Friday, April 5, 2019

குர்'ஆன் கூறும் அரசியல் - III

குர்'ஆன் கூறும் அரசியல்
பாகம்3

மொளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)


தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி



இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சி ...

இஸ்லாமிய அரசின் சிறப்பம்சங்கள்

        மேற்கண்ட 16 தலைப்புகளின் கீழ் குர்'ஆன் இவ்வாறு விளக்கிய பிறகு இஸ்லாமிய அரசின் சிறப்புகளாக நம்முன் தோன்றுவன பின்வருமாறு:

1)       தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை விட 'ரப்புல் ஆலமீனுடைய' திருப்தியை முதன்மையானதாகக் கருதும் சுதந்திர சிந்தையுள்ள ஒரு சமூகத்தினால் இஸ்லாமிய அரசு தோற்றுவிக்கப்படுகின்றது. தன்னுடைய ஆட்சியை அமைக்காமல், அவ்விறைவனின் பிரதிநிதியாக (கலீஃபாவாக) அவனுடைய வழிகாட்டுதலின் கீழ் அது ஆட்சியை நடத்துகின்றது. இறைமறை, இறைத்தூதர் வழிமுறையிலிருந்து அவ்வழிகாட்டுதலை அது பெறுகின்றது.

2)       ஆட்சி, அதிகாரம் இறைவனுக்கே என்ற கொள்கையை ஏற்றுக் கொள்கின்ற வகையில் அது 'இறையியல்' (Theocracy) கருத்தாக்கத்தோடு ஒத்துப்போகின்றது. ஆனால் செயல்படுத்துகின்ற விதத்தில் அது மாறுபட்டு நிற்கின்றது. 'இறையியல்' அமைப்பில் சட்டங்களை வகுப்பதும், விலக்குவதும் ஒரு குறிப்பிட்ட மதகுருமார்களின் அதிகாரத்தில் தான் இருக்கும். ஆனால் இஸ்லாமிய அரசு தனது குடிமக்களில் யாரெல்லாம் இறைவனை ஏற்றுக்கொண்டு அவன் திருப்திக்காகவே தமது வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்களோ அந்த இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் அரசில் பங்கு பெறும், அரசை செயற்படுத்தும் உரிமையை வழங்குகின்றது.

3)       பொதுமக்கள் ஆட்சியில் பங்குபெறலாம், நிர்வாகிக்கலாம் என்ற தன்மையின் அடிப்படையில் இஸ்லாமிய அரசு ஜனநாயகத்தின் 'மக்களாட்சித்' (Democracy) தன்மையோடு ஒத்துப்போகின்றது. ஆயினும், இங்கு மக்கள் அரசின் சட்டதிட்டங்கள், வாழ்வுநெறி, உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள், வருமான வகைகள் அனைத்தையும் தமது எண்ணங்களின் அடிப்படையில் வகுத்துக் கொள்ளும் 'சுயநிர்ணய' உரிமை பெற்றவர்கள் அல்லர். தமது மனம்போல் இவற்றை மாற்றிக் கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி கிடையாது. இறைவனும், இறைத்தூதரும் எத்தகைய வழிகாட்டுதலை வழங்கியுள்ளனரோ அவ்வடிப்படையில் தான் ஆட்சி நடத்த வேண்டும். அரசு நிர்வாகத் துறையோ, சட்டத்துறையோ, நீதித்துறையோ, ஒட்டுமொத்த மக்கள் ஒன்று சேர்ந்தோ, இவற்றில் தலையிடவோ, மாற்றவோ முடியாது. அவ்வாறு மாற்ற விரும்பினால் தத்தமது நம்பிக்கைகளைத் துறந்து ஈமானைவிட்டு வெளியேறிவிடலாம்.

4)       இது ஒரு 'கருத்தியல் அரசு' ஆகும். ஆகவே இயல்பாகவே யார் யார் இக்கருத்துகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனரோ அவர்கள்தாம் ஆட்சி செலுத்த இயலும். இருப்பினும், இக்கருத்துக்கள் மீது நம்பிக்கை இல்லாதோரும் நாட்டில் எல்லாவகையான உரிமைகளும் தரப்பெற்று பிறகுடிமக்களுக்கு இணையாக நடத்தப்படுவர்.

5)       இவ்விஸ்லாமிய அரசு எந்தவித இன, நிற, மொழி அல்லது குறுகிய தேசியவாத நோக்கில் நிறுவப்படமாட்டாது. மாறாக சில அடிப்படை நெறிகள் மீது தோற்றுவிக்கப்படுவதாகும். உலகின் எந்த பகுதியை சார்ந்தவரும், இவ்வடிப்படை நெறிகளை ஏற்றுக்கொண்டால் எவ்வித மாச்சர்யமும் இல்லாமல் சம உரிமைகளோடு இவ்வமைப்பில் தம்மை இணைத்துக் கொள்ளலாம். இவ்விதமாக பூமியில் எப்பகுதியில் இவ்வரசு நிறுவப்பட்டாலும் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா அல்லது ஆசியா எதுவாக இருப்பினும் அது இஸ்லாமிய அரசாகவே கருதப்படும். அதன் ஆட்சியாளர்கள் வெள்ளையர்களாக, மஞ்சள் நிறத்தவர்களாக அல்லது கருப்பர்களாக இருக்கலாம். இவ்வகையில் இது உலகளாவிய அரசாக அமைவதில் எவ்வித தடையுமில்லை. இவ்விதமான அரசுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டாலும் இனவெறியில் புதைந்துபோகாது. அவற்றிற்கிடையே சகோதரத்துவம் இழையோடும். எந்நேரத்திலும் ஒன்றுசேர்ந்து ஒரு உலகளாவிய அமைப்பாக உருமாறும்.

6)       அரசியலை சுயலாபங்கள், உலக நலன்களுக்காக என்றில்லாமல் ஒழுக்க மாண்புகள் மற்றும் இறையம்சத்தோடு பின்னிப் பிணைந்ததாக ஆக்குவதே இவ்வரசின் உண்மையான நோக்கம்!. இங்கு உயர்வு மற்றும் கெளரவம் ஒழுக்க அடிப்படையில் தாம்! ஆட்சியாளர்கள் தேர்வின்போது, உடல்பலம், அறிவுபலம் ஆகியவற்றோடு ஒழுக்க நலன் அதிமுக்கியமாக கருதப்படும். உள்துறையின் அனைத்து அங்கங்களும் நேர்மை, நாணயம், உயர்ந்த நீதி, நியாயம் ஆகியவற்றின் சின்னங்களாக விளங்கும். வெளிவிவகாரத் துறையிலோ நேர்வழியும், சொல் செயல் ஒற்றுமை, சமாதானநோக்கு, நாடுகளுக்கிடையேயான நீதுயும், நன்னடத்தையும் வியாபித்து நிற்கும்.

7)       இவ்வரசு சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவது, நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது போன்ற காவல்துறைப் பணிகளுக்கானது அல்ல. மாறாக இதற்கென ஓர் உன்னத நோக்கம் உண்டு. சமூக நீதியை நிலைநாட்டுவது, நன்மையான காரியங்களைப் பரவலாக்குவது, தீமையை இல்லாதொழிப்பது போன்றவையாகும்.

8)       உரிமைகள், அந்தஸ்து போன்றவற்றில் சமத்துவம்; சட்டங்களுக்கு முற்றிலும் அடிபணிதல்; நன்மையானவற்றில் உறுதுணையாய் இருத்தல்; தீமைகளுக்கு உதவாமல் விலகியிருத்தல்; இறைவனுக்கு முன்னால் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு; பொறுப்பினைக் கட்டாயக் கடமையாக கருதுதல்; குடிமக்களுக்கும் (தனிமனிதர்களுக்கும்), அரசுக்கும் ஒரே பொதுவான இலக்கு; சமூகத்தில் எந்த ஒரு தனிமனிதனும் வாழ்க்கைத் தேவையான அடிப்படை வசதிகளை பெறாமலிருக்கக்கூடாது எனும் அக்கறை..... இவை இவ்வமைப்பின் அடிப்படை அம்சங்கள்.

9)       இவ்வமைப்பில் தனிமனிதனுக்கும், அரசுக்கும் இடையே ஓர் அற்புதமான இணைப்பு காணப்படுகின்றது. அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தனது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து தனிமனிதனை அடிமைபடுத்திடவும் முடியாது. தனிமனிதன் எல்லாவகையான சுதந்திரம் படைத்தவனாய் தான்தோன்றித் தனமாக சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கவும் முடியாது, ஒரு புறம் தனிமனிதனுக்கு உரிமைகள் கொடுத்தும், அரசினை இறைச்சட்டங்களின் மேலாண்மை, ஷூரா அமைப்பு என்ற வரையறைக்குள் வைத்தும் தனிமனித உரிமை வளர வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. தேவையற்ற அரசாங்க தலையீட்டிலிருந்து அவனைப் பாதுகாக்கின்றது.


அதே சமயம் தனிமனிதனுக்கென்று அத்யாவசியமான ஒழுக்க நெறிகளையும் முறைபடுத்தியுள்ளது. இறைச்சட்டங்களை வழிமுறையாகக் கொண்டியங்கும் அரசினை மனதார நேசிப்பது, கீழ்படிந்து நடப்பது, நன்மையான காரியங்களில் முன்சென்று உறுதுணையாய் இருப்பது, அமைப்பில் சீர்குலைவை ஏற்படுத்துவதை விட்டும் விலகியிருப்பது, அமைப்பைக் காக்க உயிர், உடல், பொருள் அனைத்தையும் அர்ப்பணிப்பது ஆகியவை.

No comments:

Post a Comment