'ஹதீஸ் புனைவு' ஓர் சுருக்கமான அலசல்
(பகுதி-1)
டாக்டர் முஹம்மது முஸ்தபா அஸமி
முஹம்மது அபூ ஸஹ்ரா
தமிழில்:
அ. ஜ. முஹம்மது ஜனீர்
உவைஸ் அஹ்மது
சுருக்கத் தொகுப்பு மற்றும்
செம்மையாக்கம்: அபு தர்
கால, இட பேதங்களுக்கு அப்பாற்பட்டு, எல்லா முஸ்லிம்களும்
பின்பற்றியொழுகத் தலைப்படும் ஓர் முன்மாதிரியே
நபிகளாரின்(ஸல்) வாழ்வு. இதனை ஆழமாக விளங்கிவைத்திருந்ததன் காரணத்தால்தான், நபிகளாரின் காலத்திலேயே நபித்தோழர்கள்
சுன்னாஹ் குறித்த அறிவைப் பாரெங்கும் பரப்பத் தொடங்கியிருந்தார்கள்; அவ்வாறு இயங்கும்படி,
நபிகளாரே முன்னின்று அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் வழங்கியிருக்கிறார்கள்.
தவறுகள் இழைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவாக
இருந்தபோதும், ஹதீஸ் பரவலாக்கப் பணியில்
ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் நபிகளார் ஈடுபடுத்திடவில்லை. மாறாக, மக்கள் மனங்களினுள் எச்சரிக்கை
உணர்வை விதைப்பதிலேயே அவர்கள் அபரிமித கவனம்செலுத்தினார்கள், "நான் கூறியதாக, ஒரு பொய்யை எவரொருவர் வேண்டுமென்றே இட்டுக்கட்டுகிறாரோ,
அவர் நரகத்தில் தமக்குறிய இடத்தைப் பெற்றுக்கொள்ளட்டும்!", பிறிதொரு
ஹதீஸில், "நான் கூறாதவற்றைக் கூறியதாக
புனைந்துகூறும் ஒருவரின் இருப்பிடம் நரகத்தில் நிச்சயிக்கப்பட்டுவிட்டது!"
இத்தகைய எச்சரிக்கைகள், நபித்தோழர்கள் மத்தியில் அதிர்வலைகளை
ஏற்படுத்தியிருந்தன. ஏராளமானத் தோழர்கள், தமது நினைவாற்றல்மீது உறுதியான நம்பிக்கையில்லாத
சந்தர்ப்பங்களில், ஹதீஸ் பரவலாக்கத்தில் ஈடுபடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துக்கொண்டார்கள்.
சில நபித்தோழர்கள், நபிகளார்குறித்து வினவப்படும் கேள்விக்கு அளிக்கப்படும் பதில் பற்றிய
நம்பகத்தன்மை, உறுதி, பிறழ்வின்மை ஆகிய கூறுகள்மீது அதீத கவனம் செலுத்தும்படி ஏனையத்
தோழர்களை எச்சரித்துக்கொண்டேயிருந்தார்கள்.
நபித்தோழர்களில் காலத்தில் ஹதீஸ் புனைவு
இஸ்லாத்தின் பரவலாக்கத்துடன் சேர்த்து, ஹதீஸ் பரவலாக்கத்தின் பரப்பெல்லையும் விரிந்துகொண்டே சென்றது. இஸ்லாமியப் படையெடுப்புகளில் ஏராளமான நபித்தோழர்கள் தங்களை மும்முரமாக ஈடுபடுத்திக்கொண்டனர். சீறிய ஆசிரியர்களாய்த் திகழ்ந்த இவர்கள் ஒவ்வொருவரும் சுன்னாஹ் குறித்த அறிவைப் பரப்புவதில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
குர்ஆன்,
சுன்னாஹ்வின் பரவலாக்கத்தில் அதீத கரிசனைகொண்டிருந்த உமர் (ரழி), அவற்றில்
மேதைமைப் பெற்றிருந்த ஏராளமானோரை இஸ்லாமிய உலகின் பல்வேறு திக்குகளுக்கும் அனுப்பிவைத்தார்.
உமரின் இந்த முன்னெடுப்பை, ஹதீஸ் பரவலாக்கத்தின் வெற்றிப் பின்னணிக்கான பிறிதொரு
முக்கியக் காரணியாகக் குறிப்பிடலாம். இப்படி, ஹதீஸ்
பரவலாக்கத்துடன் சேர்த்து தவறுகள் இழைக்கப்படுவதற்கான சாத்தியங்களும் ஒருசேர அதிகரித்ததால்,
திறனாய்வுக்கான அவசியம் உணரப்படலானது.
இந்தச் சூழலில், முஸ்லிம் சமூகம் சில முக்கியப்
பிரச்சினைகளை எதிர்கொண்டது. அவற்றுள் பிரதானப் பிரச்சினை, உஸ்மானின் (ரழி) கொலையும்,
அதன் நீட்சியாக அலீ, முஆவியா ஆகியோருக்கிடையே முகிழ்த்த பகைமைத் தணலும். இது, முஸ்லிம்
சமூகத்தின் உள்விரிசலை மேன்மேலும் அதிகரித்தது. இந்தச் சூழமைவில்தான், அரசியல் அடிப்படையில்
ஒவ்வொரு சாராரையும் புகழ்ந்தோ, இகழ்ந்தோ ஹதீஸ்களைப்
புனைந்துகூறும் முயற்சி தொடங்கியது.
பிரச்சினைகளும் வாதப் பிரதிவாதங்களும் கருத்துமோதல்களும்
உருவெடுக்கும் இடங்களிலெல்லாம் சுயநலன் கருதிச் செயல்படுவோர் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள
முயல்வதும், முஸ்லிம்களுள் சிற்ந்தவர்களாகத் தங்களைச் சித்திரித்துக்காட்ட எத்தனிப்பதும்
இயல்புதான். அன்றையச் சூழலில் நடந்ததும் அதுதான்.
இக்காலகட்டத்தில்தான், ஹதீஸ்
கற்கைநெறியில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. திறனாய்வு தொடர்பில்
பிராந்தியக் கல்வி நிலையங்கள் தோற்றம்பெற ஆரம்பித்தன. அவற்றுள் பிரச்சித்திபெற்ற ஒன்று
மதீனாவை மையமாகவைத்து இயங்கிக்கொண்டிருந்தது;
மற்றொன்று ஈராக்கை.
ஹதீஸ்வாதிகள்,
அபிப்பிராயவாதிகள் காலகட்டத்தில் ஹதீஸ்
புனைவு
தாபியீன்கள் காலத்தில்,
சமகாலப் பிரச்சினைகள், சிக்கல்களுக்கான தீர்வுகளைக் கண்டடையும் பாதையில், முஸ்லிம்களின்
கூட்டமைப்பானது ஹதீஸ்வாதிகள், அபிப்பிராயவாதிகள் என்று இருபெரும் பிரிவுகளாகப்
பிரிந்தது. ஹதீஸ்வாதிகளில் பெரும்பகுதியினர் ஹிஜாஸை வாழிடமாக வரித்துக்கொண்டவர்கள்.
இவர்களின் இந்த நிலைப்பாட்டுக்கு ஹிஜாஸ் பிரதேசத்தின் சிறப்பியல்புகளும் ஒரு
காரணம். ஏனெனில், அக்காலகட்டத்தில், நபித்தோழர்களின் இல்லமாகவும் வேத வெளிப்பாட்டின்
பூமியாகவும் விளங்கிய ஒரே நிலப்பரப்பு ஹிஜாஸ் மட்டும்தான். பிறிதொரு காரணம்,
அபிப்பிராயத்தை வெகுஅரிதாகப் பிரயோகித்துவந்த நபித்தோழர்களால் பயிற்றுவிக்கப்பட்ட தாபியீன்களில்
பலர் அங்கே குடியமர்ந்திருந்தமை.
அதுபோன்று, அபிப்பிராயவாதிகளில் பெரும்பகுதியினர்
ஈராக்கை வாழிடமாக வரித்துக்கொண்டவர்கள். ஏனெனில், அந்நகரம்தான் அபிப்பிராயவாதிகளுக்குப்
பயிற்சியளித்த அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் உறைவிடமாகத் திகழ்ந்தது. தவறிழைப்பதற்கு
அஞ்சி நபிமொழிகள் அறிவிப்பதைவிட்டும் அவர் தவிர்ந்திருந்தாலும், தேவைப்படும் தருணங்களில்
அபிப்பிராயத்தைப் பிரயோகித்திடத் தவறவில்லை. தீர்வுகளைக் கண்டடைவதையிட்டு, ஓர் வலுவான
ஹதீஸ் கிடைக்கப்பெறுமாயின், அபிப்பிராயத்தைவிட ஹதீஸுக்கே அவர் முன்னுரிமை
வழங்கினார்.
பழமைவாத தத்துவங்கள் மற்றும் அறிவியல்கள், கிரேக்க-ரோம
மரபிலக்கியங்கள் முதலானவை அக்கால ஈராக்கியச் சமூகத்தில் ஆழமாக விரவிக்கிடந்தன. இந்த
அந்நியச் சித்தாந்தத் தாக்கத்தால் அந்நிலப்பரப்பின் முஸ்லிம்களும் வெகுவாகப் பீடிக்கப்பட்டிருந்தனர். இத்தகையவர்கள், தங்களுக்கு ஆலோசனை
வழங்குவதன் நிமித்தம் ஹதீஸ்கள் கிடைக்கப்பெறாத தருணங்களில் அபிப்பிராயத்தை மையப்படுத்திய
இஜ்திஹாதையே பரவலாகப் பிரயோகித்துவந்தனர்.
இவ்விரு பிரிவினருக்கும் மத்தியில் நிலவிவந்த விரிசல்,
தபஅத் தாபியீன்கள் காலகட்டத்தில் கணிசமாக அதிகரித்தது; கருத்துவேறுபாடுகள் தீவிரமடைந்தன.
இவ்விரு பிரிவினரின் சந்திப்பிடங்களும் கருத்துப்போருக்கான களங்களாக மாறின. காலக்கிரமத்தில்
ஹதீஸ்வாதிகள், அபிப்பிராயம்குறித்த தங்கள் முந்தைய சுணக்கத்தை, விதிவிலக்கான
வழக்குகளில் புறந்தள்ளக்கூடிய கட்டாயத்துக்கு ஆளாகினர்; அதாவது, சில வழக்குகளில், வேறுவழியின்றி
அபிப்பிராயத்தைப் பிரயோகிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
அபிப்பிராயவாதிகளோ, மறுபுறத்தில் தங்களுக்குக் கிடைக்கப்பெற்ற
சுன்னாஹ் அல்லது ஹதீஸைத் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தினர். தங்கள் அபிப்பிராயத்துக்கு
அத்தகைய ஹதீஸ்களைக்கொண்டு வலுசேர்த்தனர் அல்லது புதிதாகக் கிடைக்கப்பெற்ற வலுவான
ஹதீஸின் வீரியம் காரணமாக
தங்கள்
முந்தைய அபிப்பிராயத்தைப் புறந்தள்ளினர். ஃபிக்ஹு இயலின் பரிணாம வளர்ச்சியைப்
பறைசாற்றிய காலம் என்றும் இக்காலகட்டத்தைக் குறிப்பிடலாம்.
இறைத்தூதர்குறித்த பொய்களும் புரட்டுகளும் மலியத்
துவங்கியதும்கூட இதே காலகட்டத்தில்தான். ஏனெனில், பல்வேறு குழுக்கள் தத்தம் நிலைப்பாடுகளை,
புனைவு வாசகங்களைக் கொண்டு செறிவூட்டிய கைங்கர்யம் இக்காலகட்டத்திலேயே அரங்கேற்றப்பட்டது.
இப்படி, ஹதீஸ் புனைவின் வீச்செல்லையானது காலக்கிரமத்தில் சடுதியாக அதிகரித்தது.
தங்களால் புனையப்பட்ட ஹதீஸ்களைப் பேணிப் பாதுகாப்பதில், சம்பந்தப்பட்ட குழுக்கள்
அதீத சிரத்தை எடுத்துக்கொண்டன; பின்னர், முஸ்லிம்களுக்கு மத்தியில் அவற்றைப் பரப்பிவிடுவதற்கான
முஸ்தீபுகளும் கர்மசிரத்தையுடன் மேற்கொள்ளப்பட்டன.
பொய்கள், இட்டுக்கட்டுதல்கள், புனைந்துரைகள் ஆகியவற்றின்
பெருங்குவியல், இருவேறு கூறுகளின் எழுச்சிக்கு வித்திட்டது. ஒன்று, அறிஞர்கள் தங்களை
நம்பகத்தன்மைவாய்ந்த அறிவிப்புகளை இனங்காணும் ஆய்விலும், உண்மை, புனைவு ஆகியவற்றைத்
தரம்பிறிக்கும் முயற்சியிலும் ஈடுபடுத்திக்கொண்டது; மற்றொன்று, உக்கிரம் குறைந்த பின்விளைவுகளுக்குச்
சொந்தமான அபிப்பிராயத்தை மையப்படுத்தி
ஃபத்வாக்கள் வழங்கத் துணிந்தது. இவற்றுள், இரண்டாம் வழிமுறையானது, இறைத்தூதர்குறித்துப்
பொய்யுரைப்பதை அஞ்சியோ அல்லது புனைவுகளைச் சார்ந்திருப்பதை அஞ்சியோ செயல்படுத்தப்பட்டதாகக்
கூறப்படுகிறது.
ஹதீஸ் பரவலாக்கத்தில் புனைந்துகூறலும் தவறிழைத்தலும்
தொடக்ககால அறிஞர் பெருமக்கள் ஹதீஸ்களைப்
பிறருக்கு அறிவிக்கும்பொழுதோ அல்லது எழுதும்பொழுதோ கர்மசிரத்தையுடன் செயல்பட்டார்கள்.
ஆனாலும், அறிஞர்களே கூறுவதுபோல, தூய்மையான மனத்துடன் செயல்படுபவர்கூடச் சந்தர்ப்பவசமாகத்
தவறிழைத்துவிடுவது இயல்புதான்.
நபிகளாரின் சுன்னாஹ்வைப் பொறுத்தவரை, அது
முஸ்லிம் சமூகத்துக்கான நித்திய முன்மாதிரி. எனவே, அது திரிபுக்கு ஆட்படுவதை முஸ்லிம்கள்
நிச்சயமாக அனுமதிக்க மாட்டார்கள். அவ்வகையில், இழைக்கப்படும் தவறுகளைக் களைந்துகொள்வதன்
நிமித்தம் தீவிர திறனாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதாயிற்று. பின்வரும் சம்பாஷணை,
மேற்படி கூற்றைப் புரிந்துகொள்வதில் வாசகர்களுக்கு உதவியாக அமையலாம்.
இரண்டாம் நூற்றாண்டின் மிகப்பெரும் மார்க்க அறிஞர்களுள்
ஒருவரான யஹ்யா-பின்-ஸஈத் அல் கத்தான் மரணத்தை அண்மியவராக இருந்தார். அவருக்கும், நோய்நொடியின்போது
அவரைப் பராமரித்துவந்த ஒருவருக்கும் மத்தியில் நடைபெற்ற உரையாடலின் சிறு துணுக்கு பின்வருமாறு:
‘என்னைக்
குறித்த பஸ்ரா மக்களின் அபிப்பிராயம்
என்ன?'
'அவர்கள்
உங்களை மிகவும் சிலாகித்துக் கூறுகிறார்கள். என்றாலும், அறிஞர்களைக் கடிந்துகொள்ளும்
உங்கள் தீவிரம்குறித்து அவர்கள் அச்சம்கொள்ளவும் தவறவில்லை.'
'நான்
கூறுவதைக் கேளும், மறுமையில் யார் வேண்டுமானாலும் என்னை எதிர்த்துநிற்கலாம். ஆனால்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), என்னைத் தொடர்புபடுத்திக் கூறப்பட்ட ஹதீஸொன்றை நீர் செவிமடுத்தீர், அது உண்மையானதல்ல
என்பதை உம் மனம் உமக்கு உணர்த்தியது, என்றாலும், அதனை நீர் கண்டனம்செய்யாமல் விட்டுவிட்டீர்
எனக் கூறாதிருக்க வேண்டும்.'
ஹதீஸ் திறனாய்வுகள்
மேற்கொள்ளப்பட்டதன் பின்னணியிலிருக்கும் தீடசண்யப் பார்வை மற்றும் தெளிந்த அறிவுக்கான
ஒரு சிறிய உதாரணம்தான் மேற்படி நிகழ்வு. இத்தகைய திறனாய்வுகளெல்லாம் எவ்வித அச்சமும்
ஆதரவுமின்றி நிகழ்த்தப்பட்டன. தந்தை மகனையும் மகன் தந்தையையும் சகோதரர் தன் சகோதரரையும்
நண்பர்கள் தங்களுக்கு அணுக்கமானவர்களையும் துணிச்சலாக இடித்துரைத்துவந்தனர். இக்கூற்றுக்கு
வலுசேர்க்கும் வகையில், ஹதீஸ் திறனாய்வு வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகள் விரவிக்கிடக்கின்றன.
மக்கள், தங்கள் நண்பர்களை உயர்த்தியும் பகைவர்களைத் தாழ்த்தியும்
மதிப்பிடும் போக்கு வாழ்க்கைச் சுழற்சியில் இயல்பாக ஏற்படக்கூடியதுதான். இம்மானுட இயல்புகள்,
முஹத்திஸீன்கள் மேற்கொண்ட தரப்படுத்தும் பணிகளைப் பாதித்திருக்குமா? நிச்சயமாக
இருக்கலாம். ஏனெனில், இது இயல்பான மானுட பலவீனம். முஹத்திஸீன்களும் மனிதர்களே.
தெளிந்த சிந்தையுடன் தொழிற்படத்தான் அவர்கள் அனைவரும் முயற்சிசெய்தார்கள்.
என்றாலும்,
இயல்பான மானுட பலவீனங்களின் செல்வாக்கானது, ஹதீஸ் தரப்படுத்தலில் வேரூன்றுப்
பரவியதை அவர்களால் தடுத்துநிறுத்த இயலவில்லை. அறிஞர்கள் பலர் இவ்விஷயத்தை ஆழமாக ஆராய்ந்துள்ளார்கள்.
ஹதீஸ்
புனைவின் வகைமை
முஸ்லிம்களைப் பொறுத்தவரை, குர்ஆனுக்குப்பின் அவர்களிடத்தில்
பெறுமதிமிக்கதாகக் கருதப்படுவது நபிகளாரின் சுன்னாஹ் மட்டும்தான். எனவே, மக்களில்
பலர் காலக்கிரமத்தில், வெவ்வேறு காரணங்களுக்காகவும் தங்கள் லௌகீக நலன்களுக்காகவும்
ஹதீஸ்களைப் புனைந்துரைக்கத் துவங்கினர். கடும்போக்குவாதிகள், தமது நிலப்பரப்புகளை
முஸ்லிம்களிடம் இழந்துவிட்டவர்கள், கல்வியறிவில் பின்தங்கியவர்கள், நன்நோக்குடனும்
ஆத்மசுத்தியுடனும் தொழிற்பட்டவர்கள், அந்நியக் கொள்கை மற்றும் கருத்தியலால் தாக்கம்பெற்றவர்கள்
என்று 'ஹதீஸ் புனைவு' செயல்முறையில் ஈடுபட்டவர்களின் வகைமைப் பட்டியல் பெருநீளமானது.
நபிகளாரின் வாக்குகளாகப் பொய்களைப் புனைந்துகூறும்
கைங்கர்யத்தை இரு பகுப்புகளாகப் பிரிக்கலாம்:
1. பொய்களை
வேண்டுமென்றே புனைந்துரைத்தல். இது, ஹதீஸ் மவ்தூ என வழங்கப்படுகிறது.
2. ஆழ்ந்த
பகுப்பாய்வுக்குப் பின்பும் போலி ஹதீஸ்களை இனம்காணத் தவறுதல் அல்லது கவனக்குறைவின்
விளைவாக புரட்டு ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளுதல். இவ்வகை ஹதீஸ், பாதில்
என வழங்கப்படுகிறது.
ஹதீஸ் புனைவுகள்குறித்துக் கூறும்போது,
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை மவ்தூ, பாதில் ஆகிய வகைமையினுள் எவற்றில்
அடங்கும் என்பதை அறிஞர்கள் பகுத்துக் காட்டவில்லை; தவிரவும், மேற்படி ஹதீஸ்
வகைமைகளுக்குத் தனித்தனித் திரட்டுகள் அமைக்கவும் அவர்கள் தவறிவிட்டனர்.
வேண்டுமென்றே
ஹதீஸ்களைப் புனைந்துரைத்தல்
இஸ்லாத்தை
நேருக்குநேர் நின்று எதிர்க்கத் திராணியற்றவர்களாய், அறிவுப் போர்வையினுள் நுழைந்துகொண்டு
பங்கம் விளைவித்த ஸிந்தீக்குகள் இவ்வகைமையினுள் அடங்குவர். இவர்கள் தங்களை அறிஞர்
பெருமக்கள்போல சித்தரித்துக்கொண்டனர். இதனூடாக, மக்கள் மனங்களினுள் ஐயங்களைக் கிளறிவிடும்
ஹதீஸ்கள் பலவற்றைப் புனைந்துரைத்தனர். இவர்களில், ஹதீஸ் புனைவுகளுக்காகக்
குற்றம்பிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். குற்றங்களை ஒப்புக்கொள்ளும்
இவர்கள், சிலவேளைகளில் தாங்கள் புனைந்துகூறிய ஹதீஸ்களின் எண்ணிக்கைகுறித்து
ஒப்புதல் வாக்குமூலமும் அளித்திருக்கின்றனர்.
பலவீனமான இதயம்கொண்ட சிலர், தூய எண்ணத்துடன் ஹதீஸ்களைப்
புனைந்துரைத்திருப்பதையும் பல்வேறு நிகழ்வுகள் வாயிலாக நம்மால் அவதானிக்க முடிகின்றது.
"குர்ஆன் அத்தியாயங்களின் மகத்துவம்குறித்து இப்னு அப்பாஸ் கூறியிருப்பதாக இக்ரிமாவால்
அறிவிக்கப்படும் ஹதீஸ்களை எங்கிருந்து நீர் பெற்றுக்கொண்டீர்? அவை இக்ரிமாவின்
மாணவர்களிடம்கூட இல்லையே!" என்று அபூ உமாரா அல்-மர்வஸீ, அபூ இஸ்மாவிடம் கேள்வியெழுப்புகிறார்.
அதற்கு, "மக்கள், தங்கள் கவனத்தை குர்ஆனைவிட்டும் மடைமாற்றிவிட்டார்கள்; அபூ ஹனீஃபாவின்
ஃபிக்ஹு, முஹம்மது இப்னு இஸ்ஹாக்கின் மகாஸீ ஆகியவற்றில் அபரிமித கவனம்செலுத்தத்
துவங்கிவிட்டார்கள். இந்நிலையில், மறுமையின் பலன்கருதி இந்த ஹதீஸ்களை நான் புனைந்து
கூறினேன்." என்று அபூ இஸ்மா பதிலளித்தார்.
அதுபோன்று, சந்தைகள், பள்ளிவாசல்களில் கதைகூறிப்
பிழைப்பு நடத்துபவர்களும் நபிகளார்மீது ஹதீஸ்களைப் புனைந்துகூறினர். ஆட்சியாளர்களிடம்
வெகுமதிபெறும் நோக்கில் ஹதீஸ்கள் புனைந்துரைக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகளையும்
அறிஞர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.
மதச்சார்பின்மைவாதிகள், தத்தம் பிரிவினருக்குத் தோதான வகையிலோ
அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது இன, பிரதேச ஆதரவை மையப்படுத்தியோ அல்லது சுயநலன்
கருதியோ புரட்டு அறிவிப்புகளை அவிழ்த்துவிட்டிருக்கின்றனர். ஆக, வேண்டுமென்றே ஹதீஸ்களைப்
புனைந்துகூறியவர்களின் பட்டியில் இவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
உள்நோக்கமின்றிப்
புனைந்துரைத்தல்
ஹதீஸொன்றை வேண்டுமென்றே புனைந்துரைக்காவிட்டாலும்,
வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு வழிமுறையினூடாக அவற்றில் பிழைகளைச் செருகியோரும்
தவறுகள் இழைத்தோரும் இருக்கத்தான் செய்தனர். இத்தகையோரைப் பின்வருமாறு பகுத்துக்கொள்ளலாம்.
முதல் வகையினர், நன்கு பரிச்சயமாகியிருந்த ஓர் ஹதீஸை
தெரிவுசெய்து, தனது தனித்துவத்தை வெளிக்காட்டுவதையிட்டு, அதற்கோர் புதிய அறிவிப்பாளர்
தொடரை அறிமுகம்செய்தவர்கள். அறிவுப் பசியைத் தணித்துக்கொள்வதாயின் தன்னையே அனைவரும்
நாடிவர வேண்டும் என்ற நோக்கமே மேற்படி வழிமுறையின் அடிநாதமாகக் கொள்ளப்படுகிறது.
இரண்டாம் வகையினரும், மேற்கூறியதுபோல் அறிவிப்பாளர்
வரிசைகளில் தவறிழைத்தவர்களே. உதாரணமாக, நபித்தோழர் அல்லது தோழர்களுக்குப்பின் வந்த
தாபியீனுடன் முற்றுபெறுவதாக அமைந்திருக்கும் ஓர் இஸ்னாதை (அறிவிப்பாளர்
தொடர்), இவர்கள் நபிகளார்வரை நீட்டிச் செல்வார்கள். நபிகளாரின் தோழர்களோடு நிறைவுபெற்றிருந்த
பற்பல இஸ்னாது வரிசைகளில் இத்தகைய பிறழ்வுகள் எளிதாக ஏற்பட்டுவந்தன.
'பக்திமான்கள்' அல்லது 'பரிசுத்தவான்களில்' சிலர்,
'இபாதா'வில் மிதமிஞ்சிய கவனம்செலுத்தியதன் விளைவாக, ஹதீஸ் கல்வியை ஓரம்கட்டினர்
அல்லது ஹதீஸ் களத்தில் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிடாது பொடுபோக்குடன்
செயல்பட்டனர். விளைவாக, இவர்களின் ஹதீஸ் அறிவிப்புகளில் எண்ணிறந்த பிழைகள் முகிழ்க்க
ஆரம்பித்தன. இவர்களை மூன்றாம் வகையினராகக் கொள்ளலாம். மேற்படி பொடுபோக்குத்தனம் குறித்து,
இரண்டாம் நூற்றாண்டு அறிஞர்களுள் ஒருவரான யஹ்யா பின் ஸயீத் அல்-கத்தான் பின்வருமாறுக்
கூறுகிறார், 'நன்மைசெய்வோர் எனப் புகழ்பெற்றிருந்தோர்போன்று தவறுகள் அதிகம் இழைத்தோர்
வேறெவரையும் நான் சந்தித்ததேயில்லை.'
நான்காம் வகையினர், பிரசித்திபெற்ற ஷெய்குகளிடம்
ஹதீஸ் கற்றுக்கொண்ட அறிஞர்களுள் சிலர். அதே ஷெய்குகள் அறிவிப்புச்செய்த வேறுபல
ஹதீஸ்களை இவர்கள் காலக்கிரமத்தில் தவறவிட்டனர். விளைவாக, ஹதீஸ் அறிவிப்புகளில்
சர்வசாதரணமாகப் பிழைகளும் முரண்களும் தோற்றம்பெற்றன.
ஆசிரியர் வாயிலாகக் கற்றுக்கொண்ட நேரடிக் கல்வி
மூலம் திருப்தியடையாதவர்கள் ஐந்தாம் வகையினர். இவர்கள் தங்கள் நேரடிக் கல்விக்கும்,
இன்னபிற மூலங்கள் வாயிலாகத் தாங்கள் கற்றுக்கொண்டவற்றுக்கும் மத்தியில் வித்தியாசம்
காட்டாமல், இரண்டையும் ஒரே வகைமையினுள் ஒருங்கிணைத்தனர். இதன்மூலம், தங்கள் அறிவிப்புகள்
அனைத்தும் தாங்கள் நேரடியாகக் கற்றுக்கொண்டதன் விளைபலனே என்றரீதியில் 'சுய-படாடோப பிம்பம்'
ஒன்றை மக்கள் மத்தியில் கட்டமைத்தனர்.
தரமான
அறிஞர்களிடம் நூல்களைக் கற்றாலும், தாம் கற்றுக்கொண்டவற்றை படியெடுத்து வைக்கத் தவறியோர்
அல்லது எழுத்துவடிவம் கொடுக்கத் தவறியோர் ஆறாம் வகையினர். இத்தகையோரிடம், அவர்களின்
அந்திமக் காலத்தில் ஹதீஸ்குறித்து வினவப்பட்டபோது வெகுவாகத் தடுமாற்றம் அடைந்தனர்.
தங்கள் அறிவீனத்தை மூடிமறைப்பதற்கும், 'அறிஞர்' தோரணையைப் பேணிக்கொள்வதற்கும், தங்களிடமிருந்த,
தாங்கள் கற்றுக்கொண்ட நூல்பிரதிகளின் மிச்சங்களிலிருந்து ஹதீஸ்களை எடுத்தியம்பினர்.
எனினும், பெரும்பாலான நேரங்களில் இவர்களுக்குரிய அங்கீகார முத்திரையானது மேற்படி பிரதிகளில்
இருந்ததேயில்லை. இதுபோன்ற அலட்சியப்போக்குகள், ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டுக்
காலப்பகுதியில் மலிந்திருந்ததாகப் பகுப்பாய்வு துணிபுகள் அனுமானம் தெரிவிக்கின்றன.
ஏழாம் வகையினர், ஹதீஸ் கற்பித்தலுக்கான அடிப்படை
அம்சங்களாகக் கருதப்படும் அசாத்திய நினைவாற்றல், தீட்சண்யப் பார்வை, சிந்தனைத் தெளிவு
முதலியவை நசித்துவிட்டிருந்த நிலையில் ஹதீஸ் கற்றுக்கொடுத்தவர்கள்.
எட்டாம் வகையினர், தேவையான நூலாதாரத்தை கையிருப்பில்
வைத்திராத நிலையில் ஹதீஸ் கற்றுக்கொடுத்தவர்கள். இவர்களின் மாணாக்கர்கள், ஹதீஸின்
நம்பகத்தன்மைகுறித்து இவர்களிடத்திலே கேள்வியெழுப்பியத் தருணங்களிலெல்லாம், அவைகுறித்த
முழுமையான அறிவைத் தாங்கள் பெற்றிராத நிலையிலும், சுணக்கமின்றி அவற்றை ஊர்ஜிதம்செய்தனர்.
ஹதீஸ்களைத் தேடி நெடும்பயணம் மேற்கொண்டவர்களாகவும்,
ஹதீஸ்துறை விற்பன்னர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டவர்களாகவும் இருந்தும், தங்கள்
நூலாதாரங்களை தொலைத்துவிட்டவர்கள் ஒன்பதாம் வகையினர். விளைவாக, ஹதீஸ் கற்பித்தலின்போது
தங்களுடையதல்லாத மாற்றுப் பிரதிகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டனர். ஒரே நூலின் இருவேறு
பிரதிகளிடையேகூட வித்தியாசங்களும் வாக்கியமுரண்களும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு
என்பதை இவர்கள் மனத்தில் கொள்ளவில்லை. தவிரவும், வினைத்திறன் குன்றிய தங்கள் நினைவாற்றல்மீது
நம்பிக்கைவைத்து இவர்கள் ஹதீஸ் கற்றுக்கொடுத்த தருணங்களும் உண்டு. சமயோசித புத்தியையும்
(தக்மீன்) சில நேரங்களில் இவர்கள் சார்ந்திருந்தனர்.
புனைந்துரைக்கப்பட்ட
ஹதீஸ்களை இனம்கண்டுகொள்வதற்கான வழிமுறைகள்
ஹதீஸ்களைப் பொறுத்தவரை, அவை நம்பிக்கைக்குப்
பாத்திரமில்லாத ஒருவரால் அறிவிக்கப்பட்டிருந்தாலோ அல்லது பொய்யரொருவர் அறிவிப்பாளர்
வரிசையில் காணக்கிடைத்தாலோ புனைவு ஹதீஸ்களாகவே அவை கருதப்பட்டுவந்தன. இருப்பினும், இஸ்னாதை - அறிவிப்பாளர்
தொடரை - ஆழிய பகுப்பாய்வுக்கு உட்படுத்தாமலேயே ஹதீஸ்களைத் தூய்மையானவை, புனைந்துரைக்கப்பட்டவை
என்று பகுத்தறிந்துகொள்வதையிட்டு, முற்கால அறிஞர்கள் சில வழிமுறைகளைப் பிரயோகித்திருக்கின்றனர்.
அவ்வழிமுறைகள்படி, கீழ்க்கண்ட நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் வாக்கியங்கள் ‘புனைவு
ஹதீஸ்’களாக ஏற்றுக்கொள்ளப்பட்டது:
1. தீவிரப்
பரீட்சார்த்த முறைக்கு உட்படுத்தப்பட்டு நிராகரிக்கப்படுதல்.
2. பகுத்தறிவுக்கு
முரண்படுதல்.
3. நன்கு
அறியப்பட்ட ஓர் சுன்னாஹ்வுடன் முரண்படுதல்.
4. தோழர்கள்
பலரது முன்னிலையில் அறிவிக்கப்பட்டதாகக் கொள்ளப்பட்டும், அவர்களில் சிலராலேயே மறுதலிக்கப்படுதல்.
5. நபிகளாரின்
ஏனைய வாசகங்களுடன் எவ்வித பொருத்தப்பாடும் இல்லாதிருத்தல்.
6. ஞானிகள்,
பரிசுத்தவான்கள் அல்லது மருத்துவர்களின் கூற்றுபோல் தோற்றமளித்தல்.
7. குர்ஆனின்
தெளிவான கூற்றுகளுடன் முரண்படுதல்
8. முழுமை அடையாதிருத்தல்.
நபிகளாரின் கூற்று என்று ஏற்றுக்கொள்ளும்படியான
குறைந்தபட்சத் தகுதிகூட இல்லாதிருக்கும் ஒரு வாசகத்தைப் 'புனைவு ஹதீஸ்' வகைமையினுள்
அடக்கிவிடுவது, இப்னுல் கையும் விவரித்திருக்கும் முறைமையின் சாராம்சம். உதாரணமாக,
நபிகளாரின் கூற்று என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் மேற்கோள் காட்டும்
ஓர் வாசகத்தை இங்கே எடுத்தியம்பலாம், 'ஒருவர் லா இலாஹா இல் அல்லாஹ் என்று ஒருமுறை
மொழியும் தருணத்தில், அவ்வசனத்திலிருந்து ஆயிரம் நாவுகள்கொண்ட ஒரு பறவையை இறைவன் உருவாக்குகிறான்.'
இவ்வாக்கியத்தை நபிகளாரின் கூற்று என்று எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் என அவர் கேள்வியெழுப்புகிறார்.
நபிகளாரின் பெயரால் புனைந்துகூறப்பட்டுப் புழக்கத்திலிருக்கும் வாசகக் குவியலில், மேற்படி
வாசகம் ஒரு சிறு துணுக்கு மட்டுமே.
இப்படி,
ஹதீஸ்கள் என்று முன்மொழியப்படும் வாக்கியங்கள் பிரசித்திபெற்றதாக, உத்தரவாதமுள்ளதாக
இருந்தாலும்கூட, அறிவிப்பாளர் தொடர்மீது அறிஞர்களுக்கு ஐயப்பாடு எழுமாயின், துரிதகதியில்
அவ்வாக்கியத்தின் எழுத்துகளைப் பரிசீலனைக்கு உட்படுத்துவர். இவைகளெல்லாம் காலக்கிரமத்தில்
இடைசெருகலாகச் சேர்க்கப்பட்ட எழுத்துகளா அல்லது மெய்யாகவே நபிகளாரின் வார்த்தைகளா,
அதன் நம்பகத்தன்மை எப்படிப்பட்டது என்று பல்வேறு கோணங்களில் தீவிர நுண்ணாய்வு மேற்கொள்வர்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்……
No comments:
Post a Comment