Sunday, June 9, 2019

மீண்டும் அபூ தர் ... V

மீண்டும் அபூ தர் ...

அலீ ஷரிஅத்தி

தமிழில்: சம்மில்

அத்தியாயம் 5


மூன்று நாள்கள் கழிந்தது; நபிகளார் இறந்துபோகிறார். ‘ஒடுங்கிக் கிடந்த ஆரவாரப் பேச்சுகள்’ எல்லாம் நாலாபக்கங்களிலும் அவிழ்த்துவிடப்படுகிறது. மதத்திலிருந்து நீதி பிறிதொரு முறை பிரிக்கப்பட்டதன் சமிக்ஞையாகவும், வெகுஜனத்தின் குரல் பிறிதொரு முறை ஒடுக்கப்பட்டு மதம் என்பது மேட்டுக்குடி மத குருக்கள், மேல்தட்டு மக்கள், ஆட்சியாளர்கள் ஆகியோரின் பிரத்தியேகப் பயன்பாட்டின் கீழ் வந்துவிட்டதன் சமிக்ஞையாகவும் இந்தப் புரட்சிக்கான உந்துதலின் முழு வடிவமாய்த் திகழ்ந்த அலீ தனது வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறார். வனாந்தரத்தின் மனிதரான அபூ தர்; ஆதரவாளரோ எவ்விதப் பணியோ இல்லாத அந்நியனும் எத்தியோப்பிய அடிமையுமான பிலால்; அரபி அல்லாதவரும் விடுவிக்கப்பட்ட அடிமையுமான சல்மான்; கிரேக்கத்திலிருந்து வந்திருந்த ஓர் அயலானான சுஹைப்; கருப்பு-அடிமைத் தாய், தெற்கு-அரேபியத் தந்தை ஆகியோரின் கலப்பினனான அம்மார்;  வறுமையால் பீடிக்கப்பட்ட பேரீச்சை வியாபாரியான மேதம் ... இஸ்லாமியப் புரட்சியின் தலைவருடைய நெருங்கிய கூட்டாளிகளான இவர்கள் மைய அரங்கிலிருந்து வெளியேறினர். பகரமாக, தோழர்களில் மூத்தோரான அப்த் அல்-ரஹ்மான் இப்னு அவ்ஃப், சாஅத் இப்னு அபீ வக்காஸ், ஃகாலித் இப்னு வலீத், தல்ஹா, ஸுபைர், அபூ பக்கர், உமர், உஸ்மான் ஆகியோர் - அறியாமைக் காலத்தின் மேல்தட்டு வகையறாக்களாக இருந்த இவர்கள் - அரசாங்கத்தின் தலைமைத்துவத்தைக் கையில் எடுத்தனர்; சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டனர்; அந்தரங்கமான ஓர் அரசியல் வட்டத்தை உருவாக்கினர்.

ஸகீஃபாவில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு பாணியிலான தேர்தலும் அதிலிருந்து ஆரம்பித்த இஸ்லாத்தின் இந்த உறுதியான, எதிர்பாராத வலதுசாரிச் சாய்வும் அபூ பக்கர் காலத்தில் ஓர் அரசியல் அம்சம் கொண்டதாக மட்டுமே இருந்தது. என்றாலும், உமரின் காலத்தில், அரசாங்க ஊதிய அளவின் அடிப்படையில் முஸ்லிம்களை வகைப்படுத்தியதன் மூலம் தனது பொருளாதார முகத்தை அது வெளிக்காட்டியது. புனித நபியின் மனைவிமாரைக்கூட, திருமணத்துக்கு முந்தைய அவர்களின் வகுப்பை அடிப்படையாகக் கொண்டு அது இரண்டு அளவுகோள்களில் வகைப்படுத்தியது, சுதந்திர ஜீவிகள் அல்லது அடிமைகள்! சுதந்திரமான பெண்களாக இருந்த நபிகளாரின் மனைவிமார் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததோடு இந்தச் சலுகையையும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

ஆனால், உஸ்மானின் ஆட்சிக் காலத்திலோ இந்த (வலதுசாரி) சாய்வு அதன் சிகரத்தை எட்டியதோடு சமூகமும் வகைப்படுத்தப்பட்டது. மேல்தட்டு மக்கள் ஆட்சி அதிகாரத்தின் மீது முழுமையான கட்டுப்பாடு செலுத்தினர்; கிழக்கு மற்றும் மேற்கின் இஸ்லாமிய வெற்றிகள் என்ற ரீதியில் ஈரானின் டிரான்ஸோக்சியானாவிலிருந்து வடக்கு ஆப்பிரிக்கா வரை ஈட்டப்பெற்ற பொருளாதார வளங்கள், யுத்தத்தில் கிடைத்த பொருள்கள், அரசியல் பதவிகள், அநேக நிர்வாகப் பதவிகள் எல்லாம் மதீனாவில் இருந்த ஆட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. நபித்தோழர்கள், முஜாஹிதுகள், குடியேறிகள் மற்றும் உதவியாளர்கள் என்று புரட்சிகர-சித்தாந்திகளாக இருந்த தீவிர ஆதரவாளர்கள் அரசியல்வாதிகளாகவும் அதிகாரம், செல்வங்கள் படைத்த ஆளுமைகளாகவும் உருப்பெற்றனர்;  பொதுவாக இறையுணர்வு மிக்கவர்களாக, ஏழைகளாக, பற்றாளர்களாக, போராளிகளாக இருந்தவர்களிலிருந்து ஆட்சியாளர்களின் வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது; யுத்தத்தின் மீதமிச்சங்கள், லட்சக்கணக்கான முஸ்லிம்களின் ஏழைகளுக்கான தொகை (ஸகாத்), முஸ்லிம்களின் பாதுகாப்பில் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்கள் செலுத்திய வரி (ஜிஸ்யா) ஆகியவற்றினூடாகப் பெருக்கெடுத்த செல்வங்களின் மூலம் புதிய பூர்ஷ்வா வகுப்பு ஒன்று உருவானது. முஸ்லிம்களின் ஏழைகளுக்கான தொகையும் (ஸகாத்), முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் காஃபிர்கள் செலுத்திய வரியும் (ஜிஸ்யா) ‘ஏழை’ மதீனாவில் அந்தரங்கமாகச் சுழன்றது. இது இஸ்லாமிய மதீனாவிலும், முஸ்லிம் உம்மத்திலும், பத்ர் மற்றும் உஹுது யுத்தங்களின் முஜாஹிதுகளுக்கிடையிலும் மாற்றத்தை உண்டுபண்ணியதோடு இஸ்லாத்தின் உள்ளடக்கத்திலும், அதன் சமூக நிலைப்பாட்டிலும், விளைவாக மதம் பற்றிய புரிந்துணர்விலும்கூட மாற்றத்தை ஏற்படுத்தியது. இஸ்லாத்தை ‘புரட்சிகரச் சித்தாந்தம்’ எனும் வடிவத்திலிருந்து ‘அரசாங்க மதம்’ எனும் வடிவத்துக்கு அது மாற்றியது. ஸகீஃபாவில் வலதுசாரியை நோக்கி பிறழ்ந்து சென்ற இந்தக் கோணல், கால் நூற்றாண்டுக்கும் குறைவான காலத்தில், (ஆரம்பகட்ட கிலாஃபத்தில் ஆளுநராக இருந்த) சுதந்திர ஜீவியான முஆவியாவும், நபிகளாரால் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட மர்வான் இப்னு ஹகமும், அண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாமிய மதகுருவாக ஆகிவிட்டிருந்த காஅப் அல்-அஹ்பார் என்ற யூத மத போதகரும் இஸ்லாத்தின் அபாரமான அரசியல், அறிவுஜீவி முகங்களாக அறியப்படும் புள்ளிக்கு வந்து சேர்ந்தது. நபிகளாரின் கலீஃபாவான உஸ்மான் புனித குர்ஆன் மீது விரிவுரைகள் வழங்கும்படி காஅபைக் கேட்டுக்கொள்வார்; அலீ, அபூ தர் ஆகியோரின் விரிவுரைகளை அவர் பிழையெனக் கருதினார்.

ஈரான் மன்னர், ரோமாபுரியின் சீஸர் ஆகியோரது ஆட்சி அமைப்பின் போலி நகலாக இருந்த தனது புதிய அரசியல், பொருளாதார முறைமையை நியாயப்படுத்துவதற்காக ஏமாற்றி நம்பவைக்கும் எவ்வித முயற்சியிலும் உஸ்மான் ஈடுபடவில்லை. சொல்லப்போனால், அந்த நேரத்தில் அப்படிப்பட்ட ஒரு செயல் வீரியம் மிக்கதாகவும் இருந்திருக்காது. ஏனெனில், இஸ்லாமிய ஆட்சி என்றால் என்ன என்பதை மக்கள் தங்கள் சொந்த விழிகளாலேயே பார்த்துவிட்டனர் என்பதோடு இஸ்லாமிய முலாம் பூசி நியாயப்படுத்த முடியாத அளவுக்கு உஸ்மானின் செயல்பாடுகள் வெட்கித் தலை குனிய வைக்கும் விதத்தில் இருந்தன.

இஸ்லாத்தில் முதல் முறையாகத் தோன்றிய அடுக்கடுக்கான பல நூதனங்களை (பித்அத்) உருவாக்கியவர்தான் உஸ்மான். முதன்முறையாக, தலைவர் என்பவர் ஓர் அரண்மனைவாசி ஆகிறார்; முதன்முறையாக, அதிகாரபூர்வப் பாதுகாவலர்களை அவர் நியமிக்கிறார்; முதன்முறையாக, விசேஷ அரசவையினர் காணக்கிடைக்கின்றனர்; முதன்முறையாக, ஓர் அரண்மனை மேலாளர் அவருடன் இருக்கிறார்; முதன்முறையாக, சாமானிய வெகுஜனத்துக்கும் கலீஃபாவுக்கும் இடையிலான உறவுமுறை ஓர் மத்தியஸ்தரை வேண்டி நின்றது; முதன்முறையாக, பொதுக் கருவூலம் கலீஃபாவின் விருப்பப்படி கையாளப்பட்டது. எந்த அளவுக்கெனில், சாவிகள் வைத்திருப்பவர் மசூதிக்குச் சென்று பொதுக் கருவூலத்தின் சொந்தக்காரர்களான மக்களிடம் பின்வருமாறு அறிவிக்கிறார், “கலீஃபா குறுக்கிடுவதால் சாவிகளை உங்களிடமே கொடுத்துவிடுகிறேன். நான் ராஜினாமா செய்கிறேன். உங்களுக்கு வேண்டுமா?”; முதன்முறையாக, ஓர் அரசியல் சிறைச்சாலை காணக்கிடைக்கிறது; முதன்முறையாக, கலீஃபாவின் அல்லது அவரது முகவர்களின் நடைமுறையைச் சாடினார் என்பதற்காக முஸ்லிம் ஒருவர் கண்காணிக்கப்படுகிறார்; முதன்முறையாக, அரசியல் நாடுகடத்தல் நிகழ்கிறது; முதன்முறையாக, ஒரு மனிதர் (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்) ஆட்சி அமைப்பால் சித்திரவதை செய்யப்படுகிறார்; முதன்முறையாக, அரசியல் ரீதியிலே மக்களை ஏமாற்றுவதற்கான ஓர் உபாயமாக புனித குர்ஆன் பயன்படுத்தப்படுகிறது; முதன்முறையாக, மக்களின் விதியில் தான்தோன்றித்தனமாக விளையாடுவதற்கான கடிவாளம் ஆட்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது, மேலும் எல்லாவித சட்ட ரீதியான, இஸ்லாமியப் பொறுப்புகளிலிருந்தும் அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்கின்றனர்; முதன்முறையாக, கோத்திர ரீதியான உறவுகளும் இரத்த பந்தங்களும் அரசியல், சமூக முன்னேற்றத்துக்கான ஏணிகள் ஆகின்றன; முதன்முறையாக, உயர் பதவிகள் எல்லாம் ஏகபோகம் ஆக்கப்பட்டன, அவை கலீஃபாவுடனான அரசியல் உடன்படிக்கையில் அங்கத்தினர்களாக இருந்தவர்களின் தனியுடைமை ஆயின; பதவியில் அமர்வதற்கான உரைகல்லாக, இஸ்லாமும் இறையச்சமும் இருந்தது போய் இப்பொழுது இரத்த பந்தங்களும் அரசியலும் அந்த இடத்தை நிரப்பின; முதன்முறையாக, வகுப்புகளின் சுரண்டல், முரண்பாடு, ஏற்றத்தாழ்வு, முதலாளித்துவம் (கின்ஸ்), மேட்டிமைவாதம், மூடத்தனமான பெறுமானங்கள், கோத்திர ரீதியான உந்துதல், முதுமை, செல்வ வளம், இனம், வம்சாவளி, ஆளுமை-வழிபாடு, கோத்திரச் சார்புணர்வு ஆகியவை இஸ்லாமியச் சகோதரத்துவம், ஆன்மிக மதிப்பீடுகள், சமூகச் சமத்துவம் ஆகியவற்றைவிட மேலோங்கிச் செழித்தன.

தக்வா, ஜிஹாதிய பின்னணி, நபிகளாருடனான நெருக்கம், குர்ஆனிய அறிவு, தனிமனித தகைமை எல்லாவற்றையும் பொருளாதாரச் சிறப்பந்தஸ்து வெற்றிகொண்டது. இமாமத் என்கிற தலைமைத்துவத்தை ஆட்சி புரிவதற்கான உந்துதலும் புரட்சிகர இயக்கம் ஒன்றை பழமைவாத முறை ஒன்றும் வென்றெடுத்தன; மதம், மனிதம், பொருளியல், அரசியல் ஆகியவற்றில் சிறப்பந்தஸ்தைத் தக்கவைக்கும் வேட்கையானது வெகுஜனத்தை உள்ளிழுக்கும் இஸ்லாமியச் சமத்துவம் மற்றும் சுதந்திரத்தை வெற்றிகொண்டன. சமூகத்தின் அரசியல் விதியில் மற்றவர்கள்போன்ற அதே பொறுப்புணர்வு கொண்ட, கலீஃபா என்ற முறையில் குறுக்கிடுவதற்கான உரிமையைப் பெற்றிருந்த, பெரும் நபித்தோழர்களின் அதே தராதரத்தில் வீற்றிருந்த ஓர் குழப்பமான மனிதர் இவற்றுக்கிடையில் காணக்கிடைத்தார். என்றாலும், பொதுவாகக் கூறினால், உண்மை மீதான வேட்கையை சமரசத்தின் விளையாட்டுகள் வெற்றிகொண்டன; போராட்டத்தை அரசியலும், இஸ்லாமிய உண்மைகளை இஸ்லாமியக் கோஷங்களும் வெற்றிகொண்டன; விசுவாசிகளை மூத்த நபித்தோழர்கள் வெற்றிகொண்டார்கள்; உம்மத்தை வர்க்கமும், மசூதியை கலீஃபாவின் வீடும், மனித கண்ணியத்தைக் கோத்திர மேட்டிமைவாதமும், புதிய புரட்சியைப் பழைய அறியாமையும், மரபை நூதனமும், இறுதியாக, முஹம்மதின் குடும்பத்தை அபூ சுஃப்யானின் குடும்பமும் வெற்றிகொண்டன. 
  
விளைவாக, அலீ நிராயுதபாணி ஆக்கப்பட்டார்! இன்னும், அபூ பக்கரின் தேர்விலும் உமரின் நியமனத்திலும் அலீயின் தோல்வியை முழுமையாக ஒப்புக்கொண்டதன் விளைவாய்த் துயரத்தை அனுபவித்துவந்த அபூ தர் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார். எல்லாமே மாறிய பிறகு இப்பொழுது ஒரு கணம்கூட அவரால் மெளனமாக இருக்க முடியாது: எதேச்சாதிகாரம், தங்கம், பித்தலாட்டம் ஆகிய இந்த அச்சுறுத்தும் திரித்துவம் ஏகத்துவத்தின் அழகிய போர்வையின் பின்னால் இருந்த நபிகளாரின் கலீஃபாவின் வெண்ணாடையில் வடிவம் கொண்டிருந்தது; அது மக்களை வெற்றிகொண்டது;  இந்தத் திரித்துவத்துக்காகத்தான் மக்கள் தொடர்ந்து பலியிடப்பட்டு வந்தனர்.

பொய்மை அவரை எதிர்த்தபோது உண்மைக்குத் துணைநின்றார்; குஃப்ர் எதிர்த்தபோது மதத்துக்குத் துணைநின்றார்; சுரண்டல் எதிர்த்தபோது உரிமைகளுக்கும் சரியானவற்றுக்கும் துணைநின்றார்; இறுதியாக, பிறழ்வு எதிர்த்தபோது நேர்வழிக்குத் துணைநின்றார். இவை மட்டுமல்ல அபூ தர்ரின் செயலுக்கான பெறுமானம். ஒப்பீட்டளவில் புரட்சிகரமான, முஜாஹித் முகங்களுக்கெல்லாம் இடையில் ஓர் தலைசிறந்த, சிறப்பான முகமாக அவர் மிளிர்வதற்குக் காரணம் அவரது போராட்டத்தில் அவர் தேர்ந்துகொண்ட துல்லியமான, தெளிவான நிலைப்பாடே. இதனால்தான் அவர், ஒரு சரியான மதிப்பீட்டின் அடிப்படையில், அனைத்து பிறழ்வுகளுக்குமான முக்கியக் காரணங்களைக் கண்டறிந்தார்; இந்தக் குஃப்ரின், வலதுசாரிகளின், பிறழ்வின் யதார்த்தத்தை அவர் தோலுரித்துக் காட்டினார்.

அவரது போராட்டத்தில் அவர் தெளிவற்ற சொற்றொடர்களிலோ சில்லறைக் கோஷங்களிலோ தற்சாய்வான விவகாரங்களிலோ தேவைகளிலோ துக்கங்களிலோ உறைந்திருக்கவில்லை; நடைமுறைச் சாத்தியமற்றவற்றிலோ, கற்பனைகளிலோ, தத்துவ வகையறாக்களின் வழிபாட்டு இலக்குகளிலோ, பண்டித பாவனைகளிலோ, இறையியலிலோ, அடுக்கடுக்கான கண்டன விவாதங்களிலோ, பிறழ்வை நோக்கிய, தற்சாய்வான விஷயங்களிலோ, அறிவுசார் நுட்பங்களிலோ, அறிஞர்கள், மெய்ஞானிகள், சட்ட வல்லுனர்கள், இறையியலாளர்களின் உணர்வெழுச்சிகளிலோ அவர் அமிழ்ந்திருக்கவில்லை. பின்னாளில் இஸ்லாமியச் சமூகத்தின் பூரா சச்சரவுகள், போராட்டங்களை அந்தந்தத் தளங்களுக்குள் இவை குறுக்கிவிட்டதன் விளைவாக ‘இமாமத்’, ‘நீதி’ ஆகிய இரு முக்கிய முழக்கங்கள் சிந்தனைகளை விட்டும் அகன்றுபோயின.

காரணங்களின் இடத்தில் அவர் விளைவை வைத்துப் பார்க்கவில்லை. ‘ஒருவர் எங்கிருந்து தொடங்க வேண்டும்’ என்பதை அவர் காட்டினார்; போராட்டத்தின் கூரிய முனை எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்; பிறழ்ந்துபோன சச்சரவுகளும் நிகழ்வுகளின் தவறான கிரகித்தலும் எதிரியுடனான போராட்டத்தை எதிரி விரும்பும் போக்கிலேயே கொண்டுசென்றுவிடும் என்பதை அவர் கற்றுத் தந்தார். பிறகு என்னதான் வெற்றி என்பது கிட்டியிருந்தாலும், வேதனை எதுவும் ஆறியிருக்காது, எதிரியும் பாதிப்படைந்திருக்க மாட்டார்.  

நீதியை நிலைநிறுத்துவதற்காகத் தனது போராட்டத்தின் பிரதான தடத்தை வகுப்பு வேறுபாட்டுக்கு எதிரான ஒரு போராட்டமாக அவர் நிர்ணயித்துக்கொண்டார். இந்த இரு முழக்கங்களுமே (வகுப்பு வேறுபாடு மற்றும் நீதி) மிக விசாலமானதாக இருப்பதால் கிலாஃபத்தும்கூடத் தனது பிரச்சார வசதிகளைப் பயன்படுத்தி, அதாவது பிரசங்க மேடை, மிஹ்ராபை எல்லாம் பயன்படுத்தி, அவற்றைப் பிரகடனம் செய்யலாம். மட்டுமில்லாமல் அதிகாரபூர்வ, ஆளும் இஸ்லாத்தின் பிரச்சார முகவர்கள், மரபுகளின் பரப்புரையாளர்கள், பிரச்சாரகர்கள், போதகர்கள், உரையாசிரியர்கள், சட்டவியல் நிபுணர்கள், அறிஞர்கள் மூலமாக அவற்றை நியாயப்படுத்தவும் மிகைப்படுத்தவும் செய்யலாம். அதன் பிறகு அவற்றுக்கென்று எந்த மதிப்பும் இருக்காது. தன் போன்றவர்களுக்குப் பாடமாக அமைவதன் நிமித்தம் தங்கள் இஸ்லாத்தை அலீயின் ‘முஹம்மதி-இஸ்லா’மாக ஆக்கிக்கொள்ள அரும்பாடுபடும் அபூ தர் குர்ஆனை நோக்கித் திரும்பினார். தனது போர் கர்ஜனையை அவர் அதிலிருந்துதான் பெற்றார். 

(கின்ஸ்) தங்கம், வெள்ளியைப் பத்திரப்படுத்திக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிட (இன்ஃபாக்) மறுப்பவர்களுக்கு தாள முடியாத வேதனை குறித்து நற்செய்தி கூறுவீராக, அந்நாளில் அவர்கள் நரக நெருப்பில் சுட்டெரிக்கப்படுவார்கள், அவர்களது நெற்றிகளிலும், பக்கவாட்டுப் பகுதிகளிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ‘உங்களுக்காக நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்த வஸ்துகள் இவைதான்; ஆதலால், நீங்கள் பதுக்கிக்கொண்டிருந்தவற்றை இப்பொழுது சுவைத்துப் பாருங்கள்!’ (9: 34, 35)

பொக்கிஷங்களைச் சுட்டும் கின்ஸ் என்ற அரபிப் பதத்துக்கு, ‘மூலதனத்தைச் சேமிப்பது’ என்பது பொருள். தங்கமும் வெள்ளியும் முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகள்.

‘செலவிடும் செய’லான இன்ஃபாக், பிளவுபடுதல் என்று அர்த்தமாகும் நஃபாக்கிலிருந்து வருகிறது. இஃப்அல் எனும் வினைச்சொல் வடிவத்திலிருந்து எடுக்கப்பட்ட இது முதல் சொல்லின் அர்த்தங்களான ஒன்றின் பிளவை அகற்றுதல் மற்றும் இல்லாமல் ஆக்குதலுக்கு நேர்மாறான பொருளைத் தருகிறது. முதலாளித்துவத்தாலும் பொருளாதாரச் சுரண்டலாலும் சமூகத்தில் ஏற்படுகிற ஓர் விரிசலை, ஒரு பிளவைத்தான் இவ்வாக்கியங்கள் சுட்டுகின்றன என்பது தெளிவாகிறது. வகுப்பு ரீதியான விரிசல் அல்லது பிளவு, ஏற்றத்தாழ்வு, சமச்சீரற்ற அல்லது சமஅளவு அற்ற நிலையிலான சமூக வாழ்வு ஆகியவையே இங்கு சுட்டப்படுகின்றன.
 தொடர்ச்சி ஆறாம் பாகத்தில் ...

No comments:

Post a Comment