Sunday, October 25, 2020

சுயவழிபாடு என்னும் இணைவைப்பு!

 சுயவழிபாடு என்னும் இணைவைப்பு!

பொருளாதாரம், சொத்துசுகங்கள், மெய்மறதிவாழ்வு அதன் விக்கிரகங்கள்!

தொகுப்பு: அபூதர்


தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவைக் கொண்டுதான் தாம் செல்வத்தைச் சம்பாதித்தோம் என்று பலர் எண்ணுகிறார்கள். காறூனும் இவ்வாறுதான் கூறினான்: இச்செல்வங்கள் அனைத்தும் என் அறிவால்தான் எனக்குக் கிடைத்துள்ளன. (28:78)’

ஒரு பேச்சுக்கு உங்களை மிகத் திறமையானவர் என்றும் உங்களின் வியக்கத்தக்க திறமையின் மூலம் செல்வங்கள் பலவற்றை நீங்கள் சேகரித்துவிட்டீர்கள் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு இந்தத் திறமையை வழங்கியவன் யார்? இந்த ஆற்றலைக் கொண்டு உங்களைச் சிறப்பித்தவன் யார்?

உங்களிடம் இருக்கின்ற யாவற்றையும் அல்லாஹ்வின் பக்கம் இணைப்பதே சரியானது. ஏழையாக இருந்த நம்பிக்கையாளன் செல்வச்செருக்கு கொண்ட தன் நண்பனுக்கு இதைத்தான் தெளிவுபடுத்தினான்.

நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது, அல்லாஹ் நாடியவையே நடக்கும், அல்லாஹ்வையன்றி யாரிடத்திலும் எவ்வித ஆற்றலும் இல்லை என்று ஏன் கூறவில்லை? நான் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாக நீ கருதினால் என் இறைவன் உன் தோட்டத்தைவிடச் சிறந்த ஒன்றை எனக்கு வழங்கலாம். வானத்திலிருந்து ஆபத்தை இறக்கி உன் தோட்டத்தை வெட்டவெளியாக்கிவிடலாம் அல்லது நீங்கள் பெற முடியாதபடி தண்ணீர் வற்றிவிடலாம்.’ (18:39,40)

அவன் எதிர்பார்த்ததே நிகழ்ந்தது. வானத்திலிருந்து இறங்கிய ஆபத்து அவன் தோட்டத்தை ஒன்றுமில்லாத வெட்டவெளியாக்கிவிட்டது. அவன் வெட்கப்பட்டு வருத்தத்துடன் கூறலானான்: அந்தோ, நான் என் இறைவனுக்கு இணைவைக்காமல் இருந்திருக்கக் கூடாதா! அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு உதவிபுரியும் கூட்டத்தார் யாரும் இருக்கவில்லை. தானே பழிவாங்கக்கூடியவனாகவும் அவன் இல்லை. (18:42,43)’ 

இவன் அல்லாஹ்வுக்கு இணையாக யாரை ஆக்கினான்? தன்னை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக்கொண்டான். தன் மனஇச்சையைக் கடவுளாக்கி வழிபட்டுவந்தான்.

பொதுவாக மனிதன் தன் நலனில் பெரும் அக்கறை கொண்டவன். தன் தேவையை நிறைவேற்றுவதற்காக ஓடக்கூடியவன். ஆனாலும் இந்த ஓட்டம் அவனது வெளியைச் சுருக்கிவிடுகிறது. தன் தேவையைத் தவிர வேறு எதையும் அவன் அறியாதவனாக ஆகிவிடுகிறான். தன் உள்ளத்திலோ நடத்தையிலோ அல்லாஹ்வுக்கென அவன் எந்த இடத்தையும் அளிப்பதில்லை. தன்னை முதலாமானவனாகவும் இறுதியானவனாகவும் அவன் எண்ணிக்கொள்கிறான்.

தற்கால நாகரிகம் இவ்வகையான மனிதர்களையே உருவாக்கியிருக்கிறது. அவர்கள் இந்த மண்ணோடு ஒட்டிவிட்டார்கள். இதற்கு அப்பால் இருக்கின்ற எதையும் அவர்கள் பார்ப்பதில்லை.

அவர்கள் மறுமைநாளை மிக தூரமான ஒன்றாகக் கருதுகிறார்கள். அதைக் குறித்து சிந்திப்பதோ பேசுவதோ அறிவாளிகளின் வேலை அல்ல என்றும் அது மூடநம்பிக்கையின் ஓர் அம்சம் என்றும் கருதுகிறார்கள். இவர்களைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்:

அவர்களுக்கு உலக வாழ்வின் உதாரணத்தைக் கூறுவீராக. அது நாம் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனால் பூமியின் தாவரங்கள் செழித்துவளர்ந்து, பின்னர் அவை காற்றால் அடித்துச் செல்லப்படும் காய்ந்த சருகுகளாகிவிடுவதைப் போன்றதாகும். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான். (18:45)

தோட்டக்காரர்மீது அல்லாஹ் கோபம் கொண்டது அவர் வைத்திருந்த தோட்டத்தின் காரணமாக அல்ல. சிந்தனையற்ற மூடனாக இருந்தான் என்பதால் அவன் அல்லாஹ்வின் கோபத்துக்கு ஆளானான்.

பாருங்கள், அவன் கூறுவதை:

அவன் தனக்குத்தானே அநீதி இழைத்தவனாகத் தன் தோட்டத்தினுள் நுழைந்தான். அவன் கூறினான், ‘இது என்றைக்காவது அழிந்துவிடும் என்றோ மறுமை என்றாவது நிலைபெறும் என்றோ நான் கருதவில்லை. ஒருவேளை நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டுசெல்லப்பட்டால் இதைவிடச் சிறந்த இடத்தையே பெறுவேன்.’ (18:35,36)

நிராகரிப்புக்கும் கர்வத்துக்கும் கூலியாக அவனுக்கு இவ்வாறெல்லாம் வழங்கப்பட வேண்டுமா? இந்த மூடன் மறுமையில் நரகத்தின் எரிபொருளாக இருப்பதற்கே உகந்தவன், இந்த உலகில் அவனுக்கு இழப்பு ஏற்பட்டதைப் போல.

இதன் அடிப்படையில் இந்தச் சம்பவத்தின் இறுதியில் இறைவனின் விமர்சனமாக இடம்பெறும் வசனத்தை நாம் புரிந்துகொள்கிறோம்: செல்வங்களும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் அலங்காரங்கள்தாம். நன்மையைப் பொறுத்து நிலையான நற்காரியங்களே உம் இறைவனிடம் மிகச் சிறந்ததாகும்; நம்பிக்கை வைப்பதற்கும் மிக ஏற்றதாகும். (18:46)’

தூய்மையான, கண்ணியமான ஒரு வாழ்க்கை வாழும்படி தூண்டும் பின்வரும் ஹதீஸும் இந்த வகையைச் சார்ந்ததுதான்: நபியவர்கள் கூறினார்கள், யார் மறுமையை நோக்கமாகக் கொண்டுள்ளாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் தன்னிறைவை ஏற்படுத்திவிடுவான். அவரது விவகாரங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து வைப்பான். உலகம் அவரை நோக்கி வரும். யாருடைய நோக்கம் உலகமாக இருக்குமோ அவருக்கு முன்னால் அல்லாஹ் வறுமையை ஏற்படுத்துவான். அவரது விவகாரங்களைச் சிதறடிப்பான். அவருக்கு விதிக்கப்பட்டதைத் தவிர உலகிலிருந்து வேறு எதையும் அவர் பெற முடியாது. அவர் ஏழ்மைநிலையில்தான் மாலைப் பொழுதை அடைவார். ஏழ்மைநிலையில்தான் காலைப் பொழுதை அடைவார். எந்த அடியார் தன் உள்ளத்தோடு அல்லாஹ்வை நோக்கி வருவாரோ அல்லாஹ் அடியார்களின் உள்ளங்களை அன்பாலும் இரக்கத்தாலும் அவர் பக்கம் திருப்புவான். நன்மையான ஒவ்வொன்றையும் அவருக்கு விரைந்து அளிப்பான்.

Wednesday, August 26, 2020

பணப் பதுக்கல்: குர்ஆனிய நோக்கு

பதுக்கும் பணம் நரகின் எரிபொருள் ஆக 

வேண்டுமா?!

சம்மில்

ஆடம்பரத்தில் திளைத்திருக்கும் நிராகரிப்பாளர்களை என்னிடம் விட்டுவிடுவீராக. அவர்களுக்குச் சிறிது காலம் அவகாசமளிப்பீராக. நிச்சயமாக மறுமையில் நம்மிடத்தில் கனமான சங்கிலிகளும் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பும் தொண்டையில் விழுங்க முடியாத உணவும் இன்னும் அதிகப்படியாக வேதனைமிக்க தண்டனையும் இருக்கின்றன. பூமியும் மலைகளும் ஆட்டம்காணும் நாளில் இந்த வேதனை நிராகரிப்பாளர்களுக்கு ஏற்படக்கூடியதாகும். அப்போது மலைகள் பரப்பப்பட்ட மணற்குவியலாக ஆகிவிடும் (73:11-14).

நோய்கள், உபாதைகள், விபத்துகளால் பாதிக்கப்பட்டுப் பொருளாதாரப் பற்றாக்குறையால் மருத்துவர் பரிந்துரையைப் பின்பற்ற இயலாதவர்கள், வறுமையால் பீடிக்கப்பட்டு அன்றாட உணவுக்கே அல்லல்படுபவர்கள், பொருளாதாரமின்றிப் பெண்மக்களை மணமுடித்துக் கொடுக்க இயலாமல் பரிதவிப்பில் உழல்வோர்; கல்விக்குப் பணம் கொடுக்க இயலாமல் உதவி வேண்டி அலைக்கழிவோர் ... இப்படி, பொருளாதாரப் பற்றாக்குறை என்னும் புதைசேற்றில் அமிழ்ந்துகொண்டிருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு உதவிசெய்யுங்கள் என்று பெருவசதி படைத்தோரிடம் (குறிப்பாக, மேம்போக்கான மார்க்க அடையாளங்களைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் “கனவான்களிடம்”) வேண்டுகோள் விடுத்தால் பூசிமெழுகுவதையும் தட்டிக்கழிப்பதையும் கண்டும்காணாமல் கடந்துசெல்வதையும்தான் பெருவாரியாகக் காண முடிகிறது. பாவனைகளுக்குப் பின்னால்தான் எத்துணை உலோபித்தனம்! உலகாயத மோகம்!!

இறைவனின் பாதையில் செலவுசெய்யாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்களும் பூமியும் இறைவனுக்கே உரித்தானவைஇறைவனுக்கு அழகிய கடனளிப்பவர் யார்? அவன் அதனை அவருக்குப் பன்மடங்காக்கித் தருவான். அவருக்குக் கண்ணியமான கூலியும் உண்டு (57:10,11).

செல்வவளம் படைத்தோரும் பிறருக்கு உதவ வசதி படைத்தோரும் தங்கள் வறிய சொந்தங்களுக்கும் ஏழைகளுக்கும் இறைவன் பாதையில் புலம்பெயர்ந்து வந்தோருக்கும் உதவ முன்வராமல் இருந்துவிட வேண்டாம் ... (24:22).

பணக்காரர்களின் பணத்தைப் பொறுத்தவரை அதில் ஸகாத்தைத் தவிர்த்த ஏனைய கடமை ஒன்றும் இருக்கிறது – நபிகளார் (ஸல்).

இன்னும் அவர்களின் பொருளாதாரத்தில் கேட்போருக்கும் கேட்காதோருக்கும் உரிமை உண்டு (51:19).

இன்னும், இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்து நீங்கள் அவர்களுக்குக் கொடுங்கள் (24:33).

அவர்களுடைய செல்வங்களும் பிள்ளைகளும் இறைவனின் தண்டனைக்கு எதிராக (அந்நாளில்) அவர்களுக்கு எவ்வகையிலும் உதவிகரமாக இருக்காது (3:10).

நன்மை என்பது உங்கள் முகங்களைக் கிழக்குத் திசை நோக்கியோ மேற்குத் திசை நோக்கியோ திருப்பிக்கொள்வதில் இல்லை. மாறாக, நன்மை என்பது ... தம் செல்வத்தின் மீது ஆசையிருந்தும் அதனை உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் யாசிப்போருக்கும் அடிமைகளை (கைதிகளை) விடுதலைசெய்வதற்கும் செலவுசெய்வதும் ... ஆகும். இத்தகையவர்கள்தாம் உண்மையாளர்கள்; இவர்கள்தாம் இறை விழிப்புள்ளவர்கள் (2:177).

... துன்புறுத்தும் வேதனையிலிருந்து ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? ... உங்கள் பொருளாதாரத்தையும் ஆன்மாவையும் கொண்டு இறைவன் பாதையில் கடுமையாக உழையுங்கள். நீங்கள் அறியக்கூடியவர்களாக இருந்தால் அதுவே உங்களுக்குச் சிறந்ததாகும். (அதனால்) உங்கள் பாவங்களை அவன் உங்களுக்கு மன்னிப்பான் ... (61:10-12).

செல்வத்தை நல்ல முறையில், ஆக்கபூர்வமான, நன்மைகளை அள்ளித்தரும் வழிகளில் பயன்படுத்துவது உறுதியான நம்பிக்கை கொண்ட உண்மையாளர்களின் அடையாளங்களில் ஒன்றாகும். செல்வங்களையும் செல்வாக்கையும் வழிபடக்கூடியவர்களுக்கும் பாவ்லா காட்டும் நயவஞ்சகர்களுக்கும் வேறு வழிமுறை உள்ளது.

இவர்களைப் பற்றித்தான் இந்த வசனங்கள் கூறுகின்றன: யாருடைய செல்வமும் பிள்ளைகளும் அவருக்கு இழப்பைத் தவிர வேறொன்றையும் அதிகப்படுத்தவில்லையோ ... (71:21)’, நாங்கள் செல்வங்களாலும் பிள்ளைகளாலும் மிகுந்தவர்கள். ஆகவே, நாங்கள் வேதனை செய்யப்பட மாட்டோம் (71:35). இத்தகையோரிடம் மறுமைநாளில் கூறப்படும்: இன்று உங்களிடமிருந்தோ நிராகரித்தோரிடமிருந்தோ எவ்வித இழப்பீடும் பெறப்படாது. உங்கள் இருப்பிடம் நரகமாகும். அதுவே உங்களுக்குத் துணையாகும். அது மிகவும் கெட்ட இருப்பிடமாகும் (57:15).’

அவர்களில் சிலர் தங்கம், வெள்ளியின் பெரும் குவியலையே கொண்டிருந்தாலும் ஏழைகளுக்கு உதவுவதில் கஞ்சத்தனம் செய்பவராகவே இருக்கிறார்கள். அவர்களைக் குறித்துதான் கூறப்பட்டது:

அவனைப் பிடியுங்கள். அவனுக்கு விலங்கை மாட்டுங்கள். பின்னர் அவனை நரகத்தில் தள்ளுங்கள். பின்னர் அவனை எழுபது முழம் நீளமுள்ள சங்கிலியால் பிணையுங்கள். அவன் மகத்துவம்மிக்க அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாமல் இருந்தான். அவன் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டவுமில்லை (69:30-34).

ஏற்றுக்கொள்ளப்படும் விசுவாசத்தின் அடித்தளம் இறைவனை அறிவதும் தன் சுயத்தை மறுப்பதும் படைப்புகள்மீது கருணை காட்டுவதும் உள்ளத்தின் மென்மையும் ஆகும். இவற்றிலிருந்து தூரப்பட்டவர்களும் தங்களை உண்மை விசுவாசிகள் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் இறுகிய உள்ளம் கொண்டவர்களாக, சுயநலம்மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

இத்தகைய வெறுக்கத்தக்க ஈமானுக்கு உதாரணமாக இறைவனுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறிய இஸ்றவேலர்களைச் சுட்டலாம். அவர்களைக் குறித்து இறைவன் கூறுகிறான்: அவர்கள் வாக்குமீறியதால் நாம் அவர்களைச் சபித்து அவர்களின் உள்ளங்களை இறுகச்செய்துவிட்டோம் ... (5:13)’.

அவர்களைப் போன்று ஆகிவிட வேண்டாம் என்று இறைவனும் தூதரும் நம்மை எச்சரிக்கிறார்கள். ஆனாலும் மார்க்கத்தை மேலோட்டமாகப் பின்பற்றும் முறையும் ஃபிக்ஹுரீதியான கிளைப் பிரச்சினைகளில் மல்லுக்கட்டும் போக்கும் பெறுமதியற்ற விவகாரங்களுக்காகப் பயனற்ற, முடிவற்ற விவாதங்களில் ஈடுபடுவதும் இன்று வழக்கமாகிவிட்டது.

தன் அண்டையில் இருப்பவர் பசியோடு படுக்கைக்குச் செல்லும் நிலையில், அது தனக்கு நன்றாகத் தெரிந்திருந்தும்கூட வயிறு புடைக்க உணவு உட்கொண்டுவிட்டுத் தூங்கச் செல்பவர் உண்மை இறைப்பற்றாளர் அல்ல – நபிகளார் (ஸல்).

தங்கம், வெள்ளியைப் பதுக்கி வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிட மறுப்பவர்களுக்கு - வதக்கியெடுக்கும் வேதனை குறித்து நற்செய்தி கூறுவீராக – (பதுக்கி வைத்திருக்கும் செல்வங்கள் அனைத்தும்) அந்நாளில் சுட்டெரிக்கும் நெருப்புக் குண்டத்தில் பழுக்கக் காய்ச்சப்பட்டு அவர்கள் நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகுப் பகுதியிலும் (வேதனை அதிகரிக்க) சூடு போடப்படும்; (ஏக நேரத்தில் அந்த அநியாயக்காரர்களிடம் சொல்லப்படும்:) உங்களுக்காக நீங்கள் ஒன்றுதிரட்டி வைத்திருந்த பொக்கிஷங்கள் இவைதான்! (தன்முனைப்புடனும் தற்பெருமையுடனும்) நீங்கள் சேமித்துக்கொண்டிருந்த உங்கள் பொக்கிஷங்களின் வேதனையை இப்பொழுது சுவைத்துப்பாருங்கள் (9:34,35).

... இத்தகையவன் பொருளைச் சேகரித்து எண்ணிக்கொண்டே இருக்கிறான். நிச்சயமாகத் தன் பொருள் தன்னை நித்தியமாக நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறல்ல! அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? அது இறைவனின் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும். அது தேகத்தில் பட்டதும் இதயங்களில் பாயும். திண்ணமாக அது அவர்கள்மீது சூழ்ந்து மூடப்பட்டதாக இருக்கும், நீண்ட கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டவர்களாக (104:2-9).