Tuesday, June 7, 2016

தீவிரவாதம்: குற்றச்சாட்டும் உண்மையும் - பாகம்: 1

தீவிரவாதம்: குற்றச்சாட்டும் உண்மையும்

பாகம்: 1
-     கலாநிதி யூஸுஃப் அல்-கர்ளாவி


- தமிழில்: அ. ஜ. முஹம்மது ஜனீர்



சரிவரப் புரிந்துகொள்ளப்படாத ஒன்றின் மீது தீர்ப்பு வழங்க முடியாதெனக் கூறுவர் தர்க்கவியலாளர்கள். ஏனெனில் அறியப்படாதவையும் வரையறுக்கப்படாதவையும் தீர்ப்புகளுக்கு உட்படாதவை. எனவே மத விஷயங்களில் தீவிரவாதம் என்பதைப் போற்றுவதற்கு அல்லது தூற்றுவதற்கு முன் தீவிரவாதம் என்றால் என்ன என்பதை நாம் வரையறுத்து நிர்ணயம் செய்து கொள்ள வேண்டியது அவசியம். தீவிரவாதத்தின் யதார்த்த நிலையும், அதற்கே உரியனவான தன்மைகளும் அவ்வாறான நிர்ணயங்களை மேற்கொள்ள நமக்குத் துணை செய்கின்றன.
தீவிரவாதம் என்பது, மத்திய நிலையிலிருந்து அதிகமாகச் சேய்மைப்பட்டு நிற்பதைக் குறிக்கின்றது. அவ்வாறே மதம், சிந்தனை, நடைமுறை என்பனவற்றில் மிதமிஞ்சிய ஈடுபாட்டுடனான ஆர்வம் காட்டப் படுவதையும் அது குறிக்கின்றது. சேய்மைப்பட்டு, தீவிரவாதப் போக்கொன்றைக் கடைப்பிடிப்பதால் ஆகும் ஒரு முக்கிய விளைவு பாதுகாப்பற்றுப் போவதாகும். அதனைத் தொடர்ந்து விளைவன ஆபத்துகள். எனவேதான் இஸ்லாம் நம்பிக்கை, வணக்கங்கள், நடைமுறை, சட்ட திட்டங்கள் போன்றவற்றில் நடுநிலையான, நிதானமான தன்மையையே கையாளும்படி தூண்டுகிறது. இதுவே, இறைவனால் நேரான வழி (ஸிராத் அல்-முஸ்தகீம்) என வழங்கப்படுகின்றது. இறைவனின் கோபத்துக்கு உள்ளானவர்களும், வழி தவறிச் சென்றவர்களும் பின்பற்றக்கூடிய எல்லா வழிகளிலிருந்தும் தனியாகப் பிரிந்து காணும் வழியாகும் இது, மிதவாதம், நடுநிலை, நிதானம் என்பன இஸ்லாத்தின் பொதுவான பண்புகளாக மட்டுமின்றி, அடிப்படை அம்சங்களாகவே அமைந்துள்ளன.

குர்ஆன் கூறுகின்றது:

(நம்பிக்கையாளர்களே!) அவ்வாறே, (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான சமுதாயத்தினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு சாட்சிகளாக இருங்கள். (நம்முடைய) தூதர், உங்களுக்கு சாட்சியாக இருப்பார்."
(அல் குர்ஆன் 2:143)

ஆக, முஸ்லிம் சமூகமானது, நடுநிலையையும், நீதியையும் வற்புறுத்தும் ஒரு சமூகமாகவே அமைந்துள்ளது. நேர்வழியிலிருந்து பிறழ்ந்து செல்லும் அனைத்து அம்சங்களுக்கும் அது, இம்மையிலும் மறுமையிலும் சாட்சியாக விளங்குகிறது. இஸ்லாமிய மூலாதாரங்கள் அனைத்தும், முஸ்லிம்கள் நடுநிலையைக் கையாள வேண்டியதை வலியுறுத்துவதோடு, மிதமிஞ்சிய தன்மை (குலுவ்), ஆர்வமிகுதியுடைமை (தனதூஉ), வைராக்கியமிக்குடைமை (தஷ்தீத்), போன்ற தீவிரவாத அம்சங்கள் அனைத்தையும் நிராகரித்து எதிர்த்து நிற்பதையும் நாம் காணலாம். மூலாதாரங்களைச் சற்றே நெருங்கிக் காணும்போது மிதமிஞ்சிய தன்மையை இஸ்லாம் கண்டனம் செய்வதையும், அது குறித்து நம்மை எச்சரிப்பதையும் கவனிக்கலாம். அஹ்மது, அந்-நஸயீ, இப்னு மாஜா ஆகியோர் தமது சுனனில் அறிவித்துள்ள பின் வரும் ஹதீஸ் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்:

"மார்க்கத்தில் மிதமிஞ்சிய தன்மை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கு முன் சென்ற மக்கள், அவ்வாறான மிதமிஞ்சிய தன்மை காரணமாக அழிவுக்குள்ளானார்கள்."

முன்சென்ற மக்கள் என இங்கு கூறப்படுபவர்கள் பிற மதத்தவர்கள், குறிப்பாக, வேதம் அளிக்கப்பட்டோர். அவர்களிலும் குறிப்பாக, கிறிஸ்தவர்கள். இவர்களை விளிக்கும் குர்ஆன்:
"வேதத்தையுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையல்லாததைக் கூறி வரம்பு மீறாதீர்கள். அன்றி, இதற்கு முன்னர் (இவ்வாறு) வழி தவறிய மக்களின் விருப்பங்களையும் நீங்கள் பின்பற்றாதீர்கள். அவர்கள் அநேகரை வழிகெடுத்து விட்டதுடன் தாங்களும் நேர்வழியிலிருந்து விலகி விட்டனர், என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!"
(அல் குர்ஆன் 5:77)

என உரைக்கிறது. இதன் மூலம் அவர்களது முன்மாதிரிகளைப் பின்பற்றக்கூடாதென முஸ்லிம்கள் எச்சரிக்கப்படுகின்றனர். பிறர் இழைக்கும் தவறுகளிலிருந்து பாடங்கள் பயின்று கொள்ளும் ஒருவர் நிச்சயமாகவே நல்லதொரு வாழ்க்கை வாழக்கூடியவராயிருப்பார். அந்த ஹதீஸின் பின்னணியில் மற்றுமோர் அறிவுறுத்தலும் பொதிந்துள்ளது. மிதமிஞ்சிய தன்மையானது, பொருட்படுத்தப்படாத ஓர் அற்பமான செயலாகத் தோற்றம் பெற்றுப் பின்னர் நாம் அறியாமலேயே பெரும் தீங்கு இழைக்கும் ஒன்றாக உருப் பெற்றுவிடும் என்பதாகும் அது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது முஸ்தலிஃபாவை அடைந்ததும் தமக்காகச் சில கற்களைச் சேகரித்துத் தரும்படி இப்னு அப்பாஸிடம் கூறினார்கள். இப்னு அப்பாஸ் சிறிய கற்களைச் சேகரித்துக் கொடுத்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறிய அக்கற்களை அங்கீகரித்துக் கூறினார்கள்:

ஆம், இவைபோன்ற கற்களினால்........ மார்க்கத்தில் மிதமிஞ்சிய தன்மை குறித்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்." (1)

அளவில் பெரிய கற்களை பயன்படுத்துவதே சிறந்தது என நம்பும் அளவு முஸ்லிம்கள் ஆர்வம் மிகுந்தவர்களாய் ஆகிவிடக்கூடாது என்பதையும் இது தெளிவாகக் காட்டுகிறது. அவ்வாறான எண்ணங்கள், மெல்லமெல்ல அவர்களது வாழ்வினுள் மிதமிஞ்சிய தன்மை வேரூன்றி விடக் காரணமாய் அமைந்து விடுகின்றன. இமாம் இப்னு தைமிய்யாவின் அபிப்பிராயப்படி, மிதமிஞ்சிய தன்மை பற்றிய இந்த எச்சரிக்கையானது நம்பிக்கை, வணக்கங்கள், நடைமுறை வழக்கங்கள் முதலிய அனைத்துக்கும் ஏற்புடையதாகும். அவரது கருத்தில், ஏனைய சமூகத்தார் அனைவரையும் விட கிறிஸ்தவர்களே நம்பிக்கையிலும் நடைமுறையிலும் மிதமிஞ்சிய தன்மையுடையவர்களாக இருப்பதால் இறைவன், குர்ஆனில் அவர்களை எச்சரித்துள்ளான்:

"வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள்."
 
(அல் குர்ஆன் 4:171)

"மிதமிஞ்சிய நுணுக்கத்துடன் செயல்பட்டோர் அனைவரும் அழிவுக்கு ஆளானார்கள்." (2)

இறைத்தூதர் (ஸல்) இதனை மூன்று முறை கூறினார்கள். இங்கு குறிக்கப்பட்டோர் தமது சொல்லிலும் செயலிலும் வரம்பு மீறி, மிதமிஞ்சிய தன்மையினராக இருப்போரே என இமாம் நவவி கூறுகிறார். நாம் கண்ட இரண்டு ஹதீஸ்களும் மிதமிஞ்சிய தன்மை, அதிக ஆர்வம் என்பனவற்றின் விளைவு, இம்மை, மறுமை இரண்டிலுமான நட்டமே என்பதை அறிவுறுத்துகின்றன.

"இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: பெரும் சுமைகளை உங்கள் மீது ஏற்றிக் கொள்ளாதீர்கள்; நீங்கள் அழிந்து போவீர்கள். உங்களுக்கு முன் சென்ற மக்கள் தம்மீது அதிக சுமைகளை ஏற்றிக் கொண்டமையால் அழிந்து போனார்கள். அவர்களது எச்சங்கள் மதாலயங்களிலும் ஆசிரமங்களிலும் காணக்கிடக்கின்றன." (3)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மார்க்கத்தில் தீவிரத்தன்மையை கடைப்பிடிப்பதிலிருந்து தம்மைத் தவிர்தே வந்துள்ளனர். அத்தோடு தமது தோழர்களுள், இஸ்லாத்தின் நடுநிலையை மிஞ்சிய வகையில் அளவுக்கு மீறிய வழிபாடுகளில் ஈடுபட்டோரையும் துறவு மனப்பான்மையில் விருப்புற்றிருந்தோரையும் கண்டித்துள்ளார்கள். உடலின், ஆன்மாவின் தேவைகளைப் பொறுத்து இஸ்லாம் சமமான தன்மையொன்றை நிலைநிறுத்த முனைகிறது. தனது வாழ்க்கையை முழுமையானதொரு வாழ்க்கையாக வாழ்ந்து கொள்ள மனிதனுக்குள்ள உரிமை; மனிதனால் வணங்கப்பட வேண்டும் என்ற அவனைப் படைத்தவனான இறைவனுக்குள்ள உரிமை என்பனவற்றுக்கிடையிலான ஒரு சமநிலை அது. உலக வாழ்வை நியாயப்படுத்துவதும் அர்த்தமுள்ளதாக்குவதும் இதுவே.

இஸ்லாம் மனித ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வணக்கங்களில் சில ஒழுங்கு முறைகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் பயனாக மனித ஆன்மாவை ஆன்மீக, லெளகீக ரீதியிலும், தனிப்பட்ட, சமூக ரீதீயிலும் இஸ்லாம் உயர்த்தி வைத்து, சகோதரத்துவமும் கூட்டு மனப்பான்மையும் கொண்டதோர் ஒற்றுமையான சமூகத்தைக் கட்டியெழுப்ப முனைகிறது. அதுவும், கலாச்சாரங்களையும், நாகரீகங்களையும் நிறுவ மனிதனுக்குள்ள கடமைகளுக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடமையான தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ், என்பன தனிப்படவும், சமூகரீதியாகவும் ஒன்றுபட்டுள்ள வணக்க முறைகளாகும். இந்தக் கடமைகளை நிறைவேற்றும் போது ஒரு முஸ்லிம் பொது வாழ்விலிருந்து பிரிக்கப்பட்டவராகவோ, தனது சமூகத்திலிருந்தும் தனிமைபடுத்தப்பட்டவராகவோ ஆவதில்லை. மாறாக, அவரது உறவுகள் உணர்வுப்பூர்வமாகவும், செயல் ரீதியாகவும் சமூகத்துடன் மேலும் உறுதி பெறுகின்றன. அதனால் தான் இஸ்லாம் ஆசிரம வாழ்வைப் போதிக்கவில்லை. அவ்வாறான ஒரு போக்கு, சாதாரண வாழ்வின் அருள்களையும், நன்மையும் தூய்மையுமான அனைத்தையும் அனுபவித்துப் பயன் பெறுவதினின்றும் மனிதனைத் தடுத்து, அவனைத் தனிமைப்படுத்தி அவனுள் துறவு மனப்பான்மையை வள்ர்த்து விடுகின்றது. முழு உலகையும், சமய நெறிகளை அமல்படுத்துவதற்க்கான ஒரு களமாக, சமயத்துக்காகவே அமைக்கப்பட்டதாக இஸ்லாம் கொள்கின்றது. நேர்வழியின் அடிப்படையிலான நெறிமுறைகளையே மனதில் கொண்டு கடமையாற்றுகையில், இஸ்லாத்தைப் பொறுத்த மட்டில் தொழில் ஓர் வணக்கமாகவும், இறைபாதையிலான முயற்சியாகவும் (ஜிஹாத்) அமைந்து விடுகின்றது. இதன் காரணமாக, உலக நஷ்டங்களை முதலீடாக்கி ஆன்மீக நாட்டம் கொள்வதையோ, உடலின் தேவைகளை பொருட்படுத்தாமல், அதனைத் துன்புறுத்தி ஆன்மாவைத் தூய்மைபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதையோ இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. அவ்வாறான முறைகளை இஸ்லாம் கண்டிக்கிறது. ஆனால், ஏனைய மதங்களும், தத்துவங்களும் அவற்றையே நியதி செய்து போதித்து வருகின்றன. குர்ஆன் இஸ்லாமிய நிலைபாட்டை நன்கு தெளிவுபடுத்துகிறது:

"எங்கள் இறைவனே! எங்களுக்கு நீ இம்மையிலும் நன்மையளிப்பாயாக! மறுமையிலும் நன்மையளிப்பாயாக!"
(அல் குர்ஆன் 2:201)
பின்வரும் ஹதீஸிலும் இதுவே வலியுறுத்தப்படுகிறது:

"யா அல்லாஹ்! எனது நடவடிக்கைகளின் அரணாக விளங்கும் எனது மார்க்கத்தை நீ எனக்குச் சரிவர நிறுவித் தருவாயாக! எனது வாழ்க்கை தரிபட்டுள்ள இவ்வுலகத்தின் விவகாரங்களை எனக்கு நேர்படுத்தித் தருவாயாக! எனது மறுமை வாழ்வு தரிபட்டிருக்கும் மறுமையையும் எனக்கு நீ நேர்படுத்தித் தருவாயாக! எல்லாவிதமான தீங்குகளை விட்டும் என்னைப் பாதுகாத்து, நன்மைகளைப் பெருக்குவதற்குரிய ஒரு களமாக என் வாழ்வையும், அமைதியை விளைவிப்பதாக என் மரணத்தையும் ஆக்கி அருள்வாயாக!
(முஸ்லிம்)

இன்னும், 'உங்கள் மீது உங்கள் உடலுக்கும் சில உரிமைகள் இருக்கின்றன'(4)

மேலும், இறைவன் அருள் செய்துள்ள நன்மையும் தூய்மையான கருமங்கள், அலங்காரச் செயல் அல்லது பொருள், மகிழ்வை ஏற்படுத்தும் அழகு (ஸீனா) முதலியவற்றை ஒறுக்கும் மனப்பான்மையைக் குர்ஆன் கண்டிக்கிறது. மக்காவில் அருளப்பட்ட வசனங்களில் அல்லாஹ் கூறுகின்றான்:

"ஆதமுடைய மக்களே! தொழும் இடங்களிலெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள்; பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், அளவு கடந்து (வீண்) செலவு செய்வோரை நேசிப்பதில்லை. அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும், பரிசுத்தமான (மேலான) ஆகாரத்தையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்?
(அல் குர்ஆன் 7:31, 32)

மதீனாவில் அருளப்பட்ட ஒரு அத்தியாயத்தில், இது போலவே அல்லாஹ் கூறுகின்றான்:

"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கும் பரிசுத்தமானவைகளை, நீங்கள் ஆகாதவைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அன்றி நீங்கள் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் ஆகுமானவற்றையும், நல்லவற்றையும் புசியுங்கள். நீங்கள் யாரை விசுவாசித்திருக்கிறீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள்." 
(அல் குர்ஆன் 5:87, 88)

இந்த குர்ஆன் வசனங்கள் நன்மையும், தூய்மையானவற்றை அனுபவிக்கும் உண்மையான இஸ்லாமிய முறையையும், ஏனைய மதங்களில் காணப்படும் மிதமிஞ்சிய தன்மைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுவதையும் நம்பிக்கையாளர்களுக்கு நன்கு விளக்குகின்றன. நபித்தோழர்களுள் சிலர் தம்மை அலிகளாக்கிக் கொண்டு மதகுருமார் போல உலகில் திரிந்து வர முடிவு செய்த சந்தர்ப்பத்தின் போதுதான் இந்த இரு வசனங்களும் அருளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கிறார்:

"இறைத்தூதர் அவர்களிடம் வந்த ஒருவர் கூறினார்: இறைத்தூதரே! இறைச்சியை உட்கொள்ளும் போதெல்லாம், உடலுறவு கொள்ளும் வேட்கை எனக்கு அதிகரிக்கின்றது. எனவே நான் இறைச்சி உண்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளேன்."
(புகாரி)

இதன் காரணமாக அந்த வசனம் அருளப்பட்டது (புகாரி).

அனஸ் இப்னு மாலிக்(ரழி) அறிவிக்கிறார்:

"இறைத்தூதர் அவர்களது மனைவியரின் இல்லங்களுக்கு வந்த சில ஆண்கள், நபிகளாரின் வணக்கங்கள் குறித்து அறிந்து கொள்ள விரும்பினார்கள். அது குறித்து அவர்களுக்கு கூறப்பட்டதும்....தமது வணக்கங்கள் போதுமானவையல்ல என எண்ணிய அவர்களுள் ஒருவர் கூறினார்: 'நான் இரவுகள் முழுவதிலும் தொழுது வருவேன்.' மற்றொருவர் கூறினார்: 'நான் வருடம் முழுவதும் நோன்பு வைப்பேன்; அதனை ஒரு போதும் முடிக்க மாட்டேன்.' அவர்களிடம் வந்த இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: 'இறைவனின் பெயரால், நான் உங்களை விட அல்லாஹ்வை அஞ்சியவனாக, அவனை அடிபணிந்தவனாக இருக்கிறேன். இருந்தும் நான் நோன்பு வைக்கிறேன்; நோன்பை முடிக்கிறேன், நான் நித்திரை கொள்கிறேன். பெண்களை மணம் செய்கிறேன். எனது வழி முறையைப் பின்பற்றாதோர் என்னைச் சார்ந்தோரல்லர்."

மார்க்கம் பற்றி இறைத்தூதர் அவர்கள் கொண்டுள்ள தெளிவையும் அதன் அமலாக்கத்தையும் விளக்குவதாக அமைந்தது அவர்களின் வழிமுறை. அதாவது ஒரு மனிதன் தனது இறைவன் மீதும், தன்மீதும், தன் குடும்பத்தார் மீதும், தன்னைச் சார்ந்தோர் மீதும் தனக்குள்ள கடமைகளைச் சரிவர, வரம்பு மீறாது அளவுடன் நிதானமாகச் செய்வதாகும்.

1.   மதத் தீவிரவாதத்தின் குறைபாடுகள்:

தீவிரவாதம் வரம்புமீறிச் செல்லல் என்பன குறித்து இவ்வாறான எச்சரிக்கைகள் விடுக்கப்பட வேண்டிய காரணம், அவற்றுடன் இரண்டறக் கலந்து நிற்கும் குறைபாடுகளேயாகும், வரம்பு மீறிச் செல்வதால் ஏற்படும் முதலாவது குறைபாடு 'சாதரண மானிட இயல்பினால் தாங்கிக் கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ இயலாத அளவுக்குக் கருமங்களில் வெறுப்புணர்வு வளர்ந்து விடுவது.' மனதர்களுள் சிலர், குறுகியகாலத்திற்கு மிதமிஞ்சிய ஆர்வத்துடன், வரம்பு மீறும் நிலையினராகச் செயல்படக் கூடும். ஆனால் பெரும்பாலானவர்களால் அவ்வாறு செய்ய இயலாது. இறைவனின் கட்டளைகள் முழு மனித சமூகத்திற்குமானவை. சகிப்புத் தன்மை, பொறுமை இவற்றை கடைபிடிப்பதைச் சிறப்பியல்பாகக் கொண்ட, குறிப்பிட்ட ஒரு குழுவினர்க்கு மட்டும் உரித்தானவையல்ல அவை.
இதன் காரணமாகத்தான் இறைத்தூதர் அவர்கள் தமது நெருங்கிய தோழர்களில் ஒருவரான முஆத் (ரழி) மீது கோபம் கொண்டார்கள். ஒரு நாள் தொழுகையை முன் நின்று நடத்திய முஆத், அளவுக்கு அதிகமாக தொழுகையை நீட்டிச் சென்றார். அவரின் பின்னால் நின்று தொழுத ஒருவர் பொறுமையிழந்து இறைத்தூதர் அவர்களிடம் முறையிட்டார். இறைத்தூதர் அவர்கள் முஆதை விளித்து"

"முஆதே! மக்களை நீர் பரீட்சைக்கு உள்ளாக்குகின்றீரா?" என மூன்று முறை வினவினார்கள்
(புகாரி).

மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் அசாதாரண கோபத்துடன் ஓர் இமாமை(5) நோக்கி:

"உங்களில் சிலர், மக்கள் நல்ல கருமங்களை வெறுக்கும்படி செய்கிறீர்கள். எனவே உங்களில் யாரேனும் தொழுகையை முன் நின்று நடத்தும்போது அதனைச் சுருக்கி விரைவு படுத்துங்கள். ஏனெனில், அவர்களுள் முதியோரும், பலமில்லாதோரும், அவசரத் தேவைகள் கொண்டோரும் இருப்பர்.
(புகாரி).
என அறிவுறுத்தினார்கள்.

மேலும், யெமன் தேசத்துக்கு முஆத்(ரழி), அபுமூஸா (ரழி) ஆகியோரை அனுப்பும் போது இறைத்தூதர் அவர்கள் கூறிய அறிவுரையும் கவனிக்கப்பட வேண்டியதாகும்:

"(மார்க்க விவகாரங்களை) மக்களுக்கு இலகுவாக்கி வையுங்கள்; அவர்களைச் சிரமங்களுக்கு உள்ளாக்காதீர்கள், ஒருவரோடு ஒருவர் பணிவுடன் இருந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் முரண்படாதீர்கள். (6)

இதனையே உமர் இப்னு கத்தாப் (ரழி) வலியுறுத்திக் கூறினார்:

"தொழுகையை முன் நின்று நடத்தும்போது, அதனை நீட்டியமைத்து, மக்கள் தாம் செய்யும் கருமத்தை வெறுக்கச் செய்து, இறைவனின் அடியார்கள், அவன் மீது வெறுப்பை வளர்க்கும்படி செய்து விடாதீர்கள்"

'குறுகிய காலம் மட்டுமே நீடித்திறுக்க முடியுமாயிருப்பது', மிதமிஞ்சிச் செல்லும் தன்மையின் இரண்டாவது குறைபாடாகும். சகிப்புத் தன்மையையும், விடா முயற்சியையும் பொறுத்தமட்டில் மானிட இயல்பும், தன்மையும் இயற்கையாகவே மட்டுப்படுத்தப்பட்டவை. மனிதன் இலகுவாகவே சலிப்புக்கும் அலுப்புக்கும் உள்ளாகி விடுவதால் எந்த ஒரு மிதமிஞ்சிய வழக்கத்தையும் அவனால் நீண்ட காலத்துக்கு செயல்படுத்த முடியாது. சிலவேளை சிறிது காலம் அவ்வாறு அவன் பயிற்சி செய்து வரக்கூடுமாயினும் கூட, விரைவாகவே உடல், ஆன்மீக ரீதியாகச் சோர்வுற்றுக் களைத்துப் போய், தான் இயல்பாக செய்து வரக்கூடிய சில கருமங்களைக்கூட காலப்போக்கில் கைவிட்டு விடுவான். அல்லது மிதமிஞ்சிய ஊக்கமுடைமைக்கு முற்றிலும் மாறான வகையில் அலட்சியத்தையும், தளர்ச்சியையும் கைக்கொள்ளத் தொடங்குவான்.

கண்டிப்புக்கும், மிதமிஞ்சிய தன்மைக்கும் சிறப்புற்ற பலரை நான் பல்வேறு சந்தர்பங்களில் சந்தித்துள்ளேன். பின்னர் அவர்களுடன் தொடர்புகள் இழந்து சிறிது காலம் கழிந்ததும் அவர்கள் குறித்து விசாரித்துள்ளேன். ஒன்று, அவர்கள் முற்றிலும் மாற்றமுற்றவர்களாக எதிர் முனையை அடைந்திருந்தனர். அல்லது, பின்வரும் ஹதீஸில் குறிப்பிட்ட அவசரக்காரர்(7) போல அவர்கள் பின்னடைந்திருந்தார்கள்:

"அந்த அவசரக்காரர் தான் விரும்பிய தூரத்தைக் கடக்கவும் மாட்டார்; பயணத்துக்கான மிருகத்தைப் பாதுகாக்கவும் மாட்டார்." (8)

இந்நிலையிலான இறைத்தூதரின் அறிவுரை மற்றொரு ஹதீஸில் தெளிவாகிறது:

"உங்களால் இலகுவாகச் செய்யக் கூடியவற்றையே செய்யுங்கள்; (சமயக் கடமைகளைச் செய்வதில்) நீங்கள் களைப்பும் சலிப்பும் அடையும் வரையில் அல்லாஹ் (கூலி கொடுப்பதில்) களைப்படைய மாட்டான். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல், சிறிதாயிருந்தாலும் தொடர்பறாது செய்யப்பட்டு வருவதாகும்.”
(ஆயிஷா (ரழி), நூல்: புகாரி, முஸ்லிம், அபு தாவூத், அந்-நஸயீ).

இப்னு அப்பாஸ் (ரழி) கூறியதாக அல்-பஸ்ஸாஸ் அறிவிக்கிறார்:

"இறைத்தூதர் அவர்களது பணியாள் ஒருவர் பகல் வேளைகளை நோன்பு வைத்தும், இரவு வேளைகளை வணக்கங்களிலும் கழித்து வந்தார். இது குறித்து கூறப்பெற்ற வேளை, இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: 'செயல்கள் அனைத்திலும் ஓர் உச்சநிலையும் அதனைத் தொடர்ந்து ஒரு சோர்வுணர்வும் வரும். சோர்வுற்ற அந்நிலையில் என் வழிமுறையைப் பின்பற்றுபவர் நேர்வழியில் இருப்பார். சோர்வுற்ற அந்த நிலையில் எவர் பிறிதொரு வழியைப் பின்பற்றுகிறாரோ அவர், (நேர்வழியிலிருந்து) பிறழ்ந்து சென்றவராகி விடுவார்."

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) கூறினார்:

“வணக்கங்களின் மீதான ஈடுபாடு மிகுந்து களைத்துப் போய் விட்டோர் குறித்து இறைத்தூதர் அவர்களிடம் கூறப்பட்டபோது அவர்கள் கூறினார்கள்:
இதுவே இஸ்லாத்தின் கடுமையான தன்மையும், செயல்களின் உச்சமுமாகும். கடுமையான தன்மையின் காரணமாக, கருமங்களாற்றுவதில் ஓர் உச்ச்நிலை ஏற்படும். அந்த உச்சநிலையைத் தொடர்ந்து வருவது சோர்வுணர்வு. எவரொருவது சோர்வுற்ற நிலையிலான கருமங்கள், இறை வாக்குகளுக்கும் அவனது தூதரது வழிமுறைக்கும் இயைந்தவையாக அமைகின்றதோ அவர் நேர் வழிக்குள்ளானார். எவரொருவரது சோர்வுணர்வு அவரைப் பணிவின்மைக்கு இட்டுஸ் செல்கிறதோ அவர் அழிவுக்குள்ளானார்.” (9)

முஸ்லிம்கள் அனைவருக்கும் இறைத்தூதர் அவர்கள் விடுத்துள்ள அறிவுறுத்தல்கள் தான் எத்துணை உன்னதமானவை! வணக்கங்களைப் பெரும் சுமையாக ஆக்கிக் கொள்ளாமல், மிதமான ஒரு போக்கைக் கடைபிடிக்கும் படி அண்ணலார் கூறுகின்றார்கள். இதன் மூலம், சோர்வடைந்து, தாம் ஏற்கனவே செய்து வந்த கருமங்களையும் செய்யாமல் விடுவதிலிருந்தும் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடிகின்றது.

அண்ணலார் கூறினார்கள்:

"சிரமங்கள் இல்லாதது மார்க்கம். தம்மீதே சுமைகளை ஏற்றிக் கொள்வோர் அவற்றைத் தொடர்ந்து செய்து வர இயலாதோராகி விடுவர். (மிதமிஞ்சிய தன்மையையும் அலட்சியத்தையும் விடுத்து) சரியாக, (பூரணத்துவத்தை) நெருங்கி, (அன்றாடம் செய்துவரும் கருமங்களுக்கான கூலிகள் பெற்று) நல்வாழ்வு வாழ்வீர்களாக!
(அபு ஹுரைரா (ரழி), நூல்: புகாரி, நஸயீ)

'ஏனைய கடமைகளுக்கும், உரிமைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள்' மிதமிஞ்சிய தன்மையால் ஏற்படும் மூன்றாவது விளைவாகும்.

இது குறித்து ஓர் அறிஞர் கூறினார்:

"ஊதாரித்தனமான ஒவ்வொரு செய்கையும், இழந்து பட்ட ஓர் உரிமையுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையதாகவே இருக்கும்."

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), வணக்கங்களில் மூழ்கியவராக, மனைவியின் மீதான தமது கடமைகளை கூட அலட்சியம் செய்து வருவது குறித்து கூறப்பட்டபோது, இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: 'அப்துல்லாஹ்வே! நீர் ஒவ்வொரு தினமும் நோன்பு வைத்து இரவுகளை வணக்கங்களில் கழிக்கின்றீர் என என்னிடம் கூறப்பட்டது.' 'ஆம்! இறைத்தூதரே!' என்றார் அப்துல்லாஹ். 'அவ்வாறு செய்யாதீர். சில நாட்கள் நோன்பு வையும், சில நாட்கள் அதனை விட்டுவிடும். இரவுகளில் வணக்கங்கள் செய்யும். உறக்கத்தையும் மேற்கொள்ளும். உம்மீது உமது உடலுக்கு உரிமை உண்டு; உம்மீது உமது மனைவிக்கு உரிமை உண்டு; உம்மீது உமது விருந்தினருக்கு உரிமை உண்டு.'
(புகாரி)

நபித்தோழர்களுள் ஒருவரான ஸல்மான் பார்ஸீக்கும் அவரது நெருங்கிய நண்பர் அபூ தர்தாவுக்கும் இடையிலான சம்பவம் மற்றொரு சான்று. ஸல்மானுக்கும், அபூ தர்தாவுக்கும் இடையில் ஒரு பந்தத்துவத்தை நபிகளார் ஏற்படுத்தியிருந்தார்கள். ஒரு முறை, ஸல்மான் தன் நண்பரைக் காண அவரது வீட்டுக்குச் சென்றார். அங்கு, அபூ தர்தாவின் மனைவி உம்மு தர்தா, பழைய, கிழிந்த ஆடைகள் அணிந்தவராய்க் காணப்பட்டார். அவர் அவ்வாறு இருப்பதற்க்கான காரணம் என்னவென வினவினார் ஸல்மான். அம்மாது கூறினார்: "உமது சகோதரர் அபூ தர்தா இந்த உலகத்தில் விருப்பில்லாதவராக இருக்கின்றார்". அவ்வேளை அங்கு வந்த அபூ தர்தா, தன் நண்பருக்கென உணவு தயாரிக்கச் செய்து அதனை சாப்பிடும்படி கூறினார். அபூ தர்தாவும் தன்னுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றார் ஸல்மான். "நான் நோன்பு வைத்துள்ளேன்" என்றார் அபூ தர்தா. ஸல்மான் கூறினார்: "நீர் சாப்பிடாவிட்டால் நானும் சாப்பிடமாட்டேன்." அபூ தர்தா, ஸல்மானோடு அமர்ந்து உணவு உட்கொண்டார். இரவாகிவிட்டதும் அபூ தர்தா, தொழுகைக்காக எழுந்து நின்றார். எனினும் ஸல்மான், அவரை உறங்கும்படி வேண்டிக் கொண்டார். அபூ தர்தா உறங்கச் சென்றார். இடையில் மீண்டும் அபூ தர்தா எழுந்த வேளை, மீண்டும் ஸல்மான் அவரை படுக்கைக்குச் செல்லும்படி கூறினார். இரவு முடிவுறும் சந்தர்ப்பத்தில் ஸல்மான், அபூ தர்தாவை எழுப்ப, இருவருமாகத் தொழுகையை நிறைவேற்றினார்கள். அப்போது தன் நண்பருக்கு ஸல்மான் கூறினார்: உம்மீது உமது இறைவனுக்கு உரிமையுண்டு; உம்மீது உமது ஆன்மாவுக்கு உரிமையுண்டு; உம்மீது உமது குடும்பத்துக்கு உரிமையுண்டு. அவரவர்க்கு உரியனவற்றைக் கொடுத்து விடும். அபூ தர்தா இதனை இறைத்தூதர் அவர்களுக்குத் தெரியப்படுத்திய போது, அவர்கள் கூறினார்கள்: "ஸல்மான் உண்மையே பேசினார்."
(புகாரி, திர்மிதீ)

தொடர்ச்சி இரண்டாம் பாகத்தில்.......

குறிப்புகள்:
1.    இப்னு அப்பாஸின் ஆதாரத்துடன், இமாம் அஹ்மதின் முஸ்னதிலும், அந்-நஸயீ, இப்னு கதீர் ஆகியோரின் சுனனிலும், அல்-ஹகீமின் முஸ்தத்ரகிலும் அறிவிப்புச் செய்யப்பட்டது.
2.    அறிவிப்பு: முஸ்லிம், இந்த ஹதீஸை அபுதாவூத், அஹ்மது ஆகியோர் அறிவித்துள்ளதாகக் கூறிகிறார் ஸுயூதீ.
3.    அனஸ் இப்னு மாலிக்கின் ஆதாரத்துடன் அபூ யஅலா தனது முஸ்னதில் குறித்துள்ளார். அத்தியாயம் 57:27இன் - துறவித்தனத்தை நாம், அவர்கள் மீது கடமையாக விதிக்கவில்லை. எனினும், இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி, அவர்களே அதனை உண்டு பண்ணிக் கொண்டார்கள் - விரிவுரையில் இதனை மேற்கோள் காட்டியுள்ளார்.
4.    ஏற்கப்பட்டு அனைவராலும் அறிவிக்கப்பட்டது.
5.         இமாம்: மார்க்க, லெளகீக விவகாரங்களில் சமூகத்துக்கு தலைமைத்துவம் அளிப்பவர்.
6.    ஏற்கப்பட்டு அனைவராலும் அறிவிக்கப்பட்டது.
7.    அவசரக்காரர்: சக பிரயாணிகளின் தோழமையையும் இழந்ததுடன், தான் பயணம் செய்யும் மிருகத்தைக் களைப்புறவும் செய்து விட்டவர். 
8.    ஜாபிரின் ஆதாரம் மூலம் வலுவிலா ஓர் அறிவிப்பாளர் தொடர் கொண்டு அல்-பஸ்ஸாஸ் அறிவித்தது.
9.    அறிவிப்பு அஹ்மது, அபூ ஷாகிர் அங்கீகரித்தது.

·          “தீவிரவாதம்: குற்றச்சாட்டும் உண்மையும்” எனும் இத்தலைப்பு "நிராகரிப்புக்கும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் இஸ்லாமிய எழுச்சி" எனும் டாக்டர் யூசுப் அல்-கர்ளாவி எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment