Sunday, October 2, 2016

முஸ்லிம் பெண்களும் சமகாலச் சவால்களும்

முஸ்லிம் பெண்களும் சமகாலச் சவால்களும்

யூஸுஃப் அல்-கர்ளாவி

தமிழில்
எஸ்.ஹெச்.எம்.ஃபழீல் [நளீமி]
எம்..எம்.மன்ஸூர் [நளீமி]


முஸ்லிம் பெண்ணும் கல்வியும்

அறிவைத் தேடுவதைப் பொறுத்தவரை அது ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் கடமையாகும். இஸ்லாம் அறிவீனத்தைப் பெண் மீது திணிக்கவில்லை. ஒரு காலத்தில் அதனை அவள் மீது திணித்தவர்கள் தாம் பாமரர்களாக இருந்தார்கள். அக்காலத்தில் ஆண், பெண் என்ற மேறுபாடின்றி அறிவீனம் எங்கும் பரவலாகக் காணப்பட்டது. ஆனால் இருபாலரும் அறிவு பெறவேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

ஆண்கள் பெண்களிடம் சென்று கல்வி கற்ற காலமொன்று இருந்தது என்பதையும் நாம் மறுத்துவிடலாகாது. ஆயிஷா (ரழி), உம்மு ஸல்மா (ரழி) போன்ற பெண்களிடம் ஆண்கள் சென்று ஹதீஸ்களைக் கேட்டறிந்து கொண்டனர். மேலும், இஸ்லாம் தொடர்பான பல அம்சங்களை அவர்களிடம் கற்றனர். பெரிய நபித்தோழர்களும் தாபிஈன்களும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் சென்று கல்வி, கேள்விகளில் ஈடுபட்டனர். அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்த ஆயிஷா (ரழி), நபித்தோழர்கள் ஹதீஸ்களை அறிவிக்கும்போது தவறு செய்துவிட்டால் திருத்தியும் கொடுத்தார்கள். பிற்காலத்தில் அறிஞர்கள் இது சம்பந்தமாக பல நூல்களை எழுதி உள்ளார்கள்.

இமாம் ஸர்கஸீ அவர்கள் 'அல்இஜாபது லிமா இஸ்தத்ரகத்ஹீ ஆயிஷா அலஸ் ஸஹாபா' என்ற பெயரில் நூலொன்றைத் தொகுத்தார்கள். அதில் நபித்தோழர்களுக்கு ஆயிஷா (ரழி) அளித்த பதில்களும், நபித்தோழர்கள் ஹதீஸ்களை அறிவித்தபோது செய்த தவறுகளை ஆயிஷா (ரழி) தைரியமாக சுட்டிக்காட்டிய சந்தர்ப்பங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிற்காலப்பிரிவுகளில் முஸ்லிம் பெண் அறிஞர்கள் தமக்கென தனியான அறிவுச்சபைகளை (மஜ்லிஸ்) ஏற்படுத்தியிருந்தனர். ஸகீனா பின்த் ஹுஸைனிடம் மக்கள் கல்வி கற்பதற்காக வெளி இடங்களிலிருந்தும் வந்தனர். அவருக்குத் தனியானதொரு அறிவுச்சபை (மஜ்லிஸ்) இருந்தது. ஸகீனாவின் சபைக்கு இமாம் ஷாபிஈ (ரஹ்) கல்வி கற்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சில பெண்கள் ஹதீஸ்களை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆண்கள் அவர்களிடம் போய் ஹதீஸ்களைப் பெற்ற வரலாறுகள் உண்டு. ஸஹீஹுல் புஹாரி நூலுக்கு விளக்கம் தந்த ஹதீஸ் துறையில் முஸ்லிம்களது தலைவராக மதிக்கப்படும் அல் ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்), தாம் ஒரு பெண்ணிடம் ஹதீஸ்களைக் கற்றதாகக் குறிப்பிடுகிறார்கள்.

ஹனஃபி மத்ஹபின் இமாம்களில் ஒருவர் சட்டவியல் அபிப்பிராயம் (ஃபத்வா) வழங்கி வந்தார். அவரது மகளும் ஃபத்வா வழங்கியதாக அறிய முடிகிறது. தந்தையின் வீட்டிலிருந்து எழுத்து மூலம் வெளியாகும் ஃபத்வாவின் இறுதியில் தந்தையின் கையொப்பமும் அந்த சட்டவியல் அபிப்பிராயத்தை (ஃபத்வா) அவரது மகள் அங்கீகரித்திருப்பதகைக் காட்டும் வகையில் மகளின் கையொப்பமும் இடப்பட்டிருந்ததாக வரலாறு கூறுகிறது.

இத்தகைய மகளையே தந்தையார், தனது மாணவர்களில் ஒருவராக விளங்கிய, 'அறிஞர்களின் அரசர்' என அழைக்கப்பட்ட அலாவுத்தீன் காஸானீ அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

அலாவுத்தீன் காஸானீ 'பதாயிஉஸ் ஸனாயிஇ' எனும் பெயரில் ஹனஃபி மத்ஹபின் நூலொன்றை இயற்றினார். இந்த நூல் தனது ஆசானாகிய மாமனாரால் எழுதப்பட்ட 'துஹ்பதுல் ஃபுகஹா' என்ற நூலின் விரிவான வடிவமாகும். எனவே அறிஞர்கள், "மாமனாரின் நூலுக்கு (துஹ்பா) விளக்கம் எழுதி அவரது மகளையும் திருமணம் செய்து கொண்டார்" என்று கூறுவார்கள். திருமணத்திற்குப் பின் கணவர், மனைவி இருவரது கையொப்பங்களுடன் சட்டவியல் அபிப்பிராயங்கள் வெளியிடப்பட்டன.

மேலும், அபூஹய்யான் தனக்கு மூன்று பெண் ஆசிரியர்கள் இருந்ததாகக் கூறிவிட்டு, அவர்களைப் பற்றி சிலாகித்தும் கூறியுள்ளார்.

அன்று இவ்வாறுதான் பெண் அறிவுப்பணிகளை மேற்கொண்டு வந்தாள். எனினும், பிற்போக்கான வீழ்ச்சிக் காலப்பிரிவில் அவள் வாழ்க்கைக் களத்திலிருந்தே ஒதுக்கப்பட்டாள்.

இஸ்லாமியச் சட்டவழக்கில் 'ஸத்து தராஇஃ' என அழைக்கப்படும் 'தீமைக்கு இட்டுச் செல்லும் அனுமதிக்கப்பட்டவையும் தடை செய்யப்படலாம்' என்ற விதி முக்கியமான விதி என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

'ஸத்து தராஇஃ' என்ற விதியை அளவுக்கு மீறிப் பிரயோகித்த இஸ்லாமிய அறிஞர்கள், ஒரு காலப்பிரிவில் பெண்கள் கல்வி கற்பதற்குப் பாடசாலைக்குச் செல்வதற்கும், பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கும் எதிராக நின்றனர். சிலர் அவள் வாசிக்கக் கற்றுக் கொள்ளட்டும்; எழுதக் கற்றுக் கொள்ளக்கூடாது. ஏனெனில் எழுதக் கற்றுக்கொண்டால் காதல் கடிதங்கள் எழுதுதல் போன்ற தீமைக்கு அது வழிவகுக்க முடியும் என்றனர்.

ஆனால், இதற்கு எதிராக நின்ற சக்தி வென்றது. கல்வி கற்பது ஒரு தீமையல்ல; அது நிறைய நன்மைகளுக்கு வழிவகுக்கலாம் என்பதை எல்லோரும் உணர்ந்தனர்.

எனவே, முஸ்லிம் பெண் தனது இஸ்லாமிய ஆளுமையைப் பேணிக்கொள்ளவேண்டும் என்று நாம் கூறும்போது, அவளை நாம் வாழ்க்கைக் களத்திலிருந்து ஒதுக்கிவிட முயலுகிறோம் என எவரும் நினைத்துவிடக் கூடாது. அல்லது இதன் அர்த்தம் அவளது உரிமைகளில் சில பாதிக்கப்படும் என்பதுமல்ல. இதனை நாம் மேலே கூறிய எடுத்துக்காட்டுகளிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

பெண்ணானவள் கல்வி கற்க முடியும்; கற்கவும் வேண்டும். அதே நேரத்தில், தனது இயல்பின் வரையறைகளையும் தனது தொழிற்பாட்டின் வரையறைகளையும் கவனத்திற்கொண்டுதான் இதில் அவள் ஈடுபட வேண்டும்.

முஸ்லிம் பெண்ணும் தலைமைத்துவமும்

பெண்கள் மீதான ஆணின் தலைமைத்துவம் பற்றி விளக்கும் வசனம் அதனைக் குடும்ப வாழ்வுக்குரியதாக மட்டுமே குறிப்பிடுகின்றது. ஆணே குடும்பத்தின் தலைவன்; அதன் பொறுப்புதாரியும் அவனே. இதனை பின்வரும் இறைவசனம் விளக்குகின்றது:

"அல்லாஹ் ஒருவரைவிட ஒருவரை மேம்படுத்தியிருப்பதன் காரணமாகவும் ஆண்கள் தமது செல்வங்களிலிருந்து செலவளிப்பதன் காரணமாகவும் ஆண்கள் பெண்களின் நிர்வாகிகளாக உள்ளனர்".
(அல் குர்ஆன் 4:34)

ஆண்கள் தமது செல்வங்களிலிருந்து செலவளிப்பதன் காரணமாக என்ற பிரயோகம், குடும்பத் தலைமைத்துவமே இங்கு குறிக்கப்படுகிறது என்பதைத் தெளிவாக காட்டுகின்றது. இதுவே ஆண்களுக்குக் கொடுக்கப்பட்ட மேலதிகமான ஒரு படித்தரம் என பின்வரும் இறைவசனம் விளக்குகின்றது:

"கணவர்களுக்கு பெண்கள் மீதுள்ள உரிமைகளைப் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமைகளுண்டு. ஆயினும் பெண்களைவிட ஆண்களுக்கு ஒரு படித்தரம் கூடுதலாக உள்ளது".
(அல் குர்ஆன் 2:228)

குடும்ப அமைப்பினுள் தலைமைத்துவம் ஆணுக்கு வழங்கப்பட்டு இருப்பினும் பெண்களுக்கும் குடும்ப விவகாரங்களில் பங்குண்டு. அவளது கருத்தும் அங்கு பெறப்படவேண்டும். இக்கருத்தை அல் குர்ஆன் குழந்தைக்குப் பால்குடி மறக்கவைத்தல் விடயத்தில் சுட்டிக் காட்டியுள்ளது:

"அவர்கள் இருவரும் உடன்பாட்டோடு தமக்கிடையே செய்த ஆலோசனையின்படி பிள்ளைக்குப் பால்குடி மறக்க வைக்கத் தீர்மானிப்பார்களாயின் அது அவர்கள் மீது குற்றமாகாது".
(அல் குர்ஆன் 2:223)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"பெண்களிடம் அவர்களுடைய பெண் மக்களின் திருமண விடயம் குறித்து ஆலோசனை செய்யுங்கள்".
(முஸ்னத் அஹமது)

குடும்ப அமைப்புக்கு வெளியே குறிப்பிட்ட எல்லையினுள் ஆண்கள் சிலர்மீது பெண்கள் சிலர் தலைமை வகிப்பது கூடாது எனக் காட்டும் எந்தத் தடையும் வரவில்லை. ஆண்கள் மீதான பெண்களின் பொதுத் தலைமைத்துவம் கூடாது என விளக்கியே ஆதாரங்கள் வந்துள்ளன.

அபூபக்கர் (ரழி) அவர்கள் அறிவித்ததாக இமாம் புகாரி பின் வருமாறு பதிவு செய்துள்ள "தமது விவகாரங்களை ஒரு பெண்ணின் பொறுப்பில் விட்ட சமூகம் வெற்றி பெறாது" என்ற ஹதீஸ் முழுச் சமூகத்திற்குமான அரச தலைமைத்துவத்தையே குறிக்கின்றது. 'தமது விவகாரங்களை' என்ற பிரயோகம் இதனையே காட்டுகின்றது. இது வழிநடத்தப்படும் பொறுப்பை அல்லது தலைமைத்துவப் பொறுப்பைக் குறிக்கின்றது. ஆனாலும் சமூகத்தின் சில விவகாரங்களில் அவளுக்குத் தலைமைத்துவம் வகிப்பதற்கு இடமிருக்கிறது.

சட்டவியல் அபிப்பிராயம் (ஃபத்வா), இஜ்திஹாத், ஹதீஸ்துறை, நிர்வாகத்துறை முதலியவற்றில் அவளால் தலைமைத்துவப் பொறுப்பு வகிக்க முடியும். இத்துறைகளில் பெண் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்க முடியுமென்பது ஒருமித்த கருத்து (இஜ்மா) ஆகும். இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் பெண்கள் இப்பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள்.

இமாம் அபூஹனீஃபா பெண், சாட்சியம் சொல்லக்கூடிய பகுதிகளில் அதாவது குற்றவியல் பகுதிகள் அல்லாதவற்றில் நீதிபதியாக இருக்கவும் முடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள். இமாம் இப்னு கையும் 'துருகுல் ஹகமிய்யா' என்ற தமது நூலில் "நபித் தோழர்கள், தாபிஈன்களைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் குற்றவியல் பகுதிகளிலும் (கொலை, விபச்சாரம், குடி, களவு போன்றவை) பெண்களின் சாட்சியம் அனுமதிக்கப்படும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர்" எனக் குறிப்பிடுகின்றார்.

இந்தக் கருத்தைப் பின்பற்றியே இமாம் தபரி பொதுவாக பெண் அனைத்துப் பகுதிக்குமான நீதிபதியாக வரமுடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார். நீதிபதிப் பதவியை பெண் வகிக்கக்கூடாது எனத் தடுக்கும் எந்தத் தெளிவான ஆதாரமும் காணப்படவில்லை என்பதையே இது காட்டுகின்றது. அவ்வாறு காணப்படின் இமாம் இப்னு ஹஸ்ம் [1] அதனைப் பற்றிப் பிடித்துக் கொண்டு வழமை போன்று அதில் முழுமையாக நிலைத்து நின்று அதற்காக மிகக் கடுமையாக வாதாடி இருப்பார்.

மேலே குறிப்பிட்ட ஹதீஸ், சமூகத்தின் பொதுத் தலைமைத்துவத்தையே குறிக்கின்றது. இக்கருத்தை ஹதீஸின் பின்னணிக் காரணங்களை ஆராயும்போது புரிந்துகொள்ள முடியும். பாரசீக மக்கள் தமது பேரரசர் இறந்தபோது அவரது மகள் 'போரானை' பேரரசியாக நியமித்தனர். முழுப் பாரசீகத்தை ஆளும் அறிவோ, தகுதியோ அப்பெண்ணுக்கு இருக்கவில்லை. இச்சந்தர்ப்பத்தில்தான் இறைத்தூதர் அவர்கள் மேற்குறிப்பிட்ட கருத்தைக் கூறினார்கள்.

எனவே இதுவரை ஆராய்ந்த விடயங்களிலிருந்து ஒரு பெண் அமைச்சராகவோ, நீதிபதியாகவோ அல்லது கண்காணிப்பாளராகவோ இருக்க முடியும் என்பது தெளிவு.

இந்த வகையில் தான் உமரின் ஆட்சிக்காலத்தில் அப்துல்லாஹ் அல் அதவியாவின் மகள் ஷிபா என்ற பெண் மதினா சந்தைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.

முன்பு காணப்படாத எத்தனையோ பணிகளில் பெண்கள் ஈடுபடுவதற்கு இப்போது நாம் அனுமதிக்கின்றோம். பெண்களுக்கென தனியான பாடசாலைகளையும், கல்லூரிகளையும் அமைக்கின்றோம். இலட்சக்கணக்கான பெண்கள் அவற்றில் படிக்கின்றனர். ஆசிரியைகளாக, கணக்காளர்களாக, நிர்வாகிகளாக, மருத்துவர்களாக அவர்கள் பட்டம் பெற்று வெளியேறிச் செல்கின்றனர். ஆண்கள் பலரைக் கொண்ட பல நிறுவனங்களில் பெண்கள் நிர்வாகிகளாகவும் உள்ளனர். சிலவேளை அப்பெண்ணின் கணவர்கூட அவளுக்குக் கீழ் வேலை செய்வதைக் காண முடியும். வீட்டுக்கு அவர் திரும்பும் போது அவள் கணவரின் தலைமைக்குக் கட்டுப்பட வேண்டியவளாகின்றாள்.

முஸ்லிம் பெண்ணும் மேற்கு நாகரிகமும்

நாளைய முஸ்லிம் பெண், தனது மார்க்கமே தனக்கு விடிவைத்தரும் என்பதில் அசையாத நம்பிக்கை வைப்பாள் என்று நினைக்கிறேன். தற்போது அவள் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மேற்கத்திய நாகரிகத்தை அவள் நிராகரிப்பாள் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. காரணம், மேற்குலக நாகரிகத்தின் சொந்தக்காரர்களே அதனை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அது தொடர்ந்து வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்களே கூறுகிறார்கள்.

அவர்கள் ஏன் அந்த நாகரிகத்தை விமர்சிக்கிறார்கள்? காரணம், வெளிப்படையாக நோக்கும்போது அது உச்சாணியைத் தொட்டு விட்டதாகத் தோன்றினாலும், ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினாலும், சந்திரனுக்குச் சென்று சந்திரனில் கால்வைத்து விட்டாலும் ஒழுக்க விழுமியங்களிலும் மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள். மனநிறைவு தரும் அளவிற்கு இந்தத் துறை மேற்குலகில் வளர்ச்சி காணவில்லை. எனவே, அங்கு மனிதன் இன்றும் கூட சஞ்சலத்துடனும் மனப்புழுக்கத்துடனுமே வாழ்ந்து வருகிறான்.

ஆக, மனிதாபிமான நடவடிக்கைகளில் அவர்கள் மிகவும் பலவீனமான கட்டத்திலேயே இருக்கிறார்கள். தந்தைக்கும் பிள்ளைக்குமான தொடர்பு, தாய்க்கும் பிள்ளைக்குமான தொடர்பு, அயலவர்களுடன் கொள்ளும் உறவு என்பன மேற்குலகில் மிகப்பலவீனம் அடைந்துள்ளன. மேற்குலக நடப்புகள் தொடர்பாக வெளியிடப்படும் அறிக்கைகளையும், புத்தகங்களையும் வாசிக்கும்போது ஆச்சரியப்படும்படியான தகவல்களைக் காணமுடிகிறது. அங்குள்ள ஒரு பெண் இரண்டாவது குழந்தையொன்றைப் பெற்றெடுப்பதைவிட வாகனமொன்றை வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அங்கு மகளானவள் தனக்கென ஒரு தொழிலைத் தேடுகிறாள். மகனும் அவ்வாறே செய்கிறான். தாய் பற்றியோ தந்தை பற்றியோ எந்தக் கரிசனையும் அவர்களுக்கில்லை. சிலவேளை அவர்கள் ஒரே வீட்டில் வசிப்பதுண்டு. சிலசமயம் தாய் தந்தையர் ஒரு இடத்திலும் பிள்ளைகள் வேறு ஒரு இடத்திலும் தொடர்புகள் இன்றி வசிக்கும் வழக்கமும் உண்டு. இப்படியான சந்தர்ப்பங்களில் தாயைப் பார்ப்பதற்கு வருடத்திற்கு ஒரு தடவையே மகன் போவான். அத்தகைய நாளுக்கு மேற்குலகத்தார் 'தாயின் பெருநாள் தினம்' என்று பெயர் வைத்துள்ளார்கள். அந்நாளில் மகன் தாய்க்குக் கொடுக்க அத்தர் (Perfume) பாட்டிலையோ அல்லது வேறு ஏதாவது அன்பளிப்புப் பொருளையோ எடுத்துச் செல்வது வழக்கம். மேற்குலகில் பெற்றோர் - பிள்ளைகள் தொடர்பு இவ்வளவுதான்.

அங்கு முதியோர் வாழ்க்கை மிக மோசமானதாக இருக்கிறது. தந்தை தனிமையில் வாடுகிறார். அவருடன் கூடிவாழ மனைவியுமில்லை, பிள்ளைகளுமில்லை. எனவே, அங்கு மக்கள் பரவலாக நாய்களை வளர்க்கிறார்கள். ஏன்? கூடிவாழ எவரும் இல்லாதபோது நாய்களுடனாவது வாழ முடியுமல்லவா?

மனிதன் பிறரை விரும்பும் இயல்புடனும் பிறரால் விரும்பப்படும் இயல்புடனும், தேவையுடனும் படைக்கப்பட்டிருக்கிறான். எனவே, அதற்காக சக மனிதர்கள் இல்லாதபோது அத்தகைய தேவையை மிருகங்கள் மூலம் பூர்த்தி செய்கின்றான்.

கடந்த கோடை காலத்தில் நான் அமெரிக்கா சென்றிருந்தபோது ஆச்சரியமான செய்தியொன்று காதுக்கு எட்டியது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் (Flats) சில வேளை துர்நாற்றம் வீசுவதுண்டாம். சகிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுமானால் அது எங்கிருந்து வருகிறதென்று அறிய முயற்சிகள் எடுக்கப்படுமாம். மூடப்பட்டுள்ள ஒரு வீட்டினுள்ளிருந்து அந்நாற்றம் வருமானால் அவ்வீட்டின் கதவை உடைக்க போலீஸ் அழைக்கப்படும். கதவு உடைக்கப்பட்டதன் பின் உள்ளே பார்த்தால் அங்கு ஒரு மனிதன் இறந்து கிடப்பானாம். அவனது பிள்ளைகள் யாரென்று தேடிப்பார்த்து தந்தையின் நிலவரம் பற்றி விசாரிக்கப்பட்டால் "நாங்கள் அவருக்கு ஆயுள் காப்புறுதி (Life Insurance) செய்திருக்கின்றோம்" என்று கூறுவார்களாம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மேற்குலகில் அடிக்கடி நடப்பதாகவும் நான் கேள்விப்பட்டேன்.

          சில வயோதிகர்கள் தமது வாழ்வின் எஞ்சிய பகுதியை முதியோர் இல்லங்களில் கழிக்கிறார்கள். அவர்களது பிள்ளைகளோ, அல்லது பேரப்பிள்ளைகளோ வருடத்திற்கொருமுறை 'தயவு கூர்ந்து' அவர்களைச் சந்திக்கச் செல்லும் போது மாத்திரமே உறவினர்களைக் காணும் பாக்கியம் அவ்வயோதிகர்களுக்குக் கிட்டுகிறது.

இது மேற்குலக நாகரிகத்தின் இழிநிலைக்கான சான்றுகளில் ஒன்றாகும். மக்கள் கண்மூடிக் கொண்டு பின்பற்றும் இந்த நாகரிகம் தனது வன்குரோதத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. மக்கள் அதனை காரசாரமாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதிகமான நூல்கள் அதனை விமர்சித்து, அதன் அவலங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதன் போலிவேடத்தை உலகறியச் செய்து உள்ளன. ஆனால், அந்த நாகரிகத்தை அச்சொட்டாகப் பின்பற்றுவதில் நாம் முனைப்போடு ஈடுபட்டிருக்கிறோம். இதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

நம்மிடம் நமது மார்க்கம் (இஸ்லாம்) இருக்கும்போது நாம் மேற்கு நாகரிகத்தைப் பின்பற்ற என்ன தேவை வந்துவிட்டது? இஸ்லாத்தின் கோட்பாடுகள் நமக்குப் போதுமானவையாக இருக்கையில் வேறு நாகரிகமொன்றை இறக்குமதி செய்ய வேண்டுமா? எடுத்துக்காட்டாக, நமது உற்பத்தி வெளிநாட்டு உற்பத்தியைவிட தரத்தில் கூடியதாகவும் சிறப்பானதாகவும் இருந்தால் அப்பொருளை இறக்குமதி செய்யத் தேவையில்லையே. ஒரு பொருள் அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கிறது. அதனை மனிதன் உருவாக்கவில்லை என்றால் நான் என்ன செய்ய வேண்டும்? நம்மிடமுள்ள ஷரீஅத்தும் அப்படித்தான். அதனை மனிதர்கள் இயற்றவில்லை. எனவேதான் அல்லாஹ் கூறுகிறான்:

"உறுதியான நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எவர்தான் அழகான விதத்தில் தீர்ப்பளிக்க முடியும்?" 
(அல் குர்ஆன் 5:50)

நாளைய முஸ்லிம் பெண் தனது மார்க்கத்தின்பாலும் தனது அடித்தளத்தின்பாலும் திரும்பவேண்டும் எனவும், கண்மூடித்தனமாக எதையும் பின்பற்றலாகாது எனவும் விரும்புகிறோம். மேலும், அவள் மேற்கிலிருந்து வரும் நாகரிகத்தின் சிறப்பான நல்ல அம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தீமை பயக்கும் விடயங்களை விட்டும் ஒதுங்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறோம். உரிமைகளுக்காக கோஷமெழுப்புமுன் கடமைகளை அவள் நிறைவேற்ற வேண்டும். பாதையை நோக்கி கழுத்தை நீட்டுவதற்குமுன் வீட்டுக் கடமைகளை நிறைவேற்றி முடித்தேனா என்று அவள் சிந்திக்க வேண்டும்.

பிற ஆண்களுடன் போட்டி போடுவதற்கும் அவர்களது பார்வையைத் தன்பால் கவருவதற்கும் முயற்சிகளை எடுப்பதற்குப் பதிலாக தனது கணவனையும் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்வதில் அக்கறை காட்டவேண்டும். ஆரம்ப காலத்து முஸ்லிம் பெண்களைப் போல் நாளைய முஸ்லிம் பெண் மாறவேண்டும். அந்தப் பெண்கள் தமது பொறுப்புகளைப் பேணி கடமைகளை நிறைவேற்றி வந்தார்கள்; மார்க்கத்தை விளங்கியிருந்தார்கள். இந்த அம்சங்களில் அவர்கள் தாம் பெண்களுக்கான முன்மாதிரிகள்.

நாளைய முஸ்லிம் பெண்ணிடம் இறைநம்பிக்கை (ஈமான்), ஒழுக்கம், அறிவுத்தெளிவு, இலட்சிய வேட்கை என்பன இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் உண்மையானதொரு இஸ்லாமிய எழுச்சியை எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் உண்மையானதொரு யுகத்தில் முஸ்லிம் பெண் நுழைய வேண்டும் என்றும் அவளது வாழ்வில் புதியதோர் அத்தியாயம் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் நாம் விரும்புகிறோம்.

நாம் எதிர்பார்க்கும் இஸ்லாமிய எழுச்சியானது குர்ஆனும் சுன்னாஹ்வும் பெண்ணுக்கு வழங்கிய முழுமையான, நியாயமான நன்மைகள் அனைத்தையும் அள்ளி வழங்கும் தன்மைகொண்ட உண்மையான எழுச்சியாக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறோம்.

மேற்கு நாகரிகத்திலிருந்து நல்ல பகுதிகளை மட்டும் அவள் தெரிவு செய்து ஏனையவற்றை விட்டு விலகி விட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.

நான் தெளிவாகக் கூற விரும்புவது யாதெனில், மேற்கு நாகரிகத்தில் ஏதாவது நல்ல பகுதிகள் இருந்தால் அந்தப் பகுதிகளை இஸ்லாம் ஏற்கனவே அறிமுகம் செய்திருக்கும். தீய பகுதிகளை இஸ்லாம் ஏற்கனவே உதாசீனம் செய்திருக்கும். எனவே, நாம் 'இறக்குமதி' செய்யத் தேவையில்லை. நாம் தனவந்தர்களாக இருக்கும்போது பிறரிடம் யாசகம் கேட்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? உடற்பலமுள்ளவன் யாசகம் கேட்கலாகாது என்பது போல நமக்கு அல்லாஹ் இஸ்லாத்தை நிறைவாகத் தந்திருக்கையில் பிறரிடமிருந்து 'கொள்கைப் பிச்சை' பெறுவது முறையாகுமா?

முஸ்லிம் பெண்ணும் 'உங்கள் வீடுகளில் தங்கியிருங்கள்' என்ற இறைவசனமும்

அத்தியாயம் 'அஹ்ஸாப்' இல் வரும் இவ்வசனத்தை ஆதாரமாகக் கொள்ளும் சிலர் அத்தியாவசியமான தேவைகளுக்காகவன்றி ஒரு பெண் வீட்டை விட்டுச் செல்லக் கூடாது என்ற கருத்தைத் தெரிவித்தனர். ஆனால் இந்த ஆதாரம் பின்வரும் காரணங்களால் பொருத்தமற்றதாகின்றது:

1.    இந்த வசனம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய மனைவியர்களை விளித்துப் பேசுகின்ற வசனத் தொடரில் வருவதாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய மனைவியர் மிக அதிக புனிதத்துவத்தோடு வாழ வேண்டும். அவர்களுக்கான சட்டங்கள் ஏனைய பெண்களுக்கான சட்டங்களை விடக் கடினப் போக்கைக் கொண்டிருக்கும். எனவே தான் அவர்களது ஒரு நற்செயலுக்கான கூலி பல மடங்கு கொண்டதாகவும் காணப்படும் என அல்-குர்ஆன் விளக்குகிறது.

2.    இந்த இறை வசனம் இருந்தும்கூட, ஆயிஷா (ரழி) ஒட்டகைப் போருக்காக வெளியேறிச் சென்றார்கள். உஸ்மான் (ரழி) அவர்களைக் கொன்றோரைப் பழிவாங்கும் மார்க்கக் கடமை தம்மீது சுமத்தப்பட்டுள்ளது என அவர்கள் கருதியதே அதற்குக் காரணமாகும். அலி (ரழி) அவர்களுக்கு எதிராக நின்று போராடியமை தவறு என பிற்காலத்தில் ஆயிஷா (ரழி) ஏற்றுக்கொண்டதாக அறிவிப்புகள் உள்ளன என்பது உண்மையே. எனினும் போராடியமையை அது குறிக்குமேயன்றி வெளியேறியமையைக் குறிக்காது.

3.    நடைமுறையில் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். பாடசாலைக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் அவர்கள் செல்கின்றனர். ஆசிரியைகளாகவும், மருத்துவர்களாகவும், நிர்வாகிகளாகவும் இன்னும் பல்வேறுபட்ட துறைகளிலும் அவர்கள் ஈடுபட்டு உழைக்கின்றனர். இதனைத் தகுதிவாய்ந்த அறிஞர்கள் யாரும் மறுக்கவில்லை. எனவே பெண்கள் வீட்டுக்கு வெளியே வேலை பார்ப்பதை நிபந்தனையோடு அனுமதிக்கலாம் என்பது ஒருமித்த கருத்து (இஜ்மா) ஆக மாறிவிட்டது என்று அதிகமானோர் கூறுகின்றனர்.

4.    பெண்களுக்குத் தலைமை வகிப்பதற்கும், பெண்கள் விவகாரங்களைப் பொறுப்பேற்று நடத்துவதற்கும் மதச்சார்பற்ற, ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி அக்கரையற்ற பெண்களே அரசியலில் நுழைந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை எதிர்த்துப் போட்டியிடவும் பெண்களுக்கு ஓர் இஸ்லாமியத் தலைமைத்துவத்தை ஏற்படுத்தவும் முஸ்லிம் பெண்கள் அரசியலில் இறங்குவது சமூகத் தேவையாக உள்ளது எனலாம். தனிப்பட்ட தேவைகளுக்காக பெண் வீட்டை விட்டு வெளியேறுவதைவிட சமூகத் தேவைகளுக்காக வெளியேறுவது அவசியத்திலும் அவசியமாகும்.

5.    'பெண்களை வீட்டிலேயே அடைத்து வைத்தல்' குறிப்பிட்டதொரு காலப்பிரிவில் - சட்டங்கள் முழுமையாக இறங்கி முடியும் முன்னர் - விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களுக்கான ஒரு தண்டனையாக இருந்தது.

மரணம் வரும்வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒரு வழியைக் காட்டும்வரை வீட்டிலேயே பிடித்து வையுங்கள்” 
(அல் குர்ஆன் 4:15)

எனவே சாதாரண நிலையில் ஒரு முஸ்லிம் பெண்ணின் பண்பாக இதைக் கொள்ள முடியுமா?

முஸ்லிம் பெண்ணும் 'இஜ்திஹாதும்

இஸ்லாமிய சட்டத்துறையில் ஆண், பெண் இருபாலாருக்கும் இஜ்திஹாதின் [2] வாயில் திறக்கப்பட்டுள்ளது. இஜ்திஹாதில் ஈடுபடுபவருக்குரிய நிபந்தனைகளை விளக்கிய இஸ்லாமியச் சட்ட அடிப்படையை ஆராயும் அறிஞர்கள் (உஸ்லியூன்கள்) யாரும் இஜ்திஹாத் செய்பவர் ஆணாக இருக்க வேண்டும் என்றோ அல்லது பெண் இஜ்திஹாத் செய்ய முடியாதென்றோ கூறவில்லை.

முஜ்தஹிதாயிருந்த, முஃப்தியாயிருந்த நபித்தோழியர்களில் ஆயிஷா (ரழி) அவர்களும் ஒருவராவார். நபித்தோழர்களில் இருந்த அறிஞர்களை விடவும் இஜ்திஹாதில் தனியான சிந்தனைகளையும், கருத்துகளையும் இவர் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

          ஆண்கள் இஜ்திஹாதில் ஈடுபட்ட அளவுக்குப் பெண்கள் ஈடுபடவில்லை என்பது உண்மைதான். அதற்குப் பெண்களுக்கான கல்வி வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்டமையும், இன்று இருப்பதற்கு முற்றிலும் வித்தியாசமான அன்றையச் சமூகச் சூழலும் முக்கிய காரணங்களாகும். ஆனால் இன்று கல்வி கற்கும் பெண்களின் வீதம் ஆண்கள் கல்வி கற்கும் வீதத்துக்கு நெருங்கிவிட்டது என்று சொல்லலாம். மேலும், பெண்களில் ஆண்கள் சிலரைவிட அதிவிவேகிகளும் காணப்படுகிறார்கள். ஏனெனில் விவேகம் ஆண்களுக்கு மட்டுமுள்ள பண்பல்ல. அறிவுத்துறையில் ஆண்கள் அடைய முடியாத அளவுக்கு ஆற்றல்களைப் பெற்ற எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள்.

அல்-குர்ஆன் 'ஸபஃ' பிரதேசத்தை ஆட்சிபுரிந்த ஒரு பெண்ணின் வரலாற்றைச் சொல்கின்றது. 'ஹூத்ஹூத்' பறவையிடமிருந்து தூது கிடைத்ததிலிருந்து, சுலைமான் (அலை) அவர்களின் விடயத்தில் அவளுடைய நிலைப்பாட்டை அவதானிக்குமிடத்து, அப்பெண் ஆழ்ந்த அறிவையும் நல்ல சிந்தனைத் தெளிவையும் பெற்றிருந்தாள் என்பது தெரியவருகின்றது. அப்பறவையின் இரத்தினச் சுருக்கமான தூதிலிருந்து அவள் விடயத்தைப் புரிந்துகொண்டமை, தனது சமூகத்தின் உயர்நிலை அங்கத்தவர்களை ஒன்று சேர்த்துப் பேசியமை இவை எல்லாம் அவள் மதிநுட்பத்திற்குச் சான்றுகளாகும்:

"என்னிடம் இந்த விடயத்தில் எனக்கு அலோசனை கூறுங்கள். நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்தக் காரியத்தையும் முடிவு செய்பவளல்ல"

(அல் குர்ஆன் 27:32)

அப்போது சக்தியும், பலமும் படைத்த அந்த ஆண்கள் பொறுப்பு முழுவதையும் அப்பெண்ணிடமே சாட்டினர் என பின்வரும் இறைவசனம் விளக்குவது அவதானத்துக்குரியது:

"நாங்கள் பெரும் பலசாலிகளையும், கடுமையாகப் போரிடும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றோம். ஆயினும் முடிவு உங்களைப் பொறுத்தது. எனவே சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று அவர்கள் சொன்னார்கள்
(அல் குர்ஆன் 27:33)

மதிநுட்பமும் நல்லியல்பும் கொண்ட அப்பெண் நபி சுலைமான் (அலை) அவர்களிடம் இஸ்லாத்தைத் தழுவுகின்றாள். குர்ஆன் கூறும் இந்த வரலாறு ஒரு வேடிக்கைச் சம்பவம் அல்ல. மாறாக ஒரு பெண் அரசியல் விவகாரங்களில் ஆழ்ந்த அறிவும் தீட்சண்யப் பார்வையும் திட்டமிடும் ஆற்றலும் கொண்டு விளங்குவதோடு பல ஆண்களால் சாதிக்க முடியாத விடயத்தை அவளால் சாதிக்க முடிந்தது என்பதை இவ்வரலாற்றுச் சம்பவம் நமக்கு உணர்த்தி நிற்கின்றது.

இஸ்லாமியச் சட்டத்துறையில் பெண்ணோடு, குடும்பத்தோடு, அதன் உறவுகளோடு தொடர்பான சட்டப்பகுதிகள் இருக்கின்றன. இத்தகைய சட்டப்பகுதிகளில் பெண்ணின் கருத்துப் பெறப்பட வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலவேளை அத்தகைய சட்டப்பகுதிகளில் ஆண்களை விடவும் அவள் ஆழமான அறிவு படைத்தவளாக இருக்க முடியும்.

மஹர் தொகையின் அளவை வரையறுக்கும் சட்டமொன்றை உமர் (ரழி) அவர்கள் வெளியிட்டபோது பெண்களின் சார்பாக அக்கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இது குடும்பத்தோடு தொடர்புடைய சட்டமாக இருந்தது. மஹருக்கு உச்சவரம்பு ஒன்றை நிர்ணயிக்க விரும்பிய உமர் (ரழி) தமது கருத்தை மாற்றிக் கொள்ள இம்மறுப்பு காரணமாக அமைந்தது.

இவ்வாறு, உமர் (ரழி) அவர்கள் பெண்களின் கருத்தைப் பெற்று பல சட்டங்களை இயற்றியுள்ளார்கள். இராணுவச் சேவையில் ஈடுபட்டிருக்கும் கணவன் ஆறு மாதத்துக்கு மேல் மனைவியைப் பிரிந்திருக்கக்கூடாது என்ற சட்டத்தை உருவாக்குவதற்கு உமர் தனது மகள் ஹஃப்ஸாவிடம் ஆலோசனை கேட்டார். "ஒரு பெண் தனது கணவனை விட்டு எவ்வளவு காலத்துக்குப் பிரிந்திருக்க முடியும்?" என்று கேட்டபோது மகள், "நான்கு மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் பிரிந்திருக்க முடியும்" என்றார்.

கணவனைப் பிரிந்து தனிமையில் வாடிய பெண்ணொருத்தி பாடிய சோகப் பாடலைக் கேட்ட பிறகே உமர் (ரழி) அவர்கள் இராணுவத்தில் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

         மேலும், உமர் (ரழி) அவர்களுடைய ஆட்சியில் குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கப்பட்டது. பால்குடி மறந்த குழந்தைகளுக்கே இந்நன்கொடை கிடைத்து வந்தது. நன்கொடையை அவசரமாகப் பெற வேண்டும் என்ற ஆவலில் பாலூட்டும் காலம் முடிவடைவதற்கு முன்னரே பெண்களில் சிலர் குழந்தைகளுக்கு பால்குடி மறக்க வைத்தனர். ஒருநாள் குழந்தையொன்று இடைவிடாது அழுவதைக் கண்டு உமர் (ரழி) அவர்கள் அதன் தாயிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். கேட்பவர் கலீஃபா உமரென்று தெரியாத அப்பெண், "விசுவாசிகளின் தலைவர் பால்குடி மறந்த குழந்தைகளுக்கு நன்கொடை வழங்குமாறு கட்டளையிட்டுள்ளார். எனவே முன்னதாகவே பால்குடி மறக்கடித்து விட்டேன். அதன் காரணத்தினால்தான் அழுகிறது" என்றார். அதைக் கேட்ட உமர், "உமருக்கு கேடுதான் உண்டாகும். இச்சட்டத்தால் முஸ்லிம்களின் எத்தனை குழந்தைகள் இறந்திருக்கும்" என்று வருந்தினார். பின்னர் நன்கொடையை எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுவாக வழங்கினார்.

முஸ்லிம் பெண்ணும் 'நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தலும்'

பெண், ஆணைப் போன்றே கடமைகளும் பொறுப்புகளும் சுமத்தப்பட்ட மனித ஆன்மாவாகும். அல்லாஹ்வை வணங்குதல், அவன் விதித்த கடமைகளை நிறைவேற்றுதல், அவனது மார்க்கத்தை நிலை நாட்டுதல், அல்லாஹ்வின் மார்க்கத்தின்பால் மனிதர்களை அழைத்தல், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் போன்ற பணிகள் அனைத்தும் பெண்ணுக்கும் உரிய கடமைகளே.

ஆண்களை மட்டும் குறிப்பாக விளிக்காமல், சட்டமாக்குவோனாகிய அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொதுவாக விடுத்த அனைத்து அழைப்புகளும் ஆண்கள், பெண்கள் இருசாராரையுமே குறிக்கும். அல்லாஹ் 'மனிதர்களே!...', 'நம்பிக்கையாளர்களே!...' என்று அழைக்கும் போதெல்லாம் அது ஆண், பெண் இருசாராரையும் குறிக்கும் என்பதில் எத்தகைய கருத்து வேறுபாட்டிற்கும் இடமில்லை.

பின்வரும் நிகழ்வு இதனை விளக்குகின்றது: ஒரு முறை உம்மு ஸல்மா (ரழி) அவர்கள் தமது வேலைகளில் மூழ்கி இருக்கும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'மக்களே...' என அழைக்கும் சப்தம் கேட்டதும் வேலைகளை விட்டுவிட்டு மிக விரைந்து போனார்கள். அதனைக் கண்ட சிலர் அவரை வியப்புடன் நோக்கியபோது அவர்களை நோக்கி 'நான் மக்களில் ஒருவரே!' என விளக்கினார்கள்.

கடமைகள், பொறுப்புகளைப் பொறுத்தவரையில் பெண் ஆணைப் போன்றவளே. அதில் எங்காவது வேறுபாடு இருப்பின் அதனைக் காட்டும் விதிவிலக்கான சட்ட வசனங்கள் வந்திருக்கும் - இது பொது விதி.

"ஆண், பெண் இருவரும் ஒருவரிலிருந்து ஒருவர் உருவானவர்களாகும்." 
(அல் குர்ஆன் 3:195)
என்ற வசனமும்,

"பெண்கள் ஆண்களின் அடுத்த பகுதியினர்."
(அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், தாரமி)

என்ற ஹதீஸும் இந்த விதிக்கு ஆதாரங்களாக அமைகின்றன. அல்குர்ஆன் சமூக சீர்திருத்தம் என்ற பொறுப்பை - இஸ்லாமிய மொழி மரபில் சொன்னால், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தலை ஆண் பெண் இருபாலாரது பொறுப்பாகக் கூறுகின்றது:

"நம்பிக்கைகொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் நன்மையை ஏவுகின்றனர்; தீமையைத் தடுக்கின்றனர். தொழுகையை நிலை நாட்டி, ஜகாத் கொடுக்கின்றனர்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுகின்றனர்; அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிகின்றான்."
(அல் குர்ஆன் 9:71)

என இப்பொறுப்பை அல் குர்ஆன் விளக்குகின்றது. நயவஞ்சகர்களின் பண்புகளை விளக்கிய பின்னர் நம்பிக்கையாளர்களின் பண்புகளை குர்ஆன் இப்படி விளக்குகின்றது:

"நயவஞ்சகர்களான ஆண்களும் பெண்களும் ஒருவரிலிருந்து ஒருவர் பிறந்தவர்கள் - ஒரே பண்பைக் கொண்டவர்கள் - அவர்கள் தீமையை ஏவி நன்மையை தடுப்பர்." 
(அல் குர்ஆன் 9:69)

நயவஞ்சகப் பெண்கள் சமூகத்தைச் சீர்கெடுக்கும் பணியில் தம் பங்கை நிறைவேற்றுவார்களாயின் நம்பிக்கை கொண்ட பெண்களும் சமூகத்தைச் சீர்திருத்துவதில் தமக்குரிய பங்கை நிறைவேற்ற வேண்டுமென இந்த வசனம் விளக்குகின்றது.

இந்தவகையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் தம் பங்கை நிறைவேற்றி இருக்கின்றனர். இறைத்தூதர் (ஸல்) அவர்களை உண்மைப்படுத்தியதில் முதலில் எழுந்தது ஒரு பெண்ணின் குரலே. அப்பெண் கதீஜா (ரழி) அவர்களாவர். இஸ்லாமியப் பாதையில் முதலாவதாகக் கொல்லப்பட்டதும் (ஷஹீது) ஒரு பெண்ணே. சுமையா (ரழி) அவர்களே அப்பெண்ணாவார்.

உஹது, ஹுனைன் போன்ற பல போர்க்களங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களோடு பெண்களும் போரில் கலந்து கொண்டார்கள். இமாம் புகாரி தமது ஹதீஸ் நூலில் ஜிஹாத் அத்தியாயத்தில் 'பெண்கள் போரில் ஈடுபடல்' என்றொரு தலைப்பையே இட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தலும், உபதேசித்தலும் ஆண், பெண் இருவரின் மீதான கடமையாகும். அல் குர்ஆன் இதனை மிகத் தெளிவாகக் கூறுகின்றது:

"நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவருக் கொருவர் பொறுப்புதாரர்கள். அவர்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கின்றனர்.

'மார்க்கம் என்பதே உபதேசித்தலாகும்' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது இது 'யாரின் பொறுப்பு' என தோழர்கள் வினவினர். 'அல்லாஹ், அவனது தூதர், அவனது வேதம், முஸ்லிம்களின் தலைவர்கள், பொது மக்கள் அனைவரின் பொறுப்பாகும்' எனப் பதிலளித்தார்கள்.
(முஸ்லிம்)

இதிலிருந்து விளங்குவது யாதெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உபதேசித்தலையும் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தலையும் ஆண்களுக்குரிய கடமையாக மட்டும் ஆக்கவில்லை. இந்த வகையில்தான் உமர் (ரழி) அவர்களின் கருத்தை ஒரு பெண் மறுத்துப் பேசிய போது, "உமர் தவறிழைத்தார், ஒரு பெண் சரியாகச் சொன்னார்" என்று கூறி அவர் தமது கருத்தைத் திரும்பப் பெற்றார் என்ற சமபவத்தை [3] நாம் வரலாற்றில் படிக்கிறோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது உம்மு ஸல்மா (ரழி) அவர்களின் ஆலோசனையை ஏற்று நடைமுறைப்படுத்தியதை வரலாற்றில் காண்கிறோம்.

இறுதியாக ...

முஸ்லிம் பெண்ணானவள் பல்கலைக்கழகத்தில், பாடசாலைகளில், மருத்துவமனைகளில் என்று வீட்டுக்கு வெளியேயுள்ள எவ்விடத்தில் பணியாற்றுவதாக இருப்பினும், அவற்றிலெல்லாம் இஸ்லாமிய வரையறைகளைப் பேணியே நடந்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம் பெண்ணானவள் தனது மார்க்கத்தை விளங்கியிருக்க வேண்டும்; தனது வாழ்க்கையைப் புரிந்திருக்க வேண்டும்; தனது இறைவனுக்கும், கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அதேவேளை, தனது சமூகத்தின்பாலும் மார்க்கத்தின்பாலுமுள்ள கடமைகளை அவள் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கூறினேன்.

இதன் மூலம் அவள் உண்மையான ஓர் இஸ்லாமிய எழுச்சியை வழிநடத்திச் செல்வதைக் காண நாம் ஆசைப்படுகிறோம்.

அவள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்பவளாக மாற வேண்டும் என ஆசைப்படுகிறோம். பெண்களுக்கான இஸ்லாமியப் போதனைகளைச் செய்து, அவர்களுக்கு வழிகாட்டி, அவர்களை நல்வழிப்படுத்தும் இஸ்லாமிய எழுச்சிப்பணியை முன்னெடுத்துச் செல்லும் பெண்ணாக அவளைக் காண விரும்புகிறோம். அந்த எழுச்சியின் பின்னணியில் தாம் இம்மை, மறுமைப் பயன்கள் இருக்கின்றன. அல்லாஹ்வின் திருப்பொருத்தம் இருக்கிறது. புத்திஜீவிகளது பாராட்டுதல் இருக்கிறது. உலகாயத, ஆன்மீக லாபங்களும் உள அமைதியும் இருக்கின்றன. இந்த நிம்மதியை விட மகத்தான ஒரு நிம்மதியை ஒரு பெண் வேறு எங்கு பெறமுடியும்?

இந்த உள அமைதி எப்படிப்பட்டது என்பதை, அலீ (ரழி) அவர்களின் மகளும் உமர் (ரழி) அவர்களின் மனைவியுமான உம்மு குல்தூம் (ரழி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி அழகாகச் சித்தரிக்கிறது. ஒரு தடவை உம்மு குல்தூம் (ரழி), உமருக்குக் (ரழி) கோபமூட்டக்கூடிய செயலொன்றை வீட்டில் செய்து விட்டார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள்: "உன்னை நான் நிச்சயமாகக் கவலைக்குள்ளாக்குவேன்" என்றார்கள். அதற்கு உம்மு குல்தூம் (ரழி), "எனது மன நிறைவு எனது இறை நம்பிக்கையில் தங்கியிருக்கிறது. எனது இறைநம்பிக்கை எனது உள்ளத்தில் இருக்கிறது. எனது உள்ளத்தில் செல்வாக்குச் செலுத்த எனது இறைவனைத் தவிர வேறு எவராலும் முடியாது" என்று மிகுந்த தைரியத்துடன் கூறினார்கள். எனவே, இத்தகைய மனநிறைவை அடைய நமது பெண்கள் முயல வேண்டும்.

குறிப்புகள்:
1.        இமாம் இப்னு ஹஸ்ம்: கியாஸ், இஸ்திஹ்ஸான், மஹ்லஹத் முர்ஸலா போன்ற அறிவுசார் சட்ட மூலாதாரங்களை ஏற்றுக் கொள்பவரல்ல. குர்ஆன், ஹதீஸின் வெளிப்படையான விளக்கங்களோடு நின்று விடுவார். 'அல் முஹல்லா' என்பது இவர் எழுதிய மிகப் பெரிய சட்ட நூலாகும். தமக்கு மாற்றமான கருத்துடையோரைக் கடுமையாகச் சாடுவது இவரது போக்காகும். மேற்குறிப்பிட்ட நூலில் இதனை அவதானிக்கலாம்.
2.        இஜ்திஹாத்: சட்ட மூலங்களிலிருந்து (குர்ஆன், ஹதீஸ்) முடிவுகளைப் பெறும் சுயமுனைவு.
3.        இச்சம்பவத்தை அறிவிக்கும் இமாம் இப்னு கதீர், இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டது என்கிறார்.