ஹரமின் புனிதத்தை இழிவுபடுத்திய
செயல்கள்
ஸஃபர் பங்காஷ்
தமிழில்: உவைஸ் அஹ்மது
ஹரமின் புனிதத்துவத்தைப் பேணிக்காப்பதிலும், ஹாஜிகளின் பாதுகாப்பைப் பராமரிப்பதிலும் முஸ்லிம்கள் வரலாறு நெடுக மிகுந்த கவனம் செலுத்திவந்துள்ளனர். இது ஒரு குர்ஆனிய அறிவுறுத்தல் என்பதால், முஸ்லிம்கள் இவ்விடயத்தில் மாற்றமாக நடந்துகொள்ள முடியாது. ஹஜ் சமயத்தில் இரண்டாம் கலீஃபா உமர் இப்னு அல்-கத்தாப் (ரழி) மக்காவில் இரண்டு வீடுகளை வைத்துக் கொள்வார்கள்: ஹரமே மக்காவின் எல்லைகளுக்குள் ஒன்றும், அதற்கு வெளியில் ஒன்றும். இதற்குக் காரணம், குற்றச் செயல்களுக்காக எவரேனும் தண்டிக்கப்பட வேண்டியிருந்தால் அப்போது ஹரமின் புனிதத்துவம் மீறப்பட்டுவிடக் கூடாது என்பதே. இதே விதமாக ஹரமின் புனிதத்துவம் குறித்த அக்கறையால் உந்தப் பட்டே இமாம் ஹுஸைன் (ரழி) கி.பி 680-ன் பிற்பகுதியில் மக்காவை விட்டு வெளியேறிச் சென்றார்கள், ஹுஸைன் (ரழி) தனது உயிரையும், தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய தோழர்களின் உயிர்களையும் பேராபத்திற்கு உள்ளாக்கி, கி.பி 681-ல் கர்பலாவில் வைத்து உச்ச கட்ட தியாகத்தைப் புரிந்த அதேவேளை, ஹரமின் புனிதத்தை இழிவுபடுத்தும் வாய்ப்பை யஸீதுக்கோ, அவனது விசுவாச அடியாட்களுக்கோ வழங்கிடவில்லை.
ஹரமின் புனிதத்துவம் குறித்து யஸீதுக்கு அக்கறையேதும் இருந்ததாக கூறுவதற்கில்லை. அவன் கி.பி.683 ஆகஸ்டில் தனது ஒற்றைக் கண் தளபதி முஸ்லிம் பின் உக்பா தலைமையில் படையனுப்பி, முதல் கலீஃபா அபூ பக்கரின் பேரர் அப்துல்லாஹ் இப்னு ஸுபைரின் (ரழி) ஆளுகையை நசுக்குமாறு உத்தரவிட்டான். ஏனெனில், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி), யஸீதின் கிலாஃபத் பதவி வகிப்பை ஏற்க மறுத்து, தன்னையே மதீனாவில் கலீஃபாவாக பிரகடனம் செய்திருந்தார் [1]. பல சிரியா நாட்டுக் கிறிஸ்தவர்களும் அடங்கியிருந்த யஸீதியப் படை, நபிகளாரின் நகரத்தை (மதீனா) மூன்று நாட்களாகச் சூறையாடி நாசமாக்கினார்கள். பிறகு, அந்தஸ் சிப்பாய்கள் மக்கா நோக்கித் திரும்பினர். அங்குதான் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) தஞ்சம் புகுந்திருந்தார். பயண வழியிலேயே முஸ்லிம் இப்னு உக்பா மரணமடைந்ததால், அவனுக்குப் பதிலாக ஹுஸைன் இப்னு நுமைர் அஸ்-ஸாகூனி புதிய தளபதியானான் [2]. அவனது படை ஹரம் நோக்கி முன்னேறி, மஸ்ஜித் அல்-ஹராமுக்கு உள்ளாக பாறாங்கற்களை எய்து தாக்கத் தொடங்கியது. கொடூரமான இத்தாக்குதலில் கறுப்புக் கல் (ஹஜர் அல்-அஸ்வது) மூன்று துண்டுகளாக உடைந்தது [3]. எனினும், கி.பி.683 நவம்பரில் யஸீது இறந்த செய்தி கேட்டு இப்னு நுமைர் தாக்குதலை நிறுத்திவிட்டு டெமாஸ்கஸ் விரைந்தான். அங்கு வாரிசுச் சண்டை வெடித்து போராக மாறிவிடுமோ என்கிற அச்சம் அவனுள் ஏற்பட்டிருந்தது. அதற்கடுத்த ஆண்டில் இப்னு ஸுபைர் (ரழி) கஅபாவைப் புனரமைத்தார். அவர் ஹிஜாஸ் மட்டுமல்லாது ஈராக், தெற்கு அரேபியா, எகிப்து மற்றும் சிரியாவின் சில பகுதிகளுக்கும் கூட கலீஃபாவாக பிரகடனம் செய்யப்பட்டார். எனினும், அவரது கிலாஃபத் குறுகிய காலமே நீடித்தது. விரைவில் உமையாக்கள் தங்களது சிம்மாசனப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு புறப்பட்டுவந்தனர். கி.பி.692 மார்ச் மாதத்தில் அப்துல் மாலிக் இப்னு மர்வானின் தளபதி ஹஜ்ஜாஜ் மக்காவின் முற்றுகையைத் துவக்கினார். இப்னு ஸுபைர் (ரழி) உமைய்யா ஆக்கிரமிப்பாளர்களை சுமார் ஏழு மாதங்களாக தீரத்துடன் எதிர்த்து நின்றார். இறுதியாக அவர் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார் [4]. இவ்வாறு முதன்முதலில் ஹரமின் புனிதத்துவ மீறலில் ஈடுபட்டு, அதன் வளாகத்துக்குள் - ஒருமுறையல்ல, இருமுறை - இரத்தம் ஓட்டிய அயோக்கியச் சிறப்பு யஸீதிற்கும் அவனைத் தொடர்ந்துவந்த ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் தலைமையில் இயங்கிய உமைய்யாக்களுக்கும் உண்டு.
இரண்டாவதாக ஹரமின் புனிதத்துவ மீறலில் ஈடுபட்டது, கரமத்தியாக்கள். தங்களது ஸ்தாபகர் ஹம்தான் கர்மத் என்பவரின் பெயரால் வழங்கிய அக்கூட்டத்தினர் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஈராக்கிலுள்ள கூஃபாவில் தோன்றினர். முஸ்லிம் எழுத்தாளர்கள் பலரும் இந்த கரமத்தியாக்களை 'இஸ்லாத்தின் போல்ஷெவிக்குகள்' என்றும், இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேறியவர்கள் என்றும் கருதுகின்றனர் [5]. அவர்கள் முஸ்லிம் பூமிகளில் - குறிப்பாக தெற்கு ஈராக்கிலும் பாரசீகத்தின் மேற்குப் பகுதிகளிலும் - மிகப் பெரியதோர் இரத்தக்களரியை ஏற்படுத்தினர். இந்த கரமத்தியாக்கள் கி.பி.930-ல் அபூ தாஹிர் சுலைமான் என்பவனின் தலைமையில் மக்கா மீது தாக்குதல் நடத்தினர். மிகுந்த படுகொலைகள் மற்றும் சூறையாடலை அரங்கேற்றிய பின், கஅபாவைச் சேதப்படுத்தினர்; கறுப்புக் கல்லை (ஹஜர் அல்-அஸ்வது) பஹ்ரைனுக்கு எடுத்துச்சென்று விட்டனர் [6]. இருபதாண்டுகளுக்குப் பிறகு, ஃபாத்திமிய்யா கலீஃபா அல்-மன்சூரின் ஆணைக்கிணங்க அது மீட்டுக் கொண்டுவரப்பட்டது.
ஆரம்ப காலத்தில் இவ்வாறு புனிதத்தை இழிவுபடுத்திய செயல்பாடுகளுக்கு நிகராக 'சாதித்தவர்கள்' சவூதுக் குடும்பத்தினரே. முதலில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அவர்களின் படைக் கும்பல் தர்'இய்யாவிலிருந்து வெடுத்துக்கிளம்பிய போதும், பிறகு 1924-ல் அவர்கள் மக்காவை ஆக்கிரமித்தபோதும் இதை நிகழ்த்தினர். சவூதுகள் ஹிஜாஸின் ஆட்சிக் கட்டுப்பாட்டில் இருந்துள்ள ஆண்டுகள் நெடுக, இஸ்லாத்தின் வரலாற்றுத் தலங்களை இடிக்கும் திட்டமிட்ட கொள்கை நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இந்த இடிப்புக்குக் காரணம், பித்அத்தை அகற்றுவதே (மார்க்கத்தில் புகுந்துள்ள நூதனங்கள்; அவர்கள், இத்தகு தலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை பித்அத் எனக் கருதுவதாகக் கூறிவருகின்றனர்) என சவூதுகள் கூறிவரும் அதேவேளை, சவூதுக் குடும்பத்தின் பாரம்பரிய நினைவுப் பொருட்கள் பலவற்றை பேணிக்காத்து வந்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக ரியாதிலுள்ள மிஸ்மாக் கோட்டை, கோட்டை வாசற்கதவில் குத்தி நிற்கும் அப்துல்லாஹ் இப்னு ஜலூவியின் ஈட்டி முனை போன்றவற்றை அவர்கள் மிகக் கவனமாகப் பாதுகாத்து வருகின்றனர். அதேபோல், தர்'இய்யா எனும் தங்களது தொன்மையான தலைநகரமும் பாதுகாக்கப் படுகிறது. எனினும் இறைத்தூதர் - அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் - அவரது அன்பு மகள் ஃபாத்திமா, அபூ பக்கர் (ரழி) ஆகியோரது மக்கத்து இல்லங்கள் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாத்தின் நினைவுச் சின்னங்கள் துடைத்தழிக்கப்பட்டுள்ளன. மதீனாவில் ஜன்னதுல் பகீ அடக்கத்தலங்களும், உஹதில் உள்ள அடக்கத்தலமும் படுமோசமான புறக்கணிப்பால் வாடுகின்றன. மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து மதீனாவுக்கு வந்தபோது இறைத்தூதரின் ஒட்டகம் கஸ்வா முதலில் நின்ற இடமான அபூ அய்யூப் அன்சாரியின் இல்லமும் கூட காணாமல் போயிருக்கிறது.
இவற்றையெல்லாம் மிகைத்துவிட்ட ஒரு சம்பவம், 1979 நவம்பரில் நிகழ்ந்த ஹரம் கிளர்ச்சிதான். அந்தச் சம்பவத்தை சவூதுக் குடும்பம் கையாண்ட விதத்திலிருந்து, அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டது. அக்குடும்பத்தினர் தங்களது ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எத்துணை மோசமாக நடந்து கொள்வார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
அப்போது (1979-ல்) இஃவான்களின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களாயிருந்தனர் (1929-ல் அவர்களது பாட்டனார்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்). தங்களது சமூகம் முற்றாக மதச்சார்பின்மை மயமாக்கலுக்குப் பலியாகியிருந்ததையும், சவூதுக் குடும்பத்தைச்சேர்ந்த பெரும்பாலானோரின் நெஞ்சு நிமிர்த்திய சீர்கேடு மற்றும் ஆபாசத்தையும் பேரதிர்ச்சியோடு அவதானித்தனர். அவர்கள் ஜுஹைமான் அல்-உதைபா தலைமையில் ஒரே சமயத்தில் மக்காவிலும், மதீனாவிலும் கலகம் நடத்தத் திட்டமிட்டனர். எனினும், அதுபற்றிய செய்தி கசிந்துவிட்டதால் அந்தக் கலகம் முறியடிக்கப்பட்டது. ஜுஹைமானும் அவரது சகாக்களும் மக்காவின் மஸ்ஜித் அல்-ஹராமினுள் தஞ்சம் புகுந்தனர். சவூதுக் குடும்பம் தங்கள் சீர்கேட்டையெல்லாம் மீறி,
இஸ்லாத்தின் இந்த மிகப் புனித சரணாலயத்தை தாக்கிடத் துணியமாட்டார்கள் என அவர்கள் நம்பினர். பரிதாபம்! அது எத்துணை வெகுளியான தப்புக்கணக்கு என்பது விரைவில் வெளிப்பட்டது.
சவூதுகள், ஹரமைத் தாக்குவதற்கான ஃபத்வா ஒன்றை தங்களது அரசவை உலமாவிடமிருந்து வேண்டிப் பெற்றனர். இஸ்லாத்தின் மிகப் புனித சரணாலயத்தினுள் மிகக் கோரக் கொடூரமான படுகொலைகளை நடத்திமுடிப்பதற்காக மொராக்கோ, ஜோர்டான், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து கூலிப் படையினர் கொண்டுவரப்பட்டனர். ஹரமினுள் தஞ்சம் புகுந்திருந்தோர் மீது அவப்பெயர் உண்டாக்கும் பொருட்டு, சவூதிகள் பெரும் பிரச்சார நடவடிக்கை ஒன்றையும் முடுக்கிவிட்டனர் [7]. ஜுஹைமானும் அவரது சகாக்களும் தத்தமது மனைவி மக்களுடனேயே ஹரமினுள் சென்றிருந்தனர் என்பதே, அவர்களது சமாதான நோக்கங்களைத் தெளிவாகக் காட்டியது. சவூதுகள் ஹரமின் புனிதத்துவம் குறித்தெல்லாம் பொருட்படுத்தாது துப்பாக்கிகள், மோர்டார்கள், கையேந்தி ஏவுகணைகள், பீரங்கிகள், கண்ணீர்ப்புகை குண்டுகள் என சகலத்தையும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்புவதற்காக ஜுஹைமானும் அவரது குழுவினரும் ஹரமின் அடித்தள அறைகளுக்குள் புகுந்துகொண்ட போது, சவூதிகள் அவற்றை தண்ணீரால் நிரப்பி, அதனூடே மின்சாரத்தைப் பாய்ச்சினர். இந்தத் தாக்குதல் இருபது நாட்களாகத் தொடர்ந்தது. ஹரமுக்குள் வைத்தே அனைவரும் கொல்லப்பட்டனர்; அல்லது கைது செய்யப்பட்டனர்.
சவூதுகள் படுகொலைகளை நடத்தி முடிக்கும் வரை, அல்லாஹ்வின் இல்லத்தை வலம் வருவது (தவாஃப்) நிறுத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து பல வாரங்களாக தொடந்து ஹரம் மூடப்பட்டிருந்தது. சவூதிகள் அவசர அவசரமாக உட்புறமுள்ள மினாராக்கள் மற்றும் வளைவுகளிலிருந்த சேதத்தைச் செப்பனிட முயன்றனர். உம்மத்தின் பார்வையிலிருந்து தங்களது கொடுங்குற்றத்தை மறைக்கவேண்டும் அல்லவா! [8]. இங்கு கவனிக்கத்தக்கதொரு விடயம் என்னவெனில், இதற்கு முன்பு மூன்று சந்தர்ப்பங்களில் மட்டும்தான் அல்லாஹ்வின் இல்லத்தை சுற்றி வருதல் (தவாஃப்) நின்றுவிட்டிருந்தது: யஸீதிய படையின் தாக்குதல், ஹஜ்ஜாஜ் தலைமையில் நடந்த தாக்குதல், மற்றும் கரமத்தியாக்கள் கஅபாவின் புனிதத்துக்கு எதிராக நிகழ்த்திய இழிவு. இவ்வாறு, இஸ்லாத்தின் மிகப் புனிதத் தலத்தின் புனிதத்துவத்தை மீறுவதில் சீரழிந்தவர்கள், கொடுங்கோலர்கள் மற்றும் இணைவைப்பவர்களின் வரிசையில் சவூதிகளும் சேர்ந்துவிட்டனர்.
சவூதிகள் 1979 நவம்பர் - டிசம்பரில் ஹரம் மீது நடத்திய தாக்குதலுக்காக குற்றம் பிடிக்கப்படவில்லை என்பதால் அவர்கள் மீண்டும் அதுபோன்ற அல்லது அதைவிடக் கொடூரமான குற்றத்தை இழைப்பதற்குத் தயங்கமாட்டார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. இது ஒன்றும் வெறும் கற்பனையான விளக்கம் அல்ல. 1979-ல் நிகழ்ந்த ஹரம் சம்பவத்துக்குப் பிறகு, ஹரமே மக்காவின் வளாகத்துக்கு உள்ளேயே சவூதிச் சிப்பாய்கள் துப்பாக்கியேந்தத் துவங்கியிருந்தனர். ஹரமின் புனித வளாகத்திற்குள் துப்பாக்கிகளைச் சுமந்திருப்பதற்கு குர்ஆனோ இறைத்தூதரின் வழிமுறையோ அங்கீகாரம் அளிக்கிறதா? விரைவில் ஒருநாள் அவர்கள் இந்த ஆயுதங்களைப் பிரயோகிப்பார்கள் என்பது இயல்புதான். இறுதியாக அந்த நாள் நிஜமாகவே வந்தது. ஜூலை 31.
அன்று அவர்கள் அல்லாஹ் சுப்ஹான ஹூவதஆலாவின் கட்டளைகளைத் துச்சமாக மதித்து நூற்றுக்கணக்கான ஹாஜிகளை ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்தனர். இந்தப் படுகொலைகள் - அளவிலும் சரி, கொடூரத்திலும் சரி
- முந்தைய சம்பவங்கள் அனைத்தையும் விஞ்சிநின்றது. ஹஜ் அல்லது ஹரமுடைய வரலாற்றில் முதல் முறையாக, நிராயுதபாணிகளான அப்பாவி யாத்திரிகர்கள் மீது பலத்த ஆயுதமேந்திய சிப்பாய்கள் தாக்குதல் தொடுத்தனர். இதற்கு முன்னர் ஹரமில் வைத்து ஹாஜிகள் மீது இத்தகையதொரு படுகொலைகள் ஒருபோதும் நிகழ்த்தப் பட்டதில்லை. முந்தைய மோதல்கள் அனைத்திலும், ஒன்று, இரு படைகள் மோதிக் கொண்டன; அல்லது, ஜுஹைமான் குழுவினர் நடத்திய 1979 கிளர்ச்சியைப் போல,
பெண்களும் குழந்தைகளும் உடனிருந்த போதிலும் அவர்கள் குறைந்தபட்சம் ஆயுதங்களையாவது வைத்திருந்தனர். ஆனால், கடந்த ஜூலையில் (அதாவது 1987-ல்) நடந்த பராஅத் மினல் முஷ்ரிகீன் பேரணியில் கலந்துகொண்டிருந்த ஹாஜிகளோ, முழு நிராயுதபாணிகளாக இருந்தனர். அவர்கள் சவூதிச்சிப்பாய்களுடனோ வேறெவருடனோ மோதும் நோக்கத்தில் வந்திருக்கவில்லை.
சவூதி அரசு, ஹரமின் புனிதத்துவத்தை மீறியது மூலமும் அப்பாவி யாத்திரிகர்களின் இரத்தத்தைச் சிந்தியதன் மூலமும் இழைத்துவிட்ட இந்த மாபாதகக் குற்றத்துக்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை. அதன் அதிகாரிகள் தொடர்ந்து ஈரானுக்கு எதிராகப் பழி சுமத்தும் படலத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமின்றி, மக்கா படுகொலைகள் நிகழ்ந்த ஒருசில நாட்களிலேயே, மன்னர் ஃபஹது தலைமையில் சிறப்புவிழா ஒன்று நடத்தப்பட்டது, அதன்போது, இப்படுகொலையில் ஈடுபட்ட சவூதி இராணுவத்தினர் கெளரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு வீரப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
பதக்க விழாவில் ஃபஹது மனம்திறந்து உண்மையை ஒப்புக்கொண்டார்: மக்காவில் நிகழ்ந்தவை அனைத்தும் தனது முழு அனுமதியோடும் அமைச்சரவையின் பூரண சம்மதத்தோடுமே நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். இந்த ஒப்புதல் வாசகம் இரு வகைகளில் முக்கியத்துவம் பெறுகின்றது: ஒன்று, இப்படுகொலைகள் ஏதோ தன்னியல்பாக நிகழ்ந்துவிட்ட விவகாரமன்று; அது முன்திட்டத்துடன் நடந்தேறியுள்ளது. இரண்டு, ஹரமின் புனிதத்துவம் குறித்தெல்லாம் சவூதுக் குடும்பம் எவ்வித அக்கறையும் காட்டவில்லை.
எனவே, மக்காப் படுகொலைகளைத் தொடர்ந்து, ஹரமைனின் எதிர்காலம் குறித்தும் அவற்றை யார் நிர்வகிக்க வேண்டும் என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஹரமைன் மீதான சவூதிகளின் கட்டுப்பாட்டை உம்மத்தின் விஷயமறிந்த சாரார் ஒருபோதும் ஏற்றிருக்கவில்லை என்ற நிலையையும் தாண்டி, இப்போது - சென்ற ஜூலையில் அவர்களது ஆயுதந்தாங்கிய சிப்பாய்கள் நிகழ்த்திய படுகொலைக்குப் பின்பு - இந்த விவாதத்துக்கு ஓர் அவசரத் தேவை எழுந்துள்ளது.
அடிக்குறிப்புகள்:
1.
ஹிட்டி, ஃபிலிப்
கே. அரபுகள்
வரலாறு (ஆங்.),
பத்தாம் பதிப்பு,
தி மேக்மிலன்
பிரஸ், லண்டன்,
1970. பக். 191.
2.
அத்-தபரி,
அபூ ஜாஃபர்
முஹம்மது இப்னு
ஜரீர். தாரீஃக்
அல்-முலூக்
வ அல்-ருசூல்
(அரபி), தொ.1.பத்தி.
டீ கெயே, லீடன்,
1881-82. பக்.2220. மேலும்
பார்க்க, யாகூபி,
அல்-தாரீஃக்
(அரபி), தொ.2, பதி.
எம்.தாமஸ்
ஹவுட்ஸ்மா, லீடன்,
1883. பக்.299.
3.
அத்-தபரி.
தாரீஃக் அல்-முலூக்
வ அல்-ருசூல்
(அரபி), தொ.2,லீடன்,பக்.427.
மேலும் பார்க்க,
அல்-ஃபகீஹி,
அல்-முன்தகா
ஃபீ அஃக்பார்
(அரபி), உம்முல்
குரா, பதி. எஃப்.
வுஸ்டன்ஃபெல்டு, லீப்ஸிக்,
1859. பக்.18.
4.
அத்-தீனாவரி.
அல்-அஃக்பார்
அல்-தவீல்
(அரபி), பதி. வி.குயிர்கெஸ்,
லீடன், 1888. பக்.320.
அல்-தபரி, தாரீஃக்
(அரபி), தொகுதி
2. பக்.845-848.
5.
ஃபஸ்லுர் ரஹ்மான்.
இஸ்லாம் (ஆங்.), ஆன்கர்
புக்ஸ், நியூயார்க்,
1968. பக்.214.
6.
மிஸ்கவய்ஹ். தஜாரிப்
அல்-உமம்
(அரபி), தொ.1, பதி.
ஹெச்.எஃப். அமெட்ரோஸ்,
ஆக்ஸ்ஃபோர்டு, 1920. பக்.201.
அல்-அஸீர்,
இப்னு, அல்-காமில்
ஃபீ அல்-தாரீஃக்
(அரபி), தொ.8, பதி.
சி.ஜே. டோர்ன்பெர்க்,
லீடன், 1867. பக்.153-154.
7.
லேஸி, ராபர்ட்.
ராஜ்ஜியம்: அரேபியாவும்
சவூதுக் குடும்பமும்,
(ஆங்.) அவான்
புக்ஸ், நியூயார்க்,
1981. பக்.478-487. சம்பவங்கள்
குறித்து சீரற்றதொரு
கூற்றையே லேஸி
வழங்கியிருக்கிறார். இந்தக்
கிளர்ச்சியின் பின்னணி
பற்றிய துல்லியமான
புரிதலுக்கு பார்க்க,
கலீம் சித்தீகி
(பதி.). இஸ்லாமிய
இயக்க விவகாரங்கள்:
1980-81 (ஆங்.). பக்.
363-367.
8.
அடித்தள அறைகளில்
பழுதுபார்ப்புப் பணி
இன்னமும் தொடர்ந்து
கொண்டிருந்ததை சென்ற
வருட (அதாவது
1987 ஆம் ஆண்டு)
ஹஜ்ஜின் போது
இந்நூலாசிரியர் நேரில்
கண்டார். சாதாரண
யாத்திரிகர்களுக்கு இப்போது
அதனுள் நுழைவு
இல்லை. அதற்குப்
பதிலாக, அவற்றை
சவூதி பாதுகாப்புப்
படையினர் பயன்படுத்தி
வருகின்றனர் என்பதாக
ஹரமில் பணியாற்றும்
ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment