றின் தெளிவான, இயற்கையான சுபாவத்தின் வாயிலாக அந்த மனிதர் ஓர் ‘நிகழ்வு’ என்பதை அவர் கண்டுகொள்கிறார். ‘தர்க்கம்’ என்பது ‘மனசாட்சி’யை இன்னமும் பதிலீடு செய்திருக்காத ‘ஓர் இயற்கையான மனிதர்’ அவர். இந்த வார்த்தைகளெல்லாம் மாற்று உலகிலிருந்து வந்தவை அல்ல என்பதை தனது புலன்களின் வாயிலாக அவர் உணர்ந்துகொள்கிறார். உண்மையை அவர் புரிந்துகொள்ளவில்லை; அந்த வார்த்தைகளின் அர்த்தங்களை அவர் கிரகித்துக்கொள்ளவில்லை; அந்த மனிதரைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை; என்றாலும், இறை வெளிப்பாட்டின் நறுமணத்தை அவர் முகர்ந்தார், உண்மையின் சுவையை அவர் சுவைத்தார், விசுவாசத்தின் விவரிக்க இயலாத கதகதப்பை அவர் அனுபவித்தார்.

பாலைவனத்தில் ஓய்வற்றவராக இருந்த அபூ தர்ரோ மக்காவுக்குச் செல்லும் பாதையில் பதற்றத்துடன் காத்திருக்கிறார். “அனீஸ், என் சகோதரா, அவரைப் பார்த்தாயா நீ? அவரது வார்த்தைகளைக் கேட்டாயா? அவர் என்ன சொல்கிறார்?”. “அவர் ஒரு தனி மனிதர். அவரது கோத்திரம் அவரை அலைக்கழித்து, அவர் மீது பகைமை பாராட்டியது. ஆனபோதும் பொறுமையாகவும் அன்பாகவும் அவர் நடந்துகொள்கிறார். ஒரு கூட்டம் அவரை நிராகரிக்கும்போதெல்லாம் அல்லது அவரை வசைபாடி, பரிகசித்துத் தீர்க்கும்போதெல்லாம் அவர் பிறிதொரு கோஷ்டியிடம் செல்வார், மறுபடியும் அவர் பேசத் தொடங்குவார்.”

“சொல் அனீஸ்! அவர் என்ன சொன்னார் என்பதைச் சொல். எதை நோக்கி அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்?”. “கடவுள் மீது சத்தியமாக, அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு நான் எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, எனினும் அவரது வார்த்தைகள் தேன்போல எனது ஆன்மாவின்வழி பாய்ந்தோடிச் சென்றன!”

 தகவலைத் தேடிக் கண்டடைவதில் அபூ தர்ரிடம் அறிஞருக்கான பேராவலோ அறிவுஜீவி ஒருவரின் திசைதிரும்பலோ இருக்கவில்லை. ஓய்வற்றவராகவும் நா வறண்டவராகவும் இருந்த அவருக்காக அந்த நீருற்றிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அனீஸ் கொண்டுவரவில்லை. அவசர அவசரமாக எழுந்த அவர் பயணம் குறித்தும் அதன் விளைவு குறித்தும் எழும் ஏன், எதற்காக, என்ன காரணம் உள்ளிட்ட கேள்விகள் குறித்தெல்லாம் ஒரு கணம்கூட உட்கார்ந்து யோசிக்காமல், கிஃபார் நிலத்திலிருந்து மக்கா நோக்கிய நெடும் பயணத்தைத் தொடங்கினார். வழி நெடுகிலும், பிரயாணி, பிரயாணம், பிரயாணத்துக்கான வழி, சென்று சேருமிடம் எல்லாம் ‘அவரே’.

 அவர் போகிறார் ஆனால் விசுவாசம் வருகிறது. ஆம். விசுவாசம் இந்த வழியில்தான் வருகிறது. ஒருவாராக அவர் மக்காவைச் சென்றடைந்தார். குறைஷி கேரவான் தலைவர்கள், முதலாளிகளுக்கு மத்தியில் கிஃபார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர்! தேடிக்கொண்டிருக்கிறார், எந்த நபரின் பெயரைக் குறிப்பிடுவதுகூட குற்றமாகக் கருதப்பட்டதோ இந்த நகரத்தில், அந்த ஆசாமியைத் தேடிக்கொண்டிருக்கிறார். மக்காவின் பள்ளத்தாக்குகள், கடைத்தெருக்கள், மஸ்ஜித் அல்-ஹராம் நெடுகிலும் அவர் நாள்முழுக்கத் தேடுகிறார். எதுவும் அவர் பார்வைக்குக் கிட்டவில்லை. அன்று இரவு தனிமையிலும் பசியோடும் அவர் மஸ்ஜித் அல்-ஹராமுக்கு உறங்கச் சென்றார். ஒவ்வொரு நாள் இரவு வீட்டுக்குச் செல்லும் முன்பும் பள்ளிவாசலுக்கு வந்து (ஆபிரஹாமின் மரபுகள் பிரகாரம்) அதைச் சுற்றி நடந்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் வழக்கம் கொண்ட அலீ, தன்னந்தனிமையில் புழுதிமேல் படுத்திருக்கும் அபூ தர்ரைப் பார்க்கிறார்.

“நீ ஒரு அந்நியனாகத் தெரிகிறாயே!”

தனது வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றார். வேறு எவ்வித வார்த்தைப் பரிமாற்றங்களிலும் ஈடுபடாமல் அங்கு தூங்கிப்போய்விடுகிறார் அபூ தர். என்ன திட்டத்தை முன்னிறுத்துகிறது விதி! இந்த வீடு, இது நபிகளாரின் வீடு. ஏனெனில், இந்தச் சமயத்திலெல்லாம் வாலிபனாக இருந்த அலீ நபிகளாரின் வீட்டில்தான் வசித்துவந்தார்.  வனாந்தரத்திலிருந்து முதன்முறையாக இஸ்லாத்தை நோக்கி வரும் அபூ தர்ரின் தலையெழுத்தை நிர்ணயித்த இந்தப் பிரயாணத்தின் பூர்வாங்க நிகழ்வுகள் இவைதான்: மக்காவில் அவரிடம் பேசிய முதல் மனிதர் அலீ; அவர் உறங்கிய முதல் வீடு நபிகளாரின் வீடு; நகரில் அந்நியப்பட்டு, தனிமையில் இருந்த அவரை நபிகளாரின் வீட்டுக்குக் கூட்டிச்சென்ற முதல் மனிதர் மீண்டும் அதே அலீ. இந்த முதல் சந்திப்புகள், தொடக்க நிகழ்வுகளெல்லாம் அபூ தர்ரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் செதுக்குபவையாக இருந்ததுடன் அவரது வாழ்நாள் முழுக்க மரணம்வரை அவரை வலுப்படுத்தியவண்ணம் இருந்தன.

அடுத்த நாள் காலை, அவர் முஹம்மதைத் தேடி முஹம்மதின் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். பகல் எந்தப் பலனும் இல்லாமல் இரவாகிறது. இரவில், கஃபாவைச் சுற்றுவதற்காக வரும் அலீ மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். மறுபடியும், அடுத்த நாள் காலை, அந்த நாள் இரவு என்று நேரம் கழிகிறது. இம்முறை, அதாவது மூன்றாம் நாள் இரவில், ஒவ்வொரு இரவிலும் தான் சுருக்கமாகவும் வழக்கமாகவும் கேட்கும் கேள்வியுடன் கூடுதலாக ஒரு வாக்கியத்தைச் சேர்த்துக்கொள்கிறார் அலீ, “உனது பெயரைச் சொல்வதற்கும், இந்த நகரத்துக்கு நீ ஏன் வந்தாய் என்பதைத் தெரிவிப்பதற்குமான காலம் இன்னும் கனிந்துவிடவில்லையா?”

அபூ தர் முன்ஜாக்கிரதையுடன் அலீயிடம் தனது ரகசியத்தைச் சொல்கிறார், “இந்த நகரில் ஒரு மனிதர் தோன்றியிருப்பதாக நான் அறிந்தேன் ...” உற்சாகத்தாலும் சந்தோஷத்தாலும் பளிச்சிட்ட புன்னகையின் கீற்று ஒன்று இளம் அலீயின் முகத்தை ஒளிரச் செய்கிறது. அன்பும் பரிச்சயமும் நிறைந்த தொனியில் அவரிடம் அவர் முஹம்மதைப் பற்றிப் பேசுகிறார். தன்னுடன் வருவதற்கு ஏற்பாடுகள் செய்கிறார், “இன்று இரவு அவரது மறைவிடத்துக்கு உன்னை நான் அழைத்துச் செல்வேன். நான் முன்னே செல்வேன். நீ தூரத்தில் என்னைப் பின்தொடர வேண்டும். ஏதேனும் ஒற்றனை நான் பார்த்தால், சுவரோரமாக நகர்ந்து சென்று, எனது காலணிகளைச் சரிசெய்வதுபோல் கீழ் நோக்கிக் குனிந்திருப்பேன். நடப்பதை உணர்ந்துகொள்ளும் நீ, என் மீதெல்லாம் எந்தக் கவனமும் செலுத்தாமல், இயல்பாகக் கடந்து உன் வழியில் போய்க்கொண்டே இரு. அபாயம் நீங்கிய பிறகு, விறுவிறுவென்று நடந்து உன்னைப் பிடித்துக்கொள்கிறேன்.”

நபிகளாரைக் கடும் சோதனைக்கு உள்ளாக்கிய நாள்கள் இவை. நகரம் பூராவும் அச்சுறுத்தல்கள், ஆபத்துகள். எதிரிகள், ஓர் அணியாக இருந்தனர், நண்பர்களோ, வெறும் மூன்றே பேர்தான்! எனினும் இன்று இரவு, இஸ்லாம் தனது நான்காவது முஸ்லிமைக் கண்டுகொள்ளும்.

மஸாஅவுக்குப் பல அடிகள் தள்ளியிருந்த ஸஃபா மலையில் அமைந்திருந்த அர்கம் இப்னு அபீ அர்கம் என்பவர் வீட்டில் முஹம்மது இருக்கிறார். இரவின் அச்சமூட்டும் இருளில், அபீ தாலிபின் இளம் மகன் முன்னால் செல்பவராகவும், ஜுனாதா கிஃபாரியின் மகன் அவரைப் பின்தொடர்பவராகவும் முஹம்மதைப் பார்க்க ஸஃபா மீது ஏறுகின்றனர். இந்தக் காட்சி அவர்களது தலையெழுத்தை வடிவமைக்கும் ஓர் அழகான காட்சிபோலத் தெரிகிறது. இந்த விதி, விரைவிலேயே ஆரம்பமாக இருக்கிறது. ஒவ்வொரு அடியாக அவர் பக்கத்தில் நெருங்குகிறார். புடைக்கும் நெஞ்சம், இளைப்புக்கு மேல் இளைப்பு, மேலதிக பரபரப்பு; விசுவாசமும் நிச்சயத் தன்மையும் அவரை ஆட்கொண்டுவிட்டன. தன்னை நபி என்று பிரகடனம் செய்பவரைப் பார்க்காமல், அவரைத் தெரிந்துகொள்ளாமல், அவரைச் சோதனைசெய்யாமல் அவர் திரும்பிச் செல்ல மாட்டார். தனது இதயத்தின் ஆருயிராகவும் தனது விசுவாசத்தின் தேட்டமாகவும் இருப்பவரைச் சந்திப்பதற்காக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அர்கமின் வீட்டை அடைவதற்கோ இப்பொழுது ஒரு சில எட்டுகளே மீதமிருந்தன அவருக்கு.

 எவ்வளவு கடினமான கணங்கள்! சந்திப்பின் முதல் கணங்களை எதிர்நோக்கியிருப்பதன் பளு கனமானதுதான். ஜுன்துபைப் பேரன்பு பற்றிக்கொண்டது. ஜுனாதாவின் மகன் ‘அவரால்’  நிரம்பியிருந்தார். அவரைவிட முஹம்மதே அவருள் அதிகமாக இருந்தார். ஜுன்துபின் மனத்தினுள் ஜுனாதாவின் மகன் என்பவர் வெகு நாள்களுக்கு முந்தைய, காணாமல் போய்விட்ட ஒரு நினைவாகவே அன்றி வேறெதுவாகவும் இருக்கவில்லை.

ஓர் ஆற்றல்மிகு விசையின் காந்தப்புலத்தில் அவரது இதயம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும் பரிச்சயமான நறுமணம் ஒன்று அவரது முகரும் புலனை முடுக்கிவிடுகிறது, மேலும் இந்தக் கணத்தில் முஹம்மதின் நெருக்கம் ஏற்படுத்தும் ஈர்ப்புச் சக்தியை தனது புலன்களால் அவர் முழுமையாக உணர்ந்துகொள்கிறார். முஹம்மதின் பிரசன்னம் ஸஃபாவைச் சுற்றி உள்ள பகுதியை நிரப்புகிறது. ஜுன்துபுக்கு முஹம்மது யார் என்று தெரியும். அவர் என்ன சொல்கிறார் என்பது தெரியும் ஆனால் ... அவர் எப்படி இருப்பார்? அவரது முகம்? அவரது அமைப்பு? அவர் பேசும் விதம்?அவரது பிரசன்னம்?அவரை இவர்  எப்படிப் பார்ப்பார்? அவரிடம் இவர் எப்படிப் பேசுவார்? அவரிடம் இவர் என்ன சொல்வார்? எப்படி ஆகப்போகிறது? என்ன நடக்கும்?

“சலாம் அலைக்.”

“அலைக்க சலாம் வ ரஹ்மதுல்லாஹ்.”

இஸ்லாத்தில் கூறப்படும் முதல் முகமன் வார்த்தைகள் இவை.

எவ்வளவு நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. வரலாறு நமக்குச் சொல்லியிருந்தால்கூட நமக்குத் தெரிந்திருக்காது, ஏனெனில் இந்தத் தருணங்களில் நேரமெல்லாம் கண்டுகொள்ளப்பட்டிருக்காது. நமக்குத் தெரிந்ததெல்லாம் அர்கமின் வீட்டினுள் இறங்கிய ஜுனாதாவின் மகன் அங்கேயே தொலைந்துபோய்விட்டார் என்பதுதான். அவர் எங்கு சென்றார் என்பது யாருக்கும் தெரியாது. அர்கமின் வீட்டைவிட்டு அவர் திரும்பவே இல்லை. ஜூன்துப் இப்னு ஜுனாதா திரும்பிச் செல்கிறார். சட்டென்று, கஅபாவுக்குப் பக்கத்தில், ஸஃபா சிகரத்தின் மேல், இறைச் செய்தியின் மறைவிடத்திலிருந்து, இஸ்லாத்தின் அதிகாலை தொடுவானம் ஒன்று – ஓர் முகம் - மேலெழுகிறது, வைகறையால் கிளப்பிவிடப்பட்ட அது ஒரு கணம் நிற்கிறது. பாலைவனத்தின் நெருப்பு சுவாலையால் நிரம்பியிருந்த இரு கண்களைக்கொண்டு, மக்கா பள்ளத்தாக்கில் இருந்த மலைபோன்ற சுவர்களை நோக்கித் திரும்பிய அவர் கஅபாவின் சிலைகள் மீது தனது பார்வையை நிறுத்துகிறார் .

தொடர்ச்சி நான்காம் பாகத்தில் ...

1 comment:

  1. Caesars Palace in Las Vegas - DRMCD
    Our 부천 출장샵 new location at 남양주 출장샵 the Wynn 태백 출장샵 is located in the heart of the Strip. 목포 출장샵 This is the only Vegas hotel on 공주 출장샵 the Strip that features an on-site casino and

    ReplyDelete