Saturday, December 23, 2017

அபூதர்(ரழி): 'சமூக அநீதி எதிர்ப்'பின் உத்வேகமூட்டும் குறியீடு! (பகுதி 2)


அபூதர்(ரழி): 'சமூக அநீதி எதிர்ப்'பின் உத்வேகமூட்டும் குறியீடு! 
(பகுதி 2)
-    இமாம் முஹம்மது அல் ஆஸி
-    தமிழில்: சம்மில்


அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்(ஸல்) கண்ணியப்படுத்தியிருக்கும் வகையில், இந்த நாள் - ஜும்'ஆ நாள் - தக்வாவுக்கான நாள். 

اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ

“அல்லாஹ்வின் வேதனைதரும் எதிர்வினையைவிட்டும் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டிய முறைப்படி உங்களை நீங்கள் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்......”
(அல் குர்ஆன் 3:102)

اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا

“அல்லாஹ்வின் சர்வவல்லமையை, அவனது அதிகாரத்தை அவதானிக்க வேண்டிய முறைப்படி அவதானித்துக்கொள்ளுங்கள்; இன்னும், (வாதிடும் தருணங்களில்) சரியான, துல்லியமான வாதத்தையே முன்னிறுத்துங்கள்..”
(அல் குர்ஆன் 33:70)


தனது இதயத்தை நோக்கி தனது சுட்டுவிரலை நீட்டியவராக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) பின்வருமாறு இயம்பினார்கள்,

'யதார்த்தம் என்னவெனில், தக்வாவை நீங்கள் இவ்விடத்திலே நிலைத்திருக்கக் காண்பீர்கள்.'

அல்லாஹ்வுடனான தக்வாவின் இந்த உறவுமுறையை, அன்னியோன்னியத்தை பெரும்திரள் மக்கள் இன்று இழந்துவிட்டிருக்கின்றனர். வருத்தம் மேலிட இவ்வார்த்தைகளை வெளிப்படுத்துகிறேன். நமது பொதுவான இஸ்லாமிய வரலாற்றில், தக்வாவின் இந்தப் பரிமாணம் காலக்கிரமத்திலே வெகுஜன முஸ்லிம்களின் புலன்களை எப்பொழுது, எவ்வாறு தன்வயப்படுத்திக்கொண்டது என்பதை ஆய்ந்தறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

இதனை உட்கிரகித்துக்கொள்வதற்குச் சிறிது காலதாமதம் ஆகலாம். பிரக்ஞையுணர்வுள்ள, சிந்தித்துணர்கின்ற, திறந்த மனம்படைத்த முஸ்லிம்களான உங்களுடன் கைக்கோத்து நானும் இந்த வரலாற்றுத் தளத்தில் ஒருசேர எனது பயணத்தைத் தொடங்குகிறேன். தக்வாவை, இப்பொழுதெல்லாம் நடைமுறை வாழ்வின் இடர்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவைப்படும் ஓர் அஸ்திரமாக நம்மால் ஏன் அவதானித்துக்கொள்ள இயலவில்லை? இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டடைந்துகொள்ளும் பிரயத்தனத்தில் சிறிதளவு பொறுமையும், அதீத சகிப்புத்தன்மையும் அவசியமாகிறது. ஒவ்வொரு ஜும்'ஆ தினத்தன்றும், தக்வாவின் இந்த 'யதார்த்த வாழ்வு'சார்ந்த அரங்கேற்றத்தைப் புரிந்துகொள்ள முயல்வதினூடாக நமது மனோபாவத்தையும் குணாதிசயத்தையும் நாம் செப்பனிட்டுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் மீண்டுசெல்லும் நோக்கில், அவர்களது வார்த்தைகளை நினைகூரும் நோக்கில் ஏற்கெனவே நாம் இரண்டு ஆயத்துகளை பிரஸ்தாபித்துவிட்டோம். இதுபோன்று இன்னும் ஏராளமான ஆயத்துகள் அருள்மறையாம் குர்ஆனிலே காணக்கிடைக்கின்றன. தக்வாவினூடாக நம்மைச் செறிவூட்டிக்கொள்ளத் தேவைப்படும் குணாதிசயத்தையும், தனிமனித, சமூக அபிவிருத்திக்குத் தேவைப்படும் பரஸ்பர ஊடாட்டத்தையும் மேற்படி ஆயத்துகள் நம்முள் விதைக்க முயலுகின்றன.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்), தன்னுடன் மிக அணுக்கமாகத் தோழமைப் பாராட்டிவந்த அனைவர் முன்னிலையிலும், விந்தையான ஆளுமை ஒருவரின் ஆத்மசுத்தி, நாணயம், உண்மையைப் பொட்டில் அடித்தாற்போல் போட்டு உடைக்கும் நெஞ்சுரம், நா தழுதழுக்காத வாக்கியத் தெளிவு ஆகிய சிறப்புக்கூறுகள் குறித்து அடிக்கொருதரம் விதந்து கூறிவந்தமையை முதல் பகுதியில் நாம் ஏற்கெனவே கடந்துவந்திருக்கிறோம். நபிகளாருக்கு நெருக்கமாக இருந்த பிற தோழர்கள்போன்று, இவரும்கூட அண்ணாரின் அணுக்கத் துணைவராகவே தனது வாழ்நாள் முழுவதையும் கழித்துவந்தார்.

அவர்தான் அபூதர்(ரழி)!

அபூதர்ரைத் தனித்துக்காட்டும் விதமாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) இயம்பியிருக்கும் ஹதீஸொன்றை இங்கே தருகிறேன்:

"நியாயத்தை எவருக்கும் அஞ்சாமல் பிரத்தியட்சமாக வெளிப்படுத்திவிடுவதில் அபூதர்ரை விஞ்சிய உண்மையாளர் எவருமில்லை."

அல்லது பிறிதொரு அறிவிப்பில்,

"நியாயத்தை உரத்து முழங்கிடும் விஷயத்தில் அல்லது உண்மையின் சாரத்தைப் பட்டவர்த்தனமாக வீறிடும் பாணியில் அபூதர்ருக்கு இணையான சீறிய ஆளுமையை இதுகாறும் நான் கண்ணுற்றதில்லை."

இத்தகைய அறிவிப்புகளை, 'மைய நீரோட்ட இஸ்லாமிய மூலாதாரங்கள்' அல்லாத ஏனைய மூலாதாரங்களிலிருந்து நாம் எடுத்தியம்பிடவில்லை. ஏனெனில், நமது முஸ்லிம் மனோபாவங்களை, குறிப்பாக, மரபுகளால் உருவேற்றப்பட்டிருக்கும் முஸ்லிம் மனோபாவங்களை நாம் நன்கறிவோம். இதனாலேயே, 'துல்லியம்' பேணிக்கொள்வது இங்கே அவசியமாகிவிட்டிருக்கிறது.

'மூலாதாரங்கள்' குறித்த கேள்வி உங்களில் எவருக்கும் இங்கே எழுமானால், அதனை ஊக்கப்படுத்திட நான் சித்தமாக இருக்கிறேன். ஏனெனில், இது உங்கள் சிந்தனைத் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இத்தகைய சந்தேகங்கள் எழுந்திடும்பட்சத்தில், பிரசித்திபெற்ற முன்னணி இஸ்லாமிய மூலாதாரங்களிலிருந்தே மேற்படி தகவல்களை எல்லாம் நான் பிரஸ்தாபித்திக்கொண்டிருக்கிறேன் என்பதை மடக்கமாக இங்கே கூறிக்கொள்ள விளைகிறேன். அத்தபரி, இப்னு அல்-அஸீர், இப்னு ச'ஆத், அல்-மஸ்ஊதி போன்றவை அவற்றுள் சில. இவையெல்லாம் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட, மைய நீரோட்ட 'இஸ்லாமிய மேற்கோள் புத்தகங்கள்'.

அபூதர்(ரழி) விவகாரத்துக்கு வருவோம். இவரது வரலாற்றை எடுத்துக்கொண்டால், நடக்கக்கூடாத ஏதோ சில உள்ளுறைக் குளறுபடிகள் உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்தில் நடந்துவிட்டிருப்பதை அதிலே நம்மால் இனங்கண்டுகொள்ள முடிகிறது. இஸ்லாத்தின் இன்றைய 'தடபுடல் பேச்சாளர்க'ளில் எவருமே இவ்விவகாரங்கள் குறித்து வாய்திறப்பதில்லை, அல்லது ஒரேயடியாக இவற்றைப் பூசிமெழுகிவிடவே முயலுகின்றனர்; எதுவுமே நடக்காததுபோன்று இவற்றை இயல்பாகக் கடந்துவிட எத்தனிக்கின்றனர்.

இவை அனைத்துமே நமது வரலாற்றின் வளப்பமான அனுபவங்கள்; நம் அனைவருக்குமே சொந்தமான அனுபவங்கள். இவ்வரலாற்றுப் பக்கங்களை நாம் அடிக்கொருதரம் புரட்டிப்பார்த்துக்கொள்ள வேண்டும்; இவற்றை மீள்பரிசீலனைக்கு உட்படுத்திட வேண்டும்; சமகால விவகாரங்களுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்வண்ணம் நமது சிந்தனை ஆற்றலை நாம் பிரயோகித்திட வேண்டும். இதனால், நமது வரலாற்று அனுபவங்களிலிருந்து நாம் ஏராளமாகக் கற்றுணர்ந்துகொள்ளலாம்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் நிகழ்திராத ஏதோ ஒரு விசித்திரம் உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்தில் நிகழத் துவங்கியது. என்ன விசித்திரம் அது? நபிகளார்(ஸல்) காலம்தொட்டு அதுகாறும் ஏற்பட்டிருக்காத இந்த உருமாற்றம், முதன்முதலாக உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்தில்தான் பாரதூரமான அதன் இயல்பினை வெளிப்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பிலே பல்வேறு அதிதீவிர வியாக்கியான நிலைப்பாடுகள் காணக்கிடைக்கின்றன. இத்தகைய நிலைப்பாடுகள் அனைத்தையுமே முதலில் நாம் ஓரம்கட்டிவிட வேண்டும். நியாயமாகவும் உளத்தூய்மையுடனும் புறவயமான பார்வையுடனும் இவ்விவகாரத்தை நாம் அணுகிட வேண்டும்.

உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்தில், முஸ்லிம்களில் ஒருசாராரிடம் குவியத் தொடங்கிய அளப்பரிய பொருளாதார வளம், முஸ்லிம் சமூகத்துக்கு இடையே விரிசல்களை ஏற்படுத்தத் துவங்கியது. முந்தைய காலகட்டத்தில் அறியப்பட்டிராத ஒரு நடைமுறை இது. சில தனிநபர்களிடத்தில் அபரிமிதப் பொருளாதாரமும் தேவைக்கு அதிகமான சொத்து சுகங்களும் பணப் புழக்கமும் அதிகரித்துக்கொண்டே செல்ல, வேறுபல தனிநபர்களின் நிலையோ அன்னக்காவடியின் நிலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது; பொருளாதார உபாயங்களின் பற்றாக்குறையால் அவர்கள் பரிதவிக்கத் துவங்கினர்; பணத்தின் தேவை அவர்களுக்கு மேன்மேலும் அதிகரித்தது.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த நிலை, இந்தச் சமூகப் பிளவு முந்தைய காலகட்டங்களில் ஏற்பட்டதே கிடையாது. முஸ்லிம்களிடத்தில் செல்வங்கள் கிடைக்கப்பெற்றால் துரிதகதியில் அதனைப் பகிர்ந்தளித்துவிடுவார்கள். இதனால், பரஸ்பர மனத்தாங்களுக்கோ மாச்சரியங்களுக்கோ ஏற்றத்தாழ்வுகளுக்கோ சமூகத்தில் எவ்வித இடமும் இல்லாமல் போயிற்று. ஆனால் இப்பொழுது என்னவாயிற்று நிலைமை? முஸ்லிம்களுக்கு இடையே 'வர்க்க உணர்வு'ம் 'வர்க்கரீதியிலான ஒருமைப்பாடு'ம் துளிர்விடத் தொடங்கிவிட்டிருந்தன. இவ்வார்த்தைகளை இங்கே பிரயோகிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லைதான். ஆனாலும் வேறு வழியில்லை. நாம் கூறவரும் கருத்தின் தாத்பரியமும் பூடகமான அர்த்தமும் இவ்வார்த்தைகளில் துருத்திநிற்கின்றன என்றால் அதனை மொழிந்துதான் ஆகவேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 'வர்க்க உணர்வு' முஸ்லிம்களின் பிரக்ஞையை சிறுகச் சிறுக ஆட்படுத்தத் தொடங்குகிறது.

இதனை நாம் காழ்புணர்வுடன் மொழிந்திடவில்லை; இவ்வார்த்தைகளின் பின்னணியில் எவ்வித தீவிர மனப்போக்கும் இல்லை. அதுகாறும் நடைமுறையில் இல்லாத வழக்கமொன்று சிறுகச்சிறுக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கத் தொடங்கியதை இப்படித்தான் வருணித்தாக வேண்டியிருக்கிறது. இவ்வரலாற்று அனுபவங்களிலிருந்து நாம் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளலாம்; அதனை இன்றைய சூழலுக்குத் தோதான முறையில் பிரயோகிக்கவும் செய்யலாம். இதனால், ஒரு காலத்தில் நம்மைத் தீக்கிரையாக்கிய பாதகமான விளைவுகளிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளக்கூடும்; அத்தகைய விளைவுகளால் பிறிதொருமுறை நாம் அல்லல்பட வேண்டிய அவசியமும் இருக்காது.

முஸ்லிம்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் இந்தப் பிளவானது முற்றிலும் அந்நியமானது. இதற்கு முன்னர் இப்படிப்பட்ட அசாதாரணச் சூழல் அவர்களுக்கு மத்தியிலே நிலவியது கிடையாது. இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஏனெனில், சமகால முஸ்லிம்களில் பெரும்பாலானோர், 'மரபுக'ளை உரைகல்லாகக் கொண்டுதான் இவ்விவகாரத்தை அணுகிக்கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணமும் இருக்கிறது. ஏனெனில், இத்தகைய விவகாரங்களெல்லாம் வெகுஜன முஸ்லிம்களின் கவனத்தை ஒருபோதும் ஈர்த்ததே கிடையாது.

அல்லாஹ்வுடைய சர்வவல்லமையின், அவனது அதிகாரத்தின் பிரசன்னம் நமது பிரக்ஞையை ஆட்படுத்தியிருப்பதாலேயே இந்த உண்மைகளை எல்லாம் நம்மால் சீர்தூக்கிப் பார்க்க முடிகிறது. இதனூடாக, மற்றனைத்து முஸ்லிம்களையும் நாம் காலத்தால் வெகுவாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டோம். அவர்கள், ஒன்று, மரபுகள் ஏற்படுத்திவிட்டிருக்கும் அபரிமிதச் செல்வாக்கின் காரணத்தால் பக்கசார்பு மனப்பாங்குடனேயே இவ்விவகாரங்களை அணுகுகின்றனர் அல்லது 'இவையெல்லாம் நமக்குத் தேவையற்றவை' என்றரீதியிலே ஒட்டுமொத்தமாக இவற்றுக்கு முழுக்குப்போட்டுவிடுகின்றனர். காரணம்? இது ஒரு சர்ச்சைக்குரிய வரலாற்றுப் பகுதி என்பதனால்!!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்), அவருடைய முதல் இரண்டு கலீஃபாக்கள் ஆகியோரது காலகட்டத்தில் சமத்துவம், சகோதரத்துவம், பரஸ்பர ஒத்துழைப்பு, கரிசனை, பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட அம்சங்கள் சமூகத்திலே பரவிப் படர்ந்திருந்தன. உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்தில், இவை அனைத்துமே நீர்த்துப்போகத் தொடங்கிவிட்டிருந்தன; செல்லரித்துப்போனக் கூறுகளாக இவை உருமாறிக்கொண்டிருந்தன.

இந்த நெறிபிறழ்வானது, அதுகாறும் நிலைபெற்றிருந்த ஓர் முன்னுதாரண பாணியைவிட்டும் வெகுசேய்மையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. இதுவே, பற்பல தறிகெட்ட நடத்தைகளின் மீள்-எழுச்சிக்கு வாய்க்காலாகவும் அமைந்துவிட்டது. முஆவியா(ரழி) போன்ற ஒரு நபர் அபூதர்ரைப் பார்த்து வசைமொழியை அல்லது கீழ்த்தரமான வார்த்தைகளைப் பிரயோகித்தமை இதற்கான ஒரு சிறந்த உதாரணம்.

தவிரவும், 'அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நடவடிக்கை' என்ற பீடிகையில் சித்திரவதை ஒன்று அரங்கேற்றப்பட்டத்தையும் முதன்முதலாக நம்மால் கடந்துவர முடிகிறது. முன்பெல்லாம் நிலைமை இப்படி இருக்கவில்லை. அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) ஆகியோரின் சில அரசாங்கக் கொள்கைகளை விமர்சனம் செய்த தனிநபர்களையும் வரலாற்றுப் பக்கங்களில் நாம் கடந்துவரத்தான் செய்கிறோம். பின்னவர்கள் தங்கள் துணிபுகளில் விடாக்கண்டர்களாக இருந்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசாங்கத்தின் நடவடிக்கை அவர்கள்மீது பாய்ந்ததா என்ன? நிச்சயம் இல்லை. ஏனெனில், குர்ஆன், சுன்னாஹ்வின் வழிகாட்டல்களைத்தான் தங்கள் இடித்துரைகள் பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன என்று அவர்கள் ஆணித்தரமாக நம்பினார்கள்.

அபூதர்மீது வார்த்தைகள் ஏற்படுத்துவிட்ட ரணம் ஒருபுறமிருக்க, பௌதிகரீதியிலும் அவர் வதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். ஆளும் வர்க்கத்தினர் முதலில் அவரை அரேபியாவிலிருந்து அஷ்-ஷாம் நகருக்கும், பின்னர் அங்கிருந்து அரேபியாவில் உள்ள ஏகாந்தமான, ஆள் அரவமற்ற ஒரு பகுதிக்கும் நாடுகடத்த முயன்றனர். அதிகாரத்தையும் செல்வக் கொழிப்பையும் ஒருசேர திரட்டிய இந்தப் 'புதிய வகை' ஆட்சியாளர்கள், இவ்விரண்டின் ஒருங்கமைந்த ஆற்றலைக்கொண்டு அபூதர்ரை இழிவுபடுத்த முயன்றனர். ஓர் இஸ்லாமிய வாழ்வியல் ஒழுங்கில் நிச்சயம் இடம்பெற்றிருக்கக் கூடாத நடத்தைகளாகும் இவைகளெல்லாம்.

'சூறா அல்-இஸ்ரா'விலிருந்து முன்னர் பன்முறை நாம் விளம்பியிருக்கும் ஆயத் ஒன்றை இங்கே மேற்கோள்காட்ட விளைகிறேன்.
وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا

"ஓர் ஊர்வாசிகளை / சமூகத்தை / சமூகக் கட்டமைப்பை நாம் வதம்செய்ய நாடிவிட்டால், அதன் செல்வச் சீமான்களை அதிகார பீடத்தில் அமரவைப்போம்; விளைவாக, அந்த ஒட்டுமொத்தச் சமூகக் கட்டமைப்பையுமே அவர்கள் சீரழிவில் அமிழ்த்திவிடுவார்கள்."
(அல் குர்ஆன் 17:16)

இந்த ஆயத்தின் சுத்திகரிக்கப்பட்ட அர்த்தங்கள் நமது துவக்ககால இஸ்லாமிய சமூகமொன்றில் சன்னமாகத் தென்படுகின்றன. பிரமிப்பு யாதெனில், அதன் முக்கிய கதாபாத்திரங்களும் அங்கத்தினர்களும் அல்லாஹ்வின் தூதரது தலைமுறையைச் சார்ந்தவர்கள் என்பதே. இதற்குப் பிறகும் நம்மால் ஏன் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.

ஆம். அதிகாரத்தையும் செல்வக் கொழிப்பையும் ஒருங்கே வரித்துக்கொண்டிருந்த வெவ்வேறு தனிநபர்களால் அபூதர் இழிவுபடுத்தப்பட்டார். அவர் தனது மனத்தையும் மனசாட்சியையும் பொட்டில் அடித்தாற்போல் வெளிப்படுத்துகிறார் என்ற ஒரே காரணத்துக்காக அதிகாரத்தையும் பணபலத்தையும் கொண்டு அவருக்கெதிராகச் சதித்திட்டம் தீட்டினர்.

சேணம் பொருத்தப்படாத குதிரை அல்லது கழுதைமீது அபூதர்ரை பலாத்காரமாக அமரவைத்தனர். வடக்கிலிருந்து தெற்குவரையிலான சுமார் நூறு மைல்களுக்கும் அதிகமான தூரத்தை அவரைக்கொண்டு அப்படியே கடக்கச்செய்தனர். சேணம் பொருத்தப்படாத குதிரை அல்லது கழுதைமீது ஆரோகணித்து, குறைந்தபட்சம் இரண்டொரு மைல்கள் நீங்கள் பிரயாணம்செய்து பாருங்கள்; அதன் தாளாத வேதனை எப்படிப்பட்டது என்று உணர்ந்துபாருங்கள். நூறு மைல்களுக்கும்மேல் சேணம் பொருத்தப்படாத புரவியின்மீது ஆரோகணித்துச் சென்ற அபூதர்ரின் வேதனை அதன் பிறகு உங்களுக்குப் புலப்படும்.

இதனை நம் வெகுஜன மனங்களினுள் நுழையச்செய்வதற்கான எவ்வித தார்மிக உந்துதலும் இதுகாறும் நமக்கு ஏற்பட்டிருக்கவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால், சமூகத்திலே விகாசமாக ஊடாடிநிற்கும் ஓரவஞ்சனைக்கும் பரஸ்பர மாச்சரியங்களுக்கும் குறுங்குழுவாதத்துக்கும் என்றைக்கோ நாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.
'இஸ்லாமிய' ஆட்சியாளர்கள் ஒருமருங்கிலும், சூழவிருந்த சமூக ஒழுங்கில் நிகழ்ந்துகொண்டிருந்த மாற்றங்களை தன்னுணர்வுடன் அவதானித்துக்கொண்டிருந்த அபூதர்(ரழி) போன்றோர் பிறிதொரு மருங்கிலும் வீற்றிருந்த அந்தக் காலச்சூழல் குறித்து நமது மைய நீரோட்ட இஸ்லாமிய வரலாற்றுப் புத்தகங்கள் இயம்பிடுகையில், இவை அனைத்தின் பின்னணியிலும் யூதர்களின் வஞ்சக சூழ்ச்சி இருப்பதாக அவை அறுதியிட்டுக் கூறுகின்றன.

யூதர்களின் அக்கால செல்வாக்கினை நிச்சயமாக நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் இஸ்லாமிய சமூகத்தின்மீது செல்வாக்கு செலுத்திக்கொண்டுதான் இருக்கின்றனர். சமூக அபிவிருத்திக்கு ஊறு விளைவிக்கக்கூடிய விஷம சக்தி ஒன்றைக் குறித்துத்தான் இங்கே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்; அது அன்றைய காலகட்டமாக இருந்தாலும் சரி, இன்றைய காலச்சூழலாக இருந்தாலும் சரி. இங்கே இன்னொரு விஷயமும் முக்கியத்துவம் பெறுகிறது. இவ்விரு யுகங்களும் ஒன்றையொன்று ஒத்திருப்பதால், அவற்றை அருகருகே வைத்து ஒப்பிட்டுப்பார்க்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இன்றைய யுகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கே, முஸ்லிம்களை ஏதேனும் ஒரு பகாசுரப் பிரச்சினை எதிர்நோக்கியிருக்குமானால், அது தங்கள் கைகள் முற்படுத்தியதாகவே இருந்தாலும்கூட, அதற்கானக் காரணியை யூதர்கள் மீதுதான் இவர்கள் பெரும்பாலும் சாட்டுகின்றனர். இன்றைய சூழலில், இது அனைவருமே அறிந்த ஒரு விஷயம்தான். எனினும், இதனை அறிந்துவைத்திருப்பவர்களில் பெரும்பாலானோரால் இதன் அசல் தோற்றுவாயை இனங்கண்டுகொள்ள முடியவில்லை. ஏனெனில், (பொருளாதாரம்) 'இருக்கப்பெற்றவர்க'ளுக்கும் 'இல்லாதவர்க'ளுக்கும் இடையிலான ஓரவஞ்சனையும் விரிசலும் அதிகரித்துக்கொண்டே சென்ற மூன்றாம் கலீஃபாவின் காலகட்டத்தில்கூட, யூதர்களைத்தான் பிரச்சினைகளுக்கான வினை ஊக்கியாக முன்னிறுத்தினார்கள் என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை.

இத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் இப்னு சபா என்ற ஒரு யூதனைச் சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. ‘இப்னு அஸ்-ஸவ்தா’ என்பதாகவும் இவனைக் குறிப்பிடுவது உண்டு. இவனைப் பற்றி (முந்தைய சொற்பொழிவுகளில்) நாம் ஏற்கெனவே போதுமான அளவு பார்த்துவிட்டோம். அப்படியொரு நபர் உண்மையில் உயிர்வாழ்ந்தாரா அல்லது இது வெறும் ஒரு புதினமா என்பது குறித்தெல்லாம் அலசிஆராய்வதற்கு இப்பொழுது நேரமில்லை. அதைவிட முக்கியமாக, இங்கு பிரஸ்தாபித்தே ஆகவேண்டிய கூறுபாடு ஒன்றிருக்கிறது. ஆம். நமது 'அதிகாரபூர்வ' வரலாற்று ஆக்கங்கள் பலவுமே அபூதர்ரின் அந்தரங்க சுத்தியையும் அவரது இயல்பான உந்துதலையும் மேற்படி யூதனுடன் தொடர்புபடுத்தி எழுதியிருக்கின்றன. அதாவது, சமூக அநீதிக்கு எதிரான அபூதர்ரின் கிளர்ச்சிக்கு இந்த யூதனின் 'தூபம்போடல்'தான் காரணம் என்பதாக விளம்பியிருக்கின்றன. 

ஏன்? அதிகாரம், செல்வக்கொழிப்பை நோக்கிய கட்டுமீறிய சபலத்தின் விளைவால் சமூகத்தில் தெறிப்பு ஏற்பட்டுவருவதை முஸ்லிம்கள் தன்னெழுச்சியாக அவதானிக்கொள்ளக் கூடாதா என்ன? இதற்காக, பின்னிருந்து இயக்குவதன் நிமித்தம் கணநேரத்தில் முஸ்லிமாகிவிட்டிருந்த ஒரு யூதனின் உதவி தேவைப்படுகிறதா என்ன? துரதிருஷ்டவசமாக, நமது வரலாற்றுப் புத்தகங்கள் பெரும்பாலானவற்றின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கிறது.

இப்னு சபா என்பவன் அபூதர்ரை டமஸ்கஸ் நகரில்வைத்துச் சந்தித்தான் என்றும், 'மு'ஆவியா ஏதேதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார், அது என்னவென்று கேள்' என்பதாக அபூதர்ரை அவன் உசுப்பிவிட்டான் என்றும் நமது வரலாற்றுப் புத்தகங்கள் கதை சொல்கின்றன:

"மூ'ஆவியாவைப் பார், 'பணம், பொருளாதார உபாயங்கள், செல்வ வளங்கள் என்று அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை' என்பதாக அவர் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கிறார். நடைமுறை வாழ்வைப் பொறுத்தவரை, இவை அனைத்துமே முஸ்லிம்களுக்குச் சொந்தமானவைதானே. இத்தகைய கபடப் பிரச்சாரத்தினூடே நைச்சியமாக நழுவிச் சென்றுவிடலாம் என்று மு'ஆவியா எண்ணிக்கொண்டிருக்கிறார் போலும். அப்படி நடந்துவிடக்கூடாது."

ஆக, இஸ்லாமிய அரசாங்கத்துக்கு எதிரான அபூதர்ரின் கிளர்ச்சிப் பின்னணியிலே யூதன் ஒருவனின் அளப்பரிய பங்களிப்பு இருப்பதுபோன்ற ஒரு பிம்பம் இங்கே கட்டமைக்கப்படுகிறது. இப்னு சபா என்றொரு கதாப்பாத்திரம் உண்மையில் புனைவா நிஜமா என்பதுகூடத் தெரியாத நிலையில் இப்படிப்பட்டக் கதைகளெல்லாம் அப்பட்டமான நகைமுரணாகவே தோன்றுகின்றன.

அவன் நிழலா நிஜமா என்பதை ஊர்ஜிதம்செய்யும் வரலாற்று விவரங்களுக்குள் எல்லாம் இப்பொழுது பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை. வரலாற்றுப் புத்தகங்கள் எழுப்பியிருக்கும் இந்தச் சந்தேகம் தர்க்கரீதியாக நியாயமானதாகத் தோன்றலாம். ஆனால், யதார்த்தத்தின் பலகணி வழியாகப் பார்த்தால் அதன் நகைமுரணும் பிழையும் பிரத்தியட்சமாக வெளிப்படுகின்றன; அதன் துல்லியத்தன்மைமீது கேள்வி எழுப்பப்படுகின்றது. ஏனெனில், அபூதர்ரின் கிளர்ச்சியின் துவக்கப்புள்ளி டமஸ்கஸ் அல்ல, மதீனா!

நிலைமை இப்படியிருக்க, இப்னு சபாதான் இந்தக் கிளர்ச்சிக்கான உந்துவிசை என்று எதன் அடிப்படையில் அவர்கள் நம்மிடம் அறுதியிடுகிறார்கள்? அதுவல்ல விவகாரம். புதிதாய் இஸ்லாத்தைத் தழுவியிருக்கும் ஒரு யூதனுடன் நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தைகள், திறைமறைவு சதி ஆலோசனைகள்தான் அபூதர்ரின் உணர்ச்சிப்பெருக்கத்துக்குக் காரணம் என்று கூறுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இஸ்லாத்துக்குப் புறம்பான உச்சபட்ச பிறழ்வை நோக்கி அடியெடுத்துவைத்துக்கொண்டிருந்த "இஸ்லாமிய ஆட்சி"க்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்தக் கிளர்ச்சியானது, அல்லாஹ்வின் தூதரது பட்டறையில் மெருகூட்டப்பட்ட முஸ்லிம்களினது ஆத்மசுத்தியின் வெளிப்பாடு அல்ல, கணநேரத்தில் இஸ்லாத்தைத் தழுவியிருக்கும் யூதர்களினது தகிடுதத்தங்கள், திருகுதாளங்களின் வெளிப்பாடே என்று சாதிக்க முனைவது எவ்விதத்தில் நியாயமாக இருக்கமுடியும்? அறிவார்ந்த முஸ்லிம்களேகூட இதனை மாற்றுச் சிந்தனை இன்றி நம்பிவிடும் அளவுக்கு, சங்கிலித் தொடர்போன்ற வெவ்வேறு நிகழ்வுகளைவேறு இந்த வரலாற்றுப் புத்தகங்களில் ஒருங்காகக் கோத்துவைத்திருக்கின்றனர். இந்த 'புனைவுகளால் நீர்த்துப்போயிருக்கும் உண்மைகள்' எல்லாம் சற்றொப்ப ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக நம்முடனேயே பிரயாணித்து வந்திருக்கின்றன; நம்முள் அவை இரண்டறக் கலந்துவிட்டன.

அபூதர்ரின் துடிப்பான வார்த்தைகளைச் செவிமடுக்க வேண்டியது இங்கே அவசியம் ஆகிறது. தகவல்களின் நம்பகத்தன்மைத் தொடர்பிலே, மீண்டும் ஒருமுறை உங்களை நினைவுறுத்திக்கொள்ள விளைகிறேன். இவை அனைத்துமே மைய நீரோட்ட இஸ்லாமிய மூலாதாரங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

கூர்நோக்கு, அகப்பார்வை, தீட்சண்ய அறிவு ஆகிய பண்புகளுக்கு உரித்தான நபித்தோழர்களுள் ஒருவர்தான் அபூதர்(ரழி). அல்லாஹ்வின் தூதருடனான இவரது தோழமையை, அன்னியோன்னியத்தை நாம் புரிந்துகொள்ளாதவரை வரலாறுகுறித்த நமது புரிதலை எவ்வகையிலும் நம்மால் செப்பனிட்டுக்கொள்ள இயலாது.

நபிகளாரின் ஹதீஸொன்றை அபூதர் அடிக்கொருதரம் பிரஸ்தாபித்துக்கொண்டே இருப்பார். அந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) பின்வருமாறு விளம்பியிருப்பார்கள்:

"நான் இவ்வுலகைவிட்டுப் பிரிந்துசெல்லும் வேளையிலே எந்நிலையில் உங்களை விட்டுச்சென்றேனோ, அதே நிலையில் தனது வாழ்நாள் முழுவதையும் கழிக்கப்போகும் நபர்தான், உங்கள் அனைவரிலிருந்தும் கியாமத் நாளில் என்னுடன் ஏக அணுக்கத்தைப் பேணிக்கொள்ளப்போகும் நபர்."

மனத்தில் பதியவைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான வாக்கியம் இது. ஏதோ அந்நியர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதரால்(ஸல்) உதிர்த்துவிடப்பட்ட வார்த்தைகள் அல்ல இவை; தன்னைச் சூழவுமிருந்த சஹாபா பெருமக்களைப் பார்த்து மொழிந்த வார்த்தைகள். நபிகளார்(ஸல்), தோழர்களைவிட்டுப் பிரிந்துசெல்லும் வேளையிலே எந்நிலையில் அவர்கள் காணக்கிடைத்தார்களோ அதே நிலையில் மறுமைநாளில் நபிகளாரைச் சந்திக்கப்போகும் நபர்தான் அவருடன்(ஸல்) அன்னியோன்னியம் பேணிக்கொள்ளப்போகும் நபர்.

ஆம். நபிகளாரின் மரணத்தருவாயின்போது தோழர்கள் அனைவருமே ஏழ்மையில் உழன்றுகொண்டிருந்தனர். பொதுவாகக் கூறினால், 'தனவந்தர்' என்று கூறிக்கொள்ளும் அளவுக்கு அவர்களுள் எவரும் வசதிவாய்ப்புகளைப் பெற்றிருக்கவில்லை. பின்னாளில், அவர்கள் நன்றாக அறிந்துவைத்திருந்த நபிகளாரின் வார்த்தைகள்குறித்து அபூதர் அவர்களை நினைவுறுத்தியபோது, அபரிமிதப் பொருளாதாரச் சேகரத்தில் முழுமுனைப்புடன் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர்களில் சிலருக்கு இது கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணிற்று. நபிகளார் என்றைக்கோ தங்களிடம் இயம்பிச்சென்றதை அபூதர் ஏன் இப்பொழுது தேவையில்லாமல் நினைவூட்டிக்கொண்டிருக்கிறார் என்பதாக அவர்கள் கொதித்தெழுந்தனர்.

அபூதர்ரின் நினைவுறுத்தலை நாம் மீண்டுமொருமுறை இங்கே இயம்ப வேண்டியிருக்கிறது,

"நபிகளாரின் புத்திமதிக்குச் செவிகொடுங்கள்"



"இத்தகுல்லாஹ் ஃபீ கௌலி ரசூலில்லாஹ்"



"அல்லாஹ்வின் தூதரது அறிவுறுத்தலின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்."

அதிகாரத்தையும் செல்வக் கொழிப்பையும் ஒருங்கு சேர்த்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவிட்டிருந்த பின்னாளில், அத்தகையவர்களைச் சுற்றிச் சுற்றி வந்து நபிகளாரின் ஹதீஸை நினைவுறுத்துவதை வழக்கமாகவே ஆக்கிக்கொண்டிருந்தார் அபூதர்.

"அல்லாஹ்வின்மீது சத்தியமாக, லௌகீக, பொருள்முதல்வாத அந்தஸ்தில் தத்தம் பங்குகளை ஈட்டிவிட்டிருக்காத எவருமே உங்களில் மீதமிருப்பதாகத் தெரியவில்லை; என்னைத் தவிர!"

அபூதர் அன்று அவர்களிடம் விளம்பிய அதே வார்த்தைகள்தான் நமது வாழ்வின் இன்றைய நிதர்சனமாக இருக்கிறது. நபிகளாரின் ஹதீஸைக் கண்டு வெருண்டோடியவர்களைத்தான் அபூதர் தேடித்தேடி எச்சரித்துக்கொண்டிருந்தார்.

நபிகளாரின் கீழ்க்கண்ட ஹதீஸைக் கவனியுங்கள். இவ்வகை ஹதீஸ்களைத்தான் மிம்பர்மீது நின்றுகொண்டு அழுத்தம்திருத்தமாக வலியுறுத்திக்கூறுவதில் பலரும் இன்று கிலியை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

"இவ்வுலக வாழ்வில் அபரிமிதமாகக் கொடுக்கப்பட்டவரே மறுமைநாளில் குறைந்த அளவில் வழங்கப்பட்டவராக இருப்பார்; தான் ஈட்டியவற்றிலிருந்து ஆத்மசுத்தியுடன் கொடை அளிப்பவரைத் தவிர. வலதுபுறம், இடதுபுறம் என்று இறைப்பாதையிலே அவர் வாரி வழங்குவார். பொருள் பற்றாக்குறை குறித்த அச்சம் கொள்ளாமல்; இரண்டாம் சிந்தனைக்கு இடம் அளிக்காமல்; ரகசியமாகப் பதுக்கிவைக்காமல்; (தான் ஈட்டியவற்றில்) ஏகபோகம் கோராமல்!!"

கவனித்தீர்களா நபிகளாரின் வார்த்தைகளை! இன்றைய 'வங்கி இருப்புக் கணக்கு'களுக்கெல்லாம் இடம் அளிக்காத கறாரான வார்த்தைகள் இவை.

ஒரு முஸ்லிம், இப்படிப்பட்ட ஹதீஸ்களை முழங்கியவாறே சஞ்சரித்துக்கொண்டிருப்பதில் என்ன தவறு இருக்கிறது? அபூதர்ரும் அதைத்தான் செய்தார். அவரது முழக்கத்தைக் கேட்க சகிக்காதவர்கள் நேராக அவரிடம் சென்று, 'நீ ஏன் சிறிதுகாலம் அஞ்ஞாத வாசம் மேற்கொள்ளக் கூடாது?' என்று அதட்டிஉருட்டினர். இதையே இன்றைய சாமானிய மொழியில் பெயர்த்தெழுதினால், "அடக்கி வாசி!" என்பதாகப் பொருள்படும்.

அன்றைய அரசாங்கம் அதிகாரபூர்வமாகவே அவருக்கு மிரட்டல் விடுத்தது.

'பொது இடங்களிலோ வெகுஜன ஒருங்குதிரள்களிலோ உனது அபிப்பிராயங்களைத் தான்தோன்றித்தனமாக வெளிப்படுத்துவதற்கு உனக்கு அனுமதி இல்லை!'

இந்தக் கட்டளையை மதித்தார் என்று நினைக்கிறீர்களா அவர்? நிச்சயம் இல்லை! தனது எச்சரிக்கையை, அறிவுறுத்தலை அவர் தொடர்ந்து முழங்கிக்கொண்டேதான் இருந்தார்.

மக்களை எப்படியாவது நேரடியாகச் சந்தித்து உரையாடிவிட வேண்டும். இதுதான் அவரது வேட்கை. அப்படியே செய்தார். ஆட்சியாளர்கள் முன்னிலையிலேயே மக்களைச் சந்தித்துப் பேசினார்; முன்னவர்களின் குட்டுகளை முடிந்த அளவுக்கு அம்பலப்படுத்தினார். இப்படிச் செய்ததற்காக, தண்டனை வழங்குவதன் நிமித்தம் ஆட்சியாளர்கள் ஒன்றும் அவரை நிலவறையில் வீசிச் சித்திரவதை செய்திடவில்லை. அவருடன் கருத்து முரண்பட்டனர் என்பது உண்மைதான். அப்படிச் செய்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. நமக்கும் சேர்த்துதான் கூறுகிறேன். பல்வேறு கருத்து வேற்றுமைகள் நம் மத்தியிலே புழக்கத்தில் இருக்கலாம். அதற்காக, பரஸ்பரம் வெறுப்பை உமிழும் வெறியர்களாக நாம் உருமாறிவிட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

அபூதர்ரின் தன்னெழுச்சியான இந்தப் போக்கு தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. அறுதியாக, ஆட்சியாளர்களின் தடை ஆணையும் வந்துசேர்ந்தது. உனது அபிப்பிராயங்களை வெளிப்படுத்திட அனுமதி இல்லை!'. இதற்கு எதிர்வினையாக, தன்னைச் சந்திக்க வந்த மக்களிடம் அவர் விளம்பிய வார்த்தைகளைக் கவனியுங்கள்:

"அல்லாஹ்வின்மீது சத்தியமாக, அல்லாஹ்வின் தூதரிடமிருந்து நான் செவியேற்றவற்றை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்துவதைவிட்டும் என்னைத் தடுப்பதற்காக வாளொன்றை எனது முகவாய்க்கட்டையில் வைத்து என்னை அச்சுறுத்தினாலும், நான் முழங்கிக்கொண்டிருப்பவற்றை நிறுத்திக்கொள்ளப்போவதில்லை. அந்த வாளை, அதன் பின்னர் எனது வாய்துவாரத்தினுள் வேண்டுமானாலும் நீங்கள் செருகிப்பாருங்கள். இவை எவையுமே எனது மனக் குமைச்சலை வெளிப்படுத்துவதைவிட்டும் என்னை தடுக்கப்போவதில்லை."

அன்றிலிருந்து இன்றுவரை நமது இஸ்லாமிய பாரம்பரியம் எப்படிப்பட்ட பாரதூர மாற்றங்களையெல்லாம் கடந்துவந்திருக்கிறது என்பதைச் சற்று யோசித்துப்பாருங்கள். அபூதர்ரின் இந்தக் காலகட்டம்தான், நீதிசார்ந்த தங்கள் 'இஸ்லாமிய மனசாட்சி’யை வெளிப்படுத்திடும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அருகிப்போனதன் தொடக்ககாலகட்டம்.

ஆக, அபிப்பிராயங்கள், விமர்சனங்களை மனத்தினுள் வைத்துக்கொண்டு குமைந்துகொண்டிருப்பவர்கள் திடசித்தத்துடன் வெளிவந்து அவற்றை வெளிப்படுத்திவிடட்டும். அதிகாரம், செல்வக் கொழிப்பின் ஒருங்கமைந்த கூட்டமைப்பே நம் மத்தியில் இன்று 'இஸ்லாமிய' முகபடாமை அணிந்துகொண்டு சங்கல்பத்துடனும் நம்பிக்கையுடனும் இயங்கிக்கொண்டிருக்கையில் உங்களுக்கு என்ன தயக்கம்?

'இஸ்லாமிய' நாடுகள் என்ற தங்களை அழைத்துக்கொள்ளும் சமகால ஆட்சி அதிகாரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். சில மக்களின் கைகளில் அதிகாரம் இருக்கும்; ஆனால், அவர்களிடம் பொருளாதார பலம் இருக்காது. இன்னும் சிலரிடம் அபரிமிதப் பொருளாதாரம் கொட்டிக்கிடக்கும், என்றாலும் அவர்களிடம் அதிகாரம் இருக்காது. இவ்விரண்டையும் ஒருங்கு சேர்ப்பதில்தான் மேற்படி நாடுகளுக்குள் இப்பொழுது போட்டி நிலவிவருகிறது.

அபூதர் காலத்தில் அதிகார பீடத்தில் வீற்றிருந்தவர்களை, நம் காலத்து அரேபிய ஆட்சியாளர்களுடன் சற்று ஒப்பிட்டுப்பாருங்கள். பின்னவர்களிடம் இப்பொழுது, துன்மார்க்கத்தின்வழி சேகரிக்கப்பட்ட அளப்பரிய பொருளாதார வளங்களும், அடக்குமுறை ஒன்றையே குறியாய்க் கொண்டியங்கும் அதிகார வலிவும் ஒருசேர அமையப்பெற்றிருக்கின்றன. இவ்விரண்டையும் இவர்கள் வலுவான முறையிலே ஒருங்கிணைத்து வைத்திருக்கிறார்கள்; தான்தோன்றித்தனமாக அதனை துஷ்பிரயோகமும் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்பூவுலகில் உள்ள வெவ்வேறு பகுதிகளின் - ஏழை நாடுகளின், அதன் மக்களின் - தற்கால ஆற்றாமைக்கான மூல முதற்காரணம் இதுதான்.

சமூக அநீதிக்கு எதிரான அபூதர்ரின் போராட்டம் அடுத்த பகுதியில் தொடரும்....! இன்ஷா அல்லாஹ்….!!

ஃகுத்பாவின் உபரித் தகவல்கள்

"அஹ்லிஹி வ சஹ்பிஹி வஸல்லம்". இவ்வார்த்தைகளை அடிக்கோடிட்டுக்கொள்ளுங்கள். நபிகளார்(ஸல்) தனது குடும்பத்தாரையும் (அஹ்ல்) தன்னுடன் இருந்த பற்றுறுதிகொண்ட தோழர்களையும் (சஹாபா) சரிநிகர் சமானமாகவே கருதினார்கள். ஆனால், இப்பகுதியைச் சர்ச்சைக்குரியதாக ஆக்கிக்கொண்டு நாடுகளுக்கு இடையே யுத்தங்களை மூட்டிவிட சில வஞ்சக சக்திகள் எத்தனித்துக்கொண்டிருக்கின்றன.

அல்லாஹ்வின் வேதத்தையும் அல்லாஹ்வின் தூதரையும் மட்டுமே உரைகல்லாகக் கொண்டு தங்கள் அபிப்பிராயங்களை மொழிந்துச்சென்றவர்கள் இவர்கள்(ரழியல்லாஹு அன்ஹும்). இவர்களுக்கு மத்தியிலே நிலவிவந்த உறவுமுறையின் சூட்சுமங்களைப் புரிந்துகொள்ள இயலாதவர்கள்தான், அத்தகைய மனப்பாங்குக்குச் சொந்தக்காரர்கள்தான் யுத்தங்கள் மூளுவதையிட்டு சகோதர முஸ்லிம்களை கொம்பு சீவிவிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

நபிகளாரின் குடும்பத்தாரும் அவரது தோழர்களும் ஒருவருக்கொருவர் சத்துருக்கள் அல்லர்! அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தன என்பது உண்மைதான். சிற்சில விவகாரங்களில் தவறிழைத்தவர்களும் அவர்களுக்கு மத்தியில் இருக்கத்தான் செய்தனர். இந்தத் தவறுகளெல்லாம், நாம் கற்றுணர்ந்துகொள்வதற்கும் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதற்கும்தானே தவிர பரஸ்பர வசைமொழிகளிலும் சண்டை சச்சரவுகளிலும் ஈடுபடுவதற்காக அல்ல. சீர்செய்துகொள்வதற்காகத்தான் தவறுகள் இழைக்கப்பட்டதே அன்றி மேன்மேலும் அதனை ஊதிப் பெரிதுபடுத்துவதற்காக அல்ல. ஆரோக்கியமான மனநிலைக்கும் உளவியலுக்கும் உரித்தானவர்களால் மட்டுமே தவறுகளைத் துலக்கமாக இனங்கண்டு அவற்றைச் சீர்செய்திட இயலுமே தவிர தாழ்வு மனப்பான்மையில் உழன்றுகொண்டிருப்போரால் இவை ஒருபோதும் சாத்தியப்படாது.

இந்தத் தாழ்வு மனப்பான்மைக்குச் சொந்தக்காரர்கள் பிற முஸ்லிம்களின் 'இடங்க'ளுக்குச் செல்வது கிடையாது. இங்கே 'இடங்கள்' என்று நான் குறிப்பிடுபவை மசூதிகளாக இருக்கலாம் அல்லது அவர்களின் சந்திப்பிடங்கள், கலந்துரையாடும் இடங்கள், சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படும் இடங்களாகக்கூட இருக்கலாம். ஏன் இந்த நிலை? எப்படிப்பார்த்தாலும் அவர்களும்கூட முஸ்லிம்கள்தானே. பிறகு எதற்கு இந்த இறுமாப்பு? அவர்களுடன் சகோதர உணர்வுடன் அளவளாவுவதிலோ உறவாடுவதிலோ என்ன தயக்கம்?

உங்களிடம் போதுமான அளவு விழிப்புணர்வு இல்லையா, அல்லது, நமது வரலாறுகுறித்த பேதமைதான் இதற்கான காரணமா? அல்லாஹ்வின் வழிகாட்டல்களுக்கும் அவனுடைய தூதரின் முத்திமதிகளுக்கும் நீங்கள் செவிசாய்த்திருக்கவில்லையா என்ன? இந்த நடத்தை, அரேபியாவை ஆட்சிசெய்துகொண்டிருக்கும் ஆட்சியாளர்களின் மனோபாவங்களைச் சித்தரிப்பதாகத்தானே அமைந்திருக்கிறது.

“ஷரீ'ஆவை நடைமுறைப்படுத்துகிறோம்" என்பதாக நம்மிடம் அவர்கள் கூறுகிறார்கள். இப்படி விகடம் பண்ணிக்கொண்டிருக்கும் அந்த ராஜ்ஜியத்தின் புத்திஜீவிகளுள் ஒருவர் சென்றவாரம் கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை வரிகளைக் கவனியுங்கள், 'ஒருவரோடு ஒருவர் சம்பாஷிப்பதும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்ப்பதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆகுமானதுதான்.’. பாருங்கள், இதுதான் அவர்கள் ஷரீ'ஆவை அமல்படுத்திக்கொண்டிருக்கும் லட்சணம்.

சற்று யோசித்துப்பாருங்கள்! உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது, இவர்கள் எந்த விவகாரத்தைப் பற்றி இங்கே பேசிக்கொண்டிருக்கிறார்கள்? இத்தகைய விவகாரங்கள்தான் வெறியர்களையும் கடும்போக்குவாதிகளையும் மேன்மேலும் பிளவுபடுத்திக்கொண்டிருக்கின்றன. இந்தக் கட்டுரை அங்கே துரிதகதியில் பிரபலமாகிவிடவே, அங்கிருக்கும், 'ஹை'அத் அல் அம்ர் பில் ம'ஆரூஃப் வ நஹி அனில் முன்கர்' என்ற கூட்டத்தார், கட்டுரை ஆசிரியரை சுற்றிவளைத்து வசைபாட ஆரம்பித்துவிட்டனர். "இப்படிப்பட்ட வார்த்தைகளை நீ எப்படி எழுதிடலாம்?" என்று கோபாவேசத்துடன் அவரை அதட்ட ஆரம்பித்துவிட்டனர்.

என்னதான் வேண்டுமாம் இவர்களுக்கு? "ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசலாம், ஒரு ஆண் ஒரு பெண்ணின் முகத்தைப் பார்க்கலாம்" என்றுதானே அவர் கூறினார். நபிகளார்(ஸல்) காலத்து முஸ்லிம்களின் குணாதிசயம் இப்படி இருக்கவில்லையா என்ன? இதில் அவர் என்ன புதிதாகக் கூறிவிட்டார். இதற்கும் ஒருபடி மேலே சென்ற அவர், 'மனத்தை விகற்பங்கள் ஆட்படுத்தியிருக்காத நிலையிலே, ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் இயல்பாகக் கைகுலுக்கவும் செய்யலாம்.' என்பதாக எழுதியிருக்கிறார். இது ஒரு தனிநபரின் அபிப்பிராயம். அவ்வளவுதான். இதில் தவறென்ன இருக்கிறது?

இதுகுறித்த அனல் பறக்கும் விவாதங்களும் வாதப் பிரதிவாதங்களும் ஒருபுறத்தில் சூடுபிடிக்கத் துவங்கிவிட; சூழவுமிருந்த இஸ்லாமிய வட்டாரங்கள் இதுகுறித்த சம்பாஷணைகளில் மும்முரமாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்க, மறுபுறத்திலோ, அரேபியாவின் வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் யுத்தங்கள் அதன் உக்கிரநிலையை எட்டிவிடத் தொடங்கிவிட்டன; கிழக்கிலும் போர் மூளுவதற்கான அரிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன. இவர்களைப் பாருங்கள் இங்கே. பேசுவதெல்லாம் பாலுணர்வு குறித்த விவகாரமாகத்தான் இருக்கிறது. உங்கள் இயல்பூக்கங்கள்மீது கட்டுப்பாடு செலுத்தி அதற்கேற்றால்போல் பாலுணர்வு குறித்த விவகாரங்களை அணுகிட உங்களால் இயலவில்லையா என்ன? அந்த அளவுக்குக்கூட நீங்கள் முதிர்ச்சி பெற்றிருக்கவில்லையா என்ன?

சிந்தித்துப்பார்க்க வேண்டும் சகோதர சகோதரிகளே! நம் காலத்து யதார்த்தங்கள்தான் இவைகள் எல்லாம். நமது பொருப்புகளை முன்னெடுத்துச் செல்லத் தகுதி அற்றவர்களாக நாம் இருக்கும்பட்சத்தில் இப்படித்தான் போய்க்கொண்டிருக்கும் நிலைமை.

இரண்டு நாள்கள் முன்பு. அதே அரேபியாவில்தான். எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி தன்னந்தனியாக தனது வீட்டில் இருக்கிறாள். இரண்டு ஆடவர்கள் அவளிடம் ஒப்படைப்பதற்காக ஏதோ எடுத்துவருகிறார்கள். மூதாட்டியின் தள்ளாமையைக் கருத்தில்கொண்டு, அவளுக்குச் சகாயம் செய்ய நாடுகிறார்கள். கொண்டுவந்த பொருளை அவளுக்கு ஒத்தாசையாக வீட்டினுள் கொண்டுபோய் வைத்துவிட்டு வெளியே வருவதற்கு சமயம் ஆகிவிடுகிறது. அவ்வளவுதான். அங்கே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதுபோல பாவ்லா காட்டிக்கொண்டிருப்பவர்கள் லபக்கென்று இவ்விவகாரத்தை கையில் எடுத்துவிட்டார்கள்.

நாம் முன்னர் குறிப்பிட்ட அதே கூட்டத்தினர்தான். "ஹை'அத் அல் அம்ர் பில் ம'ஆரூஃப் வ நஹி அனில் முன்கர்". இவர்களின் ஆரவாரத்தைப் பார்த்தால், ஏதோ அல் அம்ர் பில் ம'ஆரூஃப் வ நஹி அனில் முன்கர் என்பது பாலுணர்வு குறித்த விவகாரங்களுடன் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதுபோன்ற ஒரு தோற்றம்தான் இங்கே உண்டாகின்றது.

அகவை எழுபதின் ஆயாசத்தில் வீற்றிருந்த அந்தப் பெண்மணிமீது இவர்கள் வீண்பழி சுமத்தியதோடு, அவளை நீதிமன்றத்துக்கும் இழுத்துச் சென்றுவிட்டனர்.

இது நடந்துமுடிந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதோ இரண்டு நாள்கள் முன்புதான். தீர்ப்பின் சாரம் இதுதான், 'அந்தப் பெண்ணுக்கு நாற்பது கசை அடிகளுடன் சேர்த்து நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.' மற்ற ஆடவர்களுக்கு, ஏதோ ஆறேழு மாதங்கள் சிறைத்தண்டனையும் அறுபது, எழுபது கசை அடிகளும் என்று நினைக்கிறேன். இந்த நபர்கள் இருவருமே வயதாளிகள். 'நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை, அந்தப் பெண்மணிக்கு ஒத்தாசைதான் செய்தோம்' என்கின்றனர் நெகிழ்ச்சியுடன்.

இப்படித்தான் இந்த அரேபிய 'புனிதவான்கள்', இத்தகைய விவகாரங்களைக் கொண்டு வெகுஜன முஸ்லிம்களையும் அவர்களின் மனங்களையும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்; தொடர்ந்தும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நசிவின் பாரதூரமானது இன்னும் எத்துணை காலத்துக்கு நீடிக்கும் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், இதுதான் நமது நிலைமை!!

இறைவன் நன்கறிந்தவன்!!

No comments:

Post a Comment