அடிமை மனோபாவம்
இமாம் முஹம்மது
அல்-ஆஸி
தமிழில்:
சம்மில்
கலைச்சொற்கள்:
·
அல் முர்ஜி'ஆ: இஸ்லாத்தின்
துவக்க காலகட்டத்தில் உருவெடுத்த அதன் உட்பிரிவுகளுள் ஒன்று. உஸ்மானுடைய (ரழி) ஆட்சிக்காலத்தின்
இறுதிக் கட்டத்தில், அவரது ஆட்சிக்கு எதிராக வெளிக்கிளம்பிய கிளர்ச்சியின் சூழல்தான்
மேற்படி உட்பிரிவுக்கானத் தோற்றுவாய். இப்பிரிவானது, அரசியல் நோக்கங்களுடன் உருவெடுத்தமையால்
இதனை ஓர் அரசியல் பிரிவாகவே நாம் கருதிக்கொள்ளலாம்.
·
அல்லதீன ழலமூ: (குர்'ஆனியச் சொல்லாடல்) அநீதி
இழைப்பவர்கள் / அநியாயக்காரர்கள், அல்லது ‘அநீதி இழைத்துக்கொண்டிருக்கிறார்களே அத்தகையவர்கள்’
என்ற அர்த்தத்திலும் இந்தப் பதத்தை பிரயோகிக்கலாம். (இதனை'ழாலிம்'-ன் பன்மை
வடிவமாகவும் கொள்ளலாம்).
·
அலைஹிஸ்ஸலாம்: இறைவனின்
சமாதானம் அவர்மீது என்றென்றும் படரட்டுமாக (பொதுவாக நபிமார்களையோ அல்லது நபித்தோழர்களில்
சிலரையோ பிரஸ்தாபிக்க நேரும் தருணங்களில் மொழியப்படும் கௌரவ வார்த்தை இது).
·
அன்ஸார்: அல்லது
அல்-அன்ஸார். நேர்பொருள்: உதவியாளர் / பாதுகாவலர். "உதவியாளர்கள் அல்லது
தோழர்கள்" என்பது, நபிகளாரையும் அவருடன் இடம்பெயர்ந்துவந்த மக்கத்து முஸ்லிம்களையும்
முதன்முதலாக வரவேற்று அபயமளித்த மதீனாவாசிகளுக்கு, நபிகளாரால் வழங்கப்பட்ட கௌரவப் பட்டமாகும்.
·
அஸ்னாமுன் / அஸ்னாம்: (ஒருமை: ஸனமுன்) சிலை / விக்கிரகம்.
·
ஆயதுன் / ஆயத்: (பன்மை: ஆயாதுன்) குர்'ஆன் வசனங்களைக் குறிக்கப்
பிரயோகிக்கப்படும் ஒரு பதம் / ஓர் அத்தாட்சி / இறை அதிசயம்.
·
இஜ்திஹாத்: மனித
பகுத்தறிவைப் பிரயோகித்து, நடைமுறைச் சூழல்களில் சந்திக்கநேரும் சட்ட சிக்கல்கள், பிரச்சினைகளுக்கான தீர்வுகளை
இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களிலிருந்து உருவிப்பெறும்
செயல்முறை.
·
உலமா: (ஒருமை: ஆலிம்) நேர்பொருள்: கற்றறிந்த மேதைகள்; அறிஞர் பெருமக்கள்.
·
கலீஃபா: இறைத்தூதரின் பிரதிநிதி (கலீஃபதுர் ரஸூல்) என்ற அந்தஸ்தில்
ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பரிபாலனைசெய்யும் ஆட்சியாளர்.
·
காஃபிர்: (பன்மை: குஃப்பார்) நேர்பொருள்: இறை நிராகரிப்பாளர்.
பரந்துபட்ட பிரயோகத்தில், இறைவனின் அதிகாரப் பிரசன்னத்தை மறுதலிப்பவர்.
·
ஃகுத்பா: ஜும்'ஆ பிரசங்கம்.
·
தார் அல்-ஹர்ப்: யுத்தத்தால்
சூழப்பட்ட ஒரு இடம். போர்ப் பதற்றங்கள், இராணுவ, யுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குப்
பெயர்பெற்ற ஒரு இடம்.
·
பத்ரு: மக்கத்து
இறை நிராகரிப்பாளர்களுடனான முஸ்லிம்களின் முதல் எதிர்படுதல் அல்லது முதல் யுத்தம் நடந்த
இடம்.
·
பனி இஸ்ராயீல்: நபி யாகூபின்
(அலை) வழித்தோன்றல்கள். (நபி யாகூபின் இன்னோர் பெயர் இஸ்ராயீல்).
·
ஃபிக்ஹு: இஸ்லாமிய
சட்டவியல்.
·
மிம்பர்: ஜும்'ஆ
தினத்தன்று சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக பள்ளிவாசல்களில் அமைக்கப்பட்டிருக்கும் படித்துறை.
·
முஷ்ரிக்: (பன்மை: முஷ்ரிக்கீன் / முஷ்ரிக்கூன்)
நேர்பொருள்:
இறைவனுக்கு இணை கற்பிப்பவர். ஷிர்க் குற்றத்துக்கு
உரித்தானவர். (பார்க்க: ஷிர்க்).
·
ழாலிம்: (பன்மை: ழாலிமூன் / குர்'ஆனியச் சொல்லாடல்) நேர்பொருள்: அநீதி இழைப்பவர். விரிவானப் பிரயோகம் – தனது ஆன்மாவுக்கெதிராக அநீதி
இழைத்துக்கொள்பவர்; பிறருக்கெதிராக அநீதி இழைப்பவர்; அநீதியின் அஸ்திவாரத்தின்மீது
தனது அன்றாட வாழ்வின் தொழிற்பாடுகளைக் கட்டமைத்துக்கொள்பவர்... இத்யாதி.
·
ழுல்ம்: நேர்பொருள்: அநீதி / அடக்குமுறை.
·
ஷிர்க்: நேர்பொருள்:
இறைவனுக்கு இணை கற்பித்தல். இறைவனின் நிலையிடத்தில் அவனுக்குப்பகரமாக பிறிதொரு பொருளையோ
நபரையோ கொள்கையையோ சரிநிகர் சமானமாக நிலைநிறுத்திக்கொள்வது. (இங்கே இறைவனின் நிலையிடம்
என்பது, வணக்க வழிபாடுகள், சடங்கு சாங்கியங்களில் அவனைச் சேவிப்பதைக் குறிப்பது மட்டுமல்ல.
மாறாக, அவனது திருநாமங்கள் உணர்த்திநிற்கும் பண்புகளைக் குறிப்பதும்கூட).
·
ஹதீஸ்: இறைத்தூதரின்(ஸல்)
சொல், செயல், அங்கீகாரம் அடங்கிய மரபுரீதியான அறிவிப்பு.
·
ஹிஜ்ரி: முஹம்மது(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப்
புலம்பெயர்ந்த நாளிலிருந்து ஆரம்பமாகும் இஸ்லாமிய நாள்காட்டி. ஹிஜ்ரி 1-ம் ஆண்டு
என்றால், பொது யுகத் தேதி அமைப்பில், (Common Era Dating System) 622-ம் ஆண்டு என்று
கணக்கிடப்படுகிறது.
·
ஹிஜாஸ்: மக்கா,
மதீனா ஆகிய இரு புனித ஸ்தலங்களை உள்ளடக்கிய அரேபிய தீபகற்பத்தின் நிலப்பரப்பு.
·
ஜுஹ்த்: (பன்மை: ஜுஹூத்) நேர்பொருள்: முயற்சி / பிரயத்தனம்.
அடிமை மனோபாவம்
பற்றுறுதியைத்
தக்கவைத்துக்கொண்டிருக்கும்
சகோதர, சகோதரிகளே!
காலக்கிரமத்தில் 'சாமானிய' வார்த்தைகளாகிவிட்டிருக்கும் பிரசித்திபெற்ற
ஆயத்துகளையும் 'செல்லரித்துப்போன' ஹதீஸ்களையும் குறித்த துலக்கமான புரிதலின்
பக்கம் முஸ்லிம்களை மீட்கொணர்வதில்தான் நமது பிரயத்தனங்கள் அனைத்தையும் இதுகாறும் நாம்
செலவிட்டுக்கொண்டிருக்கிறோம். ஓர் ஆயத் அல்லது
ஹதீஸ் நம்மிடம் இயம்பப்பட்டால், அதன் 'தொலைந்துபோய்விட்ட
அர்த்தங்க'ளை மீள்-புத்துயிரூட்ட எத்தனிப்பதில்தான் நமது பிரயாசைகளும் ஜுஹ்தும்
இஜ்திஹாதும் செலவிடப்படுகின்றன.
நம் காலத்து சமூகச் சூழலிலிருந்தும், வியாபித்திருக்கும் 'போலிப்
பிரச்சார'ச் சூழலிலிருந்தும் பற்பல விஷயங்களைத் தெளிவாக நம்மால் அவதானித்துக்கொள்ள
முடிகிறது. நம்மை நோக்கிய மாச்சரியத்தாலும் காழ்ப்புணர்வாலும் மட்டுமீறிய வெறுப்பினாலும்
குமைந்துகொண்டிருக்கும் நிறுவனங்கள் ஆகட்டும், பொருளாதார-அரசியல் விற்பன்னர்கள் ஆகட்டும்,
இராணுவங்கள் ஆகட்டும், இவை அனைத்துமே அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் ஆழமாக
வேரூன்றியிருக்கக்கூடிய இஸ்லாமிய உந்துசக்தியை கபளீகரம்செய்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியே
காத்திருக்கின்றன.
பெரும்திரள் அபிப்பிராயங்கள், எதிர்பார்ப்புகளோடு
தங்களை ஐக்கியமாக்கிக்கொள்ளத் தலைப்படும் எண்ணிறந்த முஸ்லிம்கள் நம்மைச் சூழவும் காணக்கிடைக்கின்றனர்.
இவ்விடத்தில்தான், அல்லாஹ்வின் 'வரையறுக்கும்' வேதத்தின் பக்கம் நம்மை நாமே மீட்கொணரவேண்டியிருக்கிறது.
'சூறா-அந்நிஸா'வை எடுத்துக்கொள்ளுங்கள்.
முஸ்லிம்களின் முதல் எதிர்படுதல் அல்லது முதல் யுத்தமான பத்ரு யுத்தம் தொடர்பிலே,
வரலாற்றுப் புதைகுழிக்குள் அமிழ்த்தப்பட்டுவிட்ட விவரங்களுள் சிலவற்றை மேற்படி அத்தியாயத்தின்
ஓர் ஆயத் நமக்கு விவரணைசெய்கிறது.
மக்கத்து மாந்தர்களோடு இணைந்து அந்நகரின் நிறுவனங்களும்
அன்றைய 'மக்கத்து அரசாங்க'மும் முஸ்லிம்களை பலாத்காரமாக மக்காவைவிட்டு வெளியேற்றிய
நிகழ்வை நாமெல்லாம் அறிந்திருப்போம். இந்த நடவடிக்கையினூடாக, முஸ்லிம்களை இவர்கள் தோற்கடித்துவிட்டது
போன்ற ஒரு பிம்பம் வெகுஜன அபிப்பிராயங்களைச் சமசரப்படுத்தியது. மக்காவின் குஃப்பார்களும்
முஷ்ரிக்கீன்களும், ஓர் அதிதீவிர 'சுய-சிலாகிப்புப் பிரச்சார'த்தினூடே வெகுஜன அபிப்பிராயங்களைத்
தங்கள் பக்கம் ஆகர்ஷித்துக்கொள்வதில் வெற்றியடைந்தனர். இப்படியே, வருடங்கள் பலவும்
வெருண்டோடின. அறுதியாக மக்கா, மதீனாவுக்கு இடையிலான முதல் 'ஆயுத எதிர்படுத'லுக்கானத்
தருணமும் வந்துசேர்ந்தது.
இந்த முதல் எதிர்படுதலின் சூழமைவில், முஸ்லிம்கள்
அனைவருமே ஏகதேசம் மதீனாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டிருந்த நிலையில், விதிக்கு விலக்கான
சிற்சில முஸ்லிம்கள் மட்டும் மக்காவிலேயே தங்கிவிட்டிருந்தனர். இதனை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள்.
ஏனெனில், வரலாற்று ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுவிட்ட விவரங்களுள் இதுவும் ஒன்றாகும்.
அங்கே, பெரும்பான்மைவாதத்தின் அச்சுறுத்தும் பிம்பத்தால்
பீதிவயப்பட்ட மக்கத்து முஸ்லிம்கள், மதீனத்து முஸ்லிம்களுக்கு எதிராக முஷ்ரிக்குகளோடு கைக்கோத்து யுத்தம்புரிவது
என்ற நிர்ப்பந்தத்துக்குத்
தள்ளப்பட்டனர். இது, மக்கத்து முஸ்லிம்களிடம் முஷ்ரிக்குகள் முன்னிறுத்திய கோரிக்கையும்கூட.
இஸ்லாத்தின் சம்பூர்ண உள்ளாற்றல் நிரூபிக்கப்படாத
ஒரு காலச்சூழல் அது. இறந்தகாலத்தை கருத்தில்கொண்டு இந்த விஷயத்தை அணுகினால், முஸ்லிம்கள்
இந்த யுத்தத்திலே தோல்வியைத் தழுவப்போவது திண்ணம் என்றுதான் எண்ணத் தோன்றும். இம்மாதிரியான
ஓர் எண்ணவோட்டம்தான் மக்கத்து முஸ்லிம்களின் சிந்தையையும் ஆட்கொண்டிருந்தது.
ஃபிக்ஹு சொல்லாடலின் அடிப்படையில்
தார் அல்-ஹர்ப் என்பதாகப் பின்னாளில் அழைக்கப்பட்டுவந்த மக்காவை வாழிடமாக வரித்துக்கொண்டிருந்த
இந்தச் சிறுபான்மை முஸ்லிம்கள், மதீனாவின் முஸ்லிம்களுக்கு எதிராக முஷ்ரிக்குகளின்
அணியில் இணைந்து போரிட்டனர். பத்ருப் போருடன்
மறைந்துபோய்விடாமல், நம் காலம்வரை தலைமுறைகள் தாண்டி பிரயாணித்துவந்திருக்கும் இப்படிப்பட்ட
உளவியலின் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டும் விதமாக அல்லாஹ், 'சூறா-அந்நிஸா'விலே
பின்வருமாறு இயம்புகிறான்:
إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ
الْمَلَائِكَةُ ظَالِمِي أَنفُسِهِمْ
“சந்தேகத்துக்கு இடமின்றி, தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக்கொண்டிருக்கும் நிலையில் எவர்களது ஆத்மாவை வானவர்கள் கைப்பற்றுகிறார்களோ........”
(சூறா
அந்நிஸா 4:97)
ஆம். வாழ்வின் இறுதித் தருணத்தில் விழிபிதுங்கி நிற்கும் இந்த
முஸ்லிம்கள் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக்கொண்டவர்கள்.
قَالُوا فِيمَ كُنتُمْ ۖ قَالُوا
كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ ۚ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ
وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا
"நைந்துபோய்விட்ட இந்த முஸ்லிம்களிடம் வானவர்கள், 'உலக வாழ்வில் உங்கள் நிலைமை எவ்வாறு இருந்தது?' என்பதாக வினவுவார்கள். அதற்கு அவர்கள், 'நாங்கள் இவ்வுலகில் பாதுகாப்பற்ற, அதிகாரமற்ற நிலையில் இருந்தோம்' என்பதாகக் கூறுவார்கள். அதற்கு மறுமொழி அளிக்கும் விதமாக வானவர்கள் (தவறான மருங்குடன் தங்களைப் பிணைத்துக்கொண்டு போர்புரிந்த இந்த நைந்துபோன முஸ்லிம்களிடம்) பின்வருமாறு இயம்புவார்கள், 'ஆனால், அல்லாஹ்வுடையதோ பரந்துபட்ட, விகாசமான ஓர் பூமி ஆயிற்றே, இருந்தும் (இறைவனது பாதையில் நிலைத்திருப்பதையிட்டு) இன்னபிற பகுதிகளை நோக்கி நீங்கள் இடம்பெயர்ந்துச் செல்லாததன் காரணம் என்ன?"
(சூறா
அந்நிஸா 4:97)
அல்லாஹ்வின்
விஸ்தாரமான இப்பூமியில் அல்லது பூகோளத்தில் நீங்கள் பிரயாணம் மேற்கொள்ளும் பட்சத்தில்,
உங்களை வரவேற்று, உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான சௌகரியங்களை ஏற்படுத்தித்தரும் அளவுக்கு
அது வளப்பமாக இருக்கவில்லையா? நீங்கள் என்ன நினைத்துக்கொண்டீர்கள்,
ஒட்டுமொத்த உலகையுமே நீங்கள் மக்காவாகவும்
ஹிஜாஸாகவும் பாவித்துக்கொண்டீர்களா என்ன?
இதற்குப்
பிறகு அவர்களால் எவ்வாறு தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்திக்கொள்ள முடியும்? மேற்படி
கேள்விகளுக்கு அவர்களால் எந்தப் பதிலும் கூறமுடியாது. ஆக, அவர்களது முடிவை அவ்விடத்திலேயே
அல்லாஹ் வரையறுத்துவிடுகிறான்.
فَأُولَٰئِكَ مَأْوَاهُمْ
جَهَنَّمُ ۖ وَسَاءَتْ مَصِيرًا
"......மேற்படி வகையறாக்களின் உறைவிடம் தழல்விட்டு எரியும் நெருப்பாகும். உறைவிடத்திலே இதைவிடக் குரூரமான ஓர் உறைவிடத்தை உங்களால் கண்டடைந்துகொள்ள முடியாது."
(சூறா அந்நிஸா 4:97)
ஒரேயொரு விஷயத்தை மட்டும் முதற்கட்டமாக நாம் இங்கே
மெய்யுணர்ந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். நமது வரலாற்றைப் பற்றிய இந்தக் குறிப்பிட்ட
விவரமானது பொதுவெளியிலே இன்றைய காலகட்டத்தில் விவாதிக்கப்படுவதே கிடையாது. அது ஏன்
என்பதற்கான காரணத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசத் துவங்கினாலே,
1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறிய நிகழ்வுகளுக்குச் சரிநிகர் சமானமான நிகழ்வுகள்
நம் காலத்திலும் அட்சரம் பிசகாமல் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன எனும் உண்மை அவர்களுக்குப்
புலப்பட்டுவிடும். சராசரிச் சிந்தனையாளராய்த் திகழும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் இது
நன்றாகவே தெரியும்.
கடந்துபோன நூற்றாண்டைச் சற்றுத் திருப்பிப்பாருங்கள்.
அதிலே, ஃபிரான்ஸ் நாட்டு காலாட்படையுடன் இணைந்து உள்ளூர் முஸ்லிம்களுக்கு எதிராகவும்,
தொலைதூர நாடுகளிலே முஸ்லிம்கள் அல்லாதோருக்கு எதிராகவும் யுத்தம்புரிந்த வடஆப்பிரிக்காவைச்
சேர்ந்த முஸ்லிம்களை நம்மால் இனம்கண்டுகொள்ள முடிகிறது. வியட்னாமிலும் தென்கிழக்கு
ஆசியாவிலும் சண்டையிட்டுக்கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டுத் துருப்புகளோடு முஸ்லிம்களுக்கு
என்ன வேலை? இந்த நீசக் காரியத்தை அவர்கள் எங்ஙனம் நியாயப்படுத்திக்கொள்வார்கள்?
இதுபோன்றுதான், துருக்கியைச் சார்ந்த முஸ்லிம்களும்
கொரியா யுத்தத்திலே அமெரிக்கத் துருப்புகளோடு தங்களைப் பிணைத்துக்கொண்டு போரிட்டார்கள்.
அமெரிக்க இராணுவத்தோடு இவர்களுக்கு என்ன வேலை? இத்தகைய யுத்த கடப்பாடுகளுக்கு இறைமறையிலிருந்தோ
நபிகளாரின் சுன்னாஹ்விலிருந்தோ ஏதேனும் நியாயப்பாடுகளை இவர்களால் எடுத்தியம்பிட
இயலுமா? அல்லது, மேற்காட்டிய ஆயத் துலக்கமாக இவர்களைதான் இடித்துரைக்கிறதா?
சூறா ஹூதில் காணக்கிடைக்கும் இன்னோரன்ன
பிறிதொரு ஆயத்தில் அல்லாஹ் பின்வருமாறு இயம்புகிறான். அதற்குமுன் ஒரு விஷயத்தை
நாம் நினைவிலிருத்திக்கொள்ள வேண்டும். சிந்தித்துணரும் மக்களுக்கு மட்டும்தான் இந்த
ஆயத்துகளின் உள்ளீடானது புலப்படுமே தவிர மூளைக்கு வேலைகொடுக்காத நிலையில் சர்வ
சதாகாலமும் இந்த ஆயத்துகளைப் பாராயணம் செய்துகொண்டே இருப்பவர்களுக்கு
அவை எவ்வித பயனும் அளிக்காது. பொருண்மைக்குச் செவிகொடுப்பதற்கும் நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும்
சித்தமாயுள்ள பற்பல முஸ்லிம்களோடு சேர்த்து உங்களையும் என்னையும் அல்லாஹ்
பின்வருமாறு
அறிவுறுத்துகிறான்.
وَلَا تَرْكَنُوا إِلَى الَّذِينَ
ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّارُ وَمَا لَكُم مِّن دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَاءَ
ثُمَّ لَا تُنصَرُونَ
“'அல்லதீன ழலமூ'வை நீங்கள் சார்ந்திருக்க வேண்டாம் அல்லது அவர்கள்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கவேண்டாம் அல்லது உங்களுக்காக அவர்களிடமிருந்து வரும் ஆதரவினை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். (இக்கட்டளைக்கு மாற்றமாக) நீங்கள் செயல்படும்பட்சத்தில், அதன் அறுதிமுடிவானது உங்களை கொழுந்துவிட்டு எரியும் நரக நெருப்பில் கொண்டுசேர்த்துவிடும். மேலும், அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு வேறு அவ்லியாவோ ஆதரவாளர்களோ உதவியாளர்களோ கிடையாது. அதையும் மீறி நீங்கள் 'அல்லதீன ழலமூ'மீது நம்பிக்கை வைப்பீர்களானால் அல்லது அவர்களிடமிருந்து வரும் ஆதரவு, உதவியை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களானால், திண்ணமாக நீங்கள் வெற்றியடைய மாட்டீர்கள்.”
(அல் குர்'ஆன் 11:113)
'அல்லதீன ழலமூ' என்ற
குர்'ஆனிய பதம், ஓர் விகாசமான வரைவிலக்கணத்தைத் தன்னுள் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு
தலைமுறையிலும், ஒவ்வொரு யுகத்திலும் அதற்கே உரித்தான ஓர் பிரத்தியேக நிலையிடம் அந்த
வரைவிலக்கணத்துக்குத் தேவைப்படுகிறது.
இன்றைய
காலகட்டத்தில், தலைமுறையில், யுகத்தில் 'அல்லதீன
ழலமூ'வின் நிறுவனமயப்பட்ட வெளிப்பாடாக ஏகாதிபத்தியவாதிகளையும் சியோனிஸ்டுகளையும்
நாம் வரையறுத்துக்கொள்ளலாம். இந்த இரு சொல்லாக்கங்களுமே வாய்ப்புக்கேடாக இன்றைய மிம்பர்களிலிருந்தும் மஸ்ஜிதுகளிலிருந்தும்
அதிகாரபூர்வமாகப் புறந்தள்ளப்பட்டுவிட்டன.
அதிகாரத்தில்
வீற்றிருப்பவர்களோ 'அல்லதீன ழலமூ' தொடர்பிலே
இருண்மையான ஓர் வரைவிலக்கணத்தையும் தெளிவற்ற ஒரு பிம்பத்தையும் முன்னிறுத்திக்காட்டுகிறார்கள்.
ஆனால், நம் காலத்திலே, நம் தலைமுறையிலே 'அல்லதீன
ழலமூ' யாரைச் சுட்டுகிறது என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதத்தில், காலச்சூழலுக்கு
ஏற்றாற்போல் அதன் வரைவிலக்கணத்தைக் கட்டுடைப்புசெய்யும் நமது போக்கை அவர்கள் ஒருபோதும்
சகித்துக்கொள்ள மாட்டார்கள்.
தெளிவான, மாசுமறுவற்ற உள்ளத்துடன் இத்தகைய உண்மைகளை விளக்கிக்கூறும்
விதத்தில் நெஞ்சுரம் மிக்க முஸ்லிம்கள் நம் மத்தியிலே இருந்திருக்க வேண்டும்.
அதற்குப்பதிலாக
'இஸ்ரேலி முஸ்லிம்கள்'தான் நம்மத்தியிலே இன்று பெரும்திரளில் இருக்கிறார்கள். பகடிசெய்வது
இவ்விடத்திலே எனது நோக்கமல்ல. 'இஸ்ரேலி',
'முஸ்லிம்' இரண்டுமே குர்'ஆனிய பதங்கள். இதனூடாக நான் சொல்லவரும் செய்தியை,
சூறா அல்-ஆ'ராஃபிலிருந்து ஓர் ஆயத்தை இங்கே இயம்புவதன் வாயிலாக விளக்கிக்கூற
முயல்கிறேன்.
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ
الْبَحْرَ فَأَتَوْا عَلَىٰ قَوْمٍ يَعْكُفُونَ عَلَىٰ أَصْنَامٍ لَّهُمْ
“நாம் பனு இஸ்ரவேலர்களை ஆழியைக் கடக்கச்செய்தோம்; (அதன் பின்னர்) தங்கள் விக்கிரகங்களை பற்றுறுதியோடு சேவித்துக்கொண்டிருந்த ஒரு சமூகத்தை அவர்கள் கண்டடைகின்றனர்........”
(அல் குர்'ஆன் 7:138)
பனு இஸ்ரவேலர்கள் அன்றைய
ஏகாதிபத்திய சர்வாதிகாரத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த வேளையில், மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அம்மக்களை விடுவித்து, சர்வாதிகாரத்தின்
முட்டுக்கட்டைகள், ஆதிக்க எல்லைகளைவிட்டும் அவர்களை வெளிக்கொணர்கிறார்; ஆழியைக் கடக்கச்செய்கிறார்;
அறுதியாக, சுதந்திர நிலப்பரப்பொன்றில் அவர்களைப் பிரவேசிக்கச்செய்கிறார். இந்த உதவாக்கரை
பனு இஸ்ரவேலர்களோ, அஸ்னாம் என்று அழைக்கப்படும் விக்கிரகங்கள்
அல்லது செதுக்கப்பட்ட சிலைகளைச் சேவித்துக்கொண்டிருந்த ஒரு சமூகத்தை அங்கே பார்க்கின்றனர்.
பனு இஸ்ரவேலர்கள் குறித்து
உங்களுக்குத் தெரிந்த அனைத்து வரலாற்றுத் தகவல்களையும் இவ்விடத்திலே நீங்கள் ஒருங்கமைத்துப்பாருங்கள்.
விகாரமான சித்திரவதைகள், ஓரவஞ்சனைகள், சமூக, பொருளாதார, அரசியல் அடிமைத்தனம் முதலானவற்றைத்
தலைமுறைகள் தாண்டி அனுபவித்துவருபவர்கள்தான் அக்கால பனு இஸ்ரவேலர்கள். எகிப்தைப் பரிபாலித்துக்கொண்டிருந்த ஃபிர்'அவ்னின் ஏகாதிபத்திய நலன்களால் உருக்குலைந்துகொண்டிருந்த
மக்களும் இதே பனு இஸ்ரவேலர்கள்தான்.
பனு இஸ்ரவேலர்களின் ஆண்
குழந்தைகளை ஒட்டுமொத்தமாகக் காவுவாங்கியதோடு, அவர்களின் தாய்மார்கள், சகோதரிகள், பெண்மக்களைப்
பிழைத்திருக்கச்செய்ததும் இதே ஏகாதிபத்திய செயல்திட்டம்தான். இப்படியாக பனு இஸ்ரவேலர்கள், தலைமுறைகள் கடந்து தங்களைச்
சீரழித்துக்கொண்டிருக்கும் தாளவியலாத இந்த அடிமைத் தளையிலிருந்து விடுபடுவதற்கானத்
தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். இவற்றிலிருந்து எப்படியாவது விடுதலை பெற்றுவிட
வேண்டும், அவ்வளவுதான்!
இந்தச் சூழலில்தான் அவர்கள், ஃபிர்'அவ்னின்
எகிப்திலிருந்து, மதப் பிறழ்விலே திளைத்துக்கொண்டிருந்த பிறிதொரு சமூகத்தின் உறைவிடம்
நோக்கி பௌதிகரீதியிலே இடமாற்றம் செய்யப்படுகின்றனர். அங்கே அவர்கள், தங்களுக்கே உரித்தான
‘மத அமைப்புமுறை’, அதுசார்ந்த பெறுமானங்கள், சடங்கு சாங்கியங்கள், மதரீதியிலான ஒழுகலாறுகள்
ஆகியவற்றைப் பின்பற்றிக்கொண்டிருந்த இன்னோர் சமூகத்தை, அதன் மக்களைப் பார்க்கின்றனர்.
பார்த்த கணத்தில் அசடுவழிந்த அவர்களின் நாவில் முகிழ்த்த வார்த்தைகள்
என்ன? இதனைக் கூர்ந்து கவனியுங்கள் சகோதர, சகோதரிகளே. இதனால், 'இஸ்ரேலி முஸ்லிம்க'ளின்
சாயை நம்மீது படராமல் நாம் பார்த்துக்கொள்ளலாம்.
قَالُوا يَا مُوسَى اجْعَل لَّنَا
إِلَٰهًا كَمَا لَهُمْ آلِهَةٌ
"..........'மூஸாவே, அவர்கள் தங்கள் கடவுள்களை சேவிக்கும் அதே வழிமுறையில் எங்களுக்கும் ஒரு கடவுளை நீர் ஏற்படுத்தித் தருவீராக' என்று கூறினார்கள்."
(அல் குர்'ஆன்
7:138)
கறாரான வார்த்தைப் பிரயோகத்தில் இதனை, தவ்ஹீத் என்ற மேலங்கிக்குள்
மறைந்துகொண்டிருக்கும் ஷிர்க் என்று குறிப்பிடலாம். அவர்கள் மூஸாவிடம், 'இம்மக்கள்
தங்கள் கடவுள்களைச் சேவிக்கும் அதே வழிமுறையிலே எங்களுக்கும் கடவுள்களை நீர்
ஏற்படுத்தித் தருவீராக' என்றோ 'இவர்களது விக்கிரகங்களுக்கு இணையான விக்கிரகங்களை
நீர் எங்களுக்கு ஏற்படுத்தித் தருவீராக' என்றோ கோரிக்கை விடுக்கவில்லை. இதனைக் கவனியுங்கள்
தோழர்களே. நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பவற்றைக் குறைந்தபட்சம் புரிந்துகொள்ளவேனும்
முயற்சிசெய்யுங்கள்.
قَالُوا يَا مُوسَى اجْعَل لَّنَا
إِلَٰهًا كَمَا لَهُمْ آلِهَة
"மூஸாவே, ........எங்களுக்கும் ஒரு கடவுளை நீர் ஏற்படுத்தித் தருவீராக' என்று கூறினார்கள்."
(அல் குர்'ஆன்
7:138)
மூஸாவும்
அவர்களிடம், அதே 'ஒரு கடவுள்' குறித்துதான் பேசிக்கொண்டிருக்கிறார். என்றாலும், அவர்களது
தேவையோ அதையும் விஞ்சுவதாகவே இருந்தது. அதாவது, பிற கடவுள்களை சேவித்துக்கொண்டிருந்தவர்களின்
மதம்சார் அமைப்புமுறை, பெறுமானங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலே இவர்களது பெறுமானங்கள்,
சட்டதிட்டங்கள், சடங்கு சாங்கியங்களை வரையறுத்துக் கொடுக்கும் 'ஒரு கடவு'ளே
இவர்களுக்குத் தேவை.
இது,
இன்றைய 'முஸ்லிம் மனோபாவ'த்தின் பிரதிபலிப்பே அன்றி வேறென்ன? இத்தகைய முஸ்லிம்களிடம்
நீங்கள், 'உங்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் இடையே ஏகப்பட்ட பொருத்தப்பாடுகள் இருக்கின்றன'
என்று கூறிப்பாருங்கள். 'நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்றே தெரியவில்லை' என்பதாக அவர்கள்
மறுமொழி அளிப்பார்கள்.
இஸ்ரவேலர்களுக்கும் இன்றைய 'பெயர்தாங்கி முஸ்லிம்க'ளுக்கும்
இடையே நிலவிவரும் பொதுவானக் கூறுபாடுகள் அல்லது சமதையான அம்சங்களுள் ஒரேயொரு உவமையைத்தான்
மேலே பிரஸ்தாபித்திருக்கிறேன்.
قَالَ إِنَّكُمْ قَوْمٌ
تَجْهَلُونَ
“.........அவர்களுக்கு மறுமொழி அளிக்கும் விதமாக மூஸா பின்வருமாறு கூறினார், 'திண்ணமாக நீங்கள் அஞ்ஞானத்தின் மக்களாகவே இருக்கிறீர்கள்’….....”
(அல் குர்'ஆன்
7:138-139)
தாழ்வு மனப்பான்மையால் பீடிக்கப்பட்டிருப்போரின்
நிலைமை இதுதான். அடிமைகள் என்றென்றைக்கும் தாழ்ந்த மக்களே. இது வெறுமனே பௌதிகரீதியிலான
அடிமைத்தனம் மட்டுமல்ல. மாறாக, இந்த 'அடிமை மனோபாவ'த்துக்குப் பன்முகப் பரிமாணங்கள்
உண்டு.
பனு இஸ்ரவேலர்களை மூஸா
(அலைஹிஸ்ஸலாம்) எகிப்திய அடிமைத்தளையிலிருந்து
வெளிக்கொணர்ந்தது என்னவோ உண்மைதான். சுதந்திரம், கண்ணியம், விடுதலையின் வாழ்க்கையை
வாழ்வதற்கான வாய்ப்பும் அனுகூலமும்கூட அவர்களுக்கு வாய்க்கப்பெற்றிருந்தது. ஆனாலும்,
அப்படிப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம்,
தங்கள் கண்ணெதிரே தெரியும் இந்த "மேட்டுக்குடி" வகையறாக்களின் வாழ்க்கை பாணி.
‘நாங்களும் அவர்களைப் போன்று இருக்கவேண்டும் அவ்வளவுதான்!’
நவீனத்துவம், ஜோடனைகள், வெளிப்பகட்டு, படாடோபம் ஆகிய கூறுகளால்
ஜொலித்துக்கொண்டிருக்கிறது என்ற ஒற்றைக் காரணத்தால் மட்டுமே ஒரு சமூகம் மாட்சிமை பொருந்திய,
உயர்நிலைச் சமூகமாக உருப்பெற்றுவிடாது! அதுபோன்றுதான்,
மற்றவர்களிடம்
காணக்கிடைக்கும் நவீனத்துவம் நம்மிடம் இல்லை என்ற ஒற்றைக் காரணம், நம்மைத் தாழ்ந்தவர்களாகவும்
பிறரை மேன்மக்களாகவும் உருமாற்றிவிடாது! இதனை முஸ்லிம்களிடத்தில் முடிந்தவரையில் நாம்
விளக்கிக்கூற வேண்டும்.
مَّا هُمْ فِيهِ وَبَاطِلٌ مَّا
كَانُوا يَعْمَلُونَ
"........இவர்கள் எத்தகையவர்களென்றால், இப்படிப்பட்ட இழிந்த சூழலில் திளைத்துக்கொண்டிருப்பதன் விளைவாக தங்கள் அழிவைத் தாங்களே தேடிக்கொள்வார்கள், இன்னும், இவர்களின் காரியங்கள் யாவும் வீணானவையே"
(அல் குர்'ஆன் 7:139)
உலகின்
அதிநவீன தொழில்நுட்பத்தை இவர்கள் தங்களகத்தே கொண்டிருக்கலாம். என்றாலும், இறைவன் நாடினால்
அதனை நொடிப்பொழுதில் செல்லாக் காசாக ஆக்கி, சுயச் சீரழிவின், நிர்மூலத்தின் புள்ளிக்கு
அதனை இட்டுச்சென்றும் விடுவான்.
قَالَ أَغَيْرَ اللَّهِ أَبْغِيكُمْ إِلَٰهًا وَهُوَ فَضَّلَكُمْ
عَلَى الْعَالَمِينَ
"(மூஸா) கூறினார்: இப்பூவுலகின் மற்றனைத்து சமூகங்களைவிடவும் உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியிருக்க, அவனைத் தவிர பிறிதொரு மேலாதிக்கத்தை, பாதுகாவலனை, வழிகாட்டியை உங்களுக்காக நான் தெரிவுசெய்துகொடுக்க வேண்டுமா?"
(அல் குர்'ஆன் 7:140)
தாழ்வு
மனப்பான்மையின் இழிந்த வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை அல்லாஹ் கண்ணியப்படுத்திவிட
நாடுகிறான். தலைமுறைகள், நூற்றாண்டுகளின் அடிமை வாழ்விலிருந்து அவர்களை அப்புறப்படுத்த
வேண்டும் என்பதே அவனது நோக்கம். ஆனாலும், அவர்களின் பிடிவாதத்தையும் கேடுகெட்ட மனப்போக்கையும்
பாருங்கள். அடிமைத்தளையின் வீச்செல்லைக்கு வெளியே வாழ்ந்திட அவர்களுக்குக் கிஞ்சிற்றும்
விருப்பம் இல்லை. மேட்டுக்குடிகளுக்கும் சமூகத்தின் தனவந்தர்களுக்கும் அடிமைச்சேவகம்
புரிவதை நோக்கி ஏதோ ஒன்று அவர்களை உந்திக்கொண்டே இருக்கிறது.
இந்தக் ஃகுத்பாவின்
ஆரம்பத்தில் நான் இயம்பியதுபோன்று, நம்மை நோக்கி வரும் காழ்ப்பும், குரோதமும் அனைத்துத்
திசைகளிலிருந்தும் நம்மீது முடுக்கிவிடப்படுகின்றன. இந்தச் சூழலில், பெரும்திரள் முஸ்லிம்களின்
வீட்டுச் சுவர்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் ஓர் ஆயத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள
வேண்டியது அவசியம் என நான் கருதுகிறேன். அந்த ஆயத்
பின்வருமாறு இயம்புகிறது,
وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ
بِأَبْصَارِهِمْ
"நிராகரிப்பாளர்கள், தங்கள் பார்வைகளால் உம்மை வீழ்த்திவிடுவதுபோன்ற உன்மத்தம் பிடித்த பார்வையை உம்மீது வீசுகின்றனர்...."
(அல்
குர்ஆன் 68:51)
இறைவனையும் அவனுடைய தூதரையும் மறுதலிப்பவர்கள் தங்கள்
பார்வைகளால் உம்மை வீழ்த்திவிட, கபளீகரம்செய்துவிட முனைகிறார்கள் அல்லது தங்கள் பார்வைகளினூடாக
உம்மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். எந்த அளவுக்கெனில், ஏதோ கணைகளை உம்மீது தொடுப்பது
போன்றிருக்கிறது அவர்களின் வெறித்த பார்வை.
இது எப்பொழுது ஏற்படுகிறது?
لَمَّا سَمِعُوا الذِّكْرَ
"........திக்ரை அவர்கள் செவியேற்கும்பொழுது....."
(அல்
குர்ஆன் 68:51)
'அத்-திக்ர்' என்றால்
என்ன? நம்மில் பலர், பற்பல தருணங்களிலே அசட்டையாகக் கடந்துசெல்வதும், பற்பல முஸ்லிம்களால்
அடிக்கொருதரம் நினைவுகூரப்படுவதுமான வார்த்தைகளுள் ஒன்றுதான் இந்த திக்ர்.
எளிமையாகக் கூறுவதென்றால் 'அத்-திக்ர்' என்பதற்கு,
மனத்தினுள் உட்புகும் உண்மைகளும் ஞானமும் என்பதோடு இதயத்தினுள் உட்புகும் சங்கல்பமும்
நீதியும் என்பதாகப் பொருள் கொள்ளலாம். இவை மனோவியல்ரீதியிலான நினைவுகூரலாகவும், பிரக்ஞைரீதியிலான
நினைவுகூரலாகவும் நம்முள் நிலைபெற்றுவிடுகின்றன. இதுதான் திக்ர்.
உங்கள் சிந்தனைகள் அனைத்தும் பிரக்ஞையின் பரப்பெல்லைக்குள்
சரண் புகுந்துவிடுகின்றன. உங்கள் உணர்வுகளும் இதயத்தின் அபிலாஷைகளும் பிரக்ஞையின் கட்டுப்பாட்டுக்குள்
வந்துவிடுகின்றன. இதுதான் திக்ர். வெறுமனே 'நினைவுகூர்தல்' என்பதல்ல.
யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நினைவுகூர்ந்துகொள்ளலாம்.
ஆனால், இந்த நினைவுகூரலானது மனத்தையும், இதயத்தையும் அதன் மகோன்னதமான இயற்கைநிலையின்
பக்கம் மீட்கொணராதவரையில் அது திக்ராகவே கருதப்படாது.
ஆக, குரோதப் பார்வைக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் பார்வைக் கணைகளை
நபிகளார் மீதும் அவருடன் இருப்பவர்கள் மீதும், அதன் நீட்சியாக நம்மீதும் தொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில், நாம் திக்ருடன் தொழிற்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதாவது, நம் மனத்தினுள்
மெய்மைகளும் ஞானமும் குடிகொண்டிருக்கின்றன; நமது காரியங்கள் அனைத்துக்கும் நோக்கம்
இருக்கிறது; நமது இதயங்களை (இறை)பிரக்ஞை ஆட்படுத்திவைத்திருக்கிறது.
وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ
"......இன்னும், அவர்கள் (நபிகளாரைக் குறித்தும், அவரை முன்னுதாரணமாகப் பின்பற்றியொழுகும் அனைவரைக் குறித்தும்), 'நிச்சயமாக அவர் ஒரு பைத்தியக்காரர்' என்பதாகக் கூறுகிறார்கள்...."
(அல்
குர்ஆன் 68:51)
அல்லாஹ்வின் வார்த்தைகளான குர்ஆன், நிராகரிப்பாளர்களின்
அனைத்துவிதப் பசப்பு வார்த்தைகளிலும் புழையிட்டுச் செல்கிறது. இத்தகையவர்கள் சிலநேரங்களிலே,
நமது எதிர்பார்ப்பை உணர்ந்துகொண்டவர்கள்போல தெரிவுசெய்யப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு
நம்மிடம் உசாவுவார்கள்; வேறுசில நேரங்களிலோ ஜோடனையாகப் பீடிகைபோடுவார்கள். எல்லாம்
எதற்காக? முடிவிலே நம்மை வெறித்து நோக்குவதற்காக. இவர்களது இந்த ஜோடனையான பீடிகையையும்
நயவஞ்சகத்தனமான முடிவுரையையும் அல்லாஹ் சட்டைசெய்வதே கிடையாது.
ஆகக்கூடி இவர்கள் கூறவரும் வாக்கியம் யாதெனில்,
'அல்லாஹ்வின் தூதர் நெறிபிறழ்ந்தவர்' என்பதையே (நஸ்தஃக்பிருல்லாஹு வ'நதூபு இலைஹி).
அதன் நீட்சியாக, நம்மையும் இவர்கள் அவ்வாறே நெறிபிறழ்ந்தவர்கள் என்றும் பைத்தியக்காரர்கள்
என்றும் பிரகடனம் செய்கிறார்கள். சங்கதி புரிகிறதா?
திக்ர் எனும் அல்லாஹ்வின் ஆக்கக்கூறையும்,
அவன் நம்முடன் இயம்புவனவற்றையும் மீளக் கண்டடையும் பிரயாசையில் நீங்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறீர்கள்
எனில், கடந்த காலங்களின் வரலாற்று அனுபவங்களை அது திண்ணமாக உங்களுக்கு விளக்கிக்கூறும்.
நம் மத்தியிலே இயல்பாகப் புழங்கிக்கொண்டிருக்கும்
இந்தத் தாழ்வு மனப்பான்மையின் பிறிதொரு அம்சம் யாதெனில், ஒரு பிரசித்தமான அறிஞரையோ
தலைவரையோ சமூகப் படிநிலையின் மேல்மட்டத்தில் வீற்றிருக்கும் தனவந்தர் ஒருவரையோ நேருக்கு
நேராகச் சந்திக்கும் வாய்ப்பு சில மக்களுக்குக் கிடைக்குமானால், மேற்படி அறிஞர் அல்லது
தனவந்தரின் உள்ளுறை சிந்தனைகள், எதிர்பார்ப்புகளைத் துருவித் துருவி ஆராய இவர்களின்
மனம் அவாவிக்கொண்டே இருக்கும். ஏனெனில், இவர்களிடம் அவர் ஏதேனுமொரு கேள்வி கேட்டால்,
கேட்பவர் விரும்பும் பதிலை, அவரது மனத்துக்குப் பிடித்தமான வாக்கியத்தை அப்பொழுதுதானே
இவர்களால் கூறிக்காட்ட முடியும். இது ஒரு நோய்! நம்மைப் பீடித்திருக்கும் நீச நோய்!!
நம் மனத்துக்கும் மனசாட்சிக்கும் விரோதமாக இருப்பினும்,
நமது 'மாண்புமிகு தலைவர்கள்', 'சமூகத்தின் கனவான்கள்' எதனைச் செவியேற்க விரும்புகிறார்களோ
அதனையே நாம் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறோம். இத்தகைய கூறுகளுக்குச் சொந்தக்காரர்களான
நாம், 'அல்லாஹ்வுடைய பற்றுறுதிகொண்ட அடியார்கள்'போல வேடம் தரித்துக்கொண்டு செயற்கையான
ஒரு பற்றுதலை வெளிக்காட்டிக்கொண்டிருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
உலகின் அனைத்து நவீன நாகரிகங்களையும் தமது புரட்சித்
தூதின் வாயிலாக வழக்கொழியச்செய்த அந்த முன்னுதாரண யுகத்தின் பக்கம் இப்பொழுது திரும்புவோம்.
'பிணைக் கைதிகள்' (Prisoners of War) விவகாரத்துக்கு
முதன்முதலாக முஸ்லிம்கள் முகம்கொடுக்க நேர்ந்தது பத்ரு யுத்தத்தில்தான். இவ்விவகாரம் தொடர்பிலே எவ்வொரு வழிகாட்டலையும்
அதுகாறும் அல்லாஹ் இறக்கியிருக்கவில்லை.
ஆதலால், தன்னுடன் இருந்தவர்களிடம் இதுகுறித்து நபிகளார்(ஸல்)
பின்வருமாறு உசாவினார்கள். 'பிணைக் கைதிகள்
விவகாரத்தில் உங்கள் அபிப்பிராயங்களைக் கூறுங்கள், இவர்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம்?'
இந்தச் சிக்கலான கேள்விக்கு மறுமொழி அளிக்கும் விதத்திலே,
முற்றிலும் முரண்பட்ட
இருவேறு அபிப்பிராயங்களைத் தோழர்கள் முன்னிறுத்தலானார்கள். அதன் உள்விவரங்களுக்குள் நான் பிரவேசிக்கவில்லை. இரண்டொரு தகவல்களை மட்டும் இங்கே கச்சிதமாகக் கூறிக்காட்ட முயல்கிறேன்.
இருவேறு அபிப்பிராயங்களைத் தோழர்கள் முன்னிறுத்தலானார்கள். அதன் உள்விவரங்களுக்குள் நான் பிரவேசிக்கவில்லை. இரண்டொரு தகவல்களை மட்டும் இங்கே கச்சிதமாகக் கூறிக்காட்ட முயல்கிறேன்.
'இவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி மக்காவுக்கு
அனுப்பிவிடலாம்' என்றது ஒரு அபிப்பிராயம். 'அவ்வாறல்ல, நம்மைப் பூண்டோடு ஒழித்துக்கட்டுவதையே
இவர்கள் நோக்கமாகக் கொண்டிருந்தனர். ஆதலால், இவர்கள் அனைவருமே மரண தண்டனைக்கு உரித்தானவர்கள்'
என்றது பிறிதொரு அபிப்பிராயம்.
அல்லாஹ்வின் தூதரை(ஸல்) சூழ்ந்து அரங்கேறிக்கொண்டிருந்த இயக்கவியல்தான்
இவை அனைத்துமே. 'நபிகளாரின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை நான் தெரிந்துகொண்டுவிட்டால்,
அவற்றையே எனது அறுதி அபிப்பிராயமாக நான் முன்னிறுத்திவிடுவேன்' என்று ஏங்கிக்கொண்டிருந்த
எவ்வொரு தனிநபரையும் எந்த வரலாற்றுப் புத்தகங்களிலும், மூலாதாரங்களிலும் இதுகாறும்
நான் கடந்துவரவில்லை.
நபிகளார்(ஸல்), புதிதுபுதிதாய் உருவெடுக்கும் பிரச்சினைகள்,
சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதையிட்டு, 'உங்கள் அபிப்பிராயங்களை முன்னிறுத்துங்கள்'
என்பதாகத் தன்னுடைய தோழர்களை ஊக்குவித்துக்கொண்டேஇருப்பார்; தங்கள்
மனத்தின் கருத்துகளை, மனசாட்சியின் நெருடல்களை வெளிப்படுத்துவதையிட்டு அவர்களுக்கு
முழுச் சுதந்திரமும் அவர்(ஸல்) வழங்கியிருந்தார். 'பிணைக் கைதிகள்' விவகாரத்திலும்
அவ்வாறே தங்கள் மனத்தையும், மனசாட்சியையும் அவர்கள் பேசிய தருணத்தில், அங்கு இருவேறு
முரண்பட்ட அபிப்பிராயங்கள் முகிழ்த்தெழுப்பின.
இவை நமக்கு உணர்த்தும் சங்கதிதான் என்ன? அல்லாஹ்வும்
அவனுடைய தூதரும், பிறருடன் வேற்றுமை பாராட்டுவதற்கான சம்பூர்ண சுதந்திரத்தை நம் மனத்துக்கும்
மனசாட்சிக்கும் வழங்கியிருக்கின்றனர். எனினும், ஓர் முதிர்ச்சியடைந்த முஸ்லிம் என்றரீதியிலே,
நாம் பிறிதொரு விஷயத்தையும் இங்கே பரிசீலனை செய்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். நபிகளாரின்
வேண்டுகோளுக்கு இணங்க இயம்பப்பட்ட மேற்படி முரண்பட்ட அபிப்பிராயங்கள் எவையுமே பரஸ்பர
மாச்சரியத்தால் மொழியப்பட்டவை அல்ல; அவற்றை நபித்தோழர்கள் தங்கள் சுயநலத்துக்காக வெளிப்படுத்திடவும்
இல்லை. இப்படி, 'பிணைக் கைதிகள்' விவகாரத்தை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அறுதியாக ஓர் முடிவுக்குக்
கொண்டுவந்தார்.
நமது வரலாற்றுச் செல்தடத்தை இவ்விடத்திலே சற்றுத்
திரும்பிப்பார்ப்போம். இன்றைய தேதியிலே, போர் தொடுப்புக்கும் ஆக்கிரமிப்புக்கும் அடிக்கொருதரம்
ஆட்படுத்தப்பட்டுவரும் இதே ஈராக் நகரத்தின் மீதுதான் மங்கோலியர்களும் அன்றைய காலகட்டத்திலே
தங்கள் கைங்கர்யத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். அந்நகர்மீது போர் தொடுத்தனர்; அதனைத்
தங்கள் ஆக்கிரமிப்பின்கீழ் கொண்டுவந்தனர்; அதன் வளங்களைத் தான்தோற்றித்தனமாகச் சூறையாடினர்.
இந்நிகழ்வு தொடர்பிலே, நமது வரலாற்றின் சவக் குழிக்குள்
புதைக்கப்பட்டுவிட்ட இருண்மையான கேள்வியென்றை இங்கே நான் முன்வைக்கிறேன்,
'இது எப்படி நிகழ்ந்தது?'
ஏனெனில், மங்கோலியர்களின் இந்தப் படையெடுப்புக்கு
நெடிய காலம் முன்பே, அல்லாஹ்வின் தூதரது அறவிழுமியங்கள், கொள்கைப் பிடிப்பிலிருந்து
'இஸ்லாமிய ஆட்சியாளர்கள்' பிறழ்ந்துவிட்டிருந்தனர். இத்தகைய ஆட்சியாளர்களைதான் அப்பழுக்கற்றவர்கள்,
ஆகர்ஷண பிம்பத்துக்குச் சொந்தக்காரர்கள் என்றரீதியிலே இன்றளவிலும் நாம் மெச்சிக்கொண்டிருக்கிறோம்.
அப்படிப்பட்ட மன்னர்களுள் ஒருவர் செய்த குற்றச்செயல்தான் மேற்படி படையெடுப்புக்கான
வினை ஊக்கியாகவும் அமைந்தது.
அந்த முஸ்லிம் மன்னன் பெயர் ஃகவாரிஸிம் ஷா. மங்கோலியப்
படைத் தலைவன் செங்கிஸ்கான், ராஜதந்திர உறவுமுறையின் நிமித்தம் தனது தூதுவர் ஒருவரை
இம்மன்னனிடம் அனுப்பிவைக்கிறார். பெருநீளக் கதையைச் சுருக்கமாகக் கூறுவதென்றால், மேற்படி
முஸ்லிம் மன்னர் அந்தத் தூதுவரைச் சிரச்சேதம் செய்துவிடுகிறார். இரத்தம் தோய்ந்த நமது
வரலாற்றுப் பக்கங்களில் விரவிக்கிடக்கும் போர் தொடுப்பு நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புகள்,
வன்முறை வெறியாட்டங்கள் முதலிய அனைத்துக்குமான உந்துவிசை, பிரஸ்தாப முஸ்லிம் மன்னனின்
இந்தக் கபடச்செயல்தான்.
பெரும் சீரழிவை ஏற்படுத்திய இந்தக் கோரத் தாண்டவத்தில் எண்ணிறந்த
முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்; லட்சக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் அவயவங்களை இழந்தனர்.
இதன் பின்னர் நடந்தேறிய அகஸ்மாத்தான நிகழ்வுகளை நாமெல்லாம் நன்கறிவோம். வெறுமனே இரண்டொரு
தலைமுறைகளில், மேற்படி ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருமே இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டனர்.
எனினும், அதைவிடப் பிரதானமான விவகாரமொன்றின் மீதுதான்
இங்கு நாம் கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது. முஸ்லிம்களாகிய நமக்கிடையே அதீத சேதாரங்களையும்
பாதகங்களையும் ஏற்படுத்தியது மேற்காட்டிய மங்கோலியப் படையெடுப்பா அல்லது அரசியல் உட்பூசல்கள்
காரணமாக இஸ்லாத்தின் துவக்க காலகட்டத்தில் வெளிக்கிளம்பிய அல்-முர்ஜி'ஆ என்ற
உட்பிரிவா? "உங்களிடத்தில் ஈமான் இருக்கும்வரை, நீங்கள் செய்யும் தீவினைகள்
எவையுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது" என்று பிரகடனம் செய்தவர்கள்தான்
இந்த முர்ஜி'ஆக்கள்.
இவற்றுள் எது முஸ்லிம்களைச் சர்வநாசத்துக்கு உட்படுத்தியது?
ஈராக்கை இரத்தக்களரியாக உருமாற்றிய மங்கோலிய / தார்த்தாரிய படையெடுப்பும், அதனைத் தொடர்ந்துவந்த
ஆக்கிரமிப்புமா அல்லது லட்சக்கணக்கான முஸ்லிம்களின் மனத்தினுள் இன்றளவிலும் ஆழமாக வேர்விட்டிருக்கும்,
'உங்களிடத்தில் ஈமான் இருந்தாலே போதும், உங்கள்
செய்காரியம் குறித்தெல்லாம் எவ்விதப் பிரச்சினையும் இல்லை' என்ற எண்ணவோட்டமா? கூறுங்கள்,
இவற்றுள் எது முஸ்லிம்களுக்குப் பாதகமானது?
"ஈமான்
என்பது மனிதனின் செய்காரியங்களோடு எவ்விதத்திலும் தொடர்புடையது அல்ல" என்பதும்கூட
இவர்களின் வாக்கியங்களுள் ஒன்றுதான். இது ஒரு பெரும் பாதகம்! நாளதுதேதிவரையில்
நாம் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணிறந்த பாதகங்களுக்கெல்லாம் 'தாய் பாதக'மாய்த்
திகழ்ந்துகொண்டிருக்கும் நீசப் பாதகம் இது.
ஒருமுறை, குறுகியகால இராணுவச் செயல்திட்டமொன்றை
நிறைவேற்றுவதையிட்டு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மதீனாவிலிருந்து, அதாவது, அன்ஸாரிகளிலிருந்து
ஒரு நபரைத் தெரிவுசெய்கிறார். இந்த நபரோ தனது தலைமையின் கீழ் இயங்கிக்கொண்டிருந்த படை
வீரர்களின் செய்கைகளில் எரிச்சல் கொள்கிறார். இதன் விளைவாக, சுற்றாடல்களுக்குச் சென்று
மரத்துண்டுகளை எடுத்துவரும்படியும் அவற்றைக்கொண்டு நெருப்பு மூட்டுவதற்கான முஸ்தீபுகளை
விரைவுபடுத்தும்படியும் படை வீரர்களுக்கு அவர் கட்டளையிடுகிறார்.
அவர்களும் இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றனர்; அங்குமிங்கும்
காணக்கிடைத்த சில மரத்துண்டுகளைப் பொறுக்கிக்கொண்டுவந்து அவற்றுக்கு நெருப்பு மூட்டுகின்றனர்.
"மூட்டப்பட்ட நெருப்பிலே நீங்கள் அனைவரும் சென்று குதியுங்கள்", அவர்களுக்கு
இடப்பட்ட அடுத்தக் கட்டளை இதுதான். இதனை ஏற்கமறுத்த அவர்களில் சிலர், 'இதுபோன்ற எவ்வொரு
காரியத்திலும் நாங்கள் ஈடுபடமாட்டோம்' என்பதாக மறுமொழி அளிக்கின்றனர்.
இவ்விவகாரம் அல்லாஹ்வின் தூதரது கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.
"நீங்கள் அந்தக் கணப்பிலே பிரவேசித்திருப்பீர்கள் எனில், அதிலிருந்து என்றென்றைக்கும்
உங்களால் வெளிவந்திருக்கவே முடியாது." என்பதாக இடித்துரையுடன்கூடிய எச்சரிக்கையொன்றை
அவர்களுக்கு விடுக்கிறார் நபிகளார்(ஸல்). கட்டளைகள், ஆலோசனைகள், போதனைகளைக் கண்கள்மூடிக்கொண்டு
ஆமோதிக்கத் தலைப்படும் ஒவ்வொருவருக்கும் இந்நிகழ்விலே திண்ணமாக ஓர் படிப்பினை இருக்கிறது.
இரண்டாம்
ஃகுத்பாவின் உபரி தகவல்கள்
நீங்கள் இஸ்லாமிய, குர்'ஆனிய உரைகல்கொண்டு நிகழ்வுகளை
மதிப்பீடுசெய்யும் ஓர் உள்ளச் சட்டகத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும்பட்சத்தில்,
'அடிமை மனோபாவங்க'ளால் திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் ஓர் சமூகக் கட்டமைப்புக்கு மத்தியிலே
நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று நான் கூறும்போது, உங்களில் எவரையும் அது புண்படுத்திட
வேண்டிய அவசியம் என்ன? ஆம். முஸ்லிம்கள்
தாழ்வு மனப்பான்மையால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்! இவ்வுண்மையை இரைந்து பேசுவதில்
எனக்கு எவ்வித சுணக்கமும் இல்லை. உண்மைகளை வெளிக்கொணரும் விஷயத்தில் விசனிப்பதற்கானத்
தேவை என்ன இருக்கிறது? யதார்த்தம் இதுதான் என்றால், அது முன்னிறுத்தப்பட்டே தீரவேண்டும்.
சற்றொப்ப ஒரு வாரம் முன்பு. இந்திய துணைகண்டத்தைச்
சார்ந்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களும் அணிவகுப்புகளும் அதனால் உருவெடுத்த
களேபரங்களும் வளைகுடா நாடுகளின் சில பகுதிகளைத் திமிலோகத்தில் ஆழ்த்திவிட்டதாகச் செய்திகள்
வந்தவண்ணம் இருந்தன. முஸ்லிம்களுக்குச் சமதையாக முஸ்லிம் அல்லாதோரும் இவற்றில் பெரும்
திரளில் பங்கெடுத்துக்கொண்டனர். சித்தாள் பணிக்குக் கொடுக்கப்பட வேண்டிய போதுமான ஊதியம்
இவர்களுக்கு அங்கே வழங்கப்படுவதில்லை என்பதுதான் மேற்படி விவகாரத்தின் அடிநாதம்; அம்மக்களின்
குற்றச்சாட்டும்கூட.
இதற்கு யார் பொருப்பு? நமது பிரதிபலிப்பாக, ஐவேளைத்
தொழுகைகளில் தோளோடு தோள்நிற்கும் நமது தோழர்களாக, நமது பண்டிகைகளை நம்முடன் கைக்கோத்துக்
களிக்கக்கூடியவர்களாகத் திகழ்பவர்கள்தானே இவர்களும். பிறகு ஏன் இந்த ஓரவஞ்சனை? மறுபுறத்தில்,
ஜோர்டேனியர்கள், பாலஸ்தீனர்களின் நிலைமையோ இன்னும் மோசமடைந்துகொண்டே வருகிறது. பஞ்சம்,
வறுமையின் ஆற்றாமை அவர்களை வதைக்கத் துவங்கிவிட்டது.
ஜோர்டேனிய இஸ்லாமிய இயக்கத்தின் மதம்சார் ஆளுமை
ஒருவர், முஸ்லிம்களின் இந்த நிலைமை தன்னுள் ஏற்படுத்திவிட்டிருக்கும் தாளவியலாத மனக்
குமைச்சலுடன் வெளித்தோன்றுகிறார். "உங்கள் சகோதரர்கள்மீது இரக்கம் காட்டுங்கள்"
என்று தனது உள்ளத்தின் அரற்றல்களை பாரசீக வளைகுடாவின் குடிமக்கள், ஆளுனர்கள், மன்னர்கள்,
அமீர்களின் கவனத்தை ஈர்த்திடும் வண்ணம்
ஊடகங்கள் வாயிலாகக் கொட்டித் தீர்க்கிறார். என்ன பேசி என்ன பிரயோஜனம்? அவர்கள் மன்னர்களோ
அமீர்களோ ஜனாதிபதிகளோ யாராக வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப் போகட்டும். அபரிமிதச் செல்வக் கொழிப்பில் எக்களித்துக்கொண்டிருப்பவர்களிடமும்
மெய்மறதியில் திளைத்துக்கொண்டிருப்பவர்களிடமும் மேற்படி விவகாரங்கள் குறித்து நீங்கள்
என்ன பேசுவீர்கள்?
வட ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றினுடைய ஜனாதிபதியின்
மகன், சுவிட்சர்லாந்து நாட்டில் வைத்துக் கைதுசெய்யப்படுகிறான். அவனை அந்நாட்டு அரசாங்கம்
இரண்டு நாள்கள் காவலில் வைத்துவிட்டுப் பின்னர் விடுவித்துவிடுகிறது. இதற்காகத் தனது
நாட்டில் பெரும் அமளிதுமளியையே ஏற்படுத்திவிட்டார் அந்நாட்டு ஜனாதிபதி. சுவிட்சர்லாந்து
நாட்டுத் தூதரகத்துக்குக் குடைச்சல் கொடுப்பது, அந்நாட்டுக் கொடி பறக்கும் கப்பல்களுக்கு
தனது நாட்டிலே அனுமதி மறுப்பது, சுவிட்சர்லாந்து மீதான பெட்ரோலிய ஏற்றுமதிக்குத் தடைவிதிப்பது,
இத்யாதி. இவ்வாறு, ஏகக் களேபரங்களை அங்கு அரங்கேற்றிவிட்டார்.
இந்தத் தடாலடி நடவடிக்கைகளெல்லாம் எதற்காக? அந்நாட்டு
அரசாங்கத் தலைவரின் புதல்வன், தன்னுடைய மனைவி சகிதம் கைதுசெய்யப்பட்டதற்காக! எதற்காகக்
கைதுசெய்யப்பட்டார்கள்? 'சித்திரவதை அரங்கேற்ற'த்தில் ஈடுபட்டதற்காக!
இஸ்ரேலிய இராணுவ வீரன் ஒருவனையோ கருமை நிற பூட்ஸ்
அணிந்திருக்கும் 'ஏகாதிபத்திய' வீரன் ஒருவனையோ இவர்கள் சித்திரவதைச் செய்யவில்லை. மாறாக,
அதே வட ஆப்பிரிக்காவை - 'அல் மஃக்ரிப் அல் அரபி'யை - சேர்ந்த இரண்டு
அப்பாவிச் சிப்பந்திகளை இவர்கள் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர்; நையப்புடைத்திருக்கின்றனர்.
அந்த இரண்டு சிப்பந்திகளும் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துவிட்டனர்.
அதன் பின்னர் நடந்தேறியதுதான் மேற்படி அமளிகளெல்லாம்.
இப்படிப்பட்ட அரசியல் குண்டர்களைத்தான் நம் தலைவர்களாக
இன்று நாம் வரித்துக்கொண்டிருக்கிறோம். இவர்களின் சர்வாதிகாரம்தான் இன்று பாரெங்கும்
கோலோச்சிக்கொண்டிருக்கிறது. மேற்காட்டியதுபோன்ற நீசச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, அதிலிருந்து
லாவகமாக இவர்களால் தப்பித்துக்கொள்ளவும் முடிகிறது; அப்படித் தப்பிச்செல்வதற்கான வாய்ப்பினை
நாம்தான் இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.
நமது
பலவீனத்தை நன்கு அறிந்துவைத்திருக்கும் கயவர்கள் இவர்கள். பணத்துக்கும் அதிகாரத்துக்கும்
ஒத்தூதியே பழகிப்போய்விட்ட நமது 'தாழ்வு மனப்பான்மை' நிலைப்பாட்டை இவர்கள் நன்றாகவே
அறிவர். இந்தத் 'தாழ்வு மனப்பான்மை'யைதான் இவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
நமது
சிந்தையை பிரயோகிக்க வேண்டிய முறைப்படி நாம் பிரயோகித்திருக்க வேண்டும்; நீதி சார்ந்த
நமது நிலைப்பாட்டில் நாம் பற்றுதலுடன் இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால்,
இத்தகைய 'உயர்தர' குண்டர்களால் தங்கள் குற்றச் செயல்களினூடே திண்ணமாக நழுவிச்சென்றிருக்க
முடியாது.
இறைவன் நன்கறிந்தவன்!
கலைச்சொற்கள் தொடர்பிலான மேலதிகப் புரிதலுக்கு வாசிக்க:
1. Muhammad Abu Zahra, ‘The Four Imams’.
2. முஹம்மது அபு ஸஹ்ரா, 'இமாம் அபூ ஹனீஃபா: வாழ்வும் பணிகளும்'.
3. கலோனல் குலாம் சர்வர், ஹஸ்புல்லாஹ் ஹாஜி அப்துர் ரஹ்மான், 'இஜ்திஹாத்:
நவீன காலச் சட்டச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்துவதன் அவசியம்.'
4. எம்.எஸ்.எம்.
அனஸ், 'தற்கால இஸ்லாமியச் சிந்தனை'.
5. John Penrice, ‘A Dictionary And Glossary of the Qur’an,
with Copious Grammatical References and Explanations of the Text.’
6. Oxford Essential
Arabic Dictionary (English – Arabic; Arabic – English).