ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம்
பாகம் - 1
- கலாநிதி ஸஃபர் பங்காஷ்
தமிழில்: உவைஸ் அஹ்மது
தமிழில்: உவைஸ் அஹ்மது
இஸ்லாமிய உலகு மீது மேற்குலகு நாசகரமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, இறைத்தூதர் மற்றும் குலஃபாயே ராஷிதீன்களின் வாழ்வுதாரணத்தை விட்டுவிலகி குறைபாடுகள்
தோய்திருந்த போதிலும் தொடர்ந்துவந்த முஸ்லிம்களின் அரசியல் வாழ்வை மேற்குலகு சீர்குலைத்தது
மட்டுமின்றி, இஸ்லாமியக் கலாச்சாரத்தையும் அது கீழறுப்புச் செய்தது. பின்னர் முஸ்லிம்கள்
சுதந்திரம் அடைந்தபோதும், அந்தச் சுதந்திரம் முற்றிலும் போலியானதாகவே இருந்தது. மற்றும்,
இஸ்லாமிய விழுமியங்களோடு முரண்படுகின்றதொரு உருவமைப்பிலேயே இருந்தது. மேற்கத்தியர்கள்,
தங்களுக்குப் பிறகு முஸ்லிம்களை ஆட்சிசெய்வதற்காக மேற்கத்தியமயமான மேல்தட்டு மக்களை
விட்டுச்சென்றனர். இவர்கள் பெயரளவில் முஸ்லிம்களாகவும், ஆனால் நோக்கிலும் போக்கிலும்
முழுமையாக மேற்கத்தியர்கள் போலவும் இருந்ததோடு, மேற்குலகுக்குப் பணிந்து சேவையாற்றினர்.
இவ்வாறு, காலனியத்துவத்தைத் தொடர்ந்து அதைவிட நாசகரமானத் தாக்கம் கொண்ட நவ-காலனியத்துவம்
உருவானது.
கடந்த நூறு வருடங்களாக முஸ்லிம்கள் - குறிப்பாக, அதிகாரப் பொருப்புகளில்
உள்ளவர்கள் - குர்ஆனியப் போதனைகளிலிருந்து மெல்ல மெல்ல, ஆனால் மீட்கமுடியாத வகையில்,
விலகிச் செல்வதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. ஏன், மிகவும் புரட்சிகரமான மற்றும் அரசியல்
பொதிந்த நூலான குர்ஆனே - அல்லாஹ்வின் வெளிப்பாடும் முழு மனிதகுலத்தின் வழிகாட்டியுமான
குர்ஆனே - அரசியல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகங்களோடு சேர்த்து இஸ்லாமும்
மதசார்பின்மை நடவடிக்கைகுப் பலியாகியுள்ளது. மேற்குலகு கிறிஸ்தவத்தை நோக்குகின்ற பாணியிலேயே,
இந்த மேற்கத்தியமயமான மேல்தட்டினர் பலரும் இஸ்லாத்தை நோக்கத் தலைப்பட்டுள்ளனர். அவர்கள்,
சீசருக்குச் சேரவேண்டியதென நம்புவதை சீசருக்கே ஒப்படைத்துவிட்டு, எஞ்சியதை இறைவனுக்காக
விட்டுள்ளனர். இவ்வாறு தெய்வீகம் - லெளகீகம் என்று பிரித்து, மேல்தட்டு ஆளும் வர்க்கம்
உம்மத்தின் மீது திணித்துள்ள சூழல்தான் பிரச்சினையின் ஆணிவேராக அமைந்துள்ளது.
இக்கண்ணோட்டத்தை முழு உம்மத்தும் அவசியமாக ஏற்பதில்லை என்றபோதிலும், இந்த இஸ்லாத்தின்
மதச்சார்பின்மையாக்கல் பல வகைகளில் மார்க்கத்தின் சில அடிப்படைத் தூண்களையே பாதித்திருக்கிறது
என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
ஹஜ் இதற்கு நல்லதோர் உதாரணம். எப்போதுமே உம்மத்தின்
வருடாந்திர ஒருங்குதிரளாகவும் மிகுந்த அரசியல் தன்மை கொண்டதாகவும் விளங்கும் ஹஜ் இன்று
வெறும் கிரியைகளாகச் சுருங்கியுள்ளது. தாகூத்துக்கு எதிரான முதல் 'கலகக்காரராக'
திகழ்ந்த இறைத்தூதர் இப்ராஹீமின் (அலை) போராட்டத்திலிருந்தே தன் அடிப்படைகளைப் பெற்றுள்ள
ஹஜ் குறித்து இன்று, அது வெறுமனே ஒரு வழிபாட்டுச் சடங்கு எனும் கருத்தோட்டம் முஸ்லிம்
மனங்களில் ஆழப் பதிந்துள்ளது. எந்தளவிற்கெனில், ஹஜ்ஜை அதன் குர்ஆனிய அடிப்படையில் புனரமைக்க
மேற்கொள்ளப்படும் முயற்சிகளையே சில தரப்பினர் விரோதமாகவும் அச்சுறுத்தலாகவும் பார்க்கின்றனர்.
ஹஜ்ஜின் கிரியைகள் (மனாசிக்) முக்கியமானவையே என்பதில் சந்தேகமில்லை. எனினும்,
அவற்றுள் பொதிந்துள்ள அரசியல் செய்தியிலிருந்து அவற்றைத் தனியே பிரித்தெடுக்க முடியாது.
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) நம்ரூதின் அதிகாரத்துக்கு சவால் விட்டதால், அவனது கோபத்துக்கு
ஆளாகி நெருப்பில் வீசியெறியப்பட்டார். காரணம், அவர் ஒரேயொரு அதிகாரத்துக்கு மட்டுமே
- அதாவது அல்லாஹ் (சுப்ஹானஹூவ தஆலாவுக்கு) மட்டுமே - அடிபணிந்தார். உலகியல்
அதிகாரத்துக்கு எதிராக இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) துவக்கிவைத்த அந்த அறைகூவல் இன்றும்
உயிரோட்டத்துடன் தல்பியாவில் பிரதிபலிக்கிறது. ஹாஜிகள் இவ்வுலகு சார்ந்த சகலத்தையும்
உதறிவிட்டு இஹ்ராமை அணிந்து கொண்டு அந்தத் தல்பியாவை இப்படி முழங்குவார்கள்:
லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீக்க லக லப்பைக் (இதோ நான் வருகிறேன்,
என் இறைவா! இதோ நான் வருகிறேன். இதோ நான் வருகிறேன், என் இறைவா! உனக்கு இணையேதும் இல்லை.
இதோ நான் வருகிறேன்.....). இது ஒரே இறைவனான அல்லாஹ்வுக்கே சமர்ப்பணம் என்பதாக ஒவ்வொரு
முஸ்லிமும் உரைக்கும் அத்துணை சக்திமிகுந்த, சமரசமற்ற வாசகம். எந்தளவிற்கெனில், இது
தனக்கு முன்னிலையில் உள்ள அனைத்தையும் தகர்த்து விடுகிறது. எனினும், இன்று பல முஸ்லிம்கள்
இதை வாய்ப்பாடாகவே ஓதுகின்றனர்; இதன் தாத்பரியத்தை உணர்வதில்லை என்பது கவலைக்குறிய
நிதர்சனமான ஓர் உண்மை. ஹஜ்ஜின் மற்ற பல அம்சங்களைப் பொறுத்தும் இதுதான் நிலைமை. உண்மையில்,
ஹரமைனைத் தன் கட்டுப்பட்டில் வைத்திருக்கிற அரசும், அதன் அரசவை உலமா பரிவாரமும்,
முஸ்லிம் உலகிலுள்ள பிற அரசுகளும் ஹஜ்ஜை சக்தியற்றதாகவும், அரசியலற்றதாகவும் மாற்றுவதற்குப்
பெரும் முனைப்புகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களது சதித்திட்டங்களுக்காகக்
குர்ஆனின் அடிப்படைச் செய்தி மற்றும் அர்த்தத்தையே கூட உருச்சிதைக்கத் தயங்குவதில்லை.
'ஹஜ்ஜில் அரசியல் கூடாது' என்ற கொள்கையை முன்னிறுத்துபவர்கள்,
தங்களது வாதத்திற்கு ஆதாரமாகப் பின்வரும் குர்ஆன் வசனத்தின் குறுகிய விளக்கமளிப்பை
முன்வைக்கின்றனர்: "ஹஜ்ஜின் போது ஆபாசமோ, வசைபேச்சோ, கோபமான உரையாடலோ (இருக்கக்)
கூடாது" (2:197). இன்று மக்காவில் மஸ்ஜித் அல்-ஹரமுக்கு அருகிலேயே ஆபாசத்தின்
அறிகுறிகளைக் காண்பதற்கு ஒருவர் மிகுந்த சிரத்தையெடுக்கவோ, வெகுதொலைவில் நோக்கவோ தேவையில்லை
என்ற பட்சத்தில், இவ்வாறு குர்ஆனியக் கட்டளைக்கு எதிரான சவூதிகளின் அத்துமீறல்கள் குறித்து
வெகுசிலரே கேள்வி எழுப்பியிருக்கின்றனர். எனினும், இதே வசனத்தின் மற்றொரு பகுதி சர்ச்சைக்
களமாக ஆக்கப்பட்டிருக்கின்றது. ஜிதால் (வாக்குவாதம்) எனும் குர்ஆனியப் பதத்துக்கு
விளக்கமாக, ஹஜ்ஜின் போது எவ்விதமான வாக்குவாதமும் - மற்றும், வாக்குவாதத்திற்கு வழிவகுக்கக்கூடிய
- பேரணியும் நடைபெறக்கூடாது எனக் கூறப்படுகிறது. அந்த வாக்குவாதம் நிலைநாட்டுகிற கருத்து
சத்தியத்திற்காகவா (ஹக்) அசத்தியத்திற்காகவா (பாதில்) என்பது குறித்தெல்லாம்
வேறுபாடு காணப்படுவதில்லை. ஜிதால் என்ற பதத்துக்குச் சவூதிகள் வழங்கும் இக்குறுகிய
விளக்கமளிப்பை பல அதிகாரப்பூர்வமான முன்னணி குர்ஆன் விரிவுரையாளர்கள் (முஃபஸ்ஸிரூன்)
ஆமோதிப்பதில்லை.
முஹம்மது இப்னு அஹ்மது அபூ அப்துல்லாஹ் அல்-குர்துபி
(இ. ஹி. 671/ கி. பி. 1273): இவர் அல்-ஜாமிஉ
லி-அஹ்காம் அல்-குர்ஆன் எனும் தனது திருக்குர்ஆன் விரிவுரையில், ஜிதால் குறித்து
ஆறு கண்ணோட்டங்களைத் தந்திருக்கிறார். அவர் மாலிகி ஃபிக்ஹைப் பின்பற்றிவந்த
போதிலும், மாற்றுக் கருத்துக்களையும் சமயதர்க்கவாதமின்றி முன்வைக்கிறார். அவரது விரிவுரையில்
பல ஹதீஸ் சுட்டுக் குறிப்புகள் அடங்கியுள்ளன. மற்றும் அது, முஸ்லிம்களின் பொது சன மார்க்கப்பற்று,
சட்டவியல், மொழியியல் கருதுதல்கள் ஆகியன குறித்தும் உணர்வுநுட்பம் காட்டுகிறது. இப்னு
மஸ்ஊதையும், இப்னு அப்பாஸையும் மேற்கோள்காட்டி அல்-குர்துபி ஜிதால் என்பதன்
பொருளை விளக்குகிறார். ஒரு தரப்பினர் சினமுற்று மறுதரப்பினரை அவமதிக்கத் துவங்கும்
அளவுக்கு விவாதம் செய்தல் என்று விளக்குகிறார். மேலும், ஹஜ் காலத்தில் 'இல்ம்'
(அறிவு) சார்ந்த விவாதத்தைப் பொறுத்தவரை, அதற்குத் தடையேதும் இல்லை என்கிறார். இரண்டாவதாக,
கதாதாவின் (ரழி) கண்ணோட்டத்தை அல்-குர்துபி மேற்கோள் காட்டுகிறார். அதன்படி ஜிதால்
என்பது அவமதிப்பைக் குறிக்கிறது எனக் கூறுகிறார். சில மேதைகளின் கருத்தில், ஜிதால்
என்றால் குறிப்பிட்ட ஒருவரின் ஹஜ் மற்றவர்களின் ஹஜ்ஜைக் காட்டிலும் சிறந்ததென நிரூபிப்பதற்கான
வாக்குவாதம்; அல்லது குடும்பப் பெருமை, தேசியவாதம், கோத்திரவாதம் முதாலானவை குறித்த
பகட்டுப் பேச்சு எனச் சுட்டப்படுகிறது. எனினும், குர்துபி முதன்மையிடம் அளிக்கும் வேறு
இரண்டு விளக்கங்கள், இப்னு ஸைத் மற்றும் அனஸ் இப்னு மாலிக் மூலம் அறிவிக்கப்படுபவை.
அவற்றின்படி, குறைஷிகளும் மற்ற கோத்திரத்தாரும் ஹஜ்ஜின் இடம்-நாள் குறித்த சர்ச்சைகளில்
ஈடுபடுவார்கள்; எனவே, அத்தகைய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே அல்லாஹ்
(சுப்ஹானஹூவ தஆலா) இவ்வசனத்தை இறக்கியருளினான் என்பதாக கூறப்படுகிறது.
இஸ்மாயில் இமாதுத்தீன் அபுல் ஃபிதா இப்னு கஸீர்
(இ. ஹி. 774/ கி. பி. 1373): இவர் ஒரு பிரபல ஷாஃபியீ சட்ட நிபுணர். தஃப்சீரைப்
பொறுத்தவரை 'பழமைவாத' போக்கைச் சார்ந்தவர். இப்னு கஸீர் பல தொகுதிகளாக இயற்றியுள்ள
தஃப்ஸீர் அல்-குர்ஆன் அல்-அழீம் என்கிற விரிவுரைக்கே பல அறிஞர்கள் முன்னிடம்
அளிக்கின்றனர். அதன் மரபார்ந்த அணுகுமுறையும் முஸ்லிம் வரலாறு தொடர்பான பரந்த வீச்சும்தான்
இதற்குக் காரணம். இவர் இப்னு தைமிய்யாவின் மாணவர்களுள் ஒருவர் மற்றும் அவரது தீவிரத்
தற்காப்பாளர். ஸலஃபிஸ சிந்தனா பள்ளி முஸ்லிம்களும், இஸ்லாமிய சட்டம் குறித்த
தங்களது இறுக்கமான நேர்பொருள் விளக்கமளிப்புகளை இப்னு தைமிய்யாவின் போதனைகளின் அடிப்படையிலேயே
அமைத்திருப்பதாக கூறிக்கொள்கின்றனர். இப்னு கஸீரின் கருத்தில், ஜிதால் என்றால்,
ஒருவரின் உடமையைத் தொலைத்துவிட்ட அல்லது சேதப்படுத்திவிட்ட இன்னொருவர் மீது தவிர, வேறு
எவரிடமும் கோபம் கொள்வதாகும். ஹஜ் காலத்தில் ஒருவர் இத்தகு இழப்பால் கோபம் மிகைத்து
இன்னொருவரை அடிப்பதும் கூட ஆகுமானதே எனக் கூறுமளவுக்கு அவர் செல்கிறார். இதற்கு ஆதாராமாக,
அபூபக்கர் (ரழி) தொடர்பான சம்பவத்தைக் கூறுகிறார். ஹஜ்ஜின் போது தனது ஒட்டகத்தைத் தொலைத்துவிட்ட
தனது பணியாளரை அபூபக்கர் (ரழி) லேசாக அடித்தபோது, இதைப் பார்த்துப் புன்னகைத்த இறைத்தூதர்
(ஸல்) அபூபக்கரை (ரழி) லேசாகக் கண்டித்தார்கள். இதிலிருந்து அந்தச் செயல் விரும்பப்படாதது
(மக்ரூஹ்) தான்; தடுக்கப்பட்டது (ஹராம்) அல்ல என்பது மறைமுகமாகச் சுட்டப்படுகிறது.
சையித் முஹம்மது ஹுஸைன் அத்-தபதபாயி (இ. ஹி.
1402/ கி. பி. 1981): இவர் அல்-மீஸான் ஃபீ தஃப்சீர் அல்-குர்ஆன் என்கிற தனது
பல-தொகுதிப் படைப்பில், ஜிதால் என்றால் விவாதம் புரிதல் என்கிறார். அல்லாமா
தபதபாயி, ஜாஃபரி இஸ்னா அஷரி சிந்தனா வழியைச் சேர்ந்தவர். அவர் குர்ஆன் வசனங்களைப்
பெரும்பாலும் தத்துவயியல், சமூகவியல் மற்றும் மரபுவழிக் கண்ணோட்டங்களில் அணுகியுள்ளார்.
எனினும், இந்த வசனத்துக்கு அவர் அதிக விவரங்களை அளித்திருக்கவில்லை. அதை, விவாதம் புரிதல்
என்று சித்தரிப்பதோடு நிறுத்திக்கொண்டார்.
ஃபக்ருத்தீன் அர்-ராஸி (இ. ஹி. 606/ கி. பி.
1209): இவர் தஃப்சீர் துறையில் தத்துவயியல் போக்கைப் பின்பற்றியவர். இவரது பாரிய
ஆக்கமான அல்-தஃப்சீர் அல்-கபீர் பொதுவாக மஃபாதிஹ் அல்-கய்ப் என்பதாக
அழைக்கப்படுகின்றது. ஜிதால் எனறால் விவாதம் என்பதாக ராஸி சித்தரித்துவிட்டு,
அதன் மீது ஒட்டுமொத்தத் தடை உள்ளதா எனக் கேள்வியெழுப்புகிறார். மேலும், ஒருவர் தனது
'இல்ம்' (அறிவு) வளர்ச்சிக்காகவும், தீனின் விடயங்களிலும் விவாதம் புரிவது அனுமதிக்கப்பட்ட
செயல் மட்டுமல்ல; அது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியும் செயலும் ஆகும் என்று அவர் கூறுகிறார்.
ஜிதால் இரு வகைப்படும் என ராஸி கருதுகிறார்: ஒன்று, அசத்தியத்தை (அல்-பாதில்)
உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவது. எடுத்துக்காட்டாக உலகில் கெளரவம், அதிகாரம்,
அந்தஸ்து, பதவி, பணம், செல்வம் போன்றவற்றை அடைவதற்காக விவாதம் புரிதல். இது தடுக்கப்பட்ட
செயல். மற்றது, சத்தியத்தை (அல்-ஹக்) உறுதிபடுத்துவதற்காகவும் அல்லாஹ்வின் பாதையில்
அழைப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுவது; இது போற்றுதலுக்குறியது.
மேற்கூறியதிலிருந்து, இஸ்லாத்தின் மாமேதைகள்
ஜிதால் குறித்து தெளிவான விளக்கமளிப்புகளைத் தந்துள்ளது மட்டுமின்றி, ஒருவர் தனது
அறிவை அதிகரித்துக்கொள்ளவோ அல்லது அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநாட்டவோ மேற்கொள்ளும்
முயற்சிகள் அனைத்தும் போற்றுதலுக்குரியவையே எனவும் உறுதிபடக் கூறியிருக்கின்றனர். ஆக,
சத்தியத்தை உறுதிபடுத்துவதற்காகவும் இணை வைப்பவர்களை விட்டுப் பொறுப்பு விலகல் பிரகடனம்
செய்வதற்காகவும் இறைநம்பிக்கையாளர்கள் ஒருங்கமைக்கும் பேரணிகள் பாராட்டுக்குரியதே.
இறைத்தூதரின் தூதுத்துவப் பணியின் ஆறாவது ஆண்டில் உமர் இப்னு அல்-கத்தாப் இஸ்லாத்தை
ஏற்றுக் கொண்டபோது மாபெரும் பேரணி ஒன்று கஅபாவில் நடத்தப்பெற்றது. அதற்கு ஒருபக்கம்
உமரும் (ரழி), மறுபக்கம் இறைத்தூதரின் சிறியதந்தை ஹம்ஸாவும் (ரழி) தலைமை தாங்கினர். (1) மட்டுமின்றி, இணை வைப்பவர்களை
விட்டுப் பொறுப்பு விலகல் என்பது ஒரு குர்ஆனியக் கட்டளையாகும். அது அத்தியாயம் அத்-தவ்பாவின்
(அத்தியாயம் பராஅத் என்றும் இது அழைக்கப் படுகிறது) ஆரம்ப வசனங்களில் மிக வலுவாக
உரைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் இணை வைப்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளும்,
அவர்களுடனான ஒப்பந்தங்களை முடித்துக் கொள்ளுமாறு முஸ்லிம்களுக்குத் தெளிவான உத்தரவும்
விடுக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயம் தன்னுள் கடுமையான எச்சரிக்கைகளைக் கொண்டுள்ளதாலேயே,
குர்ஆனில் பஸ்மலாஹ்(2) இல்லாத ஒரே அத்தியாயமாக இது விளங்குகிறது
என குர்ஆன் விரிவுரையாளர்கள் சிலர் விளக்கமளித்துள்ளனர். இது, அல்-ஃபாழிஹா அல்லது
இணை வைப்பவர்களை வெளிப்படுத்தும் செய்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தின்
முதல் மூன்று வசனங்கள் பின் வருமாறு:
"நீங்கள்
ஒப்பந்தம் செய்துள்ள இணை வைப்பவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொறுப்பு
விலகிக் கொண்டனர் (என்று அறிவிக்கப்படுகிறது). எனவே, இணைவைப்பாளர்களான) நீங்கள் நான்கு
மாதங்களுக்கு பூமியில் நடமாடிக் கொள்ளுங்கள். மேலும், திண்ணமாக நீங்கள் அல்லாஹ்வை தோல்வியுறச்
செய்யமுடியாது என்பதையும், இறை நிராகரிப்பாளர்களை நிச்சயமாக அல்லாஹ் (தன் வழிகாட்டுதலால்)
தோல்வியுறச் செய்வான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்! மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில்
அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் சார்பாக மனிதர்கள் யாவருக்கும் விடுக்கப்படும் பொது
அறிவிப்பு யாதெனில், திண்ணமாக அல்லாஹ்வும், அவனது தூதரும் இணைவைப்போரை (முஷ்ரிகீன்) விட்டுப் பொறுப்பு விலகி விட்டார்கள்."
(அல்குர்ஆன் 9:1-3)
இந்த அத்தியாயத்தின் பிற வசனங்கள் பலவும் ஹிஜ்ரி
9-ம் ஆண்டு துல்ஹஜ் மாதத்திலேயே இறக்கியருளப்பட்டன. அப்போது, அபூபக்கர் (ரழி) தலைமையில்
சுமார் 300 முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக ஏற்கனவே மக்காவுக்குக் கிளம்பிச் சென்றிருந்தனர்.
இந்த வசனங்கள் இறங்கியதும், இவற்றை ஹஜ் சமயத்தில் அறிவிப்புச் செய்ய வேண்டி, இறைத்தூதர்
(ஸல்) இமாம் அலீயை (ரழி) உடனையாக மதீனாவிலிருந்து மக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்த வசனங்களில் பொதிந்துள்ள செய்தி பருண்மையாக அரசியல் தன்மை கொண்டுள்ளது. எந்தளவிற்கெனில்,
ஹஜ்ஜானது வெறுமனே கிரியைகள் சார்ந்த விடயம்தான் எனச் சுட்டுவதற்குக் கூட எவருக்கும்
தைரியம் ஏற்படாது என்றே தோன்றுகிறது - அவர் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு எதிராக பகிரங்கமான
கலகம் செய்தாழொலிய. இந்த வசனங்கள், இணை வைப்பாளர்களை விட்டுப் பொறுப்பு விலகுதலை அறிவிப்பது
மட்டுமின்றி, நிராகரிப்பாளர்களுக்கு எதிராகப் போர் தொடுக்குமாறும் இறை நம்பிக்கையாளர்களை
ஏவுகின்றன. இறைத்தூதர் (ஸல்) இவ்வசனங்களை அறிவிப்புச் செய்வதற்காக, ஹாஜிகள் மக்காவிலிருந்து
திரும்பும்வரை காத்திருக்கலாம். ஆனால், அவர்கள் (ஸல்) அவ்வாறு செய்யவில்லை. அதேபோல்,
அதற்கடுத்த ஆண்டு இறைத்தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்குச் சென்ற போது, அரஃபாத் மைதானத்தில் நிகழ்த்திய
ஹஜ்ஜத்துல் விதா (இறுதி ஹஜ்) பேருரையும் கூட ஹஜ்ஜின் அரசியல் இயல்பு குறித்த மிக வலுவானதொரு
பிரகடனமே. (3)
ஆக, முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் சவூதுக்
குடும்பத்தின் விருப்பு வெறுப்புகளை பின்பற்றுவதா? அல்லது, அல்லாஹ் சுப்ஹானஹூவ தஆலாவின்
கட்டளைகளையும் அவனது அன்புத் தூதரின் (ஸல்) வழிமுறையையும் பின்பற்றுவதா?
இஸ்லாமிய வரலாறு மீது ஒரு வேகப் பார்வை செலுத்துவதும் ஹஜ்ஜின்
பங்கு குறித்த இந்தப் புரிதலை வழங்குகிறது, முஸ்லிம் வரலாறு, நேர்வழி நின்ற கலீஃபாக்கள்
(குலஃபாயே ராஷிதீன்) காலம் தொட்டு குர்ஆன் மற்றும் இறைத்தூதரின் வழிமுறையை விட்டு மென்மேலும்
விலகிச்சென்றுள்ள போதிலும், கடந்த சுமார் 200 வருடங்களாகத்தான் குஃப்ரு சக்திகள்
முஸ்லிம்களை அடிபணிய வைத்துள்ளன. இறை பக்தியற்ற ஆட்சிக்கு எதிரான முதல் எதிர்ப்புப்
போராட்டத்தை இஸ்லாத்தின் மாபெரும் வீரத்தியாகியும் இறைத்தூதரின் (ஸல்) பேரருமான இமாம்
ஹுஸைன் (ரழி) அவர்கள் நிகழ்த்திக் காட்டி உதாரணம் படைத்தார்கள். ஹிஜ்ரி 681-ல் இமாம்
ஹுஸைன் (ரழி) கூஃபாவுக்குக் கிளம்பிச் செல்லுமுன், ஹஜ்ஜுக்காக மதீனாவிலிருந்து மக்கா
சென்றார். (எனினும், அதனை அவர் நிறைவு செய்யவில்லை). அவர் யஸீதின் படைகளுக்கெதிராக
நடத்திய போராட்டம், அன்றுமுதல் முஸ்லிம்களுக்கு நிரந்தர முன்மாதிரியாகத் திகழ்ந்துவருகிறது.
முஸ்லிம்கள் சமீபகால வரலாற்றில் ஐரோப்பியக் காலனித்துவத்தின்
தலைமையிலான குஃப்ரு சக்திகளை எதிர் கொண்டுள்ளனர். ஐரோப்பியர்கள் கொள்ளை மற்றும்
சுரண்டலுக்கான படையெடுப்புகளை நடத்தி முஸ்லிம் பூமிகளுக்கு வந்திறங்கியபோது, முஸ்லிம்கள்
வலுவின்றிப் பிரிந்து கிடந்ததைக் கண்டனர். சீர்கெட்ட ஆட்சியாளர்களின் கீழ் இயங்கிய
முஸ்லிம் படைகளால் ஐரோப்பியப் பீரங்கிகளுக்கோ, சூழ்ச்சிகளுக்கோ சற்றும் ஈடுகொடுக்க
முடியவில்லை. என்றாலும், முஸ்லிம்கள் மேற்கத்தியக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடவே
இல்லை என அர்த்தமல்ல. இந்த எதிர்ப்புப் போராட்டம் ஆட்சியாளர்களின் தரப்பிலிருந்து வரவில்லை,
அவ்வளவுதான். பெரும்பாலும் மார்க்க அறிஞர்களும் (உலமாக்களும்) இன்னபிற புரட்சிகர
முஸ்லிம்களுமே அதனை முன்னின்று நடத்தினர். காலனியாதிக்கத்துக்கு எதிராக உலகின் பல்வேறு
பகுதிகளிலும் நடத்தப்பெற்ற சமூகத்தின் எதிர்ப்புப் போராட்டத்தை அணி திரட்டியதிலும்,
ஒருங்கிணைத்தலிலும் ஹஜ் ஒரு மிக முக்கியப் பங்கு வகித்தது.
இந்தோ-பாகிஸ்தானில் ராய் பரேலியைச் சேர்ந்த சையித் அஹ்மது தலைமையேற்று
நடத்திய குறுகியகால ஜிஹாத் இயக்கம் அசலில், அவர் 1822-23ல்(4) ஹஜ்ஜுக்குச்
சென்றுவந்த பிறகே துவக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனியவாதிகள், இந்து மற்றும் சீக்கிய
நிலப்பற்று வெறியர்கள் ஆகியோரின் கைகளில் சிக்குண்ட இந்திய முஸ்லிம்களினதும், இஸ்லாத்தினதும்
அவலநிலை பற்றி சையித் அஹ்மது மக்காவில் வைத்துச் சக முஸ்லிம்களோடு கலந்துரையாடியதாக
நம்பம்படுகிறது. அவர் ஹஜ்ஜிலிருந்து திரும்பியதும் ஜிஹாத் இயக்கத்தை ஒருங்கமைத்தவர்.
அதில் ஷா வலியுல்லாஹ்வின் (இ. 1762) பேரர் ஷா இஸ்மாயீல் போன்ற பிற மேன்மையான ஆளுமைகளும்
இணைந்துகொண்டனர். சையித் அஹ்மது, ஷா இஸ்மாயீல் இருவரும் 1831-ல் (இன்றைய பாகிஸ்தான்
வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலுள்ள) பாலகோட்டில் சீக்கியருக்கு எதிரானதொரு போரில்
வீரமரணம் அடைந்தனர். எனினும், சையித் அஹ்மதின் பின்பற்றாளர்கள் பிரிட்டிஷ் காலனியவாதிகளுக்கு
எதிராகத் தங்களது ஜிஹாதை தொடர்ந்து நடத்திவந்தனர். 1890 வரையிலும் கூட எல்லைப்புற
மாகாணத்தின் பல பகுதிகளில் அவர்களது நடவடிக்கைகள் தொடர்ந்திருந்ததாகத் தகவல்கள் உள்ளன.
சையித் அஹ்மது ஷஹீதின் ஜிஹாத் இயக்கத்துக்கு
முன்னரே, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வங்காளத்தில் ஷரீஅத்துல்லாஹ் ஓர்
இயக்கத்தைத் துவக்கியிருந்தார். அவரது இயக்கத்திலும் ஹஜ் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.
1782-ல் ஹஜ்ஜுக்குச் சென்ற ஷரீஅத்துல்லாஹ், 1802-வரை மக்காவில் தங்கியிருந்தார். அக்காலகட்டத்தில்
அவர் ஷாஃபியீ செய்கு ஒருவரின் சீடரானார். அவர் பிறகு வங்காளத்துக்குத் திரும்பியதும்
ஃபராயிழி இயக்கத்தைத் தோற்றுவித்தார். இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை ஒழித்துக்கட்டுவதே
அதன் முக்கியத் தேட்டமாக இருந்தது, 'ஏனெனில், இந்தியா இனியும் ஒரு தாருல் இஸ்லாம்
(இஸ்லாம் கோலோச்சும் பூமி) அல்ல; அது ஒரு தாருல் ஹர்ப் (யுத்த பூமி) நிலைக்கு
மாறிவிட்டிருந்தது'.(5) முஸ்லிம்கள் மீது பிரிட்டிஷார்
தங்களது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்குத் துணை புரிந்து, சந்தேகமின்றி, பிரிட்டிஷ்
ஆதரிப்பைப் பெற்றுக்கொண்ட அப்பகுதியின் நிலப்பிரபுக்களை எதிர்த்தும் ஷரீஅதுல்லாஹ்வின்
இயக்கம் செயல்பட்டது. அவரது மரணத்துக்குப் பின், அவரது மகன் தாது மியான் இந்த இயக்கத்தை
முன்னெடுத்துச் சென்றார். இன்றும் கூட இவ்வியக்கத்தின் பின்பற்றாளர்களை வங்காளத்தின்
சில பகுதிகளில் காணலாம்.
பின்பு, இவ்வியக்கங்கள் 1857-ல் முதல் விடுதலைப்
போராக வளர்ச்சி கண்டன. அது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான இந்தியக் கலகம்
என்று பொருத்தமற்ற வகையில் பெயரிட்டு அழைக்ப்படுகிறது. உண்மையில், ஏராளமான மார்க்க
அறிஞர்கள் 1857 கிளர்ச்சியில் பங்கெடுத்தனர். அவர்களில் பலர் ஷா வலியுல்லாஹ், சையத்
அஹ்மது, ஷா அப்துல் அஸீஸ், ஷா இஸ்மாயில், ஷரீஅதுல்லாஹ் ஆகியோரின் வழித்தோன்றல்கள் மற்றும்
சீடர்கள். 1857 கிளர்ச்சியின் தோல்விக்குப் பிறகு, மெளலானா மஹ்மூதுல் ஹஸன் (இ.
1921) பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்திற்காக மக்காவிலிருந்து ஃபத்வா ஒன்றை
வேண்டிப்பெற்றார். அவர் மக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த வழியில் கைதுசெய்யப்பட்டு,
மால்டாவில் பல்லாண்டு காலம் சிறைவைக்கப்பட்டார். இவ்வாறாக மீண்டும், இந்தோ-பாகிஸ்தான்
துணைக்கண்டத்தில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக நடத்தப்பெற்ற போராட்ட இயக்கங்களுக்கு
மக்காவும், ஹஜ்ஜும் தான் குவிமையங்களாக விளங்கின.
இத்தகு ஜிஹாத் நடவடிக்கைகள், இந்திய முஸ்லிம்களுக்கு
மட்டுமே உரித்தானவை அல்ல; அதேபோல், தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு மக்கா மற்றும்
ஹஜ்ஜை வலியுறுத்தும் வழக்கமும் அவர்களுக்கு மட்டுமே உரிய தனிப்பண்பு அல்ல. காவ்கசஸின்
இமாம் ஷாமில், அல்ஜீரியாவைச் சேர்ந்த அமீர் அப்துல் காதிர், முஹம்மது இப்னு அலீ சனூசி
ஆகியோரும் கூட மக்காவின் பக்கமே மீண்டு, ஹஜ் சமயத்தில் நிகழும் உம்மத்தின் மாபெரும்
சம்மேளனத்திலிருந்து பயன்பெற்றனர்.
1827-ல் முல்லா முஹம்மது என்பாரின் போதனைகளிலிருந்து
ஜிஹாத் இயக்கம் ஒன்று தீப்பிழம்பாக உருவெடுத்தது. அது காவ்கசஸில் ஜார் மன்னர்களை
எதிர்த்துப் போரிட்டது. இதில், முல்லா முஹம்மதின் மார்க்கப் பாடசாலையில் படித்த இறையியல்
மாணவர்கள் இருவர் - காஸி முஹம்மது, ஷாமில் - மிகவும் பிரபலமடைந்தனர். 1828-ல் ஷாமில்
ஹஜ்ஜுக்குச் சென்றார். அங்கே வந்திருந்த அல்ஜீரியாவைச் சேர்ந்த அமீர் அப்துல் காதிரை
அவர் மக்காவில் வைத்துச் சந்தித்தார். இந்த வருங்கால இஸ்லாமிய விடுதலைப் போராட்ட நாயகர்கள்
இருவரும் ஹஜ்ஜின் போது மக்காவில் வைத்துத் தங்களது போர்களைத் திட்டமிட்டனர். அப்துல்
காதிர் அல்ஜீரியாவில் பிரெஞ்சுக்கு எதிராகவும், இமாம் ஷாமில் காவ்கசஸில் ஜார் மன்னர்களுக்கு
எதிராகவும் போராடினர். (6)
வடஆப்பிரிக்காவில் முஹம்மது இப்னு அலீ சனூசி தலைமையேற்று
நடத்திய இயக்கம், உண்மையில் மக்காவில் தான் உருவெடுத்தது. சனூசி வழியமைப்பு என்பதாக
பின்னாட்களில் அழைக்கப்பெற்ற அது, அசலில் அஹ்மது இப்னு இத்ரீஸ் (இ. 1837) தோற்றுவித்த
இத்ரீஸி வழியமைப்பின் ஒரு கிளையாகவே உருவானது. (7) மொராக்கோவைச்
சேர்ந்தவரும் முஹம்மது நபிகளாரின் - அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
- வழித்தோன்றலுமான இத்ரீஸ், முன்னதாக மக்காவில் குடியேறியிருந்தார். அப்போது அவர் நிறுவிய
தரீக்கா முஹம்மதியா சிறிதுகாலம் அசீர் மாகாணத்தில் அரசியல் அதிகாரம் பெற்றுத்திகழ்ந்தது.
இந்தத் தரீக்காவே மூவேறு புதிய இயக்கங்களைப் பெற்றெடுத்தன: ராஷிதிய்யா, அமீர்கானிய்யா
மற்றும் சனூசிய்யா. ராஷிதிய்யா தரீக்கா அல்ஜீரியாவின் வட்டத்துக்குள்ளேயே நின்றுவிட்டது.
எனினும், அமீர்கானிய்யாவும், சனூசிய்யாவும் பிற பகுதிகளுக்குப் பரவின. அமீர்கானிய்யாவின்
செல்வாக்கு சூடானிலும், நூபியாவிலும் பரவிய அதே வேளை, சனூசிய்யாவின் பரவல் பூமத்தியரேகை
ஆப்பிரிக்காவிலும், லிபியா மற்றும் எகிப்திலும் முன்னேற்றம் கண்டது.
சனூசிய்யா வழியமைப்பை நிறுவியவர், முஹம்மது இப்னு
அலீ அஸ்-ஸனூசி (இ. 1859). அவர் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர். எனினும் மக்காவில் குடியேறி
அங்கு அஹ்மது இப்னு இத்ரீஸின் சீடரானார். சனூசிய்யா வழியமைப்பு ஒரு செயல்வீரர்கள் இயக்கம்.
அது சூஃபித்துவ தொடக்கம் கொண்டிருந்தபோதிலும், தற்காப்புக்கலையை பெரிதும் வலியுறுத்தியது;
மேலும், விவசாயம் மற்றும் வணிகத்தில் ஈடுபடுமாறும் தனது பின்பற்றாளர்களை ஊக்குவித்தது.
இந்த சனூசிய்யா வழியமைப்புதான் பிற்காலத்தில் பூமத்தியரேகை ஆப்பிரிக்காவில் பிரெஞ்சுக்
காலனியாதிக்கத்தையும், லிபியாவில் இத்தாலியரையும், எகிப்தில் பிரிட்டிஷாரையும் எதிர்த்துப்
போர் செய்தது.
இவ்வனைத்து இயக்கங்களுக்கும் இடையில் பல பொதுவான
பண்புகளைக் காணமுடிகிறது; அவை அனைத்தும் வரலாற்றில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோன்றின.
அவை அனைத்துமே ஹஜ் மற்றும் மக்காவுடன் தொடர்பு கொண்டிருந்தன. அவை தோன்றிய காலகட்டம்,
இஸ்லாமிய பூமிகள் மீது காலனியாதிக்கத் தாக்குதல் தொடுக்கப்பட்ட காலகட்டமாக இருந்தது.
அதற்கு முன்பிருந்தே முஸ்லிம்களின் ஆட்சியதிகாரம் வீழ்ச்சியுறத் துவங்கியிருந்தபோதிலும்,
இத்தகு ஒருசேர குஃப்ரு சக்திகள் முஸ்லிம்கள் மீது படையெடுத்து அவர்களை அடிபணியவைத்து
அவர்களது பூமிகளை ஆக்கிரமித்திருக்கும் சூழலை முஸ்லிம்கள் சந்தித்ததில்லை. சலாஹுத்தீன்
பாலஸ்தீனைச் சுற்றியிருந்த அரசுகளின் ஆட்சியாளர்களை 'கவனித்த' பிறகே, சிலுவைப் படையினரின்
ஜெரூசல ஆக்கிரமிப்பை (1099-1187) அகற்றினார். இவ்வாட்சியாளர்கள் எல்லாம் தங்களுக்கிடையே
நிலவிய சில்லறையான சண்டை சச்சரவுகளுக்காகச் சிலுவைப் படையினரோடு சேர்ந்துகொண்டு, ஒருவருக்கெதிராக
ஒருவர் சதிசெய்வதில் ஈடுபட்டு, முஸ்லிம்களை அடிமைத்தளையிலேயே வைப்பதற்கு துணைபுரிந்து
கொண்டிருந்தவர்கள். மற்றொரு விதிவிலக்கான நிகழ்ச்சி, 1492-ல் கத்தோலிக்க அரசர்களிடம்
கிராணடாவின் வீழ்ச்சி. எனினும் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய உஸ்மானிய
கிலாஃபத், இந்த வீழ்ச்சியை ஓரளவு ஈடுகட்டிவிட்டது.
முஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை
எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஓர் ஜிஹாத் இயக்கத்தைத் துவக்குவதே
அவர்களது தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்ஜே அவர்களது
திட்டங்களில் மையப் பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை
அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர். ஹஜ்ஜில் மட்டும்தான் முழு
உம்மத்தும் அதன் நுண்மாதிரி வடிவில் பிரதிநிதித்துவம் பெறுகிறது. அந்த எளிய
கனசதுரக் கஅபா, அல்லாஹ்வின் இல்லம் என்ற வகையில் இஸ்லாத்தில் நித்தியத் தன்மையையும்,
நிலைத்தன்மையையும் குறித்து நிற்கிறது. இந்தக் கஅபாவையே முஸ்லிம்கள் தங்களது அன்றாடத்
தொழுகைகளில் முன்னோக்குகின்றனர் என்பது மட்டுமின்றி, அவர்கள் சோதனைக் காலங்களில் அல்லாஹ்வின்
வழிகாட்டுதல் மற்றும் அருளை வேண்டும் பொழுதும் இந்தக் கஅபாவின் பக்கமே இயல்பாகத் திரும்புகின்றனர்.
குர்ஆனிலுள்ள அல்லாஹ் சுப்ஹானஹூவ தஆலாவினது கட்டளைகளின் அடிப்படையிலும், இறைத்தூதரின்
- அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் - வாழ்வுதாரண அடிப்படையிலும் இந்த
உம்மத் இறையில்லத்தின் (பைத்துல்லாஹ்) வரலாற்றுப் பாத்திரத்தையும், ஹஜ்ஜின்
பாத்திரத்தையும் நன்கு விளங்கி வைத்திருந்தது. ஹரமைனை இன்று ஆக்கிரமித்திருப்போர் ஹஜ்ஜின்
இந்த பரந்துபட்ட பாத்திரத்தை எவ்வளவு வெறுத்த போதிலும், முஸ்லிம்கள் ஹஜ்ஜின் உண்மை
அம்சங்களை விளங்குவதும் அல்லாஹ் சுப்ஹானஹூவ தஆலாவின் கட்டளைக்கேற்ப அதன் அசல்பணியை
மீட்பதும் அவர்கள் மீது கடமையாகும்.
இன்றும்கூட இஸ்லாமிய உலகு குஃப்ரின் ஒருங்கமைந்த
சக்தியை எதிர்கொண்டே வருகிறது. இந்த குஃப்ரு சக்திகள், தாங்கள் இஸ்லாத்தோடு
சுமூகமாக வாழ விரும்புவதாகச் செய்து கொண்டிருந்த பாசாங்கு எல்லாம், ஈரானிய இஸ்லாமியப்
புரட்சியின் வெற்றிக்குப் பிறகு உதிர்ந்துவிட்டன. வாஷிங்டன், மாஸ்கோ, பாரிஸ், லண்டன்,
டெல் அவீவ், புதுடில்லி போன்ற குஃப்ரின் அதிகார மையங்களிலிருந்து வெளியிடப்படும்
அறிக்கைகளே அவர்களின் உண்மை நோக்கங்களை உறுதிப்படுத்தப் போதுமானவை. காலனித்துவம் தோன்றிய
காலத்தில் போன்றே, இன்றும் இஸ்லாமிய உலகு தனது வளங்களைத் திரட்டி கொடிய சக்திகளை போரிட்டுத்
தோற்கடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதுகுறித்து குர்ஆனில் வரும் அல்லாஹ்வின் கட்டளைகள்
தெள்ளத்தெளிவாகப் பேசுகின்றன:
"அவன்தான் தனது தூதரை நேர்வழியுடனும் சத்திய
மார்க்கத்துடனும் அனுப்பிவைத்தான் - அவன் அதைக்கொண்டு மற்ற மதங்களை மிகைக்கஸ் செய்வதற்காக!
இது இணை வைப்பவர்களுக்கு எத்துணை வெறுப்பாக இருப்பினும் சரியே!"
(அல் குர்ஆன்
9:33, 61:9)
(இதே கட்டளை, சிறிது மாறுபட்ட வடிவில் 48:28-ல்
மீண்டும் வருகிறது). இஸ்லாமிய உலகின் அரசுகள் பலவும் இதே குஃப்ரு சக்திகளுக்கு
அடிபணிந்து கிடக்கும் சூழலில், நிச்சயமாக இக்கட்டளையை நிறைவேற்றுவது சாத்தியமில்லை.
அது மட்டுமின்றி, இஸ்லாத்தின் புனிதத்தலங்கள் இத்தகு அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்குமெனில்
- இன்று சவூது குடும்பம் இருப்பது போல இருக்குமெனில் - யதார்த்தத்தில் அவை குஃப்ரின்
கட்டுப்பாட்டில் இருப்பதாகவே பொருள், அத்தகு கட்டுப்பாடு நேரடியாக இல்லாவிட்டாலும்
கூட.
'ஹஜ்ஜில் அரசியல் கூடாது' என்கிற வாதமெல்லாம் சவூதுக்
குடும்பம் செய்கிற தந்திர விளையாட்டே. முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பிட்ட சிலவகைக்
கருத்துக்கள் பரவிவிடக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம். தங்களுக்குப் பொருத்தமாய்
அமையும் போதெல்லாம் அவர்கள் தங்களது சொந்த அரசியல் கண்ணோட்டத்தை முன்னிறுத்துவதற்கு
ஹஜ்ஜைப் பயன்படுத்தியே வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சவூதிகள் 1980 வரை ஒவ்வொரு ஹஜ்ஜின்
போதும், ராபிதா அல்-ஆலம் அல்-இஸ்லாமியின் குடைக்குக் கீழ் வருடாந்திர மாநாடு
ஒன்றை வழக்கமாக நடத்துவார்கள். அந்த மாநாட்டுக்கு இயல்பாகவே, சவூதி கண்ணோட்டத்தோடு
சம்மதிப்போர் மாத்திரமே அழைக்கப்படுவார்கள். சரிதான், மக்காவில் தளம் கொண்ட ஒரு சவூதி
முகப்பு அமைப்பிடமிருந்து பெரிதாக வேறெதனையும் எதிர்பார்க்க முடியுமா? இங்கு கவனிக்கத்தக்கதொரு
சுவாரஸ்யமான விடயம் யாதெனில், 1980 முதல் இம்மாநாடுகள் கைவிடப்பட்டு விட்டன. ஏன்?
1979 பிப்ரவரியில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றியடைந்திருந்தது. மற்றும்,
1979 நவம்பரில் ஹரமில் கிளர்ச்சி நடந்திருந்தது. இந்தக் கிளர்ச்சி, சவூதுக் குடும்பத்தின்
அடித்தளத்தையே ஆட்டங்காணச் செய்துவிட்டது.
இது தொடர்பாக சவூதிகளின் நயவஞ்சகத்தை 1985-ம் ஆண்டின்
ஒரு சம்பவத்திலிருந்து தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். அந்த ஆண்டு ஹஜ்ஜின் போது, பாலஸ்தீன
விடுதலை அமைப்பு என்றொரு முற்றிலும் மதச்சார்பற்ற அமைப்பின் தலைவர், யாசர் அரஃபாத்,
அரஃபா மைதானத்திலுள்ள மஸ்தினுந் நிம்ராவில் குத்பா ஆற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.
அரஃபா தினம் தான் (இதை யாசர் அரஃபாத்துடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்!) ஹஜ்ஜுடைய தினம்
என்பதாக இறைத்தூதர் - அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் - கூறியிருக்கிறார்கள்.
இருப்பினும், அந்த தினத்தில் யாசிர் அரஃபாத் போன்றதொரு மதச்சார்பின்மை தேசியவாதியை
சவூதுக் குடும்பம் தெரிவுசெய்து, அரஃபா பள்ளத்தாக்கில் குழுமியிருந்த இலட்சக்கணக்கான
முஸ்லிம்கள் மத்தியில் குத்பா வழங்க ஏற்பாடுசெய்தது. இந்த அரஃபாத் எதைப் பற்றிப்
பேசினார்? சந்தேகமின்றி, பாலஸ்தீன விடுதலை பற்றியே பேசினார். ஆனால், அதை மதச்சார்பின்மை
தேசியவாதக் கட்டமைவுக்குள் வைத்தே பேசினார். ஆக, சவூதுக் குடும்பத்தைப் பொறுத்த வரை,
ஹஜ்ஜுடைய தினத்தன்று அரஃபா மைதானத்தில் வைத்து மதச்சார்பின்மைக் கட்டமைவில் அரசியல்
பேசுவது ஆட்சேபணைக்கு உரியதல்ல; ஆனால், முஸ்லிம்கள் இஸ்லாமியக் கட்டமைவில் இவ்விவகாரங்களை
விவாதிப்பது தடுக்கப்பட்ட செயல்! இதனால்தான், முஸ்லிம்கள் இஸ்லாமியக் கொடியின் கீழ்
திரண்டு, குர்ஆனில் அல்லாஹ் சுப்ஹானஹூவ தஆலா அருளியுள்ள கட்டளைகளின் அடிப்படையில்
நிராகரிப்பவர்களை விட்டும் இணைவப்பவர்களை விட்டும் பொறுப்பு விலகல் பிரகடனப் போரணிகளை
கண்டிப்பாக நடத்தக்கூடாது. அப்படி நடத்தினால், அவர்களை ஈவிரக்கமின்றிச் சுட்டுக்கொல்வதற்கு
அங்கே சவூதிப் படை வீரர்கள் தயாராக இருப்பார்கள்.
தொடர்ச்சி இரண்டாம் பாகத்தில்.......
குறிப்புகள்:
1.
கான், மஜீத் அலீ, பக்திமிகு
கலீஃபாக்கள் (ஆங்.), இஸ்லாமிக் புக் பப்ளிஷர்ஸ், குவைத், 1982. பக். 69.
2.
பஸ்மலாஹ்: 'பிஸ்மில்லாஹ்
அர்-ரஹ்மான் அர்-ரஹீம்' (அளவற்ற அருளாளனும் நிகரற்ற
தயாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்') எனும் சொற்றொடரைக் குறிக்கிறது.
3.
ஸஃபருல் இஸ்லாம்
கான் - யாகூப் ஸகீ (பதி.). ஹஜ்: ஒரு சிறப்புப் பார்வை (ஆங்.), தி ஓபன் பிரஸ், டொராண்டோ, லண்டன், 1986. பக்.
77-79.
4.
ஃபஸ்லுர் ரஹ்மான். இஸ்லாம்
(ஆங்.), எ டபிள்டே ஆன்கர் புக், நியூயார்க், 1968. பக். 25-251. இதைவிட வருணனை மிகுந்த
சரித்திரத்துக்கு பார்க்க, ஆபாத் ஷாபூரி, சையத் பாதுஷா கா கஃபிலா (மாபெரும்
சையதின் பயணக் கூட்டம்) (உருது),, மக்தபே திக்ரா, ராம்பூர், இந்தியா, 1986.
5.
மேலது, பக். 251.
6.
கிரசண்ட் இன்டர்நேஷனல் (ஆங்.), தொ.16, எண்.8, டொராண்டோ, ஜூலை 1-15, 1987.
7.
ஃபஸ்லுர் ரஹ்மான். இஸ்லாம்
(ஆங்.), எ டபிள்டே ஆன்கர் புக், நியூயார்க், 1968. பக். 254-257.
Ø
"ஹஜ் பற்றிய குர்ஆனியக்
கண்ணோட்டம்" எனும் இத்தலைப்பு டாக்டர் ஸஃபர் பங்காஷ் எழுதிய- "மக்கா படுகொலைகள்
(1987): பின்னணியும் ஹரமைனின் எதிர்காலமும்" எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment