Saturday, January 20, 2018

அபூதர்(ரழி): 'சமூக அநீதி எதிர்ப்'பின் உத்வேகமூட்டும் குறியீடு! (பகுதி 4)

அபூதர்(ரழி): 'சமூக அநீதி எதிர்ப்'பின் உத்வேகமூட்டும் குறியீடு!
(பகுதி 4)
-    இமாம் முஹம்மது அல் ஆஸி
-    தமிழில்: சம்மில்



திருக்குர்ஆனில் பணத்தைப் பற்றிப் பேசும் பல்வேறு ஆயத்துகள் காணக்கிடைக்கின்றன. ஆனால், இம்மாதிரியான தலைப்புகளெல்லாம் இப்பொழுது மிம்பர்மீது நின்றுகொண்டு பிரசங்கம் செய்யக்கூடாத தலைப்புகளாக ஆகிவிட்டன. ஆம். பணத்தைக் குறித்து வரும் ஆயத்துகள், அஹதீஸ்களை எல்லாம் ஜும்'ஆ ஃகுத்பாக்களில் நீங்கள் தப்பித்தவறிகூட மேற்கோள் காட்டிவிடக் கூடாது!!

அரசாங்கம், அதிகார வர்க்கம், மேலாதிக்கச் சக்திகள் ஆகியோரால் ஊக்கப்படுத்தப்பட்டும் ஆதரவளிக்கப்பட்டும் வரும் ஒருசில 'இஸ்லாமிய' பேச்சாளர்கள், மிம்பர்மீது நின்றுகொண்டு - இலைமறைவு காய்மறைவாகவேனும் - இவ்விவகாரங்கள் குறித்தெல்லாம் பேசத்தான் செய்கின்றனர். இதனை நாம் மறுக்கவில்லை. ஆனால், எப்பொழுது பேசுகின்றனர்? ஃகுத்பாவின் நிறைவுத் தருவாயில்! அதுவும் என்ன பேசுகின்றனர்? 'ஏழை, மிஸ்கீன்களுக்கும் முஜாஹிதீன்களுக்கும் உங்களைச் சூழவும் இருக்கும் இன்னபிற அன்னக்காவடி முஸ்லிம்களுக்கும் ஏதோ உங்களால் இயன்றதை தயவுகூர்ந்து கொடுத்துவிடுங்கள்.' என்று மெழுகிச் செல்கின்றனர். இப்படித்தான், அதுவும், இந்தத் தருணத்தில் மட்டும்தான் அவர்கள் பணத்தைப் பற்றிப் பேசுகின்றனர்.

பணத்தைக் குறித்துப் பேசும் ஒருசில ஆயத்துகளை நமக்கு நாமே இப்பொழுது சற்று நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ

“ஸதகா என்பது தேவையுடையோருக்கும், ஜீவமரணப் போராட்டத்தில் கண்ணியத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருப்போருக்கும் ஆகும்....”

(அல் குர்ஆன் 9:60)

அதுபோன்று, சென்ற அத்தியாயத்தில் நாம் ஏற்கெனவே பிரஸ்தாபித்திருந்த ஆயத்துகளில் ஒன்று,

لَّيْسَ الْبِرَّ أَن تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَىٰ حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ

"மேற்கை நோக்கியோ கிழக்கை நோக்கியோ உங்கள் முகங்களைத் திருப்பிக்கொள்வதில் - அதற்காகப் பரஸ்பரம் போட்டிபோட்டுக்கொள்வதில் - அல்ல உங்கள் புண்ணியம்; மாறாக, அல்லாஹ்வையும் மறுமை நாளையும் வானவர்களையும் வேதங்களையும் நபிமார்களையும் பற்றுறுதிகொள்வதுடன், உங்களிடம் இருக்கும் செல்வ வளத்திலேயே நீங்கள் அதிகம் ஆகர்ஷிக்கப்படுபவற்றிலிருந்து உங்கள் (ஏழை) சொந்தங்களுக்கும், அநாதைகளுக்கும், அன்னக்காவடிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகளை (கைதிகளை) விடுவிப்பதற்கும் வழங்கிடுவதிலேயே புண்ணியம் (அல்-பிர்) அடங்கியிருக்கிறது."
(அல் குர்ஆன் 2:177)

மேலும், 'ஈதாயிஸ் ஸகாத்' என்ற வார்த்தையைத்தான் எத்தனை முறை குர்ஆனில் நாம் கடந்துவருகிறோம்.

وَآتَى الزَّكَاةَ

"......ஸகாத் என்பது ஒருங்கிணைந்த ஓர் கூட்டுமுயற்சியிலே, நிறுவனமயப்பட்டரீதியிலே வழங்கப்படல் வேண்டும்...."

(அல் குர்ஆன் 2:177)

"(செல்வ வளம்) இருக்கப்பெற்றவர்களின் பணத்தைப் பொறுத்தவரை, அதிலே ஸகாத்தை தவிர்த்த ஏனைய கடப்பாடொன்றும் இருக்கிறது." என்று நபிகளார் நவின்றுள்ளார்கள். கீழ்க்கண்ட குர்ஆன் ஆயத் இந்த ஹதீஸுக்கு வலுசேர்க்கிறது.

وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ

"இன்னும், அவர்களின் பொருளாதாரத்தில் யாசிப்போருக்கும் பொருளாதார உரிமைகள் மறுக்கப்படுவோருக்கும் ஓர் பிரத்தியேக உரிமை இருக்கிறது."
(அல் குர்ஆன் 51:19)

இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பிலே ஒருவர் தனக்குத் தேவையானவற்றைக் கேட்டு வாங்குவதை யாசகம் கேட்பதுடன் ஒப்பிடல் ஆகாது.

பணத்தைப் பற்றிப் பேசும் மற்றொரு குர்ஆன் ஆயத்தைப் பாருங்கள். இன்றைய உலகைப் பொறுத்தவரை இத்தகைய ஆயத்துகளும் அதன் அர்த்தங்களும் வெகுஜனங்களுக்கு இன்றியமையாத தேவையுடையனவாக இருக்கின்றன. எனினும், அவற்றின் விளக்கங்களைக் கொண்டெல்லாம் வெகுஜனங்களை விழிப்படையச் செய்துவிடவே கூடாது என்பதில் 'ஆஸ்தான அறிஞர்கள்' கர்மசிரத்தையுடன் இருக்கின்றனர்.

وَآتُوهُم مِّن مَّالِ اللَّهِ الَّذِي آتَاكُمْ

"அல்லாஹ் அவனது செல்வ வளத்தையும் சொத்து சுகத்தையும் பணத்தையும் உங்களுக்கு தாராளமாக வழங்கியிருப்பதுபோல் நீங்களும் அவர்களுக்கு - தேவையுடையோருக்கு - தாராளமாக வழங்கிடுங்கள்."
(அல் குர்ஆன் 24:33)

இன்னும் கொஞ்சம் புரியும்படியாக இந்த ஆயத்தை விவரிக்க வேண்டும் எனில்,

وَآتُوهُم مِّن مَّالِ اللَّهِ الَّذِي آتَاكُمْ

"…..(கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும்) பணக்கார முஸ்லிம்களாகிய உங்களிடத்தில் பணமும், பொருளாதாரத்தை ஈட்டித்தரும் உபாயங்களும் அபரிமிதமாக இருக்கும் பட்சத்தில், தன்னிறைவு கொள்ளும் அளவுக்கு அல்லாஹ் உங்களை எப்படி செழிப்பாக்கிவைத்திருக்கிறானோ அதுபோன்றே நீங்களும் தேவையுடையோரைத் தன்னிறைவு கொள்ளச் செய்யுங்கள்….."
(அல் குர்ஆன் 24:33)

பிறிதொரு ஆயத்தில் அல்லாஹ் கூறுகிறான்,

وَأَنفِقُوا مِمَّا جَعَلَكُم مُّسْتَخْلَفِينَ فِيهِ

"…அவன் (அல்லாஹ்) உங்களை எவற்றுக்கு ஜவாப்தாரிகளாக ஆக்கியிருக்கிறானோ அவற்றிலிருந்து தாராளமாக வழங்கிடுங்கள்….."
(அல் குர்ஆன் 57:7)

இப்படி, குர்ஆன் ஆயத்துகள் பலவும் நம்மை இடையறாது அறிவுறுத்திக்கொண்டும் வழிநடத்திக்கொண்டும் இருக்கின்றன. இத்தகைய ஆயத்துகளைச் செவிமடுப்பதில் நாமொன்றும் முதன்மையானவர்கள் அல்ல; இவற்றைப் புரிந்துகொள்ளும் விஷயத்திலும் அப்படித்தான். வாருங்கள், முதல் தலைமுறை முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பரிசீலித்துப் பார்க்கலாம்.

நம்மிடம் குறைகாணும் நோக்கில், நம்மை நோக்கி டம்பமாகக் குரல் எழுப்பிக்கொண்டிருப்பவர்களோ, 'தலைமுறைகளிலேயே சிறந்த தலைமுறை முதல் தலைமுறை முஸ்லிம்கள்தான். அதுதான் ஸலஃபுகளின் தலைமுறை' என்பதாக அடிக்கொருதரம் வீறிடுகின்றனர்.

அப்படியே ஆகட்டும். இதனை நாம் நிச்சயமாக மறுக்கவில்லை. இதே ஸலஃபுகளின் தலைமுறையைப் பற்றித்தான் பின்வரும் பத்திகளிலும் நாம் அலசவிருக்கிறோம். நீங்கள் மணிக்கொருதரம் சிலாகித்துக்கொண்டும், விதந்து கூறிக்கொண்டும், பாவங்களைவிட்டும் பாதுகாக்கப்பட்ட வானவர்கள் ஸ்தானத்துக்கு தூக்கிநிறுத்த முற்பட்டுக்கொண்டும் இருக்கும் அதே முதல் தலைமுறை முஸ்லிம்களின் வாழ்வியல் நிகழ்வுகளைத்தான் இங்கே நாம் பார்க்கவிருக்கிறோம்.

இவர்கள் நமது கண்ணியத்துக்குரிய முதல் தலைமுறை என்பதை யாருமே இங்கு மறுக்கவில்லை. ஆம். இவர்கள் அனைவருமே நம் முன்னோடிகள்தான். இவ்வுண்மையைவிட்டு எவரும் இங்கே வெருண்டோடிடவில்லை. மறுபுறத்தில், உங்களில் சிலர் இவர்கள்மீது ஏகபோகம் கோரிட முயன்றுகொண்டிருப்பதுபோன்று எங்களில் எவரும் அப்படிச்செய்ய முயலவில்லை. இது தேவையற்ற ஒன்று. இவர்கள்மீது ஏகபோகம் கோருவதற்கு யாருக்கும் எவ்வித உரிமையும் கிடையாது.

பாடங்களாலும் படிப்பினைகளாலும் நிரம்பியிருக்கும் வரலாற்றுப் பக்கங்களுக்குச் சொந்தக்காரர்கள் இவர்களெல்லாம். ஆனால், இப்பக்கங்களை எல்லாம் திறந்து பார்த்துவிடவே கூடாது என்ற முடிவிலே நாம் ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கிறோம். ஆம். இவைகளெல்லாம் யாருக்குமே இன்று தேவையில்லை. பாடங்களும் வேண்டாம்; படிப்பினைகளும் வேண்டாம். சகோதர, சகோதரிகளே அப்படியொன்றும் எளிமையாக இவற்றைக் கடந்து சென்றுவிட முடியாது. நமது சொந்த அனுபவத்திலிருந்து நாம் கிரகித்துக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் அபரிமிதமாகவே இருக்கின்றன. கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்ள லாயக்கற்றவர்களாக நாம் ஆகிவிடும்பட்சத்தில், நம்மை நாமே நிந்தித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பொருளாதாரம் குறித்த விவகாரம் முஸ்லிம்களுக்கு மத்தியிலே ஓர் பாரதூர விவகாரமாகச் சஞ்சரிக்கத் துவங்கிய அந்தத் துவக்க காலகட்டத்தை நோக்கி இப்பொழுது நாம் பெயர்ந்து செல்வோம்.

அன்றைய தேதியில் அதிகாரத்தின் இருப்பிடமாகவும் இஸ்லாமிய அரசின் தலைநகராகவும் திகழ்ந்துவந்தது மதீனா நகரம். உஸ்மான்(ரழி) முஸ்லிம்களின் ஆட்சியாளராகக் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டம் அது. இக்காலக்கட்டத்தில்தான் 'பணம்' என்பது ஒரு பகாசுர விவகாரமாக முஸ்லிம்களுக்கு இடையே உருவெடுக்கத் துவங்கியது. நாம் முன்னர் கடந்துவந்த ஆயத்துகள் அனைத்துமே இதைக் குறித்துதான், அதாவது பணத்தைக் குறித்துத்தான் நம்மை எச்சரித்தன, அறிவுறுத்தின, நமக்கு புத்திமதிகள் வழங்கின. இதே பணம்தான் அன்று உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்தில் தலைபோகிற ஒரு விவகாரமாக பரிணாமம்பெற்றது.

காரணம் என்ன?

அப்பொழுதெல்லாம் முஸ்லிம்கள் செல்வத்தை ஒருங்கு சேர்ப்பதில் முழுமுனைப்பில் ஈடுபடத் துவங்கிவிட்டிருந்தனர். அதற்கு முன்னரெல்லாம் நிலைமை இப்படியிருக்கவில்லை. அவர்களிடம் பணம் இருந்தால் அதனைத் துரிதகதியில் கொடுத்துவிடுவார்கள். 'ஒருங்கு சேர்த்தல்' என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லாமல் இருந்தது. தேவையுடையோராக ஏதேனும் நபர் இருக்கிறாரா, இதோ எனது பணம், வைத்துக்கொள்! அல்லாஹ்வின் தூதருடன் இரண்டறக் கலந்து வாழ்ந்து, வளர்ந்து, அவருடன் ஜீவமரணப் போராட்டத்தில் ஈடுபட்டு, அவரது பட்டறையில் கல்விபயின்ற புடம்போடப்பட்ட முஸ்லிம்களின் குணாதிசயம் இப்படித்தான் இருந்தது.
உலகின் வளப்பமான பிரதேசங்கள் இஸ்லாமிய அரசின் இணைபிரியா பகுப்புகளாக உருப்பெறத் தொடங்கிய உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்தில், பணத்தை நோக்கிய சபலமும், செல்வக் குவிப்பின் வீச்சும் சடுதியாக அதிகரித்தன. முஸ்லிம்களுள் பலர் இந்தக் காலச்சூழலிலெல்லாம் பெரும் தனவந்தர்களாக உருவெடுத்திருந்தார்கள். அளப்பரிய பணம் முஸ்லிம்களின் சேகரங்களை வகைதொகையின்றி இட்டு நிரப்பிக்கொண்டிருந்தது.

சகோதர, சகோதரிகளே! இவைகுறித்து நாம் சஞ்சலப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவ்விவகாரங்கள் தொடர்பிலான உங்கள் உள்ளக் கிளர்ச்சியை தயவுகூர்ந்து கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், நமது அகத்தூண்டுதல், நமது ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டையும் சீரழித்துவிடும் அளவுக்கு நம்மில் பலர் இன்று மனத்தளவில் மிகவும் பூஞ்சையாக இருக்கிறோம். அப்படி ஒருபோதும் ஆகிவிடக்கூடாது.

பொருளாதாரம், செல்வ வளத்தை இருப்பில் வைத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், அவற்றின்மீது கொண்டிருக்கும் கட்டுமீறிய சபலத்தால் அவற்றின் சேகரத்தை மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்குவதும், அவற்றைச் செலவுசெய்ய மறுப்பதும், பதுக்குவதும், அவற்றின்மீது ஏகபோகம் கோருவதும்தான் தவறுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் சுளுவாக அடிகோலிவிடுகின்றன.

ஆம். இதுதான் இங்கு பிரச்சினையே. இதே பிரச்சினைதான் நமது பொதுவான இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்ப நாள்களிலும் முஸ்லிம்களைத் திக்குமுக்காடச் செய்தது.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மரணித்து வெறும் மூன்று தசாப்தங்கள் அல்லது அதற்கும் சற்று குறைவான நாள்களே கழிந்திருந்தன. நாம் மேற்கோள் காட்டிய ஆயத்துகள்கூட அன்றைய தேதியிலே பள்ளிவாசல்களில் உச்சஸ்தாயியில் உச்சாடனம் செய்யப்பட்டுக்கொண்டுதான் இருந்தன. இருப்பினும், மறுபுறத்தில் பொருளாதாரச் சேகரத்தை நோக்கிய முஸ்லிம்களின் வேட்கையும் அதிகரித்துக்கொண்டே சென்றது. செல்வ வளத்தை எந்தச் சூழலிலும் இழந்துவிடவே கூடாது என்ற மனநிலையை அப்பொழுது அவர்கள் எட்டிவிட்டிருந்தனர். எக்கணமும் அவற்றைப் பற்றிப்பிடித்துக்கொண்டே இருக்கத்தான் அவர்கள் பிரியப்பட்டனர்.

இன்றைய உலகில் ஊடாடிநிற்கும் பெரும் பிரச்சினையும் இதுதான். நாம் இன்று நம் கண்ணெதிரே பார்த்துக்கொண்டும், அனுபவித்துக்கொண்டும் வரும் பிரச்சினைகளொன்றும் நமக்குப் புதியவை அல்ல. அனைத்துக் காலகட்டங்களிலுமே இதுதான் நிலைமை. இந்தப் பிறழ்வினை பிரயாசையினூடாகச் சீர்செய்துகொள்வதற்கான ஆத்மசுத்தியை இன்று நாம் போதுமான அளவு பெற்றிருக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லை. உம்மத்தைக் கபளீகரம் செய்துவிட்டிருக்கும் ஒரு பெரும் பிறழ்வு இது!!

"பொருள் பதுக்கலில் ஈடுபடுகிறவர் அல்லது பொருள்கள்மீது ஏகபோகம் கோருகிறவர் திண்ணமாக பெரும்தவறு இழைத்துவிட்டார்"

அல்லாஹ்வின் தூதருடைய ஹதீஸ் இது. இந்தப் பாரதூரத் தவறினை உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்தில் சில முஸ்லிம்கள் சாதாரணமாகவே இழைக்கத் தொடங்கினர். செல்வ வளப்பத்தின் விஷயத்தில், மதீனா நகரம்தான் அன்றைய இஸ்லாமிய உலகின் பிற பகுதிகளுக்கான ஓர் முன்னுதாரண உந்துதலாகத் திகழ்ந்துவந்தது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் பற்பல மாற்றங்களும் அப்பொழுது அங்கே முழுவீச்சில் அரங்கேறிக்கொண்டிருந்தன.

உயர்வர்க்கத்தின் அடையாளமாய்த் திகந்துகொண்டிருக்கும் இன்றைய 'புறநகர்' பகுதிகள் போன்று, டாம்பீக அடுக்குமாடிக் குடியிருப்புகள், மாடமாளிகைகள், விலையுயர்ந்தப் பட்டுக் கம்பளங்களின் உள்-அலங்காரங்களால் ஜொலித்துக்கொண்டிருந்த அரண்மனைகள் என்று, ‘புறநகர்’ பகுதிகளின் படாடோபக் குறியீடுகள் மதீனா நகரிலும் ஆங்காங்கே முகிழ்க்கத் தொடங்கின. இத்தகைய மாற்றங்கள் எல்லாம் தங்கள் கண்முன்னேயே அரங்கேறிக்கொண்டிருப்பதை மற்ற முஸ்லிம்களெல்லாம் வேதனைத் ததும்பும் மனத்துடன் அவதானித்துக்கொண்டு வருகின்றனர். இந்தப் பிறழ்வினைச் சீர்செய்ய வேண்டும் என்று அவர்களின் மனம் அவாவுகிறது.

அப்படிப்பட்ட முஸ்லிம்களில் ஒருவர் பற்றித்தான் இங்கே நாம் விவரிக்க இருக்கிறோம். அதற்கு முன்னால் ஒரு குறிப்பு. வரலாற்றை இந்தக் கோணத்திலிருந்து எவருமே அணுகியது கிடையாது என்பதை நீங்கள் இங்கே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆதலால், அதுகுறித்த எனது விவரிப்பு ஒருவேளை உங்களுக்குத் திகைப்பை ஏற்படுத்துவிடலாம். திகைப்பின் மீதான கட்டுப்பாட்டை இறுதிவரையில் பேணிக்கொண்டுவருவதுதான் நமது தலைப்புக்கு உசிதமானதாக இருக்கும்.

விஷயத்துக்கு வருவோம்.

தன்னைச் சுற்றி நடக்கும் வரம்மீறல்களை எல்லாம் சகித்துக்கொண்டு நிசப்தமாகக் காலத்தைக் கடத்த இந்த முஸ்லிமால் இயலவில்லை. ஏதோ தவறு நடந்துகொண்டிருப்பதாக அவரது அகம் பதைபதைக்கிறது. இவையெல்லாம் எப்படி சாத்தியம் ஆயின? தனக்குள்ளாகப் பொருமிக்கொண்டார் அவர். நபிகளாரின் உமத்துக்கே உரித்தான பரஸ்பர அக்கறையும் கரிசனையும் தடம்தெரியாமல் தொலைந்துவிட்டதே! தனவந்தர்கள் ஏழைகள்மீது கரிசனைகொள்பவர்களாக இருந்திருக்க வேண்டும்; (செல்வ வளம்) 'இருக்கப்பெற்றவ'ர்கள் 'இல்லாதவர்க'ளுடன் அவற்றைப் பகிர்ந்தளிப்பவர்களாக இருந்திருக்க வேண்டும். இதுவல்லவா நபிகளாரின் அடிப்படை அறிவுறுத்தல்?

"ஒரு பற்றுறுதிகொண்ட முஸ்லிமுக்கும் பிறிதொரு பற்றுறுதிகொண்ட முஸ்லிமுக்கும் இடையிலான உறவுமுறை என்பது ஒரே நிர்மாண அமைப்பைப் போன்றது. அதன் ஒவ்வொரு கண்டிக்கல்லும் மற்றொன்றுக்கு முண்டுக்கொடுத்தவண்ணம் இருக்கும்."

ஒரு முஸ்லிமின் ஆற்றாமையைக் கண்டு பிறிதொரு முஸ்லிம் ஓரமாக ஒதுங்கிநிற்றல் ஆகாது. முஸ்லிம்களொன்றும் காரியவாதிகள் அல்ல. அவர்கள் ஒருவரையொருவர் அரண்செய்தவண்ணம், தாங்கிப்பிடித்தவண்ணம் இருக்க வேண்டியவர்கள். ஆனால், வறுமையின் கிடுக்கிப்பிடிக்குள் அகப்பட்டுக்கொண்டு அதிலிருந்து மீள வழியில்லாமல் முஸ்லிமொருவன் பரிதவித்துக்கொண்டிருக்கும்போது, 'பொருளாதாரச் சேகரம்' ஒன்றையே இலக்காகக் கொண்டு இயங்கும் பிறிதொரு முஸ்லிமுக்கு எந்தச் சூழலிலும் ஒரு முஸ்லிம் ஆதரவு வழங்கிடல் ஆகாது. அப்படிச் செய்வது, மேற்படி நபிமொழியின் அர்த்தங்களைக் களங்கப்படுத்துவதற்குச் சமதையாகும்.

உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்தில், முஸ்லிம் ஜனத்தொகையைப் பிளவுபடுத்திவந்த இந்தப் பாரிய விரிசலை அபூதர்ரால் ஜீரணித்துக்கொள்ள இயலவில்லை. நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். வரிசைக் கிரமத்தில் அல்லாமல் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நிகழ்வுகளை எல்லாம் கோவையாக இணைத்து, ஒவ்வொன்றையும் அவற்றுக்கே உரித்தான சூழமைவில் வைத்து விளக்கம் அளிக்கவே இங்கு நாம் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஆரம்பமாக அபூதர், மதீனாவைவிட்டு வெளியேறி அஷ்-ஷாம் நகருக்குச் செல்கிறார். சிறிது நாள்களுக்குப் பின், அங்கிருந்து மீண்டும் மதீனாவுக்கே அவர் பலாத்காரமாக விரட்டியடிக்கப்படுகிறார். மதீனாவுக்கு வந்துசேர்ந்த அவர், அஷ்-ஷாம் நகரைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்த அதே 'லௌகீக' மாற்றங்கள் மதீனாவைக்கூட விட்டுவைக்காத அவலத்தை எண்ணி மனம் வெதும்புகிறார். மதீனா நகரில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை எல்லாம் இப்பொழுது அவர் கண்கூடாகவே பார்த்துவிட்டார். இதுதொடர்பிலான தனது உள்ளக் கிளர்ச்சியை அவர் கீழ்க்கண்ட வாக்கியத்தின் வாயிலாக வெளிக்கொணர முயல்கிறார். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் பற்றிய அவரது புரிதலின் ஆழத்தை, நக்கலான தொனியில் அமைந்திருக்கும் அவரது கீழ்க்கண்ட கூற்று நமக்குத் தெளிவுபடுத்துகிறது:

"மதீனாவாசிகளுக்கு நற்செய்து பகருங்கள்!! முடிவோ இரக்கமோ இல்லாத ஓர் பேரிடியாலும் ஆறாத வடுவாய் மனத்தில் பதியப்போகும் ஒரு யுத்தத்தாலும் அவர்கள் பெரும் அல்லல்களுக்கு ஆட்படப் போகிறார்கள்."

அபூதர் ஒன்றும் எதிர்காலம் குறித்து இங்கே ஆருடம் கூறிடவில்லை. அல்லாஹ்வுடைய இயலுலக சமூக விதியின் இயக்கவியலை உட்கிரகித்துக்கொண்டும், அவனது வழிகாட்டல்கள், கட்டளைகளைக் கர்மசிரத்தையுடன் அவதானித்துக்கொண்டும் வாழ்ந்துவருபவர்களால்தான் இத்தகைய வாக்கியங்களையெல்லாம் புத்துயிர்ப்புடன் உகுத்துவிட முடியும்.

ஏதோ ஊர் பேர் தெரியாத நபர்கள் அல்ல இவர்கள்; அதேநேரத்தில், புத்திஜீவிகளும் அல்ல. ஆனால், அல்லாஹ்வின் போதனைகளுக்கும் சமூகத்தின் செயல்பாட்டுக்கும் இடையிலான ஊடாட்டத்தை நன்கு உய்த்துணர்ந்துகொண்டவர்கள். அத்தகையவர்களில் ஒருவர்தான் அபூதர்ரும்.

மதீனாவின் தறிகெட்ட போக்கானது, இப்பொழுது அது சென்றுகொண்டிருக்கும் அதே திசையிலேயே தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்குமானால், தன்னைத் தானே அது திண்ணமாக அழித்துக்கொண்டுவிடும். அபூதர் இதனைத் தெளிவாகவே ஊகித்திருந்தார். சம்ஹாரத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் ஒன்றை - பேரழிவில் சிக்கிக்கொள்ளாமல் அதனைத் தடுப்பதற்காக - எப்பாடுபட்டாவது நீங்கள் காப்பாற்ற முயலுவீர்கள் அல்லவா. அபூதர்ரும் அதைத்தான் செய்தார்.

அல்லாஹ்வின் இந்த இயக்கவியலானது, தவறுகளும், பிறழ்வுகளும், விதி மீறல்களும் சிறுகச்சிறுக தலைதூக்கிக்கொண்டிருந்த அன்றைய மதீனா நகரோடு மட்டுமே பொருந்திப்போகக் கூடியது அல்ல. மாறாக, அத்தகைய பிறழ்வுகளையும் வரம்புமீறல்களையும் நிறுவனமயப்பட்ட கொள்கைகளாகவே இன்று முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கும் ஐக்கிய மாநிலங்களின் கூட்டமைப்பான அமெரிக்காவின் விஷயத்திலும் அது சம்பூர்ணமாகப் பொருந்தக் கூடியதுதான். (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இமாமவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பதால் அந்நாட்டை மட்டும் இங்கே பிரத்தியேகமாக மேற்கோள் காட்டியிருக்கிறார். மற்றபடி, அல்லாஹ்வின் இயக்கவியலைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் சாயையில் தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் இப்பூவுலகின் ஏனைய நாடுகள் விஷயத்திலும் அது துல்லியமாகப் பொருந்திப்போகக் கூடியதுதான்.).

இப்படி, தவறுகளும் வரம்புமீறல்களும் உங்கள் கண்ணுமுன்னேயே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் இப்போது? அமைதியாக ஒதுங்கிநின்று வேடிக்கைப் பார்க்கப் போகிறீர்களா? இல்லை. அப்படிச் செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் ஒரு பற்றுதலான முஸ்லிம் எனில், தவறுகள் நடந்தால் அவற்றைச் சீர்செய்ய முயலவேண்டும். இந்த ஒட்டுமொத்த விவகாரத்தை நோக்கிய அபூதர்ரின் அணுகுமுறையும் அப்படித்தான் இருந்தது. எனினும், அதிகார வர்க்கத்தினரோ அவரது இந்த அணுகுமுறைக்கு வரலாற்றிலே மீள்-வியாக்கியானம் அளித்துவிட்டிருக்கின்றனர். இது ஒரு மாபெரும் கைங்கர்யம்!

புனையப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை வாசிக்கும் அல்லது 'நாங்கள்தான் வெற்றிபெற்ற கூட்டம்' என்ற செருக்குடன் வரலாற்றை அணுகிடும் சகோதர, சகோதரிகளே, தயவுகூர்ந்து கவனியுங்கள். ஏதோ உங்களுக்கு மட்டும்தான் எல்லாமும் தெரிந்திருக்கிறது போன்றும் வரலாறு குறிதெல்லாம் உங்களிடம் எவருமே வாய்திறக்கக் கூடாது என்றும் ஒருவித இறுமாப்பில் நீங்கள் உழன்றுகொண்டிருக்கிறீர்கள். அதாவது, "வரலாறு குறித்தெல்லாம் என்னிடம் விளம்புவதற்கு உனக்கு எந்த யோக்கியதையும் கிடையாது?" என்ற மனோபாவம் உங்களுக்கு. அப்படியல்ல. இங்கு யாரும் உங்கள்மீது எவற்றையும் திணிக்கக் கிடையாது. உங்களை உருவேற்றிவிடவும் நாங்கள் இங்கே முயலவில்லை. 

அல்லாஹ்வின் ஆயத்துகள், அவனுடைய தூதரின் ஹதீஸ்கள் ஆகியவற்றுடன் சேர்த்து, நமது பொதுவான வரலாற்றிலிருந்து கர்மசிரத்தையுடன் சலித்தெடுக்கப்பட்ட நம்பகத்தன்மை வாய்ந்த புறவயமானத் தகவல்களையே இங்கு நான் மேற்கோள் காட்டுகிறேன். பற்பல வரலாற்றுப் புத்தகங்களைத் துளையிட்டிருக்கும் ஒருதலைச்சார்பு, மாச்சரியம், காழ்ப்பு, ஓர்வஞ்சனை ஆகிய கீழறுப்புக் கூறுகளை எல்லாம், அவற்றின் அஸ்திவாரத்தில் மேலெழும்பியிருக்கும் தகவல்களை எல்லாம் மானுட சக்திக்கு உட்பட்டு எத்துணை கவனத்துடன் இங்கே தவிர்க்கமுடியுமோ அத்துணை கவனத்துடன் தவிர்த்திருக்கிறேன்.

இத்தகைய பகுதிகளுக்குள் திடசித்தத்துடனும் திராணியுடனும் பிரவேசிக்கத் துணிபவர்களை நான் மனமுவந்து வரவேற்கிறேன். அதே நேரத்தில், உங்களைக் குறித்து நீங்கள் கட்டமைத்துவைத்திருக்கும் 'பரிசுத்தவான்'கள் நிலைப்பாட்டாலும், உங்கள் வரலாற்று வாசிப்பு உங்களுக்குள் ஏற்படுத்திவிட்டிருக்கும் தன்முனைப்பாலும் நீங்கள் நீர்த்துப்போயிருக்கும்பட்சத்தில், இந்த வரலாற்றுப் பிரவேசத்திலிருந்து நீங்கள் தாராளமாக விலகிக்கொள்ளலாம். ஏனெனில், உங்களைப் போன்றோருக்கு இவைகளெல்லாம் எந்த பலனும் அளிக்கப்போவது கிடையாது.
ஆக, உஸ்மானைத் தேடி ஆலாய்ப் பறக்கும் அபூதர், அவரைச் சந்தித்த சற்றைக்கெல்லாம் பின்வருமாறு இயம்புகிறார்:


'உமையாக்களின் பாட்டனாரான அபுல் ஆஸின் வழித்தோன்றல்களுள் வெறும் முப்பது பேர், அரசாங்கத்தைத் தங்கள் வயப்படுத்திக்கொண்டு, முடிவெடுக்கும் முக்கிய பொருப்புகளில் ஆரோகணித்துவிடுவார்கள் எனில், அவர்கள் மக்களைத் தங்கள் அடிமைகளாகவும், பணியாள்களாகவும் உருமாற்றிவிடப்போவது திண்ணம்.'  

சார்பு மனப்பான்மையற்ற நிலையில், இந்தத் தலைப்பின் அனைத்துப் பகுதிகளையுமே மிக அணுக்கமாக நீங்கள் அவதானித்து வந்திருப்பீர்கள் எனில், அவற்றிலெல்லாம் உஸ்மானையோ(ரழி) அபூதர்ரையோ(ரழி) நான் கண்டித்துப் பேசியிருப்பதாக நிச்சயம் நீங்கள் கூற மாட்டீர்கள்; அது எனது நோக்கமும் அல்ல. இவ்விவகாரங்களை எல்லாம் - அதாவது, இவைகளில் தோராயமாக எது சரி, எது தவறு என்பனவற்றை எல்லாம் - குர்ஆன், சுன்னாஹ்வின் ஒளியிலேயே இங்கு நாம் பரிசீலிக்க முயன்றுகொண்டிருக்கிறோம். இவற்றில் கூட்டல், கழித்தல், மிகைப்படுத்தலுக்கெல்லாம் கிஞ்சிற்றும் இடமில்லை.

அபூதர்ரின் இத்தகைய அணுகுமுறை, அன்று ஆட்சியில் இருந்தவர்களால், அதாவது உஸ்மானின்(ரழி) உள்வட்டாரங்களால், ‘கிளர்ச்சி’யாக அல்லது கீழ்ப்படிய மறுக்கும் மனோபாவமாகவே கருத்தப்பட்டது. சகோதர, சகோதரிகளே. நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய பகுதி இது. ஏனெனில், அதிகாரப் படிநிலையின் உயர்மட்டத்தை நோக்கிச் சடுதியாக நகர்ந்துகொண்டிருக்கும் இவர்களுக்கு, பிறரது அபிப்பிராயங்களுக்குச் செவிசாய்க்க வேண்டிய கட்டாயம் இயல்பாகவே அங்கு இல்லாமல் போய்விடுகிறது. இது 'அதிகார போதை' படுத்தும் பாடு.

இஸ்லாமிய இயக்கங்களும், குழாம்களும், இஸ்லாமிய அரசியல் கட்சிகளும், நிறுவனங்களும் நம்மத்தியிலே இன்று அதிக எண்ணிக்கையில் புழக்கத்திலிருக்கின்றன. இவற்றுள் எத்தனை இயக்கங்கள், குழாம்கள் அல்லது கட்சிகள் தங்கள் இஸ்லாமிய வரலாற்றிலிருந்து தாங்கள் பெற்றுக்கொண்ட படிப்பினைகளினூடாகப் பிற முஸ்லிம்களுடன் கைகோத்துக்கொள்ளவோ, குறைந்தபட்சம் அவர்களின் அபிப்பிராயங்களுக்குச் செவிமடுக்கவோ தயாராக இருக்கின்றன?

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உஸ்மானும்(ரழி) அபூதர்ருடன்(ரழி) கருத்து முரண்படத்தான் செய்தார். அதற்காக, 'பாதுகாப்புப் படையினரை வரச்சொல்லி இவரைக் கைதுசெய்யுங்கள்.' என்றோ, 'நிலவறையில் இவரை வீசிஎறியுங்கள்.' என்றோ அதிகார இறுமாப்பில் அவர் உறுமிடவில்லை. அபூதர்ரின்(ரழி) அபிப்பிராயங்களுக்கு அவர் செவிகொடுத்தார். அவர்கள் இருவருமே பரஸ்பரம் சம்பாஷித்துக்கொள்ளத்தான் செய்தனர். இத்தனைக்கும் இது ஒரு கறாரான விவகாரம்; ஏதோ அரசல்புரசலான பிசாத்து விவகாரம் அல்ல.

தொழுகைக்காகப் பாதங்களைக் கழுவிட வேண்டுமா அல்லது வெறுமனே நீவிவிட்டால் போதுமா? போன்ற கேள்விகள் குறித்தெல்லாம் அவர்கள் தர்க்கித்துக்கொண்டிருக்கவில்லை. இத்தகைய விவகாரங்கள்தான் இன்று பூதாகர விவகாரங்களாக உருவெடுத்துக்கொண்டிருக்கின்றன! தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்படும் 'அதான்' வாக்கியங்களுடன் சேர்த்து மேலதிகமாக எவற்றையேனும் நீங்கள் கூறுவதுண்டா அல்லது கூறாமல் அப்படியே விட்டுவிடுவீர்களா? தொழுகைக்காகத் தக்பீர் கெட்டும்போது கைகளை எப்படி, எங்கே வைப்பீர்கள்? போன்ற கேள்விகள்தான் இன்று, ஒரு முஸ்லிமின் இறைநெருக்கத்தை மதிப்பீடுசெய்யும் பகாசுரக் கேள்விகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றன.

'இயந்திரத்தன'மானத் தொழுகையை மட்டுமே வைத்துக்கொண்டு முஸ்லிம்களை மதிப்பீடுசெய்வதில் இன்று அதீத முனைப்புக் காட்டும் இவர்கள், உள்ளீடுள்ள ஒரு தொழுகையினால் செறிவூட்டப்படும் மானுட குணாதிசயம், நடத்தை, மனோபாவம் ஆகியவற்றைக் கொண்டு முஸ்லிம்களை இன்று மதிப்பீடுசெய்வதில்லை. ஆனால், முதல் தலைமுறை முஸ்லிம்களின் நிலைப்பாடு இப்படியிருக்கவில்லை. தங்களுக்குள்ளாக முகிழ்த்த கருத்து வேற்றுமைகளை அவர்கள் வினயமாகச் சகித்துக்கொண்டனர். பரஸ்பரம் அளவளாவிக்கொள்வதை விட்டும் இவைகளொன்றும் அவர்களைத் தடுத்துவிடவில்லை.

உஸ்மான்(ரழி) அபூதர்ருக்கு(ரழி) அளித்த மறுமொழியை இங்கே மேற்கோள் காட்டுகிறேன்:

"என்மீது சுமத்தப்பட்டிருக்கும் கடப்பாட்டை நான் நிறைவேற்றியே ஆகவேண்டும். குடிமக்களின் விவகாரங்களை நிர்வகித்துக்கொண்டுவரும் ஆளுநர்களுக்கு இஜ்திஹாது குறித்து நான் ஆலோசனைகள் வழங்க வேண்டும். தங்கள் தனிப்பட்ட அபிப்பிராயங்களோடும் பொருள்முதல்வாத வாழ்க்கையோடும் தொடர்புடைய விஷயங்கள் குறித்து அவர்களது சிந்தனையை நான் பட்டைதீட்டிவிட வேண்டும். ஆனால், முஸ்லிம் குடிமக்கள், வெகுஜனங்கள்மீது கறாரான, கட்டுத்திட்டத்துடன்கூடிய ஓர் வாழ்க்கைநெறியை என்னால் வலிந்து திணித்துவிட முடியாது; அவர்களிடம் சென்று, 'உங்கள் முழுச் சாப்பாட்டை அரை சாப்பாடாகக் குறைத்துக்கொள்ளுங்கள்' என்றெல்லாம் என்னால் கட்டளைப் பிறப்பித்துக்கொண்டிருக்க முடியாது; இதனை ஓர் சட்டமாகவெல்லாம் என்னால் இயற்றிக்கொண்டிருக்க முடியாது. அது என்மீது கடமையும் அல்ல."

இத்தகைய விவகாரங்கள்தான் மெத்தப் படித்தவர்களாலும் அனுபவசாலிகளாலும் இன்று விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இஸ்லாத்துக்கும் இவர்களுக்கும் காத தூரம் என்பது வேறுவிஷயம். ஆனாலும், வாதப் பிரதிவாதங்களை மட்டும் இவர்கள் தவிர்த்துக்கொள்பவர்களாக இல்லை. தனிப்பட்ட, அந்தரங்க, குடும்ப விவகாரங்களில் அரசாங்கத் தலையீட்டுக்கான வரம்புகள் என்ன? மேற்படி விவகாரங்களில் எல்லாம் அநாவசியமாக மூக்கை நுழைப்பதற்கு அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறதா? போன்ற கேள்விகள்தான் இவர்களது விவாதத்தின் மையம்.

அபூதர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகியோரை பரஸ்பரம் முண்டிக்கொள்ளச்செய்ததும் இவை தொடர்பிலான விவாதங்கள்தான்.

"அந்த அளவுக்கெல்லாம் என்னால் செல்ல முடியாது!" என்று அறுதியாகவும் உறுதியாகவும் கூறிவிடுகிறார் உஸ்மான்(ரழி).

அதற்கான அபூதர்ரின்(ரழி) மறுமொழி இதுதான்:

"தங்கள் அபரிமிதச் செல்வச் சேகரத்தை வெளிக்கொணரும்வரை.... தங்களண்டை இருப்பவர்களோடும் தங்கள் சகோதரர்களோடும் அன்னியோன்னியத்தை ஏற்படுத்திக்கொள்வதுடன் அவர்களுக்கான நித்திய ஆறுதலாகவும் ஆதரவாகவும் உருமாறிடும்வரை...... அன்னக்காவடிகளும் அநாயாசமாக அணுகிடும் அளவுக்கு தங்கள் வாழ்க்கைப் பாணியை சாமானியமாக்கிடும்வரை.... ஏழ்மையில் பரிதவித்துக்கொண்டிருப்பவர்களின் துயரக் குமுறல்களுக்குச் செவிமடுத்திடும்வரை..... தங்கள் பணம், பொருளாதார வளம், செல்வக் கொழிப்பு ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் நெருக்கத்தையும் அவனது பொருத்தத்தையும் பெற்றும்தரும் தானதர்மச் செயல்களில் முழுமுனைப்பில் ஈடுபடும்வரை.... இவற்றை எல்லாம் கறாராகப் பின்பற்றி ஒழுகிடும்வரை முஸ்லிம்களின் செல்வச் சீமான்களை நீர் விரட்டிக்கொண்டே இருக்கவேண்டும். இதில் நெகிழ்வுத்தன்மை என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது. இவ்விவகாரம் குறித்த எனது அபிப்பிராயம் இதுதான்."

அபூதர்ரை நாம் சரிவரப் புரிந்துகொள்ள முயல்வோமானால், அவரது வாக்கியங்களின் பூடகமான அர்த்தங்களை முதலில் நாம் விளங்கிக்கொள்ள முற்பட வேண்டும். இஸ்லாமிய அரசாங்கத்தில், முடிவெடுக்கும் முக்கிய பொருப்புகளில் வீற்றிருப்பவர்களும் இஸ்லாமிய சட்டங்களின் விவரங்களைத் துலக்கமாக வகுத்தளித்துக்கொண்டிருப்பவர்களும் பொருளாதாரம் இருக்கப்பெற்றோரின் கழுத்தண்டை வீச்சரிவாள் வைத்து மிரட்டி அவர்களது பொருளாதாரத்தை எல்லாம் அவர்களிடமிருந்து பலவந்தமாகப் பற்றிப் பிடுங்கிவிட வேண்டும் என்று கூறவில்லை அபூதர்(ரழி).

எனினும், நபிகளார் விட்டுச்சென்ற சமூகச் சூழலும், அதன் கிரமங்களும், அதன் நடத்தையொழுங்கும் இத்தகைய கீழறுப்புக் கூறுகளால் நீர்த்துப்போகாமல் இருக்க வேண்டுமானால், தன்வந்தர்களாக உருமாறிக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள்மீது அழுத்தம் கொடுத்து அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் அளவுக்கேனும் அந்த இஸ்லாமிய சமூகத்துக்குப் போதுமான அறவியல் வலிவு இருக்க வேண்டும் அல்லவா. இதைத்தான் அபூதர்ரும்(ரழி) கூற விளைகிறார்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அன்றைய இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பை இன்றைய சமூகக் கட்டமைப்புடன் ஒப்பிடவே முடியாது. முன்னது மிகுந்த நெருக்கத்தையும் பரஸ்பர அணுக்கத்தையும் பேணிக்கொண்டுவந்த ஓர் மகோன்னத அமைப்பாகத் திகழ்ந்துவந்தது. இன்றும்கூட முஸ்லிம்கள் மசூதிகளுக்குச் சென்று பிற முஸ்லிம்களுடன் தோளோடு தோள் நின்று தொழுதுகொள்ளத்தான் செய்தனர். ஆனாலும், துரதிருஷ்டம் பாருங்கள், பக்கத்தில் நின்று தொழுதுகொண்டிருக்கும் பிற முஸ்லிம் யார் என்றுகூட இவர்களுக்குத் தெரியவில்லை. அன்றைய நிலைமை அப்படியல்ல. தன் அண்டை நிற்பவர் யார் என்பதை ஒவ்வொருவரும் நன்றாக அறிந்துவைத்திருந்தனர்.

அபூதர்ரின் அங்கலாய்ப்பு யாதெனில்,

"இவர்கள் மற்ற முஸ்லிம்களின் விவகாரத்தில் பாராமுகமாக இருப்பதுடன், தங்கள் பொருளாதாரச் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியெழுப்புவது ஒன்றையே குறியாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய போக்கு, ஓர் இஸ்லாமிய சமூகத்துக்கும் அரசுக்கும் உசிதமானது அல்ல."

அஷ்-ஷாமிலிருந்து மதீனாவுக்கு திரும்பிய அபூதர், பௌதிகரீதியிலும் மனோவியல்ரீதியிலும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்; பழங்கந்தலாய்ப் போன உடைபோல அவர் உருமாறியிருந்தார்; உடல்ரீதியான ஆயாசம் அவரைத் துயரத்தின் உச்சத்துக்கே கொண்டுபோயிருந்தது. ஏனெனில், அவரை நாடுகடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட போக்குவரத்து உபாயம் அப்படிப்பட்டது. சேணம் பொருத்தப்படாத குதிரை/கழுதை மீது அவரை ஆரோகணிக்கச்செய்து அழைத்துச்சென்றனர். இந்த விவரங்களை எல்லாம் நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம்.

அப்படி அவர் மதீனாவை வந்தடைந்த நேரத்தில், ஆட்சியாளர் என்றரீதியில் உஸ்மான்(ரழி) ஒன்றும் அவரை விரட்டியடிக்கவில்லை. மதீனாவிலேயே அவருக்கு உறைவிடம் வழங்கினார்.

"எனது அரசியல் சத்துரு இவர். நான் இவருடன் கருத்து உடன்படவில்லை என்பதும், இவர் என்னுடன் கருத்து உடன்படவில்லை என்பதும் எங்கள் இருவருக்குமே நன்றாகத் தெரியும். ஆதலால், வேறு எங்கேனும் சென்று ஏதாவது ஒரு கீற்றுக் கொட்டகையில் தன் வாழ்நாளை இவர் கழித்துக்கொள்ளட்டும். என்னால் முடிந்தது அவ்வளவுதான்."

என்றெல்லாம் கூறி உஸ்மான்(ரழி) ஒன்றும் அவரைக் கைகழுவிடவில்லை. இத்தகைய 'அகந்தை' மனோபாவத்துக்குச் சொந்தக்காரரும் அல்ல அவர்.

உஸ்மானை(ரழி) சூழவும் ஆங்காங்கே இம்மனோபாவங்கள் துருத்திநின்றன என்றாலும், அவற்றின் பாதிப்புகளுக்கெல்லாம் ஒன்றும் அவர் ஆளாகிவிடவில்லை. 'நீ என்னுடனேயே வாழ்ந்துகொள்ளலாம்' என்றுதான் அவர் கூறினார். கருத்து முரண்பாடுகள் கறாராகத் தலைதூக்கிக்கொண்டிருக்கும் இன்றைய உலகுடனான மேற்படி வரலாற்று உதாரணங்களின் பொருத்தப்பாட்டை உங்களால் இன்னமும் இனங்கண்டுகொள்ள முடியவில்லையா என்ன? இவற்றிலிருந்து நாம் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளப்போவது எப்பொழுது?

உஸ்மானின்(ரழி) வீடு, தனது ஆகிருதியின் ஆரோக்கிய நசிவிலிருந்தும் மனோவியல்ரீதியிலான ஆயாசத்திலிருந்தும் தன்னை மீட்டெடுப்பதற்கான ஓர் உன்னத உறைவிடமாய் அபூதர்ருக்கு விளங்கிற்று. இந்தச் சௌகரியங்களுக்கு இடையிலும்கூட அவர் வாளாவிருக்கவில்லை அங்கே. இஸ்லாமிய சமூகத்தை துளையிட்டுப் படர்ந்திருக்கும் ஊழலையும் பிறழ்வையும் சீர்செய்வது எங்ஙனம் என்றக் கேள்வி ஒன்றுதான் அங்கும் அவரது சிந்தையை ஆட்படுத்தியிருந்தது.

ஒருநாள், அளப்பரிய செல்வக் குவியல் ஒன்று ஆட்சியாளரின் சந்நிதானத்துக்குக் கொண்டுவரப்படுவதை அபூதர் பார்க்கிறார். தங்கம், வெள்ளி நாணயங்களால் நிரம்பிவழிந்த கித்தான் பைகளைக் கொண்டுவந்து உஸ்மானின்(ரழி) முன்னிலையில் அம்பாரமாகக் குவித்துவிடுகிறார்கள். எந்த அளவுக்கெனில், தனக்கு எதிரே நின்றுகொண்டிருந்த உஸ்மானின் உருவத்தையே அபூதர்ரால் பார்க்க முடியவில்லை; முன்னவரின் ஒட்டுமொத்த உருவத்தையும் அந்தக் கோபுரக்குவியல் சம்பூர்ணமாக மறைத்துவிட்டது.

அரவம் இல்லாமல் அமைதிகாத்தார் என்று நினைக்கிறீர்களா அபூதர்? லௌகீக டாம்பீகம், படாடோபம், தடபுடலுக்கெல்லாம் விலைபோய்விடுகிற 'முஸ்லிம்' வகையறாக்களைச் சார்ந்தவரா அவர்? நிச்சயம் இல்லை. இப்பேர்பட்டவர்களை மன்னர் அல்லது ஜனாதிபதிகளின் அரண்மனைக்கு எவரேனும் அழைத்துச்சென்றால், அமைதியே உருவான 'அசடுவழி' பேர்வழிகளாக கணநேரத்தில் அவர்கள் உருமாறிவிடுவார்கள்; கொள்கைப் பற்றுதல், சித்தாந்தமெல்லாம் அப்பொழுது எங்கு செல்லுமென்பதே தெரியாது. 'இஸ்லாமிய சமர்த்துப் பிள்ளைகள்' இவர்கள்.

அபூதர்(ரழி) ஒன்றும் இப்படிப்பட்ட 'இஸ்லாமிய சமர்த்துப் பிள்ளை' அல்ல. தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் அவர் பற்றுறுதியுடன் நின்றார்; கொள்கைப் பிடிப்புடனேயே வாழ்ந்தார்; 'கொள்கையாள'ராகவே மரணிக்கவும் செய்தார். ஆக, உஸ்மானுடன் தங்கியிருக்கும் நாள்களில் அவர், அங்கு நடக்கும் கூத்துகளை எல்லாம் அவதானித்துக்கொண்டே வருகிறார். "இவற்றையெல்லாம் இப்படி நோட்டம்விட்டுக்கொண்டிருக்க உனக்கு அனுமதி இல்லை" என்று எவரும் அவருக்கு அங்கே முட்டுப்பாடு ஏற்படுத்திடவில்லை.

பற்பலர் இன்று அவதூறு பேசித் திரிவதுபோன்று, உஸ்மான்(ரழி) அப்பொழுது அபூதர்ருக்கு எதிராகச் சதிச்செயலில் ஈடுபடுபவராக இருந்திருந்தால், "அபூதர் ஏன் இங்கு தேவையில்லாமல் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்; அப்புறப்படுத்துங்கள் அவரை" என்று கட்டளையிட்டிருப்பார். ஆனால், அப்படிச் செய்யவில்லை அவர். அதற்காக, திறைமறைவு சதித்திட்டங்களே அன்று புழக்கத்தில் இல்லை என்று ஒட்டுமொத்தமாக இதனைப் பூசிமெழுகிவிடவும் முடியாது. முடிந்த அளவுக்கு இவ்விவகாரங்களை எல்லாம் நாணயமாக அணுகிடவே நாம் முயன்றுகொண்டிருக்கிறோம்.

ஒருதலைச் சார்பாலும் மாச்சரியத்தாலும் நீர்த்துப்போகாத நமது மைய நீரோட்ட வரலாற்றுப் புத்தகங்களை புரட்டிப் பார்க்கும்பட்சத்தில், கா'அப் அல் அஹ்பார் என்ற, நாம் ஏற்கெனவே கடந்துவந்த அதே யூதனின் பிரசன்னத்தைத்தான் அவை ஒவ்வொன்றுமே மீண்டும் மீண்டும் ஊர்ஜிதம் செய்துகொண்டிருக்கின்றன. இங்குதான் முஸ்லிம்கள் தங்களுக்குள்ளாகவே ஒரு கேள்வியை கேட்டுகொள்ள வேண்டும். இஸ்லாமிய அரசாங்கத்தின் உயர்மட்ட காரியாலயத்தில் கா'அப் அல் அஹ்பாருக்கு என்ன வேலை? உசிதமான, ஆக்கபூர்வமான ஒரு கேள்வி அல்லவா இது.

ஷியா-சுன்னி அபத்தங்களுக்குளெல்லாம் அகப்பட்டுவிடாமல், ஒவ்வொரு முஸ்லிமும் திறந்த மனத்துடன் தனக்குத் தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது. இக்கேள்விக்கான விடையை முயற்சியினூடாகக் கண்டடைவதற்கானத் தகுதியினைப் பெற்றுக்கொள்ள உங்களுள் ஒவ்வொருவருமே பிரயத்தனப்பட வேண்டும்.

ஆக, உஸ்மானின் முன்னிலையில் அம்பாரமாகக் குவிந்துகிடந்த அந்தச் செல்வக் குவியலுக்குச் சொந்தக்காரர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபு(ரழி) என்பதாகத் தெரியவருகிறது. இவற்றையெல்லாம் திகைப்புடன் அவதானித்துக்கொண்டிருந்த கா'அப் அல் அஹ்பார் பின்வருமாறு துதிபாடத் தொடங்குகிறார்:

"அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மீது அல்லாஹ் அருள் பாலிப்பானாக. இவ்வுலக வாழ்வுக்கும் மறுமை வாழ்வுக்குமான நற்பேற்றை அல்லாஹ் அவருக்குச் சம்பூர்ணமாகவே வழங்கிவிட்டான்."

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த அபூதர்(ரழி) சற்றைக்கெல்லாம் அவரை நோக்கி விரைகிறார்; கோபாவேசத்துடன் அவரை இரைந்து பேசுகிறார்:

"எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இதுபோன்ற வாக்கியத்தையெல்லாம் நீ எப்படி மொழிந்திடுவாய்?"

அதன் பின்னர், உஸ்மான்(ரழி), கா'அப் அல் அஹ்பார், அங்கே குழுமியிருந்த பிற முஸ்லிம்கள் ஆகியோருடன் சேர்த்து நம்மையும் - முஸ்லிம்கள் என்றரீதியிலே - அறிவுறுத்தும் வண்ணம் நபிகளாரின் ஹதீஸொன்றை அவ்விடத்தில் அபூதர்(ரழி) மேற்கோள் காட்டுகிறார். கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள் சகோதர, சகோதரிகளே. ஏனெனில், மிம்பர்மீது நின்றுகொண்டெல்லாம் எவரும் இந்த ஹதீஸை இன்று மேற்கோள் காட்டப்போவது கிடையாது.

அபூதர்ரின் வார்த்தைகளைக் கவனியுங்கள்:

நபிகளாரின்(ஸல்) கூற்றை நீங்கள் செவிமடுத்திருக்கவில்லையா,


"வெறுமனே ஓரிரு வெள்ளி நாணயங்களைப் பற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை எனக்குப் பின்னர் இப்பூவுலகில் விட்டுச்செல்லும் நிலையில் எனக்கு மரணம் சம்பவித்துவிட்டால், நிம்மதியான உவகையான மரணமாக நிச்சயம் அது அமையாது."

யதார்த்தம் இப்படியிருக்க, இங்கே மரணத்தைத் தழுவியிருக்கும் பிறிதொரு முஸ்லிமின் நிலையைப் பாருங்கள். செல்வ வளம், சொத்துப்பத்து என்றரீதியிலே கித்தான் பைகள் நிரம்ப, அம்பாரம் அம்பாரமாக தங்கம், வெள்ளி நாணயக் குவியல்களை அவர் விட்டுச்சென்றிருக்கிறார். இவற்றைத்தான் அவர்கள் உஸ்மானின்(ரழி) முன்னிலையில் குன்றுபோல் ஒருங்கு சேர்த்திருந்தனர்.

நபிகளார்(ஸல்) கூறியது போன்று இவைகளொன்றும் ஓரிரு வெள்ளி நாணயங்கள் அல்ல. வெறுமனே ஒருசில வெள்ளி நாணயங்கள் தன்னிடம் இருக்கும் நிலையில் மரணத்தைத் தழுவிக்கொள்வதே தனக்கு அத்துணை விசனத்தையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்துவிடும் என்று நவின்றிருக்கும் நபிகளார்(ஸல்), மூட்டை மூட்டையாக உஸ்மானின்(ரழி) முன்னிலையில் கொட்டப்பட்டிருக்கும் பொருட்குவியல்களைப் பார்த்தால் எங்ஙனம் எதிர்வினை ஆற்றியிருப்பார்? பணம் தொடர்பிலான விவகாரங்கள் இங்கே அத்துணை முக்கியத்துவம் பெறுகின்றன.

இது ஏதோ முகவரி அற்ற நபரின் வெற்று முழக்கம் அல்ல; அல்லாஹ்வின் தூதருடைய ஹதீஸ். எவரேனும் மேற்கோள் காட்டுகின்றனரா இந்த ஹதீஸை இன்று? இதன் அர்த்தங்களைப் புரிந்துகொள்ள எவரேனும் சித்தமாயிருக்கின்றனரா இன்று? அற்பசொற்ப எண்ணிக்கையிலான முஸ்லிம்களைத் தவிர.

காரணம், வரலாற்றை நமக்கேற்றாற்போல் இன்று வளைத்து நெளித்து நாம் வியாக்கியானம் வழங்கிக்கொண்டிருக்கிறோம்; வரலாற்றுத் திரிபுகளை, அதன் ஒருதலைச் சார்புகளை, நிகழ்வுகளின் மிகைப்படுத்தல்களை நமது மார்க்கமாகவே நாம் ஆக்கிவிட்டோம்; வரலாற்று உண்மைகளுள் சிலவற்றை - சுயநலன்களுக்காக – மறுதலிப்பதும், இன்னும் சிலவற்றின்மீது ஏகபோகம் கோருவதும் நமது ஒழுகலாறாகவே மாறிப்போய்விட்டது.

இதற்கு மாறாக, அந்த வரலாற்றுத் தருணங்களையும் காலகட்டங்களையும் அதன் அசலான நிலைக்கே மீட்கொணர்ந்து, அவற்றின் யதார்த்தங்களைத் துலக்கமாக உய்த்துணர்ந்துகொண்டு, பக்கசார்பற்ற, உண்மைகள்மீது ஏகபோகம் கோராத நிலையில் அவற்றைப் பிற முஸ்லிம்களிடம் கையளித்திட நம்மில் எத்தனை பேர் இன்று சித்தமாயிருக்கிறோம்? 

ஃகுத்பாவின் உபரித் தகவல்கள்:

அல்லாஹ்வின் வழிகாட்டலைக் கொண்டும், அல்லாஹ்வின் தூதரது தோழமையைக் கொண்டும் உங்கள் போராட்டச் சிந்தைக்கு உரமூட்டிக்கொண்டிருக்கும் ஈமான்கொண்ட சகோதர சகோதரிகளே!

கட்டுரையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கும் மறை வசனங்களின் அர்த்தங்களை இன்றைய உலகுடன் பொருத்திப்பார்ப்போமேயானால், அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுக்க இயலாத அளவுக்கு சட்டத்திட்டங்களும், வழக்காறுகளும், மரபுகளும் இங்கே இடுக்கண்களாய் தழைத்துவிட்டிருக்கின்றன. இதுதான் இங்குள்ள பிரதானச் சிக்கல்.

நூற்றாண்டு கால வழக்காறுகளும், மரபுகளும் இங்கே மதச்சார்பற்ற, இறை-மறுப்புச் சட்டங்களுடன் பொதுத் தளத்தில் கைக்கோக்கும்போது, அளப்பரிய தாக்கத்தை அது முஸ்லிம்கள்மீது ஏற்படுத்திவிடுகிறது. நாம் மேலே விவரணைசெய்த வரலாற்று விவகாரங்களை எல்லாம் உள்ளபடியே வெளிக்கொணர்வதில் இருக்கும் சிரமத்தை இப்பொழுதுதான் ஒரு முஸ்லிம் உண்மையாகவே உணர்ந்துகொள்கிறார்.

ஒன்று அவர் நூற்றாண்டுகால வழக்காறுகள், மரபுகளுக்குள் தஞ்சம் புகுந்துவிடுகிறார் அல்லது மதச்சார்பற்ற, நாத்திகச் சட்டங்களின் பொறிக்குள் போகிற போக்கில் அகப்பட்டுக்கொண்டுவிடுகிறார். இப்படி ஏதோ ஒரு நிர்ப்பந்தத்துக்குள் நின்றுகொண்டு இவ்வுண்மைகளை வெளிப்படுத்திவிடப் பிரயத்தனப்பட்டால், ஒட்டுமொத்த உலகமுமே தனக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்துவதுபோன்ற ஒரு மாயைதான் அவருக்கு ஏற்படும்.

அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்களிடமும் சரி பரிபாலனம் செய்துகொண்டிருப்பவர்களிடமும் சரி பணம், பொருளாதார வளப்பம், செல்வக் கொழிப்பு குறித்த அல்லாஹ்வின், அவனுடைய தூதரின் கூற்றுகளை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் பிரஸ்தாபித்துவிடவே கூடாது.

அல்லாஹ்வின் தூதர் கூறுவதைக் கேளுங்கள், (இதற்கு முன்னர் எத்தனையோ முறை இந்த ஹதீஸை நாம் செவிமடுத்திருக்கிறோம்):


"உலக முஸ்லிம்கள் அனைவரும் ஓர் உடலைப் போன்றவர்கள். இந்த உடலின் ஏதேனும் ஒரு அவயவத்தில் கோளாறு ஏற்படுமானால், ஏனைய அவயவங்கள் அனைத்துமே கோளாறு ஏற்பட்ட அந்த அவயவத்துக்கு முண்டுகொடுத்துவிட, அதனைச் சீர்செய்துவிட அலறிப்புடைத்துக்கொண்டு முன்னேறிவரும்."

மேற்படி ஹதீஸுடன் முஸ்லிம்களின் இன்றைய நிலைமையை ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த வேறுபாட்டைத் துலக்கமாக இனங்கண்டுகொள்ள நீங்கள் வேறு எங்கும் செல்லத் தேவையில்லை. இப்பூவுலகின் இரண்டே இரண்டு பாகங்களை மட்டும் உதாரணமாக எடுத்துக்கொண்டாலே போதும். ஒன்று காஸா, மற்றொன்று துபாய்!

உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட வறட்டு நியாயப்பாடுகளையும், அவை காலக்கிரமத்தில் பரிணாமம் பெற்று, எப்படி இன்று துபாய் என்றொரு பூதாகரப் பொருளாதாரச் சாம்ராஜ்ஜியமாக விருத்தி அடைந்திருக்கிறது என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். அதுபோன்றே, அத்தகைய நியாயப்பாடுகள், சப்பைக்கட்டுகளுக்கு எதிரான அபூதர்ரின் நிலைப்பாட்டையும், அது எப்படி காஸா முஸ்லிம்களின் ஆறாத ரணமாக, ஆற்றாமையாக இன்று பரிணாமம் அடைந்திருக்கிறது என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

"....இந்த உடலின் ஏதேனும் ஓர் அவயவத்தில் தெறிப்பு ஏற்படுமானால், மற்ற அவயவங்கள் அனைத்துமே அதற்குத் தோதான எதிர்வினையை ஆற்றும்." என்ற இந்த ஹதீஸுடைய அர்த்தங்களின் பிரதிபிம்பமாக அல்லவா இந்த உம்மத் இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லையே இன்றைய நிலவரம். களேபரங்களும் குளறுபடிகளும் காஸாவைச் சிதறடித்துக்கொண்டிருக்கின்றன; வழிந்தோடும் உதிரம், பசி பட்டினியின் பரிதவிப்பு, இராணுவத் தளவாடங்களின் ஓங்காரங்கள், மரண ஓலங்கள்....இத்யாதி. 

இவற்றுக்கான நமது எதிர்வினைதான் என்ன? செல்வக் கொழிப்பில் புரண்டுகொண்டிருக்கும் முஸ்லிம் நாடுகள் இவற்றுக்கு எப்படி எதிர்வினை ஆற்றிக்கொண்டிருக்கின்றன?

ஒன்று, அல்லாஹ்வின் தூதர் பொய்யுரைத்திருக்க வேண்டும் (நஸ்தக்ஃபிருல்லாஹ் - அது சாத்தியமில்லை என்பது நாமெல்லாம் அறிந்ததுதான்) அல்லது "நாங்களும் முஸ்லிம்களின் இந்த 'ஓர் உடல்' அமைப்பைச் சார்ந்தவர்கள்தான்" என்று உரிமையோடு மார்தட்டிக்கொள்பவர்கள் அதைவிட்டும் - அந்த 'ஓர் உடல்' அமைப்பைவிட்டும் - வெளியேறிவிட்டிருக்க வேண்டும்.

ஆம். 'பில்லியன் டாலர்' சாகரத்தில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருக்கும் இவர்கள், காஸாவின் விவகாரத்தில் இதுகாறும் துரும்பைக்கூட அசைத்ததில்லை. ஆனால், 'முஸ்லிம்கள் ஓர் உடலைப் போன்றவர்கள்' என்ற நபிகளாரின் கூற்றை செவியேற்கும்போது மட்டும் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்வினை ஆற்றுகிறார்கள்; 'நாங்களும் இவ்வுடலின் ஓர் அங்கத்தினர்தான்' என்று பெருமிதம் பொங்க எக்களிக்கிறார்கள். இப்படி, இவர்கள் என்ன பிதற்றினாலும் மற்ற முஸ்லிம்கள் இவற்றை அப்படியே நம்பிவிட வேண்டுமாம். அதுதான் இவர்களுக்கு வேண்டும்.

இங்கே காஸா முஸ்லிம்களின் கையறுநிலைக்கான உதாரணம் என்பது, இப்பூகோளத்தின் இன்னபிற பகுதிகளில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஜீவமரணப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்களின் உதாரணங்களில் ஒரு சிறிய துணுக்குதான்.

"ஒரு பெண் வெறுமனே ஒரு பூனைக்காகச் சபிக்கப்பட்டாள்; நரகத்தில் வீசி எறியப்பட்டாள்." என்றார்கள் நபிகளார்(ஸல்) ஒருமுறை.

ஏன்? என்று உசாவப்பட்டது. அதற்குப் பின்வருமாறு அவர்கள்(ஸல்) மறுமொழி பகன்றார்கள்:

"ஏனெனில் அந்தப் பூனையை அவள் பலாத்காரமாக அடைத்துவைத்தாள்; வெளியே சென்று உணவு, பட்சணங்களைத் தேடிக்கொள்வதற்கான சுவாதீனத்தை அப்பூனைக்கு அவள் வழங்கிடவில்லை; தானும் அதற்கு உணவளிக்கவில்லை."

அப்படியென்றால், சற்றொப்ப பதினைந்து லட்சம் முஸ்லிம்களை காஸாவில் வலுக்கட்டாயமாக அடைத்துவைத்திருப்பவர்களை என்னவென்று சொல்வீர்கள்? இதற்கெல்லாம் ஜவாப்தாரி யார்? உங்களையும் என்னையும் போன்று இவர்களும் முஸ்லிம்கள்தானே. இவர்கள் என் குடும்ப அங்கத்தினர்களாகவோ உங்கள் குடும்ப அங்கத்தினர்களாகவோ இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? அடைபட்டுக்கிடக்கிறார்கள் அங்கே; உண்ண உணவில்லாமல் நிராதரவாக. வெளியிலிருந்து உணவு, பட்சணங்களைக் கொடுப்பதற்குக்கூட எவருக்கும் அனுமதி இல்லையாம்.
இத்துணைச் சந்தடிகளுக்கு மத்தியிலும், எகிப்து அரசாங்கத்தின் கபட வேலைகளைப் பாருங்கள். இருபதிலிருந்து முப்பது மீட்டர் உயரத்தில் பூமிக்கு அடியிலே மதிற்சுவரொன்றை நிர்மாணித்துக்கொண்டிருக்கிறார்கள் அங்கே. 
அடைப்பட்டுக்கிடக்கும் முஸ்லிம்கள் தங்கள் குடும்பங்கள், உற்றார்களுக்கு உணவு, பட்சணங்களைத் தருவித்துக்கொள்வதற்காக சுரங்க வழிப்பாதைகளைக்கூட உபயோகித்துவிடக் கூடாது என்பதற்காக.
உலகிலுள்ள பிற முஸ்லிம்கள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பார்வையாளர்களா இவர்கள் எல்லாம்? இந்த ஓலங்களையெல்லாம் எல்லோருமே அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், யாருமே ஆக்கபூர்வமாக எதுவும் செய்தபாடு இல்லை! ஏன்?

'ஒரு முஸ்லிம் தனது பொருளாதார வளப்பத்தின் ஓர் ஆண்டுகால சேகரத்திலிருந்து இரண்டரை சதவிகித ஸகாத்தை மட்டும் வழங்கிவிட்டாலே போதும்; அவரது - பொருளாதார - கடப்பாட்டின் முடிவெல்லை அதுதான்.' என்று நா குழறாமல் பேசித்திரியும் இன்றைய முஸ்லிம் பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்களின் நரம்பு மண்டலங்களில் பாய்ந்தோடிக்கொண்டிருப்பது யாருடைய ஆன்மா? இதன் விளைவு நம்மை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது பாருங்கள்.
செல்வச் செழிப்பில் திளைத்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்களின் பொருளாதாரக் கடப்பாடும், அதுசார்ந்த அவர்களின் பொருப்புகளும் மேற்படி ஹதீஸ் சுட்டிக்காட்டியிருக்கும் வரம்புகளுக்குள் முடிவடைந்துவிட்டன என்று திருப்திபட்டுக்கொள்பவர்களின் கவனத்துக்கு... சவூதி அரேபியாவின் இளவரசர்களுள் ஒருவரான வலீத் பின் தலாலின் 2008ஆம் ஆண்டு வரையிலான சொத்து மதிப்பு தோராயமாக 17லிலிருந்து 18 பில்லியன் டாலர் (இன்றைய இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.11520 கோடி) என்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் உலகம் பூராவுமே வியாபித்திருக்கிறார்கள். இவர்களின் களியாட்டத்தில் காஸா முஸ்லிம்களின் அல்லல்களுக்கு ஏதும் இடம்? என்று நான் கேட்கிறேன். இத்தகைய பேர்வழிகளை எல்லாம் எப்படி அடையாளப்படுத்து என்று தெரியவில்லையே எங்களுக்கு!!

'இஸ்லாமிய' வம்சாவளிக்குச் சொந்தக்காரர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் சிலரிடம் இப்பொழுதெல்லாம் காஸாவைப் பற்றிப் பேசவே முடிவதில்லை; சட்டென்று முகம் சுளித்துக்கொள்கிறார்கள். மாறாக, துபாய் நகரின் தடபுடல், டாம்பீகங்களை நினைவூட்டினாலோ உவகையுணர்வால் அவர்களின் முகம் மிளிர்ந்து விரிகிறது; ஓர் அசாதாரணமான உத்வேகத்தை அவர்களுள் அது தளிர்க்கச்செய்கிறது. இஸ்லாமிய உந்துவிசையை, சங்கல்பத்தைத் தரித்துக்கொண்டிருக்க வேண்டியவர்களாக்கும் இவர்கள் எல்லாம். பாருங்கள் இப்பொழுது நிலைமையை.

எகிப்து அரசாங்கத்திடமிருந்து கச்சைகட்டிக்கொண்டு வெளிக்கிளம்பிய பற்பல இழிவான காரியங்களை நாம் கடந்துவர நேர்ந்தாலும், அந்நாட்டு மக்கள் சிலரிடமிருந்து சிற்சில மெச்சத்தகுந்த நடவடிக்கைகளும் வெளிப்பட்டிருக்கின்றன. ஏதோ ஒருசிலராவது இதற்குத் தயாராக இருக்கிறார்களே.
எகிப்தின் தலைநகர் கைரோவிலிருக்கும் நிதி அமைச்சகம் முன்பு நூற்றுக்கணக்கான ஷெய்குகளும் அறிஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். 'ஆர்ப்பாட்டக்காரர்க'ளின் பெயர்களை அறிந்துகொள்வதற்காக எகிப்து அரசாங்கம் தனது உளவாளிகளை சடுதியாகக் களத்துக்கு அனுப்பிவைக்கிறது. இப்பெயர்களை வைத்துக்கொண்டு, 'ஆர்ப்பாட்டக்கார' ஷெய்குகள், அறிஞர்களின் இரண்டு மாத சமபளத்தை முடக்கிவிடுவதுதான் அரசாங்கத்தின் திட்டம்.
இதற்குக் காரணமும் இருக்கிறது. ஏனெனில், இந்நிகழ்வுக்குச் சில நாள்கள் முன்புதான், எகிப்து முஸ்லிம்களுக்கும் காஸா முஸ்லிம்களுக்கும் இடையே அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மதிற்சுவரை ஆமோதித்து அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் ஷெய்கு ஃபத்வா ஒன்றை வழங்கியிருந்தார். அதையும் மீறிதான் இப்பொழுது இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் ஷெய்கு அவர்களே ஏகாதிபத்திய-சியோனிச கைப்பாவையான எகிப்து அரசாங்கத்தின் இந்த இழிசெயலை ஆதரித்து, ஆமோதித்து, அதனை ஆகுமானதாக ஏற்றுக்கொண்டு, இச்சுவர் போன்று இன்னொன்றையும் கட்டியெழுப்புவதற்கு ஆசீர்வாதம் வழங்குவதுபோல் ஃபத்வா ஒன்றை வழங்கியிருக்கும்போது, திரும்பத் திரும்ப இஸ்ரேலையே நாம் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது. அவர்களுக்கு அடிமைச் சேவகம் புரிந்துகொண்டிருக்கும் எகிப்தின் குரல்வளையைத்தான் இதற்காக நாம் நெறிக்க வேண்டும்.

துளியூண்டுப் பொது அறிவை நீங்கள் தரித்துக்கொண்டிருந்தாலே போதும். ஆம். அதுவே போதும். நிகழ்காலத்திலே நமது வரலாற்றையும், வரலாற்றிலே நமது நிகழ்காலத்தையும் உங்களால் நிர்மலமாக இனங்கண்டுகொள்ள முடியும். இதற்காக நீங்கள் புறந்தள்ள வேண்டியதும் ஒன்றிருக்கிறது.

அதுதான் உங்கள் ஒருதலைப்பட்சம்!!

இறைவன் நன்கறிந்தவன். 

சமூக அநீதிக்கு எதிரான அபூதர்ரின்(ரழி) போராட்டம் அடுத்த பகுதியிலும் தொடரும்....! இன்ஷா அல்லாஹ்….!!