அபூதர்(ரழி): 'சமூக அநீதி எதிர்ப்'பின் உத்வேகமூட்டும்
குறியீடு!
(இறுதிப் பகுதி: பாடங்களும் படிப்பினைகளும்)
- இமாம்
முஹம்மது அல் ஆஸி
- தமிழில்:
சம்மில்
முஸ்லிம்களாகிய நாம், அதிகாரத்தை நோக்கி உண்மையின்
வார்த்தையை உரக்கப் பேசுவதற்கானத் திராணி அற்றவர்களாகவே நமது வாழ்நாளைக் கழித்துவருகிறோம்.
நமக்குள்ளாக இப்படி வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லையே. இதற்கு
முன்னரும் இதனை நாம் வலியுறுத்தியிருக்கிறோம்; மீண்டும் இங்கே அதனை வலியுறுத்திக் கூறுகிறோம்.
அதிகாரத்திடம் உண்மையை முழங்கிடும் விஷயத்தில் நமது
தற்கால இயலாமை, சுணக்கம், சால்ஜாப்புகள் எல்லாம் ஏதோ வெறுமையிலிருந்து தானாகவே மேலெழும்பியிருப்பதாக
எண்ணிக்கொள்ள வேண்டும். இவைகளுக்கான அகவை இப்பொழுது 1400-ஐத் தாண்டிவிட்டன. ஆம். நமது
1400 ஆண்டுகால பலவீனங்கள் இவைகள் எல்லாம்.
வயது
வரம்பைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கும் நமது இந்த பலவீனத்தைப் பற்றி என்னால் இயன்றமட்டும்
- மானுட ஆற்றலுக்கு உட்பட்டு - விளக்கிக்கூற முயன்றிருக்கிறேன். மக்களின் துவேஷ உணர்வைத்
தூண்டிவிடும் கோபாவேசமும் உள்ளக் கிளர்ச்சியும் தொனிக்கும் சொல்லாட்சியின் வாயிலாகவோ,
குறிப்பிட்ட ஒரு வகுப்பினரால் மட்டுமே கிரகித்துக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில்
கல்வியாளர்கள், அறிவுஜீவிகளின் மொழியிலோ எனது விளக்கங்களை நான் வெளிப்படுத்திடவில்லை.
எனது சொல்லாட்சி நடுநிலையானது. இதே சொல்லாட்சியின்வழி நமது பிரயத்தனங்களை நாம் தொடர்ந்து
முன்னெடுத்துச் செல்வோம்.
அதிகாரத்திலும்
பொருளாதார வளப்பத்திலும் திளைத்துக்கொண்டிருப்பவர்களிடம் நீதியின் வார்த்தைகளை உரக்கப்
பேச இயலாதவர்களாய் பதினான்கு நூற்றாண்டுகளை நாம் கடந்து வந்தாயிற்று. இது ஒரு பெருநீளக்
காலச்சட்டகம்தான். இந்த பலவீனம் நம் அனைவருக்குமே சொந்தமானது என்பதை நான் ஏற்கெனவே
தெளிவுபடுத்திவிட்டேன்.
முஸ்லிம்களில்
நீங்கள் எந்தப் பிரிவை, வகைமையைச் சார்ந்தவர்கள் என்பது பற்றியெல்லாம் எனக்குக் கரிசனை
கிடையாது. நம் அனைவருக்குமே பொதுவான ஒரு வரலாறு இது; அதிகாரத்தையும் செல்வக் கொழிப்பையும்
ஒருங்கமைத்துக்கொண்டவர்களிடம் நியாயத்தை உரைக்க இயலாத நமது தகுதியின்மையை பிரத்தியட்சமாக
வெளிப்படுத்திடும் வரலாறு இது. இங்கே நியாயம் என்று நான் கூறுவது, உள்ளக் கிளர்ச்சியால்
பீறிட்டு எழும் வறட்டு நியாயத்தை அல்ல; புறவயப் பார்வையால், அணுகுமுறையால் வெளிப்படுத்தப்படும்
யதார்த்தத்தை.
இவை அனைத்துக்குமான தோற்றுவாய் என்று, தோராயமாக,
மூன்றாம் கலீஃபாவான உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்தை குறிப்பிடலாம்.
இந்தக்
காலச் சட்டகத்தில், தங்கள் உலகாயத நலன்களுக்குத் தோதாக அதிகாரத்தையும் செல்வக் கொழிப்பையும்
ஒருங்கிணைக்கத் தொடங்கியவர்கள் எப்படி அதே
அதிகாரத்தை
நோக்கி நியாயத்தை உரைத்துக்கொண்டிருந்தவர்களின் விஷயத்தில் பயபீதியை வெளிப்படுத்தினார்கள்
என்பதை
நாம் ஏற்கெனவே பார்த்துவந்தோம். இதற்காக நாம் அபூதர்ரின்(ரழி) உதாரணத்தையும் அவர் எவ்வாறு
இழிபடுத்தப்பட்டார் என்பதையும்கூட ஓரளவு சுருக்கமாக அலசினோம்.
அதிகாரத்தில் வீற்றிருந்த, பொருளாதார வளப்பத்தைக்
கொண்டு தங்கள் அதிகாரத்துக்கு உரமூட்டிவந்த முஸ்லிம்கள் பிறழ்வை நோக்கி சென்றுகொண்டிருந்த
அரசாங்கப் பரிபாலனம் குறித்த பிற முஸ்லிம்களின் அபிப்பிராயத்தை எவ்வாறு செவிமடுக்க
மறுத்தார்கள் என்பதை முதன்முதலாக நாம் அவதானிக்க நேர்ந்தது உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்தில்தான்.
சகோதர, சகோதரிகளே. நமது நடத்தைமீது உங்கள் கவனத்தை
இங்கே தயவுகூர்ந்து ஒருமுகப்படுத்த முயலுங்கள். 'நமது நடத்தை' என்று இதனை நான் அடையாளப்படுத்துவதற்குக்
காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இந்த நடத்தை நமக்குச் சொந்தமானது; நம் பொதுவான வரலாற்றுக்குச்
சொந்தமானது. நீங்கள் எப்படி இதனை அணுகினாலும், இதுதான் நமது பொதுவான வரலாறு என்பதை
உங்களால் மறுதலித்துவிட முடியாது.
அதிகாரத்தில்
வீற்றிருந்தவர்களும் அவ்வதிகாரத்துடன் பொருளாதார வலிவை ஒருங்கு சேர்த்துக்கொண்டவர்களும்
தங்களோடு கருத்து முரண்பட்ட முஸ்லிம்களின் அபிப்பிராயங்களுக்குச் செவிசாய்க்கும் விஷயத்தில்
வெளிப்படுத்திய இறுமாப்புதான் நமது பொதுவான வரலாற்றின் ஆரம்பப் புள்ளி. இது, இஸ்லாத்தால்
ஆமோதிக்கப்பட்டிருக்கும் 'உள்ளுறை கருத்து வேற்றுமைக'ளின் விவகாரத்துக்கு நம்மை இட்டுச்
செல்கிறது.
இந்தக் கருத்து வேறுபாடுகள் எல்லாம் இஸ்லாத்தின்
நீடித்த சமூக நடத்தையாகவே காலப்போக்கில் மாறிப்போயின. அதன் உள்ளார்ந்த உக்கிரமும் காலம்
செல்லச்செல்ல சடுதியாக அதிகரித்தது. அல்லாஹ்வின் வேதத்தையும் அல்லாஹ்வின் தூதருடைய
சுன்னாஹ்வையும் உளத்தூய்மையுடன் பின்பற்றி ஒழுகிடும் எவரும் ‘முஸ்லிம்களுக்கு இடையே
இத்தகைய கருத்து வேறுபாடுகளெல்லாம் கூடாது’ என்று கூறியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அல்லாஹ்வின்
வார்த்தைகளேகூட இந்த உள்ளுறைக் கருத்து முரண்பாடுகளை ஆமோதிப்பதாகத்தான் அமைந்திருக்கிறது.
பின்வரும் ஆயத்தை கவனியுங்கள்:
فَإِن
تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ
"………ஏதோ ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் உங்களுக்கு
இடையே பிணக்கு ஏற்பட்டால் / கருத்து முரண்பாடுகள் துளிர்விட்டால் / விவாதங்கள் முற்றிப்போய்விட்டால்
அதுகுறித்து அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் முழுமையாகப் பொருப்புச் சாட்டிவிடுங்கள்………"
(அல்
குர்ஆன் 4:59)
ஆக, இவைகளெல்லாம் தவிர்க்கவியலாத வளர்ச்சிகள். இத்தகைய
வளர்ச்சிகளோடுதான் 1400 ஆண்டுகளாக நாம் பயணித்துவந்திருக்கிறோம். என்றாலும், அதிலிருந்து
பாடங்கள் கற்றுக்கொண்டோமா என்றால் இல்லை. இதுதான் நமது பிரச்சினை. நம்மைப் பொறுத்தவரை,
படிப்பினைகளை உருவிப்பெறுவது என்பது ஒரு கடினமான காரியம். ஒருதலைச்சார்பு அற்ற நிலையில்
இத்தகைய வரலாற்று நிகழ்வுகளை அணுகி, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள நம்மால் இயலவில்லையே.
இன்றைய காலகட்டத்தில் வேடதாரிகளாக சஞ்சரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்
என்றால் அதற்குக் காரணம் இதுதான்.
முஸ்லிம்களாகிய நமக்குள் வேறுபாடுகள் வியாபித்திருந்தன
என்பது உண்மைதான். ஆனால், அத்தகைய வேறுபாடுகளை எல்லாம் நாம் எப்படிக் கையாண்டோம்? இதுதான்
நம்முன் இருக்கும் பிரதானக் கேள்வி. அல்லாஹ்வின் வேதத்தையும் அல்லாஹ்வின் தூதரது வழிகாட்டலையும்
உரைகல்லாகக் கொண்டு நமது வரலாற்று நிகழ்வுகளை நாம் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றிலிருந்து
படிப்பினைகளைப் பெற்றிருப்போம் எனில், பிற முஸ்லிம்களுடனான நமது தற்கால உறைவுமுறையை
அதனூடாக நாம் செறிவூட்டிக்கொண்டிருக்கலாம்; வரலாற்றின் துவக்க காலகட்டத்தில் இழைக்கப்பட்ட
அதே தவறுகள் மீண்டுமொருமுறை இழைக்கப்படாமல் நாம் தடுத்திருக்கலாம்; அன்று அவிழ்த்துவிடப்பட்ட
அதே சமூக, அரசியல் வரம்புமீறல்களின் சமகால வெளிப்பாடுகள் குறித்து நாம் சர்வ எச்சரிக்கையுடன்
இருந்திருக்கலாம். இவ்வனைத்துப் பிரச்சினைகளோடும் மீண்டும் மீண்டும் மாரடித்துக்கொண்டிருப்பதற்கான
அவசியம் நமக்கு இல்லாமல் போயிருக்கும். இவ்வளவு அங்கலாய்ப்பும் எதற்காக? பாடங்கள் படிக்கத்தான்
நாம் தயாராக இல்லையே.
உஸ்மானும்(ரழி) அபூதர்ரும்(ரழி) கறாராகக் கருத்து
முரண்பட்டுக்கொண்டனர். இந்தக் கறாரான கருத்து முரண்பாடுகள்தான், அதிகாரத்தையும் செல்வத்தையும்
ஒருங்கு சேர்த்துக்கொண்டவர்களால் மதீனாவை விட்டே அபூதர்ரை(ரழி) பலாத்காரமாக விரட்டியடிப்பதற்கு
அடிகோலுவதாக அமைந்தது. நமது அன்றைய அரசியல் நடத்தையை இவ்விடத்தில் நாம் மேற்கோள் காட்டியே
ஆக வேண்டும். இன்றைய தேதியில், அதிகாரத்துக்கு எதிராக நியாயத்தை இரைந்து பேச எத்தனித்துக்கொண்டிருக்கும்
முஸ்லிம்கள்போல, அபூதர்ரும் அன்று, ஒரு முஸ்லிம் என்றரீதியிலே, அநீதிக்கு எதிராகக்
குரல் எழுப்பினார். விளைவு! மறுகணம் அவருக்கு எதிராகப் பறந்தது அரசாணை:
"நீ மதீனாவைவிட்டு சடுதியில் வெளியேறிவிட வேண்டும்".
மதீனாவிலே இஸ்லாமிய அரசின் உருவாக்கத்துக்குக் காரணமாக
இருந்த முன்னணி நபித்தோழர்களில் அபூதர்ரும்(ரழி) ஒருவர். அப்படிப்பட்ட ஒரு உத்தம நபித்தோழர்தான்
இப்பொழுது, அதிகாரத்தையும் செல்வக் கொழிப்பையும் ஒருங்கே துஷ்பிரயோகம் செய்துகொண்டிருந்த
மேட்டிமை வகுப்பினரால் இழிபடுத்தப்படுகிறார்; மதீனாவை விட்டே வெளியேற்றப்படுகிறார்.
கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள் சகோதர, சகோதரிகளே!
அதிகாரம், பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த அவதாரமாய் வெளிப்பட்ட இந்த நடத்தை, இஸ்லாமிய,
குர்ஆனிய தரநிர்ணயத்திலிருந்தும் சுன்னாஹ்வின் விழுமியங்களிலிருந்தும் பிறழ்ந்துசென்ற
நமது அரசியல் நசிவின் மிக முக்கியமான, எனினும், கண்டுகொள்ளப்படாத ஓர் அம்சமாகும்.
மதீனாவைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்பதாக அபூதர்ரை
அவர்கள் அதட்டிஉருட்டுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை இன்றைய உலகில் சர்வ சாதாரணமாகவே
நம்மால் கடந்துவர முடியும். அரசாங்கத்தின் அதிகாரபூர்வ கொள்கைகளுக்கு எதிராக கருத்துமுரண்படுபவர்களை
நோக்கி அதன் ஏவலாள்கள் - அதாவது, காவல் படையினர் - இன்று மிரட்டல் விடுக்கிறார்கள்
அல்லவா, அதுபோன்றுதான் இதுவும். இன்றைய சாமானிய வழக்கில் கூறுவதென்றால், 'கீழ்ப்படிய
மறுக்கும் ஒரு கிளர்ச்சியாள'ராகத்தான் அபூதர்ரை அவர்கள் வகைப்படுத்தினர்; சரணாகதி அடைய
மறுக்கும் ஒரு குரூர கலகக்காரரின் நடத்தையை அவருள் கண்டுகொண்ட அதிகார வர்க்கத்தினர்
அதனால் கிலி வயப்பட்டனர்.
சகோதர, சகோதரிகளே. அதிகாரம், செல்வக் கொழிப்பின்
ஒருங்கிணைந்தக் கலவையினூடாக தகிடுதத்தத்தின் வாழ்க்கையை வாழ்ந்த இந்த முஸ்லிம்கள் நெறிபிறழ்ந்து
சென்றனர். இந்த
ஒருங்கிணைந்தக் கலவையின் பாரதூர விளைவுகள், ஒரு பெரும் பளுவாய் 1400 அண்டுகளாக நமது
முதுகை முறித்துக்கொண்டிருக்கின்றன. நம்மைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டுமானால்,
இந்த 1400 ஆண்டுகால பளுவின்மீதுதான் முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
குர்ஆனின் ஆயத் ஒன்றைக் குறித்து அடிக்கொருதரம்
நான் அறிவுறுத்தி வந்திருப்பது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம். 'சூறா அல்-இஸ்ரா'வின்
ஆயத் அது. அதிலே அல்லாஹ் பின்வருமாறு விளம்புகிறான்:
وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا
"நாம்
ஓர் சமூக ஒழுங்கை / சமூகக் கட்டமைப்பை சம்ஹாரம் செய்ய நாடினால், அதிலுள்ள மேட்டிமை
வகுப்பினரை (அதாவது, அதிகாரத்திலும் பொருளாதார வலிமையிலும் ஒருசேர ஆரோகணித்திருப்பவர்களை)
நமது வழிகாட்டலைப் பின்பற்றி ஒழுகிடுமாறுக் கட்டளையிடுவோம்......"
(அல் குர்ஆன் 17:16)
இதற்கு
அவர்கள் எங்ஙனம் எதிர்வினை ஆற்றுவார்கள்?
فَفَسَقُوا
فِيهَا
".........தங்கள்
சமூக ஒழுங்கை அறவியல் நசிவுக்கும் இழிவுக்கும் சீரழிவுக்கும் இட்டுச்செல்லும் கூறுகளை
அவர்கள் அதிகாரபூர்வக் கொள்கைகளாகப் பிரகடனம்செய்துவிடுவார்கள்......"
(அல் குர்ஆன் 17:16)
அப்பொழுது
அல்லாஹ்வின் வாக்குறுதி உயிர்பெற்றுவிடுகிறது.
".....அதன்
விளைவாக அந்தச் சமூகம் முற்றுமுழுவதுமாகத் துடைத்தழிக்கப்பட்டுவிடும்...."
(அல் குர்ஆன் 17:16)
குர்ஆன், சுன்னாஹ்வின் இத்தகைய உண்மைகளை
நாம் அடிக்கடி செவியேற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். நம்மில் இன்னும் சிலர் அவற்றை தத்தம்
தொழுகைகளிலும், பிரார்த்தனைகளிலும்கூட மணிக்கொருதரம் பாராயணம் செய்துகொண்டேதான் இருக்கின்றனர்.
அப்படியிருந்தும்கூட எதுவுமே நடக்காததுபோன்று அல்லது எவற்றையுமே செவியேற்காததுபோன்று
நாம் பாராமுகமாக இருப்பதற்கான காரணம் என்ன? இத்தகைய செழுமையானப் பாடங்கள் எல்லாம் நமது
வரலாறு நெடுகிலுமே விரவிக்கிடக்கும்போது, அவற்றிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளாமல்
இருப்பதற்கு நமக்கு என்ன நேர்ந்துவிட்டது?
ஆக, முந்தைய காலகட்டங்களில் அறியப்பட்டிராத ஓர்
அரசியல் கலவைக்கு, அதாவது, அதிகாரம், செல்வக் கொழிப்பின் ஒருங்கிணைந்தக் கலவைக்கு முதன்முதலாக
அடிகோலிய உஸ்மானை(ரழி) முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தார் சென்று சந்திக்கின்றனர்; அவரிடம்
கீழ்க்கண்டவாறு முறையிடுகின்றனர்.
"இவைகளெல்லாம் தவறுகள்! பட்டவர்த்தனமானப் பிறழ்வுகள்!
இந்த விஷயத்தில் நீங்கள் துரிதமாக ஏதேனும் நடவடிக்கை எடுத்துத்தான் ஆக வேண்டும்."
உங்களை மீண்டுமொருமுறை இங்கே நினைவுறுத்திக்கொள்ளக்
கடமைப்பட்டுள்ளேன். உஸ்மானுக்கும்(ரழி) சரி அவரது இஜ்திஹாதை ஆமோதித்தவர்களுக்கும்
சரி முஸ்லிம்களின் இந்தக் கோரிக்கையில் கிஞ்சிற்றும் உடன்பாடு இல்லை. இந்த இஜ்திஹாதை
துலக்கமாகச் சலித்தெடுத்து அதனை 'பிழையான ஒரு இஜ்திஹா'தாக உய்த்துணர்ந்துகொள்வதற்கு
நமக்குக் குறைந்தபட்சம் 1400 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.
உஸ்மான்(ரழி) அபூதர்ரிடம்(ரழி) பின்வருமாறு இயம்புகிறார்:
"முஸ்லிம் ஜனத்தொகைமீது கறாரான, கட்டுத்திட்டமான
வாழ்க்கையை - அஸ்ஸுஹுதை - வலிந்து திணித்திடும் வகையிலான சட்டங்களை எல்லாம் எப்படி
என்னால் இயற்றிக்கொண்டிருக்க முடியும்?"
இக்கூற்றைப் பாருங்கள். இந்த விவகாரம் குறித்துத்தானே
மெத்தப் படித்தவர்களும், கற்றறிந்தோரும், ஆத்மசுத்தியான முஸ்லிம்களும் இன்றளவிலும்
விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். வெறுமனே 'ஓர் வரலாற்று நிகழ்வு' என்றரீதியிலே இதனைச்
சுரத்தில்லாமல் நம்மால் கடந்து சென்றுவிட முடியாது. பற்றுறுதிகொண்ட முஸ்லிம்களின் சிந்தையையும்
கருத்தியல்களையும் நெருடிக்கொண்டிருக்கும் இது ஓர் உயிர்துடிப்புமிக்கச் சமகால நிகழ்வு;
சமகாலக் கேள்வி:
"’அஸ்-ஸுஹு’தை சட்டமாக நாம் இயற்றிடலாமா?"
இப்படியாக, அபூதர்(ரழி) அன்றைய அரசாங்கத்தால்
- மக்களால் அல்ல - ஓர் புல்லுருவியாக அடையாளப்படுத்தப்பட்டார். ஏனெனில், அவர்
எங்கு சென்றாலும் சராசரி, கீழ்த்தட்டு முஸ்லிம்கள் அவருக்கு அமோகமான ஆதரவினை நல்கினர்;
அவரது சங்கநாதத்துக்கு இயைந்தார்போல் முற்றிலும் சாதகமான எதிர்வினையையே அவர் விஷயத்தில்
ஆற்றினர். அது அரேபியாவின் மக்களாக இருந்தாலும் சரி; அஷ்-ஷாம் நகரவாசிகளாக இருந்தாலும்
சரி.
ஆனால், அரசாங்கத்தால் இப்படிப்பட்ட ஒரு நபரின் நடவடிக்கைகளை
அதற்கு மேலும் சகித்துக்கொண்டு இருக்கமுடியாத ஒரு சூழல்.
அபூதர்ருக்கு எதிராக அதிகாரபூர்வ அறிவிப்பாணை வெளியானது:
"நீ மதீனாவைவிட்டு வெளியேறிவிட வேண்டும்!!"
முதலில், மதீனாவைவிட்டு அவரை வெளியேற்றி அஷ்-ஷாம்
நகருக்கு அனுப்பிவைத்தனர். அங்கே அஷ்-ஷாமில் அவரைச் சுற்றி கத்தை கத்தையாக மக்கள்
கூட்டம் மொய்க்கத் தொடங்கியதை - அதாவது, ஓர் புரட்சிகர இயக்கம் அவரது தலைமையில் உருவெடுக்கத்
தொடங்கியதை - அதிகார வர்க்கத்தால் சகித்துக்கொள்ள இயலவில்லை. அவரைச் சுற்றிவளைத்தனர்;
மீண்டும் அவரை மதீனாவுக்கே வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்தனர்.
இவற்றையெல்லாம் நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம்.
அறுதியாக என்ன ஆயிற்று? அபூதர்ரிடம் அவர்கள் பின்வருமாறு கட்டளையிட்டார்கள்:
"அர்-ரபாதா என்ற ஓர் (அத்துவானமான) இடத்துக்கு
நீ இடம்பெயர்ந்துவிட வேண்டும்; மதீனாவில் இனிமேல் உனக்கு இடமில்லை."
அதன் பின்னர் சிற்சில நெகிழ்வானச் சம்பவங்களும்
அங்கே நடந்தேறின.
"அபூதர் மதீனாவைவிட்டு வெளியேறும்போது எவரும்
அவரைச் சென்று சந்திக்கவோ வழியனுப்பிவிட்டு வரவோ கூடாது!"
என்று அரசாங்கம் கறாராகவும் அதிகாரபூர்வமாகவும்
கட்டளை பிறப்பித்திருந்தது. அதையும் மீறி அலி(ரழி), அவரது இரண்டு மகன்களான ஹஸன்(ரழி)-ஹுஸைன்(ரழி),
அம்மார் இப்னு யாஸிர்(ரழி), அப்துல்லாஹ் இப்னு ஜாஃபர்(ரழி), அகீல்(ரழி) ஆகியோர் பிரியாவிடை
பெற்றுக்கொள்வதன் நிமித்தம் அபூதர்ரை வழியனுப்பச் சென்றனர்.
அரசாங்கத்தின் இந்த நடத்தையை ‘ஓர் இயல்பான நடத்தை’யாக
நீங்களெல்லாம் கடந்துசென்றுவிடலாம். ஆனால், யதார்த்தம் அப்படியல்ல. இஸ்லாமிய அரசாங்கம்
அன்றைய தேதியிலே ஒருவித அலாதியான மனோபாவத்தைக் கட்டமைக்கத் தொடங்கியிருந்தது. கீழ்க்கண்ட
கட்டளைக்கூட அதன் வெளிப்பாடுகளுள் ஒன்றுதான்:
"இல்லை!
அபூதர்ரை வழியனுப்பிவைப்பதற்கோ அவரது பிரியாவிடையை அங்கீகரிப்பதற்கோ உங்களில் எவருக்கும்
உரிமை இல்லை!!"
உஸ்மானின்(ரழி) அணுக்கத் தோழரும் அவரது ஆலோசகர்களுள்
ஒருவருமான மர்வான் இப்னு அல்-ஹகம், மதீனாவிலிருந்து வலிய வெளியேற்றப்படும் அபூதர்ருடன்
முஸ்லிம்ளுள் சிலர் வழித்துணையாகச் செல்வதைப் பார்க்கிறார். சற்றைக்கெல்லாம் அலியை
நோக்கி விரைந்தசென்ற அவர் பெரியதனம் மேலிடப் பின்வருமாறு இயம்புகிறார்: (மூல மொழியின்
வாக்கியத்தை இன்றைய சாமானிய வழக்கில் தருகிறோம்)
"அபூதர் மதீனாவைவிட்டு வெளியேறும்போது, பக்கபலமாகவோ
வழித்துணையாகவோ எவரும் அவருடன் செல்லக்கூடாது என்பது அமீருல் முஃமினீனின் (அதாவது உஸ்மானின்(ரழி))
அதிகாரபூர்வ அரசாணை. ஒருக்கால் உங்களுக்கு அது தெரியாமல் இருந்திருந்தால், மீண்டுமொருமுறை
அதனை நினைவுபடுத்துகிறேன்."
இதனைச் செவியுற்ற அலி(ரழி) தன்னிடமிருந்தக் கசையை
எடுத்துக்கொண்டு மர்வானை நோக்கிச் செல்கிறார்; பின்னவர் ஆரோகணித்திருந்த குதிரையை தனது
கசையால் ஒரு விளாசு விளாசிவிட்டுப் பின்வறுமாறு இரைந்து பேசுகிறார்:
"எனது வழியில் குறுக்கிடாதே!! பிறழ்வின் திசை
நோக்கிய உனது தற்போதையை பயணத்தை நீ மடைமாற்றிக்கொள்ளவில்லை எனில் அது நேராக நரகத்தின்
அதலபாதாளத்துக்கே உன்னை இட்டுச்சென்றுவிடும்."
கறாரான
கருத்து வேறுபாடுகளும், அபிப்பிராய முரண்களும் அன்றைய தேதியிலே அதீதமாகப் புழக்கத்தில்
இருந்ததைத்தான் இத்தகைய நிகழ்வுகள் எல்லாம் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. இந்தப்
பாடங்களிலிருந்தெல்லாம் படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அல்லாஹ் நமக்கு ஆயிரம்
ஆண்டுகளுக்கு மேல் கால அவகாசம் வழங்கியிருந்தும்கூட அது தொடர்பிலே நமது இயலாமையைத்தான்
இன்றளவிலும் நாம் வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறோம். இதுதான் நமது பிரச்சினை.
இத்தக்குல்லாஹ்…!!!
اتَّقُوا
اللَّهَ
".....அல்லாஹ்வின்
அதிகாரப் பிரசன்னத்தையும் உங்கள் வாழ்வில் அது ஏற்படுத்திவிடும் பாரதூர விளைவுகளையும்
கர்மசிரத்தையுடன் தவிர்ந்திருந்துகொள்ளுங்கள்....."
(அல்
குர்ஆன் 3:102)
அல்லாஹ் தனது அதிகாரப் பிரசன்னத்தை நமது வாழ்வில்
மகோன்னதமாக அரங்கேற்றியே தீருவான் என்றாலும் அரசாங்கத்தின் அல்லது அரசியல் கட்சிகளின்
அல்லது இராணுவங்களின் அதிகாரங்கள் குறித்து மட்டும்தான் நாம் பயபீதியை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறோம்!
அல்லாஹ்வின் அதிகாரம் குறித்தெல்லாம் உண்மையில் எவரும் கரிசனை கொண்டதாகவே தெரியவில்லை!
ஆம். அது ஒரு பொருட்டே அல்ல. கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் மட்டும்தான் நம்மைப்
பொறுத்தவரை ஒரு பகாசுர விஷயம்.
அல்லாஹ்வின்
வேதவரிகள் மேற்கோள் காட்டப்படுகின்றன; நபிகளாரின் சுன்னாஹ்வும்தான். ஆனால், நிஜ உலகச்
சவால்கள், அறைகூவல்கள் என்று வந்துவிட்டால் மட்டும், இஸ்லாமிய மேலங்கியை தரித்துக்கொண்டிருப்பவர்களின்
பிரக்ஞை, நடத்தை, மனோபாவம், திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து அல்லாஹ்வின் அதிகாரம் காணாமல்
போய்விடுகின்றது.
அதிகாரம், பொருளாதாரக் கொழிப்பு ஆகியவற்றின் கட்டுறுதியை
ஒருங்கு சேர்த்துக்கொண்டு அதனைத் தங்கள் நலன்களுக்கு இயைந்தார்போல் பிரயோகிக்கத் தொடங்கிய
முஸ்லிம்களையும் அவர்களை நோக்கிய ஓர் 'இஸ்லாமிய எதிர்ப்'பின் தோற்றுவாயையும்தான் இங்கு
நாம் பரிசீலித்துக்கொண்டு வருகிறோம். அதிகாரம் இருந்தும் செல்வ வளம் இல்லாதவர்களைப்
பற்றியோ செல்வ வளம் இருந்தும் அதிகாரம் இல்லாதவர்களைப் பற்றியோ நாம் அலட்டிக்கொண்டிருக்கவில்லை.
அது பிறிதொரு விவகாரம். மாறாக, அதிகாரம், செல்வ வளம் ஆகிய இரண்டின் பகாசுர செல்வாக்கை
ஒருங்கு சேர்த்துக்கொண்டவர்களைப் பற்றித்தான் இங்கே வெதும்பிக்கொண்டிருக்கிறோம். அதனைக்
கோடிட்டுக் காட்ட வேண்டியது இங்கே அவசியமாகிறது.
அதிகாரம், செல்வக் கொழிப்புக்கு இடையிலான வேற்றுமைச்
சரடை முழுவதுமாக அறுத்தெறிந்தவர்கள் இவர்கள்; தனவந்த வர்க்கத்தை அதிகார வர்க்கத்துடன்
ஒருங்கிணைத்துவிட்டவர்கள் இவர்கள். இத்தகைய முஸ்லிம்களைப் பற்றித்தான் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்.
கவனத்தைச் சிதற விட்டுவிடாதீர்கள்; மாற்றுத் திசைகளை
நோக்கி உங்களைத் திருப்பிவிடும் அளவுக்கு உங்கள் உள்ளக் கிளர்ச்சிக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்.
பட்டவர்த்தனமான, வரலாற்றுபூர்வமான அரசியல், அரசாங்கத் தவறுகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.
ஒருதலைப்பட்சம் அற்ற நிலையிலும், ஏகபோகம் கோரிடாத நிலையிலும் இந்த விவகாரங்களையெல்லாம்
அணுகிடுவதற்கு நமக்கு அல்லாஹ்வின் 'தக்வா' தேவை. ஏனெனில், ஏதோ ஒரு குறிப்பிட்ட
உட்பிரிவுக்கோ அதுசார்ந்த சமய மரபுக்கோ சொந்தமானவை என்ற ரீதியில்தான் இத்தகைய விவகாரங்களை
எல்லாம் இதுகாறும் நாம் அணுகிக்கொண்டிருக்கிறோம்.
இந்த
நிர்ப்பந்த வரையறையிலிருந்து ஒருகணம் வெளியே வந்து இத்தகைய வரலாற்றுப் பாடங்களை நம்மால்
கற்றுணர்ந்துகொள்ள முடியாதா என்ன? அப்படிச் செய்வதன்மூலம் - உட்பிரிவுகள், கருத்து
வேறுபாடுகள், குறுங்குழுவாதங்கள் முதலியவற்றையெல்லாம் கடந்து - அனைத்து முஸ்லிம்களும்
ஒருசேர படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அது அடிகோலுவதாக அமையக்கூடும். அதை விட்டுவிட்டு
வரலாற்றின் ஒட்டுமொத்தக் காப்புரிமையும் தங்களுக்கே சொந்தம் என்று ஒருசாராரும் வரலாற்றுக்கும்
தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று பிறிதொரு சாராரும் இருதுருவ நிலைப்பாட்டில்
சுறட்டர்களாக இருப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்?!
இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமா? 'ஷியா'
முஸ்லிம்களை ஒருபுறத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். நாம் இதுவரைப் பார்த்துவந்த விவகாரங்களைப்
பொறுத்தவரை, அதுசார்ந்த வரலாற்றின் ஒட்டுமொத்தக் காப்புரிமையையும் பற்றியிழுத்து தங்களுடையதாக
இவர்கள் ஆக்கிக்கொள்கின்றனர். இவை தொடர்பில், மற்றவர்களுக்குச் செவிசாய்ப்பதற்கெல்லாம்
இவர்கள் கிஞ்சிற்றும் இடம் தருவதில்லை. ஏனெனில், வரலாற்று உண்மைகள் மீதான ஏகபோக உரிமைக்குச்
சொந்தக்காரர்கள் தாங்கள் மட்டும்தான் என்பது இவர்களின் விடாப்பிடியான நிலைப்பாடு. வரலாற்று
நியாயங்கள், அதன் காரணகாரியங்கள், வரலாற்று ஆளுமைகள், தனிநபர்கள், இஸ்லாத்தின் சமகால
நெகிழ்வுத்தன்மை, சகிப்புத்தன்மை, இஸ்லாமிய சகோதரத்துவம் ஆகிய கூறுகளை இவர்களின் இந்நிலைப்பாடு
முற்றிலுமாகப் பாழ்படுத்திவிடுகிறது. இது ஒரு சரியான அணுகுமுறை அல்ல!!
எதிர்சாரிக்கு வாருங்கள் இப்பொழுது. வரலாற்றுக்கும்
தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று விதிர்விதிர்த்துக்கொண்டிருக்கும் 'சுன்னி'
முஸ்லிம்களை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கும் முன்புபோலவே நாம் தெளிவாக இருப்போம். ஒட்டுமொத்த
வரலாற்று நிகழ்வுகளிலிருந்தும் வெருண்டோடிக்கொண்டே இருப்பவர்கள்தான் இந்த 'சுன்னி'
முஸ்லிம்கள். கேட்டால், "இவற்றுக்கெல்லாம் எதற்காக இப்பொழுது முக்கியத்துவம்
கொடுக்கிறீர்கள்? இவைகளெல்லாம் நம்மை பிளவுபடுத்திவிடும்!" என்கிற வறட்டு
நியாயப்பாடுகளை முன்னிறுத்துகின்றனர். வரலாற்று விவகாரங்களைக் கையாளும் விஷயத்தில்,
இதுவும்கூட ஒரு சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது!
'இவைகளெல்லாம் நம்மைப் பிளவுபடுத்திவிடும்' என்றால்,
எதைவைத்து, எப்படி பிளவுபடுத்தும்? சொல்லுங்கள். பிளவுபடுத்துவதற்கு அவற்றுள் என்ன
இருக்கிறது? நமது வரலாற்றுத் தவறுகளை, பிறழ்வுகளை ஆத்மசுத்தியுடன் அணுகி அவற்றிலிருந்து
பாடங்கள் கற்றுக்கொள்ள முயன்றால், அதனை எப்படி பிளவுக்கு இட்டுச்செல்லும் ஒரு சமாச்சாரமாக
நீங்கள் கருதிக்கொள்வீர்கள்?! ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அடிகோலிவிடும் விவகாரங்களே
அன்றி அவையொன்றும் பிரிவினைக்கு இட்டுச்செல்லும் விவகாரங்கள் அல்ல.
இந்தப் பட்டியலில் உள்ளடங்குவதுதான் கர்பலாவின் துயரச் சம்பவமும். அதிகார, பொருளாதார
வலிவின் துஷ்பிரயோகத்தை அதன் முளையிலேயே, அதாவது உஸ்மானின்(ரழி) ஆட்சிக்காலத்திலேயே
எவராலும் இனங்கண்டுகொள்ள இயலவில்லை எனில், குறைந்தபட்சம் அத்தகைய துஷ்பிரயோகத்தின்
வியாபகத்தை அவர்கள் இமாம் ஹுஸைனின்(ரழி) காலகட்டத்திலாவது துலக்கமாக இனங்கண்டுகொள்ள
வேண்டும்.
என்ன நடந்தது அங்கே? அதிகாரம், செல்வக் கொழிப்பின்
ஒருங்கிணைந்தக் கலவை வெளிப்படுத்திய 'கோர சம்ஹாரம்' அது.
உமய்யா பரம்பரையினரின் ஆட்சி! அது ஒரு
முடியாட்சி! அந்த முடியாட்சி என்ன செய்தது? இரத்தம் தோய்ந்த வரலாற்றுப் பக்கங்களுக்கு
ஆருடம் கூறிய ஒரு மாபாதகச் செயலை அங்கே நிர்ச்சலனமாக அது அரங்கேற்றியது.
உமய்யாக்களின் இந்த
ஆட்சி ஓர் மன்னராட்சி!, முடியாட்சி!. அதனைக் கிலாஃபத் என்று அழைத்துவிடக் கூடாது.
ஹாஸ்யமான விஷயம் யாதெனில், சுன்னி, ஷியா ஆகிய இரண்டு தரப்பினருமே இந்த உமய்யா
முடியாட்சியை 'கிலாஃபத்' என்றுதான் இதுகாறும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இது எதைச் சுட்டுகிறது? மரபுகளால் கபளீகரம் செய்யப்பட்டு, 'மார்க்க'மாக காலக்கிரமத்தில் உருப்பெற்று வந்திருக்கும் நமது வரலாற்றை இந்த இரண்டு
தரப்பு முஸ்லிம்களுமே இன்னமும் முறையாக அணுகிடவில்லை; அதற்கான முதிர்ச்சியை அவர்கள்
பெற்றிருக்கவில்லை. உமய்யாக்களின் ஆட்சி ஓர் கிலாஃபத்தோ இமாரத்தோ
இமாமத்தோ அல்ல; அது ஒரு முலூக்கிய்யா (மன்னராட்சி)!, முடியாட்சி!
கர்பலாவில் நடந்தது
என்ன? உண்மையை உரக்கப் பேசும் ஒரு மனிதருக்கு எதிராக, இன்னும் சொல்லப்போனால், அந்த
உண்மையை உரைகல்லாகக் கொண்டு அதிகாரம், பொருளாதார வலிவை ஒருங்கு சேர்த்துக்கொண்டவர்களை
எதிர்த்து நிற்கும் ஒருவருக்கு எதிராக அதே அதிகாரமும் செல்வக் கொழிப்பும் கர்பலாவில்
கைக்கோத்துக்கொள்கின்றன. அல்லாஹ்வின் வார்த்தைகளான குர்ஆனையும் அவனுடைய தூதரின் மரபுகளான
சுன்னாஹ்வையும் ஆரோக்கியமான, திறந்த மனத்துடன் அணுகிடும் எவரும் இவ்வுண்மையை
லகுவாகப் புரிந்துகொண்டுவிடலாம்.
இதுகுறித்த உங்கள் பார்வையும் அணுகுமுறையும் எப்படி
வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கரிசனை இல்லை.
நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், உங்கள் மரபுசார்ந்த, வரலாற்றுப் பின்னணி என்ன
என்பது குறித்தெல்லாம் எனக்குக் கரிசனை இல்லை. அதிகாரம், செல்வக் கொழிப்பின் ஒருங்கிணைந்தக்
கலவை, கொண்ட கொள்கையில் பற்றுதலுடன் நிலைத்திருப்பவர்களை எப்படியெல்லாம் சிரமப்படுத்தும்
என்பதை உங்கள் கருவிழிகளால் பார்ப்பதுபோன்று இந்தச் சம்பவத்தினூடாக நீங்கள் பிரத்தியட்சமாகக்
கண்டுணர்ந்துகொள்ள வேண்டும். நான் உத்தேசிப்பது அதை மட்டும்தான்.
"இது தோல்வியை நோக்கிய ஒரு பாதை. அப்படியிருக்க
நான் எதற்காக இதிலே பயணிக்க வேண்டும்? இது தற்கொலைக்குச் சமானமாகும்!!" என்று
இமாம் ஹுஸைனால்(ரழி) தனது பொருப்பினை இலகுவாகத் தட்டிக்கழித்திருக்க முடியுமே. இன்றைய
சிந்தைக்குள் அப்படித்தானே முகிழ்க்கிறது எண்ணங்கள், 'இத்தகைய நடவடிக்கைகளெல்லாம்
தற்கொலைக்குச் சமதையானது!' என்பதாக.
இல்லை. இது தற்கொலை இல்லை! வேறு எந்தவித மாற்றீட்டு
வழிமுறைகளும் எஞ்சியிருக்காத நிலையில், கொள்கைச் சமரசமற்ற ஒரு ஹோதா இது. இதனால்
ஒரு விஷயம் மட்டும் இங்கே அப்பட்டமாக நமக்குப் புலப்படுகின்றது. அரசாங்க, இராணுவ நிறுவனங்களும்
பொருளாதார, செல்வக் கொழிப்பும் இரண்டறக் கலந்துகொண்டு தங்கள் வக்கிர முகங்களை எங்ஙனம்
வெளிக்காட்டிவந்தன; அவற்றால் ஏற்பட்ட அகோர விளைவுகள் என்னென்ன என்பதையெல்லாம் பறைசாற்றிடும்
ஓர் வரலாற்றை எப்படி முஸ்லிம்களாகிய நாம் இத்துணைக் காலமும் அசட்டை செய்துவந்திருக்கிறோம் என்பதுதான்
அது.
கர்பலாவின் குரூர
தாண்டவம் நிகழ்ந்துமுடிந்து சற்றொப்ப இரண்டு ஆண்டுகளே கழிந்திருக்கும். யஸீத் இப்னு
முஆவியாவின் - முஆவியாவின் மகன் யஸீதின் - பட்டாளம் மதீனா நகருக்குள் அத்துமீறி பிரவேசிக்கின்றது.
உள்நுழைந்த அதன் படைவீரர்கள் தங்கள் கைவரிசைகளை எல்லாம் அங்கே தான்தோன்றித்தனமாக அரங்கேற்றுகின்றனர்.
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இஸ்லாமிய அரசின் முதல் தலைநகரமாகும் இது. இந்த முதல்
இஸ்லாமிய தலைநகரத்தின் ஒவ்வொரு கஜ தூரமும் யஸீதின் பட்டாளத்தால் சுரண்டிச் சூறையாடப்படுகின்றன.
ஆயுதம் தரித்திருந்த யஸீதின் படைவீரர்கள் மதீனத்து மக்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள்
என்ற விவரங்களை எல்லாம் இங்கு எடுத்தியம்பிட நான் விரும்பவில்லை.
ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே கூறிக்கொள்ள விளைகிறேன்.
இஸ்லாம் அல்லாத, இஸ்லாத்துக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதச் சமகால இராணுவங்கள்
எத்தகைய ஈனச்செயல்களில் ஈடுபடுமோ அவை அனைத்துலுமே யஸீதின் இராணுவமும் ஈடுபட்டது.
சமகால இராணுவங்கள் ஏதேனும் ஒரு நிலப்பகுதிக்குள்,
பிரதேசங்களுக்குள் படையெடுத்துச் சென்றால் அங்கே எப்படி நடந்துகொள்வார்கள்? தங்கள்
பாட்டன் வீட்டுச் சொத்தைப் போன்று அந்நிலப்பரப்பை அவர்கள் சர்வ உரிமையுடன் சீரழிப்பார்கள்.
இளந்தளிர்களை, குழந்தைகளைக் கொலை செய்வார்கள்; பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்குவார்கள்;
வீடுகளைத் தீக்கிரையாக்குவார்கள்; உடைமைகளைச் சூறையாடுவார்கள்; மானுட உறைவிடத்தையே
மொத்தத்தில் அவர்கள் அகோர நாசத்துக்கு உள்ளாக்கிவிடுவார்கள். யஸீதின் இராணுவம் மதீனாவினுள்
அரங்கேற்றியதும் இத்தகைய இழிசெயல்களைத்தான்.
இப்பொழுது கூறுங்கள்! இதெல்லாம் என்ன? ‘இஸ்லாமிய
பட்டாளம்’ ஒன்றின் லட்சணமா இவைகளெல்லாம்? இத்தகைய வக்கிர செயல்களை எல்லாம் அல்லாஹ்வின்
வேதத்தைக் கொண்டும் அவனுடைய தூதரின் வழிகாட்டல்களைக் கொண்டும் எப்படி இவர்கள் நியாயப்படுத்திடுவார்கள்?
இவற்றுக்கான முகாந்திரமெல்லாம் எங்கிருந்து இவர்களுக்குக் கிடைத்தது?
இல்லை. இவற்றுக்கெல்லாம் எவ்வித முகாந்திரமும் இல்லை.
எனினும், எவராலும் மறுக்கவியலாத வரலாற்றின் ஒரு பகுதி என்றரீதியிலே இவற்றை எல்லாம்
வெளிக்கொணர்ந்திட ஏன் நம்மால் இயலவில்லை. வரலாற்றில் வேரூன்றியிருப்பது இருப்பதுதான்;
அவற்றை யாராலும் மாற்றிவிட முடியாது. பிறகு ஏன் நம்மால் வெளிப்படையாகவும் புறவயமாகவும்
அவற்றை மக்கள் மன்றத்திலே சமர்ப்பித்திட இயலவில்லை?
இவற்றைச் செவிமடுத்துக்கொண்டிருக்கும் நீங்கள் உங்களைத்
துவேஷ உணர்வுக்குளே சிக்கவைத்துவிடாதீர்கள்; உள்ளக் கிளர்ச்சிக்கு ஆட்பட்டுவிடாதீர்கள்.
ஏனெனில், அப்படிச் செய்வது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல், வரலாற்று நியாயங்களை
ஒட்டுமொத்தமாகப் பூசிமெழுகி விடுவதற்குச் சமதையாகிவிடும்.
இந்த வரலாற்று முட்டுப்பாடுகளை எல்லாம் இன்னமும்
நாம் கடந்துவரவில்லை. சமகால ஈராக்கின் கூஃபா நகரிலும்கூட இன்னோரன்ன வேறு பல
கிளர்ச்சிகள், அன்றைய தேதியிலே இஸ்லாத்தின் முதல் முடியாட்சிக்கு எதிராகக் கனன்றெழும்பத்தான்
செய்தன. அதிகாரமும் செல்வக் கொழிப்பும் ஒருகிணைந்துகொண்டால் அவை எத்தகைய விளைவுகளை
ஏற்படுத்திவிடும் என்பதற்கான நிர்மலமான உதாரணங்களே இவைகளெல்லாம்.
ஆனால்,
குர்ஆன், சுன்னாஹ்வின் அனைத்துக் கொள்கைகள், தரநிர்ணயங்கள், பெறுமானங்களின்
அப்பட்டமான மீறல் என்றரீதியிலே இந்தத் தலைப்புகளை எல்லாம் இன்றுவரையில் முஸ்லிம்களால்
கூர்நோக்குடன் அணுகிட இயலவில்லை.
அப்படி
அணுகுவதற்கும் அவர்கள் தயாராக இல்லை!!
ஃகுத்பாவின் உபரித் தகவல்கள்:
பற்றுறுதியையும்
கொள்கையையும் நீதியையும் இறுகப் பற்றிக்கொண்டுள்ளச் சகோதர, சகோதரிகளே!
நமது
வரலாற்று நடத்தையிலிருந்து பாடங்கள் பெற்றுக்கொள்வதினூடாக நம்மை நாமே சீர்திருத்திக்கொள்வது
கடினமான காரியமா அல்லது நமது சமகால நடத்தையிலிருந்து பாடங்கள் பெற்றுக்கொள்வதினூடாக
நம்மை நாமே செறிவூட்டிக்கொள்வது கடினமான காரியமா. இவற்றில் எது கடினமானது?
மு'ஆவியா,
யஸீத், ஹிஷாம் இப்னு அப்துல் மாலிக், பனி அப்பாஸ் முதலானோரின் முடியாட்சிகளுக்கு எதிராகச்
'சத்தியக் கலக'த்தில் ஈடுபட்டவர்கள் வரலாற்று மாக்கடலுக்குள் அமிழ்த்தப்பட்டுவிட்டனர்.
ஹிஷாம் இப்னு அப்துல் மாலிக்கோ அவரது இராணுவமோ இமாம் ஸைதைக் கொன்று கழுவேற்றிய அந்தத்
துஷ்டனோ இப்பொழுது மீண்டும் அவதரிக்கப்போவதில்லை. இவர்கள் எல்லாம் என்றைக்கோ மாண்டுவிட்டனர்.
இவர்களுக்கே
உரித்தான சரியான வரலாற்றுச் சூழமைவில் வைத்து இவர்களின் வாழ்க்கையை இப்பொழுது விவரணைசெய்வதனால்
துரிதமான ஆபத்தொன்றும் இங்கே நிகழ்ந்துவிடப்போவதில்லை. அதாவது, இஸ்லாத்துக்கு முரணான
இவர்களின் அதிகாரபூர்வ கொள்கைகளையெல்லாம் இங்கே எடுத்தியம்பிடுவதால் சவக்குழியிலிருந்து
உயிர்பெற்றுவந்து உங்களையும் என்னையும் இவர்கள் ஒன்றும் கொன்றுவிடப்போவதில்லை. அப்படி
எதுவும் நடந்துவிடாது.
பூமிக்கு
ஆறடிக்குக் கீழுள்ள தங்கள் உறைவிடத்தில் சற்றொப்ப 1300 ஆண்டுகளாக இவர்கள் எல்லாம் அடங்கிக்கிடக்க,
இவர்களின் வாயிலாக எவ்வித ஆபத்தும் நம்மை அண்டப்போவதில்லை என்பது தெரிந்திருந்தும்கூட,
குர்ஆன், சுன்னாஹ்வை உரைகல்லாகக் கொண்டு இத்தகையவர்களை மதிப்பீடுசெய்யும் அளவுக்குள்ள
முதிர்ச்சி பெற்ற முஸ்லிம்கள் ஏன் இதுகாறும் நம்மத்தியில் முகிழ்த்திடவில்லை?
அப்படிச்
செய்வதில் என்ன பிரச்சினை? ஏன் நம்மால் அப்படிச் செய்ய இயலவில்லை?
அதிகாரம், செல்வச் செழிப்பை ஒருங்கிணைத்துக்கொண்டு பசிஃபிக்
மாக்கடலிலிருந்து அட்லாண்டிக் மாக்கடல்வரை டாம்பீகத்துடன் கோலோச்சிக்கொண்டிருக்கும்
அதிகார வர்க்கங்கள் குறித்து சில முஸ்லிம்களால் இன்று வாய்திறக்க முடியவில்லை என்றால்
அதன் காரணத்தை நம்மால் ஊகித்துக்கொள்ள முடிகிறது. தங்கள் இஸ்லாமிய ஒருங்கு திரள்களில்
மருந்துக்குக்கூட இத்தகைய விவகாரங்களை எல்லாம் இவர்கள் இணைத்துக்கொள்ள மாட்டார்கள்.
எதற்காக இந்தக் கிலி? யாரைக் கண்டு இவர்கள் அச்சப்படுகிறார்கள்?
"இல்லை,
இல்லை. எகிப்தின் ஜனாதிபதி குறித்தோ சவூதி அரேபியாவின் தடபுடல் மன்னர் குறித்தோ மேற்குலகக்
களியாட்டத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் அதே ராஜ்ஜியத்தின் இளவரசர்கள் குறித்தோ
நாங்கள்
விமர்சிக்கத் துவங்கிவிட்டால் எங்கள்மீது
அவர்கள் நடவடிக்கை எடுத்துவிடக்கூடும்!"
இதுதான்
இவர்கள் முன்வைக்கிற சப்பைக்கட்டு!
நான்
கேட்கிறேன். விஞ்சு விஞ்சுப்போனால் அவர்கள் என்ன செய்துவிடுவார்கள் உங்களை? ஒரு சாமானியனாக
இருக்கும் உங்களை உச்சபட்சமாக அவர்கள் கொலை செய்வார்கள், அப்படித்தானே? ஆம். அவர்கள்
அதைத்தான் செய்வார்கள். அதற்கு மேல் ஒரு சாமானியன் என்றரீதியிலே இப்பூவுலகில் உங்களால்
வாழ முடியாது. அதையும் மீறி உங்கள் இருப்பை இங்கே நீங்கள் தக்கவைத்துக்கொண்டீர்கள்
எனில், வேறுபல வழிகளில் உங்களை அவர்கள் முடக்கப் பார்ப்பார்கள்.
சாமானியன்
என்ற அந்தஸ்தில் தூரதேச, அயல்நாட்டுப் பணிகளுக்காக நீங்கள் விண்ணப்பித்திருந்தால் அதற்கான
அனுமதியோ உதவி-உபகரணங்களோ உத்தரவாதச் சான்றிதழோ உங்களை வந்தடைந்திடாது; நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள்.
இவை தவிர கொலை மிரட்டல்கள், தரம் தாழ்ந்த விமர்சனங்கள், அவதூறுகள், துவேஷப் பரப்புரைகள்..
இத்யாதி.
எதிர்பார்த்ததுதானே
இவைகளெல்லாமும். இம்மாதிரியான சப்பைக்கட்டுகளை முன்வைத்துக்கொண்டு அதிகாரத்தின் முகத்தில்
உண்மையை உரக்கப் பேச இயலாத மனோபாவத்தையெல்லாம் ஒருபோதும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது;
எனினும், அதற்கான காரணத்தை நம்மால் நிச்சயம் விளங்கிக்கொள்ள முடியும். உலகிலுள்ள
அனைத்து முஸ்லிம் பிராந்தியங்களையும் ஒருகணம் நீங்கள் சல்லடைப் போட்டுச் சலித்துப்
பாருங்கள். அதிலே, அதிகாரம், பொருளாதார வலிமையின் 'ஒருங்கு சேர்த்தல்' விஷயத்தில் குர்ஆன்,
சுன்னாஹ்வின் பெறுமானங்கள், வரையறைகளைப் பிரக்ஞையுடன் பேணிக்கொண்டுவரும் எந்தஒரு
முஸ்லிம் ஆட்சியாளரையாவது உங்களால் இனங்காட்டிவிட முடியுமா?
முடியாது!!
ஏன்? எவ்வாறு இந்த அரசாங்கங்கள் எல்லாம் இன்று எவ்வித இடையூறுகளும் இன்றி ஆசுவாசமாகப்
பரிபாலனம் செய்துகொண்டிருக்கின்றன?
தோராயமாக
இப்பூவுலகின் ஒரே ஒரு பகுதியில் மட்டும்தான் - குர்ஆன், சுன்னாஹ் குறித்த -
இந்தப் பிரக்ஞை ஒருகாலத்திலே உயிரோட்டத்துடன் பரிமளித்துக்கொண்டிருந்தது. அந்த இடத்தை
பரிபாலித்துவரும் இன்றைய ஆட்சியாளர்களின் தறிகெட்ட நடத்தையைக்கூட குர்ஆன், சுன்னாஹ்வின்
ஒளியில் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. அதைவிட, அப்படிக் கண்டுகொள்ளும்
அளவுக்குள்ள முதிர்ச்சி, 1400 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நமக்கு வாய்க்கப்பெறவில்லை.
இஸ்லாமிய
நாடுகளில் தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள், அரசாங்கள் எல்லாம் அதிகாரம்,
செல்வக் கொழிப்பின் ஒருங்கிணைந்தச் செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்துவருவதோடு, தங்கள்
சொந்த நலன்களுக்காக அவற்றை மிதமிஞ்சியரீதியிலே சேகரித்தும் வைத்துவிட்டனர்; முஸ்லிம்களுக்கு
- சாமானியர்களுக்கு - சொந்தமான அளப்பரிய பொருளாதார வளம் இவர்களின் கஜானாக்களை இன்று
விருத்திசெய்து விட்டிருக்கிறது. இதனாலேயே இவர்களை விமர்சிப்பதென்பது நமக்கோர் இன்றியமையாதத்
தேவையாக மாறிப்போய்விட்டது.
அல்லாஹ்வின்
வார்த்தைகளைக் கொண்டும் அவனுடைய தூதரின் வழிகாட்டலைக் கொண்டும் ஏகதேசம் ஒரு முழு வாழ்நாளையே
கழித்துவந்திருக்கும் வினயமான ஒரு இறைஅடியான் என்ற ஹோதாவில் கீழ்க்கண்ட வார்த்தைகளை
உங்கள்முன் இயம்புகிறேன்:
"அதிகாரத்தையும்
அபரிமிதச் செல்வக் கொழிப்பையும் ஒருங்கு சேர்த்துக்கொண்டவர்கள் முஸ்லிம்களைப் பரிபாலனம்
செய்வதற்குத் தகுதி அற்றவர்கள்!!"
இந்த
வாக்கியத்தைக் கிரகித்துக்கொள்வதினூடாக உங்கள் 'சுன்னியிஸ'த்தையும் 'ஷியாயிஸ'த்தையும்
இன்னபிற உட்பிரிவுவாதங்களையும் நீங்கள் தகர்த்தெரிய முயற்சிசெய்யுங்கள். அப்படிச் செய்வதன்மூலம்
அல்லாஹ்வின், அவனுடைய தூதரின் எதிர்பார்ப்புகளுக்கு இயைந்தார்போல் உங்களை நீங்களே மீட்டுருவாக்கம்
செய்துகொள்ள முடியும்; நம்மைத் தீக்கிரையாக்கிக்கொண்டிருக்கும் சமகால விவகாரங்கள் குறித்து
அப்பொழுது உங்களால் திண்ணமாக வாய்திறந்துப் பேசிட இயலும்.
நம்மிடையே
பிறழ்வுகளும் இடைவெளிகளும் இன்று அதீத அளவில் வியாபகம் பெற்றுவிட்டன. இந்த விரிசல்களினூடாகத்தான்
நமது வரலாற்று, சமகால எதிரிகள் தங்கள் திருகுதாளங்களை எல்லாம் நாசூக்காக இடைச்செருகிக்கொண்டிருக்கின்றனர்.
காரணம்? 'இஸ்லாமிய சுய-நிர்ணய உரிமை'யின் மீளெழுச்சியை எக்காரணத்தைக் கொண்டும் நமது
இந்த தலைமுறையிலும் சரி காலத்திலும் சரி நாம் வாழ்ந்தனுபவித்துவிடக் கூடாது! 'இஸ்லாமிய
சுய-நிர்ணய உரிமை' என்று இங்கே பிரஸ்தாபித்திருப்பது யதார்த்தத்தில் தளைகள் அனைத்திலிருந்தும்
விடுபட்ட சம்பூர்ணமான, முழுமையான ஒரு சுய-நிர்ணய உரிமையே அன்றி வேறில்லை.
ஆக, இந்த
விவகாரங்கள் குறித்தெல்லாம் அநேகமான மக்கள் இன்று வாய்திறப்பதே கிடையாது. ஒவ்வொருவரும்
அவரவருக்கே உரித்தான சால்ஜாப்புகளில் தன்னிறைவு கொண்டிருக்கின்றனர். இத்தகைய விவகாரங்களில்
எல்லாம் தலையிடாமல் இருப்பதற்கு அவர்கள் முன்வைக்கும் வியாக்கியானங்களைக் கேட்கணுமே!
"'அத்-தாகூத்'
குறித்தெல்லாம் நீங்கள் ஏன் வாய்திறப்பது கிடையாது?" என்று
இவர்களிடம் நீங்கள் கேட்டுப் பாருங்களேன். உங்கள் வாயை அடைப்பதற்கென்றே ஒவ்வொருவரும்
- அவரவருக்கே உரித்தான - தர்க்கரீதியான மறுமொழிகளைத் தயார் நிலையில் வைத்திருப்பர்.
'அத்-தாகூத்' என்பது
அதிகாரம், செல்வக் கொழிப்பைக் குவிமையமாகக் கொண்ட ஒரு குர்ஆனிய சொல்லாக்கம். அதைப்
பற்றியெல்லாம் ஏன் நீங்கள் பேசுவது கிடையாது?
'அழ்-ழுல்ம்' குறித்தெல்லாம்
ஏன் நீங்கள் பேசுவது கிடையாது? அதிகாரம், செல்வக் கொழிப்பைத் தொடர்புபடுத்தும் இஸ்லாமிய,
குர்ஆனிய, நபிமொழிசார்ந்த ஒரு பதம்தானே இதுவும்.
அல்-முஸ்தழாஃபீன்,
அல்-முஸ்தக்பிரீன் குறித்தெல்லாம் ஏன் நீங்கள் பேசுவது கிடையாது? இவை
எல்லாமும் அதிகாரம், செல்வ வளப்பத்தின் ஒருங்கிணைந்த தீவினைகளை வள்ளிசாக வெளிச்சம்போட்டுக்
காட்டக்கூடிய குர்ஆனிய எண்ணக்கருக்கள், கருத்தாடல்கள்!
ஏன் யாரும்
வாய்திறப்பதில்லை? எங்கே எல்லோரும்? எங்கு சென்று மறைந்துவிட்டார்கள் முஸ்லிம்கள்
அனைவரும்? சடங்கு சம்பிரதாயங்களின் முகமூடியை அணிந்துகொண்டிருக்கும் மேட்டிமைவாத, அதிகார
வர்க்க 'முஸ்லிம்க'ளின் கிடுக்கிப் பிடிக்குள் அரேபிய தீபகற்பம் இன்று சிக்குண்டுக்
கிடக்கிறது. இப்பூவுலகு நெடுகிலும் இவர்களால் பணியமர்த்தப்பட்டிருக்கும், இவர்களின்
'ரொக்கப் பட்டிய'லில் அங்கம் வகித்துவரும் முஸ்லிம்கள் சிலரின் அசமந்த நிலைப்பாட்டை
நிச்சயம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. வாளாவிருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு
வழியே கிடையாது.
இந்த அதிகார வர்க்க 'முஸ்லிம்கள்' சடங்கு சாங்கியங்களின்
மேலங்கியைத் தரித்துக்கொண்டு தங்கள் சர்வாங்கத்தை வேண்டுமானால் மறைத்துக்கொள்ளலாம்.
ஆனால், தங்கள் அதிகாரபூர்வ கொள்கைகளிலும் சரி பூடகமான தங்கள் வியூகங்களிலும் சரி அல்லாஹ்,
அவனுடைய தூதர் ஆகியோரைத் தவிர மற்ற எல்லோருக்கும் தங்கள் நம்பிக்கையை, விசுவாசத்தை,
ஒத்துப்பாடலை இவர்கள் காணிக்கை ஆக்கிக்கொண்டுதான் வருகின்றனர். இவர்களின் இந்த மறுபக்கம்
- நிஜப்பக்கம் - ஒருபோதும் நம் பார்வையிலிருந்து தப்பிச்சென்றுவிடாது.
இவை அனைத்துமே அன்றாடத்தில் நாம் கடந்துவரும் பட்டவர்த்தனமான
உண்மைகள்! இருப்பினும் இவற்றையெல்லாம் உங்களால் அவதானிக்க முடியவில்லையே ஏன்? ஏனெனில்,
இஸ்லாத்தைப் பதிலீடு செய்திருக்கும் '1400 ஆண்டுகால மரபுக'ளின் சவக்குழிக்குள் நாமெல்லாம்
புதைக்கப்பட்டிருக்கிறோம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எந்தச் சமபந்தமும்
இல்லாத உள்ளூர், வட்டாரக் கலாச்சாரங்கள், பெறுமானங்களை இஸ்லாத்தின் பெயரால் உயர்த்திப்பிடித்துக்கொண்டும்
அவற்றையே நமது பிரத்தியேக அடையாளமாக முன்னிறுத்திக்கொண்டும் வருகிறோம்.
பெருநீளத் துயிலிலிருந்து நாமெல்லாம் விழித்தெழுந்து
துல்லியமாகவும் புறவயமாகவும் சுயநலன் கருதாமலும் இத்தகைய விவகாரங்களை எல்லாம் வலியுறுத்திக்
கூறுவதற்கு இன்னும் எத்துணைக் காலம் பிடிக்குமோ எவ்வளவு தொலைவு செல்ல வேண்டியிருக்குமோ
தெரியவில்லை.
இந்த 'எத்துணைக் காலம்? எவ்வளவு தொலைவு?' என்கிற
கேள்விகளுக்கான விடைகள் குறித்த பேதமை, அவற்றுள் பொதிந்திருக்கும் யதார்த்தத்தை நோக்கிய
நமது வைராக்கியத்தை ஒருபோதும் மடைமாற்றிவிடப் போவதில்லை.
ஒருபோதும்!!
"அபூதர்
மீது அல்லாஹ் காருண்யம் காட்டுவானாக!
அவரது
வாழ்வியக்கம் தனிமையில்
அவரது
மரணம் தனிமையில்
(மறுமைநாளில்)
அவர் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதும் தனிமையில்!"
-நபி (ஸல்)
"எங்கள்
இறைவனே! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்; நீ எங்க(பாவங்க)ளை மன்னித்து
எங்கள்மீது உனது கருணையின் இறக்கையை கவியச்செய்யவில்லை எனில், இருண்மையில் தொலைந்துபோய்விட்ட
நஷ்டவாளிகள் பட்டாளத்தில் நாங்களும் - இன்றியமையாத
வகையில் - சரண்புகுந்துவிடுவோம்."
(அல் குர்ஆன் 7:23)
கட்டுரை நிறைவடைந்தது!