Saturday, February 9, 2019

மீண்டும் அபூ தர் ... II

   மீண்டும் அபூ தர் ...

அலீ ஷரிஅத்தி

தமிழில்: சம்மில்

அத்தியாயம் 2

        
         நிறைந்து கவிந்திருக்கும் ஒடுக்கும் இரவின் கும்மிருட்டில், வைகறை, மற்றொரு சூரிய உதயத்தின் செல்வாக்கால் பீடிக்கப்பட்டிருந்தது; இவ்வுலகம், அது புயலுக்கு முன் இருக்கும் அமைதியில் இருந்தது; மேலும் வரலாறு, அது உலகக் கடவுள்கள், அதன் நிழல்கள், அடையாளங்களுக்கு எதிராகவும் பரலோகக் கடவுள்களுக்கு எதிராகவும் - பல தெய்வக் கொள்கைக்கு எதிராகவும் - வரவிருக்கும் ஒரு பெரும் கலகம் குறித்த ஆழ்ந்த யோசனையில் இருந்தது.

         மனசாட்சிகளின் ஆழத்தின் மீது படரும் 'இறை நாட்ட'த்தின் நிழலிலும், மானிட இருப்பின் சாராம்சத்துடன் மேம்போக்காகவேனும் தொடர்புகொண்டிருக்கும் ஆதி இயற்கைச் சுபாவங்களின் மறைவான நிலையிலும் விவரிக்க இயலாத, வினோதமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. புயலின் வருகையை உணர்ந்துகொண்டு, அவசர அவசரமாக, தங்கள் வாழிடத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து செல்லும் காட்டுப் பறவைகளுக்கு, மோப்பச் சக்தியினூடாக ஏற்படக்கூடிய புதிரான உணர்வுபோல, அல்லது, நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னரே விழிப்படைந்துகொண்டு கடிவாளத்தை அறுத்தெறிந்துவிட்டு தங்கள் எஜமானனின் வீட்டைவிட்டு வெளியேறி, சேணமற்ற, ஓட்டுநரற்ற நிலையில் பாலைவனம் நோக்கிச் செல்லும் உஷாரானக் குதிரைகளின் பூடகமான உள்ளுணர்வுபோல, தனித்திருக்கும் ஆன்மாக்களும் ஏதோ வினோதமான, மிகப் பெரிய விஷயம் நடக்கப்போகிறதென்பதை உணர்ந்துகொள்கின்றன! சில நேரங்களில் ஒரு மனிதனே ஓர் உலகம்; ஒரு தனிநபரே ஓர் சமூகம்!

         குறைஷிகளின் வணிகம்சார் கேரவான்களின் பயணத்துக்கும் கஃபாவுக்கான யாத்திரைக்கும் பயன்படும் வழிப்பாதையில் அமைந்துள்ள, மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடைப்பட்ட பாலை வனாந்தரமான ரபாதாவின் வறுமைப் பிடித்தாட்டும் ஒரு கோத்திரமான கிஃபாரைச் சேர்ந்த பாலைவன நாடோடி ஜுனாதாவின் மகன் ஜுன்துபும் அவருடன் இருந்த ஏனைய நெஞ்சுரம் மிக்கவர்களும் சம்பிரதாயங்களையும் நியதிகள்-சட்டதிட்டங்களையும் துணிவுடன் எதிர்கொண்டனர். விளைவாக, அத்தகைய ஏற்பாடுகள், முறைமைகளிடத்தில் தஞ்சம் புகுந்துகொண்டு அவற்றின் தயவிலும், பாதுகாப்பிலும் செளபாக்கியத்துடன் வாழ்ந்துவந்தவர்களின் கண்களுக்கு இவர்கள் தீவினைகளுக்குப் பேர்போனவர்களாகவும் காட்டான்களாகவும் கேடுகெட்டவர்களாகவும் அறம் தவறியவர்களாவும் காட்சியளித்தனர்! இங்கே அறம் என்பதற்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றி நடப்பதும், நியதிகளுக்குக் கீழ்ப்படிவதுமே பொருள். பிரத்தியேக மரியாதைக்கும் சிறப்பந்தஸ்துக்கும் உத்தரவாதம் வழங்கும் பாதுகாப்பு அரண்களே இவையெல்லாம். உரிமைகள், ஒழுங்குமுறை, பாதுகாப்பு எல்லாம் எதற்காகவென்றால், அப்பொழுதுதான் இந்த மனிதனால் உலகாயத பசிகொண்ட ஒரு கூட்டத்துக்கிடையே ஓகோவென்று தான் நடத்தும் விருந்தோம்பல்களில் நன்கு புசிக்கவும் உல்லாசம் அனுபவிக்கவும் முடியும்.

         
கிஃபார்: தீய செயல்களுக்குப் பேர்போன ஒரு கோத்திரம்; வழிப்பறி கும்பல்! வர்த்தகக் கேரவான்களிலிருந்து சரக்குகளையும் அடிமைகளையும் கொள்ளையடித்துச் செல்லும் திருட்டு கும்பல்; காட்டான்கள்; நான்கு புண்ணிய மாதங்களின் புனிதத்தைக்கூட கட்டிக்காக்க இயலாதவர்கள். இந்த நான்கு மாதங்கள் முழுக்க அரேபிய தீபகற்பத்தில் அமலில் இருக்கும் கட்டுக்காவலையும்கூட இவர்கள் தொந்தரவு செய்வார்கள். யாத்திரைக்கான இந்த மாதங்களில், ரோம், மக்கா, ஈரான் ஆகிய பகுதிகளுக்கிடையில் மதத்தின் பாதுகாப்பில் வலம்வரும் வர்த்தகக் கேராவான்கள், ரபாதாவின் ஆபத்தான பகுதியைக் கடந்து செல்கையில் அங்கே அவர்கள் கிஃபாரைப் பார்ப்பார்கள்; வாள்களைத் தலைக்கு மேலாகச் சுழற்றிக்கொண்டு, அவரவர் மறைவிடங்களிலிருந்து தங்களை நோக்கிப் பாய்ந்துவரும் கிஃபாரை.

         கிஃபாரின் மக்களான இந்த ஏழைகள், பாவிகள், பொல்லாத மக்கள் வர்த்தகக் கேராவான்களை நோக்கி பிச்சைப் பாத்திரத்தைப்போல தங்கள் கைகளை நீட்டுவதற்குப் பதிலாக, தங்கள் வாள்களை எஜமானர்களுக்கு எதிராக நீட்டுகின்றனர்!

         இவர்களில் ஒருவர்தான் ஜுன்துபின் மகனும். இதன் காரணத்தால்தான், அவர் அபூ தர்ராக மாறிய பின்னாளில் வயிறுகாய்ந்த ஒரு மனிதர் தனது வீட்டில் ரொட்டியில்லாமல் இருப்பதைப் பார்க்க அவருக்கு மலைப்பாக இருந்தது, "மக்களுக்கு மத்தியிலிருந்து கிளர்ந்தெழுந்து, உருவிய வாளுடன் இவர் ஏன் கிளர்ச்சி செய்யாமல் இருக்கிறார்."

         கொடுங்கோல் முறைமை ஒன்றில், ஒவ்வொரு சட்டதிட்டம், நியதி, சம்பிரதாயம், அறம், ஒழுங்குமுறை, பாதுகாப்பு ஆகிய அனைத்தும் கொடுங்கோன்மைக்கான பாதுகாப்பு அரண் என்பதும், அதற்குக் கீழ்ப்படிதல் மடமை என்பதும், ஏனைய கிஃபார் மக்களைப் போல ஜுன்துபின் மகனான ஜுனாதாவுக்குத் தெரியும். ஆனால், இவர் ஓர் எட்டு அதிகமாக எடுத்துவைத்தார், ஓர் இறுதி எட்டு; மற்றெவரையும்விட அதிக தூரம் செல்லும் வகையில். ஆளும் மதம் இங்கே ஓர் பாரிய பங்களிப்பு செலுத்திக்கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். ஆதலால், அதற்குக் கீழ்ப்படிதல், குஃப்ர்!

         அப்படியென்றால் சிலை? என்ன இது? வணங்குதல், வழிபடுதல், விரதம் ஏற்றல், தேவைகளை முன்வைத்தல், கிஃபார்களுக்கு மரண மிரட்டல் விடுத்துவந்த பஞ்சம், வறட்சியிலிருந்து தங்கள் உயிர்காக்கும் மழைக்காகக் கெஞ்சுதல் ஆகியவற்றுக்கான ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் துடிதுடிப்புடனும் உற்சாகத்துடனும் அவரது கோத்திரம் ஓர் இரவில், கிஃபாரின் (கடவுள்) சிலையான மனாத்தை தரிசிப்பதற்காக யாத்திரை சென்றிருந்தது. இந்தத் தருணத்தில் சந்தேகம் ஒன்றின் புனிதச் சுடர், அவரது நிச்சயத் தன்மையின் அடிஆழத்தில், அவரை நெருடுகிறது.

         கோத்திரமெல்லாம் அயர்ந்து உறங்கிய பிறகு, தீவிர யோசனையின், ஆழமான, இடையறாத பரிசீலனைகளின் தென்றலால் இந்த ஞானத்தின் சுடர் மேலும் மூட்டிவிடப்படுகிறது. அந்த மயான அமைதியில், பாலை வனாந்தரமும் இரவு வானத்தின் அடர் இருளும் கைகோத்திருந்த மனாத் சிலையின் சுற்றுப்புறத்தில் அவர் கூடாரம் ஒன்றை அடித்திருந்தார். அதிலிருந்து ஓசைப்படாமல் எழுந்துநின்று, கல் ஒன்றை எடுத்துக்கொண்டு, நிச்சயமற்ற தன்மையிலும் சந்தேகத்துக்கும் நிச்சயத் தன்மைக்கும் இடையே ஊசலாடிய நிலையிலும் முன்னகர்கிறார்; தன் காலத்து தெய்வத்தின் கண்களையே வெறித்துப் பார்த்தபடி ஒரு கணம் நிற்கிறார். பார்வையற்ற இரு கண்களைத் தவிர வேறெதையும் அவர் பார்க்கவில்லை. அறியாமையைக் கொண்டும் கொடுங்கோன்மையைக் கொண்டும் கடைந்தெடுக்கப்பட்ட, கல்லால் ஆன அந்தச் சிலையை தனது முழுக் கோபத்தில், வெறுப்பில் தாக்குகிறார்.

         கல்மீது கல் படும் சத்தம் ... பிறகு, ஒன்றுமில்லை. நூற்றாண்டுகளாக தனது ஆன்மாவைச் சுற்றிப் பிணைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்பட்ட சங்கிலிகள், தளைகள், விலங்குகளிலிருந்தெல்லாம் ஒரே சமயத்தில் விடுதலை பெற்று, முழுமுதல் கடவுளை நோக்கி விமோசனத்துடன் திரும்பிக்கொண்டிருந்த அவர், படைப்புகள் தோன்றிய நாளிலிருந்து தன்னைச் சிறைப்படுத்தி வைத்திருந்த ஓர் ஆழமான கிணற்றிலிருந்தும் குறுகலான, இருண்ட ஒரு குகையிலிருந்தும் - தனிமையிலும் யாருக்கும் தெரியாமலும் - தான் வெளியேறி விட்டிருப்பதை உடனடியாக உணர்ந்துகொள்கிறார். கரைதட்டாத ஒரு பெருங்கடலான வனாந்தரத்தையும் அதிலிருந்து தெரியும் தொலைதூர, விசாலமான எல்லைகளையும் வானத்தையும் அவர் பார்க்கிறார்! மகிமையால் சூழப்பட்ட அவை ரம்மியமாகவும் ஆழமாகவும் புதிராகவும் இருந்தன ... அப்பொழுதுதான் அவற்றை முதல் தடவை பார்த்ததுபோல, பார்ப்பதுபோல, இருந்தது அவருக்கு.

         நம்பிக்கை மற்றும் நிச்சயத் தன்மையினூடாக விடுதலையையும் ஓர் வெறுமையையும் அவர் எட்டிவிட்டிருந்தார். மேலும் இப்பொழுது, சிறுகச்சிறுக, நம்பிக்கை மற்றும் நிச்சயத் தன்மையின் புதிய, ஆனால் தெளிவான, பெரிதான, ஆழமான, பிரக்ஞைபூர்வமான விளிம்புகளை நோக்கி, தானே தேர்வுசெய்யப் போகும் விஷயத்தை நோக்கி அவர் நகர்ந்துகொண்டிருந்தார்!
 
         மேன்மேலும் உக்கிரம் அடைந்துவரும் இடையறாத சிந்தனை மழையின் கீழ், இருண்டு கிடக்கிற, வறண்டுபோன, தவிக்கிற தனது அகப் பாலைவெளியில் நீரூற்றுகள் தனக்காகப் பீறிடுவதை அவர் உணர்ந்துகொள்கிறார். இப்பொழுது, 'தண்ணீர் ஊறும் சத்தம்!' ஒவ்வொரு கணமும் வேகவேகமாக; அதன் மட்டம் அதிகரித்துக்கொண்டே சென்று அவரது அகத்தை முற்றாக மூழ்கடிக்கிறது; அதைக்கொண்டு அவர் நிரம்பியிருந்தார். அவஸ்தையான வீக்கமும் வேதனையுடன்கூடிய உற்சாகமும் நிறைந்த பிரசவித்தல் ஒன்றை இவ்வுலகில் தனிமையில் எதிர்கொள்ளும் பெண்போல, நிழல் மட்டுமே எஞ்சியிருந்த பாலையில், சாமத்தில், பாலைவனத்தின் முற்றும் அறிந்த வானத்தின் கீழ், தான் உயிர்த்திருப்பதற்கு ஆதாரமான எல்லா அணுக்களும் 'அவனை' நோக்கித் திரும்புகின்றன! உடனடியாக அவர் புழுதியில் விழுகிறார், நெற்றியை பூமி மீது பதித்தவராக. நிதானமின்மையின், தொன்மையான உணர்ச்சிகளின் சத்தமெல்லாம் பீறிட்டுக்கொண்டு வருகிறது, அழுகை!

          இதுதான் அபூ தர்ரின் முதல் உண்மையான வழிபாடு. "அல்லாஹ்வுடைய தூதரைச் சந்திப்பதற்கு முந்தைய மூன்று வருடங்கள், நான் இறைவனை வழிபட்டுக்கொண்டிருந்தேன்."

"எந்தத் திசை நோக்கி நீங்கள் திரும்பினீர்கள்?"

"எந்தத் திசையில் அவனை நான் உணர்ந்துகொள்ளும்படி செய்தானோ அதே திசையை நோக்கி."

         மக்களின் மதங்களைப் பரிகசிக்கிற; மக்களின் புனித விஷயங்களை 'போலி' என்று விளிக்கிற; கஃபாவின் பெரும் சிலைகளை எல்லாம், 'ஊமையான, அடிமுட்டாள் கற்கள்' என்று பெயர் சொல்லி அழைக்கிற; அனைவருடைய கடவுள்களுக்குப் பகரமாகவும் ஒரே கடவுளை நிலைநிறுத்தியிருக்கிற ஒரு மனிதர் மக்காவில் முளைத்திருக்கிறார் என்பதை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கேள்விப்படுகிறார்.

         மதத்துக்கும் அரபு நெறிமுறைக்கும் நேர்ந்துவிட்ட ஓர் அவலம் என்பதுபோல கிஃபார் வழிப்போக்கர்களும் பிரயாணிகளும் இந்தச் செய்தியைப் பார்த்தனர். அவர்கள் கேலியும் வெறுப்பும் தொனிக்கும் வார்த்தைளில் அவரைப் பற்றிப் பேசினர். ஆனால் ஜுன்துபோ இவற்றுக்கிடையில் தொலைந்துபோன தனது சுயத்தைக் கண்டார். தங்கள் பல தெய்வக் கொள்கையையும் மாசுபடிந்த, அஞ்ஞான மூடநம்பிக்கைகளையும் சிலை-அழிப்பாளரான ஆபிரஹாமுடன் தொடர்புபடுத்தும் இந்த ‘மிச்சசொச்சத்தின்-வணங்கிகள்’ இதனை எப்படிக் கண்டித்தாலும் இதனை குஃப்ர் என்று அழைத்தாலும் இதனை சமூகத்தில் ஏற்பட்ட பூசல்; நம்பிக்கைகளின் மந்தநிலை; இளைஞர்களது சிந்தனையின் பிறழ்வு; சமூகத்தின் கடைநிலை மக்களின் துணிச்சல்; அறத்தின், நம்பிக்கையின் அடித்தளத்தில் ஏற்பட்ட அதிர்வு; சிறுவன், சிறுமிக்கு இடையிலும், அவனது அல்லது அவளது  தாய், தந்தைக்கு இடையிலும் ஏற்பட்ட அவநம்பிக்கைக்கும் பிரிவுக்குமான காரணம்; மேல்தட்டு மக்களும் இதர பெருமைகளும் மதம்சார் ஆளுமைகளும் இகழப்படுவதற்குக் காரணம்; புராதனங்கள் மீதான மரியாதை மறைந்துவிடுதல்; மூதாதையர்கள், பாட்டன்மார்களின் பண்டைய தொன்மங்களின், சம்பிரதாயங்களின் நம்பகத் தன்மை கேள்விக்கு உள்ளாகுதல் ... முதலியவற்றுக்கான காரணமாக அர்த்தப்படுத்தினாலும், இவை அனைத்தும் மோட்சம்-தரும் புரட்சி ஒன்றுக்கான தெளிவான சமிக்ஞைகள் என்பதையும், தெய்வீக உண்மைக்கான அடையாளங்கள் என்பதையும் அவர் நன்றாக அறிந்திருந்தார்.

         மேலும், துடிப்புமிக்க, புரட்சிகர ஆன்மாக்களில் ஒருவரும் சமூக, பூர்வீக மரபுகளின் குறுகிய வார்ப்புகளால் இறுக்கமானவராக, கல்-போன்றவராக ஆகிவிடாதவரும் இயக்கம், படைப்பாற்றல், மாற்றத்துக்கான திறன், பரிணமித்தல், தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரம் ஆகியவற்றில் பின்தங்கியிராதவருமான ஜுன்துப் ஏதோ நிகழவிருப்பதை உணர்ந்துகொள்கிறார்; துல்லியமாக இதைத்தான் அவரது எழுத்தறிவு அற்ற ஆன்மாவும் விடுதலையடைந்த சிந்தனையும் பாலைவனத்தின் ஏகாந்தத்தில், அவரது உள்ளூர தனிமையில், கண்டடைய முயன்றது.

         இந்த 'செய்தி'க்கு முன்னால் அவர் பாராமுகமாக இருக்கவில்லை. கடமையுணர்வு அவரை தனது தேட்டத்தைத் தொடங்கும்படியும், சுயநலக்கார மேல்தட்டு மக்களால் வடிவமைக்கப்பட்டு தரங்கெட்ட மக்களால் பரப்பப்படும் வதந்திகள், பிரச்சாரங்கள், பொய்கள், அவமதிப்புகள், தொடர் பொய்ப்பித்தல்கள் ஆகியவற்றை தனது நம்பிக்கை மற்றும் மதிப்பீட்டுக்கான அடிப்படையாகக் கொள்ளாமல் தானே கிளம்பிப்போய் விசாரித்தறியும்படியும் அவரைப் பணித்தது. ஏனெனில், ஒரு மனிதன் செய்யும் மதிப்பீடு என்பது அவனது அல்லது அவளது ஆளுமைக்கான தலைசிறந்த குறியீடாக இருக்கிறது. எவர்கள் ஒரு மனிதன், ஒரு கருத்து, ஒரு செயல்பாடு, ஒரு இயக்கம் ஆகியவற்றுக்கு எதிராகவும், இன்னும், ஒவ்வொரு உண்மைக்கு எதிராகவும் மற்றவர்கள் கூறியதை அடிப்படையாகக்கொண்டு தீர்ப்பளிக்கிறார்களோ அவர்கள் மடமையிலும் நியாயமற்ற முறையிலும் ஓர் உண்மையைக் கண்டிப்பதற்கு முன்னால், அவர்களது பூரா சிந்தனைக்கான, தீர்ப்புக்கான மூலாதாரம் என்பது, 'இன்னார் சொல்கிறார் ...' என்கிற ஏதோ ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது. தங்கள் காலகட்டத்து அதிகாரங்கள், மூடநம்பிக்கை-உருவாக்கிகளான எஜமானர்கள், வெளிப்படையானதும் மறைவானதுமான அவர்களின் பிரச்சார வசதிகள் ஆகியவற்றின் அறிவுசார் தளைகளுக்குள் தங்களைத் தாங்களே பழித்துக்கொண்டு கிடப்பவர்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மேலும், எதிரிகள் போடும் விசேஷ கட்டளைக்கு இணங்க வதந்திகளையும் அவமதிப்புகளையும் பொய்களையும் பரப்பிவிடும் கையாலாகாத 'வதந்தி-பரப்பிகள்' இவர்கள் என்பதை அதன்மூலம் இவர்கள் வெளிப்படுத்திவிட்டார்கள். நயவஞ்சகர்கள் வடிவமைக்கிறார்கள், வார்த்தைஜாலக்காரர்கள் பரப்பிவிடுகிறார்கள், வெகுமக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்!

         ஆனால், ஜுனாதாவின் மகன் தனது சகோதரர் அனீஸை மக்கா அனுப்பிவைக்கிறார். பொய், புத்திபேதலிப்பு, சூனியம், கவிதை, குஃப்ர் ஆகியவற்றுக்காகக் கண்டனத்துக்கு உள்ளாகிவரும் இந்த மனிதரை, கடவுளுடைய வீட்டின் கெளரவத்தைச் சீர்குலைப்பதற்கும், சமூக ஒற்றுமையை மோதலாகவும் பூசலாகவும் மாற்றுவதற்கும், இன்னும், குடும்பக் கட்டுக்கோப்பை பிளவாகவும் விரோதமாகவும் மாற்றுவதற்கும் வந்திருப்பவர் என்று அவர்கள் கூறும் ஒருவரைப் பக்கத்தில் பார்த்து, அவரது வார்த்தைகளைச் செவிமடுத்து, அவரது செய்தியைக் கிரகித்துக்கொண்டு அவரிடம் (அபூ தர்ரிடம்) திரும்பி வந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பதற்காக.

         அனீஸ் மக்கா வருகிறார். அம்மனிதரை அவர் பார்க்கவில்லை. பெயரற்ற, இருப்பிடமற்ற அந்த அயலானை எவருமே அவருக்கு அடையாளம் காட்டவில்லை. நம்பிக்கை இழக்காமல் நகரம் முழுவதும் தேடுகிறார். வசை, பரிகாசம், வெறுப்பு, காழ்ப்பு ஆகியவற்றைத் தவிர அந்த மனிதரைப் பற்றி வேறெதையும் அவர் கேட்கவில்லை. எல்லா இடங்களிலும், மசூதியில், கடைத்தெருவில், தனிப்பட்ட முறையில், குறிப்பாக, 'மரியாதைக்கு உரிய நபர்கள்', 'பேர்போன ஆளுமைகள்', 'மதத்தின், இவ்வுலகின் பெரும்புள்ளிகள்', கூடவே, 'விசுவாசம்மிகு வணக்கசாலிகள் மற்றும் மதப் பாரபட்சம் கொண்டோர்', 'ஆபிரகாமின் ஐதீகங்கள் மீதும் ஆபிரகாமின் வீட்டின் மீதும் விசுவாசம் கொண்டோர்' எல்லோரும் அவரைப் பற்றிய ஒத்த வார்த்தைகளையும் வதந்திகளையும்தான் மாறிமாறி சொல்லிக்கொண்டிருந்தனர். அது ஒரே கோர்வையாக நிகழும் நிலையை எட்டிவிட்டிருந்தது.

அவர் ஒரு பைத்தியக்காரர்; சூனியக்காரர். அவரது வார்த்தைகளின் வசீகரத்துக்குத் தூதுச் செய்தியின் ஈர்ப்பு விசை காரணம் அல்ல; அது சித்துவேலை; அது யதார்த்தத்தின் அழகு அல்ல, கவிதை; தனது வார்த்தைகளை அவர் ஜிப்ரீலிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை; அவை தனது சொந்த வார்த்தைகளும் அல்ல; அவர் என்ன கூற வேண்டுமென்பதை வெளியூர் அறிஞர் ஒருவர் அவருக்கு அந்தரங்கமாகச் சொல்லிக் கொடுக்கிறார்; கிறிஸ்தவத் துறவி ஒருவரிடமிருந்து, ஓர் ஈரானிய அறிஞரிடமிருந்து, அவற்றைப் பெற்றுக்கொள்கிறார்; ஆபிரகாமின் உம்மத்தில் வந்து தோன்றியிருக்கும் அவர் ஓர் பேரவலம்; மசூதியின் மாண்பு, கடவுளுடைய வீட்டின் புனிதத்துவம், யாத்திரையின் பாரம்பரியம், கடவுளர்களின் வழிபாடு, அற நெறிகளின் உண்மைத்தன்மை, குடும்பங்களின் மரியாதை, இன்னும், நமது மூதாதையரின் எல்லா கெளரவங்கள், விழுமியங்களையும் அவர் காற்றில் பறக்க விடுகிறார்.

தொடர்ச்சி மூன்றாம் அத்தியாயத்தில் ...

Friday, February 1, 2019

மீண்டும் அபூ தர் ...

மீண்டும் அபூ தர் ...
அலீ ஷரிஅத்தி
தமிழில்: சம்மில்

அத்தியாயம் 1: அறிமுகம்

பதின்மூன்று ஆண்டுகால அவஸ்தைக்கும் தொடர் போராட்டங்களுக்கும் பிறகு, முகம்மது (ஸல்) மக்காவைவிட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்ற அந்த நாளிலிருந்தே, இஸ்லாத்தின் பலவீனமான, பதுங்கியிருந்த காலகட்டமெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன என்றும், தனது விசுவாசமும் துணிவும் மிகுந்த பின்பற்றாளர்களின் உதவியுடன் மகத்துவம்மிக்க ஓர் இஸ்லாமிய அமைப்பினூடாக நாகரிகம் ஒன்றுக்கான அஸ்திவாரத்தை அமைக்க வேண்டுமென்றும், இறைவன் நாடிய வழியில் தனது அரசியல் அமைப்புக்கான அடித்தளத்தை நிர்மாணிக்க வேண்டுமென்றும் அவர் எண்ணிக்கொண்டிருந்தார்.    

இந்த நேரத்திலெல்லாம், அரேபிய தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில், ஈரான் மன்னருக்குச் சொந்தமான ஓர் அட்டகாசமான அரண்மனையும், அதிலே ஆடம்பரமான அரசவையும் இருந்தன. ஆயிரக்கணக்கான அடிமைப் பெண்களும், மேலும் ஆயிரக்கணக்கில் அடிமை மனிதர்கள், ஏவலாள்களும் சம்பிரதாயமான பணிகளை நிறைவேற்றுவதற்காக அங்கே அமர்த்தப்பட்டிருந்தனர். இந்தப் பரிதாபகரமான, பாட்டாளி மக்களின் உடலுழைப்பின் விளைபலன்கள் எல்லாம் அந்த அமைப்பின் சீரான இயக்கத்துக்காகச் செலவிடப்பட்டு வந்தன.

 அரேபியாவின் வடக்குத் திசையிலும், அதுபோன்று, தனது மிரள வைக்கும் ஆட்சி அமைப்பு, சொர்க்கபோகமான சாம்ராஜ்யம் ஆகியவற்றினூடாக ஹெரக்கிலியஸ்(Heraclius) ஓர் உன்னத நிலைக்கு உயர்ந்துகொண்டிருந்தான். இந்த இரண்டு பெரிய நாடுகளிலும் இருந்த படு கவர்ச்சியான விஷயங்கள் என்று விண்ணை முட்டிக்கொண்டு நின்ற அரண்மனைகளைச் சொல்லலாம். பிரத்தியேகமாக ஆட்சியாளர்களின் உல்லாசத்துக்கென்றே அவை கட்டப்பட்டிருந்தன. இன்னும், கலை, இலக்கியம், யுத்தம், வரி வசூல், வடிவமைப்புகள், கண்டுபிடிப்புகள் எல்லாமும்கூட ஒருசேர மேற்கொள்ளப்பட்டு வந்தன. ராஜாங்க, பட்டத்து வைபவங்கள் எல்லாம் வெகு விமரிசையாக நடைபெற வேண்டும் என்பதற்காக.

ஆனால், இஸ்லாத்தின் இறுதித் தூதரோ, மதீனாவில் நுழைந்த உடனுக்குடன் ஒரு பள்ளிவாசலையும் அதன் அருகாமையில் தனது எளிமையான வீட்டையும் கட்டமைத்துக்கொண்டார். பள்ளிவாசல் உட்பகுதியில் அவரது வீட்டுக்கான வாயில்கதவு அமைக்கப்பட்டிருந்தது. தனது வாழ்வின் இறுதித் தருவாய்வரை - அரேபிய தீபகற்பம் நெடுகிலும் இஸ்லாமிய ஆட்சி நிலைபெற்று விட்டிருந்தபோதும் – இந்த வாழ்க்கைப் பாணியை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

ஒரு நாட்டின் முழுமுதல் ஆட்சியாளராக இருந்தும்கூட கோதுமை ரொட்டியே அவர் உணவாக இருந்தது. பவ்யமான ஓர் அடிமைபோன்று கட்டாந்தரையில் உட்கார்ந்துகொண்டு ஏழைகளுடன் அவர்களின் உணவைப் பகிர்ந்துகொள்பவராக இருந்தார். சேணம் பொருத்தப்படாத கழுதையை ஓட்டிச்செல்வார். அதிலும், பெரும்பாலான நேரங்களில், தனக்குப் பின்னால் இன்னொருவரையும் உட்காரவைத்துக்கொள்வார்.

ஆட்சியாளரின் இந்த நிர்வாக முறையின் நோக்கமே, தனது ஆட்சி அமைப்புக்கும் ஈரான் மற்றும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் முடியாட்சிக்கும் இடையிலான வேறுபாட்டைத் துலக்கமாகத் தோலுரித்துக் காட்டுவதுதான். இரண்டு மேல்தட்டு அதிகார வர்க்கத்துக்கு மத்தியில் ஒரு புதிய ஆட்சிமுறையும், துடிப்புமிக்க ஓர் அமைப்பும் கோலோச்சிக்கொண்டு வருவதை மக்கள் தங்கள் விழிகளால் தெளிவாகப் பார்க்கின்றனர். ஆள்பவருக்கும் ஆளப்படுபவர்களுக்கும், தளபதிக்கும் சிப்பாய்களுக்கும், ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையே இந்த ஆட்சி அமைப்பில் எந்த வேறுபாடும் இல்லை. இறைவனின், நீதியின் வாசல் மீது அனைவரும் ஒரே தராதரத்தில் நிறுத்தப்பட்டனர்.   

இந்த ஆட்சி அமைப்பின் நிறுவனர் இறந்துபோகிற உடனுக்குடன் அலீயிடமிருந்து அரசியல் காய்நகர்த்தல்களுக்கான அதிகாரம் பிடுங்கப்பட்டதன் வாயிலாக கிலாஃபத் சுவரின் முதல் செங்கல் கோணலாக்கப்பட்டது. அபூ பக்கர் தனக்குப் பின்னர் உமரை ஆட்சிப் பீடத்தில் அமரவைக்கிறார். இதன்மூலம் இஸ்லாமிய ஆட்சிமுறை இரண்டாவது முறையாகப் பிறழ்வைச் சந்தித்தது.

அபூ பக்கரும் உமரும் தாங்களே இந்தப் பிறழ்வுக்குக் காரணமாக இருந்தாலும், இஸ்லாத்தின் அரசியல் அமைப்பு என்பது நபிகளார் வரையறுத்துவிட்டுச் சென்ற ஆதார நெறிமுறைகளிலிருந்து விலகிவிடவில்லை. அதாவது, எளிமை, சமத்துவம், சொத்துப்பத்துகளின் சமமான பகிர்மானமும் அதன் தனிப்பட்ட குவிப்பிலிருந்து பாதுகாப்பும் என முந்தைய சூழல் அப்படியே தொடர்ந்தது.

உமரும் விடைபெற்றுக்கொண்டார். அதன் பின்னர் உஸ்மான் – தகுதியற்ற, போலி மதவாதியான இந்த முதியவர் – ஆட்சியதிகாரத்தின் கடிவாளத்தைப் பற்றிக்கொள்கிறார். இஸ்லாமிய ஆட்சியின் அடித்தளத்தை ஏற்கெனவே ஆட்டம்காணச் செய்த நிலைகுலைவு இப்பொழுது மேலும் தீவிரம் அடைந்தது. எந்த அளவுக்கெனில், முஹம்மது(ஸல்) நிர்மாணித்துவிட்டுச் சென்ற கட்டுமானத்தை அது உடனடியாகத் தரைமட்டமாக்கிவிட்டது. உஸ்மானின் ஆட்சிக் காலத்தில், கிலாஃபத் முடியாட்சியாக மாறியதோடு இஸ்லாமிய ஆட்சியாளர்களின் மணல் வீடுகள் எல்லாம் மன்னர்களின் அரண்மனைகளாக உருப்பெற்றன; எளிமை என்பது முஆவியாவின் அரசவையில் நடைபெறும் விமரிசையான வைபவங்களாகவும், உஸ்மானின் ஊதாரித்தனமான நிர்வாகமாகவும் மாறிப்போனது.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களில் நான்காமவர் அல்லது ஐந்தாமவராகக் கருதப்படுபவரும், இஸ்லாமிய இயக்கத்தின் முன்னேற்றத்துக்குப் படு தீவிரமாக உறுதுணை வழங்கிய வீரவாளுக்குச் சொந்தக்காரருமான அபூ தர் இந்தப் பிறழ்வைப் பார்க்கிறார். இறையச்சத்தின், உண்மையின் வடிவமாய்த் திகழ்ந்த அலீ தனிமைப்படுத்தப்பட்டார்; இஸ்லாத்தின் எதிரிகள் கிலாஃபத் அமைப்பினுள் லாவகமாக உட்புகுந்து விட்டிருந்ததோடு, கரையான்கள்போல் இஸ்லாத்தைச் சிறுகச்சிறுக அரித்துக்கொண்டும் வந்தனர்.

 விடுதலையுணர்வுடன் சத்தியத்தின் தேட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒவ்வொருவரும் உதாசீனமாக ஓரம்கட்டப்பட்டனர்; அவர்களின் குரல் ஒடுக்கப்பட்டது. அரசியல் அரங்கிலிருந்து அலீயை ஓரமாக ஒதுக்கிவிட்டு கிலாஃபத்தின் அரியணையில் அபூ பக்கர் தானே ஏறி உட்கார்ந்துகொண்ட அந்த நாள் அபூ தர்ரை மிகவும் கலக்கமடையச் செய்தது; அவருக்குக் குலைநடுக்கத்தை அது உண்டுபண்ணிற்று. இஸ்லாத்தின் எதிர்காலம் இருண்டுவிட்டதுபோலும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மனத்துக்குப் பட்டது. என்றாலும், இஸ்லாம் எனும் ஊர்தி, எப்பேர்பட்ட இடர்களுக்கு மத்தியிலும், அதன் பிரதானப் பாதையில்தான் இன்னமும் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதிலும், முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உரிமைகோரல் புறக்கணிக்கப்பட்டுவிட்டபோதும் இஸ்லாமிய அமைப்புமுறை சிதறிப்போய்விடவில்லை என்பதிலும் அப்பொழுதும் அவர் உறுதியாகவே இருந்தார். என்னதான் அவர் சூடேறிப்போய் ஆக்ரோஷத்துடன் குமுறிக்கொண்டிருந்தாலும் தனது உதடுகளை அவர் மெளனம் எனும் முத்திரைகொண்டு அடைத்தவண்ணம் இருந்தார். உஸ்மானின் ஆட்சி அமைப்பு இஸ்லாத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியபோது பாட்டாளி வர்க்கமும், ஆதரவற்றோரும் அவமதிக்கப்பட்டனர். அவர்கள் உஸ்மான் மற்றும் முஆவியாவின் அரசவையில் புழங்கிக்கொண்டிருந்த சுரண்டல்வாதிகள், அடிமை வியாபாரிகள், பெரும் செல்வந்தர்கள், உயர் வர்க்க மேட்டுக்குடிகள் ஆகியோரின் காலடியின் கீழ் ஒடுக்கப்பட்டனர்.

வகுப்பு வேறுபாடுகளும் செல்வங்களின் தனிப்பட்ட குவிப்பும் உயிர்ப்பிக்கப்பட்டது. பேரபாயம் ஒன்றினூடாக அச்சுறுத்தலைச் சந்தித்துவந்த இஸ்லாம், நபிகளாரின் காலச் சூழலைவிட்டும், சராசரி மக்கள் போன்று அல்லது ஏழைபாழை, தேவையுடையோர் போன்று வாழ்ந்துவந்த அபூ பக்கர், உமரின் பாசாங்கற்ற தன்மை, எளிமையைவிட்டும் பெயர்ந்து சென்றது. இஸ்லாமிய ஆளுநரான முஆவியாவுக்காகப் பச்சை மாளிகை ஒன்றைக் கட்டுவதற்காக ஆயிரக்கணக்கான தீனார்கள் செலவிடப்பட்டன; மன்னர்களின் அரசவை போன்று தோற்றமளித்த ஓர் ஆட்சிமுறை அமலுக்கு வந்தது.

அபூ பக்கர், தனது வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக யூதப் பெண்மணி ஒருவரின் ஆடுகளுக்குப் பால் கறப்பவராக இருந்தார். இப்பொழுதோ, நபிகளாரின் கலீஃபாவான உஸ்மானுடைய மனைவிக்குச் சொந்தமான ஒரு காசுமாலை ஆப்பிரிக்காவில் வசூலாகிய மொத்த வரியில் மூன்றில் ஒரு பங்குக்குச் சமமாக இருந்தது. தனது தந்தையின் பதவியை துஷ்பிரயோகம் செய்த வாலிபன் ஒருவனை, வெறும் ஒரு குதிரைக்காக, நீதிமன்றப் படியேற வைத்தார் உமர். காரணம், அந்தக் குதிரையை அவர்கள் பலவந்தமாகத் திருட முயன்றார்கள். இத்தனைக்கும் அவனது தந்தை அவரது முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஆனால் உஸ்மானோ மர்வான் இப்னு ஹகமை, அதாவது நபிகளாரால் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட ஒருவனை, தனது ஆலோசகராக ஆக்கிக்கொண்டார். அதோடு ஃகைபர் ஜில்லாவையும், ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் வசூலிக்கப்பட்டுவந்த வரியையும் அவனது பொறுப்பின் ஓர் அங்கமாக, அவனுக்கே வழங்கினார்!

இந்த வெட்கக்கேடான காட்சிகளை எல்லாம் அபூ தர் அவதானித்துக்கொண்டே வருகிறார். மேற்கொண்டு இதை அவரால் சகித்துக்கொள்ள இயலவில்லையாதலால் மேற்கொண்டு அவரால் அமைதிகாக்கவும் இயலவில்லை. கலகத்தில் - ஆண்மையைப் பறைசாற்றிய அற்புதமான ஒரு கலகத்தில் – ஈடுபடுகிறார். அனைத்து இஸ்லாமிய நிலப்பகுதிகளிலும் உஸ்மானுக்கு எதிராகக் கலகத்தைத் தோற்றுவித்த ஓர் எழுச்சி அது. இவ்வெழுச்சியிலிருந்து வெளிப்பட்ட துடிதுடிப்பின் அதிர்வலைகளை மானுட சமூகச் சூழல்களில் இன்றளவிலும் நம்மால் உணர முடிகிறது. அபூ தர், இஸ்லாத்தின் அரசியல், பொருளாதார ஒருமையை ஏற்படுத்த முயன்றுகொண்டிருந்தார் எனும் அதே நேரத்தில் உஸ்மானின் ஆட்சி அமைப்போ மேட்டிமைவாதத்தை உயிர்ப்பித்துக்கொண்டிருந்தது. அபூ தர் இஸ்லாத்தை ஆதரவற்றோர், ஒடுக்கப்படுவோர், அவமதிப்புக்கு ஆளாகுவோருக்கான போக்கிடமாக நம்பினார்; எனினும், உஸ்மானோ இஸ்லாத்தை முதலாளித்துவத்துக்கான ஒரு கருவியாகவும், சுரண்டல்வாதிகள், செல்வச் சீமான்கள், மேல்தட்டு மக்களின் நலன்களைக் கட்டிக்காப்பதற்கான ஓர் பக்கபலமாகவும் நம்பினார்.

அபூ தர்ருக்கும் உஸ்மானுக்கும் இடையிலான இந்தப் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்தப் பாதையில் தனது இன்னுயிரை அறுதியாக இழந்தார் அபூ தர். நீங்கள் பதுக்கிவைத்திருக்கும் இந்த மூலதனம், செல்வங்கள், தங்கம், வெள்ளி எல்லாம் அனைத்து முஸ்லிம்களுக்கிடையிலும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இஸ்லாத்தின் பொருளாதார, அறம் சார்ந்த முறைமைகளிலும், வாழ்வின் எல்லாவித அனுகூலங்களிலும் ஏனையவர்களுக்குக் கிட்டும் நன்மைகளில் அனைவருமே பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். என்று அபூ தர் முழங்கியவண்ணம் இருப்பார். ஆனால் உஸ்மானோ சடங்குகளிலும், வெளிப்பகட்டிலும், பக்திமான்கள்போல் பாசாங்கு செய்வதிலும், புனிதத்துவம் பேணுவதிலும் இஸ்லாத்தைப் பார்த்தார். பெரும்பான்மையினரின் ஏழ்மையிலும், சிறுபான்மையினரின் செல்வச் செழிப்பிலும் மதம் குறுக்கிட வேண்டும் என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இஸ்லாமியச் சமத்துவத்தின் மேம்பாட்டிற்காகப் போராட்டத்தை தொடங்கிய அபூ தர் தானும் சமாதானமடைய மாட்டார்; தனது விரோதியையும் சமாதானமடைய விடமாட்டார்.

அபூ தர்ரின் வியப்பூட்டும் வாழ்க்கையைப் பற்றி நான் எண்ணிப் பார்க்கிற, அவரது இறை வழிபாட்டை நான் அவதானிக்கிற தருணங்களிலெல்லாம், பாஸ்கல் (Pascal) என் நினைவுக்கு வந்துவிடுகிறார். பாஸ்கல் கூறுகிறார், உள்ளத்துக்கு இருக்கும் பகுத்தறியும் திறனைச் சிந்தனையால் எட்டிவிட முடியாது; உள்ளமே இறைவனின் பிரசன்னம் குறித்து சாட்சி பகர்கிறது, சிந்தனை அல்ல; விசுவாசம் இப்படித்தான் உருக்கொள்கிறது. அபூ தர் கூறுகிறார், தளைகளற்ற இந்த மானுட இருப்பில் நான் கண்டுகொண்ட அத்தாட்சிகளினூடாக இறைவனை நோக்கி நான் வழிநடத்தப்பட்டேன். பகுப்பாய்வு, விவாதம் ஆகியவற்றின் வாயிலாக சிந்தனை ஆற்றலால் அவனது சாரத்தை எட்டிவிட முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில், அவை அனைத்தைவிட்டும் அவன் மிக்க மேலானவன். இன்னும், மனித கிரகிப்புக்குள் அவனை உள்ளடக்கிவிடுவதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை. பாஸ்கல்போன்று அபூ தர்ரும் இறைவன்மீது விசுவாசம் கொண்டார்; உள்ளத்தினூடாக இறைவனுடன் உறவுகொண்டிருந்தார்; மேலும், நபிகளாருடனான சந்திப்பு ஏற்படுவதற்கு முன்பிருந்தே மூன்று ஆண்டுகளாக அவர் இறைவனை வழிபட்டுக்கொண்டிருந்தார்.

முதலாளித்துவத்தையும் செல்வத்தின் பதுக்கலையும் பற்றி அவர் பேசும்போதும், பரம ஏழைகளை அவர் பலமாக ஆதரித்தபோதும், மேல்தட்டு மக்கள், டமஸ்கஸ் மற்றும் மதீனாவின் அரண்மனைவாசிகள் ஆகியோருக்கு எதிராக அவர் செயல்பட்டபோதும் புரோடோன் (Proudhon) போன்று ஓர் தீவிர சமூகவியலாளரை (Socialist) அவர் ஒத்திருக்கிறார். எனினும், உண்மை யாதெனில், அபூ தர் வேறு; பாஸ்கலும் புரோடோனும் வெவ்வேறு. அபூ தர்ருக்கு இறைவனைத் தெரியும்; அந்த நாள்தொட்டு இறைப் பாதையிலான தனது இயக்கத்தை அவர் ஒருபோதும் நிறுத்திக்கொண்டதில்லை; தனது சிந்தனையிலோ செயலிலோ ஒரு கணம்கூட அவர் பலவீனத்தை வெளிப்படுத்தியது கிடையாது. அபூ தர்ரின் மனத் தூய்மை, பற்றுதல், வழிபாடு ஆகியவற்றுக்குப் புரோடோனும் சரி, அவரது நடவடிக்கை, துடிதுடிப்புக்குப் பாஸ்கலும் சரி ஈடிணையாகவே மாட்டார்கள். இஸ்லாமியக் கல்விக்கூடத்தில் அபூ தர் ஓர் முழுமையான மனிதனாகி விட்டிருந்தார். இந்த விவரணை ஒன்றே அவரது மகத்துவத்தைப் பறைசாற்றப் போதுமானது.

இஸ்லாமிய வரலாற்று வாசிப்பில் ஈடுபட்டிருக்கும் அநேக மக்களிடம் கீழ்க்கண்ட கேள்வி எழுவதற்குச் சாத்தியம் உள்ளது: இராணுவங்களின் அவ்வப்போதைய இயக்கங்கள்; சிற்சில இராணுவ வெற்றிகள்; சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு சிதறுண்டுபோன மிகப் பெரிய சாம்ராஜ்யம் ஒன்றின் உருவாக்கம் ஆகியவை தவிர்த்து இந்த இயக்கத்தின் மிக உன்னதமான விளைபலன் என்ன? இஸ்லாமிய இயக்கம் அதன் ஆரம்ப கட்டத்திலிருந்தே அரசியல் வேறுபாடுகளுக்கு முகம்கொடுத்தும் அதன் முக்கிய நோக்கத்திலிருந்து திசைதிருப்பப்பட்டும் வந்திருக்கிறது. இஸ்லாத்தின் அசல் தலைவர்களுக்கும்கூட இது நன்றாகவே தெரியும். இந்நிலையில், இஸ்லாமிய இயக்கத்துக்கும் அதை ஒத்த அல்லது அதைவிட பெருமளவில் வெற்றிகளைக் குவித்த வரலாற்றின் இன்ன பிற அரசியல், இராணுவ இயக்கங்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்க முடியும்? அப்படியென்றால், இஸ்லாம் என்னதான் செய்தது? நபிகளாரின், அவரது இறை விசுவாசமும் துணிவும் மிகுந்த பின்பற்றாளர்களின் பூரா போராட்டங்களும், தியாகங்களும் எத்தகைய பலன்களை ஈட்டித் தந்திருக்கின்றன? அவற்றில் இராணுவ வெற்றிகள் இருக்கின்றன என்றால், மதத்தை நாம் பார்க்கும் விதத்தில், அவையொன்றும் முக்கியத்துவத்துக்கு உரித்தானதாக ஆக முடியாது. குறிப்பாக, இந்த வெற்றிகள் எல்லாம் பனி உமய்யா, பனி அப்பாஸ் சுல்தான் வகையறாக்களால் ஈட்டப்பெற்றிருப்பதால் இஸ்லாத்தின் உண்மைகளோடு அவற்றுக்கு ஓர் அசலான, நேரடியான உறவுமுறை என்பது கிடையாது. 

இந்த அபிப்பிராயம் இவ்விடத்தில் குறைந்தபட்சம் சில கோணங்களிலாவது சரியாக இருக்கிறது. இராணுவங்களின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளை, இராணுவ வெற்றிகளை, இஸ்லாமியச் சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை எல்லாம் இஸ்லாத்தின் இலக்காக நாம் உருவகப்படுத்திவிடக் கூடாது; அவற்றை இந்த இயக்கத்தின் மகத்தான வெற்றிகளில் ஒன்றாகவும் கருதிவிடக் கூடாது. மதத்தை நாம் எப்படிப் பார்க்க வேண்டுமோ அப்படியே இஸ்லாத்தையும் பார்ப்போமானால் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட்டுவிடும் என்பதோடு இஸ்லாத்தின் மகத்துவம்மிக்க பலன்களும், வளர்ச்சியும், வெற்றிகளும் நம் பார்வைக்கு இன்னும் மலைப்பாகக் காட்சி அளிக்கும்.

படைப்புகளை அனைத்து தளங்களிலும் மேன்மைப்படுத்துவது, முன்னேற்றத்தையும், ஏறுமுகத்தையும் நோக்கி மனித வர்க்கத்தைக் கடமையாற்றப் பணிப்பது ஆகியவற்றுக்கான பொறுப்பைச் சுமந்திருக்கும் ஒரே காரணி மதம்தான். உயிரற்ற ஒன்றைத் தாவரமாகவும், தாவரம் ஒன்றைப் பிராணியாகவும், பிராணி ஒன்றை மனிதனாகவும் உருமாற்றியதன் பின்னணியில் எப்படி ஒரு தூண்டுசக்தி இருக்கிறதோ அதுபோன்று, பூரணத்துவத்தை அடைவதற்காக, படைப்புகளின் இந்த வியப்பூட்டும் கதையின் தொடர் ஓட்டத்துக்கு மதமும் ஒரு காரணமாக இருக்கிறது. தவிர, அவனோ அவளோ எட்டியே தீர வேண்டிய அறுதி நிலைக்கு மனிதர்களை அது இட்டுச்செல்வதோடு, ஞானோதயம் மற்றும் மனிதத் தன்மையினது மேன்மையின் உச்ச சிகரத்தில் மனித ஆன்மாவை அது சிறகடிக்கவும் வைக்கிறது. சொல்லப்போனால், அந்தத் தகைமையை விடவும் இன்னும் மேலதிக உயரத்துக்கு ஒருவரை அது உயர்த்தி நேரம், இடம் ஆகியவற்றுக்கு அப்பால் அவரை கடத்திவிடுகிறது. ‘பரிணமித்தல்’ எனும் ஏணியில் மனிதர்களை மேல்நோக்கி ஏறவைப்பதற்கு மதமே உந்துவிசையாகவும், வினை ஊக்கியாகவும், தூண்டுகோலாகவும் இருக்கிறது என்பதைக் காட்ட இந்த விவரிப்பை ஒருவர் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, ‘அசல் மனித’னை வார்த்தெடுக்கும் ஒரு தொழிற்சாலையே மதம். இதைத் தவிர மதத்திடமிருந்து வேறொன்றையும் நாம் எதிர்பார்க்கக் கூடாது.

இந்தத் திசையில் இஸ்லாத்தினால் வாகை சூட முடிந்ததா இல்லையா என்பதையும், மனித சந்தையில் தனது தயாரிப்பின் உன்னத உதாரணங்களையும் மாதிரிகளையும் அதனால் கடைவிரிக்க முடிந்ததா இல்லையா என்பதையும் இப்பொழுது நாம் பரிசீலனைச் செய்ய வேண்டும். புதிரான இந்த விவகாரத்தை ஆராய வேண்டுமெனில், முகவரியற்ற ஜனக்கூட்டத்திலிருந்து, ஒடுக்கப்பட்ட அடிமைகளிலிருந்து, சலிப்படைந்துபோன மக்களிலிருந்து வீறுகொண்டு எழுந்த சில ஆண்களையும் பெண்களையும் வரலாற்றின் விளிம்புகளில் ஒருவர் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதாவது, சில மக்களின் பெயர்களைப் பதிவு செய்வதை வரலாறு எப்பொழுதும் ஓர் பேரவமானமாகவே கருதி வந்திருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட மக்களின் பெயர்களைத்தான் ஒருவர் துருவிக் கண்டடைய வேண்டும். வரலாறு என்பது சுல்தான்களின் அசத்தலான அரண்மனைகள் முன்பும், போர்க்களங்களிடமும், தங்கத்தைக் குவித்துவைத்திருக்கும் குபேரர்களின் வாயில் கதவுகளிலும், பலவந்தத்துக்கும்தான் பெரும்பாலும் மண்டியிட்டிருக்கிறது. ஆனால், இதே 'மேல்தட்டு-அடிவருடி' வரலாறு இப்பொழுது அரதப்பழசான கூடாரங்களையும் அரேபிய அடிமைகளின் பாழடைந்துபோன மண் வீடுகளையும் அரேபிய பாலைவனத்தின் ஊர் பேர் தெரியாத, செருப்பு அணியாத மக்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது; கிஃபார் கோத்திரத்து மனிதரான அபூ தர் போன்று, ஈரானைச் சேர்ந்த திக்கற்ற நபரான சல்மான் போன்று, கச்சடா அடிமையான பிலால் போன்று முகவரியற்ற, முக்கியத்துவமற்ற மக்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. வரலாறு, அவர்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் வயிற்றெரிச்சலுடனும் பொறாமையுடனும் பதிவுசெய்கிறது. கண்ணியத்திலும் உயர்வான கண்ணியத்தை அளித்து, மானிடத்தின் எதிர்காலச் சந்ததிகளுக்கு அவர்களைக் கொடையளிக்கிறது. அதே சமயம், இந்த 'ஃபிர்அவ்ன்-துதிபாடி' வரலாறு, 'அரசவையில் புழங்கும்' வரலாறு எதற்காக இப்படி பவ்யமாக மாறியது, எப்பொழுதிருந்து அப்படி மாறியது என்ற கேள்வியையும் கேட்டாக வேண்டும்.

         ஆக, இஸ்லாமிய இயக்கத்தால் ஈட்டப்பெற்ற பலன்களை மதிப்பிட வேண்டுமெனில் ஆசியாவிலோ ஆப்பிரிக்காவிலோ தெற்கு ஐரோப்பிய நிலப்பகுதிகளிலோ கிடைத்த வெற்றிகளை ஒருவர் பார்க்கக் கூடாது. மாறாக, சொற்பமான அதன் பின்பற்றாளர்களின் சிந்தனைகள், மூளைகள், உள்ளங்கள், ஆன்மாக்களின் அடிஆழத்தில் அந்த இயக்கம் ஏற்படுத்திய முன்னேற்றத்தை அவர் அறிந்துகொள்ள வேண்டும். இந்த மக்களின் ஆன்மாக்களில் மாற்றங்களை ஏற்படுத்தியதிலும், புதிய திசைகளில் அவர்களை வழிநடத்தியதிலும் இஸ்லாம் அடைந்த வெற்றிகள், அதிகாரத்தின் மீதும் உலகை விஞ்சும் இராணுவ ஆதிக்கத்தின் மீதும் அல்லாமல் உண்மை மீதும் மனிதத் தன்மை மீதும் அதீத மதிப்பு வைத்திருக்கும் மக்களுக்குப் பிரமாதமானதாகவும் அதிக விசாலமானதாகவும் வெகு வியப்புக்குரியதாகவும் காட்சியளிக்கும். ரோம், ஈரான் ஆகிய நாடுகளின் வரலாற்றில் கிட்டிய இஸ்லாமிய வெற்றிகளும் சரி, செங்கிஸ் கான், டாரா, நெப்போலியன், இந்த 'பிரசித்தமான மூளையற்றவர்க'ளை ஒத்த ஏனைய ஆக்கிரமிப்பாளர்கள் போன்றோருடன் ஒப்பிடுகையில் கிடைத்த இஸ்லாமிய வெற்றிகளும் சரி தனித்துவமானவை ஒன்றும் அல்ல. ஆனால், முன்பின் தெரியாத பாலைவனவாசியும் பகுதி-காட்டுமிராண்டியுமான ஜுன்தப் இப்னு ஜுனாதா போன்ற ஒருவரை ஒரு அபூ தர் அல்-கிஃபாரியாக மறுகட்டமைப்பு செய்வது என்பதுதான் வேறெந்த சித்தாந்தத்தையோ இயக்கத்தையோ ஒப்பிடுகையில் அலாதியானது. அபூ தர், சல்மான், அம்மார் இப்னு யாசிர், பிலால் முதலான நான்கு அல்லது ஐந்து மனிதர்களுக்குக் கல்வி புகட்டியதைத் தவிர இஸ்லாத்தின் விளைபலன் என்பது வேறெதுவும் இல்லை எனில், இஸ்லாத்தின் வெற்றிகளைப் பார்த்து பிரமிப்படைவதற்கு அதுவே ஒரு சிந்தைக்குப் போதுமானது.

ஆனால், துரதிருஷ்டவசமாக இஸ்லாமிய வரலாற்றுக்குக் கிடைத்திருக்கும் ஒரு கெளரவமாகக் கருதப்படும் சிறப்பான மனிதர்களின் பாரம்பரியங்கள் எல்லாம் வீணடிக்கப்பட்டுவிட்டன. ஏனெனில், சாட்சாத் அதே மதத்தின் பின்பற்றாளர்களுக்கு - சிந்தனைகளின் ஆற்றலாலும் உலகத்து ஆட்சியாளர்களின் வாள்களாலும் பராமரிக்கப்பட்டு வந்திருப்பவர்களான இவர்களுக்கு - அந்தச் சிறப்பான மனிதர்களைப் பற்றித் தெரியவில்லை; மனிதத் தன்மையின் உன்னத உதாரணங்களாய்த் திகழும் அவர்கள், பரிணமித்தல் எனும் படிநிலையில் எட்டியிருக்கும் உயர் நிலையை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை; அவர்களது வாழ்க்கைக் கதைகளின் சுருக்கமான விவரங்கள்கூட இவர்களுக்குத் தெரியவில்லை. இத்தகைய அலட்சியத்திலும் அக்கறையின்மையிலும் தொடங்கி இறையச்சம் மற்றும் வீரத்தின் குறியீடுகளும் இந்த நேர்வழிநின்ற முன்னோடிகளின் நற்பெயரும் நொறுங்கி நாசமானதுவரை, மானுடத்துக்கு எதிராகவும் உண்மைக்கு எதிராகவும் நாம் மரண அடிகள் கொடுத்துவிட்டோம். இதை ஈடுசெய்வது என்பது கடினம். மேலும், இந்தக் கோளாறில் அனைத்து முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கிறது.

         அதைவிட பிரமிபூட்டும் விஷயம், ஷியாக்களின் தலைவரான அலீ, அபூ பக்கர் ஆட்சியிலும் அவருக்குப் பின் வந்தவர் ஆட்சியிலும் அவமரியாதைப்படுத்தப்பட்டு அவரது தார்மீக உரிமைகோரல் புறக்கணிக்கப்பட்டபோது, பொதுவாகக் கூறினால், இஸ்லாமியப் புரட்சியின் தலைவர்களாகக் கருதப்பட்ட மக்கள் சத்தியத்துக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருந்ததோடு அதற்காகத் தொடர் அர்ப்பணிப்புகளிலும் ஈடுபட்டனர். ஆட்சி அமைப்புக்கு எதிரான அவர்களின் போராட்டங்களின் காரணத்தாலும் அவர்களது முயற்சிகளின் காரணத்தாலும்தான் மாசுமறுவற்ற இஸ்லாமானது வரலாற்றின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதியாகக் கூற முடியும். இஸ்லாமிய ஆட்சி அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு எதிரான அவர்களது போராட்டங்களினூடாக, துணிச்சலான எதிர்ப்பு நடவடிக்கைகளினூடாக - வேடதாரிகள், உலகாயதப் பித்தர்களின் வேட்கைகளுக்கிடையிலும் - சத்தியம் மற்றும் ஞானத்தின் ஊற்றுக்கண்ணை மானுடம் கண்டடைந்திட அவர்கள் வழிவகை செய்தனர்.

         அபூ தர் இந்த விதிவிலக்கான மக்களில் ஒருவர். மனித வர்க்கத்தால் இன்று ஏக்கத்துடன் எதிர்நோக்கப்படும் அத்தகைய தலைவர்களில், விடுவிக்கப்பட்ட இரட்சகர்களில் ஒருவர் அவர். ஆட்சி முறையானது அன்றைக்குப் பொருளியலை அனைத்துக்கும் அடிப்படையானதாகவும் அதியுணர்ச்சிகர விவகாரமாகவும் ஆக்கி, பொருளியல்சார் உலகில் ஓர் கடும் நெருக்கடியை உண்டுபண்ணிய தருணத்திலிருந்து அவரது அபிப்பிராயங்கள் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றன. இன்றைக்கு, மறுபடியும் அதே காட்சிகளை டமஸ்கஸ்ஸிலும் மதீனாவிலும் அவர்கள் மறு அரங்கேற்றம் செய்துகொண்டிருக்கின்றனர். தேவையுடையோரையும் அவமதிக்கப்பட்டோரையும் தன்னைச் சுற்றித் திரட்டிக்கொண்டு சுரண்டலுக்கும் 'பொருளாதார-வணங்கிக'ளுக்கும் தங்கப் பதுக்கல்காரர்களுக்கும் உயர்குடிகளுக்கும் எதிராக ஊர்வலத்தில் ஈடுபட்ட அபூ தர், உள்ளத்தைச் சூடேற்றும் தனது வார்த்தைகள், அபிப்பிராயங்களுக்கும் தனது மூர்க்கமான சொல்லாட்சிக்கும் இப்பொழுது உலக முஸ்லிம்களைச் செவிமடுக்க வைத்திருக்கிறார். அவரைத் தங்கள் சொந்த விழிகளாலேயே தொலைதூர வரலாற்றில் அவர்கள் பார்ப்பதுபோன்று ஆகியிருக்கிறது. ஒடுக்கப்பட்டோரையும் பரம ஏழைகளையும் மசூதியில் குழுமச்செய்து, அவர்களை உஸ்மானின் ஆட்சி அமைப்புக்கு எதிராகவும் பச்சை மாளிகைவாசிகளுக்கு எதிராகவும் தார்மீக ரீதியில் கிளர்ந்தெழச் செய்த அவர் முழக்கமிடுகிறார்,
"தங்கம், வெள்ளியைப் பதுக்கிவைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களே அத்தகையோர் ..." (9:34)

"முஆவியாவே! இந்த அரண்மனையை உன் கைக்காசில் நீ கட்டமைத்தால், அது ஊதாரித்தனம். அதையே மக்கள் பணத்தில் செய்தால் அது தேசத் துரோகம்."

"உஸ்மானே! ஏழைகளை நீ பரம ஏழைகளாக ஆக்கிவிட்டாய், பணக்காரர்களை பெரும் பணக்காரர்களாக ஆக்கிவிட்டாய்."


தொடர்ச்சி இரண்டாம் அத்தியாயத்தில் ...