Friday, June 3, 2016

ஜிஹாதின் இரு வடிவங்கள்: போராட்டம் மற்றும் சீர்திருத்தம்

ஜிஹாதின் இரு வடிவங்கள்: போராட்டம் மற்றும் சீர்திருத்தம்

-    கலாநிதி தாரிக் ரமழான்

-    தமிழில்: அபு தர்



"நிச்சயமாக, பற்றுறுதிகொண்ட முஸ்லிம்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்மீதும் பற்றுறுதிகொண்டு, பின்னர் (அதுபற்றி எத்தகைய) சந்தேகமும்கொள்ளாது, தங்கள் செல்வங்களைக்கொண்டும் தங்கள் உயிர்களைக்கொண்டும் அல்லாஹ்வின் பாதையிலே (தியாகத்துடன் கூடிய) போராட்டத்தில் ஈடுபடுவார்கள் - இத்தகையவர்கள்தாம் உண்மையாளர்கள்."

(அல் குர்ஆன் 49:15)\

இவ்விடத்திலே வலியுறுத்த முற்படும் விடயம் யாதெனில், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் சந்திக்க நேரிடும் எதுவும் இலகுவாக இருக்கப்போவதில்லை. இது இலகுவான கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பாதை, அதே நேரத்தில், கடினமான தருணங்களாலும் நிரம்பப்பெற்ற ஒரு பாதை. ஏனெனில், நீங்கள் போராட வேண்டியிருக்கிறது. இலக்கை எட்டிப்பிடித்திட வேண்டும் என்று முயற்சிக்கிற எதற்கும் ஜிஹாத் ஓர் இன்றியமையாத தேவை!

ஆக, நாம் வாழும் பகுதி - அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி அல்லது முஸ்லிம்கள் அல்லாத மாற்று மதத்தவர்களின் வேறுபல பகுதிகளாக இருந்தாலும் சரி - எப்படிப்பட்டதாக இருப்பினும், முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய சொல்லியல் குறித்த சரியான வரைவிலக்கணத்தின் பக்கம் மீளவேண்டியிருக்கிறது. ஜிஹாத் என்பது முயற்சியையும் போராட்டத்தையும் குறித்துநிற்கும் ஒரு சொற்கூறு. அது, யதார்த்தத்தில் - நான் அடிக்கொருதரம் அறிவுறுத்துவதுபோல - இரண்டு கூறுகளை ஆழமாக வலியுறுத்துகிறது: ஒன்று, 'எதிர்ப்புப் போராட்டம் (Resisting)', மற்றொன்று, 'சீர்திருத்தம் (Reforming)'. தீயதை எதிர்த்துப் போராடுதல்; கேடு மற்றும் தீங்கு விளைவிப்பவைகளை எதிர்த்துப் போராடுதல்; நெறிபிறழ்ந்த போக்கையும் தவறான செயல்பாடுகளையும் களைந்திட முயற்சித்தல். அதன் பின்னர், நன்மையை அடைந்துகொள்வதையிட்டு முன்னெடுக்கப்படும் பகீரதப் பிரயத்தனம்.  

ஜிஹாத் என்பதோர் இருவழிச் செயல்பாட்டுமுறை: ஒன்று சீர்திருத்தம், மற்றொன்று அதற்கான போராட்டம். அவ்வளவே! சீர்திருத்தம் என்பது யதார்த்தத்தில் எதனை அடைந்துகொள்வதற்காக? நிச்சயமாக அது அமைதிநிலையை அடைந்துகொள்ளத்தான். ஆக, ஜிஹாத் என்பது ஏகபோகமாகப் போர்க்களத்தையும் யுத்தத்தையும் மட்டுமே குறிக்கிறது என்று எவரேனும் உங்களிடம் வாதிட முற்பட்டால், 'இல்லை! ஜிஹாத் என்பது அமைதியை நோக்கிய அல்லது சமாதானத்திற்கு இட்டுச்செல்லும் வழிமுறையே அன்றி வேறில்லை' என்று மறுமொழியளித்துவிடுங்கள்.

நான், நன்மையானவற்றைச் சீர்திருத்திக்கொள்வதையிட்டு தீய விடயங்கள், கொடுங்கோன்மை, அடக்குமுறைகள் அல்லது என்னுடைய உள்ளுணர்வுகள், அபிலாஷைகள் முதலியவற்றை எதிர்த்துப் போராடுகிறன். இவ்விடத்தில் கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கியக் கூறு யாதெனில், இப்பாதையை பின்தொடர வேண்டும் எனில் மேற்படி செயல்பாடுகளையே நாம் முக்கியமாக கடைபிடித்தொழுக வேண்டும். அதன் பின்னர், இப்பாதையிலேயே தொடர்ச்சியாக நிலைத்திருக்க வேண்டும் என்றால், பகீரதப் பிரயத்தனத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டவாறு உங்கள் நோக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

"பற்றுறுதி கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவனது தூதரும் உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் உங்களை அழைத்தால், நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்கும் இடையில் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதை (திண்ணமாக) அறிந்துகொள்ளுங்கள்."
(அல் குர்ஆன் 8:24)

"லா இலாஹா இல் அல்லாஹ்" - அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை - என்ற ஏகத்துவக் கலிமாவை முன்மொழியும் தருணத்திலே இப்பாதையில் நீங்கள் நுழைவதற்கும்; தொடர்ந்து, இப்பாதையில் உங்கள் பயணத்தை ஆரம்பம் செய்வதற்கும், நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, உங்கள் உள்ளத்தின் பக்கம் மீண்டு வருதலே. இப்பாதையின் துவக்கமே நீங்கள்தான். உங்களிடமிருந்தே நீங்கள் ஆரம்பம் செய்கிறீர்கள். இப்பாதையில் உங்களுடைய வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளாக இருக்கப்போவது: “உங்களுக்கு நீங்களே - சரியான முறையில் - ஊழியம் செய்யவில்லையெனில், மனிதர்களுக்கு நீங்கள் ஊழியம் செய்யாதீர்கள்” என்பதுதான்.

இதன் காரணமாகவே, 'துஆ' அல்லது 'இபாதத்'-ல், அல்லாஹ்விடத்தில் நீங்கள் கேட்கும், அல்லது அல்லாஹ்வுக்காக நீங்கள் மேற்கொள்ளும் - உங்களுக்குத் தெரிந்த - எவ்வித பிரார்த்தனையாக இருந்தாலும், அதனை உங்களிடமிருந்தே ஆரம்பம் செய்யுங்கள். நீங்கள் தன்முனைப்பை வெளிக்காட்டுகிறீர்கள் என்பதல்ல இதன் பொருள். நீங்கள் உங்களிடமிருந்தே ஆரம்பம் செய்யுங்கள், ஏனெனில், உங்களிடத்தில் நீங்கள் சிறந்தவராக இருந்தால், பிற மனிதர்களிடத்திலும் அவ்வாறே நடந்துகொள்ள முயற்சிப்பீர்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனக்கென்று வரும் பட்சத்தில் மிகவும் கடின சித்தம் கொண்டவராகவும், கண்டிப்பானவராகவும், மிகுந்த கட்டுப்பாடுடையவராகவும் இருந்த அதே நேரத்தில், பிறருடன் திறந்த மனமுடையவராகவும், 'ரஹ்மா' நிறைந்தவராகவும் இருந்துள்ளார்கள். இதுவே, இவ்விடத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம்.

ஆக, இது முழுக்க முழுக்க போராட்டத்தை குவிமையமாகக் கொண்டவொரு விடயம்; நமது அன்றாட வாழ்வில், போராட்டத்தின் இன்றியமையாத தேவையை வலியுறுத்தும் சங்கதி! இஸ்லாம் என்பது மிக எளிமையான மார்க்கம்; அதனிடத்தில் அமையப்பெற்றிருக்கும் கொள்கைகள்கூட மிகவும் எளிமையனதே. ஆனால், எளிமையாக வாழ்வதென்பது 'மிகவும் கடினம்', அது எப்பொழுதும் எளிமையாக அமையப்போவதில்லை. நம்முடைய வாழ்வைப் பொறுத்தவரை, கொள்கைகளை பற்றிப் பிடித்துக் கொண்டு, வாழ்வின் எளிமையான விடயங்களுடன் நிலைபெற்றிருப்பதென்பது இலகுவான ஒன்றா என்ன? நிச்சயம் இல்லை!  

இவ்விடத்தில் நாம் பிறிதொரு கருத்தையும் புரிந்துகொள்ள கடமைப்பட்டுள்ளோம். சில நேரங்களில், சில மக்களிடம் 'தாய்' அல்லது 'தந்தை' எனும் இரு பதங்களைப் பற்றிய மிகவும் எளிமையான புரிதலே காணக்கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிச் சிந்திப்பதென்பது இவர்களைப் பொறுத்தவரை மிகவும் மேம்போக்கான ஒன்றாக இருக்கலாம். ஆனால், நிஜ உலகச் சூழமைவில், ஒரு தாயாகவோ அல்லது தந்தையாகவோ (பொருப்புணர்வுடன் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு) செயல்படுவதென்பது - அதுவும் இஸ்லாமிய விழுமியங்களின் அடிப்படையில் கொள்கைகளை பற்றிப் பிடித்துக் கொண்டு செயல்படுவதென்பது - மிகக் கடினமான ஒன்று.

ஏனெனில், இன்றைய உலகம் சிக்கல்கள், கடினங்கள், இன்னல்கள், துயரங்கள் முதலானவற்றால் நிரம்பப்பெற்றவொரு களமாக மாறிக்கொண்டு வருகிறது. வாழ்க்கைக் கூறுகளின் பரிமாணங்கள் பன்முகமாக இருந்த காலங்கள் கடந்துசென்று, அனைத்துமே இப்பொழுது ஒரே பரிமாணத்தில், ஒரே தளத்தை நோக்கியே குவியமடைகின்றன. நாம் அணிந்துகொண்டுள்ள உடைகளை இவ்வாறு (குறிப்பிட்டவொரு கலாச்சார ஏகபோகத்தைப் பறைசாற்றும் உடையாக) அணிந்துகொள்வது என்பதில் துவங்கி, எது ஒன்றும் 'இவ்வாறு தான் உருப்பெறும்' என்பதை ஐம்பது வருடங்களுக்கு முன்னர் உங்களால் கற்பனை செய்திருக்க முடியுமா? கண்டிப்பாக முடிந்திருக்காது. இதன் காரணமாகவே, நாம் கீழ்க்கண்ட இறை வசனத்தை இந்தச் சூழமைவில் வைத்து விளங்கிக்கொள்ள முற்பட வேண்டும்.

".........நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் பற்றுறுதிகொண்டு, உங்கள் பொருள்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் (அதீத முயற்சியுடன்) போராடுங்கள் (ஜிஹாத் செய்யுங்கள்)........"
(அல் குர்ஆன் 61:11)

"யுஜாஹிதூன" என்றால் என்ன? உங்கள் "அம்வால்"-ஐயும் "அன்ஃபுஸ்"-ஐயும் கொண்டு என்பது பொருள். அதாவது, இங்கே போராட்டம் என்பது உங்களிடமுள்ள பணம், பொருளாதார வலிமை, சொத்துசுகம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதே. 'உங்கள் ஆத்மாவினூடாக' (வ அன்ஃபுசிக்கும்) என்றால் என்ன? நீங்கள் சிலவற்றைக் கொடுக்க வேண்டும். அல்லாஹ்வோடு இருக்க வேண்டும் அல்லது அவனுடைய பாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டும் எனில், நீங்கள் சிலவற்றைக் கொடுக்க வேண்டும். வாழ்வின் நோக்கம் என்பது அவனிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும் எனும் அதே நேரத்தில், அவனுக்காக மனமுவந்து கொடுக்கவும் முன்வர வேண்டும். நமது மேற்குலகைப் பொறுத்தவரை, இம்மாதிரியான தியாகம் என்பது சில நேரங்களிலே அமெரிக்கக் கனவைவிட்டும் கணிசமான அளவு சேய்மையிலிருக்கிறது. உங்களுக்கு (நிறைவாக) கிடைக்கவேண்டும்; நீங்கள் அதிகமதிகம் ஈட்டிக்கொள்ள வேண்டும்; ஆனால் கொடுக்கக் கூடாது. எதுவும் உங்களைவிட்டுச் சென்றுவிடக் கூடாது.

நம் அனைவருக்குமான மிக முக்கியத் தேவைகளாக இறுதியில் நான் மூன்று அம்சங்களை இவற்றுடன் இணைத்துக் கூற விரும்புகிறேன். வாழ்வின் நோக்கத்தைப் பொறுத்தவரை, மனிதனுடைய அதிமுக்கிய அடிப்படைத் தேவைகள் என நாம் கருத்தில்கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன: (இறை) நம்பிக்கையை எவ்வாறு பேணிக்கொள்வது? அறிவை (இல்மை) எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது?

நீங்கள் ஓர் பகீரதப் பிரயத்தனத்தில் நிச்சயம் உங்களை ஈடுபடுத்தியாக வேண்டும். உங்கள் (இறை) நம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டு, அதனுடன் சேர்த்து அறிவையும் தேடிக்கொள்வதில் போராட்டம் ஓர் இன்றியமையாத தேவை. நீங்கள் எங்கிருந்த போதிலும், இதுவே உங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாக அமைந்திருக்க வேண்டும். 

அடுத்ததாக, உங்கள் வாழ்க்கைப் போக்கைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி? நன்கு அறிந்துகொள்ளுங்கள், இம்மாதிரியான ஒருங்குதிரள் பலவற்றில் நாம் கலந்துகொள்ளலாம். ஆனால், இப்பூவுலகில் உங்களைவிட அதிகாமாக, அல்லாஹ்வைத் தவிர, வேறு யாருக்கும் உங்கள் (இறை) நம்பிக்கையில் நீங்கள் எவற்றைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது தெரியாது. நீங்கள் எவ்வெவற்றை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும், எந்தெந்த காரியங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். 

நமது சுற்றாடலில் பிரசன்னமாகியிருக்கும் மக்களுக்கு அத்தகைய விடயங்களை காண்பித்துக்கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்; என்றால் என்ன? எந்தெந்த விடயத்தில் நீங்கள் மற்றவர்களுக்கோர் உதாரணமாக, சாட்சியாகத் திகழ வேண்டும் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். இதனை விளக்குவதற்கென்று உங்களுக்கோர் முஃப்தி தேவையில்லை. அவ்வாறு சாட்சி பகர வேண்டியவற்றை விளக்குவதற்கென்று உங்களுக்கு ஒருவர் தேவைப்பட்டால், அதுவே (உங்களுக்கெதிரான) ஒரு சாட்சிதான்!

இதன் காரணமாகவே நீங்கள் உங்களிடமிருந்து துவங்க வேண்டும். உங்களை(ப்பற்றி) நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். ஏனெனில், இதுதான் எல்லாவற்றுக்கும் ஆரம்ப நிலை. அதன் பின்னர், உங்கள் தரநிலையை, படித்தரத்தைப் பொருத்து அதன்மீது கல்வியறிவைக் (இல்மை) கட்டமைக்க முயற்சி செய்யுங்கள்.

இரண்டாவது முக்கிய அம்சம், நீங்கள் இம்மாநாட்டிற்கு வருகை புரிவதெல்லாம் ஏதோவொரு இலக்கை அடைந்துகொள்ள விரும்பியோ அல்லது உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள நாடியோதான், எனும் பட்சத்தில் இது நம்முடைய வாழ்க்கை இலட்சியத்திற்குத் தேவைப்படும் ஓர் அறிவுறுத்தல். வாழ்வின் நோக்கமானது, இத்தகைய அறிவுறுத்தல்களைத் தக்க வைத்துக்கொண்டு விழிப்புடன் செயல்பட முனைவதே. "ஹஃப்ளா" எனும் அரபிச்சொல்லுக்கு, (அல்லாஹ்வுடைய) அத்தாட்சிகள் குறித்து அலட்சியமாக இருப்பது அல்லது அவ்வத்தாட்சிகளை மறந்திருப்பது என்பது பொருள். "ஹஃப்ளா" எனும் பதத்திற்கான எதிர்ச்சொல், அனைத்தையும் (அல்லாஹ்வுடைய) அத்தாட்சிகளாக, நினைவுறுத்தல்களாக, நினைவுறுத்தலுக்கு இட்டுச்செல்லும் வாய்க்காலாகக் கருதிக்கொள்வது. ஆக, இதுவும் உங்கள் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு வழிமுறையே. இதனைப் பின்தொடர முயல்வது முக்கியமானதும்கூட.

மூன்றாவது அம்சம், குறிப்பாக (அமெரிக்கா போன்ற) இம்மாதிரியான நாடுகளில் வாழும் உங்களுக்கு, சில விடயங்கள் இங்கே தவிர்க்கவியலாததும், முக்கியத்துவம் வாய்ந்ததுமாக அமைந்திருக்கின்றன. அல்லாஹ் (சுப்ஹானா), நபி (ஸல்) அவர்களைத் தூதுச் செய்தியுடன் அனுப்புகிறான்; நபியவர்கள் (ஸல்) அலாதியானவொரு தூதுச் செய்தியுடன் வருகிறார்கள். அவர்தான் அல்லாஹ்வின் தூதர், 'ரஸூல்!'. இந்த ரஸூல் தூதுச் செய்தியுடன் வருகிறார். மேலும், அவரது நெடிய கால போராட்ட வாழ்வை நீங்கள் பகுப்பாய்வு செய்வீர்களானால், சுவாரஸ்யமும் ஆச்சரியமும் ததும்பும் ஒன்றாகவே சில நேரங்களில் அது காட்சியளிக்கிறது. அவர் ஒரு செய்தியுடன் வந்தார்; எனினும், வாழ்வின் பெரும்பாலான தருணங்களை அவர் மக்களின் கருத்துகளைச் செவியுறுவதிலேயே செலவிட்டார். அவர் அதிகமாக கவனித்தார்; செவியேற்றார்; (பிறருடைய வாதங்களை) செவிதாழ்த்திக் கேட்டார்; தூதுச் செய்தியை எத்திவைத்து மக்களை கவனித்தார்; அவர்களைச் செவியுற்றார்.

ஆக, இச்சமூகத்தின் முஸ்லிம்களாகிய நாம், இவ்விடத்தில் ஒன்றை ஆழமாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். நம் இளைய தலைமுறையாக இருந்தாலும் சரி, பிற மதக் கொள்கைகள், நம்பிக்கைகளின் மக்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய கருத்துகளை நாம் செவியேற்க வேண்டும்; அவர்களை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். நம்மிடமிருந்தும், நமது சுற்றத்தாரிடமிருந்தும் நாம் கவனித்துக் கேட்டுக்கொண்டிருப்பவைகள், அவர்களுடைய அறிவின் படித்தரம் ஆகியவற்றின் ஒளியிலேயே இத்தூதுச் செய்தியை அவர்களிடம் நாம் எத்திவைக்க வேண்டும். 'கவனிப்பு' (Listening) என்பதோர் அதிமுக்கியத் தேவை. நபிகளார் (ஸல்), தாம் செவியேற்று உட்கிரகித்துக்கொண்டவற்றிற்கு ஏற்ப தாம் கூற விளையும் விடயங்களின் முறைமைகளை மாற்றி அமைத்துக்கொள்வார்கள். ஆக, நபிகளாரின் இவ்வழிமுறை நமக்கோர் இன்றியமையாத தேவை. அதுபோன்றுதான், ஞானத்தை முயற்சியுடன் தேடிச் செல்லுதலும்!

கிறிஸ்தவத்துக்கு (வரலாற்றின் போக்கிலே) என்ன நேரிட்டது என்பதுகுறித்த கலாநிதி யாசர் ஃகாதியின் கருத்துகளை நான் செவியுற்றேன். ஆனால், கற்பனை வளம் இல்லாத, அபிவிருத்தியைத் தடைசெய்கிற இம்மாதிரியான சமூகத்தில் நாம் வாழும்போது, நம்மை நாமே உற்று நோக்குவதும்கூட ஞானத்தை நாடிச் செல்வதற்கான ஒரு முயற்சிதான். இது, இன்றியமையாதவொரு தேவையும்கூட. அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு நடந்தேறிக்கொண்டிருப்பது மிகவும் வஞ்சனையான, ஆபத்தான ஒன்று. கிறிஸ்தவத்துக்கு ஏற்பட்ட நிலைமைக்கு காரணமாக அமைந்த அநேக கீழறுப்புக் கூறுகளுடைய செல்தடங்களின் பின்னணியில் முனைப்புடன் தொழிற்பட்ட அழிவிற்கிட்டுச் செல்லும் அதே மிகப்பெரும் அடையாளங்களையே நாமும் இன்று பின்பற்றுகிறோம்.

உதாரணமாக, நம்மத்தியில் புழக்கத்திலுள்ள - பின்னடைவிற்கு வழிகோலும் - முக்கியக் கூறுகளுள் முதன்மையானது: அர்த்தங்களை மறந்து வெறுமனே விதிமுறைகளைக்கொண்டும், சட்டதிட்டங்களைக்கொண்டும் மனத்தை நிரப்பிவைத்தல். பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பப் புள்ளியே இதுதான். ஹராம்! ஹராம்! ஹராம்! விதிமுறை! விதிமுறை! விதிமுறை! அது ஹராம், இது ஹராம்!! இம்மாதிரியான குறுக்கப்பட்ட 'பாதுகாப்பு' மனப்பாங்குடனேயே நீங்கள் தொழிற்பட்டுக்கொண்டிருந்தால், முடிவில் அனைத்தையுமே இழக்க முற்படுவீர்கள். ஏனெனில், இஸ்லாம் என்பது வெறுமனே சட்டதிட்டம் அல்லது விதிமுறை சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. இஸ்லாம் (எனும் வாழ்க்கை வழிமுறைத் திட்டம்) முதலில் அர்த்தங்களினூடாக உங்கள் உள்ளத்துடன் ஊடாடுகின்றது. இச்செயல்முறையின் நீட்சியாக, விதிமுறைகள் அல்லது சட்டதிட்டங்களை காலக்கிரமத்தில் நீங்கள் - இயல்பாக - புரிந்துகொள்வீர்கள். இத்தகைய வரம்புகளை அறிந்துகொள்ளாமல் உங்களால் எத்திசையிலும் பயணிக்க முடியாது. இது ஒன்று.

அடுத்ததாக, நாம் மதத்தை நோக்கி மீளும் முறை அல்லது மதத்தை புனருத்தாரணம் செய்துகொள்ளும் விதம். அது ஆத்மரீதியாக அல்லாமல் சில நேரங்களில், மிதமிஞ்சிய மனக்கிளர்ச்சி அல்லது உணர்ச்சிவயத்தின் வெளிப்பாடகவே அமைந்திருக்கிறது. இது ஆபத்தானது! அபிவிருத்திக்கு இடையீடு ஏற்படுத்தும் இச்சமூகத்தில் (மேற்கத்திய சமூகத்தில்) அரங்கேறிக்கொண்டிருப்பவற்றைச் சற்றுப் பார்வையிடுங்கள். பெரும்திரளான மக்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு கிறிஸ்தவத்தை நோக்கி விரைந்தவண்ணம் உள்ளனர். இத்தகைய நிகழ்வுகள் குறித்து கர்மசிரத்தையுடன் இருந்துகொள்ளுங்கள்! உணர்ச்சிவயப்படுதலுக்கும் மெய்யான ஆன்மீக உணர்வுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடு யாதெனில், உணர்ச்சிவயப்படுதல் மிகவும் எளிது; அதனை மிக எளிதில் வெளிக்காட்டிவிடலாம். ஆனால், ஆன்மீக மெய்யுணர்வு என்பது கடின உழைப்பு; அது உங்களை நீங்களே பயிற்றுவிப்பது.

இது, நம் வாழ்க்கைப் பயணத்துக்குத் தேவைப்படும் ஓர் அதிமுக்கிய அறிவுறுத்தல். நாம் நோன்பு நோற்றுக்கொள்ளும் விதம் அல்லது தொழுகையைப் பேணிக்கொள்ளும் முறை சில நேரங்களில் உணர்ச்சிக் கொந்தளிப்பினால் ஏற்படும் கட்டுமீறிய ஈர்ப்பாக இருக்கிறதே தவிர, ஆத்மரீதியான பற்றுறுதியின் வெளிப்பாடாக இருக்கவில்லை. இத்தகைய விடயங்களில் அதீத கவனம் அவசியம்; அவ்வாறே இவற்றைப் பூரண பிரக்ஞையுடனும் அணுகிடுங்கள்.

இங்கே பிரஸ்தாபிக்கவேண்டிய பிறிதொரு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், கல்விக்கூடம் அல்லது சிந்தனா பள்ளியைவிட (நடைஉடை) பாவனைகளே இங்கு அதிகமதிகம் புழக்கத்திலிருக்கின்றன. இஸ்லாம் என்பது ஓர் கல்விக்கூடம்; அது பாவனைக்கான மதம் அல்ல. நான் இன்றைய நாள்களில் சில அடையாளங்களை (முஸ்லிம்களிடம்) காண்கிறேன். நாம் ரமழானை கையாளுகிற விதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒப்பீட்டளவிலே அது, கிறிஸ்துமஸை சில மக்கள் கையாளுகிற விதத்தை விட்டும் வெகு சேய்மையில் இல்லை. இது ஓர் குடும்ப கலாச்சாரமாகிவிட்டது. உங்களுக்குத் தெரியுமா, இஸ்லாத்தைப் பொறுத்தவரை உலகெங்கிலுமுள்ள எண்பது விழுக்காடு மக்கள் நோன்பு நோற்பவர்களாக உள்ளனர்; எனில், இது ஒரு சாதகமான அம்சம்தான். இருப்பினும், இந்த விடயத்தில் அதீத தன்னுணர்வு அவசியம்! ரமழான் என்பது கடுமையான போராட்டத்துக்கும், முயற்சிக்கும் உரிய மாதம். அது, உணவுகளை கபளீகரம் செய்யும் மாதம் அல்ல; அதிகமான சிந்தனைப் பிரயோகம், குறைவான துயில் ஆகியவற்றுக்குரிய மாதம்.

ஆக, பிற மதங்களின் வரலாற்றைக் குறித்து நமக்கு அதீத கவனம் தேவை. ஏனெனில், குர்ஆனில் அல்லாஹ் "உங்களுக்கு முன்னர் சென்றுபோன மக்களுக்கு ஏற்பட்ட முடிவுகளைக் குறித்து மிகக் கவனமாக இருந்துகொள்ளுங்கள்" என்பதாக எச்சரிக்கின்றான். நபி (ஸல்) அவர்களும் துல்லியமாக இதனையே வலியுறுத்துகிறார்கள். ஆக, ஞானத்தின் தேட்டம் என்பது நமக்கோர் இன்றியமையாத தேவை, என்பதன் பொருள் மதத்தின் மெய்மைகளைப் பலமாகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள் என்பதே. இது மிகவும் முக்கியம்!

இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறியை நோக்கி நீங்கள் மீளுவதாக இருப்பின், கல்வியறிவு (knowledge), நினைவுகூறுதல் (Remembrance), கவனித்தல் (Listening), தொடர்புவைத்தல் (Communicating) ஆகியவற்றை நம்மிடமிருந்து அது வேண்டிநிற்கிறது. இந்தப் பேருண்மையை உங்கள் மனத்தில் நீங்கள் நிரந்தரமாகப் பதியவைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இஸ்லாத்தினுள் இருக்கும் அனைத்துக் கூறுகளும் மேற்படி விடயங்களை நோக்கியே நம்மை அழைக்கின்றன. ஆக, 'பணிவுடன் கூடிய நினைவுகூறுதல்' என்ற கருத்தாக்கம், நமக்கோர் மிக முக்கியமான அடிப்படைத் தேவை.

‘அடிப்படையை நோக்கி மீளுதல்’ குறித்து அறுதியாக சிலவற்றை உங்கள்முன் பகிர்ந்துகொள்ள முற்படுகிறேன். உங்களை கவனித்துக்கொள்ளுங்கள்; உங்களைச் சுழவும் அதீத கவனம் செலுத்துங்கள். உங்களை நீங்கள் பொறுப்பாக கவனித்துக்கொள்வதே அனைத்தினுடைய ஆரம்பப் புள்ளி என்பதோடு, பிறரிடமும் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். மக்களிடம் கவனம் செலுத்துங்கள்; அவர்கள் மீது அக்கரைகொண்டவர்களாக அவர்களுக்கு மத்தியிலே உங்களை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள்.

இது மிகவும் இலகுவானது. ஏனெனில், இங்கு இஸ்லாத்தை நோக்கிய மீளுதலுக்கென மக்களுக்குத் தேவைப்படுவதோ இலகுவான செய்திகளே.

"உங்கள் மனத்தினுள் இருப்பதென்னவோ, அதுவே உங்கள் செயல்பாட்டின் மூலமும் ஊர்ஜிதம் செய்யப்படும்."

அல்லாஹு ஆ'லம்.

No comments:

Post a Comment