Friday, April 5, 2019

குர்'ஆன் கூறும் அரசியல் - I


குர்'ஆன் கூறும் அரசியல்
பாகம் - 1

மொளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)

தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி




1.   உலகத்தைப் பற்றிய பார்வை

உலகத்தைப் பற்றிய குர்'ஆனியப் பார்வை சரியாகப் புரிந்து கொண்டால்தான், குர்'ஆன் கூறும் அரசியலைப் புரிந்து கொள்ள முடியும். அரசியல் நோக்கில் அதைப்பற்றி ஆராயும்போது கீழ்வரும் விஷயங்கள் நமக்கு புலப்படுகின்றன.

() மனிதனுடைய, இவ்வுலகினுடைய மற்றும் இவ்வுலகில் மனிதன் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களுடைய படைப்பாளன் அல்லாஹ் ஆவான்.

"வானங்களையும், பூமியையும் சத்தியத்தின் அடிப்படையில் படைத்தவன் அவனே!"                                                                                                                  
(அல்குர்ஆன் 6:73)

"நீர் கூறும்: ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் அல்லாஹ்வே! அவன் தனித்தவனும், அனைத்தையும் அடக்கியாள்பவனும் ஆவான்!"                                      
(அல்குர்ஆன் 13:16)

"மனிதர்களே!, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்! மேலும் அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்.                                                  
(அல்குர்ஆன் 4:1)

"அவனே பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காகப் படைத்தான்"      
(அல்குர்ஆன் 2:29)

"வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வையன்றி வேறொரு படைக்கிறவன் இருக்கின்றானா?"                                  
(அல்குர்ஆன் 35:3)

"ஆகவே (பெண்ணின் கர்ப்பத்தில்) நீங்கள் செலுத்திவிடுகின்ற (விந்தான)தைப் பார்த்தீர்களா?
அதனை(க் குழந்தையாக) நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம் தான் படைப்பவர்களா?
நீங்கள் (பூமியைக்கிளறி) விதைப்பதைப் பார்த்தீர்களா?
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
நீங்கள் குடிக்கின்றீர்களே அந் நீரைப் பார்த்தீர்களா?
அதனை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம்தான் இறக்கிவைப்பவர்களா?
நீங்கள் மூட்டுகின்ற நெருப்பைப் பார்த்தீர்களா?
அதனுடைய மரத்தை நீங்கள் உற்பத்தி செய்தீர்களா? அல்லது நாம்தான் உற்பத்தி செய்பவர்களா?                                                                     
(அல்குர்ஆன் 56:58-72)

() தன்னால் படைக்கப்பட்ட இவ்வனைத்து படைப்பினங்களின் சொந்தக்காரனும், ஆதிக்கம் செலுத்துபவனும், நிர்வகிப்பவனும் அவனே ஆவான்.

"வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றிற்கும், அவற்றிற்கிடையே உள்ளவற்றிற்கும், மற்றும் மண்ணுக்கடியில் உள்ளவற்றிற்கும் அவனே உரிமையாளன் ஆவான்"          
(அல்குர்ஆன் 20:6)

"வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் அனைவரும் அவனுடைய அடிமைகளே! அனைவரும் முழுக்க முழுக்க அவனுக்கே கீழ்படிகின்றனர்".                             
(அல்குர்ஆன் 30:26)

"அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன! அறிந்து கொள்ளுங்கள்; படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே! அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் அருள் வளமிக்கவனாவான்"                           
(அல்குர்ஆன் 7:54)

"வானங்கள் முதல் பூமிவரை உலகின் காரியங்களையும் நிர்வகிக்கின்றான்"
                                                                                                (அல்குர்ஆன் 32:5)

() இவ்வுலகின் மீதான ஆதிக்கம் ஹாக்கிமிய்யத் (sovereignity) அல்லாஹ்வைத் தவிர வேறுயாருக்கும் கிடையாது. அதில் பங்கு கேட்கவோ, பங்கு பெறவோ யாருக்கும் உரிமை கிடையாது.

"நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா?"                                                          
(அல்குர்ஆன் 2:107)

"ஆட்சியில் அவனுடன் பங்கு உடையோர் எவரும் இல்லை!"                
(அல்குர்ஆன் 25:2)

"இன்னும், அவனே அல்லாஹ்; அவனைத் தவிர (வேறு) வணக்கத்திற்குரியவன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் புகழ்யாவும் அவனுக்கே உரியது! அதிகாரமும் அவனுக்கே உரியது! நீங்கள் (யாவரும்) அவன் பக்கமே திரும்பிக்கொண்டு வரப்படுவீர்கள்." 
                                                                                                (அல்குர்ஆன் 28:70)

"தீர்ப்பின் அனைத்து அதிகாரங்களும் அல்லாஹ்வுக்குத்தான் உரியன!"    
(அல்குர்ஆன் 6:57)

"பூமியிலும் வானங்களிலும் உள்ள) படைப்புகளுக்கு அவனைத் தவிர வேறு பாதுகாவலர் யாரும் இல்லை! அவன் தனது ஆட்சி அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டு சேர்த்துக் கொள்வதில்லை!"                                                                            
(அல்குர்ஆன் 18:26)

"இந்த விவகாரங்களில் எங்களுக்கும் ஏதாவது பங்குண்டா? என்று அவர்கள் கேட்கின்றார்கள். நீர் கூறும்: (யாருக்கும் எத்தகைய பங்குமில்லை) இவற்றின் அனைத்து அதிகாரங்களும் நிச்சயமாக அல்லாஹ்வின் கைவசமே உள்ளன!"                                      
(அல்குர்ஆன் 3:154)

"முன்பும், பின்பும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உரியதாகும்!"                   
(அல்குர்ஆன் 30:4)

"அவனே, வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு உரிமையாளன்; மேலும் அனைத்து விவகாரங்களும் தீர்ப்புக்காக அவனிடமே திருப்பிவிடப்படுகின்றன!"      
(அல்குர்ஆன் 57:5)

"ஆகவே, படைக்கின்றவனும், படைக்காதவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டாமா?                                                                   
(அல்குர்ஆன் 16:17)

"அல்லாஹ்வுக்கு இணையாக இவர்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுள்களும் அவன் படைத்திருப்பதைப் போல் (எதனையும்) படைத்திருந்து, அதன் காரணமாக இது யாருடைய படைப்போ? என்று இவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டதோ?                 
(அல்குர்ஆன் 13:16)

"(நபியே!) இவர்களிடம் கேளும்: இறைவனை விடுத்து நீங்கள் அழைக்கின்ற உங்களுடைய இணைத் தெய்வங்களைப் பற்றி எப்போதேனும் நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? பூமியில் எதைத்தான் அவர்கள் படைத்திருக்கின்றார்கள்? அல்லது வானங்களில் அவர்களுக்குறிய பங்கு என்ன என்பதை எனக்கு காண்பியுங்கள்!..... உண்மையில் அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் விலகிவிடாமல் தடுத்து வைத்திருக்கிறான். அப்படி அவை விலகிவிட்டால் அல்லாஹ்வுக்குப் பிறகு அவற்றை தடுத்து நிறுத்துவோர் வேறு யாருமில்லை!"
                                                                                                (அல்குர்ஆன் 35:40,41)

() ஆதிக்கஞ் செலுத்தத் தேவையான பண்புகளும், அதிகாரமும் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளன. அப்பண்புகளுக்கு பொருத்தமானவர் உலகின் வேறு எவரும் கிடையாது. அவனே அனைவரையும் மிகைத்தவன்; அனைத்தையும் அறிந்தவன்; மாசற்றவன்; குற்றமற்றவன்; அனைவரையும் கண்காணிப்பவன்; அபயம் அளிப்பவன்; உயிருள்ள, உயிரற்ற எல்லாப் பொருட்களும் அவனுக்கு கட்டுப்பட்டு உள்ளன; நன்மையும் தீமையும் அவன் கட்டுப்பாட்டில் தான் உள்ளன; அவனைத்தவிர அல்லது அவன் அனுமதியின்றி யாரும், யாருக்கும் நன்மையோ, தீமையோ செய்திடமுடியாது.

அவன் அனுமதியின்றி யாரும் அவன் முன்னே சிபாரிசு செய்திட இயலாது. அவன் யாரை நாடுகின்றானோ அவனைப் பிடிப்பான். நாடியவரை விட்டுவிடுவான். அவனை எதிர்த்து எங்கும் யாரிடமும் முறையிட முடியாது. அவன் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், அனைவரும் அவனுக்கு கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும். அவன் நினைத்தது நடக்கும். நடப்பதை தடுத்திட யாராலும் முடியாது. ஆதிக்கஞ் செலுத்தத் தேவையான இத்தனை தகுதிகளும் அல்லாஹ்விடம்தான் உள்ளன. இவற்றில் யாரும் அவனுக்கு இணையாக முடியாது.

"மேலும், அவனே தன் அடிமைகள் மீது முழு அதிகாரமுடையவன். மேலும், அவன் நுண்ணறிவாளனாகவும், யாவற்றையும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கிறான்."
                                                                                                (அல்குர்ஆன் 6:18)

'மறைவான மற்றும் வெளிப்படையான அனைத்தையும் அவன் அறியக்கூடியவனாகவும், மிக உயர்ந்தவனாகவும், (எல்லா நிலையிலும்) மேலானவனாகவும் இருக்கிறான்!"
                                                                                                (அல்குர்ஆன் 13:9)

"அவன் அனைத்தையும் எத்துனை நன்றாய் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கிறான்!! அடியார்களுக்கு அவனைத்தவிர வேறு பாதுகாவலர் யாருமில்லை! அவன் தனது ஆட்சியதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டு சேர்த்துக் கொள்வதில்லை!"
                                                                                                (அல்குர்ஆன் 18:26)

"நிச்சயமாக என்னை அல்லாஹ்விடமிருந்து ஒருவரும் காப்பாற்றவே முடியாது; அவனையன்றி வேறு ஒதுங்குமிடத்தையும் என்னால் காண் முடியாது!"
                                                                                                (அல்குர்ஆன் 72:22)

"அனைவருக்கும் அபயம் அளிப்பவன்; அவனுக்கு எதிராக அபயம் அளிக்கப்பட முடியாது!"                                                                                                          
(அல்குர்ஆன் 23:88)

"நிச்சயமாக அவன்தான் (அவர்களை) ஆரம்பத்தில் படைக்கிறான்; (அவர்கள் மரணித்த பின்னரும் அவர்களை) அவனே மீளவைப்பான்.
இன்னும் அவனே (விசுவாசங் கொண்டோரான தன் அடியார்களை) மிக்க மன்னிப்பவன்; மிக்க நேசிப்பவன்.
(அவன்தான்) அர்ஷுடையவன்; பெரும் மேன்மையுடையவன்".          
(அல்குர்ஆன் 85:13-16)

"நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதை கட்டளையிடுகிறான்".                 
(அல்குர்ஆன் 5:1)

"அல்லாஹ் கட்டளையிடுகிறான்; அவனுடைய கட்டளையை மறுபரிசீலனை செய்யக்கூடியவர் யாருமில்லை!"                                                                       
(அல்குர்ஆன் 13:41)

"அவன் தன்னுடைய செயல்களுக்கு (எவர் முன்னிலையிலும்) பதில் சொல்ல வேண்டியவன் அல்லன்! மற்றவர்கள் அனைவரும் பதில் சொல்ல வேண்டியவர்களே!"
(அல்குர்ஆன் 21:23)

"அவனுடைய சொற்களை மாற்றுவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை! அவனை எதிர்த்து (தப்பியோட) எந்தப் புகலிடமும் உமக்குக் கிடையாது!"
                                                                                                (அல்குர்ஆன் 18:27)

"தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் அல்லாஹ் மிக்க மேலாகத் தீர்ப்பளிப் போனாக இல்லையா?"                                                                                                          
(அல்குர்ஆன் 95:8)

"(நபியே! பிரார்த்தித்து) நீர் கூறுவீராக: அல்லாஹ்வே (இம்மை மறுமையின் சகல) ஆட்சிக்கும் அதிபதி! நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகின்றாய்; மேலும் நீ நாடியவரை கண்ணியப்படுத்துகின்றாய்; இன்னும் நீ நாடியவரை இழிவு படுத்துகின்றாய்; நன்மை(யாவும்) உன் கைவசமே (இருக்கின்றன). நிச்சயமாக, நீ ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்".
                                                                                                (அல்குர்ஆன் 3:26)

"நிச்சயமாக இந்தப் பூமி அல்லாஹ்வுக்கே உரியது; இதனை அவன் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு உரிமையாக்குகிறான்".                                        
(அல்குர்ஆன் 7:128)

2.   இறையாதிக்கம்

உலகத்தைப் பற்றிய இக்கருத்துக்களின் அடிப்படையில் யார் உண்மையில் இவ்வுலகின் மீது ஆதிக்கம் செலுத்துகிறானோ, கட்டுப்படுத்துகிறானோ அவனே  மனிதன் மீதும் ஆதிக்கம் செலுத்துபவன் என்று குர்'ஆன் கூறுகின்றது. கட்டுப்படுத்தக்கூடிய, கட்டளையிடக்கூடிய அதிகாரம் அவனைத் தவிர வேறுயாருக்கும் கிடையாது.

இவ்வுலகத்தில் சிறிய அணு முதற்கொண்டு வானளாவிய விண்வெளி அமைப்புவரை அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தே செயல்படுகின்றன. அதுபோன்றே மனிதனைப் பொறுத்த வரையிலும் அவனுடைய வாழ்க்கையில் அவனால் கட்டுப்படுத்த இயலாத பகுதிகள் இறைவன் வகுத்த நியதிகளின் படியே செயல்படுகின்றன. ஆனால், மனிதன் சிந்தித்து முடிவெடுக்கக்கூடிய விஷயங்களில் தனது ஆளுமையை அல்லாஹ் பலவந்தமாக திணிப்பதில்லை. மாறாக இறைவேதங்களின் வாயிலாக வழிகாட்டுகிறான்!

அவ்வழிவந்த இறைவேதம்தான் திருக்குர்'ஆன். அறிவுப்பூர்வமாக சிந்தித்து அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளுமாறு, கட்டுப்பட்டு நடக்குமாறு குர்'ஆன் மனிதனுக்கு அறிவுறுத்துகிறது.

பல்வேறு கோணங்களில் குர்'ஆன் இதை விரிவாக வலியுறுத்துகின்றது.

() இவ்வுலகின் 'ரப்' தான் மனிதனின் 'ரப்' (இரட்சகன்) ஆகவும் உள்ளான். அவனுடைய 'ருபூபிய்யத்'தையே ஏற்று நடக்க வேண்டும்:
"நிச்சயமாக எனது தொழுகையும், என்னுடைய வழிபாடுகளும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும்!.... அல்லாஹ்வே அனைத்துக்கும் அதிபதியாக இருக்க, அவனை விட்டுவிட்டு வேறொரு அதிபதியை நான் தேடுவேனா?"                                            
(அல்குர்ஆன் 6:162, 163)

"நிச்சயமாக உங்கள் இரட்சகன் அல்லாஹ்தான்; அவன் எத்தகையவனென்றால், வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களின் படைத்தான்;"       
(அல்குர்ஆன் 7:54)

"(நபியே!) நீர் கூறுவீறாக: மனிதர்களின் அதிபதியிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். (அவன்தான்மனிதர்களின் உண்மையான இறைவன்"                
(அல்குர்ஆன் 114:1-3)

"வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லது செவிப்புலனையும், பார்வைகளையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பவன் யார்? இறந்ததிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்ததையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலத்தாரின்) சகல காரியங்களைத் திட்டமிட்டு நிகழ்த்துபவனும் யார்? என (நபியே!) நீர் (அவர்களைக்) கேட்பீராக! அதற்கவர்கள் 'அல்லாஹ்தான்' என்று கூறுவார்கள்; அவ்வாறாயின், (அவனுக்கு) நீங்கள் பயப்படமாட்டீர்களா? என்று நீர் கூறுவீராக!
(இத்தகைய தகுதிகளுக்குரிய) அவன்தான் உங்களுடைய உண்மையான இரட்சகனாகிய அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னர், வழிகேட்டைத் தவிர வேறு (எஞ்சியிருப்பது) யாது? (இவ்வுண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்? (என்றும் நபியே! நீர் கேட்பீராக)"                                                                                                        
(அல்குர்ஆன் 10:31-32)

() கட்டளையிடக்கூடிய, தீர்ப்பளிக்கக்கூடிய அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் கிடையாது. மனிதர்கள் அவனுக்கே 'வழிபட்டு' நடக்க வேண்டும்.
"நீங்கள் எவ்விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறீர்களோ, அதில் தீர்ப்பு வழங்குவது அல்லாஹ்வின் பணியாகும்"                                                  
(அல்குர்ஆன் 42:10)

"ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை! அவனைத் தவிர வேறு யாருக்கும் அடிபணியக்கூடாது என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுதான் முற்றிலும் நேரான வாழ்க்கை நெறி ஆகும்! ஆயினும் மக்களில் பெரும்பாலோர் அறியாமல் உள்ளனர்!"                                                                                      
(அல்குர்ஆன் 12:40)

"இந்த விவகாரங்களில் எங்களுக்கும் ஏதாவது பங்கு உண்டா? என்று அவர்கள் கேட்கின்றனர். நீர் கூறும்: (யாருக்கும் எத்தகைய பங்குமில்லை) இவற்றின் அனைத்து அதிகாரங்களும் நிச்சயமாக அல்லாஹ்வின் கைவசமே உள்ளன!"                                      
(அல்குர்ஆன் 3:154)

() கட்டளையிடக்கூடிய அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது. ஏனெனில் அவனே படைத்தவன்.

"அறிந்து கொள்ளுங்கள்; படைக்கும் ஆற்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்கு உரியவையே!"                                                                        
(அல்குர்ஆன் 7:54)

() கட்டளையிடக்கூடிய அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது. ஏனெனில் அவனே அகிலத்தின் எஜமானன்.

"திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவர்களுடைய கரங்களைத் துண்டித்து விடுங்கள்...... அல்லாஹ்தான் வானங்கள், பூமி இவற்றின் ஆட்சிக்கு உரியவன் என்பதை நீர் அறியவில்லையா?"                                                                         
(அல்குர்ஆன் 5:38-40)

() கட்டளையிடக்கூடிய அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே ஏன் உள்ளது என்றால் உண்மையான அறிவு அவனிடம் மட்டும்தான் உள்ளது.

"ஒரு பொருளை அது உங்களுக்கு நன்மையாக இருக்கு (அதை) நீங்கள் வெருக்கலாம், இன்னும், ஒரு பொருளை அது உங்களுக்குத் தீமையாக இருக்க (அதை) நீங்கள் விரும்பலாம்; (அவற்றில் நன்மை உண்டா? இல்லையா? என்பதை? அல்லாஹ்வே அறிவான்; நீங்களோ அறியமாட்டீர்கள்".                                                                          
(அல்குர்ஆன் 2:216)

"சீர்குலைப்பவர்கள் யார்? சீர்திருத்துபவர்கள் யார்? என்பதை அல்லாஹ்வே நன்கு அறிகிறான்!"                                                                                              
(அல்குர்ஆன் 2:22)

"அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், பின்னால் மறைவாக இருப்பவற்றையும், அவன் நன்கறிவான்; அவன் (அதிலிருந்து கொடுக்க) நாடியுள்ளதை தவிர வேறெதையும் அவன் ஞானத்திலிருந்து எவரும் புரிந்து கொள்ள முடியாது."                              
(அல்குர்ஆன் 2:255)

"நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்களின் (இத்தா) தவணையை நிறைவு செய்த பிறகு அவர்கள், தங்களுக்குரிய துணைவர்களை நேர்மையான முறையிலும், பரஸ்பர பொருத்தத்தின் அடிப்படையிலும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்!..... இதுவே உங்களுக்கு மிகத் தூய்மையானதும், பண்பு மிக்கதுமான வழிமுறையாகும்! மேலும், அல்லாஹ் நன்கு அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்!"                                                                                                            
(அல்குர்ஆன் 2:232)

"உங்களுடைய பிள்ளைகள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு ஏவுகிறான்;.....உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு நன்மை செய்வதில் யார் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்! (இப்பங்குகளை) அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான்; திண்ணமாக, அல்லாஹ் (எல்லா உண்மை நிலைகளையும்)) நன்கு அறிந்தவனாகவும், (பயன்களை) நன்கு புரிந்தவனாகவும் இருக்கிறான்!"                                                       
(அல்குர்ஆன் 4:11)

"கலாலா (தாய், தகப்பன், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்க கட்டளையை (நபியே!) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) 'கலாலா' பற்றி அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான் என்று (நபியே!) நீர் கூறுவீராக;... நீங்கள் தவறாமல் இருப்பதற்க்காக, அல்லாஹ் உங்களுக்கு சட்ட திட்டங்களை தெளிவாக விவரிக்கிறான்; அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்."     
(அல்குர்ஆன் 5:176)

"அல்லாஹ்வின் வேதப்படி, இரத்த பந்தமுடையவர்கள் தாம் ஒருவர் மற்றொருவருக்கு உதவுவதில் அதிக உரிமை உடையவர்கள் ஆவார்கள். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கிறான்".                                                 
(அல்குர்ஆன் 8:75)

"தான தர்மங்களெல்லாம் வறியவர்களுக்கு உரியன இன்னும்....இது அல்லாஹ் ஏற்படுத்திய கடமையாகும்; மேலும், அல்லாஹ் நன்கறிகிறவன்; தீர்கமான அறிவுடையவன்."
                                                                                                (அல்குர்ஆன் 4:11)

"விசுவாசங்கொண்டோரே! உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களும் (அடிமைகளும்), உங்களில் பருவமடையாத சிறுவர்களும், (நீங்கள் வீட்டினுள் இருக்கக்கூடிய நேரங்களில் உங்களிடம் வருவதாயின்) மூன்று நேரங்களில் அவர்கள் அனுமதி கோர வேண்டும்; இவ்வாறு அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு விளக்குகிறான்; இன்னும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிகிறவன்; தீர்க்கமான அறிவுடையவன்.
இன்னும் உங்களிலுள்ள சிறுவர்கள் பருவமடைந்து விட்டால், அவர்களுக்கு முன்னுள்ள (மூத்த)வர்கள் அனுமதி கேட்டதுபோன்று அவர்களும் அனுமதி கேட்கவேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விளக்குகிறான்; மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிகிறவன்; தீர்க்கமான அறிவுடையவன்."               
(அல்குர்ஆன் 24:58-59)

"விசுவாசங்கொண்டோரே! விசுவாசிகளான பெண்கள் ஹிஜ்ரத்து செய்தவர்களாக வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்; இது அல்லாஹ்வுடைய தீர்ப்பாகும்; அவன் உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கிறான்; மேலும், அல்லாஹ் (யாவையும்) நன்கறிகிறவன்; தீர்க்கமான அறிவுடையவன்."                                
(அல்குர்ஆன் 60:10)

3.   இறைச் சட்டங்களின் ஆதிக்கம்

இத்தகைய காரணங்களினால், கீழ்படிவது முழுக்க முழுக்க அல்லாஹ்விற்க்காகவும், கட்டுப்பட்டு நடப்பது முழுக்க முழுக்க அவனுடைய சட்டங்களுக்காகவும் இருக்க வேண்டும் என்று குர்'ஆன் வரையறுக்கின்றது. அதை விட்டு விட்டு மற்றவர்களுக்கோ அல்லது தன் மனோயிச்சைகளுக்கோ கட்டுப்பட்டு வாழ்வதை தடை செய்கின்றது.

“(நபியே!) நிச்சயமாக நாமே உண்மையைக் கொண்டு இவ்வேதத்தை உமக்கு இறக்கிவைத்திருக்கிறோம்; ஆகவே நீர் முற்றிலும் தீனை-கீழ்படிதலை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கியவராக அல்லாஹ்வை வணங்குவீராக!"                  
(அல்குர்ஆன் 39:2)

"தீனை-கீழ்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கி அவனை வணங்கும்படி நிச்சயமாக நான் ஏவப்பட்டுள்ளேன் என்று (நபியே!) நீர் கூறுவீராக!, இன்னும், (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கீழ்படிந்து நடப்போரில் முதன்மையானவனாக நான் இருக்க வேண்டுமென்றும் ஏவப்பட்டுள்ளேன் என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!"                            
(அல்குர்ஆன் 39:11, 12)

"ஒவ்வொரு சமூகத்திலும் (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள்; தாகூத்திற்கு(1) அடிபணிவதை விட்டும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்; என்று (போதிக்குமாறு) நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம்                               
(அல்குர்ஆன் 16:36)


"தங்கள் தீனை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாகவும், முற்றிலும் ஒருமனப்பட்டவர்களாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டும்.... என்பதை தவிர வேறு எந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை!"                             
(அல்குர்ஆன் 98:5)

"(மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இரட்சகனிடமிருந்து இறக்கிவைக்கப்பட்டதை பின்பற்றுங்கள்; அவனையன்றி வேறு பாதுகாவலர்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்!"                                                                                                                     
(அல்குர்ஆன் 7:3)

"இந்த ஞானம் உம்மிடம் வந்த பின்னரும் அவர்களுடைய விருப்பங்களுக்கு நீர் இணங்கிச் சென்றால், அல்லாஹ்வுக்கு எதிராக உமக்கு உதவி புரிபவர் யாரும் இல்லை! மேலும், அவனுடைய பிடியில் இருந்து உம்மை காப்பாற்றுபவரும் எவரும் இல்லை."   
                                                                                                (அல்குர்ஆன் 13:37)

"இப்போது தீன் சம்பந்தமான விசயங்களில் தெளிவான மார்க்கத்தில் (ஷரீஅத்தில்) உம்மை நாம் நிலை நிறுத்தியிருக்கிறோம். என்வே, நீர் அதையே பின்பற்றும்! அறியாத மக்களின் மன் இச்சைகளைப் பின்பற்றாதீர்!!"                                                        
(அல்குர்ஆன் 45:18)


அல்லாஹ் மனிதனின் நடத்தைகளை, நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்க்காக விதித்துள்ள எல்லைகளை மீறி நடக்க யாருக்கும் உரிமையில்லை என்று குர்ஆன் கூறுகின்றது.

"மேலும், யார் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறுகிறாரோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்"                                                                                                          
(அல்குர்ஆன் 2:229)

"இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்; எவர் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறுகின்றாரோ, அவர் நிச்சயமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவராவார்."
(அல்குர்ஆன் 65:1)

"இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்; நிராகரிப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு"                                                                                            
(அல்குர்ஆன் 58:4)

அல்லாஹ் தஆலாவின் கட்டளை மற்றும் அவனுடைய சட்டத்திற்கு மற்றமான வேறெந்த கட்டளையும் தவறானது; ஆகமானதல்ல; அத்தோடு அது நிராகரிப்பு (குஃப்ரு) வழிகேடு (ழளாலத்) அநியாயம் (ழுல்ம்) மற்றும் அசிங்கமான பாவச் செயலும் (ஃபிஸ்கு) கூட என்று குர்ஆன் கூறுகின்றது!

"எவர் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அத்தகையோர் தாம் நிராகரிப்பாளர்களாவர்"                                                                    
(அல்குர்ஆன் 5:44)

"எவர் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அத்தகையோர் தாம் அநியாயக்காரர்கள் ஆவர்"                                                               
(அல்குர்ஆன் 5:45)

"எவர் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அத்தகையோர் தாம் பாவிகளாவர்"                                                                                  
(அல்குர்ஆன் 5:47)

"(ஜாஹிலிய்யா) அறியாமை காலத்துத் தீர்ப்பையா அவர்கள் தேடுகின்றனர்? உறுதியாக நம்பிக்கை கொண்ட சமூகத்தார்க்குத் தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வைவிடவும் மிக்க அழகானவன் யார்?"                                                                        
(அல்குர்ஆன் 5:50)

"(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கிவைக்கப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே தாங்கள் நம்புவதாக கூறுவோரை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் தீர்ப்புக்காக தம் விவகாரங்களை தாகூத்-திடம் கொண்டு செல்லவே விரும்புகிறார்கள். (ஆனால்) அவர்களோ, தாகூத்தை நிராகரித்து விடவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளார்கள். ஷைத்தானோ, அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் வழிகெடுத்துவிடவே நாடுகின்றான்"                                                  
(அல்குர்ஆன் 4:60)

4.   இறைத்தூதரின் நிலை

மேலே விவரிக்கப்பட்ட இறைவசனங்கள் வலியுறுத்தும், இறைவனின் சட்டங்கள் யாவும் இறைத்தூதரின் வழியாகவே நம்மிடம் வந்து சேர்ந்துள்ளன! இறைவனின் புறத்திலிருந்து அவர் அவனுடைய கட்டளைகளை, வழிமுறைகளை மனிதர்களிடம் சேர்ப்பிக்கிறார். தம்முடைய சொற்களாலும், செயல்களாலும் அவற்றை விளக்கியும் காட்டுகிறார். இறைத்தூதர் இறைவனுடைய சட்டமேலாண்மை (Legal Sovereignity) - யின் பிரதிநிதி ஆவார். அவரைப் பின்பற்றுவது என்பது இறைவனைப் பின்பற்றுவதற்கு சமமாகும். அவருடைய ஆணைகளை ஏற்று, அவர் தடைசெய்தனவற்றை தவிர்த்து நடக்குமாறு இறைவனே கட்டளையிட்டுள்ளான். மறுபேச்சின்றி அவருடைய எல்லா ஆணைகளுக்கும் அடிபணிய வேண்டும். மனதால் கூட அதற்கு மாற்றமாக நினைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அது ஈமானிற்கு உகந்தது அல்ல!

"இன்னும், அல்லாஹ்வின் கட்டளைக்கொப்ப கீழ்ப்படியப்படுவதற்க்காகவே தவிர, (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பி வைக்கவில்லை."
                                                                                                (அல்குர்ஆன் 4:64)

"எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கீழ்படிந்து நடக்கின்றாரோ அவர், நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கீழ்படிந்து விட்டார்."                                             
(அல்குர்ஆன் 4:80)

"இன்னும், நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர் (நம்முடைய) இத்தூதருக்கு மாறுசெய்து, இறை நம்பிக்கையாளர்களின் வழியல்லாத (வேறு ஒன்றை) பின்பற்றுகிறாரோ அவரை நாம், அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம்; (பின்னர்) அவரை நரகத்தில் புகுத்திவிடுவோம். அது சென்றடையுமிடத்தில் மிகக்கெட்டது."                                                                                                          
(அல்குர்ஆன் 4:115)

"இறைத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கிறாரோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்! அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்; மேலும் அல்லாஹ்வை நீங்கள் பயந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடினமானவன்."                                                                              
(அல்குர்ஆன் 59:7)

"ஆனால், உமதிரட்சகன்மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக ஆக்கி, நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் கொள்ளாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக ஆகமாட்டார்கள்."                                                                           
(அல்குர்ஆன் 4:65)

5.   சட்ட மேலாண்மை

இறைவன் மற்றும் இறைத்தூதருடைய கட்டளைகளை "உயர் நிலை சட்டங்கள்" (Supreme Law) என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது. அவற்றை அப்படியே ஏற்று கீழ்படிந்து நடப்பது ஒவ்வொரு இறைநம்பிக்கையாளன் மீதும் கடைமையாகும். ஒரு விஷயத்தில் இறைவனும் இறைத்தூதரும் தமது தீர்ப்பினை தெளிவாக்கி விட்டார்கள் என்றால் அது விஷயத்தில் மாற்றுக் கருத்து கொள்வதற்கு அனுமதி இல்லை. அத்தீர்ப்பை புறந்தள்ளுவது ஈமானிற்கு நேர் முரணானது!

"அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதேனும் ஒரு விவகாரத்தில் தீர்ப்பளித்துவிட்டால், பிறகு அந்த விவகாரத்தில் சுயமாக தீர்ப்பளிக்கும் அதிகாரம் இறைநம்பிக்கையுள்ள எந்த ஆணுக்கும், எந்தப் பெண்ணுக்கும் கிடையாது. மேலும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமான வழிகேட்டில் வீழ்ந்துவிட்டார்!"                                                                                                  
(அல்குர்ஆன் 33:36)

"அல்லாஹ்வையும், (அவனுடைய) தூதரையும் நாங்கள் விசுவாசித்திருக்கிறோம்; (அவர்களின் கட்டளைகளுக்கு) நாங்கள் கீழ்படிகிறோம் என்றும் (நபியே! இவர்கள்) கூறுகின்றனர்; பின்னர், அவர்களில் ஒரு பிரிவினர் அதற்குப்பிறகு கீழ்படியாமல் புறக்கணித்துவிடுகின்றனர்; ஆகவே, இவர்கள் எவ்வகையிலும் நம்பிக்கையாளர்கள் அல்லர்!, மேலும், அவர்களுக்கு இடையிலான வழக்குகளில் இறைத்தூதர் தீர்ப்பளிக்க, அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வாருங்கள் என அவர்கள் அழைக்கப்பட்டால், அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர்."                                   
(அல்குர்ஆன் 24:47-48)

"இறைநம்பிக்கையாளர்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக்கூறுவதற்க்காக அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் (வருமாறு) அவர்கள் அழைக்கப்பட்டால் அவர்கள் சொல்வதெல்லாம், நாங்கள் செவியுற்றோம், இன்னும் கீழ் படிந்தோம் என்பது தான்; இன்னும், அவர்கள் தாம் வெற்றியாளர்கள்!"           
(அல்குர்ஆன் 24:51)

6.   இறையாட்சி (கிலாஃபத்)

இறைவனுடைய, இறைத்தூதருடைய சட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். உண்மையான ஆட்சியாளனின் பிரதிநிதியாக (கலீஃபாவாக) மனிதன் ஆளவேண்டும்!. ஆட்சிக்குறிய அளவுகோளாக குர்ஆன் இதைத்தான் முன்வைக்கின்றது. இவ்வடிப்படையில் அவனுடைய அதிகாரங்கள் சட்ட ரீதியில், நீதி, நிர்வாக ரீதியில் ஏற்கனவே 3,4 மற்றும் 5 ஆம் பிரிவுகளில் கூறப்பட்டது போல் அமையவேண்டும்.

"மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கிவைத்துள்ளோம்; இது வேதங்களில் தனக்கு முன்னுள்ளவற்றை உண்மையாக்கி வைக்கக்கூடியதாகவும், அவற்றைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது; ஆகவே, அல்லாஹ் (உமக்கு) இறக்கி வைத்ததைக் கொண்டு அவர்களுக்கிடையில் நீர் தீர்ப்பு கூறுவீராக! உமக்கு வந்த உண்மையை விட்டும் விலகி, அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்றவேண்டாம்!"                                                           
(அல்குர்ஆன் 5:48)

"தாவூதே! நிச்சயமாக நாம், உம்மை பூமியில் பிரதிநிதியாக ஆக்கி இருக்கிறோம்; ஆகவே நீர் மனிதர்களுக்கிடையில், சத்தியத்தைக் கொண்டு தீர்ப்புச்செய்வீராக! மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம். (பின்பற்றினால்) அது உம்மை அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் வழிதவறச் செய்துவிடும்."                                                               
(அல்குர்ஆன் 38:26)

7.   கிலாஃபத்தின் வடிவம்

புவியில் மனிதன் பெற்றுள்ள திறமைகள் அனைத்தும் இறைவனால் வழங்கப்பெற்ற அருட்கொடைகளாகும். இறைவனால் வழங்கப்பட்டுள்ள திறமைகளை, ஆற்றலை, இறைவன் வழங்கியுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி செலவிடவேண்டும். எனவே, உண்மையில் மனிதன் சுய உரிமை உள்ளவன் அல்ல! மாறாக உண்மையான உரிமையாளனின் பிரதிநிதி ஆவான். கிலாஃபத்தின் உண்மையான வடிவம் இதுதான் என்று குர்ஆன் சுட்டிக்காட்டுகின்றது.

"(நபியே!) இன்னும் உமதிரட்சகன் மலக்குகளிடம், "நான் பூமியில் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) நிச்சயமாக ஏற்படுத்தப் போகிறேன்....!"                          
(அல்குர்ஆன் 2:30)

“(மனிதர்களே!) மேலும், நிச்சயமாக நாம் உங்களை பூமியில் (அனைத்து அதிகாரங்களுடன்) வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை (வசதி)க்குரிய (அனைத்து) சாதனங்களையும் நாம் ஆக்கித்தந்தோம்."                                       
(அல்குர்ஆன் 7:10)

"நிச்சயமாக அல்லாஹ் பூமியிலுள்ளவற்றை உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கிறான்"                                                                                                      
(அல்குர்ஆன் 22:65)

"மேலும், நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர், அவன் உங்களை (பூமியில்) வாரிசுகளாக்கினான்!"                                                                      
(அல்குர்ஆன் 7:69)

"ஆது (கூட்டத்தாரு)க்குப் பின்னர் உங்களை அவன் வாரிசுகளாக்கினான்".
                                                                                                (அல்குர்ஆன் 7:74)

"உங்கள் இறைவன் உங்கள் பகைவனை அழித்துவிட்டு பிறகு, இப்பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாக்கி நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதை கவனிப்பான்!"
                                                                                                (அல்குர்ஆன் 7:129)

"பின்னர், நீங்கள் எவ்வாறு செயல்படுகின்றீர்கள் என்பதை கவனிப்பதற்க்காக, பூமியில் அவர்களுக்குப் பின்னர் உங்களை அவர்களுடைய இடத்தில் அமர்த்தினோம்!"
                                                                                                (அல்குர்ஆன் 10:14)

ஆனால், இந்தப் 'பிரதிநிதித்துவம்' (கிலாஃபத்) எப்போது உண்மையான கிலாஃபத்தாக கருதப்படும் என்றால், எப்போது அவன் உண்மையான பேரரசனின் 'பிரதிநிதியாக' மாறி அவனுடைய சட்டங்களை அமல்படுத்துவானோ அப்போதுதான்! அவற்றை மறுத்துவிட்டு தன்னுடைய சொந்தக் கண்டுபிடிப்பு சட்டங்களை அமுல் படுத்த முயற்சிக்கும்போது அது 'கிலாஃபத்'திற்குப் பதிலாக 'இறைவனுக்கு எதிரான சதி' யாக மாறிவிடுகிறது!

"அவனே பூமியில் உங்களை பிரதிநிதிகளாக ஆக்கியிருக்கிறான். இனி எவன் நிராகரித்தாலும் அவனுடைய நிராகரிப்பின் தீயவிளைவு அவனையே சாரும்! மேலும், நிராகரிப்பாளர்களின் நிராகரிப்பு அவர்களுடைய இறைவனின் கோபத்தை அதிகப்படுத்துமே தவிர, வேறு எந்த முன்னேற்றத்தையும் அளிக்காது. நிராகரிப்பாளர்களுக்கு இழப்பு அதிகமாவதைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை!"                                                      
(அல்குர்ஆன் 35:39)

"உமதிரட்சகன் (து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் காணவில்லையா?......"
இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக்குடைந்(து அதில் வசித்து வந்)தவர்களான ஸமூ(து கூட்டத்)தையும்...
.இன்னும், முளைகளுடைய ஃபிர்அவ்னையும் (உமதிரட்சகன் என்ன செய்தான் என்பதை நீர் காணவில்லையா?)
அவர்கள் எத்தகையோரென்றால், உலக நாடுகளில் அவர்கள் வரம்பு மீறி நடந்தார்கள்."                                                                                                      
(அல்குர்ஆன் 89:6-11)

"நீர் ஃபிர்அவ்னின் பால் செல்வீறாக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.....
நாந்தான் உங்களுடைய மிக்க மேலான இறைவன்" என்று (அவர்களிடம்) கூறினான்.                                                                                                                   
(அல்குர்ஆன் 79:17-24)

"(மனிதர்களே!) உங்களில் யார் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்கிறார்களோ அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை பிரதிநிதிகளாக்கியதைப் போல் அவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு பிரதிநிதிகளாக்கிவைப்பான்! என்று அல்லாஹ் வாக்குறுதியளிக்கிறான்...... அவர்கள் என்னோடு எதையும் இணையாக்காது என்னையே வணங்குவார்கள்"                                                                       
(அல்குர்ஆன் 24:55)

8.   சமூக பிரதிநிதித்துவம் (கிலாஃபத்)

இத்தகைய சரியான (கிலாஃபத்) பிரதிநிதித்துவத்தை ஒரு தனி மனிதரோ, ஒரு குடும்பமோ, குலமோ நிறைவேற்றிட முடியாது. மாறாக மேற்கூறப்பட்ட நெறி முறைகளை நம்பி, ஏற்றுக்கொண்டுள்ள ஒரு சமூகத்தின் (Community) மீது அது கடமையாகின்றது.

அத்தியாயம் 'நூர்' உடைய 55ஆம் வசனத்தின் "எஸ்தஃலிஃபன்னஹும் ஃபில் அர்ளி" எனும் வார்த்தைகள் அதைத்தான் குறிக்கின்றன. இவ்வசனத்தின் அடிப்படையில் இறை நம்பிக்கையாளர்களில் (முஃமின்களில்) ஒவ்வொரு முஃமினின் மீதும் 'கிலாஃபத்' சரிவர நிறைவேற்றும் பொறுப்பும், பங்கும் உள்ளது. எந்த ஒரு குழுவோ, கூட்டமோ இந்த உரிமைகளை முஃமின்களிடமிருந்து பறித்துவிட முடியாது.  'கிலாஃபத்' தங்களுக்கே சொந்தம் என்று எந்த தனி நபரும், குழுவும் சொந்தங்கொண்டாட முடியாது.

'கிலாஃபத்'திற்கும், மன்னராட்சி, இனவாத அடிப்படையிலான ஆட்சி, மத குருமார்கள் தலைமையிலான ஆட்சி போன்றவற்றிற்க்கும் இடையிலான முக்கியமான வேறுபாடே இதுதான். இந்தப் பண்புதான், 'கிலாஃபத்'தை 'மக்கள் ஜனநாயகத்தின்' பால் இட்டுச் செல்கின்றது. ஆனால், இது மேற்கத்திய அடிப்படையிலான 'ஜனநாயகம்' அல்ல! இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால், அங்கே 'மக்களாட்சி' (Popular Sovereignity) அதற்கு நேர்மாறாக இங்கே மக்கள் இறைவனின் சட்டங்களை ஏற்றுக்கொண்டு அதனை அமுல்படுத்துகின்ற ஆட்சி!


குறிப்புகள்


1.   'தாகூத்' என்பது இறைவனை எதிர்த்து சதி செய்பவனைக் குறிக்கும்! அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு எவரை வழிபடப்படுகிறதோ அவரைக்குறிக்கும். வழிபட்டு நடப்பவன் கட்டாயத்தின் காரணத்தினால் வழிபட்டாலும் சரியே! அல்லது தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வழிபட்டாலும் சரியே! அது 'தா'கூத்' ஆகும். அது மனிதனாக இருக்கலாம் அல்லது ஷைத்தானாக இருக்கலாம் அல்லது சிலை அல்லது வேறேதேனும் ஒரு பொருள்! (இப்னு ஜரீர் அத்தபரீ ஜாமிஉல் பயான் ஃபீதஃப்ஸீரில் குர்'ஆன் பாகம்3, பக்கம் 13)

No comments:

Post a Comment