Friday, February 1, 2019

மீண்டும் அபூ தர் ...

மீண்டும் அபூ தர் ...
அலீ ஷரிஅத்தி
தமிழில்: சம்மில்

அத்தியாயம் 1: அறிமுகம்

பதின்மூன்று ஆண்டுகால அவஸ்தைக்கும் தொடர் போராட்டங்களுக்கும் பிறகு, முகம்மது (ஸல்) மக்காவைவிட்டு வெளியேறி மதீனாவுக்குச் சென்ற அந்த நாளிலிருந்தே, இஸ்லாத்தின் பலவீனமான, பதுங்கியிருந்த காலகட்டமெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன என்றும், தனது விசுவாசமும் துணிவும் மிகுந்த பின்பற்றாளர்களின் உதவியுடன் மகத்துவம்மிக்க ஓர் இஸ்லாமிய அமைப்பினூடாக நாகரிகம் ஒன்றுக்கான அஸ்திவாரத்தை அமைக்க வேண்டுமென்றும், இறைவன் நாடிய வழியில் தனது அரசியல் அமைப்புக்கான அடித்தளத்தை நிர்மாணிக்க வேண்டுமென்றும் அவர் எண்ணிக்கொண்டிருந்தார்.    

இந்த நேரத்திலெல்லாம், அரேபிய தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில், ஈரான் மன்னருக்குச் சொந்தமான ஓர் அட்டகாசமான அரண்மனையும், அதிலே ஆடம்பரமான அரசவையும் இருந்தன. ஆயிரக்கணக்கான அடிமைப் பெண்களும், மேலும் ஆயிரக்கணக்கில் அடிமை மனிதர்கள், ஏவலாள்களும் சம்பிரதாயமான பணிகளை நிறைவேற்றுவதற்காக அங்கே அமர்த்தப்பட்டிருந்தனர். இந்தப் பரிதாபகரமான, பாட்டாளி மக்களின் உடலுழைப்பின் விளைபலன்கள் எல்லாம் அந்த அமைப்பின் சீரான இயக்கத்துக்காகச் செலவிடப்பட்டு வந்தன.

 அரேபியாவின் வடக்குத் திசையிலும், அதுபோன்று, தனது மிரள வைக்கும் ஆட்சி அமைப்பு, சொர்க்கபோகமான சாம்ராஜ்யம் ஆகியவற்றினூடாக ஹெரக்கிலியஸ்(Heraclius) ஓர் உன்னத நிலைக்கு உயர்ந்துகொண்டிருந்தான். இந்த இரண்டு பெரிய நாடுகளிலும் இருந்த படு கவர்ச்சியான விஷயங்கள் என்று விண்ணை முட்டிக்கொண்டு நின்ற அரண்மனைகளைச் சொல்லலாம். பிரத்தியேகமாக ஆட்சியாளர்களின் உல்லாசத்துக்கென்றே அவை கட்டப்பட்டிருந்தன. இன்னும், கலை, இலக்கியம், யுத்தம், வரி வசூல், வடிவமைப்புகள், கண்டுபிடிப்புகள் எல்லாமும்கூட ஒருசேர மேற்கொள்ளப்பட்டு வந்தன. ராஜாங்க, பட்டத்து வைபவங்கள் எல்லாம் வெகு விமரிசையாக நடைபெற வேண்டும் என்பதற்காக.

ஆனால், இஸ்லாத்தின் இறுதித் தூதரோ, மதீனாவில் நுழைந்த உடனுக்குடன் ஒரு பள்ளிவாசலையும் அதன் அருகாமையில் தனது எளிமையான வீட்டையும் கட்டமைத்துக்கொண்டார். பள்ளிவாசல் உட்பகுதியில் அவரது வீட்டுக்கான வாயில்கதவு அமைக்கப்பட்டிருந்தது. தனது வாழ்வின் இறுதித் தருவாய்வரை - அரேபிய தீபகற்பம் நெடுகிலும் இஸ்லாமிய ஆட்சி நிலைபெற்று விட்டிருந்தபோதும் – இந்த வாழ்க்கைப் பாணியை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

ஒரு நாட்டின் முழுமுதல் ஆட்சியாளராக இருந்தும்கூட கோதுமை ரொட்டியே அவர் உணவாக இருந்தது. பவ்யமான ஓர் அடிமைபோன்று கட்டாந்தரையில் உட்கார்ந்துகொண்டு ஏழைகளுடன் அவர்களின் உணவைப் பகிர்ந்துகொள்பவராக இருந்தார். சேணம் பொருத்தப்படாத கழுதையை ஓட்டிச்செல்வார். அதிலும், பெரும்பாலான நேரங்களில், தனக்குப் பின்னால் இன்னொருவரையும் உட்காரவைத்துக்கொள்வார்.

ஆட்சியாளரின் இந்த நிர்வாக முறையின் நோக்கமே, தனது ஆட்சி அமைப்புக்கும் ஈரான் மற்றும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் முடியாட்சிக்கும் இடையிலான வேறுபாட்டைத் துலக்கமாகத் தோலுரித்துக் காட்டுவதுதான். இரண்டு மேல்தட்டு அதிகார வர்க்கத்துக்கு மத்தியில் ஒரு புதிய ஆட்சிமுறையும், துடிப்புமிக்க ஓர் அமைப்பும் கோலோச்சிக்கொண்டு வருவதை மக்கள் தங்கள் விழிகளால் தெளிவாகப் பார்க்கின்றனர். ஆள்பவருக்கும் ஆளப்படுபவர்களுக்கும், தளபதிக்கும் சிப்பாய்களுக்கும், ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையே இந்த ஆட்சி அமைப்பில் எந்த வேறுபாடும் இல்லை. இறைவனின், நீதியின் வாசல் மீது அனைவரும் ஒரே தராதரத்தில் நிறுத்தப்பட்டனர்.   

இந்த ஆட்சி அமைப்பின் நிறுவனர் இறந்துபோகிற உடனுக்குடன் அலீயிடமிருந்து அரசியல் காய்நகர்த்தல்களுக்கான அதிகாரம் பிடுங்கப்பட்டதன் வாயிலாக கிலாஃபத் சுவரின் முதல் செங்கல் கோணலாக்கப்பட்டது. அபூ பக்கர் தனக்குப் பின்னர் உமரை ஆட்சிப் பீடத்தில் அமரவைக்கிறார். இதன்மூலம் இஸ்லாமிய ஆட்சிமுறை இரண்டாவது முறையாகப் பிறழ்வைச் சந்தித்தது.

அபூ பக்கரும் உமரும் தாங்களே இந்தப் பிறழ்வுக்குக் காரணமாக இருந்தாலும், இஸ்லாத்தின் அரசியல் அமைப்பு என்பது நபிகளார் வரையறுத்துவிட்டுச் சென்ற ஆதார நெறிமுறைகளிலிருந்து விலகிவிடவில்லை. அதாவது, எளிமை, சமத்துவம், சொத்துப்பத்துகளின் சமமான பகிர்மானமும் அதன் தனிப்பட்ட குவிப்பிலிருந்து பாதுகாப்பும் என முந்தைய சூழல் அப்படியே தொடர்ந்தது.

உமரும் விடைபெற்றுக்கொண்டார். அதன் பின்னர் உஸ்மான் – தகுதியற்ற, போலி மதவாதியான இந்த முதியவர் – ஆட்சியதிகாரத்தின் கடிவாளத்தைப் பற்றிக்கொள்கிறார். இஸ்லாமிய ஆட்சியின் அடித்தளத்தை ஏற்கெனவே ஆட்டம்காணச் செய்த நிலைகுலைவு இப்பொழுது மேலும் தீவிரம் அடைந்தது. எந்த அளவுக்கெனில், முஹம்மது(ஸல்) நிர்மாணித்துவிட்டுச் சென்ற கட்டுமானத்தை அது உடனடியாகத் தரைமட்டமாக்கிவிட்டது. உஸ்மானின் ஆட்சிக் காலத்தில், கிலாஃபத் முடியாட்சியாக மாறியதோடு இஸ்லாமிய ஆட்சியாளர்களின் மணல் வீடுகள் எல்லாம் மன்னர்களின் அரண்மனைகளாக உருப்பெற்றன; எளிமை என்பது முஆவியாவின் அரசவையில் நடைபெறும் விமரிசையான வைபவங்களாகவும், உஸ்மானின் ஊதாரித்தனமான நிர்வாகமாகவும் மாறிப்போனது.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களில் நான்காமவர் அல்லது ஐந்தாமவராகக் கருதப்படுபவரும், இஸ்லாமிய இயக்கத்தின் முன்னேற்றத்துக்குப் படு தீவிரமாக உறுதுணை வழங்கிய வீரவாளுக்குச் சொந்தக்காரருமான அபூ தர் இந்தப் பிறழ்வைப் பார்க்கிறார். இறையச்சத்தின், உண்மையின் வடிவமாய்த் திகழ்ந்த அலீ தனிமைப்படுத்தப்பட்டார்; இஸ்லாத்தின் எதிரிகள் கிலாஃபத் அமைப்பினுள் லாவகமாக உட்புகுந்து விட்டிருந்ததோடு, கரையான்கள்போல் இஸ்லாத்தைச் சிறுகச்சிறுக அரித்துக்கொண்டும் வந்தனர்.

 விடுதலையுணர்வுடன் சத்தியத்தின் தேட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒவ்வொருவரும் உதாசீனமாக ஓரம்கட்டப்பட்டனர்; அவர்களின் குரல் ஒடுக்கப்பட்டது. அரசியல் அரங்கிலிருந்து அலீயை ஓரமாக ஒதுக்கிவிட்டு கிலாஃபத்தின் அரியணையில் அபூ பக்கர் தானே ஏறி உட்கார்ந்துகொண்ட அந்த நாள் அபூ தர்ரை மிகவும் கலக்கமடையச் செய்தது; அவருக்குக் குலைநடுக்கத்தை அது உண்டுபண்ணிற்று. இஸ்லாத்தின் எதிர்காலம் இருண்டுவிட்டதுபோலும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மனத்துக்குப் பட்டது. என்றாலும், இஸ்லாம் எனும் ஊர்தி, எப்பேர்பட்ட இடர்களுக்கு மத்தியிலும், அதன் பிரதானப் பாதையில்தான் இன்னமும் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதிலும், முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உரிமைகோரல் புறக்கணிக்கப்பட்டுவிட்டபோதும் இஸ்லாமிய அமைப்புமுறை சிதறிப்போய்விடவில்லை என்பதிலும் அப்பொழுதும் அவர் உறுதியாகவே இருந்தார். என்னதான் அவர் சூடேறிப்போய் ஆக்ரோஷத்துடன் குமுறிக்கொண்டிருந்தாலும் தனது உதடுகளை அவர் மெளனம் எனும் முத்திரைகொண்டு அடைத்தவண்ணம் இருந்தார். உஸ்மானின் ஆட்சி அமைப்பு இஸ்லாத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியபோது பாட்டாளி வர்க்கமும், ஆதரவற்றோரும் அவமதிக்கப்பட்டனர். அவர்கள் உஸ்மான் மற்றும் முஆவியாவின் அரசவையில் புழங்கிக்கொண்டிருந்த சுரண்டல்வாதிகள், அடிமை வியாபாரிகள், பெரும் செல்வந்தர்கள், உயர் வர்க்க மேட்டுக்குடிகள் ஆகியோரின் காலடியின் கீழ் ஒடுக்கப்பட்டனர்.

வகுப்பு வேறுபாடுகளும் செல்வங்களின் தனிப்பட்ட குவிப்பும் உயிர்ப்பிக்கப்பட்டது. பேரபாயம் ஒன்றினூடாக அச்சுறுத்தலைச் சந்தித்துவந்த இஸ்லாம், நபிகளாரின் காலச் சூழலைவிட்டும், சராசரி மக்கள் போன்று அல்லது ஏழைபாழை, தேவையுடையோர் போன்று வாழ்ந்துவந்த அபூ பக்கர், உமரின் பாசாங்கற்ற தன்மை, எளிமையைவிட்டும் பெயர்ந்து சென்றது. இஸ்லாமிய ஆளுநரான முஆவியாவுக்காகப் பச்சை மாளிகை ஒன்றைக் கட்டுவதற்காக ஆயிரக்கணக்கான தீனார்கள் செலவிடப்பட்டன; மன்னர்களின் அரசவை போன்று தோற்றமளித்த ஓர் ஆட்சிமுறை அமலுக்கு வந்தது.

அபூ பக்கர், தனது வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்காக யூதப் பெண்மணி ஒருவரின் ஆடுகளுக்குப் பால் கறப்பவராக இருந்தார். இப்பொழுதோ, நபிகளாரின் கலீஃபாவான உஸ்மானுடைய மனைவிக்குச் சொந்தமான ஒரு காசுமாலை ஆப்பிரிக்காவில் வசூலாகிய மொத்த வரியில் மூன்றில் ஒரு பங்குக்குச் சமமாக இருந்தது. தனது தந்தையின் பதவியை துஷ்பிரயோகம் செய்த வாலிபன் ஒருவனை, வெறும் ஒரு குதிரைக்காக, நீதிமன்றப் படியேற வைத்தார் உமர். காரணம், அந்தக் குதிரையை அவர்கள் பலவந்தமாகத் திருட முயன்றார்கள். இத்தனைக்கும் அவனது தந்தை அவரது முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஆனால் உஸ்மானோ மர்வான் இப்னு ஹகமை, அதாவது நபிகளாரால் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட ஒருவனை, தனது ஆலோசகராக ஆக்கிக்கொண்டார். அதோடு ஃகைபர் ஜில்லாவையும், ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் வசூலிக்கப்பட்டுவந்த வரியையும் அவனது பொறுப்பின் ஓர் அங்கமாக, அவனுக்கே வழங்கினார்!

இந்த வெட்கக்கேடான காட்சிகளை எல்லாம் அபூ தர் அவதானித்துக்கொண்டே வருகிறார். மேற்கொண்டு இதை அவரால் சகித்துக்கொள்ள இயலவில்லையாதலால் மேற்கொண்டு அவரால் அமைதிகாக்கவும் இயலவில்லை. கலகத்தில் - ஆண்மையைப் பறைசாற்றிய அற்புதமான ஒரு கலகத்தில் – ஈடுபடுகிறார். அனைத்து இஸ்லாமிய நிலப்பகுதிகளிலும் உஸ்மானுக்கு எதிராகக் கலகத்தைத் தோற்றுவித்த ஓர் எழுச்சி அது. இவ்வெழுச்சியிலிருந்து வெளிப்பட்ட துடிதுடிப்பின் அதிர்வலைகளை மானுட சமூகச் சூழல்களில் இன்றளவிலும் நம்மால் உணர முடிகிறது. அபூ தர், இஸ்லாத்தின் அரசியல், பொருளாதார ஒருமையை ஏற்படுத்த முயன்றுகொண்டிருந்தார் எனும் அதே நேரத்தில் உஸ்மானின் ஆட்சி அமைப்போ மேட்டிமைவாதத்தை உயிர்ப்பித்துக்கொண்டிருந்தது. அபூ தர் இஸ்லாத்தை ஆதரவற்றோர், ஒடுக்கப்படுவோர், அவமதிப்புக்கு ஆளாகுவோருக்கான போக்கிடமாக நம்பினார்; எனினும், உஸ்மானோ இஸ்லாத்தை முதலாளித்துவத்துக்கான ஒரு கருவியாகவும், சுரண்டல்வாதிகள், செல்வச் சீமான்கள், மேல்தட்டு மக்களின் நலன்களைக் கட்டிக்காப்பதற்கான ஓர் பக்கபலமாகவும் நம்பினார்.

அபூ தர்ருக்கும் உஸ்மானுக்கும் இடையிலான இந்தப் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்தப் பாதையில் தனது இன்னுயிரை அறுதியாக இழந்தார் அபூ தர். “நீங்கள் பதுக்கிவைத்திருக்கும் இந்த மூலதனம், செல்வங்கள், தங்கம், வெள்ளி எல்லாம் அனைத்து முஸ்லிம்களுக்கிடையிலும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இஸ்லாத்தின் பொருளாதார, அறம் சார்ந்த முறைமைகளிலும், வாழ்வின் எல்லாவித அனுகூலங்களிலும் ஏனையவர்களுக்குக் கிட்டும் நன்மைகளில் அனைவருமே பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்.” என்று அபூ தர் முழங்கியவண்ணம் இருப்பார். ஆனால் உஸ்மானோ சடங்குகளிலும், வெளிப்பகட்டிலும், பக்திமான்கள்போல் பாசாங்கு செய்வதிலும், புனிதத்துவம் பேணுவதிலும் இஸ்லாத்தைப் பார்த்தார். பெரும்பான்மையினரின் ஏழ்மையிலும், சிறுபான்மையினரின் செல்வச் செழிப்பிலும் மதம் குறுக்கிட வேண்டும் என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இஸ்லாமியச் சமத்துவத்தின் மேம்பாட்டிற்காகப் போராட்டத்தை தொடங்கிய அபூ தர் தானும் சமாதானமடைய மாட்டார்; தனது விரோதியையும் சமாதானமடைய விடமாட்டார்.

அபூ தர்ரின் வியப்பூட்டும் வாழ்க்கையைப் பற்றி நான் எண்ணிப் பார்க்கிற, அவரது இறை வழிபாட்டை நான் அவதானிக்கிற தருணங்களிலெல்லாம், பாஸ்கல் (Pascal) என் நினைவுக்கு வந்துவிடுகிறார். பாஸ்கல் கூறுகிறார், “உள்ளத்துக்கு இருக்கும் பகுத்தறியும் திறனைச் சிந்தனையால் எட்டிவிட முடியாது; உள்ளமே இறைவனின் பிரசன்னம் குறித்து சாட்சி பகர்கிறது, சிந்தனை அல்ல; விசுவாசம் இப்படித்தான் உருக்கொள்கிறது.” அபூ தர் கூறுகிறார், “தளைகளற்ற இந்த மானுட இருப்பில் நான் கண்டுகொண்ட அத்தாட்சிகளினூடாக இறைவனை நோக்கி நான் வழிநடத்தப்பட்டேன். பகுப்பாய்வு, விவாதம் ஆகியவற்றின் வாயிலாக சிந்தனை ஆற்றலால் அவனது சாரத்தை எட்டிவிட முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில், அவை அனைத்தைவிட்டும் அவன் மிக்க மேலானவன். இன்னும், மனித கிரகிப்புக்குள் அவனை உள்ளடக்கிவிடுவதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை.” பாஸ்கல்போன்று அபூ தர்ரும் இறைவன்மீது விசுவாசம் கொண்டார்; உள்ளத்தினூடாக இறைவனுடன் உறவுகொண்டிருந்தார்; மேலும், நபிகளாருடனான சந்திப்பு ஏற்படுவதற்கு முன்பிருந்தே மூன்று ஆண்டுகளாக அவர் இறைவனை வழிபட்டுக்கொண்டிருந்தார்.

முதலாளித்துவத்தையும் செல்வத்தின் பதுக்கலையும் பற்றி அவர் பேசும்போதும், பரம ஏழைகளை அவர் பலமாக ஆதரித்தபோதும், மேல்தட்டு மக்கள், டமஸ்கஸ் மற்றும் மதீனாவின் அரண்மனைவாசிகள் ஆகியோருக்கு எதிராக அவர் செயல்பட்டபோதும் புரோடோன் (Proudhon) போன்று ஓர் தீவிர சமூகவியலாளரை (Socialist) அவர் ஒத்திருக்கிறார். எனினும், உண்மை யாதெனில், அபூ தர் வேறு; பாஸ்கலும் புரோடோனும் வெவ்வேறு. அபூ தர்ருக்கு இறைவனைத் தெரியும்; அந்த நாள்தொட்டு இறைப் பாதையிலான தனது இயக்கத்தை அவர் ஒருபோதும் நிறுத்திக்கொண்டதில்லை; தனது சிந்தனையிலோ செயலிலோ ஒரு கணம்கூட அவர் பலவீனத்தை வெளிப்படுத்தியது கிடையாது. அபூ தர்ரின் மனத் தூய்மை, பற்றுதல், வழிபாடு ஆகியவற்றுக்குப் புரோடோனும் சரி, அவரது நடவடிக்கை, துடிதுடிப்புக்குப் பாஸ்கலும் சரி ஈடிணையாகவே மாட்டார்கள். இஸ்லாமியக் கல்விக்கூடத்தில் அபூ தர் ஓர் முழுமையான மனிதனாகி விட்டிருந்தார். இந்த விவரணை ஒன்றே அவரது மகத்துவத்தைப் பறைசாற்றப் போதுமானது.

இஸ்லாமிய வரலாற்று வாசிப்பில் ஈடுபட்டிருக்கும் அநேக மக்களிடம் கீழ்க்கண்ட கேள்வி எழுவதற்குச் சாத்தியம் உள்ளது: இராணுவங்களின் அவ்வப்போதைய இயக்கங்கள்; சிற்சில இராணுவ வெற்றிகள்; சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு சிதறுண்டுபோன மிகப் பெரிய சாம்ராஜ்யம் ஒன்றின் உருவாக்கம் ஆகியவை தவிர்த்து இந்த இயக்கத்தின் மிக உன்னதமான விளைபலன் என்ன? இஸ்லாமிய இயக்கம் அதன் ஆரம்ப கட்டத்திலிருந்தே அரசியல் வேறுபாடுகளுக்கு முகம்கொடுத்தும் அதன் முக்கிய நோக்கத்திலிருந்து திசைதிருப்பப்பட்டும் வந்திருக்கிறது. இஸ்லாத்தின் அசல் தலைவர்களுக்கும்கூட இது நன்றாகவே தெரியும். இந்நிலையில், இஸ்லாமிய இயக்கத்துக்கும் அதை ஒத்த அல்லது அதைவிட பெருமளவில் வெற்றிகளைக் குவித்த வரலாற்றின் இன்ன பிற அரசியல், இராணுவ இயக்கங்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்க முடியும்? அப்படியென்றால், இஸ்லாம் என்னதான் செய்தது? நபிகளாரின், அவரது இறை விசுவாசமும் துணிவும் மிகுந்த பின்பற்றாளர்களின் பூரா போராட்டங்களும், தியாகங்களும் எத்தகைய பலன்களை ஈட்டித் தந்திருக்கின்றன? அவற்றில் இராணுவ வெற்றிகள் இருக்கின்றன என்றால், மதத்தை நாம் பார்க்கும் விதத்தில், அவையொன்றும் முக்கியத்துவத்துக்கு உரித்தானதாக ஆக முடியாது. குறிப்பாக, இந்த வெற்றிகள் எல்லாம் பனி உமய்யா, பனி அப்பாஸ் சுல்தான் வகையறாக்களால் ஈட்டப்பெற்றிருப்பதால் இஸ்லாத்தின் உண்மைகளோடு அவற்றுக்கு ஓர் அசலான, நேரடியான உறவுமுறை என்பது கிடையாது. 

இந்த அபிப்பிராயம் இவ்விடத்தில் குறைந்தபட்சம் சில கோணங்களிலாவது சரியாக இருக்கிறது. இராணுவங்களின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளை, இராணுவ வெற்றிகளை, இஸ்லாமியச் சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை எல்லாம் இஸ்லாத்தின் இலக்காக நாம் உருவகப்படுத்திவிடக் கூடாது; அவற்றை இந்த இயக்கத்தின் மகத்தான வெற்றிகளில் ஒன்றாகவும் கருதிவிடக் கூடாது. மதத்தை நாம் எப்படிப் பார்க்க வேண்டுமோ அப்படியே இஸ்லாத்தையும் பார்ப்போமானால் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட்டுவிடும் என்பதோடு இஸ்லாத்தின் மகத்துவம்மிக்க பலன்களும், வளர்ச்சியும், வெற்றிகளும் நம் பார்வைக்கு இன்னும் மலைப்பாகக் காட்சி அளிக்கும்.

படைப்புகளை அனைத்து தளங்களிலும் மேன்மைப்படுத்துவது, முன்னேற்றத்தையும், ஏறுமுகத்தையும் நோக்கி மனித வர்க்கத்தைக் கடமையாற்றப் பணிப்பது ஆகியவற்றுக்கான பொறுப்பைச் சுமந்திருக்கும் ஒரே காரணி மதம்தான். உயிரற்ற ஒன்றைத் தாவரமாகவும், தாவரம் ஒன்றைப் பிராணியாகவும், பிராணி ஒன்றை மனிதனாகவும் உருமாற்றியதன் பின்னணியில் எப்படி ஒரு தூண்டுசக்தி இருக்கிறதோ அதுபோன்று, பூரணத்துவத்தை அடைவதற்காக, படைப்புகளின் இந்த வியப்பூட்டும் கதையின் தொடர் ஓட்டத்துக்கு மதமும் ஒரு காரணமாக இருக்கிறது. தவிர, அவனோ அவளோ எட்டியே தீர வேண்டிய அறுதி நிலைக்கு மனிதர்களை அது இட்டுச்செல்வதோடு, ஞானோதயம் மற்றும் மனிதத் தன்மையினது மேன்மையின் உச்ச சிகரத்தில் மனித ஆன்மாவை அது சிறகடிக்கவும் வைக்கிறது. சொல்லப்போனால், அந்தத் தகைமையை விடவும் இன்னும் மேலதிக உயரத்துக்கு ஒருவரை அது உயர்த்தி நேரம், இடம் ஆகியவற்றுக்கு அப்பால் அவரை கடத்திவிடுகிறது. ‘பரிணமித்தல்’ எனும் ஏணியில் மனிதர்களை மேல்நோக்கி ஏறவைப்பதற்கு மதமே உந்துவிசையாகவும், வினை ஊக்கியாகவும், தூண்டுகோலாகவும் இருக்கிறது என்பதைக் காட்ட இந்த விவரிப்பை ஒருவர் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, ‘அசல் மனித’னை வார்த்தெடுக்கும் ஒரு தொழிற்சாலையே மதம். இதைத் தவிர மதத்திடமிருந்து வேறொன்றையும் நாம் எதிர்பார்க்கக் கூடாது.

இந்தத் திசையில் இஸ்லாத்தினால் வாகை சூட முடிந்ததா இல்லையா என்பதையும், மனித சந்தையில் தனது தயாரிப்பின் உன்னத உதாரணங்களையும் மாதிரிகளையும் அதனால் கடைவிரிக்க முடிந்ததா இல்லையா என்பதையும் இப்பொழுது நாம் பரிசீலனைச் செய்ய வேண்டும். புதிரான இந்த விவகாரத்தை ஆராய வேண்டுமெனில், முகவரியற்ற ஜனக்கூட்டத்திலிருந்து, ஒடுக்கப்பட்ட அடிமைகளிலிருந்து, சலிப்படைந்துபோன மக்களிலிருந்து வீறுகொண்டு எழுந்த சில ஆண்களையும் பெண்களையும் வரலாற்றின் விளிம்புகளில் ஒருவர் தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதாவது, சில மக்களின் பெயர்களைப் பதிவு செய்வதை வரலாறு எப்பொழுதும் ஓர் பேரவமானமாகவே கருதி வந்திருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட மக்களின் பெயர்களைத்தான் ஒருவர் துருவிக் கண்டடைய வேண்டும். வரலாறு என்பது சுல்தான்களின் அசத்தலான அரண்மனைகள் முன்பும், போர்க்களங்களிடமும், தங்கத்தைக் குவித்துவைத்திருக்கும் குபேரர்களின் வாயில் கதவுகளிலும், பலவந்தத்துக்கும்தான் பெரும்பாலும் மண்டியிட்டிருக்கிறது. ஆனால், இதே 'மேல்தட்டு-அடிவருடி' வரலாறு இப்பொழுது அரதப்பழசான கூடாரங்களையும் அரேபிய அடிமைகளின் பாழடைந்துபோன மண் வீடுகளையும் அரேபிய பாலைவனத்தின் ஊர் பேர் தெரியாத, செருப்பு அணியாத மக்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது; கிஃபார் கோத்திரத்து மனிதரான அபூ தர் போன்று, ஈரானைச் சேர்ந்த திக்கற்ற நபரான சல்மான் போன்று, கச்சடா அடிமையான பிலால் போன்று முகவரியற்ற, முக்கியத்துவமற்ற மக்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. வரலாறு, அவர்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் வயிற்றெரிச்சலுடனும் பொறாமையுடனும் பதிவுசெய்கிறது. கண்ணியத்திலும் உயர்வான கண்ணியத்தை அளித்து, மானிடத்தின் எதிர்காலச் சந்ததிகளுக்கு அவர்களைக் கொடையளிக்கிறது. அதே சமயம், இந்த 'ஃபிர்அவ்ன்-துதிபாடி' வரலாறு, 'அரசவையில் புழங்கும்' வரலாறு எதற்காக இப்படி பவ்யமாக மாறியது, எப்பொழுதிருந்து அப்படி மாறியது என்ற கேள்வியையும் கேட்டாக வேண்டும்.

         ஆக, இஸ்லாமிய இயக்கத்தால் ஈட்டப்பெற்ற பலன்களை மதிப்பிட வேண்டுமெனில் ஆசியாவிலோ ஆப்பிரிக்காவிலோ தெற்கு ஐரோப்பிய நிலப்பகுதிகளிலோ கிடைத்த வெற்றிகளை ஒருவர் பார்க்கக் கூடாது. மாறாக, சொற்பமான அதன் பின்பற்றாளர்களின் சிந்தனைகள், மூளைகள், உள்ளங்கள், ஆன்மாக்களின் அடிஆழத்தில் அந்த இயக்கம் ஏற்படுத்திய முன்னேற்றத்தை அவர் அறிந்துகொள்ள வேண்டும். இந்த மக்களின் ஆன்மாக்களில் மாற்றங்களை ஏற்படுத்தியதிலும், புதிய திசைகளில் அவர்களை வழிநடத்தியதிலும் இஸ்லாம் அடைந்த வெற்றிகள், அதிகாரத்தின் மீதும் உலகை விஞ்சும் இராணுவ ஆதிக்கத்தின் மீதும் அல்லாமல் உண்மை மீதும் மனிதத் தன்மை மீதும் அதீத மதிப்பு வைத்திருக்கும் மக்களுக்குப் பிரமாதமானதாகவும் அதிக விசாலமானதாகவும் வெகு வியப்புக்குரியதாகவும் காட்சியளிக்கும். ரோம், ஈரான் ஆகிய நாடுகளின் வரலாற்றில் கிட்டிய இஸ்லாமிய வெற்றிகளும் சரி, செங்கிஸ் கான், டாரா, நெப்போலியன், இந்த 'பிரசித்தமான மூளையற்றவர்க'ளை ஒத்த ஏனைய ஆக்கிரமிப்பாளர்கள் போன்றோருடன் ஒப்பிடுகையில் கிடைத்த இஸ்லாமிய வெற்றிகளும் சரி தனித்துவமானவை ஒன்றும் அல்ல. ஆனால், முன்பின் தெரியாத பாலைவனவாசியும் பகுதி-காட்டுமிராண்டியுமான ஜுன்தப் இப்னு ஜுனாதா போன்ற ஒருவரை ஒரு அபூ தர் அல்-கிஃபாரியாக மறுகட்டமைப்பு செய்வது என்பதுதான் வேறெந்த சித்தாந்தத்தையோ இயக்கத்தையோ ஒப்பிடுகையில் அலாதியானது. அபூ தர், சல்மான், அம்மார் இப்னு யாசிர், பிலால் முதலான நான்கு அல்லது ஐந்து மனிதர்களுக்குக் கல்வி புகட்டியதைத் தவிர இஸ்லாத்தின் விளைபலன் என்பது வேறெதுவும் இல்லை எனில், இஸ்லாத்தின் வெற்றிகளைப் பார்த்து பிரமிப்படைவதற்கு அதுவே ஒரு சிந்தைக்குப் போதுமானது.

ஆனால், துரதிருஷ்டவசமாக இஸ்லாமிய வரலாற்றுக்குக் கிடைத்திருக்கும் ஒரு கெளரவமாகக் கருதப்படும் சிறப்பான மனிதர்களின் பாரம்பரியங்கள் எல்லாம் வீணடிக்கப்பட்டுவிட்டன. ஏனெனில், சாட்சாத் அதே மதத்தின் பின்பற்றாளர்களுக்கு - சிந்தனைகளின் ஆற்றலாலும் உலகத்து ஆட்சியாளர்களின் வாள்களாலும் பராமரிக்கப்பட்டு வந்திருப்பவர்களான இவர்களுக்கு - அந்தச் சிறப்பான மனிதர்களைப் பற்றித் தெரியவில்லை; மனிதத் தன்மையின் உன்னத உதாரணங்களாய்த் திகழும் அவர்கள், பரிணமித்தல் எனும் படிநிலையில் எட்டியிருக்கும் உயர் நிலையை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை; அவர்களது வாழ்க்கைக் கதைகளின் சுருக்கமான விவரங்கள்கூட இவர்களுக்குத் தெரியவில்லை. இத்தகைய அலட்சியத்திலும் அக்கறையின்மையிலும் தொடங்கி இறையச்சம் மற்றும் வீரத்தின் குறியீடுகளும் இந்த நேர்வழிநின்ற முன்னோடிகளின் நற்பெயரும் நொறுங்கி நாசமானதுவரை, மானுடத்துக்கு எதிராகவும் உண்மைக்கு எதிராகவும் நாம் மரண அடிகள் கொடுத்துவிட்டோம். இதை ஈடுசெய்வது என்பது கடினம். மேலும், இந்தக் கோளாறில் அனைத்து முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கிறது.

         அதைவிட பிரமிபூட்டும் விஷயம், ஷியாக்களின் தலைவரான அலீ, அபூ பக்கர் ஆட்சியிலும் அவருக்குப் பின் வந்தவர் ஆட்சியிலும் அவமரியாதைப்படுத்தப்பட்டு அவரது தார்மீக உரிமைகோரல் புறக்கணிக்கப்பட்டபோது, பொதுவாகக் கூறினால், இஸ்லாமியப் புரட்சியின் தலைவர்களாகக் கருதப்பட்ட மக்கள் சத்தியத்துக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருந்ததோடு அதற்காகத் தொடர் அர்ப்பணிப்புகளிலும் ஈடுபட்டனர். ஆட்சி அமைப்புக்கு எதிரான அவர்களின் போராட்டங்களின் காரணத்தாலும் அவர்களது முயற்சிகளின் காரணத்தாலும்தான் மாசுமறுவற்ற இஸ்லாமானது வரலாற்றின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதியாகக் கூற முடியும். இஸ்லாமிய ஆட்சி அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு எதிரான அவர்களது போராட்டங்களினூடாக, துணிச்சலான எதிர்ப்பு நடவடிக்கைகளினூடாக - வேடதாரிகள், உலகாயதப் பித்தர்களின் வேட்கைகளுக்கிடையிலும் - சத்தியம் மற்றும் ஞானத்தின் ஊற்றுக்கண்ணை மானுடம் கண்டடைந்திட அவர்கள் வழிவகை செய்தனர்.

         அபூ தர் இந்த விதிவிலக்கான மக்களில் ஒருவர். மனித வர்க்கத்தால் இன்று ஏக்கத்துடன் எதிர்நோக்கப்படும் அத்தகைய தலைவர்களில், விடுவிக்கப்பட்ட இரட்சகர்களில் ஒருவர் அவர். ஆட்சி முறையானது அன்றைக்குப் பொருளியலை அனைத்துக்கும் அடிப்படையானதாகவும் அதியுணர்ச்சிகர விவகாரமாகவும் ஆக்கி, பொருளியல்சார் உலகில் ஓர் கடும் நெருக்கடியை உண்டுபண்ணிய தருணத்திலிருந்து அவரது அபிப்பிராயங்கள் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றன. இன்றைக்கு, மறுபடியும் அதே காட்சிகளை டமஸ்கஸ்ஸிலும் மதீனாவிலும் அவர்கள் மறு அரங்கேற்றம் செய்துகொண்டிருக்கின்றனர். தேவையுடையோரையும் அவமதிக்கப்பட்டோரையும் தன்னைச் சுற்றித் திரட்டிக்கொண்டு சுரண்டலுக்கும் 'பொருளாதார-வணங்கிக'ளுக்கும் தங்கப் பதுக்கல்காரர்களுக்கும் உயர்குடிகளுக்கும் எதிராக ஊர்வலத்தில் ஈடுபட்ட அபூ தர், உள்ளத்தைச் சூடேற்றும் தனது வார்த்தைகள், அபிப்பிராயங்களுக்கும் தனது மூர்க்கமான சொல்லாட்சிக்கும் இப்பொழுது உலக முஸ்லிம்களைச் செவிமடுக்க வைத்திருக்கிறார். அவரைத் தங்கள் சொந்த விழிகளாலேயே தொலைதூர வரலாற்றில் அவர்கள் பார்ப்பதுபோன்று ஆகியிருக்கிறது. ஒடுக்கப்பட்டோரையும் பரம ஏழைகளையும் மசூதியில் குழுமச்செய்து, அவர்களை உஸ்மானின் ஆட்சி அமைப்புக்கு எதிராகவும் பச்சை மாளிகைவாசிகளுக்கு எதிராகவும் தார்மீக ரீதியில் கிளர்ந்தெழச் செய்த அவர் முழக்கமிடுகிறார்,
"தங்கம், வெள்ளியைப் பதுக்கிவைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களே அத்தகையோர் ..." (9:34)

"முஆவியாவே! இந்த அரண்மனையை உன் கைக்காசில் நீ கட்டமைத்தால், அது ஊதாரித்தனம். அதையே மக்கள் பணத்தில் செய்தால் அது தேசத் துரோகம்."

"உஸ்மானே! ஏழைகளை நீ பரம ஏழைகளாக ஆக்கிவிட்டாய், பணக்காரர்களை பெரும் பணக்காரர்களாக ஆக்கிவிட்டாய்."


தொடர்ச்சி இரண்டாம் அத்தியாயத்தில் ...

Sunday, November 25, 2018

ஆசிரியர் அணிந்துரை

அபூ தர்: சமூக அநீதி ஏதிர்ப்பின் உத்வேகமூட்டும் குறியீடு
ஆசிரியர் அணிந்துரை

-    முஹம்மது எச். அல் ஆஸி

-    தமிழில்: சம்மில்



   ‘சமூக அநீதி எதிர்ப்பு’, ‘அதிகாரத்திடம் உண்மையை உரக்கப் பேசுதல்’ போன்ற பேசுபொருள்கள் எல்லாம் பதைபதைப்பை உண்டுபண்ணக்கூடிய, பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களாகவே காலம்காலமாக நிலைபெற்று வந்திருக்கின்றன. இந்தக் குறைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட சமூகத்துடனோ மதத்துடனோ சித்தாந்தத்துடனோ வரலாற்று யுகத்துடனோ மட்டுமே நம்மால் குறுக்கிவிட முடியாது. அடிப்படையில் இது மானுட இயல்புடனும் சமூகப் பெறுமானங்களுடனும் தொடர்புடைய ஒன்றாகும். அதிகாரமும் செல்வக் கொழிப்பும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற மேட்டிமை வகுப்பினரை, சமூகத்தின் தனவான்களை எதிர்க்கத் துணிவதால் தளிர்த்திடும் விளைவுகளைக் கூடியமட்டும் தவிர்த்துக்கொள்ளத் தலைப்படும் சுயநலப் போக்கு, அல்லது, சிலர் கூறுவது போன்று இயற்கை நிலை தனிமனித உளவியலிலும் வெகு மக்கள் தளத்திலும் ஆழமாகப் படர்ந்துவிட்டிருக்கிறது.

    பொருளாதார ஏற்றத்தாழ்வும், இனரீதியிலான ஓரவஞ்சனையும், நீதிக்கான அளவுக்கோலிலிருந்து அல்லது சமூக நீதியின் நியமங்களிலிருந்து பிறழ்ந்து சென்றுவிட்ட அரசாங்கப் பரிபாலனமும் இன்று அதிகாரபூர்வ கொள்கைகளாக நிலைகொண்டிருக்கின்றன என்றால் அதற்குக் காரணமாக, உடந்தையாக இருப்பவர்கள் முடிவெடுக்கும் முக்கியப் பொறுப்புகளில் வீற்றிருக்கும் உயர் அதிகாரிகள்தான். இவர்களின் குட்டுகளை அம்பலப்படுத்திவிட எத்தனிப்பதால் ஏற்படும் தீவிளைவுகளை சராசரி மனிதர் ஒருவர் – அவர் ஆணோ பெண்ணோ – தீவிரமாகக் கணக்குப் போட்டுப் பார்க்கிறார். தனது உத்தியோகத்தை இழக்க நேரிடலாம் அல்லது அரசாங்கத்தின் காபந்து முகமைகளோ காவல் துறையினரோ தன்மீது புனைவு வழக்குகளை இட்டுக்கட்டலாம் அல்லது போலிக் குற்றச்சாட்டுகளினூடே தான் சிறைவாசம் அனுபவிக்க நேரிடலாம் அல்லது நிசப்தமாகக் கொலைசெய்யவும் படலாம். கள யதார்த்தங்கள் நிழலாடிடும் இந்தப் பரந்துபட்ட வாக்கியங்கள், செல்வம் கொழிக்கும் சமூகங்களுடன் எந்த அளவுக்குப் பொருந்திப் போகிறதோ அதே அளவு அன்னக்காவடி சமூகங்களுடனும் பொருத்தம் பாராட்டத்தான் செய்கிறது. புராதனச் சமூகங்களிலும் நவீனச்  சமூகங்களிலும் ஒருசேர வேர்விட்டிருக்கும் ஓர் நிதர்சனத் தோற்றப்பாடு இது.

  பொருள்முதல்வாத, மதச்சார்பற்ற சமூகங்களைப் பொறுத்தவரை, சமூக நீதித் தளத்திலிருந்து பிறழ்ந்து செல்வோருக்கு எதிராக அறைகூவல் விடுப்பது என்பது பீதியை உண்டுபண்ணச் செய்யும் ஒரு காரியமாக அங்கு நிலைபெற்றுவிட்டது. சொல்லப்போனால், அந்தச் சமூகங்களிலெல்லாம் ‘பீதி உணர்வு’ என்பது மக்களின் இயல்பு வாழ்கையுடனேயே இரண்டறக் கலந்துவிட்டது; வெகு இயல்பான ஒரு மனப்பான்மையாக அவர்களிடையே அது உருக்கொண்டுவிட்டது. விதிவிலக்குகளும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்தன. என்றாலும், சர்வாதிகாரிகளின் யதேச்சதிகாரத்தையும் பொருளாதார ஜாம்பவான்களின் கொடுங்கோன்மையையும் அம்பலப்படுத்திவிடும் விஷயத்தில் “வாய்மூடி மௌனம் பேணிக்கொள்”ளும் மனோபாவமே பொத்தாம்பொதுவில் புழக்கத்தில் இருக்கிறது. இத்தகைய யதேச்சதிகாரிகளும் பெருமுதலைகளும் வக்கிரம் இழையோடும் தங்கள் நிர்வாகத்தின் குரூர முகத்தை ஜனரஞ்சகம் தொனிக்கும் கபடப் பிரச்சாரத்தினூடே மூடி மறைத்துக்கொண்டிருக்கின்றனர்.

      நமது இஸ்லாமிய வரலாற்றைப் பொறுத்தவரை, பொதுவாகச் சொல்வதென்றால், அதன் சர்வ முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி ஒன்றை நாம் அலட்சியப்படுத்திவிட்டோம் அல்லது அதுகுறித்துப் பாராமுகமாக இருந்துவிட்டோம் என்றுதான் கூறவேண்டும். தீர்க்கமான முறையில் அதனைப் பரிசீலித்திருந்தாலோ புரவயமானப் பகுப்பாய்வுக்கு அதனை உட்படுத்தியிருந்தாலோ பெறுமதிமிக்க படிப்பினை ஒன்றை அதனூடாக நாம் பெற்றுக்கொண்டிருக்கலாம். ஒட்டு மொத்த மானுடத்தையும் பீடித்திருக்கும் பகாசுரப் பிரச்சினை ஒன்றுக்கான ஆக்கபூர்வ படிப்பினையாக அது அமைந்திருக்கக்கூடும். அதிகார துஷ்பிரயோகத்தையும் செல்வக் கொழிப்பு, பொருளாதார வளங்களின் கையாடல்களையும் குவிமையமாகக் கொண்ட படிப்பினைதான் அது.

    கோத்திரரீதியாகவும் வம்சாவழிப் பகையாலும் பிளவுபட்டுக்கிடந்த, இஸ்லாத்தின் வெற்றிக்குப்பின் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிக்கொண்ட அரேபியக் குலங்கள் தொடர்பிலானப் பிரச்சினை ஒன்று நமது உயிரினும் மேலான அன்புத் தூதர்(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் பூதாகரமாக உருக்கொண்டு எழுந்தது. இந்தக் குலங்களுக்கு மத்தியிலான ‘அதிகாரக் குவிப்பு’, ‘அதிகாரப் பகிர்வு’ ஆகிய விவகாரங்களை, உள்ளார்ந்தக் குடிமை யுத்தம் ஏதும் மூண்டுவிடாமல் சுமூகமாகத் தீர்க்க வேண்டிய இக்கட்டுக்கு இஸ்லாமியச் சமூகம் தள்ளப்பட்டிருந்தது.

அதீத எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் புதுவரவாக இருந்ததாலும் இஸ்லாமிய மேலங்கியைப் பெயரளவில் தரித்திருந்த அவர்களிடையே கோத்திர மேட்டிமைவாத உணர்வும் (Class Consciousness) வம்சாவழிப் பூசல்களால் வியாபித்திருந்த பிளவுகளும் காத்திரமாக நிலைகொண்டிருந்ததாலும் குடிமை யுத்தங்கள் மூண்டு அதன் விளைவாக இஸ்லாமிய நிலப்பரப்புகள் துண்டாடப்பட்டுவிடக்கூடும் என்று முன்கூட்டியே கணித்திருந்ததாலும் அத்தகைய பாதகம் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காகவும் அபூ பக்கர், உமர் ஆகியோரின் தலைமைத்துவத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கோத்திர அந்தஸ்தை ஒரு கையிலும் இஸ்லாத்தின் மேலெழுந்தவாரியான அம்சங்களை மறு கையிலும் பற்றிக்கொண்டு இரண்டுக்குமிடையே ஊசலாடிக்கொண்டிருந்த தனிநபர்கள், கோத்திரங்களின் ஒற்றுமையையும் கட்டுக்கோப்பையும் உறுதிசெய்வதே இந்தத் தலைமைத்துவத் தேர்வின் பிரதான நோக்கம்.

  அபூ பக்கரின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமியச் சமூகத்தை பதற அடித்த – இஸ்லாத்தைத் துறப்பது அல்லது மறுதலிப்பது தொடர்பிலான – ரித்தா யுத்தங்களை(1) சற்று நினைவுகூர்ந்துப் பாருங்கள். அத்தகைய தகிப்பானச் சூழலிலும்கூட முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எவ்வித பங்கமும் ஏற்பட்டுவிடவில்லை. இதே உறுதிப்பாடு உஸ்மான் கலீஃபாவாகப் பதவி ஏற்றுக்கொள்ளும்வரை அப்படியே நீடித்தது. அதன் பிறகுதான் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. ஆழமானத் தெறிப்புகளும் கட்டுமீறிய பிறழ்வுகளும் முஸ்லிம் வெகுஜனக் கட்டமைப்பைத் துளையிட்டு உலுக்கியது உஸ்மானின் ஆட்சிக்காலத்தில்தான்.

    உள்விவரங்களுக்குள் எல்லாம் பிரவேசிக்க விரும்பவில்லை. சுருங்கக் கூறின், இருபத்துச் சொச்சம் வருடங்களாக நாபிகளாரைத் திணற அடித்துக்கொண்டிருந்த பனி உமய்யா பந்துக்கள் எல்லோரும் இப்பொழுது உஸ்மானைச் சூழ்ந்து கவிந்திருந்தனர். உஸ்மானின் ஆலோசகர்கள்; சிரியா, ஈராக் உள்ளிட்ட பகுதிகளின் ஆளுநர்கள் என்று இஸ்லாமிய ஆளுகையின் உயர்மட்ட பதவிகளை இவர்கள் சிறுகச்சிறுகக் கபளீகரம் செய்யத் தொடங்கினர். இந்தப் பரிணாமமானது, வருந்தத்தக்க விதத்தில், இஸ்லாமியச் சமத்துவம், சமூக நீதியின் அளவுகோலிலிருந்து ஆட்சியாளர்கள் பிறழ்ந்து செல்வதைப் பட்டவர்த்தனமாக அம்பலம் ஏற்றியது.

    ‘பணக்கார ஆளும் வர்க்க’த்தை முதன்முதலாக முஸ்லிம்கள் அவதானிக்க நேர்ந்தது இப்பொழுதுதான். இதையே நம் காலத்து இடதுசாரி அரசியல் பாஷையிலிருந்து இரவல்பெற்றுக் கூறுவதென்றால், ‘வர்க்க மேட்டிமைவாதப் பிரக்ஞை’யின் – Class Consciousness – ஒருவித சலனத்தை உம்மத் தன்னுள் சன்னமாக உணரத் தொடங்கியது. இந்த ஒவ்வாமைக்கு எதிராக அப்பட்டமாகவும் பொட்டில் அடித்தாற்போலும் உரிமைக்குரல் எழுப்பியவர்தான் அபூ தர். தனிப்பட்ட வாழ்வின் கறாரான கட்டுத்திட்டம், சமூக வாழ்வின் சமத்துவம் ஆகியவற்றின் சூட்சுமமான அளவுகோல்களைக்கூட ஆத்மசுத்தியுடனும் உன்னிப்புடனும் கடைபிடித்து ஒழுகியவர் இவர்.

    தீர்க்கமிகு குர்ஆனின் பின்வரும் ஆயத்தைத்தான் சங்கநாதமாக அவர் அடிக்கொருதரம் முழங்கிக்கொண்டே இருந்தார்:

    தங்கம், வெள்ளியை (ஒருங்கு திரட்டி) பதுக்கி வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிட மறுப்பவர்களுக்கு - வதக்கியெடுக்கும் வேதனை குறித்து நற்செய்தி பகர்வீராக - (பதுக்கிவைத்திருக்கும் செல்வங்கள் அனைத்தும்) அந்நாளில் சுட்டெறிக்கும் நெருப்புக் குண்டத்தில் பழுக்கக் காய்ச்சப்பட்டு அவர்கள் நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகுப்பகுதியிலும் (வேதனை விம்மிட) சூடு போடப்படும்; (ஏக நேரத்தில் அந்த அநியாயக்காரர்களிடம் சொல்லப்படும்:) ‘உங்களு(தடபுடல் வாழ்க்கை)க்காக நீங்கள் ஒன்றுதிரட்டி வைத்திருந்தப் பொக்கிஷங்கள் இவைதான்! (தன்முனைப்புடனும் தற்பெருமையுடனும்) நீங்கள் சேகரித்துக்கொண்டிருந்த உங்கள் பொக்கிஷங்களின் (தாளவியலா வேதனையை) இப்பொழுது சுவைத்துப் பாருங்கள்!!
                                                     (அல் குர்ஆன் 34:35)

       இந்த ‘இஸ்லாம் விரோத’ பொருளாதாரச் சேகரம் என்பது நபிகளாரின் ஆதர்சத்திலிருந்தும் அவருக்குப் பின் அவரை அடியொற்றி ஆட்சி செலுத்திய அபூ பக்கர், உமர் ஆகியோரின் ஆதர்சனங்களிலிருந்தும்  நிலைமாற்றம் அடைந்த ஓர் கொள்கைப் பிறழ்வாகும்.

   காத்திரமாக உருப்பெற்றுவந்த இந்தத் தனிப்பட்ட, அரசாங்கப் பிசகுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் பீறிட இருப்பதற்கானச் சமிக்ஞைகள் வெகுஜன முஸ்லிம்கள் புறத்திலிருந்து ஆங்காங்கே, படிப்படியாக வெளிப்படத் துவங்கின. நினைவில் இறுத்திக்கொள்ளுங்கள், கலீஃபாவாகப் பதவி ஏற்றுக்கொண்ட சற்றைக்கெல்லாம் அபூ பக்கர், உமர் ஆகிய இரண்டு ஷெய்குகளை அடியொற்றி நடக்கப் போவதாகவும் அவர்களின் தனிப்பட்ட, அரசாங்கக் கொள்கைகளை அட்சரம் பிசகாமல் பின்பற்றப்போவதாகவும் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டவர் தான் உஸ்மான். அவற்றின் அநேகக் கூறுகளை தனது முதல் ஆறு ஆண்டுகால ஆளுகையில் அவர் பின்பற்றி ஒழுகிடவும் செய்தார். எனினும், அவரது இரண்டாம் ஆறு ஆண்டுகால ஆளுகையில்தான் தனது முந்தைய இரு ஆட்சியாளர்களின் கட்டுத்திட்டமான வாழ்க்கைப் போக்கிலிருந்தும் தன்னலமற்ற கொள்கைகளிலிருந்தும் தன்னை உள்ளும் புறமுமாக அவர் அந்நியப்படுத்திக்கொண்டார்.

   இப்படி, வல்லோன் இறைவனால் வகுத்தளிக்கப்பட்டிருக்கும் நெறி முறைகள், அளவுகோல்களுடன் கிஞ்சித்தும் இயைபுபாராட்டாத இந்த முரண்பாட்டுக்கு உஸ்மான், முஆவியா உள்ளிட்டோரே பொறுப்புதாரிகளாக ஆகிவிடுவதன் பின்னணியில்தான் இவர்களுக்கு எதிராக அபூ தர் தெருவில் இறங்குகிறார்; இவர்களை எதிர்த்துக் கேள்விக் கணைகள் தொடுக்கிறார்.

   இந்தச் சூழலில்தான் அவர் அதிகாரத்திடம் உண்மையை உரக்கப் பேசுகிறார்; சமூக அநீதி எதிர்ப்பின் உத்வேகமூட்டும் குறியீடாக உருவெடுக்கிறார்.

    தன்னம்பிக்கை, தீரம், சங்கல்பம் ஆகியவற்றின் பூரண வெளிப்பாடாய்த் திகழ்ந்திருந்தும்கூட சண்டித்தனமாகக் கீழடங்க மறுத்தாரே அன்றி அவர் கிளர்ச்சிகளில் ஈடுபடவில்லை; இஸ்லாமியச் சமூகத்துக்கிடையே காழ்ப்புணர்வை வளர்த்துவிடவும் இல்லை. இன்னொரு விஷயத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அன்றைய தேதியில், எவரும் லகுவில் சென்று சந்தித்து உரையாடுபவராகவே கலீஃபா உஸ்மான் இருந்தார். இன்றைய ஆட்சியாளர்கள் போன்று இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தொழிற்படும் ஆஜானுபாகு காவலர்களின் பாதுகாப்பிலோ அடுக்கடுக்கான பந்தோபஸ்து ஏற்பாடுகளின் உத்தரவாதத்திலோ அவர் சஞ்சரித்துக்கொண்டிருக்கவில்லை.

    நம் இஸ்லாமிய வரலாற்று விவரங்களுக்குள் நாம் பிரவேசிக்கும் போதும் வளப்பான அவ்வரலாற்றுப் பகுப்புகளில் சில காலக்கிரமத்தில் அசட்டை செய்யப்பட்டுவிட்டன அல்லது உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் புறந்தள்ளப்பட்டுவிட்டன என்பதை அறிந்துகொள்ளும்போதும் வேதனையும் வருத்தமும் மனத்தைக் கவ்விக்கொள்கின்றன. இந்த வரலாற்று விவரங்களை எல்லாம் திறந்த மனத்துடனும் வெளிப்படைத் தன்மையுடனும் அணுகி, நம் வரலாறு அதன் சாதகங்களையும் பாதகங்களையும் ஒருங்கே பூண்டிருக்கிறது எனும் யதார்த்தத்தை முஸ்லிம்கள் கிரகித்துக்கொண்டிருந்தால் எத்துணை அனுகூலமாக இருந்திருக்கும்.

    தலைசிறந்த, மகத்துவம்மிக்க ஆட்சியாளர்களை நம் வரலாறு நமக்குக் கொடையளித்திருக்கிறது எனும் அதே நேரத்தில் மகத்துவம் குன்றிய ஆட்சியாளர்களும் அதன் பக்கங்களில் சிதறிக் கிடக்கத்தான் செய்தனர். மாசுமறுவற்றவர்கள் என்று யாரும் கிடையாது. குர்ஆன், சுன்னாஹ்வைத் துலாக்கோலாகக் கொண்டே இவர்கள் எல்லோரையும் நாம் பரீட்சித்துப் பார்க்க வேண்டும். இவர்களில் ஏதேனும் ஒரு ஆட்சியாளர் தவறுகள் இழைத்திருந்தால், அவற்றை இனங்கண்டு கொண்டு அவற்றிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள நாம் முற்பட வேண்டும். அப்படிச் செய்வதாலொன்றும் நம் இஸ்லாமிய விழுமியங்களோ அதுசார்ந்த நம் அறவாழ்வோ சீர்குலைந்துவிடாது.

   இஸ்லாத்துக்கும் இஸ்லாமிய வரலாற்றுக்கும் இடையிலான வேறுபாடு என்பது கிரகித்துக்கொள்ள இயலா சிரமசாத்தியமான ஒரு கருத்துப்படிமமாக இன்றைய முஸ்லிம்களிடையே வேரூன்றியிருக்கிறது. இஸ்லாம் என்பது அப்பழுக்கற்றது; சம்பூர்ணமானது. இஸ்லாமிய வரலாறோ பழுதுகள் நிரம்பியது; அஷ்டகோணலானது. நமது வரலாற்றில் மண்டிக்கிடக்கும் பழுதுகளை இனங்கண்டுகொள்ளத் தவறுவது என்பது இஸ்லாத்தையே களங்கம் மிக்கதாகச் சித்தரித்துக் காட்டும் அளவுக்குப் பாராதூரமான ஓர் அசட்டை ஆகும். இஸ்லாத்தின் ‘பூரணத்துவ’ பரப்பெல்லைக்குள் நமது வரலாற்றை உள்ளடக்க முயல்வதும் அதுபோன்று எதிர்விளைவுகளை உண்டுபண்ணக் கூடியது தான்.

    முத்தாய்ப்பாக ஒருசில வாக்கியங்களை இங்கே பகிர்ந்துகொள்ள விளைகிறேன். வரலாறு குறித்த நமது புரிதலின் போக்கில் அதிகாரம் என்பது இன்னமும் செல்வாக்கு செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது. அதிகாரத்தின் தராசு கொண்டே சஹாபாக்களின் தராதரத்தை நாம் நிர்ணயித்துக்கொண்டிருக்கிறோம். சஹாபாக்களை ‘அதிகாரத்தின் அடிப்படையில் தரம்பிரி’க்கும் போக்கிலிருந்து என்றைக்கு நம்மை நாமே விடுவித்துக்கொள்கிறோமோ அன்றைக்குத்தான் பக்குவமடைந்த ஓர் உம்மத்தாக நம்மால் பரிமளிக்க முடியும்.

     இதனைத் துணிச்சலாகவும் ஆணித்தரமாகவும் பதிவுசெய்துகொள்கிறேன்!

குறிப்புகள்:

1.  ரித்தா யுத்தங்கள்: வரலாற்றுப் புத்தகங்கள் இவற்றை ‘ஹுரூப் அர்-ரித்தா’ என்பதாகப் பதிவுசெய்திருக்கின்றன. ‘ரித்தா’ என்பதற்கு மார்க்கத்தின் போதனைகள், கட்டளைகள், கொள்கைகளை முற்றாகத் துறத்தல் அல்லது நிராகரித்தல் அல்லது கைவிடுதல் என்பது பொருளாகும்.