'உலமா': அன்றும் இன்றும்
- இமாம்
முஹம்மது அல்-ஆஸி
- தமிழில்:
சம்மில்
கலைச்சொற்கள்:
·
அல்-ஃபித்னா அல்-குப்ரா: நேர்பொருள் - மிகப்பெரும்
சோதனை. அலியின் (ரழி) ஆட்சிக்காலத்தில், முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்ட முதல் குடிமைப்
போரைக் குறிக்கும் வண்ணம் கட்டுரையிலே இந்தச் சொல்லாடல் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
·
அல்லதீன ழலமூ: (குர்'ஆனியச் சொல்லாடல்) அநீதி
இழைப்பவர்கள் / அநியாயக்காரர்கள், அல்லது ‘அநீதி இழைத்துக்கொண்டிருக்கிறார்களே அத்தகையவர்கள்’
என்ற அர்த்தத்திலும் இந்தப் பதத்தை பிரயோகிக்கலாம். (இதனை'ழாலிம்'-ன் பன்மை
வடிவமாகவும் கொள்ளலாம்).
·
இஜ்திஹாத்: மனித
பகுத்தறிவைப் பிரயோகித்து, நடைமுறைச் சூழல்களில் சந்திக்கநேரும் சட்ட சிக்கல்கள், பிரச்சினைகளுக்கான தீர்வுகளை
இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களிலிருந்து உருவிப்பெறும்
செயல்முறை.
·
உலமா: (ஒருமை: ஆலிம்) நேர்பொருள்: கற்றறிந்த மேதைகள்; அறிஞர் பெருமக்கள்.
·
கலீஃபா: இறைத்தூதரின் பிரதிநிதி (கலீஃபதுர் ரஸூல்) என்ற அந்தஸ்தில்
ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பரிபாலனைசெய்யும் ஆட்சியாளர்.
·
காஃபிர்: நேர்பொருள்:
இறை நிராகரிப்பாளர். பரந்துபட்டப் பிரயோகத்தில், இறைவனின் அதிகாரப் பிரசன்னத்தை சட்டைசெய்யாதவர்
/ மறுதலிப்பவர்.
·
சூஃபி: நேர்பொருள்:
மறையியல் ஞானி; விரிவானப் பிரயோகத்தில், இறைநிஷ்டையில் லயித்திருப்பதன் வாயிலாக, அல்லது,
பரம்பொருளிடம் சுய-சரணாகதி அடைவதன் வாயிலாக எட்டாநிலையை அடைந்துகொள்ள எத்தனித்துக்கொண்டிருப்பவர்
/ மெய்ஞானி.
·
ஃபகீஹ்: (பன்மை:
ஃபுகஹா), நேர்பொருள்: இஸ்லாமிய சட்டவியல் அறிஞர். விரிவானப் பிரயோகத்தில், இஸ்லாமிய மார்க்க மேதைக்கும்
இது பொருந்தும்.
·
மத்ஹப்: இஸ்லாமிய சட்ட சிந்தனா வழி.
·
மிம்பர்: ஜும்'ஆ
தினத்தன்று சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக பள்ளிவாசல்களில் அமைக்கப்பட்டிருக்கும் படித்துறை.
·
முஹத்திஸ்: ஹதீஸ் கலை
வல்லுனர்; ஹதீஸ்களை நம்பகத்தன்மை வாய்ந்த, அறுபடாத அறிவிப்பாளர் தொடருடன் (இஸ்னாத்)
அறிவிப்புச் செய்பவர்; இஸ்னாத் குறித்த பகுப்பாய்வில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்.
·
ழாலிம்: (பன்மை: ழாலிமூன் / குர்'ஆனியச் சொல்லாடல்) நேர்பொருள்: அநீதி இழைப்பவர். விரிவானப் பிரயோகம் – தனது ஆன்மாவுக்கெதிராக அநீதி
இழைத்துக்கொள்பவர்; பிறருக்கெதிராக அநீதி இழைப்பவர்; அநீதியின் அஸ்திவாரத்தின்மீது
தனது அன்றாட வாழ்வின் தொழிற்பாடுகளைக் கட்டமைத்துக்கொள்பவர்... இத்யாதி.
·
ழுல்ம்: நேர்பொருள்: அநீதி / அடக்குமுறை.
·
ஹதீஸ்: இறைத்தூதரின்(ஸல்)
சொல், செயல், அங்கீகாரம் அடங்கிய மரபுரீதியான அறிவிப்பு.
·
ஹிஜ்ரி: முஹம்மது(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப்
புலம்பெயர்ந்த நாளிலிருந்து ஆரம்பமாகும் இஸ்லாமிய நாள்காட்டி. ஹிஜ்ரி 1-ம் ஆண்டு
என்றால், பொது யுகத் தேதி அமைப்பில், (Common Era Dating System) 622-ம் ஆண்டு என்று
கணக்கிடப்படுகிறது.
'உலமா': அன்றும்
இன்றும்\
பற்றுறுதிகொண்ட எனதருமைச் சகோதர சகோதரிகளே!
இறைவன் தனது மறைவசனமொன்றில் பின்வருமாறு இயம்புகிறான்:
“வலா தர்கனூ இலல்லதீன ழலமூ” (அல் குர்'ஆன் 11:113)
இவ்வசனத்தின் தோராயமான அர்த்தம், 'அல்லதீன
ழலமூ'வை நீங்கள் சார்ந்திருக்கவேண்டாம் என்பதே. அவர்கள், இப்பூவுலகின் எப்பேற்பட்ட
உயர்பதவிகளில் வீற்றிருந்தபோதிலும் சரியே. இன்னும், அவர்கள் உள்ளூர் ழாலிம்களோ தேசிய ழாலிம்களோ சர்வதேச, பன்னாட்டு ழாலிம்களோ
யாராக இருப்பினும் அவர்கள்மீது நீங்கள் பற்றுறுதி கொள்ளலாகாது; அவர்களைச் சார்ந்திருக்கலாகாது.
இது, மேற்படி மறைவசனத்தில் தொக்கிநிற்கும் பன்முக அர்த்தங்களின் ஒரு பரிமாணம்.
பிறிதொரு பரிமாணத்தை இவ்வாறு வகைப்படுத்தலாம், 'அல்லதீன
ழலமூ'வுடனான ஊடாட்டத்தில் நீங்கள் சௌகரியத்தைத் தேடிக்கொள்ள வேண்டாம்; அவ்வகை
உறவுகளில் புளகாங்கிதம் அடைந்துகொள்ள வேண்டாம். அதாவது, அவர்களுடனான அன்னியோன்னியத்தில்
நீங்கள் சம்பூர்ண நம்பிக்கைக் கொள்ளலாகாது, ‘வலா தர்கனூ இலல்லதீன ழலமூ’
அப்படி நீங்கள் செய்யும்பட்சத்தில், "ஃபத
மஸ்ஸகுமுன் நார்", சுவாலைவிட்டு எரியும் நெருப்பிலே நீங்கள் அமிழ்த்தப்படுவீர்கள்,
தண்டிக்கப்படுவீர்கள்.
அதுபோன்று, குர்ஆனின் இன்னோர் வாக்கியம் இவ்வாறு
இயம்புகிறது,
"வல தஹ்ஸபன் அல்லாஹ ஃகாஃபிலன் அம்மா யா'மலுல் ழாலிமூன்"
(அல் குர்'ஆன் 14:42)
நம்மை பாதிப்புக்குள்ளாக்கும் குரூர செயல்திட்டங்களை
சிருஷ்டிக்கும், பகாசுர முடிவுகளை முன்மொழியும் பெரும்பதவிகளில் 'அல்லதீன ழலமூ' வீற்றிருக்கும் வேளைகளில்,
அவர்களை
அபரிமிதமாகச் சார்ந்திருக்கும் நம் உளவியலின் இயல்பை மேற்படி வசனங்களும், இன்னோரன்ன
பற்பல வசனங்களும் தோலுரித்துக்காட்டுகின்றன.
சமூகங்களுக்கு இடையே எவ்வித தொடர்பும் ஏற்பட்டிராத
ஏதோவொரு கானகத்துக்குள் நாமெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. மாநிலங்கள், சமூகங்கள்,
நிறுவனங்கள், ஊடகங்கள், செயல்திட்டங்கள், உத்திகள் முதலான அனைத்துமே நம் வாழ்வின் மறுக்கவியலாத
உண்மைகள், கள-மெய்மைகள்.
நெளிவுசுளிவுகளால் நிரம்பப்பெற்ற ஜும்'ஆ
ஃகுத்பாக்களுக்குத் தலைமை வகிப்பவர்களைப் பார்க்கும்போதெல்லாம், சில நேரங்களில்,
வினயமாகத் தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் என்னுள் சிறிதளவேனும் அகக்கொந்தளிப்பு ஏற்பட்டுவிடுகிறது.
ஏனெனில் இவர்கள், ஒன்று தங்களை மட்டுமீறிய கருத்தியல்வாதிகளாக வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்
அல்லது ‘மெய்யியலுக்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பவர்கள்’ போன்ற ஒரு சுய-பிம்பத்தை
கட்டமைத்துக்கொள்கிறார்கள்.
இந்த நிலைப்பாட்டின் காரணத்தால், இவர்களின் வாக்கியங்களை
கர்மசிரத்தையுடன் அவதானிக்க வேண்டிய இக்கட்டுக்கு நாம் அனிச்சையாகவே தள்ளப்பட்டுவிடுகிறோம்.
தவிரவும், சிக்கல்களால் நிரம்பப்பெற்ற இவர்களின் கருத்தாடல்களைப் புரிந்துகொள்வதற்கு
அகராதிகளும் மொழிச் செறிவுக்கு உதவும் வேறுபல நூல்களும்கூட, சில நேரங்களில் இன்றியமையாத
தேவையாய் இருக்கின்றன.
ஆதலால், எனது பவ்யமான அபிமானத்தின்படி, அனைவருக்கும்
புரிவதுபோன்ற ஒரு வினயமான ஃகுத்பாவை இங்கே
முன்வைத்திடத் தலைப்படுகிறேன். மேலும், இந்தக் ஃகுத்பாவின் பிரதான நோக்கம் என்பது, வழிகாட்டும் பனுவலாய்த் திகழும் கீழ்க்கண்ட மறைவசனங்களின் அர்த்தங்களை, உதாரண நிகழ்வுகளின்
வாயிலாக அரங்கேற்றம்செய்வதுதான்.
“வலா தர்கனூ இலல்லதீன ழலமூ ஃபத மஸ்ஸகுமுன்
நார்”,
(அல் குர்'ஆன் 11:113)
"வல தஹ்ஸபன் அல்லாஹ ஃகாஃபிலன்
அம்மா யா'மலுல் ழாலிமூன்".
(அல் குர்'ஆன் 14:42)
நமது மையநீரோட்ட இஸ்லாமிய வரலாற்றில் காணக்கிடைக்கும்
ஓர் ஆளுமைகுறித்து இங்கே அறிந்துகொள்வோம். இந்த ஆளுமை, 'வாசகர்க'ளாய்த் திகழ்பவர்களுக்கு
அல்லது வரலாற்றுப் பகுப்பாய்வில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே பரிச்சயமாகியிருக்கும்
ஒரு நபர்; அவர்களால் மட்டுமே துலக்கமாக இனங்கண்டுகொள்ளப்படுபவர்.
இப்படிப்பட்டத் தலைப்புகளை எடுத்தாள்வது, பக்கசார்பு
மனப்பாங்கில் லயித்திருப்பதைவிட்டும் நம்மைப் பாதுகாக்கிறது; அதனை (நம் வாழ்விலிருந்து)
அப்புறப்படுத்துவதற்கு உதவிபுரிகிறது; தனியொரு
சிந்தனைப் போக்கை மிதமிஞ்சியரீதியில் போஷித்துவளர்க்கும்
கடும்போக்குவாதத்துக்கு அது முற்றுப்புள்ளி வைக்கிறது. ஏனெனில், அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட
இஸ்லாமிய ஆளுமையொருவரை வரலாற்றுப்
பக்கங்களிலிருந்து நீங்கள் மேற்கோள்காட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த மேற்கோளில்,
அவர் தனியொரு சிந்தனா பள்ளிக்கு அணுக்கமானவராக அடையாளப்படுத்தப்படும் பட்சத்தில், உங்களைக்
கவனித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்களுள் சிலர் சற்றைக்கெல்லாம் அந்நியப்படுத்தப்படுகிறார்கள்.
இங்கே நாம் பிரஸ்தாபிக்க இருக்கும்
ஆளுமையின்
பெயர் சுஃப்யான் அஸ்-ஸவ்ரி. இவர், ஹிஜ்ரி
முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் கூஃபா
[1] நகரில் பிறந்தார். தனது வாழ்வின் பெரும்பகுதியை இவர் கூஃபாவிலேயே கழித்தார். எனினும், இவரது மரணம் பஸ்ரா [2] நகரில்
சம்பவித்திருப்பதாக சில வரலாற்று ஆவணங்கள் கருத்து தெரிவிக்கின்றன. எப்படியிருந்தாலும்,
இந்தக் ஃகுத்பாவைப் பொறுத்தவரை நமது கரிசனைக்குப் பாத்திரமான விஷயம் அதுவல்ல.
மாறாக, அதிகாரத்தில் வீற்றிருப்பவர்களோடு ஊடாடநேரும்
தருணங்களிலெல்லாம், மேற்படி ஆளுமை வெளிக்காட்டிய அலாதியான அணுகுமுறையும், சிந்தித்துணரும்
முஸ்லிம்களான உங்கள் கவனத்தை அவ்விஷயத்தின்மீது ஒருமுகப்படுத்த எத்தனிப்பதும்தான் இவ்விடத்திலே
நமது தலையாயக் குறிக்கோள். அவ்வகையில், அதிகாரத்தை நோக்கிய அவரது அணுகுமுறையை, கீழ்த்தட்டு
மக்களின் பாஷையினூடாக பின்வருமாறு இயம்பலாம்.
'அதிகாரம்
படைத்தவர்களிடம் எனக்கு எந்த வேலையும் இல்லை; அவர்களைக்கொண்டு எனக்கு எவ்விதத் தேவையும்
இல்லை!’
இப்படிப்பட்ட அணுகுமுறைக்குச் சொந்தக்காரர் ஒரு
ஃபகீஹ்; ஒரு முஹத்திஸ்; தனக்கென தனியொரு மத்ஹபை ஏற்படுத்திக்கொண்டவர்.
நம்முன் பற்பல 'இஸ்லாமிய சிந்தனா பள்ளிகள்' இன்று வியாபித்திருப்பதுபோன்று, தனக்கென
பிரத்தியேகமான ஓர் 'இஸ்லாமிய சிந்தனா பள்ளி'யை ஏற்படுத்திக்கொண்டவர் அவர். நாளதுதேதிவரையில்
அவரது சட்ட சிந்தனா பள்ளி பிழைத்திருக்கவில்லை என்பது துரதிருஷ்டம்.
இந்தச் சிந்தனா பள்ளி மட்டுமல்ல, காலக்கிரமத்தில்
செல்லரித்துப்போயிருக்கும் இதுபோன்ற எண்ணற்ற இஸ்லாமிய சிந்தனா பள்ளிகள், வரலாற்றுப்
பக்கங்களில் விரவிக்கிடக்கின்றன.
மனத்தளவில் செயலூக்கம் மிக்கவர்களாக நாம் திகழ்வோமானால்,
இவ்விடத்தில் நமக்குள் தன்னெழுச்சியாகவே ஒரு கேள்வி முகிழ்க்கும். ‘மேற்படி சிந்தனா
பள்ளிகள் அனைத்தும் இன்றைய காலகட்டம்வரையில் பிழைத்திருக்காததன் காரணம் என்ன?’
தனக்கென தனியொரு மத்ஹபை ஏற்படுத்திக்கொண்டவர்களுள் எகிப்து நாட்டைச் சேர்ந்த அல்-லைஸ் இப்னு
ஸ'அதும் ஒருவர். இன்னின்ன விவகாரங்களில், எகிப்து நாட்டைச்சேர்ந்த இமாம் அல்லது ஃபகீஹ் அல்-லைஸ் இப்னு ஸ'அதின் இஜ்திஹாத் இன்னின்ன என்று எவரேனும்
கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? இல்லை. இத்தகைய வாக்கியங்களை உங்களில் எவரும் செவியேற்றிருக்கமாட்டீர்கள்.
பிலாத் அஷ்-ஷாமைச் [3]
சேர்ந்த அல்-அவ்ஸாயி என்ற அறிஞரும் மேற்படி வகைமையைச் சார்ந்தவர்தான். தனக்கென தனியொரு
மத்ஹபை ஏற்படுத்திக்கொண்டவர்களுள் இவரும் ஒருவர். இருந்தும் என்ன, மேற்காட்டிய
மத்ஹப்போன்று இதுவும்கூட நாளதுதேதிவரையில் பிழைத்திருக்கவில்லை. ‘இமாம் அல்-அவ்ஸாயியின்
இஜ்திஹாதில் சம்பூர்ண திருப்திகொண்டிருக்கும் முஸ்லிம்களுள் நானும் ஒருவன்’
என்று கூறிக்கொள்ளும் எவ்வொருவரையும் இன்றைய காலகட்டத்தில் உங்களால் இனங்கண்டுகொள்ள
இயலாது.
அடுத்து, பிரசித்திபெற்ற ‘அத்-தபரி’யை எடுத்துக்கொள்வோம்.
இவரது பெயரிலும்கூட தனியொரு மத்ஹப் புழக்கத்திலிருக்கத்தான் செய்தது. இந்த மத்ஹபின்
உள்விவரங்கள் குறித்து எவரேனும் அறிந்திருப்பார்களா என்றால் நிச்சயம் அறிந்திருக்கமாட்டார்கள்.
ஏனெனில், இதுவும்கூட பிரஸ்தாப மத்ஹப்கள்போன்று வரலாற்றுப் புதைகுழிக்குள் அமிழ்த்தப்பட்டுவிட்டது. இதே நிலைமைதான்,
தனக்கென தனியொரு மத்ஹபை ஏற்படுத்திக்கொண்ட ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரிக்கும்.
இவரது பின்னணிமீது சிறிதளவேனும் இங்கே வெளிச்சம்
பாய்ச்ச முயல்வோம். முஸ்லிம்களை அல்லல்களுக்கு ஆட்படுத்தியதும் அறநெறி நசிவை நோக்கி
அவர்களை உந்தித்தள்ளியதுமான முதல் ‘பெரும் சோதனை’யின்போது - அல்-ஃபித்னா அல் குப்ரா
- ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரியின் பாட்டனார், இமாம் அலியின் (ரழி) அணியுடன் தன்னைப் பிணைத்துக்கொண்டிருந்தார்.
இஸ்லாமிய வரலாற்றின் துவக்கப் புள்ளியில் வெடித்துக்கிளம்பிய அந்தப் பகாசுர ஃபித்னாவில்,
அவரது ஒட்டுமொத்த குடும்பமேகூட இமாம் அலியின் (ரழி) அணியினர்மீது சார்புவைத்திருந்ததாகவும்
அவர்களுக்குத் தங்கள் முழுமையான ஆதரவை நல்கியதாகவும் கூறப்படுகிறது.
ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரியின் குணாதிசயம் எப்படிப்பட்டது?
அவர் ஒரு ஃபகீஹ், முஹத்திஸ், புரட்சியாளரும்கூட. அவரது பெயரிலேயே 'புரட்சியாளர்'
என்ற அடைமொழி துருத்திநிற்கிறது. 'ஸுஃப்யான் இப்னு ஸயீத் அஸ்-ஸவ்ரி' [4]. அதிகாரத்தில் வீற்றிருப்பவர்களுடன்
இவர் எவ்வாறு நடந்துகொண்டார்?
இப்படிக் கூறுவதனால், தலைப்பு குறித்த அறுதியான,
உறுதியான வியாக்கியானம் இதுமட்டும்தான்; இதில் மாற்றுக்கருத்துக்கு கிஞ்சிற்றும் இடம்
கிடையாது என்றெல்லாம் எண்ணிக்கொள்ள வேண்டாம். கடந்தகாலத்தின் அந்தகாரத்திலும் நமது
ஒருங்கிணைந்த மனங்களின் அடிஆழத்திலும் மண்டியாய்க் கிடக்கும் சில வரலாற்றுத் தகவல்களை
மீள்-புத்துயிரூட்ட எத்தனிப்பதுதான் இவ்விடத்திலே நமது தலையாயக் குறிக்கோள். வியாக்கியானங்கள்மீது
ஏகபோகம் கோர முயற்சிசெய்வது அல்ல.
பரிபூரண மார்க்க அறிஞர், பேறுபெற்ற ஃபகீஹ்,
பிரசித்தமான ஆளுமை முதலான சிறப்புகளைக் கொண்டு ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரியை அனைவருமே அங்கீகரித்திருந்த,
கௌரவித்திருந்த அந்தக் காலகட்டத்தில், இஸ்லாமிய அரசின் ஒட்டுமொத்தப் பரிபாலனமும் அபு
ஜாஃபர் அல்-மன்சூரின் கிடுக்கிப்பிடிக்குள் நிலைகொண்டிருந்தது. பின்னவர் ஒருமுறை, ஸுஃப்யான்
அஸ்-ஸவ்ரியைச் சந்தித்துப் பேச தான் எண்ணம் பூண்டிருப்பதாகவும், அவரைத் தன்னிடம் அழைத்துவர
வேண்டும் எனவும் தனது அரண்மனைக் காவலாளியைப் பணிக்கிறார்.
வரலாற்றுச் செல்தடத்தில் நமது பயணத்தைத் தொடர்வதற்கு
முன் இவ்விடத்திலே ஒரு முற்றுப்புள்ளி! சற்று சிந்தித்துப்பாருங்கள். அரசாங்கத்தின்
கடிவாளத்தை தனது கரங்களில் பற்றிப்பிடித்திருக்கும் இன்றைய தலைவர் ஒருவரையே எடுத்துக்கொள்ளுங்கள்.
அவர் மன்னரோ ஜனாதிபதியோ அமீரோ சுல்தானோ
யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும். அவருக்கு உங்களைச் சந்தித்துப் பேசவேண்டும்;
உங்களுடன் உரையாட வேண்டும். இதற்காக அவர் மின்னஞ்சல்களையோ கடிதங்களையோ அனுப்பிடவில்லை.
உங்களுக்கென்றே தனியொரு நபரைப் பிரத்தியேகமாகத் தெரிவுசெய்து அனுப்பிவைக்கிறார். இந்தத்
தூதுவர் உங்களிடம் வந்து, 'மாட்சிமைப் பொருந்திய மன்னர் அல்லது மாண்புமிகு ஜனாதிபதி
உங்களுடன் கலந்துரையாட வேண்டும், சிறிதுநேரம் உங்களுடன் அமர்ந்துகொண்டு சம்பாஷிக்க
வேண்டும் என்று அவாவுகிறார்' என்கிறார்.
இப்படிப்பட்டச் சந்தர்ப்பம் இன்று வாய்க்கப்பெறுமானால்,
நம்முடைய உலமா வகையறாக்கள் நாவைத் தொங்கவிட்டுக்கொண்டு தூதுவர் பின்னால் அணிதிரண்டுவிடுவர்.
இது துரதிருஷ்டவசமானது! கனமான இதயத்துடனேயே இதனைக் கூறிக்கொள்கிறேன். நம்மைச் சூழவும்
காணக்கிடைக்கும் உலமாக்களின் இன்றைய நிலைமை இதுதான். பொருண்மையற்ற ஒரு வாக்கியமாக
இதனை நான் முன்னிறுத்தவில்லை. மேற்படி விவரிப்பின் பரப்பெல்லைக்குள் அடைத்துவிட முடியாத
நெஞ்சுரம் மிக்க அறிஞர்களும் நம்மத்தியில் இருக்கத்தான் செய்தனர். என்றாலும், முன்னவர்களின்
அபரிமித எண்ணிக்கையை ஒப்பிடுகையில் பின்னவர்கள் சொற்பமானவர்களே.
ஆக, மன்னர் அல்லது (நீங்கள் அவரை அழைத்துக்கொள்ள
விரும்புவதுபோன்று) கலீஃபா அபு ஜாஃபர் அல்-மன்சூர் தனது தூதுவரை ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரியிடம்
அனுப்பிவைக்கிறார். அந்தத் தூதுவர் ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரியிடம், 'அபு ஜாஃபர் அல்-மன்சூர்
உங்களைச் சந்திக்க விரும்புகிறார்' என்பதாகக் கூறுகிறார்.
ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி, சமயோசிதமாகப் பேசி அந்த அழைப்பினை
நிராகரிக்கத் தலைப்படுகிறார். 'மன்னித்துவிடுங்கள், என்னால் தங்களுடன் வர இயலாது, சற்று
வேலையாக இருக்கிறேன், வேலைப்பளு தற்சமயம் அதிகமாக இருக்கிறது' போன்ற
சூழ்நிலைக்குத் தோதான, வினயமான வார்த்தைகளைப் பயன்படுத்தி,
சர்வஅதிகாரம் படைத்த முஸ்லிம் நிலப்பரப்பின் ஏக ஆட்சியாளரொருவருடன் அணுக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில் தனது விருப்பமின்மையை அவர் வெளிப்படுத்துகிறார்.
ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரிக்கும் மற்றவர்களுக்கும் நன்கு
பரிச்சயமாகியிருந்த உண்மை யாதெனில், அபு ஜாஃபர் அல்-மன்சூர் தனக்குக் கீழடங்கிச்செல்லாத
ஒருவருக்கு 'மரண மிரட்டல்' விடுக்கிறார் என்றால், மரணம்
அந்த நபரை கபளீகரம்செய்யப்போவது திண்ணம் என்பதே. இவ்விஷயத்தில், சமரசம் என்ற பேச்சுக்கே
இடம் கிடையாது. இன்றைய ஆட்சியாளர்களின் சாயை, அல்லது, குறைந்தபட்சம் அவர்களில் சிலரின்
சாயையாவது அபு ஜாஃபர் அல்-மன்சூரிடம் பட்டவர்த்தனமாகப் பிரதிபலிப்பதைத் தெளிவாக நம்மால்
அவதானிக்க முடிகிறது. குறுக்கும் நெடுக்குமான காய்நகர்த்தல்களோ ஏமாற்று வித்தைகளோ இத்தகையவர்களிடம்
ஒருபோதும் எடுபடாது.
ஆக, ஆட்சியாளரின் மூர்க்கமான மறுபக்கம், அவரது அலாதியான
உளப்பாங்கு ஆகியவற்றினூடே ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரிக்கு எச்சரிக்கை விடுக்கிறார் மன்னரின்
தூதுவர். இந்த எச்சரிக்கையின் பின்னிருக்கும் அபாயத்தை மெய்யுணர்ந்துகொண்ட முன்னவர்,
'நான் நாளை அவரைச் சந்திக்க வருவதாகக் கூறுங்கள்' என்று மன்னரின் தூதுவருக்கு மறுமொழி
அளிக்கிறார். சற்றைக்கெல்லாம் தூதுவரும் அவ்விடம்விட்டு அகன்றுவிடுகிறார். அங்கிருந்து
நேரே அபு ஜாஃபர் அல்-மன்சூரின் சன்னிதானத்துக்குச் செல்கிறார். 'ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி
நாளை உங்களை வந்து சந்திப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்' என்பதாகக் கூறுகிறார்.
ஆட்சியாளரும் அதனை ஆமோதிக்கிறார்.
மறுநாள், இஸ்லாமிய அரசின் லகானைத் தன்வசம் வைத்திருக்கும்
தன்னிகரில்லாத் தலைவரான அபு ஜாஃபர் அல்-மன்சூர், ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரியின் வருகையை எதிர்நோக்கிக்
காத்திருக்கிறார். நாழிகை சென்றுகொண்டேஇருக்கிறது; முன்னவரும் எதிர்பார்த்துக்கொண்டேஇருக்கிறார்.
ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி இறுதிவரை முகிழ்க்கவேயில்லை. ஆட்சியாளாரின் மனத்துக்குள்ளோ இனம்புரியாத
ஊசலாட்டம். அன்றைய சந்திப்புகுறித்து தன்னுடைய தூதுவரிடம் ஊர்ஜிதம்செய்தவர், குறித்த
நேரத்தில் பிரசன்னமாகாததன் காரணத்தை அறிந்துகொள்ள மன்னர் அவாவுகிறார். சுற்றாடல்களில் இதுகுறித்து விசாரித்துப்பார்க்கிறார். வாய்ப்புக்கேடாக, ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரியின் இருப்பிடம் பற்றிய தகவல் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.
நடந்தது என்னவென்றால், இன்றைய 'தலைமை நீதிபதி'க்கு
இணையான ஓர் பதவியை தனது தூதுவரினூடாக ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரிக்கு வாக்களித்திருக்கிறார்
அபூ ஜாஃபர் அல்-மன்சூர். முன்னவரைச் சந்தித்தே ஆகவேண்டும் என்ற பின்னவரின் மட்டுமீறிய
அபிலாஷைக்குக் காரணம் இதுதான். ஆனால், ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரிக்கோ
இப்படிப்பட்ட ஒருவரைச் சந்தித்துப் பேசுவதில் இம்மியளவும் விருப்பம் இல்லை. ஆதலால்தான்
அவர், தனது உடைமைகளையெல்லாம் பத்திரப்படுத்திக்கொண்டு அந்நகரிலிருந்து வெளியேறிவிடுகிறார்.
தெற்கு ஈராக்கைவிட்டு வெளியேறிய அவர், தொலைதூர யெமன்
பிரதேசம் நோக்கி பிரயாணிக்கலானார். இடைப்பட்ட
காலத்தில்தான் பஃக்தாத் [5] நகரத்திலிருந்து
அந்த அறிவிக்கை வெளியானது. அபூ ஜாஃபர் அல்-மன்சூரின் அதிகாரபூர்வ அறிவிக்கை அது. அந்த
அறிவிக்கையின் முழுமையான சாரத்தை, புழக்கத்திலிருக்கும் இன்றைய சாமானியமொழியின் வாயிலாக
ரத்தினச் சுருக்கமாக விவரிக்கவேண்டும் என்றால்,
'ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி மீட்கொணரப்பட வேண்டும்;
உயிருடன்
அல்லது பிணமாக!’
மறுபுறத்தில், அறிஞரும் ஃபகீஹ்யுமான ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி யெமனைச் சென்றடைகிறார். வாழ்வாதாரத்துக்கான
வழியைத் தேடிக்கொண்டே ஆகவேண்டும் என்ற கட்டாயம் அங்கே. பண்ணையொன்றில் சித்தாள் பணியை,
அதாவது, எடுபிடி வேலையை ஏற்றுக்கொள்கிறார். நாள்கள் வெருண்டோடுகின்றன. ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரியின்
பின்னணிகுறித்து அறிந்துகொள்ள அந்தப் பண்ணை முதலாளியின் மனம் அவாவுகிறது. கேள்விக்
கோவைகளை முன்வைக்கிறார்.
உங்கள் சொந்த ஊர் எது?
நான் கூஃபா நகரைச் சேர்ந்தவன்.
எங்கள் பேரீச்சம்பழங்களை நீங்கள் சுவைத்துப்பார்த்ததுண்டா?
இல்லை.
ஏன் இல்லை? தரத்தில் மேம்பட்டவை கூஃபா நகரின் பேரீச்சம்பழங்களா
அல்லது யெமன் நகரின் பேரீச்சம்பழங்களா என்பதை நான் அறிந்துகொள்ள வேண்டுமே.
வாஸ்தவம்தான், ஆனால் பேரீச்சம்பழங்களைச் சுவைத்துப்பார்ப்பதற்கான
அனுமதியை நீங்கள் எனக்கு இதுகாறும் வழங்கிடவில்லையே. வியாகூலம் வேண்டாம். நான் சுவைத்துப்பார்த்துவிட்டு
கூறுகிறேன்.
சம்பாஷணை இங்ஙனம் நகர்ந்துகொண்டிருந்த சந்தடிசாக்கில்,
தன் மனத்தை நெருடிக்கொண்டிருந்த அந்தக் கேள்வியை முன்வைக்கிறார் பண்ணை முதலாளி.
உங்கள் முழுப்பெயரை கூறமுடியுமா?
எனது பெயர் அப்த்'அல்லாஹ்.
இந்த பதில், பண்ணை முதலாளியைத் திருப்திபடுத்திடவில்லை.
இதுதான் உங்கள் முழுப்பெயரா?
அப்படிதான் என்னை அழைத்துக்கொள்வார்கள்.
ஆனால், நாம் அனைவரும் ஒருவகையில் - அபீதுல்லாஹ்
- அல்லாஹ்வின் சேவையாள்கள்தானே. எனக்கு உங்கள் இயற்பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரியை இந்தக் கேள்வி ஒருகணம் மௌனியாக
உருமாற்றியது. மௌனத்தின் மந்தகாசம் அவர் முகத்தில்.
இயற்பெயரைக்
கூறுகிறேன், ஆனால், சிறிது கால அவகாசம் வேண்டும்.
கூஃபாவிலிருந்து வந்திருக்கும்
இம்மனிதரின் பின்னணியை எப்பாடுபட்டாவது அறிந்துகொண்டுவிட வேண்டும் என்ற பண்ணை முதலாளியின்
உளக்குமுறலை அந்தக் கணம் ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி துலக்கமாக உணர்ந்துகொள்கிறார். தனது
‘தலை’க்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ‘சன்மானம்’ இங்கு நன்றாகவே வேலைசெய்கிறது என்று
தன்னுள் நினைத்துக்கொள்கிறார். விளைவு, அவ்விடத்திலிருந்து அவரது வெளியேற்றம்; யெமனின்
பிறிதொரு பகுதியை நோக்கிய இடம்பெயர்வு.
பெருநீள வரலாற்று நிகழ்வை நீட்டிமுழக்காமல் இங்கே
சுருக்கமாக விவரித்துக்கூற முயல்கிறேன். யெமனின் இன்னோர் பகுதியைச் சென்றடைந்த அவர்,
மேற்கூறியது போன்றே சித்தாள் பணியை வரித்துக்கொள்கிறார். நினைவிலிருத்திக்கொள்ளுங்கள்.
ஒரு மாபெரும் அறிஞர், பண்ணையிலும் விளைநிலத்திலும் சித்தாள் வேலைப்பார்ப்பதில் சுணக்கம்
காட்டிடவில்லை. இந்த அல்லல்களெல்லாம் எதற்காக? சமூக அந்தஸ்துக்கும் கவுரவத்துக்கும்
ஆருடம் கூறும் அரசாங்கத்தின் உயர்பதவி ஒன்றை தனக்கு வாக்களித்துள்ள ஆட்சியாளரைச் சந்தித்துவிடக்
கூடாது என்பதற்காக; அவரின் அதிகாரத் தோரணைக்கு சிரம்பணிந்துவிடக் கூடாது என்பதற்காக.
இங்கும், முன்பு நிகழ்ந்ததுபோன்று தனது அடையாளம்,
பின்னணி குறித்து அறிந்துகொள்ள ஆர்வம்காட்டுகிறார் தன்னுடைய புதிய பண்ணை முதலாளி. பரஸ்பரம்
ஏற்பட்ட நெடிய கருத்துப் பரிமாற்றங்கள், பண்ணை முதலாளியை மதிப்பீடுசெய்வதில் ஸுஃப்யான்
அஸ்-ஸவ்ரிக்குப் பேருதவியாக அமைந்துவிடுகின்றன. தன்னுடைய புதிய முதலாளி நன்னோக்கம்,
சீரிய குணாதிசயம், நாணயமான கொடுக்கல்வாங்கல்களுக்குச் சொந்தக்காரர் என்பதை ஊர்ஜிதம்செய்துகொள்கிறார்.
அவரிடம் தனது விவரங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கூறிக்கொண்டேவருகிறார்.
எனது பெயர் ஸுஃப்யான் இப்னு ஸயீது இப்னு மஸ்ரூக்.....இத்யாதி.
சுருக்கமாக ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி.
விவரங்களைச் சாங்கோபாங்கமாகக் கேட்டறிந்துகொண்ட
பண்ணை முதலாளி, ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரிக்கு பின்வருமாறு மறுமொழி அளிக்கிறார்,
நீங்கள்
பாதுகாப்புத் தேடி எனது காலணிக்குள் அடைக்கலம் புகுந்திருந்தாலும் பரவாயில்லை, உங்களைப்
பாதுகாப்பதற்காக எனது பாதங்களை நகர்த்தாமல் இருப்பதற்கும் நான் தயங்கமாட்டேன்.
ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரிக்குப் புகலிடம் அளித்த இந்த
மனிதர், நிச்சயம் பிரக்ஞையுடன் தொழிற்படும் பற்றுறுதிகொண்ட முஸ்லிமாகத்தான் இருந்திருக்கவேண்டும்.
இப்படியே, நாள்களும் வாரங்களும் மாதங்களும் வருடங்களும் சடுதியாக நகர்ந்துசெல்கின்றன.
ஹஜ்ஜுக்குச் செல்ல
முடிவெடுக்கிறார் ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி. இடர்களை நேருக்கு நேராகச் சந்திக்கும் வாய்ப்பை
இந்தப் பிரயாணம் தனக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதை அவர் உணர்ந்துகொள்ளாமல் இல்லை.
இருந்தபோதிலும், தனது முடிவை மாற்றிக்கொள்ளும் அளவுக்கான ‘உளவியல்ரீதியான நசி’வை அவருள்
இது ஏற்படுத்திடவில்லை. பிரயாணத்துக்கான காலமும் கனிந்தது. மக்கமா நகர் நோக்கி தனது 'புனிதப் பயண'த்தைத் துவங்குகிறார் ஸுஃப்யான்
அஸ்-ஸவ்ரி.
அந்தக் காலத்தில், இன்றிருப்பது போன்ற நுழைவிசைவு
(VISA) செயல்முறைகளோ கறாரான கட்டுப்பாடுகளோ முட்டுக்கட்டைகளோ கிஞ்சிற்றும் கிடையாது.
பௌதிக, பொருளாதாரரீதியில் நீங்கள் தகுதிபெற்றவர்களாக இருக்கவேண்டும்; அவ்வளவுதான்.
இதுதான் அளவுகோல். இதனை நீங்கள் நிவர்த்திசெய்தாலே போதும். இதற்குப்பின், உங்கள் பிரயாணத்
திட்டத்தில் இடையீடு ஏற்படுத்த எவருக்கும் எவ்வித உரிமையும் கிடையாது.
ஆக, ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி ஹஜ்ஜுக்குச் செல்கிறார். தகவல் எப்படியோ எட்டுத்திக்கும் கசிந்துவிடுகிறது.
ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி மக்காவில் பிரசன்னமாகியிருக்கும்
தகவல் அபூ ஜாஃபர் அல் மன்சூரின் காதுகளை எட்டிவிடுகிறது. இங்கே வியக்கத்தக்க விஷயம்
யாதெனில், அபூ ஜாஃபர் அல் மன்சூர், தானே அந்த வருடம் ஹஜ் செய்ய திட்டமிட்டிருந்ததுதான்.
‘அல்-ஹஷ்ஷாபீன்’ என்கிற
தச்சர் குழுவொன்றை ஏவிவிடுகிறார் அபூ ஜாஃபர் அல் மன்சூர். கழுவேற்றப் பயன்படுத்தப்படும்
சிலுவை வடிவிலான மரப்பலகைகளை சிருஷ்டிப்பதில் இவர்கள் விற்பன்னர்கள். இந்த 'தச்சர்
குழு'வை தன்னுடன் மக்காவுக்கு வருமாறு பணிக்கிறார் அபூ ஜாஃபர் அல் மன்சூர்.
ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரியின் ஹஜ் பிரயாணம்குறித்த தகவல்கள் நாற்புறமும் கசிந்ததுபோலவே அபூ ஜாஃபர் அல்
மன்சூரின் மக்கா பிரயாணம்குறித்த தகவலும்
காட்டுத்தீ போல எட்டுத்திக்கும் பரவிச்செல்கிறது. மக்காவில்
நிகழவிருக்கும் இருவரது சந்திப்புக்கான இறுதிக்கட்டத்தை இவ்விடத்தில் நாம் எட்டியிருக்கிறோம்.
தனது மரணத்தின் நிச்சயத்தன்மையை இந்தக் கணம் ஸுஃபான் அஸ்-ஸவ்ரி மானசீகமாக உணர்ந்துகொள்கிறார்.
ஏனெனில், ஆட்சியாளரின் பார்வையிலோ முன்னவர் ஒரு கிளர்ச்சியாளர்; கிளர்ச்சியை ஊக்குவித்தவர்;
கலகக்காரர்; அரசாங்கத் தலைமைத்துவத்துக்கே அறைகூவல் விடுத்தவர்.
ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரியின் ஆன்மீகப் பாதையைப் பொறுத்தவரை,
சடவாதப் பெறுமானங்கள்மீது பற்றுகொள்ளாத, ஆத்மசுத்தியுடன் தொழிற்படும் மனிதர் அவர்;
இறைநிஷ்டையில், இறைவனுடனான உரையாடலில் தன்னை மறந்து ஆழ்ந்திருக்கும் புடம்போடப்பட்ட
இறையடியான் - ஸாஹித் - அவர். புழக்கத்திலிருக்கும் 'பிரசித்தமான சொல்லாடல்'
வாயிலாக அவரை விவரிக்கவேண்டும் என்றால், அவர் ஒரு சூஃபி.
ஆக, தனது வாழ்வின் முடிவை நிர்ணயிக்கப்போகும் இறுதிக்கட்டத்திலே
ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி, அல்லாஹ் ஸுப்ஹானஹு வ தா'ஆலாவோடு அணுக்கத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்
தனிமையின் கணத்தில் லயிக்கத் துவங்குகிறார். பரம்பொருளுடனான அந்தத் தனித்த உரையாடலில்
அவர் பின்வருமாறு இறைஞ்சுகிறார்:
“என்னுடைய
இறைவனே! உனது சன்னிதானத்தில் நான் முன்மொழிந்துகொள்ளும் எனது சத்தியப் பிரமாணம் இதோ,
‘அபூ
ஜாஃபர் அல் மன்சூரின் ஹஜ் முழுமையடைந்துவிடக்கூடாது!!’”
(அல்லது 'ஹஜ்ஜை அவர் நிறைவேற்றிடக்கூடாது'
என்ற பொருளிலும் இது கூறப்படுகிறது.
அபூ ஜாஃபர் அல் மன்சூர் இறந்துபோகிறார்!! தனது ஹஜ்
கடப்பாட்டை நிறைவுசெய்வதற்கு முன்னரே மரணம் அவரை ஆரத்தழுவிக்கொள்கிறது. ஏனெனில், ஓர்
இஸ்லாமிய அறிஞருக்கு தான் அளிக்கவிருக்கும் தண்டனையின் வாயிலாக பிற மக்களுக்கோர் 'முன்னுதாரண'த்தை
ஏற்படுத்திவிடலாம் என்ற வஞ்சக நோக்கத்தை, அதிகார மமதை அவருள் ஏற்படுத்திவிட்டிருந்தது.
இங்கே, இன்னோர் தகவலையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள
விளைகிறேன். ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரி, அபூ ஹனீஃபாவின் ஆசிரியர்களுள் ஒருவரும் ஜாஃபர் அஸ்-ஸாதிக்கின்
[6] மாணாக்கர்களுள் ஒருவரும் ஆவார். எனினும், இத்தகைய ஆளுமைகள்தான் இன்றைய வெகுஜன மனத்திலிருந்தும்
அவர்களின் சிந்தையிலிருந்தும் துடைத்தழிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆம். நம் வெகுஜன மனத்தினுள்
ஓர் வெற்றிடம் நிலவிவருகிறது. பல்வேறு சூழ்ச்சிகளிலும் தகிடுதத்தங்களிலும் பொறிகளிலும்
வெளிவர இயலாதபடி நாம் சிக்குண்டு கிடப்பதற்கான முதன்மைக் காரணம் இந்த வெற்றிடம்தான்.
“வலா தர்கனூ இலல்லதீன ழலமூ…….”,
(அல் குர்'ஆன் 11:113)
"வல தஹ்ஸபன் அல்லாஹ ஃகாஃபிலன்
அம்மா யா'மலுல் ழாலிமூன்".
(அல் குர்'ஆன் 14:42)
மேற்படி மறைவசனங்கள் பூடகமாக உணர்த்திநிற்கும் குணாதிசயத்தை,
நடத்தையை வெளிக்காட்டும் அறிஞர்கள் எங்கே?
இன்றைய உலகின் யதார்த்த சூழலை, கள-மெய்மைகளை கூருணர்வுடன்
அவதானிப்பதற்குத் தோதான அறவிழுமியங்கள், உயரிய அறவியல் நெறி, அகப்பார்வை ஆகியன இன்றைய
அறிஞர்களிடம் வாய்க்கப்பெற்றிருக்கின்றன என்று கூறிக்கொள்வது சிலருக்கு நகைமுரணாகத்
தோன்றலாம். 1200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்துமறைந்த ஓர் ஆட்சியாளர் பற்றிப் பேசுவது
இங்கே கடினமான காரியமல்ல; அநாயாசமாகப் பேசிச்செல்லலாம். நம் அனைவருக்கும் பொதுவான ஒரு
வரலாறுதான் இது.
ஆனால், நமது வரலாற்று ஏடுகளை மீளவும் புரட்டிப்பார்த்து,
நமது பின்னடைவுகள், இயலாமை, குறைபாடுகள், பேதமை, பிழைகள் ஆகியவற்றிலிருந்து பாடங்களையும்
படிப்பினைகளையும் உருவிப்பெற முயல்வதுதான் இங்கே கடினமான விஷயம். அதற்கான சந்தர்ப்பங்களை
இத்தகைய ஃகுத்பாக்கள் நமக்கு ஏற்படுத்தித்தருகின்றன. குறைந்தபட்சம் இதனைச் செய்வதற்கான
திராணியைகூட தங்களகத்தே வளர்த்துக்கொள்ள இயலாத நிலையில்தான் நம்முடைய அறிஞர் பெருமக்களுள்
சிலரது காலம் கழிந்துகொண்டிருக்கிறது.
ஆட்சியாளர்களின் இன்றைய நிலைகுறித்து தன்னெழுச்சியாக
முன்வந்து மக்கள் மன்றத்திலே அவர்கள் உரையாற்றியிருக்க வேண்டும்; செய்யவில்லை. இந்தக்
கையாலாகத்தனத்தைக் காரணம் காட்டி, நீங்கள் இப்படிதான் செய்யவேண்டும் என்று எவரும் அவர்களை
வற்புறுத்திக்கொண்டிருக்கவும் இல்லை. பிறரது அறிவுறுத்தல் ஒருபுறம் இருந்தாலும், அவர்களின்
தலையாயக் கடமை எது என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், அப்படிச்செய்ய
அவர்கள் கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள்.
"…..வல தஸ்தபீன ஸபீலுல் முஜ்ரிமீன்"
இதனால்,
குற்றவாளிகளின் நடவடிக்கைகளைப் பறைசாற்றும் பாதை வெட்டவெளிச்சத்துக்கு வரலாம்.
(அல் குர்'ஆன் 6:55)
மிம்பர் படிகளை ஆட்படுத்திக்கொண்டவர்களுடன்
இன்று நாம் பேதமை பாராட்டிக்கொண்டிருக்கிறோம். இதுதான் இன்றைய மெய்மை. இத்தகையவர்களிடம்
ஒருகணம் நீங்கள் தனிமையில் பேசிப்பாருங்கள். அவர்களின் 'சௌகரிய' தருணங்களிலோ பிறர்
பார்வைபடாத ரகசிய தருணங்களிலோ இத்தகையவர்களிடம் நீங்கள் சம்பாஷித்துப்பாருங்கள். 'நிலைபெற்றிருக்கும்
அமைப்புமுறையை நாங்கள் சூட்டிகையாகக் கையாண்டுவருகிறோம்; அதனைத் திறமையுடன் சமாளித்துக்கொண்டிருக்கிறோம்'
என்பதாகக் கூறுவார்கள். அல்லது, 'அரசியலிலிருந்து நழுவிச்செல்வதே ஓர் அரசியல் சூட்சுமம்தான்'
என்று தத்துவம் பேசுவார்கள். இப்படி, எண்ணிறந்த சப்பைக்கட்டுகளை இவர்கள் அடுக்கிக்கொண்டேசெல்வார்கள்.
மறுபுறத்திலோ, 'அறியாமை' எனும் கொடிய நஞ்சு நம்மை
தீக்கிரையாக்கிக்கொண்டிருக்கிறது; ஈவிரக்கமில்லாமல் நம்மை கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது.
இரண்டாம்
ஃகுத்பாவின் உபரி தகவல்கள்
விவகாரங்களைத் தெளிந்த சிந்தையுடன் அணுகுவதிலும்,
விமர்சனக் கண்ணோட்டத்துடன் அவதானிப்பதிலும் தவறொன்றும் இல்லையே. சொல்லப்போனால், முஸ்லிம்களின்
ஒட்டுமொத்த நிலைப்பாடும் இப்படிதான் அமைந்திருக்க வேண்டும்; இதுதான் அவர்களின் அடையாளமாக
இருக்கவேண்டும். அந்த வகையில், நமது விமர்சனப் பார்வையினூடாக, பிரசித்தமான இஸ்லாமிய
அமைப்பொன்றின் உயர்பதவியில் வீற்றிருக்கும் முஸ்லிமொருவர் மீது இப்பொழுது வெளிச்சம்
பாய்ச்சுவோம்.
அந்த 'முக்கியஸ்தர்', 'முஸ்லிம் உலகச் சம்மேளன'த்தின்
- 'ராபித்தத்துல் ஆலம் அல்-இஸ்லாமிய்யா'வின் - தலைவரே அன்றி வேறு யாருமில்லை.
சில நாள்கள் முன்பு அவர் ஐரோப்பாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன் நகரமொன்றில்,
ஆர்ப்பரிக்கும் முஸ்லிம் பார்வையாளர்கள் முன்பு அவர் உரையாற்றுகிறார். அந்த உரையின்
அடிநாதம் பின்வருமாறு:
'இஸ்லாமிய சூழலிலிருந்து சேய்மைப்பட்டிருக்கும்
இதுபோன்ற அயல்நாடுகளில் நீங்கள் ஹிஜாப் அணிந்துகொள்வது சட்டத்துக்குப் புறம்பான செயலாகும்.
ஒன்று, உங்கள் ஹிஜாபை நீங்கள் களைந்துவிட வேண்டும் அல்லது நாட்டைவிட்டும் வெளியேறிவிட
வேண்டும்.'
பாருங்கள் இந்த 'முரண்பட்ட' மனோபாவத்தை. ஒன்றில்
இது, இல்லையென்றால் அது!
சவூதி ராஜ்ஜியத்தின் மந்திரிகளுள் ஒருவர், கடந்த
வாரம், நாட்டின் பொருளாதாரத்தைக் கையாடல் செய்துகொண்டிருந்த அரசாங்க நிறுவனங்கள், தனிநபர்களைக்
கடுமையாகச் சாடியிருக்கிறார். பெட்ரோலிய ஏற்றுமதித் தொகை இவர்களது வங்கிக் கணக்குகளை
சட்டவிரோதமாக நிரப்பிக்கொண்டிருக்கிறதாம். இந்தத் தகவலை அறிவிப்புச்செய்வதே சவூதி வகையறாக்களில்
ஒருவர்தான். நானோ இன்னோர் முஸ்லிம் அறிஞரோ தன்னிச்சையாக அறிவிக்கும் தகவல் அல்ல இது.
பிரச்சினை வெடித்துக்கிளம்பும் இடத்திலிருந்தே அதுகுறித்த உள்விவரங்களும் நம்மை வந்தடைகின்றன.
இன்னோரன்ன பிறிதொரு சம்பவம். ‘நகைமுரண்’களால் நிரம்பியிருக்கும்
அதே நிலப்பரப்பினுள்; ரியால்களின் படாடோப
சாம்ராஜ்ஜியத்தினுள்; மம்லகத்துல் முனாஃபிகீன் - நயவஞ்சகத்தனத்தின் ஊற்றுக்கண்ணாய்த்
திகழும் அந்த ராஜ்ஜியத்தினுள். அந்நாட்டுப் பிரஜையொருவர், புதிதாய்ப் பிறந்திருக்கும்
தனது குழந்தைக்கு 'இவான்கா' என்று பெயர்சூட்ட விரும்புகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின்
மகள் பெயரே அது. முன்னவரின் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம் என்ன? டிரம்பின் 'வசீகர'ப்
போக்கு அவரைக் கவர்ந்திழுத்திருப்பதாகக் காரணம் கூறப்படுகிறது. ஏவுகணைகளைக் கொண்டு
வெவ்வேறு முஸ்லிம் நாடுகளைச் சிதைத்த ஒரு நாட்டின் தற்கால ஜனாதிபதிதான் இந்த டிரம்ப்;
அமெரிக்க விமான நிலையங்களில் வந்திறங்கிய முஸ்லிம் பயணிகளைக் குற்றவாளிகளைவிடக் கீழ்த்தரமாக
நடத்தியவரும்கூட. இதில் வசீகரத் தன்மைக்கு எங்கே இடமிருக்கிறது என்று தெரியவில்லை.
இவை அனைத்தையும் மீறி, மேற்காட்டிய சவூதி பிரஜையை அவர் வசீகரித்திருக்கிறார்.
சற்றைக்கெல்லாம் இந்தச் செய்தி சமூக வளைத்தளங்களில்
சஞ்சரிக்கத் துவங்குகிறது. ‘நகைமுரண்’களின் ராஜ்ஜியமான சவூதி அரேபியாவில், மேற்படி
நபரின் நிலைப்பாட்டால் அதிருப்தியுற்ற சிலர் வரிந்துகட்டிக்கொண்டு அவரைக் காஃபிர்
என்று வசைபாடுகிறார்கள். இந்தக் கடும்போக்கினைப் பாருங்கள். இவ்விவகாரத்தில், அந்தத்
தனிநபரின் செயல்பாடாக இருந்தாலும் சரி, அவரை நோக்கிக் கண்டனக் கணைகளை வீசியெறியும்
பின்னவர்களின் கடும்போக்காக இருந்தாலும் சரி, இரண்டுமே ஒரு முஸ்லிம் குடும்பத்திலோ
சமூகத்திலோ நிலைபெற்றிருக்கக்கூடாத உன்மத்த நிலைப்பாடுகள்.
எனினும், இத்தகைய போக்குகளும் மனோபாவங்களும்தான்
இன்றைய தேதியிலே இப்பூவுலகை, குறிப்பாக முஸ்லிம் உலகை, ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றன.
காரணம், முரண்பாடுகள், அபத்தங்களால் நிரம்பிவழியும் 'புனிதவான்க’ளின் ராஜ்ஜியமான சவூதி
அரேபியா.
இத்தோடு இது நின்றுவிடவில்லை. அந்தப் பெயரைப் பதிவுசெய்வதற்காக
பதிவகத்துக்குச் செல்கிறார் பிரஸ்தாப நபர். பிறந்த குழந்தைகளின் பெயர்களைப் பதிவுசெய்யும்
பெயர்பதிவுத் துறை, இவரது கோரிக்கையை மறுதலிக்கிறது. இவருடைய பெண்குழந்தையின் பெயரை
'இவான்கா' என்று பதிவுசெய்ய இயலாது என்கிறார் பதிவாளர். காரணம் என்ன? அப்படிக் கேட்டால்
உங்கள்மீது அரசாங்க நடவடிக்கை பாயும்!
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், இங்கே நாங்கள் 'இஜ்திஹாது'க்கான இஸ்லாமிய அடிப்படைகளைப் போதித்துக்கொண்டிருக்கவில்லை;
பிற மக்களிடமிருந்து வரும் தகவல்களையே இங்கு பிரஸ்தாபித்துக்கொண்டிருக்கிறோம். சிந்தித்துணரும்
முஸ்லிம் மனங்களை மேன்மேலும் செறிவூட்டுவதற்காக; முஸ்லிம்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதற்காக.
ஹாமித் கர்ஸாயி. உங்களுக்கெல்லாம் நன்கு பரிச்சயமாகியிருக்கும்
ஒரு பெயர்தான். ஆஃப்கானிஸ்தானின் தலைவராக, முதல் மந்திரியாக நெடியகாலம் கோலோச்சியவர்.
அந்தப் பதவிக்கு அவரை இட்டுச்சென்றதே அமெரிக்க இராணுவத்தின் காருண்யம்தான். அப்படிப்பட்டவர்,
சற்றொப்ப ஏழெட்டு நாள்கள் முன்பு தனது மௌன நிஷ்டையிலிருந்து துயிலெழுகிறார்; சோபையுடன்
வெளிவருகிறார்; அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார். ஈராக், சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) - தாயிஷ் - அமெரிக்காவின் சிருஷ்டியே அன்றி
வேறில்லை என்பதாகக் கூக்குரலிடுகிறார்.
இப்படி, நிஜஉலக விவகாரங்களைப் பற்றிப் பேசினாலோ
அதனை பெரும்திரள் முஸ்லிம்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல எத்தனித்தாலோ துரிதகதியில்
அதனை 'ஹராம்' என்கிறார்கள். கூறுங்கள்,
இதிலே ஹராம் எங்கிருந்து வந்தது?
சவூதி அரேபியாவின் பகாசுரக் கோடீஸ்வரர் அல்-வலீத்
வழக்கமான தனது தடபுடலை மீளவும் வெளிப்படுத்தியிருக்கிறார். ‘தோராயாமாக இரண்டே ஆண்டுகளுக்குள்,
அதாவது 2019-க்குள், உலகிலேயே அதிஉயரமான கட்டுமானத்தை, உயரமான கோபுரத்தை நாங்கள் நிர்மாணித்து
முடிக்கவிருக்கிறோம்’ என்பதாக எக்களித்திருக்கிறார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின்
ஹதீஸைதான் மேற்காட்டிய வாக்கியம் நமக்கு நினைவூட்டுகிறது.
அந்த ஹதீஸில் அவர்கள்(ஸல்), "காலணி அணிந்துகொள்ளாதவர்கள்,
அறைகுறை ஆடைகளுக்குச் சொந்தக்காரர்கள், ஆடு மேய்த்துக்கொண்டிருப்பவர்கள் உயரமான கட்டுமானத்தை
நிர்மாணிப்பதில் ஒருவரோடு ஒருவர் போட்டிபோட்டுக்கொள்வதை நீங்கள் காண்பீர்கள்".
என்பதாகக் கட்டியம் கூறியிருப்பார்கள். இதுதானே இன்று துல்லியமாக நடந்துகொண்டிருக்கிறது.
பாரசீக வளைகுடாவின் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே
ஒரு கட்டிடம் நடுநாயகமாக விண்ணைத் தொட்டுக்கொண்டு நிற்கிறது. இப்பொழுது, அதுபோன்ற இன்னொன்றை
அரேபிய தீபகற்பத்தின் மற்றொரு பகுதியில் கட்டியெழுப்புவதற்கான முஸ்தீபுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
இவர்களின் பட்டியலில் முன்றாவது, நான்காவது நபராக மேலெழும்பப்போவது யார், பந்தயத்தில்
இணையப்போவது யார் என்று தெரியவில்லை. இது முஸ்லிம் சமூகத்துக்கு வாய்க்கப்பெற்ற மிகப்பெரும்
இழிவு! ஒட்டுமொத்த உலக சமூகங்களுக்கும்கூட!!
இஸ்லாமிய பொறியாளர்கள், இஸ்லாமிய கட்டடக் கலைஞர்கள்,
‘இஸ்லாமிய மூலாதாரங்க’ளைக் கொண்டு இந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதுபோன்ற ஒரு 'இஸ்லாமிய'
பிம்பத்தை இதனூடாக அவர் உருவாக்கப்பார்க்கிறார். அவ்வாறல்ல. இவை எல்லாவற்றுக்கும் காரணம்,
அவரிடம் கொட்டிக்கிடக்கும் அபரிமிதப் பொருளாதார வளம்; அதனைத் தடபுடலாக வெளிப்படுத்திட
முனைப்புகாட்டும் அவரது படாடோப மனோபாவம்.
அகப்பார்வை, ஆழிய உள்ளுறை சிந்தனைக்குச் சொந்தக்காரர்களால்
மட்டுமே துலக்கமாகப் புரிந்துணர்ந்துகொள்ளும்படியான வார்த்தையொன்று புழக்கத்திலிருந்துவருகிறது.
'மால்' என்ற வார்த்தைதே அது. இவ்வார்த்தை ஓர் 'குர்'ஆனிய பதமு'ம்கூட.
'அல் மாலு வல் பனூன ஸீனத்துல் ஹயாதித் துன்யா'
‘பொருளாதாரக் கொழிப்பும், வாரிசுகளும் இவ்வுலக
வாழ்க்கையின் அலங்காரங்களே.’
(அல் குர்'ஆன் 18:46)
'வ துஹிப்பூனல்
மால ஹுப்பன் ஜம்'ஆ'
'இன்னும், பொருளாதார (செல்வ) வளத்தை நீங்கள்
வகைதொகை இல்லாமல் நேசிக்கிறீர்கள்.'
(அல் குர்'ஆன் 89:20)
'மால்'. எனும் பெயர்ச்சொல், 'மாலா'
என்ற வார்த்தையிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது. நேர்பொருள் அர்த்தம், 'பணம்'.
இந்தப் பணம் அல்லாஹ்விடமிருந்தும் அவனது பாதையிலிருந்தும் உங்களை வெகுசேய்மைக்குக்
கொண்டுசெல்கிறது.
அமெரிக்காவிலே [7] இந்த வருடத்தில்மட்டும் (அதாவது
2017), சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு மசூதி என்றரீதியில், நாளதுதேதிவரை ஐந்து மசூதிகள்
எரியூட்டப்பட்டிருகின்றன. சூழ்நிலை இப்படியிருக்க, பாதகமாக எதுவுமே நடக்கவில்லை, எல்லாம்
சுமுகமாகத்தான் சென்றுகொண்டிருக்கின்றன என்று இவர்கள் பூசிமெழுகுவார்களாம்; அதனை நாம்
அப்படியே நம்பிவிடவேண்டுமாம்.
நியூயார்க் நகரப் பள்ளிக்கூடம் ஒன்றின் இணை ஆசிரியர்
ஒருவர், ஒரு முஸ்லிம் மாணவியின் ஹிஜாபை அவரிடமிருந்து பலவந்தமாகப் பிடுங்கியிருக்கிறார்.
சூழ்நிலை இப்படியிருக்க, 'பரஸ்பர உறவுமுறைகளில் கோளாறுகள் ஏதும் இல்லை; சுமுகத்தன்மையே
மேலோங்கியிருக்கிறது' போன்ற இவர்களது பசப்பு வாக்கியங்களை நாம் எப்படி ஆமோதிப்பது?
நமது அமெரிக்கச் சமூகத்து அன்பர்கள், நம்முடனான ஊடாடத்தில் சௌகரியத்தை உணர்ந்துகொள்கிறார்களா
என்ன?
இந்த நாட்டின் ஜனாதிபதி, தனது வேலை நேரத்தின் பெரும்பாலானப்
பகுதிகளை உளவுத்துறையின் விவரணைகளைச் செவியேற்பதற்காகவும், அதே வேலை நேரத்தின் நான்கு
மணிநேரத்தை (குழிப்பந்தாட்டம்) கோல்ஃப் விளையாட்டுக்காவும் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்.
அவரது மந்திரிசபையில் பிரசன்னமாகியிருக்கும் நிதி அமைச்சர், அயல்துறை அமைச்சர், சுகாதாரத்துறை
அமைச்சர்.... இத்யாதி, அத்தனை அமைச்சர்களின் சொத்து மதிப்பையும் கூட்டிக் கழித்துப்பாருங்கள்.
ஏழைமையின் கோரப்பிடியில் சிக்குண்டு கிடக்கும் 114 தேச-அரசுகளின் ஒட்டுமொத்தப் பொருளாதாரப்
பெறுமானங்களுக்கும் அவை சமதையாக இருக்கின்றன; அமைச்சர்களின் சொத்துகள் மட்டும்!! இப்பூவுலகில்
உள்ள 114 நாடுகளின் ஒருங்கிணைந்தப் பொருளாதாரத்தைவிடவும் மேலதிகமான சொத்துகள், சொற்பத்
தொகையினரான மேற்படி தனிநபர்களிடத்தில் மட்டுமே குவிந்துகிடக்கின்றன.
பணம், அதிகாரம் ஆகியவற்றின் ஒருங்கமைந்த வெளிப்பாடுகுறித்து
அல்லாஹ் - சுப்ஹானா - தனது திருமறையில் அறிவுறுத்தியிருக்கவில்லையா? நிச்சயம்
அறிவுறுத்தியிருக்கிறான். என்றாலும், அதுகுறித்த மெய்மறதியிலே நாம் சஞ்சரித்துக்கொண்டிருக்க
வேண்டும் என்பதுதான் இவர்களின் அபிலாஷை.
இந்நாட்டின் (அமெரிக்காவின்) ஜனாதிபதி, இன்னும்
சில நாள்களில் சவூதி அரேபியா செல்லவிருக்கிறார். அங்குள்ள ஆட்சியாளர்கள், இவருடன் சேர்த்து
இன்னும் பதினேழு நாட்டின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அங்கே உச்சிமாநாடு
(Summit) ஒன்றை நடத்தப்போகிறார்களாம். அனுகூலமற்ற இந்த உச்சிமாநாடு எதற்காக? இதன் நோக்கம்தான்
என்ன?
இதற்குப்பிறகும் முஸ்லிம்களால், ரியாதிலிருந்து
வெளிக்கிளம்பி இஸ்ரேல் வழியாக வாஷிங்டனில் முற்றுபெறும் ஷைத்தானிய வலைப்பின்னல்களை
இனம்கண்டு, அவற்றைப் பரிசீலனைசெய்ய இயலவில்லை எனில், கடந்துசெல்ல வேண்டிய பயணதூரத்தில்
நாம் வெகுவாகப் பின்தங்கியிருக்கிறோம் என்பதைத் தவிர இயம்புவதற்கு இங்கே வேறெதுவும்
இல்லை!
இறைவன் நன்கறிந்தவன்.
குறிப்புகள்:
1.
கூஃபா: தற்கால
ஈராக் நாட்டின் தொன்மையான நகரங்களுள் ஒன்று.
2. பஸ்ரா: அதே ஈராக்
நகரின் பிறிதொரு பகுதி.
3. பிலாத்
அஷ்-ஷாம்: தற்கால சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், லெபனான் ஆகிய
நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய அன்றைய நிலப்பரப்பு.
4. அஸ்-ஸவ்ரா: நேர்பொருள்
- புரட்சி.
5. பஃக்தாத்: அப்பாஸிய
ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய அரசின் தலைநகரம்; தற்கால ஈராக்கின் ஒரு பகுதி.
6. ஜாஃபர் அஸ்-ஸாதிக், மைய நீரோட்ட
'ஷியா'யிஸமான 'இஸ்னா அஷரி - பன்னிருவர் இமாமிகள் - ஷியா'
பிரிவின் ஆறாவது இமாம் ஆவார். இவரது வகுப்பறைகளும், கல்விப் பட்டறைகளும், ஹதீஸ்துறை மற்றும் வேறுபல விஞ்ஞானங்களில்
4000-க்கும் மேற்பட்ட அறிஞர்களை உருவாக்கிவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சுஃப்யான்
அஸ்-ஸவ்ரி, அபூ ஹனீஃபா, ஃகாதி சுகூனி, ஃகாதி அபூ அல்-பஃக்தாரி உள்ளிட்ட பிரசித்தமான
சுன்னி அறிஞர்களுள் பலர் இவரது கல்விப் பட்டறைகளில் பாடம் பயின்றிருக்கிறார்கள்.
அப்பாஸிய கலீஃபா அபூ ஜாஃபர் அல் மன்சூரின் தகிடுதத்தத்தினூடாக, மதீனாவில் வைத்து
இவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதாக ஷியா மூலாதாரத் தரவுகள் பிரஸ்தாபிக்கின்றன.
(பார்க்க: Sayyid Muhammad Husayn
Tabataba’I, ‘Shi’ite Islam’).
7.
இந்தக் ஃகுத்பா,
அமெரிக்காவில்வைத்து நிகழ்த்தப்படுவதால், அந்நாடு சார்ந்த மேற்கோள்களை ஃகுத்பாவின் பல்வேறு இடங்களில் இயல்பாகவே நீங்கள்
கடந்துவருவீர்கள்.
கலைச்சொற்கள்
தொடர்பிலான மேலதிகப் புரிதலுக்கு வாசிக்க:
1.
Jonathan A. C. Brown, ‘Hadith:
Muhammad’s Legacy in the Medieval and Modern World.’
2. Muhammad
Abu Zahra, ‘The Four Imams’.
3. Hamid
Enayat, ‘Modern Islamic Political Thought’.
4. Sayyid
Muhammad Husayn Tabataba’I, ‘Shi’ite Islam’.
5. முஹம்மது அபு ஸஹ்ரா, 'இமாம் அபூ ஹனீஃபா: வாழ்வும் பணிகளும்'.
6. மார்டின் லிங்ஸ், 'சூஃபியிசம் என்றால் என்ன?' (English
Version: Martin Lings, ‘What is Sufism?’).
7. டாக்டர் முஹம்மது முஸ்தபா அஸமி, 'ஹதீஸ்: முறைமையும் தொகுப்புகளும்'.
8. கலோனல் குலாம் சர்வர், ஹஸ்புல்லாஹ் ஹாஜி அப்துர் ரஹ்மான், 'இஜ்திஹாத்:
நவீன காலச் சட்டச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்துவதன் அவசியம்.'
9.
ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி,
'கருத்து
வேறுபாடுகளும் காரணங்களும்.'
No comments:
Post a Comment