Sunday, June 19, 2016

ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம் - பாகம்: 2

ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம்

பாகம் - 2

-    கலாநிதி ஸஃபர் பங்காஷ்

தமிழில்: உவைஸ் அஹ்மது




ஹரமின் புனிதத்துவமும் பாதுகாப்பும்:

ஹஜ் என்பது உம்மத்தின் வருடாந்திர சம்மேளனம். கஅபாவை இலட்சோபலட்ச முஸ்லிம்கள் வலம் வருவதே (தவாஃப்) ஒரு மாபெரும் பேரணிதான். அதில் அவர்கள், ஒரே அதிகாரச்சக்தியான அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலாவைத் தவிர்த்த மற்றெல்லா சக்திகளையும் மறுத்து உரைக்கின்றனர். உண்மையில், ஹஜ்ஜின் கிரியைகள் அனைத்துமே உம்மத்தின் பேரணிதான் என வகைப்படுத்தலாம். சஃபா-மர்வா குன்றுகளுக்கு இடையிலான ஓட்டத்தை (சயீ) வேறெப்படி வருணிப்பது? உயர்ந்து நிற்கும் ஜபலுர் ரஹ்மாவின் கீழே அரஃபா பெருவெளியில் ஒன்று கூடுவது, ஒரு பேரணியே அன்றி வேறென்ன?

இறைநம்பிக்கையின் அடிப்படைத் தூண்களுள் ஒன்றுதான் ஹஜ். அதை வாழ்நாளில் ஒரு முறையேனும் நிறைவேற்ற வேண்டுமென்பது சகல முஸ்லிம்கள் மீதும் கடமையாகும். அப்பயணத்தை மேற்கொள்ள வசதியற்றோருக்கு மாத்திரமே விதிவிலக்கு உண்டு. இதுபற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

"மேலும், ஹஜ் செய்யுமாறு மக்களுக்கு பொது அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் நடந்தும் ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் பயணம் செய்து உம்மிடம் வருவார்கள்; அவர்கள் ஒவ்வொரு ஆழமான கணவாயிலிருந்தும் வருவார்கள். அங்கு தங்களுக்கு நன்மையளிப்பவற்றை அவர்கள் காணட்டும். மேலும், அல்லாஹ் அவர்களுக்கு அருளிய கால்நடைகள் மீது அந்தக் குறிப்பிட்ட நாட்களில் அவனது பெயரைக் கூறட்டும் (மற்றும் அறுக்கட்டும்)."
(அல் குர்ஆன்: 27:28)

இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ள கருத்துச் சூழலானது, புனித இல்லத்துக்கு யாத்திரை செல்வோருக்காக அதைப் பாதுகாப்பான இடமாக ஆக்கும் நடவடிக்கையை ஒட்டியே அமைந்துள்ளது. என்வே, அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா கூறுகிறான்:

"மேலும் நினைவுகூறுங்கள், நாம் இந்த (இறை) இல்லத்தை மக்களுக்கு ஒரு ஒன்று கூடும் மையமாகவும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்....." 
(அல் குர்ஆன்: 2:125)

மற்றொரு வசனத்தில் குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

"திண்ணமாக, மனிதர்களுக்காக அமைக்கப்பெற்ற முதல் சரணாலயம் பக்காவில் (மக்கா) உள்ளதேயாகும், அருள்நலம் வழங்கப்பட்டதாகவும் அகிலத்தாருக்கு வழிகாட்டுதலாகவும் அது இருக்கிறது."
 (அல் குர்ஆன்: 3:96)

ஹஜ்ஜுக் காலத்தில் பாதுகாப்பும், அபயமும் அதிமுக்கியமானவை; அத்தியாவசியமானவை. எனவேதான் அல்லாஹ், தன் அளவிலா ஞானத்தாலும் கருணையாலும், அவற்றைப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் கூட நீட்டித்திருக்கிறான். ஆம், புனித யாத்திரையின் போது பறவைகளையோ, பிற விலங்குகளையோ வேட்டையாடுதலை (அல்லது காயப்படுத்தலை) தடுத்து குர்ஆன் திட்டவட்டமான போதனையை வழங்குகிறது:

"இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் ஹஜ் மேற்கொள்ளும் நிலையில் வனவிலங்குகளைக் கொல்லாதீர்........."  
(அல் குர்ஆன்: 5:95)

அடுத்த வசனத்திலேயே இது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது:

"நீங்கள் ஹஜ் மேற்கொள்ளும் நிலையில் இருக்கும்வரை, நிலத்தில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது"  
(அல் குர்ஆன்: 5:96)

ஹஜ்ஜின் பாதுகாப்பு மற்றும் அபய அம்சங்கள் குர்ஆனில் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகின்றன. அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா மீண்டும் அத்தியாயம் அல்-மாயிதாவில், இறை நம்பிக்கையாளர்களுக்கு பின்வருமாறு கட்டளையிடுகிறான்:

"இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் சின்னங்களையோ, சங்கைக்குறிய மாதத்தையோ, பலிப் பிராணிகளையோ, (அவற்றின்) அடையாள மாலைகளையோ அவமதிக்காதீர். இன்னும், இறைவனின் கிருபையையும் திருப்பொருத்தத்தையும் நாடிப் புனித இல்லம் (கஅபா) நோக்கிச் செல்வோரையும் (அவமதிக்காதீர்)...." 
(அல் குர்ஆன்: 5:2)

பாதுகாப்பு-அபயம் எனும் இரட்டை அம்சங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுவதற்குக் காரணம், ஹஜ்ஜானது உம்மத்தின் ஒற்றுமையையும், வேற்றுமையையும் குறித்து நிற்கிறது. இந்த உம்மத், ஆன்மீக வாழ்வை நோக்கிய தந்து பயணத்தில் இறைநம்பிக்கையின் மெய் வெளிப்பாடுகளை உணர்ந்துகொள்வதற்கு, பாதுகாப்பும் அபயமும் மிக்கதொரு சூழல் முதன்மை முக்கியத்துவம் கொண்டது. அத்தகையதொரு சூழலில்தான் உம்மத்தின் மொழியியல், கலாச்சார மற்றும் புவியியல் வேற்றுமைகளுக்கு இடையே ஒற்றுமை இணக்கத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். இந்த சிந்தனை இணக்கம் வளர்ந்து செயல் இணக்கத்துக்கு வழி வகுக்கும். இத்தகு குர்ஆனிய அடிப்படையிலேயே உலகில் சமத்துவத்தையும், நீதியையும் நிலை நாட்ட முடியும்.

ஆயிரக்கணக்கான இறைத்தூதர்களின் தூதுத்துவப் பணியைப் பொறுத்தவரை, அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலாவின் ஏக ஒருமையைப் பிரகடனஞ்செய்வதே அவர்கள் அனைவருக்கும் முதன்மைக் கடமையாக இருந்திருக்கிறது. மற்றெல்லா கடந்தகால, நிகழ்கால அதிகாரமும் தீர்க்கமாக, ஆணித்தரமாக நிராகரிக்கப்பட்டது. இதன் இயல்பான விளைவாக, ஷிர்க் என்பது (அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது) அல்லாஹ்வினால் மன்னிக்கப்படாத ஒரே பாவமாகி விடுகிறது. எனவே, ஒரு முஸ்லிம் இவ்வுலக விவகாரங்களிலிருந்து விலகி அல்லாஹ்வின் இல்லத்தை (கஅபா) நோக்கிச் செல்லும் புலம்பெயர்வாக (ஹிஜ்ரா) விளங்கும் ஹஜ்ஜானது, தெள்ளத் தெளிவாக இணைவைப்பவர்களை விட்டுப் பொறுப்புவிலகல் பிரகடனம் செய்யப்படும் சூழலிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இதுகுறித்து எவ்வித சந்தேகத்திற்கும் இடந்தராத வகையில் குர்ஆனியக் கட்டளைகள் அமைந்துள்ளன:

"மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் சார்பாக மனிதர்கள் யாவருக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு யாதெனில், திண்ணமாக அல்லாஹ்வும், அவனது தூதரும் இணை வைப்போரை (முஷ்ரிகீன்) விட்டுப் பொறுப்பு விலகி விட்டார்கள்.........."
(அல் குர்ஆன்: 9:3)

அல்லாஹ் பின்வருமாறு கட்டளையிடும் போது இந்தக் கருத்துப் பொருள் மேலும் ஆழமாக எடுத்துச் செல்லப்படுகிறது:

"இணை வைப்பவர்கள் அசுத்தமானவர்களே (நஜஸ்). எனவே, இந்த ஆண்டுக்குப் பிறகு அவர்கள் மஸ்தித் அல்-ஹரமை நெருங்க வேண்டாம்........"
(அல் குர்ஆன்: 9:28)

அன்று முதலே, இவ்வாறு மக்காவின் எல்லைகளுக்குள் இணை வைப்பவர்களுக்கு நுழைவு மறுக்கும் தடை தொடர்ந்து வருகிறது. இவ்வாறிருக்க, சவூதுக் குடும்பமோ, இந்தக் குர்ஆனிய விதியையும் அப்பட்டமாக மீறியுள்ளது. மக்காவுக்கான மாநகர வடிவமைப்புப் பெருந்திட்டம் அமெரிக்காவின் போர்ட்லாந்தில் (ஆரிகான்) உள்ள போர்ட்லாந்து மாகாண பல்கலைக் கழகத்தின் நகர்ப்புறத் திட்டமிடல் துறையிடமே ஒப்பந்தத்துக்கு விடப்பட்டுள்ளது. அத்துறைக்கு எகிப்திய முஸ்லிம் ஒருவரே தலைமை வகிக்கிற போதிலும், அவரது சகாக்களுள் பெரும்பாலானோர் முஸ்லிம் அல்லாதவர்களே. ஸியோனிஸ்டும், இணைப் பேராசிரியருமான ஒருவரும் அதில் அடக்கம். அந்த ஸியோனிஸ்டுப் பேராசிரியர், கடந்த சில வருடங்களில் பலமுறை சவூதி அரேபியாவுக்கு வந்து சென்றிருக்கிறார். அவர் 'கெளரவ முஸ்லிம்' பட்டம் கொடுக்கப்பட்டு மக்காவினுள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. மேலும், மெல்லிய 'இஸ்லாமியப்' போர்வையின் கீழ், அமெரிக்க-பிரிட்டிஷ் கட்டுமான கம்பெனிகளையும் தொழில்துறை ஆலோசனை நிறுவனங்களையும் மக்கா-மதீனாவில், ஏன் மஸ்ஜித் அல்-ஹரமிலேயே கூட, செயல்பட சவூதிகள் அனுமதித்திருப்பது மூலம், குர்ஆனியப் போதனைகளை அப்பட்டமாக அவமதித்துள்ளனர்.

சவூதுக் குடும்பம் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் ஹரமைனைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தது முதல், இரு புனிதத் தளங்களின் சேவகன் (ஃகாதிமுல் ஹரமைன்) எனும் பட்டத்தை தனக்குத் தானே வழங்கிக் கொண்டது. தற்போதைய மன்னர் ஃபஹது(8) சமீபத்தில் சூட்டிக்கொண்டது தான் இந்த 'சேவகன்' பட்டம். அவரது இஸ்லாத்துக்கு முரணான வாழ்க்கைப் பாணி - மது அருந்துதல், சூதாட்டம், விபச்சாரம் எனப் பலவும் வெளிச்சத்துக்கு வந்தன - பற்றிய விமர்சனம் அதிகரிப்பதாலும், அதன் விளைவாக அவரைச் சூழ்ந்துள்ள எதிர்மறை விளம்பரத்தாலுமே அவர் இதைச் செய்தார். கடந்த காலத்தில், 'ஹரமைனின் காப்பாளர்கள்' (ஹாஃபிழுல் ஹரமைன்) என்றே அடுத்தடுத்து வந்த சவூதி மன்னர்கள் தங்களை அழைத்துக் கொண்டிருந்தனர். யார் புனிதத் தலங்களைக் காத்துப் பராமரிக்கவேண்டும் என்பதுபற்றி திருக்குர்ஆன் தெளிவுபடக் கூறுகிறது:

"எவர் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு முறையாகத் தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்சாமல் இருக்கின்றாரோ அத்தகையவரே இறை இல்லங்களைப் பராமரிப்பவராய் (அவற்றின் ஊழியர்களாய்) இருக்க முடியும்! அத்தகையோரே நேர்வழி நிற்பார்கள் என எதிர்பார்க்க முடியும்."
(அல் குர்ஆன்: 9:18)

தற்போதைய மன்னர் உட்பட சவூதி மன்னர்கள் அனைவருமே நியமமாகத் தொழுகையைப் பேணி, ஸ்கத்தை வழங்கி இன்னபிற வழிபாடுகளைச் செய்து வருகிறார்களென்று வைத்துக் கொண்டாலும், அவர்கள் 'அல்லாஹ்வைத் தவிர வெறெவருக்கும் அஞ்சாதிருத்தல்' என்ற நிபந்தனையைப் பூர்த்தி செய்வதில்லை.

பாகிஸ்தானியர், பங்களாதேஷியர், ஜோர்டானியர், மொராக்கோ நாட்டவர், இப்போது எகிப்தியர் என சவூதுக் குடும்பம் எப்போதும் தனது பாதுகாப்புக்கு வெளிநாட்டுக் கூலிப்படைச் சிப்பாய்களையே சார்ந்திருக்கிறது. (9) அதிலும் குறிப்பாக, மக்காவில் நிகழ்த்தப்பெற்ற படுகொலைக்குப் பிறகு, சவூதுக் குடும்பம் தனது பாதுகாப்புக்காக பெரும் படைப்பிரிவுகள் அடங்கிய எகிப்து மற்றும் மொராக்கோ துருப்புகளைக் கூலிக்கு அமர்த்தியுள்ளது. (10)
இந்த சவூது குடும்பம், இன்று இஸ்லாத்தின் இரண்டு மிகப்பெரும் எதிரிகளான அமெரிக்கா மற்றும் ஸியோனிஸ்டுகளின் நலங்களுக்கு முழுமையாக அடிபணிந்து சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. இதனால், ஹரமைனை நிர்வகிப்பதற்குச் சிறிதும் அருகதையற்றதாய் ஆகிவிட்டுள்ளது. அமெரிக்காவும், அதன் கள்ளக்குழந்தை இஸ்ரேலும் தான் இன்று குஃப்ரு சக்திகளின் பிரதிநிதிகளாய் விளங்குகின்றன. அவையிரண்டும் தான், உலக அரங்கில் இஸ்லாமிய மீளெழுச்சியின் எவ்வித வெளிப்பாட்டையும் முறியடிக்கப் போவதாய் பகிரங்கமாக சூளுரைத்திருக்கின்றன. இன்னும் தெளிவாகச் சொன்னால், உலக அளவில் அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன், பிரான்சு, சோவியத் யூனியன், இந்தியா, சீனா முதலான குஃப்ரு சக்தியின் பிரதிநிதிகள் தங்களது இஸ்லாமிய எதிர்ப்புச் சிலுவை யுத்தத்தை நடத்துவதற்குக் கூட்டாளிகளாக சவூதி அரேபியா, எகிப்து, ஜோர்டான், மொராக்கோ, குவைத், ஈராக், பாகிஸ்தான், இந்தோனீசியா போன்ற முஸ்லிம் உலக அரசுகளுடன் கைகோர்த்துள்ளன. இந்த இஸ்லாமிய எதிர்ப்புச் சிலுவை யுத்தத்தில் சவூதுக் குடும்பமே முன்னணியில் நிற்கிறது - தனது பொருளாதார வளங்களைப் பயன்படுத்துவதிலும் சரி; அமெரிக்காவின் இராணுவ, அரசியல், பொருளாதார நலங்களுக்கு முழுமையாக அடிபணிந்து சேவையாற்றுவதிலும் சரி சவூதுக் குடும்பம் வெளிப்படுத்திவரும் இத்தகு நடத்தை குறித்த குர்ஆனின் கண்டனம் மிகத் தெளிவாக உள்ளது:

"அவர்களிடம் கூறுவீராக, 'அல்லாஹ்வை விடுத்து, உங்களுக்கு இழப்பையோ, லாபத்தையோ அளிப்பதற்குச் சக்தியற்றதற்கா நீங்கள் பணிவிடை செய்கிறீர்கள்?'"
(அல் குர்ஆன் 5:76)

முஸ்லிம்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் தங்களது பாதுகாப்பு நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவேண்டாம் எனக் கூறி அதை குர்ஆன் மிகத் தெளிவாகத் தடைசெய்துள்ளது (அல் குர்ஆன் 5:51). மேலும், "உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்கள் மற்றும் நிராகரிப்பவர்களுள் (காஃபிரூன்) எவர்கள் உங்களுடைய மார்க்கத்தைக் கேலிக்கும், விளையாட்டுக்கும் உட்படுத்துகிறார்களோ அவர்களை" உங்களது உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அது முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது (அல் குர்ஆன் 5:57). ஏன்?... ஏனெனில், அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலா குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:

"திண்ணமாக, மர்யமுடைய குமாரர் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறுபவர்கள் சந்தேகமின்றி நிராகரித்தவர்களாகி விட்டார்கள். உண்மையில் மஸீஹ் இப்படித்தான் கூறியிருந்தார்: 'இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்!' எவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறாரோ, திண்ணமாக அல்லாஹ் அவருக்குச் சுவனத்தைத் தடைசெய்திருக்கிறான். அவருடைய இருப்பிடம் நரகமாகும். ஆம், அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை. 'நிச்சயமாக, அல்லாஹ் மூவரில் மூன்றாமவன்' என்று கூறியவர்களும் திண்ணமாக நிராகரிப்பவர்களாகி விட்டார்கள். உண்மையில் ஒரே இறைவனைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை."

(அல் குர்ஆன்: 5:72, 73)

மேற்கண்ட வசனங்களிலிருந்து, எவர்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறார்களோ அவர்கள் ஷிர்க் வைக்கின்றனர் என்பதையும், அதனால் நிராகரிப்பவர்களாகி விடுகின்றனர் என்பதையும் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இன்று தங்களை யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் பெரும்பாலான மக்கள் இந்த வகைப்பாட்டிலேயே அடங்குவர். அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கின்றனர்; அல்லாஹ்வின் தீனை (இஸ்லாம்) கேலிக்குரியதாக ஆக்குகின்றனர்; அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு எதிராகக் கலகம் செய்து முஸ்லிம்கள் மீது கடும் பகைமை காட்டுகின்றனர். எனினும், இதுவெல்லாம் எதிர்பார்க்க வேண்டிய விடயம்தான். ஏனெனில், அல்லாஹ் சுப்ஹானஹூ வதஆலாவே இறை நம்பிக்கையாளர்களுக்குப் பின்வரும் எச்சரிக்கையை குர்ஆனில் வழங்கியிருக்கின்றான்: "திண்ண்மாக மனிதர்களிலே யூதர்கள் (என்பதாக தங்களை நம்பிக்கொள்பவர்கள்) மற்றும் இணைவைப்பவர்கள் தான் இறைநம்பிக்கையாளர்களுக்கு மிகக் கடும் பகைவர்களாக இருப்பதை நீர் காண்பீர்....." (5:82). உண்மையில், அவர்களது பகைமை முஸ்லிம்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அல்லாஹ்வுக்கும் அவர்கள் பகைவர்தான். காரணம், அவர்கள் அல்லாஹ்வை நம்ப மறுக்கின்றனர்; பூமியில் சீர்கேட்டைப் பரப்புகின்றனர்; மற்றும், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றனர். ஆதலாலேயே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்: "இறைநம்பிக்கை கொண்டோரே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்......" (60:1).

இவ்வாறிருக்க, நாம் சவூதுக் குடும்பத்தின் - குறிப்பாக, தற்போதைய ஆட்சியாளர் ஃபஹதின் தலைமையிலுள்ள அக்குடும்பத்தின் - சரித்திரப் பதிவேட்டை ஆய்வு செய்யும்போது, அது குஃப்ரு சக்திகளோடு நெருங்கி அணி சேர்ந்திருப்பதையும் அல்லாஹ்வின் எதிரகளுக்காக உழைத்து வருவதையும் காண்கிறோம். இன்று மேற்கத்திய ஊடகத்தில் இஸ்லாமும், முஸ்லிம்களும் வழமையாகவே ஏளனஞ் செய்யப்பட்டு வருகின்றனர். இஸ்லாத்தின் உயர்வுக்காகவும், அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கஸ் செய்வதற்காகவும் உழைக்கின்ற முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது விரோதம் குறித்து வெள்ளை மாளிகைத் தலைவரும் அவரது நிர்வாகமும் இரகசியங் காப்பதில்லை. எனினும், 'ஹரமைனின் பாதுகாவலர்கள்' என சுய பட்டம் சூட்டுக்கொண்டுள்ள இவர்களுக்கு அதில் தவறேதும் தெரிவதில்லை. அது மட்டுமல்ல, அமெரிக்க அங்கீகாரம் பெற்ற இஸ்லாத்தை முன்னிறுத்தவும் இவர்கள் கடினமாக உழைக்கின்றனர். மேலும், ஹஜ்ஜை அதன் அசல்நிலைக்கு மீட்டுக்காண விரும்பும் முஸ்லிம்களை - ஹஜ் என்பது உம்மத்தின் வருடாந்திர சம்மேளனமாக விளங்கி, அங்கு நிர்ப்பந்தமோ, அச்சமோ அற்றதொரு சூழலில் அனைத்துப் பிரச்சினைகளும் விவாதிக்கப்பட வேண்டும் என விரும்பும் முஸ்லிம்களை - தாக்கவும், கொலை செய்யவும் முனைந்துள்ளனர்.

'ஹரமைனின் பாதுகாவலர்கள்' என்ற தங்களது பட்டம் குறித்துத் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் மீதான அல்லாஹ்வின் கண்டனம், அன்று இறைத்தூதர் - அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் - காலத்துக் குறைஷியர்களுக்குப் பொருந்துவது போன்றே, இன்று சவூதுக் குடும்பத்துக்கும் பொருந்தும். சவூதுக் குடும்பம், குறிப்பிட்ட சில இடங்களில் யாத்திரிகர்களுக்கு இலவசமாகத் தண்ணீர் வழங்கி வருவதைப் பெரிதாக விளம்பரம் செய்கிறது. ஆனால், வழங்கப்படாத பல சேவைகளுக்காகத் தாங்கள் யானை விலை கட்டணம் வசூலிப்பது பற்றி மூச்சும் விடுவதில்லை. அந்தக் காலத்தில் யாத்திரிகர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வந்தது குறித்து குறைஷிகள் மிகுந்த கர்வம் கொண்டிருந்தனர். இவர்களை நோக்கி பின்வரும் குர்ஆனிய வசனங்கள் கூறுவதைக் கேளுங்கள்:

"ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவதையும், மஸ்ஜித் அல்-ஹராமை நிர்வகித்துப் பராமரிப்பதையும், அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் பாதையில் போராடும் ஒருவருக்கு (அவரது அந்தஸ்துக்கு) சமமாகக் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் பார்வையில் இவையிரண்டும் சமமாகமாட்டா. அல்லாஹ் அநியாயக்கார சமூகத்துக்கு (ழாலிமீன்) நேர்வழி காட்டுவதில்லை. எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறி, தங்களது உடமைகளைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் போராடியுள்ளார்களோ அவர்களே அல்லாஹ்வின் பார்வையில் மிக்க மேலானவர்கள்......."

(அல் குர்ஆன்: 9:19-20)

இது குறைஷிய கர்வத்துக்குப் பொருந்தும் அளவே சவூதுக் குடும்பத்தின் நடத்தைக்கும் பொருந்தும். ஆக, சவூதிகளும் அவர்களது உலகளாவிய அனுதாபிகளின் வலை பின்னலும், ஹரமைனின் கட்டுப்பாட்டைப் பயன்படுத்தி சவூதுக் குடும்பத்துக்கு அங்கீகார நியாயம் வழங்க முனைந்துள்ள அதேவேளை, அல்லாஹ்வின் தீர்ப்போ முற்றிலும் வேறுவிதமாக அமைந்துள்ளது.
சவூதுக் குடும்பம் மக்காவில் வைத்து ஹாஜிகளைப் படுகொலை செய்த விதமே, அறிந்து செய்த ஒரு புனிதக்கேடு தான். அவர்கள் அதனை செய்தது மூலம் ஹாஜிகளின் பாதுகாப்பான சூழலை நாசமாக்கியது மட்டுமின்றி, ஹரமின் புனிதத்தையும் இழிவுபடுத்தி விட்டனர். பாதுகாப்பு, புனிதத்துவம் இரண்டும் குர்ஆனியக் கட்டளைகளாகும். சவூதுக் குடும்பம் கடந்த காலத்தில் மக்கா, மதீனாவிலிருந்த புனிதத் தலங்களை இழிவுபடுத்திய மற்றும் இடித்துத் தரைமட்டமாக்கிய கொடுஞ்செயல்களுக்குப் பின்பும் குற்றச்சாட்டின்றி தப்பித்துக்கொண்டது போலவே, இம்முறையும் தப்பித்துக் கொள்ளுமா? ஒரு விதத்தில், சென்ற ஆண்டு ஹஜ்ஜின் போது சவூதுக் குடும்பம் இழைத்த கொடுங்குற்றத்திற்கான(11)  பொறுப்பில் உம்மத்துக்கும் பங்கு உண்டு. இந்த உம்மத் ஹரமைன் மீதான சவூதுக் கட்டுப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியும்; வரலாற்றுத் தலங்களின் புனிதத்துக்கு அவர்கள் ஏற்படுத்திய இழிவை எதிர்த்தும்; 1979 நவம்பர்-டிசம்பரில் மஸ்ஜித் அல்-ஹராம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் போராடியிருந்தால், அநேகமாக சவூதுக் குடும்பத்துக்கு இத்தகையதொரு கொடுங்குற்றத்தைப் புரிந்திடத் துணிவு பிறந்திருக்காது. சவூதுக் குடும்பத்தின் நடவடிக்கைகளும் கொள்கைகளும் உம்மத்துக்கு விடப்படும் பகிரங்கச் சவால்களாக விளங்குகின்றன. அவர்களின் கரங்களிலிருந்து ஹரமைனின் கட்டுப்பாட்டைப் பறித்தெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், மஸ்ஜித் அல்-அக்ஸாவை ஒத்த பேரபாயம் காத்திருக்கிறது. அதாவது, இஸ்லாத்தின் இரு மேலான புனிதத்தலங்கள் மீதுள்ள நேரடிக் கட்டுப்பட்டையும் முஸ்லிம்கள் இழக்கும் சாத்தியம் இருக்கிறது.

குறிப்புகள்:

8.    இப்புத்தகம் சவூதி அரேபிய மன்னர் ஃபஹதுடைய ஆட்சிகாலத்திலே எழுதப்பட்டது.
9.    தி இண்டிபென்டன்ட் (ஆங்.), லண்டன், டிசம்பர் 12, 1987 & ஜனவரி 2, 1988.
10.   கிரசண்ட் இன்டர்நேஷனல் (ஆங்.), தொ.16, எண்.14, டொராண்டோ, அக்டோபர் 1-15, 1987.
11.   சென்ற ஆண்டு என்பது, 1987 ஆம் ஆண்டு மக்காவில் வைத்து சவூதுப் படைகளால் ஹாஜிகள் படுகொலை செய்யப்பட்ட அச்சம்பவத்தைக் குறிக்கிறது.

Ø   "ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம்" எனும் இத்தலைப்பு டாக்டர் ஸஃபர் பங்காஷ் எழுதிய- "மக்கா படுகொலைகள் (1987): பின்னணியும் ஹரமைனின் எதிர்காலமும்" எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.


Saturday, June 18, 2016

ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம் - பாகம்: 1

ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம்

பாகம் - 1

-    கலாநிதி ஸஃபர் பங்காஷ்

தமிழில்: உவைஸ் அஹ்மது



இஸ்லாமிய உலகு மீது மேற்குலகு நாசகரமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இறைத்தூதர் மற்றும் குலஃபாயே ராஷிதீன்களின் வாழ்வுதாரணத்தை விட்டுவிலகி குறைபாடுகள் தோய்திருந்த போதிலும் தொடர்ந்துவந்த முஸ்லிம்களின் அரசியல் வாழ்வை மேற்குலகு சீர்குலைத்தது மட்டுமின்றி, இஸ்லாமியக் கலாச்சாரத்தையும் அது கீழறுப்புச் செய்தது. பின்னர் முஸ்லிம்கள் சுதந்திரம் அடைந்தபோதும், அந்தச் சுதந்திரம் முற்றிலும் போலியானதாகவே இருந்தது. மற்றும், இஸ்லாமிய விழுமியங்களோடு முரண்படுகின்றதொரு உருவமைப்பிலேயே இருந்தது. மேற்கத்தியர்கள், தங்களுக்குப் பிறகு முஸ்லிம்களை ஆட்சிசெய்வதற்காக மேற்கத்தியமயமான மேல்தட்டு மக்களை விட்டுச்சென்றனர். இவர்கள் பெயரளவில் முஸ்லிம்களாகவும், ஆனால் நோக்கிலும் போக்கிலும் முழுமையாக மேற்கத்தியர்கள் போலவும் இருந்ததோடு, மேற்குலகுக்குப் பணிந்து சேவையாற்றினர். இவ்வாறு, காலனியத்துவத்தைத் தொடர்ந்து அதைவிட நாசகரமானத் தாக்கம் கொண்ட நவ-காலனியத்துவம் உருவானது.

கடந்த நூறு வருடங்களாக முஸ்லிம்கள் - குறிப்பாக, அதிகாரப் பொருப்புகளில் உள்ளவர்கள் - குர்ஆனியப் போதனைகளிலிருந்து மெல்ல மெல்ல, ஆனால் மீட்கமுடியாத வகையில், விலகிச் செல்வதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. ஏன், மிகவும் புரட்சிகரமான மற்றும் அரசியல் பொதிந்த நூலான குர்ஆனே - அல்லாஹ்வின் வெளிப்பாடும் முழு மனிதகுலத்தின் வழிகாட்டியுமான குர்ஆனே - அரசியல் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகங்களோடு சேர்த்து இஸ்லாமும் மதசார்பின்மை நடவடிக்கைகுப் பலியாகியுள்ளது. மேற்குலகு கிறிஸ்தவத்தை நோக்குகின்ற பாணியிலேயே, இந்த மேற்கத்தியமயமான மேல்தட்டினர் பலரும் இஸ்லாத்தை நோக்கத் தலைப்பட்டுள்ளனர். அவர்கள், சீசருக்குச் சேரவேண்டியதென நம்புவதை சீசருக்கே ஒப்படைத்துவிட்டு, எஞ்சியதை இறைவனுக்காக விட்டுள்ளனர். இவ்வாறு தெய்வீகம் - லெளகீகம் என்று பிரித்து, மேல்தட்டு ஆளும் வர்க்கம் உம்மத்தின் மீது திணித்துள்ள சூழல்தான் பிரச்சினையின் ஆணிவேராக அமைந்துள்ளது. இக்கண்ணோட்டத்தை முழு உம்மத்தும் அவசியமாக ஏற்பதில்லை என்றபோதிலும், இந்த இஸ்லாத்தின் மதச்சார்பின்மையாக்கல் பல வகைகளில் மார்க்கத்தின் சில அடிப்படைத் தூண்களையே பாதித்திருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஹஜ் இதற்கு நல்லதோர் உதாரணம். எப்போதுமே உம்மத்தின் வருடாந்திர ஒருங்குதிரளாகவும் மிகுந்த அரசியல் தன்மை கொண்டதாகவும் விளங்கும் ஹஜ் இன்று வெறும் கிரியைகளாகச் சுருங்கியுள்ளது. தாகூத்துக்கு எதிரான முதல் 'கலகக்காரராக' திகழ்ந்த இறைத்தூதர் இப்ராஹீமின் (அலை) போராட்டத்திலிருந்தே தன் அடிப்படைகளைப் பெற்றுள்ள ஹஜ் குறித்து இன்று, அது வெறுமனே ஒரு வழிபாட்டுச் சடங்கு எனும் கருத்தோட்டம் முஸ்லிம் மனங்களில் ஆழப் பதிந்துள்ளது. எந்தளவிற்கெனில், ஹஜ்ஜை அதன் குர்ஆனிய அடிப்படையில் புனரமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளையே சில தரப்பினர் விரோதமாகவும் அச்சுறுத்தலாகவும் பார்க்கின்றனர். ஹஜ்ஜின் கிரியைகள் (மனாசிக்) முக்கியமானவையே என்பதில் சந்தேகமில்லை. எனினும், அவற்றுள் பொதிந்துள்ள அரசியல் செய்தியிலிருந்து அவற்றைத் தனியே பிரித்தெடுக்க முடியாது. இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) நம்ரூதின் அதிகாரத்துக்கு சவால் விட்டதால், அவனது கோபத்துக்கு ஆளாகி நெருப்பில் வீசியெறியப்பட்டார். காரணம், அவர் ஒரேயொரு அதிகாரத்துக்கு மட்டுமே - அதாவது அல்லாஹ் (சுப்ஹானஹூவ தஆலாவுக்கு) மட்டுமே - அடிபணிந்தார். உலகியல் அதிகாரத்துக்கு எதிராக இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) துவக்கிவைத்த அந்த அறைகூவல் இன்றும் உயிரோட்டத்துடன் தல்பியாவில் பிரதிபலிக்கிறது. ஹாஜிகள் இவ்வுலகு சார்ந்த சகலத்தையும் உதறிவிட்டு இஹ்ராமை அணிந்து கொண்டு அந்தத் தல்பியாவை இப்படி முழங்குவார்கள்: லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக், லப்பைக்க லா ஷரீக்க லக லப்பைக் (இதோ நான் வருகிறேன், என் இறைவா! இதோ நான் வருகிறேன். இதோ நான் வருகிறேன், என் இறைவா! உனக்கு இணையேதும் இல்லை. இதோ நான் வருகிறேன்.....). இது ஒரே இறைவனான அல்லாஹ்வுக்கே சமர்ப்பணம் என்பதாக ஒவ்வொரு முஸ்லிமும் உரைக்கும் அத்துணை சக்திமிகுந்த, சமரசமற்ற வாசகம். எந்தளவிற்கெனில், இது தனக்கு முன்னிலையில் உள்ள அனைத்தையும் தகர்த்து விடுகிறது. எனினும், இன்று பல முஸ்லிம்கள் இதை வாய்ப்பாடாகவே ஓதுகின்றனர்; இதன் தாத்பரியத்தை உணர்வதில்லை என்பது கவலைக்குறிய நிதர்சனமான ஓர் உண்மை. ஹஜ்ஜின் மற்ற பல அம்சங்களைப் பொறுத்தும் இதுதான் நிலைமை. உண்மையில், ஹரமைனைத் தன் கட்டுப்பட்டில் வைத்திருக்கிற அரசும், அதன் அரசவை உலமா பரிவாரமும், முஸ்லிம் உலகிலுள்ள பிற அரசுகளும் ஹஜ்ஜை சக்தியற்றதாகவும், அரசியலற்றதாகவும் மாற்றுவதற்குப் பெரும் முனைப்புகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களது சதித்திட்டங்களுக்காகக் குர்ஆனின் அடிப்படைச் செய்தி மற்றும் அர்த்தத்தையே கூட உருச்சிதைக்கத் தயங்குவதில்லை.

'ஹஜ்ஜில் அரசியல் கூடாது' என்ற கொள்கையை முன்னிறுத்துபவர்கள், தங்களது வாதத்திற்கு ஆதாரமாகப் பின்வரும் குர்ஆன் வசனத்தின் குறுகிய விளக்கமளிப்பை முன்வைக்கின்றனர்: "ஹஜ்ஜின் போது ஆபாசமோ, வசைபேச்சோ, கோபமான உரையாடலோ (இருக்கக்) கூடாது" (2:197). இன்று மக்காவில் மஸ்ஜித் அல்-ஹரமுக்கு அருகிலேயே ஆபாசத்தின் அறிகுறிகளைக் காண்பதற்கு ஒருவர் மிகுந்த சிரத்தையெடுக்கவோ, வெகுதொலைவில் நோக்கவோ தேவையில்லை என்ற பட்சத்தில், இவ்வாறு குர்ஆனியக் கட்டளைக்கு எதிரான சவூதிகளின் அத்துமீறல்கள் குறித்து வெகுசிலரே கேள்வி எழுப்பியிருக்கின்றனர். எனினும், இதே வசனத்தின் மற்றொரு பகுதி சர்ச்சைக் களமாக ஆக்கப்பட்டிருக்கின்றது. ஜிதால் (வாக்குவாதம்) எனும் குர்ஆனியப் பதத்துக்கு விளக்கமாக, ஹஜ்ஜின் போது எவ்விதமான வாக்குவாதமும் - மற்றும், வாக்குவாதத்திற்கு வழிவகுக்கக்கூடிய - பேரணியும் நடைபெறக்கூடாது எனக் கூறப்படுகிறது. அந்த வாக்குவாதம் நிலைநாட்டுகிற கருத்து சத்தியத்திற்காகவா (ஹக்) அசத்தியத்திற்காகவா (பாதில்) என்பது குறித்தெல்லாம் வேறுபாடு காணப்படுவதில்லை. ஜிதால் என்ற பதத்துக்குச் சவூதிகள் வழங்கும் இக்குறுகிய விளக்கமளிப்பை பல அதிகாரப்பூர்வமான முன்னணி குர்ஆன் விரிவுரையாளர்கள் (முஃபஸ்ஸிரூன்) ஆமோதிப்பதில்லை.

முஹம்மது இப்னு அஹ்மது அபூ அப்துல்லாஹ் அல்-குர்துபி (இ. ஹி. 671/ கி. பி. 1273): இவர்  அல்-ஜாமிஉ லி-அஹ்காம் அல்-குர்ஆன் எனும் தனது திருக்குர்ஆன் விரிவுரையில், ஜிதால் குறித்து ஆறு கண்ணோட்டங்களைத் தந்திருக்கிறார். அவர் மாலிகி ஃபிக்ஹைப் பின்பற்றிவந்த போதிலும், மாற்றுக் கருத்துக்களையும் சமயதர்க்கவாதமின்றி முன்வைக்கிறார். அவரது விரிவுரையில் பல ஹதீஸ் சுட்டுக் குறிப்புகள் அடங்கியுள்ளன. மற்றும் அது, முஸ்லிம்களின் பொது சன மார்க்கப்பற்று, சட்டவியல், மொழியியல் கருதுதல்கள் ஆகியன குறித்தும் உணர்வுநுட்பம் காட்டுகிறது. இப்னு மஸ்ஊதையும், இப்னு அப்பாஸையும் மேற்கோள்காட்டி அல்-குர்துபி ஜிதால் என்பதன் பொருளை விளக்குகிறார். ஒரு தரப்பினர் சினமுற்று மறுதரப்பினரை அவமதிக்கத் துவங்கும் அளவுக்கு விவாதம் செய்தல் என்று விளக்குகிறார். மேலும், ஹஜ் காலத்தில் 'இல்ம்' (அறிவு) சார்ந்த விவாதத்தைப் பொறுத்தவரை, அதற்குத் தடையேதும் இல்லை என்கிறார். இரண்டாவதாக, கதாதாவின் (ரழி) கண்ணோட்டத்தை அல்-குர்துபி மேற்கோள் காட்டுகிறார். அதன்படி ஜிதால் என்பது அவமதிப்பைக் குறிக்கிறது எனக் கூறுகிறார். சில மேதைகளின் கருத்தில், ஜிதால் என்றால் குறிப்பிட்ட ஒருவரின் ஹஜ் மற்றவர்களின் ஹஜ்ஜைக் காட்டிலும் சிறந்ததென நிரூபிப்பதற்கான வாக்குவாதம்; அல்லது குடும்பப் பெருமை, தேசியவாதம், கோத்திரவாதம் முதாலானவை குறித்த பகட்டுப் பேச்சு எனச் சுட்டப்படுகிறது. எனினும், குர்துபி முதன்மையிடம் அளிக்கும் வேறு இரண்டு விளக்கங்கள், இப்னு ஸைத் மற்றும் அனஸ் இப்னு மாலிக் மூலம் அறிவிக்கப்படுபவை. அவற்றின்படி, குறைஷிகளும் மற்ற கோத்திரத்தாரும் ஹஜ்ஜின் இடம்-நாள் குறித்த சர்ச்சைகளில் ஈடுபடுவார்கள்; எனவே, அத்தகைய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே அல்லாஹ் (சுப்ஹானஹூவ தஆலா) இவ்வசனத்தை இறக்கியருளினான் என்பதாக கூறப்படுகிறது.

இஸ்மாயில் இமாதுத்தீன் அபுல் ஃபிதா இப்னு கஸீர் (இ. ஹி. 774/ கி. பி. 1373): இவர் ஒரு பிரபல ஷாஃபியீ சட்ட நிபுணர். தஃப்சீரைப் பொறுத்தவரை 'பழமைவாத' போக்கைச் சார்ந்தவர். இப்னு கஸீர் பல தொகுதிகளாக இயற்றியுள்ள தஃப்ஸீர் அல்-குர்ஆன் அல்-அழீம் என்கிற விரிவுரைக்கே பல அறிஞர்கள் முன்னிடம் அளிக்கின்றனர். அதன் மரபார்ந்த அணுகுமுறையும் முஸ்லிம் வரலாறு தொடர்பான பரந்த வீச்சும்தான் இதற்குக் காரணம். இவர் இப்னு தைமிய்யாவின் மாணவர்களுள் ஒருவர் மற்றும் அவரது தீவிரத் தற்காப்பாளர். ஸலஃபிஸ சிந்தனா பள்ளி முஸ்லிம்களும், இஸ்லாமிய சட்டம் குறித்த தங்களது இறுக்கமான நேர்பொருள் விளக்கமளிப்புகளை இப்னு தைமிய்யாவின் போதனைகளின் அடிப்படையிலேயே அமைத்திருப்பதாக கூறிக்கொள்கின்றனர். இப்னு கஸீரின் கருத்தில், ஜிதால் என்றால், ஒருவரின் உடமையைத் தொலைத்துவிட்ட அல்லது சேதப்படுத்திவிட்ட இன்னொருவர் மீது தவிர, வேறு எவரிடமும் கோபம் கொள்வதாகும். ஹஜ் காலத்தில் ஒருவர் இத்தகு இழப்பால் கோபம் மிகைத்து இன்னொருவரை அடிப்பதும் கூட ஆகுமானதே எனக் கூறுமளவுக்கு அவர் செல்கிறார். இதற்கு ஆதாராமாக, அபூபக்கர் (ரழி) தொடர்பான சம்பவத்தைக் கூறுகிறார். ஹஜ்ஜின் போது தனது ஒட்டகத்தைத் தொலைத்துவிட்ட தனது பணியாளரை அபூபக்கர் (ரழி) லேசாக அடித்தபோது, இதைப் பார்த்துப் புன்னகைத்த இறைத்தூதர் (ஸல்) அபூபக்கரை (ரழி) லேசாகக் கண்டித்தார்கள். இதிலிருந்து அந்தச் செயல் விரும்பப்படாதது (மக்ரூஹ்) தான்; தடுக்கப்பட்டது (ஹராம்) அல்ல என்பது மறைமுகமாகச் சுட்டப்படுகிறது.

சையித் முஹம்மது ஹுஸைன் அத்-தபதபாயி (இ. ஹி. 1402/ கி. பி. 1981): இவர் அல்-மீஸான் ஃபீ தஃப்சீர் அல்-குர்ஆன் என்கிற தனது பல-தொகுதிப் படைப்பில், ஜிதால் என்றால் விவாதம் புரிதல் என்கிறார். அல்லாமா தபதபாயி, ஜாஃபரி இஸ்னா அஷரி சிந்தனா வழியைச் சேர்ந்தவர். அவர் குர்ஆன் வசனங்களைப் பெரும்பாலும் தத்துவயியல், சமூகவியல் மற்றும் மரபுவழிக் கண்ணோட்டங்களில் அணுகியுள்ளார். எனினும், இந்த வசனத்துக்கு அவர் அதிக விவரங்களை அளித்திருக்கவில்லை. அதை, விவாதம் புரிதல் என்று சித்தரிப்பதோடு நிறுத்திக்கொண்டார்.

ஃபக்ருத்தீன் அர்-ராஸி (இ. ஹி. 606/ கி. பி. 1209): இவர் தஃப்சீர் துறையில் தத்துவயியல் போக்கைப் பின்பற்றியவர். இவரது பாரிய ஆக்கமான அல்-தஃப்சீர் அல்-கபீர் பொதுவாக மஃபாதிஹ் அல்-கய்ப் என்பதாக அழைக்கப்படுகின்றது. ஜிதால் எனறால் விவாதம் என்பதாக ராஸி சித்தரித்துவிட்டு, அதன் மீது ஒட்டுமொத்தத் தடை உள்ளதா எனக் கேள்வியெழுப்புகிறார். மேலும், ஒருவர் தனது 'இல்ம்' (அறிவு) வளர்ச்சிக்காகவும், தீனின் விடயங்களிலும் விவாதம் புரிவது அனுமதிக்கப்பட்ட செயல் மட்டுமல்ல; அது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியும் செயலும் ஆகும் என்று அவர் கூறுகிறார். ஜிதால் இரு வகைப்படும் என ராஸி கருதுகிறார்: ஒன்று, அசத்தியத்தை (அல்-பாதில்) உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவது. எடுத்துக்காட்டாக உலகில் கெளரவம், அதிகாரம், அந்தஸ்து, பதவி, பணம், செல்வம் போன்றவற்றை அடைவதற்காக விவாதம் புரிதல். இது தடுக்கப்பட்ட செயல். மற்றது, சத்தியத்தை (அல்-ஹக்) உறுதிபடுத்துவதற்காகவும் அல்லாஹ்வின் பாதையில் அழைப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுவது; இது போற்றுதலுக்குறியது.

மேற்கூறியதிலிருந்து, இஸ்லாத்தின் மாமேதைகள் ஜிதால் குறித்து தெளிவான விளக்கமளிப்புகளைத் தந்துள்ளது மட்டுமின்றி, ஒருவர் தனது அறிவை அதிகரித்துக்கொள்ளவோ அல்லது அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநாட்டவோ மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் போற்றுதலுக்குரியவையே எனவும் உறுதிபடக் கூறியிருக்கின்றனர். ஆக, சத்தியத்தை உறுதிபடுத்துவதற்காகவும் இணை வைப்பவர்களை விட்டுப் பொறுப்பு விலகல் பிரகடனம் செய்வதற்காகவும் இறைநம்பிக்கையாளர்கள் ஒருங்கமைக்கும் பேரணிகள் பாராட்டுக்குரியதே. இறைத்தூதரின் தூதுத்துவப் பணியின் ஆறாவது ஆண்டில் உமர் இப்னு அல்-கத்தாப் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டபோது மாபெரும் பேரணி ஒன்று கஅபாவில் நடத்தப்பெற்றது. அதற்கு ஒருபக்கம் உமரும் (ரழி), மறுபக்கம் இறைத்தூதரின் சிறியதந்தை ஹம்ஸாவும் (ரழி) தலைமை தாங்கினர். (1)  மட்டுமின்றி, இணை வைப்பவர்களை விட்டுப் பொறுப்பு விலகல் என்பது ஒரு குர்ஆனியக் கட்டளையாகும். அது அத்தியாயம் அத்-தவ்பாவின் (அத்தியாயம் பராஅத் என்றும் இது அழைக்கப் படுகிறது) ஆரம்ப வசனங்களில் மிக வலுவாக உரைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் இணை வைப்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளும், அவர்களுடனான ஒப்பந்தங்களை முடித்துக் கொள்ளுமாறு முஸ்லிம்களுக்குத் தெளிவான உத்தரவும் விடுக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயம் தன்னுள் கடுமையான எச்சரிக்கைகளைக் கொண்டுள்ளதாலேயே, குர்ஆனில் பஸ்மலாஹ்(2) இல்லாத ஒரே அத்தியாயமாக இது விளங்குகிறது என குர்ஆன் விரிவுரையாளர்கள் சிலர் விளக்கமளித்துள்ளனர். இது, அல்-ஃபாழிஹா அல்லது இணை வைப்பவர்களை வெளிப்படுத்தும் செய்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் முதல் மூன்று வசனங்கள் பின் வருமாறு:

"நீங்கள் ஒப்பந்தம் செய்துள்ள இணை வைப்பவர்களை விட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பொறுப்பு விலகிக் கொண்டனர் (என்று அறிவிக்கப்படுகிறது). எனவே, இணைவைப்பாளர்களான) நீங்கள் நான்கு மாதங்களுக்கு பூமியில் நடமாடிக் கொள்ளுங்கள். மேலும், திண்ணமாக நீங்கள் அல்லாஹ்வை தோல்வியுறச் செய்யமுடியாது என்பதையும், இறை நிராகரிப்பாளர்களை நிச்சயமாக அல்லாஹ் (தன் வழிகாட்டுதலால்) தோல்வியுறச் செய்வான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்! மேலும், மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் சார்பாக மனிதர்கள் யாவருக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு யாதெனில், திண்ணமாக அல்லாஹ்வும், அவனது தூதரும் இணைவைப்போரை (முஷ்ரிகீன்) விட்டுப் பொறுப்பு விலகி விட்டார்கள்."
(அல்குர்ஆன் 9:1-3)

இந்த அத்தியாயத்தின் பிற வசனங்கள் பலவும் ஹிஜ்ரி 9-ம் ஆண்டு துல்ஹஜ் மாதத்திலேயே இறக்கியருளப்பட்டன. அப்போது, அபூபக்கர் (ரழி) தலைமையில் சுமார் 300 முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக ஏற்கனவே மக்காவுக்குக் கிளம்பிச் சென்றிருந்தனர். இந்த வசனங்கள் இறங்கியதும், இவற்றை ஹஜ் சமயத்தில் அறிவிப்புச் செய்ய வேண்டி, இறைத்தூதர் (ஸல்) இமாம் அலீயை (ரழி) உடனையாக மதீனாவிலிருந்து மக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த வசனங்களில் பொதிந்துள்ள செய்தி பருண்மையாக அரசியல் தன்மை கொண்டுள்ளது. எந்தளவிற்கெனில், ஹஜ்ஜானது வெறுமனே கிரியைகள் சார்ந்த விடயம்தான் எனச் சுட்டுவதற்குக் கூட எவருக்கும் தைரியம் ஏற்படாது என்றே தோன்றுகிறது - அவர் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு எதிராக பகிரங்கமான கலகம் செய்தாழொலிய. இந்த வசனங்கள், இணை வைப்பாளர்களை விட்டுப் பொறுப்பு விலகுதலை அறிவிப்பது மட்டுமின்றி, நிராகரிப்பாளர்களுக்கு எதிராகப் போர் தொடுக்குமாறும் இறை நம்பிக்கையாளர்களை ஏவுகின்றன. இறைத்தூதர் (ஸல்) இவ்வசனங்களை அறிவிப்புச் செய்வதற்காக, ஹாஜிகள் மக்காவிலிருந்து திரும்பும்வரை காத்திருக்கலாம். ஆனால், அவர்கள் (ஸல்) அவ்வாறு செய்யவில்லை. அதேபோல், அதற்கடுத்த ஆண்டு இறைத்தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்குச் சென்ற போது, அரஃபாத் மைதானத்தில் நிகழ்த்திய ஹஜ்ஜத்துல் விதா (இறுதி ஹஜ்) பேருரையும் கூட ஹஜ்ஜின் அரசியல் இயல்பு குறித்த மிக வலுவானதொரு பிரகடனமே. (3)

ஆக, முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் சவூதுக் குடும்பத்தின் விருப்பு வெறுப்புகளை பின்பற்றுவதா? அல்லது, அல்லாஹ் சுப்ஹானஹூவ தஆலாவின் கட்டளைகளையும் அவனது அன்புத் தூதரின் (ஸல்) வழிமுறையையும் பின்பற்றுவதா?

இஸ்லாமிய வரலாறு மீது ஒரு வேகப் பார்வை செலுத்துவதும் ஹஜ்ஜின் பங்கு குறித்த இந்தப் புரிதலை வழங்குகிறது, முஸ்லிம் வரலாறு, நேர்வழி நின்ற கலீஃபாக்கள் (குலஃபாயே ராஷிதீன்) காலம் தொட்டு குர்ஆன் மற்றும் இறைத்தூதரின் வழிமுறையை விட்டு மென்மேலும் விலகிச்சென்றுள்ள போதிலும், கடந்த சுமார் 200 வருடங்களாகத்தான் குஃப்ரு சக்திகள் முஸ்லிம்களை அடிபணிய வைத்துள்ளன. இறை பக்தியற்ற ஆட்சிக்கு எதிரான முதல் எதிர்ப்புப் போராட்டத்தை இஸ்லாத்தின் மாபெரும் வீரத்தியாகியும் இறைத்தூதரின் (ஸல்) பேரருமான இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் நிகழ்த்திக் காட்டி உதாரணம் படைத்தார்கள். ஹிஜ்ரி 681-ல் இமாம் ஹுஸைன் (ரழி) கூஃபாவுக்குக் கிளம்பிச் செல்லுமுன், ஹஜ்ஜுக்காக மதீனாவிலிருந்து மக்கா சென்றார். (எனினும், அதனை அவர் நிறைவு செய்யவில்லை). அவர் யஸீதின் படைகளுக்கெதிராக நடத்திய போராட்டம், அன்றுமுதல் முஸ்லிம்களுக்கு நிரந்தர முன்மாதிரியாகத் திகழ்ந்துவருகிறது.

முஸ்லிம்கள் சமீபகால வரலாற்றில் ஐரோப்பியக் காலனித்துவத்தின் தலைமையிலான குஃப்ரு சக்திகளை எதிர் கொண்டுள்ளனர். ஐரோப்பியர்கள் கொள்ளை மற்றும் சுரண்டலுக்கான படையெடுப்புகளை நடத்தி முஸ்லிம் பூமிகளுக்கு வந்திறங்கியபோது, முஸ்லிம்கள் வலுவின்றிப் பிரிந்து கிடந்ததைக் கண்டனர். சீர்கெட்ட ஆட்சியாளர்களின் கீழ் இயங்கிய முஸ்லிம் படைகளால் ஐரோப்பியப் பீரங்கிகளுக்கோ, சூழ்ச்சிகளுக்கோ சற்றும் ஈடுகொடுக்க முடியவில்லை. என்றாலும், முஸ்லிம்கள் மேற்கத்தியக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராடவே இல்லை என அர்த்தமல்ல. இந்த எதிர்ப்புப் போராட்டம் ஆட்சியாளர்களின் தரப்பிலிருந்து வரவில்லை, அவ்வளவுதான். பெரும்பாலும் மார்க்க அறிஞர்களும் (உலமாக்களும்) இன்னபிற புரட்சிகர முஸ்லிம்களுமே அதனை முன்னின்று நடத்தினர். காலனியாதிக்கத்துக்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பெற்ற சமூகத்தின் எதிர்ப்புப் போராட்டத்தை அணி திரட்டியதிலும், ஒருங்கிணைத்தலிலும் ஹஜ் ஒரு மிக முக்கியப் பங்கு வகித்தது.

இந்தோ-பாகிஸ்தானில் ராய் பரேலியைச் சேர்ந்த சையித் அஹ்மது தலைமையேற்று நடத்திய குறுகியகால ஜிஹாத் இயக்கம் அசலில், அவர் 1822-23ல்(4) ஹஜ்ஜுக்குச் சென்றுவந்த பிறகே துவக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலனியவாதிகள், இந்து மற்றும் சீக்கிய நிலப்பற்று வெறியர்கள் ஆகியோரின் கைகளில் சிக்குண்ட இந்திய முஸ்லிம்களினதும், இஸ்லாத்தினதும் அவலநிலை பற்றி சையித் அஹ்மது மக்காவில் வைத்துச் சக முஸ்லிம்களோடு கலந்துரையாடியதாக நம்பம்படுகிறது. அவர் ஹஜ்ஜிலிருந்து திரும்பியதும் ஜிஹாத் இயக்கத்தை ஒருங்கமைத்தவர். அதில் ஷா வலியுல்லாஹ்வின் (இ. 1762) பேரர் ஷா இஸ்மாயீல் போன்ற பிற மேன்மையான ஆளுமைகளும் இணைந்துகொண்டனர். சையித் அஹ்மது, ஷா இஸ்மாயீல் இருவரும் 1831-ல் (இன்றைய பாகிஸ்தான் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திலுள்ள) பாலகோட்டில் சீக்கியருக்கு எதிரானதொரு போரில் வீரமரணம் அடைந்தனர். எனினும், சையித் அஹ்மதின் பின்பற்றாளர்கள் பிரிட்டிஷ் காலனியவாதிகளுக்கு எதிராகத் தங்களது ஜிஹாதை தொடர்ந்து நடத்திவந்தனர். 1890 வரையிலும் கூட எல்லைப்புற மாகாணத்தின் பல பகுதிகளில் அவர்களது நடவடிக்கைகள் தொடர்ந்திருந்ததாகத் தகவல்கள் உள்ளன.
சையித் அஹ்மது ஷஹீதின் ஜிஹாத் இயக்கத்துக்கு முன்னரே, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வங்காளத்தில் ஷரீஅத்துல்லாஹ் ஓர் இயக்கத்தைத் துவக்கியிருந்தார். அவரது இயக்கத்திலும் ஹஜ் ஒரு முக்கியப் பங்கு வகித்தது. 1782-ல் ஹஜ்ஜுக்குச் சென்ற ஷரீஅத்துல்லாஹ், 1802-வரை மக்காவில் தங்கியிருந்தார். அக்காலகட்டத்தில் அவர் ஷாஃபியீ செய்கு ஒருவரின் சீடரானார். அவர் பிறகு வங்காளத்துக்குத் திரும்பியதும் ஃபராயிழி இயக்கத்தைத் தோற்றுவித்தார். இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை ஒழித்துக்கட்டுவதே அதன் முக்கியத் தேட்டமாக இருந்தது, 'ஏனெனில், இந்தியா இனியும் ஒரு தாருல் இஸ்லாம் (இஸ்லாம் கோலோச்சும் பூமி) அல்ல; அது ஒரு தாருல் ஹர்ப் (யுத்த பூமி) நிலைக்கு மாறிவிட்டிருந்தது'.(5) முஸ்லிம்கள் மீது பிரிட்டிஷார் தங்களது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்குத் துணை புரிந்து, சந்தேகமின்றி, பிரிட்டிஷ் ஆதரிப்பைப் பெற்றுக்கொண்ட அப்பகுதியின் நிலப்பிரபுக்களை எதிர்த்தும் ஷரீஅதுல்லாஹ்வின் இயக்கம் செயல்பட்டது. அவரது மரணத்துக்குப் பின், அவரது மகன் தாது மியான் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார். இன்றும் கூட இவ்வியக்கத்தின் பின்பற்றாளர்களை வங்காளத்தின் சில பகுதிகளில் காணலாம்.

பின்பு, இவ்வியக்கங்கள் 1857-ல் முதல் விடுதலைப் போராக வளர்ச்சி கண்டன. அது பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான இந்தியக் கலகம் என்று பொருத்தமற்ற வகையில் பெயரிட்டு அழைக்ப்படுகிறது. உண்மையில், ஏராளமான மார்க்க அறிஞர்கள் 1857 கிளர்ச்சியில் பங்கெடுத்தனர். அவர்களில் பலர் ஷா வலியுல்லாஹ், சையத் அஹ்மது, ஷா அப்துல் அஸீஸ், ஷா இஸ்மாயில், ஷரீஅதுல்லாஹ் ஆகியோரின் வழித்தோன்றல்கள் மற்றும் சீடர்கள். 1857 கிளர்ச்சியின் தோல்விக்குப் பிறகு, மெளலானா மஹ்மூதுல் ஹஸன் (இ. 1921) பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்திற்காக மக்காவிலிருந்து ஃபத்வா ஒன்றை வேண்டிப்பெற்றார். அவர் மக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த வழியில் கைதுசெய்யப்பட்டு, மால்டாவில் பல்லாண்டு காலம் சிறைவைக்கப்பட்டார். இவ்வாறாக மீண்டும், இந்தோ-பாகிஸ்தான் துணைக்கண்டத்தில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக நடத்தப்பெற்ற போராட்ட இயக்கங்களுக்கு மக்காவும், ஹஜ்ஜும் தான் குவிமையங்களாக விளங்கின.

இத்தகு ஜிஹாத் நடவடிக்கைகள், இந்திய முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல; அதேபோல், தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு மக்கா மற்றும் ஹஜ்ஜை வலியுறுத்தும் வழக்கமும் அவர்களுக்கு மட்டுமே உரிய தனிப்பண்பு அல்ல. காவ்கசஸின் இமாம் ஷாமில், அல்ஜீரியாவைச் சேர்ந்த அமீர் அப்துல் காதிர், முஹம்மது இப்னு அலீ சனூசி ஆகியோரும் கூட மக்காவின் பக்கமே மீண்டு, ஹஜ் சமயத்தில் நிகழும் உம்மத்தின் மாபெரும் சம்மேளனத்திலிருந்து பயன்பெற்றனர்.

1827-ல் முல்லா முஹம்மது என்பாரின் போதனைகளிலிருந்து ஜிஹாத் இயக்கம் ஒன்று தீப்பிழம்பாக உருவெடுத்தது. அது காவ்கசஸில் ஜார் மன்னர்களை எதிர்த்துப் போரிட்டது. இதில், முல்லா முஹம்மதின் மார்க்கப் பாடசாலையில் படித்த இறையியல் மாணவர்கள் இருவர் - காஸி முஹம்மது, ஷாமில் - மிகவும் பிரபலமடைந்தனர். 1828-ல் ஷாமில் ஹஜ்ஜுக்குச் சென்றார். அங்கே வந்திருந்த அல்ஜீரியாவைச் சேர்ந்த அமீர் அப்துல் காதிரை அவர் மக்காவில் வைத்துச் சந்தித்தார். இந்த வருங்கால இஸ்லாமிய விடுதலைப் போராட்ட நாயகர்கள் இருவரும் ஹஜ்ஜின் போது மக்காவில் வைத்துத் தங்களது போர்களைத் திட்டமிட்டனர். அப்துல் காதிர் அல்ஜீரியாவில் பிரெஞ்சுக்கு எதிராகவும், இமாம் ஷாமில் காவ்கசஸில் ஜார் மன்னர்களுக்கு எதிராகவும் போராடினர். (6)

வடஆப்பிரிக்காவில் முஹம்மது இப்னு அலீ சனூசி தலைமையேற்று நடத்திய இயக்கம், உண்மையில் மக்காவில் தான் உருவெடுத்தது. சனூசி வழியமைப்பு என்பதாக பின்னாட்களில் அழைக்கப்பெற்ற அது, அசலில் அஹ்மது இப்னு இத்ரீஸ் (இ. 1837) தோற்றுவித்த இத்ரீஸி வழியமைப்பின் ஒரு கிளையாகவே உருவானது. (7)  மொராக்கோவைச் சேர்ந்தவரும் முஹம்மது நபிகளாரின் - அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் - வழித்தோன்றலுமான இத்ரீஸ், முன்னதாக மக்காவில் குடியேறியிருந்தார். அப்போது அவர் நிறுவிய தரீக்கா முஹம்மதியா சிறிதுகாலம் அசீர் மாகாணத்தில் அரசியல் அதிகாரம் பெற்றுத்திகழ்ந்தது. இந்தத் தரீக்காவே மூவேறு புதிய இயக்கங்களைப் பெற்றெடுத்தன: ராஷிதிய்யா, அமீர்கானிய்யா மற்றும் சனூசிய்யா. ராஷிதிய்யா தரீக்கா அல்ஜீரியாவின் வட்டத்துக்குள்ளேயே நின்றுவிட்டது. எனினும், அமீர்கானிய்யாவும், சனூசிய்யாவும் பிற பகுதிகளுக்குப் பரவின. அமீர்கானிய்யாவின் செல்வாக்கு சூடானிலும், நூபியாவிலும் பரவிய அதே வேளை, சனூசிய்யாவின் பரவல் பூமத்தியரேகை ஆப்பிரிக்காவிலும், லிபியா மற்றும் எகிப்திலும் முன்னேற்றம் கண்டது.

சனூசிய்யா வழியமைப்பை நிறுவியவர், முஹம்மது இப்னு அலீ அஸ்-ஸனூசி (இ. 1859). அவர் அல்ஜீரியாவைச் சேர்ந்தவர். எனினும் மக்காவில் குடியேறி அங்கு அஹ்மது இப்னு இத்ரீஸின் சீடரானார். சனூசிய்யா வழியமைப்பு ஒரு செயல்வீரர்கள் இயக்கம். அது சூஃபித்துவ தொடக்கம் கொண்டிருந்தபோதிலும், தற்காப்புக்கலையை பெரிதும் வலியுறுத்தியது; மேலும், விவசாயம் மற்றும் வணிகத்தில் ஈடுபடுமாறும் தனது பின்பற்றாளர்களை ஊக்குவித்தது. இந்த சனூசிய்யா வழியமைப்புதான் பிற்காலத்தில் பூமத்தியரேகை ஆப்பிரிக்காவில் பிரெஞ்சுக் காலனியாதிக்கத்தையும், லிபியாவில் இத்தாலியரையும், எகிப்தில் பிரிட்டிஷாரையும் எதிர்த்துப் போர் செய்தது.

இவ்வனைத்து இயக்கங்களுக்கும் இடையில் பல பொதுவான பண்புகளைக் காணமுடிகிறது; அவை அனைத்தும் வரலாற்றில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோன்றின. அவை அனைத்துமே ஹஜ் மற்றும் மக்காவுடன் தொடர்பு கொண்டிருந்தன. அவை தோன்றிய காலகட்டம், இஸ்லாமிய பூமிகள் மீது காலனியாதிக்கத் தாக்குதல் தொடுக்கப்பட்ட காலகட்டமாக இருந்தது. அதற்கு முன்பிருந்தே முஸ்லிம்களின் ஆட்சியதிகாரம் வீழ்ச்சியுறத் துவங்கியிருந்தபோதிலும், இத்தகு ஒருசேர குஃப்ரு சக்திகள் முஸ்லிம்கள் மீது படையெடுத்து அவர்களை அடிபணியவைத்து அவர்களது பூமிகளை ஆக்கிரமித்திருக்கும் சூழலை முஸ்லிம்கள் சந்தித்ததில்லை. சலாஹுத்தீன் பாலஸ்தீனைச் சுற்றியிருந்த அரசுகளின் ஆட்சியாளர்களை 'கவனித்த' பிறகே, சிலுவைப் படையினரின் ஜெரூசல ஆக்கிரமிப்பை (1099-1187) அகற்றினார். இவ்வாட்சியாளர்கள் எல்லாம் தங்களுக்கிடையே நிலவிய சில்லறையான சண்டை சச்சரவுகளுக்காகச் சிலுவைப் படையினரோடு சேர்ந்துகொண்டு, ஒருவருக்கெதிராக ஒருவர் சதிசெய்வதில் ஈடுபட்டு, முஸ்லிம்களை அடிமைத்தளையிலேயே வைப்பதற்கு துணைபுரிந்து கொண்டிருந்தவர்கள். மற்றொரு விதிவிலக்கான நிகழ்ச்சி, 1492-ல் கத்தோலிக்க அரசர்களிடம் கிராணடாவின் வீழ்ச்சி. எனினும் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய உஸ்மானிய கிலாஃபத், இந்த வீழ்ச்சியை ஓரளவு ஈடுகட்டிவிட்டது.

முஸ்லிம்கள் குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொள்ள நேர்ந்த போதெல்லாம், அதற்கெதிராக ஓர் ஜிஹாத் இயக்கத்தைத் துவக்குவதே அவர்களது தன்னியல்பான எதிர்நடவடிக்கையாக இருந்திருக்கிறது. அவை அனைத்திலும் ஹஜ்ஜே அவர்களது திட்டங்களில் மையப் பங்கு வகித்திருக்கிறது. ஏனெனில், முஸ்லிம்கள் எப்போதும் ஹஜ்ஜை அரசியல் இயல்புகொண்ட செயல்பாடாகவே விளங்கி வைத்திருந்தனர். ஹஜ்ஜில் மட்டும்தான் முழு உம்மத்தும் அதன் நுண்மாதிரி வடிவில் பிரதிநிதித்துவம் பெறுகிறது. அந்த எளிய கனசதுரக் கஅபா, அல்லாஹ்வின் இல்லம் என்ற வகையில் இஸ்லாத்தில் நித்தியத் தன்மையையும், நிலைத்தன்மையையும் குறித்து நிற்கிறது. இந்தக் கஅபாவையே முஸ்லிம்கள் தங்களது அன்றாடத் தொழுகைகளில் முன்னோக்குகின்றனர் என்பது மட்டுமின்றி, அவர்கள் சோதனைக் காலங்களில் அல்லாஹ்வின் வழிகாட்டுதல் மற்றும் அருளை வேண்டும் பொழுதும் இந்தக் கஅபாவின் பக்கமே இயல்பாகத் திரும்புகின்றனர். குர்ஆனிலுள்ள அல்லாஹ் சுப்ஹானஹூவ தஆலாவினது கட்டளைகளின் அடிப்படையிலும், இறைத்தூதரின் - அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் - வாழ்வுதாரண அடிப்படையிலும் இந்த உம்மத் இறையில்லத்தின் (பைத்துல்லாஹ்) வரலாற்றுப் பாத்திரத்தையும், ஹஜ்ஜின் பாத்திரத்தையும் நன்கு விளங்கி வைத்திருந்தது. ஹரமைனை இன்று ஆக்கிரமித்திருப்போர் ஹஜ்ஜின் இந்த பரந்துபட்ட பாத்திரத்தை எவ்வளவு வெறுத்த போதிலும், முஸ்லிம்கள் ஹஜ்ஜின் உண்மை அம்சங்களை விளங்குவதும் அல்லாஹ் சுப்ஹானஹூவ தஆலாவின் கட்டளைக்கேற்ப அதன் அசல்பணியை மீட்பதும் அவர்கள் மீது கடமையாகும்.

இன்றும்கூட இஸ்லாமிய உலகு குஃப்ரின் ஒருங்கமைந்த சக்தியை எதிர்கொண்டே வருகிறது. இந்த குஃப்ரு சக்திகள், தாங்கள் இஸ்லாத்தோடு சுமூகமாக வாழ விரும்புவதாகச் செய்து கொண்டிருந்த பாசாங்கு எல்லாம், ஈரானிய இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு உதிர்ந்துவிட்டன. வாஷிங்டன், மாஸ்கோ, பாரிஸ், லண்டன், டெல் அவீவ், புதுடில்லி போன்ற குஃப்ரின் அதிகார மையங்களிலிருந்து வெளியிடப்படும் அறிக்கைகளே அவர்களின் உண்மை நோக்கங்களை உறுதிப்படுத்தப் போதுமானவை. காலனித்துவம் தோன்றிய காலத்தில் போன்றே, இன்றும் இஸ்லாமிய உலகு தனது வளங்களைத் திரட்டி கொடிய சக்திகளை போரிட்டுத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதுகுறித்து குர்ஆனில் வரும் அல்லாஹ்வின் கட்டளைகள் தெள்ளத்தெளிவாகப் பேசுகின்றன:

"அவன்தான் தனது தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பிவைத்தான் - அவன் அதைக்கொண்டு மற்ற மதங்களை மிகைக்கஸ் செய்வதற்காக! இது இணை வைப்பவர்களுக்கு எத்துணை வெறுப்பாக இருப்பினும் சரியே!" 
(அல் குர்ஆன் 9:33, 61:9)

(இதே கட்டளை, சிறிது மாறுபட்ட வடிவில் 48:28-ல் மீண்டும் வருகிறது). இஸ்லாமிய உலகின் அரசுகள் பலவும் இதே குஃப்ரு சக்திகளுக்கு அடிபணிந்து கிடக்கும் சூழலில், நிச்சயமாக இக்கட்டளையை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அது மட்டுமின்றி, இஸ்லாத்தின் புனிதத்தலங்கள் இத்தகு அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்குமெனில் - இன்று சவூது குடும்பம் இருப்பது போல இருக்குமெனில் - யதார்த்தத்தில் அவை குஃப்ரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே பொருள், அத்தகு கட்டுப்பாடு நேரடியாக இல்லாவிட்டாலும் கூட.

'ஹஜ்ஜில் அரசியல் கூடாது' என்கிற வாதமெல்லாம் சவூதுக் குடும்பம் செய்கிற தந்திர விளையாட்டே. முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பிட்ட சிலவகைக் கருத்துக்கள் பரவிவிடக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம். தங்களுக்குப் பொருத்தமாய் அமையும் போதெல்லாம் அவர்கள் தங்களது சொந்த அரசியல் கண்ணோட்டத்தை முன்னிறுத்துவதற்கு ஹஜ்ஜைப் பயன்படுத்தியே வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சவூதிகள் 1980 வரை ஒவ்வொரு ஹஜ்ஜின் போதும், ராபிதா அல்-ஆலம் அல்-இஸ்லாமியின் குடைக்குக் கீழ் வருடாந்திர மாநாடு ஒன்றை வழக்கமாக நடத்துவார்கள். அந்த மாநாட்டுக்கு இயல்பாகவே, சவூதி கண்ணோட்டத்தோடு சம்மதிப்போர் மாத்திரமே அழைக்கப்படுவார்கள். சரிதான், மக்காவில் தளம் கொண்ட ஒரு சவூதி முகப்பு அமைப்பிடமிருந்து பெரிதாக வேறெதனையும் எதிர்பார்க்க முடியுமா? இங்கு கவனிக்கத்தக்கதொரு சுவாரஸ்யமான விடயம் யாதெனில், 1980 முதல் இம்மாநாடுகள் கைவிடப்பட்டு விட்டன. ஏன்? 1979 பிப்ரவரியில் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி வெற்றியடைந்திருந்தது. மற்றும், 1979 நவம்பரில் ஹரமில் கிளர்ச்சி நடந்திருந்தது. இந்தக் கிளர்ச்சி, சவூதுக் குடும்பத்தின் அடித்தளத்தையே ஆட்டங்காணச் செய்துவிட்டது.

இது தொடர்பாக சவூதிகளின் நயவஞ்சகத்தை 1985-ம் ஆண்டின் ஒரு சம்பவத்திலிருந்து தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். அந்த ஆண்டு ஹஜ்ஜின் போது, பாலஸ்தீன விடுதலை அமைப்பு என்றொரு முற்றிலும் மதச்சார்பற்ற அமைப்பின் தலைவர், யாசர் அரஃபாத், அரஃபா மைதானத்திலுள்ள மஸ்தினுந் நிம்ராவில் குத்பா ஆற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தார். அரஃபா தினம் தான் (இதை யாசர் அரஃபாத்துடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்!) ஹஜ்ஜுடைய தினம் என்பதாக இறைத்தூதர் - அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் - கூறியிருக்கிறார்கள். இருப்பினும், அந்த தினத்தில் யாசிர் அரஃபாத் போன்றதொரு மதச்சார்பின்மை தேசியவாதியை சவூதுக் குடும்பம் தெரிவுசெய்து, அரஃபா பள்ளத்தாக்கில் குழுமியிருந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மத்தியில் குத்பா வழங்க ஏற்பாடுசெய்தது. இந்த அரஃபாத் எதைப் பற்றிப் பேசினார்? சந்தேகமின்றி, பாலஸ்தீன விடுதலை பற்றியே பேசினார். ஆனால், அதை மதச்சார்பின்மை தேசியவாதக் கட்டமைவுக்குள் வைத்தே பேசினார். ஆக, சவூதுக் குடும்பத்தைப் பொறுத்த வரை, ஹஜ்ஜுடைய தினத்தன்று அரஃபா மைதானத்தில் வைத்து மதச்சார்பின்மைக் கட்டமைவில் அரசியல் பேசுவது ஆட்சேபணைக்கு உரியதல்ல; ஆனால், முஸ்லிம்கள் இஸ்லாமியக் கட்டமைவில் இவ்விவகாரங்களை விவாதிப்பது தடுக்கப்பட்ட செயல்! இதனால்தான், முஸ்லிம்கள் இஸ்லாமியக் கொடியின் கீழ் திரண்டு, குர்ஆனில் அல்லாஹ் சுப்ஹானஹூவ தஆலா அருளியுள்ள கட்டளைகளின் அடிப்படையில் நிராகரிப்பவர்களை விட்டும் இணைவப்பவர்களை விட்டும் பொறுப்பு விலகல் பிரகடனப் போரணிகளை கண்டிப்பாக நடத்தக்கூடாது. அப்படி நடத்தினால், அவர்களை ஈவிரக்கமின்றிச் சுட்டுக்கொல்வதற்கு அங்கே சவூதிப் படை வீரர்கள் தயாராக இருப்பார்கள்.

தொடர்ச்சி இரண்டாம் பாகத்தில்.......

குறிப்புகள்:

1.        கான், மஜீத் அலீ, பக்திமிகு கலீஃபாக்கள் (ஆங்.), இஸ்லாமிக் புக் பப்ளிஷர்ஸ், குவைத், 1982. பக். 69.
2.        பஸ்மலாஹ்: 'பிஸ்மில்லாஹ் அர்-ரஹ்மான் அர்-ரஹீம்' (அளவற்ற அருளாளனும் நிகரற்ற தயாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்') எனும் சொற்றொடரைக் குறிக்கிறது.
3.        ஸஃபருல் இஸ்லாம் கான் - யாகூப் ஸகீ (பதி.). ஹஜ்: ஒரு சிறப்புப் பார்வை (ஆங்.), தி ஓபன் பிரஸ், டொராண்டோ, லண்டன், 1986. பக். 77-79.
4.        ஃபஸ்லுர் ரஹ்மான். இஸ்லாம் (ஆங்.), எ டபிள்டே ஆன்கர் புக், நியூயார்க், 1968. பக். 25-251. இதைவிட வருணனை மிகுந்த சரித்திரத்துக்கு பார்க்க, ஆபாத் ஷாபூரி, சையத் பாதுஷா கா கஃபிலா (மாபெரும் சையதின் பயணக் கூட்டம்) (உருது),, மக்தபே திக்ரா, ராம்பூர், இந்தியா, 1986.
5.        மேலது, பக். 251.
6.        கிரசண்ட் இன்டர்நேஷனல் (ஆங்.), தொ.16, எண்.8, டொராண்டோ, ஜூலை 1-15, 1987.
7.        ஃபஸ்லுர் ரஹ்மான். இஸ்லாம் (ஆங்.), எ டபிள்டே ஆன்கர் புக், நியூயார்க், 1968. பக். 254-257.

Ø   "ஹஜ் பற்றிய குர்ஆனியக் கண்ணோட்டம்" எனும் இத்தலைப்பு டாக்டர் ஸஃபர் பங்காஷ் எழுதிய- "மக்கா படுகொலைகள் (1987): பின்னணியும் ஹரமைனின் எதிர்காலமும்" எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

Tuesday, June 14, 2016

தீவிரவாதம்: குற்றச்சாட்டும் உண்மையும் - பாகம்: 3

தீவிரவாதம்: குற்றச்சாட்டும் உண்மையும்

பாகம்: 3

-     கலாநிதி யூஸுஃப் அல்-கர்ளாவி

- தமிழில்: அ. ஜ. முஹம்மது ஜனீர்




3.   தீவிரவாதத்தின் வெளிப்படையான அம்சங்கள்:

தீவிரவாதத்தின் முதலாவது வெளிப்படையான அம்சம், 'கண்மூடித்தனமான மத வைராக்கிய மனப்பான்மையாகும்'. இந்த மனப்பான்மை, ஒருவரைத் தனது அபிப்பிராயங்கள், விருப்பு வெறுப்புகள் மீது பிறரால் சகிக்க முடியாத அளவு பிடிவாத குணத்தை வளர்த்து விடுகின்றது; ஏனைய மானிடர்தம் நலங்கள் குறித்த தெளிவான பார்வையைக் கொண்டிருத்தலிலிருந்தும் நீதிநெறி, ஒழுங்கு முறைகளுக்கான அவசியத்தைப் புரிந்து கொள்வதிலிருந்தும் காலச் சூழல் பதிக்கும் செல்வாக்கினை விளங்கிக் கொள்வதிலிருந்தும், அவர்களைத் தடுத்து விடுகின்றது. இவ்வாறான மனிதர், தனது அபிப்பிராயங்களை பிறரது அபிப்பிராயங்களுடன் ஒப்பீடு செய்து காணும் வகையில் உரையாட மாட்டார். பல்வேறு அபிப்பிராயங்களுள் சிறந்தது எது எனக்கண்டு அதனைப் பின்பற்றக் கூடியதொரு சூழலை உருவாக்கிக் கொள்ளவும் மாட்டார். இவ்வாறானோர் மீது குற்றங்கள் சுமத்தும் இவர்களது எதிர் தரப்பாரைக் கணடனம் செய்வது போலவே, ஏனையோரின் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து அடக்கி ஒடுக்க முனையும் இவர்களது முனைவுகளையும் நாம் கண்டிக்கிறோம்.

உண்மையில் தான் மட்டுமே சரியானவர், பிறர் அனைவரும் தவறுகள் இழைப்போர் என்றும், மாற்றுக் கருத்துகளுடையோர் அறிவிலாதார், சுயநல விரும்பிகள் என்றும், மாற்று நடைமுறைகள் உடையோர் பணிவிலாதார், பாவம் செய்வோர் என்றும் ஆனால் நாங்களோ, தவறுகள் ஏதும் இழைக்காத தேவதூதர்கள், எங்களது வார்த்தைகள் தெய்வானுக்கிரகத்தால் எழுவன என்ற எண்ணத்துடன் உரையாடுவோரையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். நபிகளாரின் வார்த்தைகள், ஹதீஸ் என்பன தவிர்த்து, மனிதர்கள் கூறுவனவற்றில் ஏதும் ஒரு பகுதியை ஏற்கலாம்; ஏற்காது விடலாம் என முஸ்லிம் சமூகம் ஏற்றுள்ள முடிவுக்கு மாறாக இவர்களது போக்கு அமைந்துள்ளது. இவர்களுள் சிலர், மிகவும் சிக்கலான விவகாரங்களிலும் பிரச்சினைகளிலும் இஜ்திஹாதை ஆச்சரியமூட்டும் வகையில் முழு சுதந்திரத்துடன் பிரயோகித்து, அவை குறித்து தத்தம் எண்ணப்படி விசித்திரமான தீர்வுகளை அளிக்கவும் தயங்க மாட்டார்கள். என்றாலும் கூட, சமகால சிறந்த அறிஞர்கள், தனியாக அல்லது கூட்டமாக, அங்கீகாரம் பெற்ற மூலங்களிலிருந்து, அங்கீகாரம் பெற்ற முறைகளில் இஜ்திஹாத் பிரயோகம் மூலமாக தீர்மானங்கள் எடுப்பதை அவர்கள் மறுத்துரைப்பர். குர்ஆன், சுன்னாஹ் என்பனவற்றின் மீதும், அவற்றின் விளக்கங்கள் மீதும் கேலிக்கிடமான அபிப்பிராயங்களை வெளியிடவும் அவர்கள் தயங்குவதில்லை. அவர்கள் வெளியிடும் சில கருத்துகள், வழிவழியாக நமது முன்னோராலும், பின்னைய கால, சமகால அறிஞர்களாலும் ஆராய்ந்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளுக்கு முரண்பட்டவையாகவும், எதிரானவையாகவும் கூட அமைந்துள்ளன. இவ்வாரான பொறுப்பிலா தன்மைக்குக் காரணம் அவர்கள், தம்மைத் தாம் அபூ பக்கர், உமர், அலீ, இப்னு அப்பாஸ் ஆகியோரின் தரத்துக்கு உயர்த்திக் கொண்டுள்ளதால் விளைந்துள்ள ஆணவமும், அகந்தையுமாகும். தமது சம காலத்தவர்களுடன் மட்டும் இவர்கள் தம்மை இணைத்துக் காண முடியுமாயின் இவர்களது அகம்பாவ நிலையினால் விளையும் பாதகங்கள் தாக்கம் குறைந்தவையாய் இருக்கும்.

கண்மூடித்தனமான மத வைராக்கிய மனப்பான்மையானது தீவிரவாதத்தின் மிகத் தெளிவான ஓர் அம்சமாகும். ஒரு தீவிரவாதி, பிறரை நோக்கி பின்வருமாறு தான் பேசுவார் போலத் தோன்றுகிறது: "பேசும் உரிமை எனக்குரியது; உங்களது கடமை எனக்குச் செவி சாய்ப்பது. தலைமை தாங்கும் உரிமை எனக்குரியது; உங்களது கடமை என்னைத் தொடர்வது. என்னுடைய அபிப்பிராயங்கள் சரியானவை; அவை தவறாக முடியாது. உங்கள் அபிப்பிராயங்கள் தவறானவை; அவை சரியாக இருத்தல் முடியாது". மத வைராக்கியம் கொண்ட ஒருவர் பிறரது அபிப்பிராயங்களுடன் ஒருபோதும் உடன்பாடு காண மாட்டார். மிதமான நிலையில் உள்ளோரே இணக்கம் காணக்குடியோராயிருப்பர். வைராக்கிய மனம் படைத்தோர் மிதவாதம் பற்றி அறியவும் மாட்டார்கள்; அதனை நம்பவும் மாட்டார்கள். மக்களுடனான அவர்களது நிலைமையானது, மேற்குடனான கிழக்கின் நிலையை ஒத்தது. ஒன்றை நெருங்கும் போது மற்றதிலிருந்தும் விலகிச் செல்வதே அவர்கள் செய்வதாகும்.

விவகாரம் மேலும் முற்றுவது எப்போதென்றால், பிறரை அவர்கள் பலவந்தங்களுக்கு உள்ளாக்கும் போதாகும். அவர்களது தாக்குதல்கள் உடல்ரீதியானவை அல்ல. புதியன புகுத்தல், நம்பிக்கையின்மை, வழி தவறிவிட்டமை, பித்துப் பிடித்துள்ளமை முதலிய குற்றச்சாட்டுகள் மூலமாகவே அவர்களது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான அறிவியல் பயங்கரவாதமானது, உடல் ரீதியான பயங்கரவாதத்தைவிட அபாயம் மிக்கது.

'மிதமிஞ்சிச் செல்லும் தன்மையின் மீது கொள்ளும் அபரிமித ஈடுபாடு', தீவிரவாதப் போக்கின் இரண்டாவது வெளிப்படையான அம்சமாகும். அது மட்டுமின்றி, ஏனையோரையும் அவ்வாறே செய்யும்படி வற்புறுத்தும்போது பிரச்சனை மேலும் பெரிதாகி விடுகிறது. இறைவன் அவற்றை கட்டளையிட்டிராத நிலையிலும், செயல்களை எளிதாக்கி அமைத்துக் கொள்ளப் போதிய சந்தர்ப்பம் இருக்கும் போதும் கூட, இவ்வாறே இவர்கள் செயலாற்றுவர். இறைபக்தி காரணமாகவும், முன்னெச்சரிக்கையாகவும், குறிப்பிட்ட சில அம்சங்களில் சில சமயம் ஒருவர் கடினமானதொரு போக்கைக் கொண்டிருக்கலாம். ஆனால் செயல்களை இலகுவாக்கிக் கொள்ள வேண்டிய தேவையுள்ள சந்தர்ப்பங்களிலும் கூட, இக்கடினப் போக்கையே கடைப்பிடிக்குமளவு அவை அன்றாட வழக்கத்துக்குள்ளாகி விடக் கூடாது. அவ்வாறு செய்தல் குர்ஆனின் போதனைகளுடனோ, சுன்னாஹ்வுடனோ இயைந்ததல்ல. பின்வரும் வசனம் அதனைத் தெளிவுபடுத்துகிறது.

"அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை விரும்புகிறானே தவிர, உங்களுக்கு ச் சிரமத்தை (கொடுக்க) விரும்பவில்லை......" 
(அல் குர்ஆன் 2:185)

ஏற்கனவே நாம் எடுத்துக் காட்டியுள்ளபடி, இறைத்தூதர் அவர்கள் கூறியுள்ளார்கள்:

"(மக்களுக்கு விவகாரங்களை) இலகுவாக்குங்கள். (காரியங்களைக்) கடினமாக்கி விடாதீர்கள். (12)
அவன் அனுமதித்தவை ஏற்றுக் கொள்ளப்படுவதை இறைவன் விரும்புகிறான். (மக்கள்) அடிபணியாமையை (காண்பதை) வெறுக்கிறான். (13)"

மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது:

"இரண்டு விடயங்களில் ஒன்றைத் தேர்ந்து கொள்ளும்படி இறைதூதர் அவர்களிடம் கூறப்பெற்ற வேளைகளில், அவற்றுள் இலகுவானதையே தேர்ந்து கொண்டார்கள் - அது பாவமான காரியமாக இல்லாவிடின்."
(புகாரி, திர்மிதீ)

மக்களைக் குழப்பங்களுள் ஆழ்த்தி விடுவதும், அவர்களது வாழ்க்கையில் சிரமங்களை அதிகரிக்கச் செய்வதும் முஹம்மது (ஸல்) அவர்களது உன்னதமான குணாதிசயங்களுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். வேதங்களில் கூறப்பட்ட இது பின்னர் குர்ஆன் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது:

"(இத்தூதரோ) அவர்களை நன்மையான காரியங்களை (செய்யும் படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்குவார். நல்லவைகளையே அவர்களுக்கு ஆகுமாக்கி வைப்பார். கெட்டவர்ராஈ அவர்களுக்குத் தடுத்து விடுவார். அன்றி, அவர்களுடைய பளுவை அவர்களை விட்டுப் போக்கி, அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் (பல கடினமான கட்டளைகளையும் இறைவனின் அனுமதி கொண்டு) நீக்கி விடுவார்."
(அல் குர்ஆன் 7:157)


இதனால் தான் இறைத்தூதர் அவர்கள், தனித்து தொழுகையில் ஈடுபட்ட வேளைகளில் மட்டும் நீட்டித் தொழுவார்கள். உண்மையில் அவர்கள் இரவு வேளைகள் முழுவதும், தம் கால்கள் வீங்கும் வரை நின்று தொழுவார்கள். எனினும், தாம் தொழுகையை முன் நின்று நடத்தும் வேளைகளில் அவர்கள், தம் பின்னால் தொழுவோரின் பல்வேறுபட்ட பின்னணிகளையும், அவர்களது சகிப்புத் தன்மையின் பல்வேறு தரங்களையும் கருத்தில்கொண்டு தொழுகையைச் சுருக்கி அமைப்பார்கள். இது தொடர்பாக இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் எவரும் தொழுகையை முன்நின்று நடத்தக் கூடுமாயின் அவர் அதனைச் சுருக்கி அமைத்துக் கொள்வாராக. ஏனெனில் அவர்களுள் பலவீனமுற்றோரும், சுகவீனமுற்றோரும், முதியோரும் இருப்பர். எனினும் உங்களில் எவரேனும் தனியே தொழுவாராயின், அவர் தாம் விரும்பிய அளவு நீட்டித் தொழுதுகொள்ளலாம்.
(புகாரி)

அபூ மஸ்ஊத் அல் அன்ஸாரீயின் ஓர் அறிவிப்பின்படி ஒரு மனிதர் இறைத்தூதர் அவர்களிடம் வந்து கூறினார்:

"இறைத்தூதரே! நான் ஃபஜ்ர் தொழுகையில் கலந்து கொள்வதிலிருந்து விலகி நிற்கிறேன். ஏனெனில், இன்னார் தொழுகையை மிகவும் நீட்டிச் செல்கிறார். இறைத்தூதர் அவர்கள் மிகக் கோபம் கொண்டவர்களாகக் கூறினார்கள்: 'மக்களே! உங்களில் சிலர், நற்கருமங்களை மக்கள் வெறுக்கும்படி செய்கின்றீர்கள். தொழுகையில் முன்நின்று நடத்துபவர்கள் அதனைச் சுருக்கி கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களுள் பலமில்லாதோரும், முதியோரும், வேறு கருமங்கள் ஆற்ற வேண்டியோரும் இருப்பர்".
(புகாரி)

முஆத் (ரழி) தொழுகையை நீட்டித் தொழுவிப்பது குறித்து இறைத்தூதரிடம் கூறப்பட்டபோது அவர்கள் அளித்த பதில் குறித்து நாம் ஏற்கனவே கண்டோம். இறைத்தூதர் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் அறிவிப்பதாவது:

"நான் தொழுகைக்காக நிற்கும்போது, அதனை நீட்டியமைக்கும் நோக்குடனேயே ஆரம்பிக்கிறேன். என்றாலும் குழந்தையொன்றின் அழுகுரல் கேட்டதும் நான் அதனைச் சுருக்கிக் கொள்கிறேன். அதன் தாய்க்குத் தொல்லை தர நான் விரும்பவில்லை".

இவ்வாறே, கடமைகளைச் செய்வது போலவே மேலதிகமான நற்செயல்களை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதும், விலக்கப்பட்டவை (முஹரமாத்) எனவே கொண்டு தவிர்க்கப்படவேண்டுமெனக் குறிக்கப்பட்டவற்றுக்கும் (மக்ரூஹாத்) அவர்களே பொறுப்பாவார்கள் என்பதும், மிதமிஞ்சிய அல்லது வரம்பு மீறிய தன்மையின் ஓர் அடையாளமாகும். உண்மையில், இறைவன் மிகவும் தெளிவாகக் கட்டளையிட்டுள்ளவற்றைக் கடைபிடித்தொழுகும்படி நாம் மக்களை வேண்டிக் கொள்ளலாம். அவற்றிற்கு மேலதிகமாகச் செய்யப்படும் வணக்கங்கள் அனைத்தும், ஒவ்வொருவரதும் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தவையே. இறைத்தூதர் அவர்களும் இவ்வாறான கருத்தையே கொண்டிருந்தார்கள் என்பதைச் சுட்டுகின்றது பின்வரும் சம்பவம்:

"ஒரு நாடோடி அரபி இறைத்தூதரிடம் வந்து, 'தான் கடமையெனக் கொண்டு ஆற்ற வேண்டியன யாவை' என வினவினார். இறைத்தூதர் அவர்கள் மூன்று அம்சங்களைக் கூறினார்கள்: 'தொழுகை, ஜகாத். நோன்பு'. ' அதற்கும் மேலாகத் தான் ஆற்ற வேண்டியவை ஏதும் உள்ளதா' என அந்த அரபி கேட்டபோது 'இல்லை' எனக் கூறிய இறைத்தூதர் அவர்கள், 'விரும்பினால் அதற்கு மேலதிகமாக நன்மைகளை அவர் செய்து கொள்ளலாம்' என்றார்கள். அந்த அரபி, அந்த இடத்தை விட்டுச் செல்லும் போது, 'இறைத்தூதர் அவர்கள் தனக்கு விதித்தவற்றிலிருந்து எதையும் கூட்டவோ, அவற்றிலிருந்து எதையும் குறைக்கவோ மாட்டேன்' எனச் சத்தியம் செய்து சென்றார். இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்: 'அவர் கூறியபடியே செயல்படுவாராயின் அவர் வெற்றி பெற்றார்' அல்லது அவர் சுவனம் அளிக்கப் பெறுவார்' என்றார்கள்."
(புகாரி)

இன்றைய கால கட்டத்தில் வாழ்ந்து வரும் ஒரு முஸ்லிம், கடமைகளைப் பேணி, பாவங்களில் மிகக் கொடியனவற்றைக் கண்டித்து, இறைவனுக்கும், அவனது தூதருக்கும் அடிபணிந்தவராக விளங்குவாராயின், அவரை இஸ்லாத்துக்காகப் பரிந்து பேசுபவராகவே கொள்ள வேண்டும். அவர் விலக்கப்பட்டவைகளில் சிறிய சில தவறுகளை இழைக்கக் கூடுமாயினும்கூட, ஐவேளைத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை, நோன்பு முதலியன அவர் இழைக்கும் சிறு தவறுகளுக்குப் பரிகாரமாக அமைந்து விடும். குர்ஆன் கூறுகின்றது:

"நிச்சயமாக, நன்மைகள் பாவங்களைப் போக்கி விடும்"
(அல் குர்ஆன் 11:114)

மற்றொரு வசனம் கூறுகின்றது:

"உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற சிறிய) பாவங்களுக்கு (அதனை) நாம் பரிகாரமாக்கி, உங்களை (மன்னித்து, மிக்க) கண்ணியத்தின் வாயிலிலும் புகுத்துவோம்".
(அல் குர்ஆன் 4:31)

குர்ஆன், சுன்னாஹ் ஆகியவற்றிலிருந்து கிட்டும் ஆதாரங்கள் இவ்வாறு இருக்க, முஸ்லிம் ஒருவரை, பிரச்சனைக்குறிய சில விவகாரங்களில் அவர் கொண்டுள்ள கருத்துக்களுக்காக, அவை ஆகுமானதா விலக்கப்பட்டதா எனத் தீர்வு காணப்படாத நிலையில் எவ்வாறு நாம் இஸ்லாத்துக்கு வெளியே தள்ளலாம்? கடமையா (வாஜிப்) விரும்பத்தக்கதா (மன்தூப்) என நாமே தீர்மானம் செய்து கொள்ளாத சில விஷயங்களில் ஏதோ ஒன்றைக் கடைப் பிடிக்க வில்லை என்பதற்க்காக எவ்வாறு நாம் ஒருவரைத் தண்டிக்கலாம்? இதனால் தான், பக்திவான்களான சிலர் தமது தனிப்பட்ட நடைமுறைகளைப் பொறுத்தமட்டில் பிறரும் அவற்றை அவ்வாறே பின்பற்ற வேண்டும் என வற்புறுத்துவதில் காட்டும் மித மிஞ்சிய சிரத்தையை நான் எதிர்க்கிறேன். அவ்வாறே இவ்வாறான மக்கள், தமது கருத்துகளுக்கு இணங்காத அறிஞர்களைக் கண்டனம் செய்து வருவதையும் நான் எதிர்க்கிறேன். அந்த அறிஞர்களோ குர்ஆன், சுன்னாஹ் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தமது மார்க்கத்தைப் பின்பற்றுவதில் மக்கள் எதிர்நோக்கக்கூடிய தேவையில்லாத சிரமங்களை நீக்கி அல்லது குறைத்து, மக்களுக்கு அவர்களது மார்க்கத்தை எளிதாக்கி வைக்க முனைகின்றார்கள்.

தீவிரவாதத்தின் மூன்றாவது அம்சம் 'வரம்பு மீறிய வகையிலான கண்டிப்பான தன்மையாகும்'. அதன் காரணமாக, கால, இட பேதங்கள் எதுவும் கருத்தில் கொள்ளப்படாமல் விடப்படுவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். முஸ்லிம் - முஸ்லிமல்லாத நாடுகள் என்ற பேதமின்றி, புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோர் - ஏற்கனவே இஸ்லாத்தில் ஆழ்ந்துள்ளோர் என்ற வித்தியாசங்கள் இன்றி, எல்லா இடத்திலும், அனைவர் மீதும் இவ்வாறான கண்டிப்பான தன்மையைக் காட்டுவது நல்லதல்ல. புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களைப் பொருத்தளவில், பொருட்படுத்தத் தேவையில்லாத, அல்லது பிரச்சினைக்கு உரிய விவகாரங்களைப் பெரிதுபடுத்தாமல், இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள் மீதே அவர்களது கவனத்தை ஈர்க்க முயல வேண்டும். ஏனைய எதனையும் விட மதம் பற்றிய குறிப்பாக இஸ்லாம் பற்றிய அவர்களது எண்ணங்களையும், புரிந்துணர்வையும் சீர்படுத்தி அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சரியான விசுவாசத்தின்பால் அவர்களது உள்ளம் உறுதி பெற்ற பின்னர், ஐம்பெருங்கடமைகள், விசுவாசத்தையும் பயிற்சியையும் ஒரு நெறிப்படுத்தும் அம்சங்கள், இறைவனின் மகிழ்வைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வாழ்வை அமைத்துக் கொள்ளும் வழிமுறைகள் முதலியனவற்றைப் படிப்படியாக வலியுறுத்தலாம். இறைத்தூதர் அவர்கள் இந்த உண்மையை நமக்கு உணர்த்தியுள்ளார்கள். யெமன் நோக்கி முஆதை(ரழி) அனுப்பியபோது இறைத்தூதர் அவர்கள் கூறிய அறிவுரையின் படித்தரங்களை சற்றே அவதானித்துப் பாருங்கள்:

"வேதங்கள் அளிக்கப்பட்ட மக்களிடையே நீர் செல்கின்றீர். அவர்களை நீர் அடைந்ததும் இறைவன் மட்டுமே வணக்கத்துக்குரியவன் என்றும், முஹம்மது அவனது தூதர் என்றும் சாட்சி கூறும்படி அவர்களை அழையும். உமது அழைப்புக்கு அவர்கள் இணங்குவார்களாயின், இரவிலும் பகலிலுமாக ஐந்து வேளைகள் தன்னைத் தொழும்படி இறைவன் கட்டளையிட்டுள்ளதாகக் கூறும். அதையும் அவர்கள் ஏற்பார்களாயின் இறைவன் அவர்கள் மீது ஸதகாவை (ஸகாத்) விதியாக்கி, செல்வம் படைத்தோரிடமிருந்து பெற்று, அவர்கள் மத்தியிலுள்ள வறியோர்க்கு வழங்கும்படி கட்டளையிட்டுள்ளதாகக் கூறும்......" (14)

வட அமெரிக்க பயணம் ஒன்றின் போது என்னை அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கிய சம்பவங்கள் பல நிகழ்ந்தன. முஸ்லிம் இயக்கங்கள் சிலவற்றைச் சார்ந்த நேர்மையுள்ளம் படைத்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், பெரும் பிரச்சனைகள் சிலவற்றைக் கிளறி விட்டார்கள். சனி, ஞாயிறு தினங்களில் நடத்தப்படும் இஸ்லாமிய விரிவுரைகளைக் கேட்பதற்க்காக வரும் முஸ்லிம்கள், பள்ளிவாசல்களில் அமர்வது போல கஅபாவை முன்னோக்கித் தரையில் அமராமல் நாற்காலிகளில் அமர்வது; உடம்பில் தொங்கியதாக அமையும் மேலங்கிகளுக்குப் பதிலாக மேல் சட்டைகளும் கால் சராயும் அணிவது; தரையில் அமராமல், உணவு உட்கொள்ள மேசை, நாற்காலிகளைப் பயன்படுத்துவது முதலியவை அவர்கள் எழுப்பிய பிரச்சினைகள். வட அமெரிக்காவின் முக்கிய நகரொன்றில் வாழ்ந்து வருவோர் மத்தியில் இவ்வாறான சிந்தனை காணப்படுவது என்னுள் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் மத்தியில் உரையாற்றும்போது நான் கூறினேன்:

"இவ்வாறான லோகாயுத சமூகமொன்றில் வாழ்ந்து வரும் நீங்கள், ஏகத்துவக் கோட்பாடு, இறை வணக்கங்களின் பக்கம் அழைப்பு விடுப்பதையும், மறுமை குறித்து மக்களுக்கு நினைவூட்டுவதையும், லோகாயுத அடிப்படையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள நாடுகள் மூழ்கியிருக்கும் தீங்கு நிறை நெறிகளின் ஆபத்துகள் குறித்து எச்சரிப்பதையும் உங்களது பெருங்கடமைகளாகக் கொள்வீர்களாயின், அதுவே உத்தமமானதாகும். பழக்க வழக்கங்கள் பற்றிய நியதிகள், சமய நடைமுறைகளின் அபிவிருத்தி என்பன கால-இட பரிமாணங்களுக்கு உட்பட்டவை. அவை அனைத்தும் அடிப்படைக் கோட்பாடுகள் நன்கு வேரூன்றப்பட்ட பின்னரே அறிமுகப் படுத்தப்பட வேண்டும்".

மற்றுமோர் இஸ்லாமிய நிலையத்தின் பள்ளிவாசல் ஒன்றில் வரலாறு கற்பிக்க அல்லது கல்வி புகட்டவெனப் பயன்படும் ஒரு திரைப்படம் காட்டப்படுவது குறித்து பெரும் பிரச்சினைகளைச் சிலர் எழுப்பி விட்டனர். 'பள்ளிவாசல்களெல்லாம் திரைப்பட மாளிகைகளாக மாற்றப்பட்டு விட்டன' என அவர்கள் கண்டன கோஷங்கள் இடலாயினர். மனிதர்களின் ஆன்மீகத் தேவைகளோடு உலகத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு தளமே பள்ளிவாசல் என்பதனை அவர்கள் மறந்து விடுகின்றார்கள். முஹம்மது(ஸல்) அவர்களது காலத்தில் பள்ளிவாசல், சமூக நடவடிக்கைகளின், அரசின், அழைப்புப் பணியின் (தஃவா) மத்தியத்தளமாக விளங்கியது. அபிஸீனியாவிலிருந்து வந்த மக்கள் குழுவொன்றுக்குத் தமது பள்ளிவாசலின் மத்தியிலிருந்து அம்புகளுடனான நடனம் புரியவும், ஆயிஷா(ரழி) அதனைக் கண்டு களிக்கவும் இறைத்தூதர் அவர்கள் அனுமதியளித்ததை புஹாரியும் ஏனையோரும் அறிவித்ததன் வாயிலாக நாம் நன்கறிவோம்.

தீவிரவாதம் வெளிப்படையாகும் நான்காவது அமசத்துக்கு வருவோம். 'மக்களுடனான விவகாரங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளல், அணுகும் முறைகளில் பண்படாத தன்மை கொண்டிருத்தல், இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுக்கும்போது அநாகரிகமாக நடந்து கொள்ளல்' முதலியன இதில் அடங்குகின்றன. இவையனைத்தும் குர்ஆனின் போதனைகளுக்கும் இறைத்தூதர் அவர்களின் வழிமுறைகளுக்கும் முரண்பட்டவையாகும். இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்கும் போது, நாம் ஞானத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இணக்கமான முறையில் உரையாட வேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்:

"நீர் (மனிதர்களை) நளினமாகவும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின் வழியின் பால் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் தர்க்கிக்க நேரிட்டால் நீர் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக!"
(அல் குர்ஆன் 16:125)

குர்ஆன், இறைத்தூதர் அவர்களைப் பின்வருமாறு சித்தரிக்கின்றது:

"உங்களிலிருந்து நிச்சயமாக (நம்முடைய) ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாகிவிட்டால், (அது) அவருக்கு மிக்க வருத்தமாக இருக்கும், அன்றி உங்(கள் நன்மை)களைப் பெரிதும் விரும்புகிறவராகும், நம்பிக்கையாளர்(களாகிய உங்)கள் மீது மிக்க அன்பும் கிருபையும் உடையவராகவும் இருக்கின்றார்."

(அல் குர்ஆன் 9:128)

அல்-குர்ஆன் இறைத்தூதர் அவர்களை விளித்து, தமது தோழர்களுடனான தொடர்புகளில் அவர்கள் எத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை சுட்டுகின்றது:

"(நபியே!) இறைஅருளின் காரணமாகவே, நீர் அவர்கள் மீது இரக்கமுள்ளவரானீர். கடுகடுப்பானவாராகவும் கடின சித்தமுள்ளவராகவும் நீர் இருந்திருப்பீரானால் உம்மிடம் இருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்."
(அல் குர்ஆன் 3:159)

கடின சித்தமும், மிக்க உறுதியான தயை இல்லா உளப்பண்பும் இரண்டு விஷயங்களைப் பொறுத்தே குர்ஆனில் வலியுறுத்தப்பட்டு உள்ளன. ஒன்று, போர் விவகாரங்களோடு இணைந்தது. அதாவது, போர் முடிவுறும் வரை உறுதியான உள்ளத்தையும், இரக்கமில்லா சித்தத்தையும் கொண்டிருப்பது வெற்றிகரமான ஒரு போர் உபாயம் எனக் காட்டும் போது,

"நம்பிக்கையாளர்களே! உங்களை அடுத்திருக்கும் (விஷமிகளாகிய) நிராகரிப்போருடன் போர் புரியுங்கள். அவர்கள் உங்களிடம் கடுமையையே காண வேண்டும்".
(அல் குர்ஆன் 9:123)

அடுத்து, அல்-ஷரீஆவின் விதிப்படியான தண்டனைகளை நிறைவேற்றும் போது இறைவனின் கட்டளைகளை அமுல் செய்வதில் எவ்வித தயையும் காட்டப்படக் கூடாது எனும் போது,

"விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியவர்களாக இருந்தால் அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில், அவ்விருவர் மீதும் இரக்கம் ஏற்பட வேண்டாம்".
(அல் குர்ஆன் 24:2)

அழைப்புப் பணியைப் (தஃவா) பொறுத்தளவில் முரட்டுத்தனத்துக்கோ, கடுமைக்கோ இடமில்லை. மின்வரும் ஹதீஸ்கள் இதனைத் தெளிவாக்குகின்றன:

'எல்லா விவகாரங்களிலும் இரக்க சிந்தயை அல்லாஹ் விரும்புகிறான்.
இரக்கம் அழகு படுத்துகின்றது; ஹிம்சை குறைபாடடையச் செய்கின்றது'.
(புகாரி)

நமது முன்னோரும் இதனையே வலியுறுத்தியுள்ளனர்:

'பொது நன்மையைக் கருதிச் செயலாற்றும் எவரும் உயர்பண்புகளுடன் செயல்படவும்'.

ஹிம்சையினால் ஏற்படும் பாதிப்புகள், இறை பாதையில் மேற்கொள்ளப்படும் அழைப்புப் பணியைவிட வேறு எதையும் மோசமாகப் பாதிக்க முடியாது. மனிதனது உள்ளுணர்வுகளின் அடித்தளத்தை ஊடுருவிச் சென்று அவனை உணர்விலும், நடத்தையிலும், கோட்பாடுகளிலும் உன்னத, தெய்வீக பண்புடையவனாக ஆக்குவதற்கும், அவனது சிந்தனையையும், விருப்பங்களையும் சீர்படுத்தி அவனைப் புதியதொரு பிறவியாக மாற்றியமைக்கவும் முனைவது அழைப்புப்பணி. மேலும், முழு சமூக அமைப்பையும் குலுக்கி, அதன் வழிவழி வந்த நம்பிக்கைகளையும், நன்கு வேரூன்றிய மரபுகளையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும், நடைமுறை ஒழுங்குகளையும் சீர்படுத்த அது முனைகின்றது.

மானிட இயல்புகளை, மனிதனின் சாதாரண பிடிவாத குணத்தை, மாற்றங்களை மறுத்துரைக்கும் எதிர்ப்புணர்வை, தர்க்கிக்கும் மனப்பாங்கை, ஞானமும் இணக்கமும் இன்றி புரிந்துகொள்வது சிரமம். மனித இதயத்தையும், சிந்தையையும் கவர்ந்து கொள்வதற்கும், மனிதனது கடுமையான போக்கையும் கர்வத்தையும் தளர்வுறச் செய்வதற்கும் கருணை, நற்பண்புகள் என்பன அத்தியாவசியமானவை. இறைவனின் பக்கம் அழைப்பு விடுத்த முந்தைய இறைத்தூதர்களும் நேர்மையான விசுவாசிகளும் இவ்வாறான ஒழுங்கு முறைகளையே கையாண்டனர் எனக் குர்ஆன் கூறுகின்றது. இதற்கான எடுத்துக்காட்டுகளை, தமது தந்தையாருக்கும், மக்களுக்கும் இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களும், தமது சொந்த மக்களுக்கு ஷுஐப் நபியவர்களும், ஃபிர்அவ்னுக்கு இறைத்தூதர் மூஸா அவர்களும், ஃபிர்அவ்னின் மக்களுக்கு விசுவாசிகளாக இருந்தோரும் விடுத்த அழைப்புகளில் கண்டு கொள்ளலாம். மக்களை சத்தியத்தின் மீதும், நல் வழிகளின் மீதும் செலுத்த முனைந்தவர்களது போதனைகளிலும் இவற்றை நாம் காண முடியும். ஃபிர்அவ்னின் மக்களில் இறைநம்பிக்கை மிகக் கொண்டிருந்த ஒரு மனிதர், தனது மக்களோடுள்ள இணக்கத்தின் காரணமாக, அவர்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, எத்துணை உரிமையுடன், அவர்களது ஆளுகையும் புகழும் நிலைபெற வேண்டுமென விரும்புகின்றார் என்பதைக் கண்டு, சற்றே அது குறித்துச் சிந்திபோம்:

"என்னுடைய மக்களே! இன்றைய தினம் ஆட்சி உங்களிடம்தான் இருக்கின்றது. இந்நாட்டில் (நீங்களே) மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய வேதனை நமக்கு வந்து விட்டால், (அதனை தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?"
(அல் குர்ஆன் 40:29)

பின்னர் அவர், இறைவனின் கட்டளைகளுக்குச் செவிசாய்க்க மறுத்த ஆரம்ப சமூகங்கள் குறித்து நினைவுறுத்துகின்றார்:

"என்னுடைய மக்களே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் (கெட்ட) நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமென்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன். (இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய மக்களுக்கும், ஆது (டைய மக்களு)க்கும் ஸமூது (டைய மக்களு)க்கும் அவர்களுக்குப் பின் வந்தவர்களுக்கும் நிகழ்ந்தது போன்ற (ஆபத்து) (உங்களுக்கும் நிகழ்ந்து விடுமென்று நான் பயப்படுகிறேன்). அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயம் செய்ய விரும்பமாட்டான்.”
(அல் குர்ஆன் 40:30, 31)

பின்னர், நியாயத் தீர்ப்பு நாளின்போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய தீங்குகள் குறித்து விவரிக்கின்றார்:

"என்னுடைய மக்களே! (கூலி கொடுக்க) அழைக்கப்படும் (மறுமை) நாளைப் பற்றியும் உங்களுக்காக நிச்சயமாக நான் பயப்படுகிறேன். நீங்கள் (வேதனைக்குப் பயந்து) புறங்காட்டி ஓடும் அந்நாளில் அல்லாஹ்வை விட்டு உங்களைக் காப்பாற்றக் கூடியவன் ஒருவனும் இல்லை. அல்லாஹ் எவனைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ அவனை, நேரான வழியில் செலுத்தக் கூடியவன் ஒருவனும் இல்லை.”
(அல் குர்ஆன் 40:32, 33)

அவர் தனது வேண்டுகோளை கருணையும், பண்பும் நிறைந்த முறையிலேயே விடுக்கின்றார். எச்சரிக்கை செய்யும் அவர், அம்மக்களுக்கு நம்பிக்கையும் ஊட்டுகின்றார்:

"என்னுடைய மக்களே! என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேர்வழியைக் காண்பிப்பேன். என்னுடைய மக்களே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் (நிலையற்ற) இன்பம்தான். நிச்சயமாக மறுமையோ - அதுதான் நிலையான (இன்பம்தரும்) வீடு. என்னுடைய மக்களே! எனக்கென்ன - (ஆச்சரியமாக இருக்கின்றது!) நானோ உங்களை ஈடேற்றத்திற்கு அழைக்கின்றேன். நீங்கள் என்னை நரகத்திற்கு அழைக்கின்றீர்கள். அன்றி, நான் அல்லாஹ்வை நிராகரிக்கவும் நான் அறியாததை அவனுக்கு இணை வைக்கவும் நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள்; நானோ, (யாவரையும்) மிகைத்தோனும் மிக்க மன்னிப்போனுமாகிய அவனிடம் உங்களை அழைக்கின்றேன்." 
(அல் குர்ஆன் 40:38, 42)

தன் அறிவுறுத்தலை முடிக்கும் அவர் கூறினார்:

"நான் உங்களுக்கு (உண்மையென) கூறுவதை நிச்சயமாக அதி சீக்கிரத்தில் நீங்கள் (அறிந்து) நினைத்துப் பார்ப்பீர்கள். என்னுடைய காரியத்தை அல்லாஹ்விடமே நான் ஒப்படைக்கின்றேன். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கியவனாக இருக்கின்றான்.”
(அல் குர்ஆன் 40:44)

முரண்டு பிடிப்பவர்களுடனும், பிற மதத்தவர்களுடனும் சமகால இஸ்லாமிய அழைப்பாளர்கள் (துஆத்) கையாள வேண்டிய ஒழுங்கு முறைகள் இவ்வாறே அமைய வேண்டும். இறைவன், ஃபிர்அவ்னுக்குப் போதனை செய்ய அனுப்பிய தனது இரு தூதர்களான மூஸா(அலை) (15), அவர் சகோதரர் ஹாரூன்(அலை) ஆகியோருக்கு அளித்த அறிவுறுத்தலும் இதே தோரணையில் அமைந்ததே:

"நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்து விட்டான். நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அதனால் அவன் நல்லுணர்வு பெறலாம்; அல்லது நடுக்கமடையலாம்."
(அல் குர்ஆன் 20:43, 44)

இக்கட்டளையை ஏற்று மூஸா(அலை) ஃபிர்அவ்னுடன் மிக நளினமாகவே உரை செய்தார்கள்:

"(பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவான் ஆக உனக்கு விருப்பந்தானா? (அவ்வாறாயின்) உன் இறைவன் பால் செல்லக்கூடிய வழியை நான் உனக்கு அறிவிக்கிறேன். அவனுக்கு நீ பயந்துகொள்." 
(அல் குர்ஆன் 79:18, 19)

எனவே தான் மாற்றுக் கருத்துக்கள் கொண்டோருடன் இன்றைய இளைஞர்கள் தர்க்கம் செய்யும் முறைகளை, அழைப்புப் பணியில் (தஃவா) போதிய பரிச்சயம் கொண்டுள்ள முதியோர்கள் கண்டிப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மக்களை இறைவனின் பாதையின் பால் வினயமாக அழைப்பதற்குப் பதிலாக இளைஞர்களுள் பலர் முரட்டுத்தனமும், பண்பிலா முறைகளும், அநாகரிகமும் கொண்டவர்களாக நடந்து கொள்வது கவலைக்குரியது.
இளைஞர்களுக்கும் முதியோர்க்கும் இடையில் இருக்கக்கூடிய வேறுபாடுகளோ, மூப்பு, தகைமை முதலியன காரணமாக, சாதாரணமாகவே அளிக்கப்பட வேண்டிய மரியாதைகளோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. பெற்றோர்க்கு, ஆசிரியர்க்கு, அறிஞர்களுக்கு, அழைப்புப் பணி, இறை நெறிக்கான போராட்டம் (ஜிஹாத்) ஆகிய அம்சங்களில் அதிக அனுபவம் பெற்றவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கெளரவம் அளிக்கப்படுவது குறைவு. சமூகத்தார் மத்தியில் காணப்படக் கூடிய பல்வேறு சாரார்களிடையே காணப்படும் வேறுபாடுகளைக் கூட இவர்கள் பொருட்படுத்துவதில்லை.

பாமரர், கல்வியறிவில்லாதோர், வழி கெடுக்கப்பட்டோர், அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்காக அல்லல்களுக்கு உள்ளாவோர், குரோதமும் துரோகமும் காரணமாக இஸ்லாத்தை வன்மையாக எதிர்த்து நிற்போர் முதலிய பல தரப்பட்டவர்களை உள்ளடக்கியது சமூகம். ஆரம்பகால ஹதீஸ் வல்லுனர்கள் சமூகத்தின் பல்வேறு சாராரையும் பிரித்தறிவிக்கும் பல்வேறு வழிமுறைகளைக் காட்டிச் சென்றுள்ள நிலையிலும் கூட, இன்னமும் முஸ்லிம் சமூகத்தில் இத்துறை பற்றிய அறிவும் தெளிவும் குன்றியிருப்பது வருந்தத்தக்க ஒரு விஷயம். புதியன புகுத்தினாலும் அதன்பால் மக்களை அழைக்காத குழுவினர்க்கும், தாம் புகுத்திய புதிய அம்சங்களைச் சரியென நிறுவி, அவற்றை விளம்பரம் செய்து, மக்களைத் தம்பால் கவர முனைந்த குழுவினர்க்கும் இடையிலான வேறுபாடுகளைக்கூட ஹதீஸ் வல்லுனர்கள் மிகத் தெளிவாக நிறுவியுள்ளனர். முன்னைய சாரார் கூறியன ஏற்கப்பட்டன; பின்னைய சாரார் கூறியன நிராகரிக்கப்பட்டன.

தீவிரத்தன்மையின் மற்றுமோர் அம்சம் 'நம்பிக்கையின்மையும், சந்தேக நோக்கும்' ஆகும். மக்களைக் குற்றம் சாட்டுவதிலும், அவர்கள் மீதான தமது தீர்மானங்களைப் பகிரங்கப்படுத்துவதிலும் தீவிர தன்மை படைத்தோர் மிக வேகமாக இயங்குவர். 'குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றஞ் சுமத்தப்பட்டவர் நிரபராதியே' என்ற சாதாரண உலக வழக்கு எதுவும் அவர்கள் மத்தியில் எடுபடுவதில்லை. எவரேனும் ஒருவர் மீது சற்றேனும் சந்தேகம் தோன்றுமாயின் உடனேயே அவரை ஒரு குற்றவாளியெனத் தீர்மானம் செய்து விடுவர். விவரங்களோ, தெளிவோ பெற முனையாமல் திடீர் முடிவுகள் எடுப்பர். சிறியதொரு தவறைக் கூட, பென்னம் பெரியதாக மிகைப்படுத்தி விடுவர். தவறு பாவத்தின் தரத்துக்கும், பாவமென்று நிராகரிப்பின் (குஃப்ர்) தரத்துக்கும் மிகைப்படுத்தப்படுவதைக் காணலாம். இவ்வாறான நடவடிக்கைகள் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கும், போதனைகளுக்கும் முற்றிலும் முரணானவை. பிற முஸ்லிம்கள் குறித்து நல்லவிதமாகவே சிந்திக்க வேண்டுமென்றும், அவர்கள் இழைக்கக் கூடிய சிறு தவறுகளுக்குச்சமாதானம் காட்டித் திருப்தியுற வேண்டுமென்றும், அவர்களது சொல், செயல் ஆகியனவற்றைச் சீர்படுத்தியமைக்க வேண்டும் என்றும் இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.

இவ்வாறான தீவிரத் தன்மை கொண்ட ஒருவருடன் யாரேனும் ஒருவர் முரண்படக் கூடுமாயின் அவரது சமய நேர்மை, தூய்மை என்பன உடனே கேள்விக்குள்ளாக்கப்பட்டு விடுகின்றன. விதிமுறைகளை மீறியவர்களாக, நவீன அம்சங்களைப் புகுத்த முனைபவர்களாக அவர்கள் சித்தரிக்கப்படுவர். இஸ்லாமிய மூலாதாரங்களின் அடிப்படையிலேயே அவர்களது நடவடிக்கைகள் அமைந்திருந்தாலும்கூட, நபிகளாரின் வழிமுறைக்குக் களங்கம் விளைவிக்க முனைபவர்களாக அவர்கள் குற்றம் சாட்டப்படுவார்கள். பல எடுத்துக்காட்டுகளை நாம் காணலாம். ஒரு தடியைக் கையிலெடுத்துச் செல்லுதல், நிலத்தில் அமர்ந்தவாறு உணவு உட்கொள்ளுதல் முதலியன சுன்னாஹ்வோடு சம்பந்தப்படாதவை என ஒருவர் வாதாடுவாராயின், அவர் நபிகளாரையே அவமதித்து விட்டதாகக் குற்றம் சுமத்தப் பெறுவார். இவ்வாறான குற்றச்சாட்டுகளிலிருந்து அறிவில் சிறந்த முஸ்லிம் கல்விமான்களோ பெரும் அறிஞர்களோ கூட தப்பித்துக் கொள்ள இயலாது. முஸ்லிம் சமூகத்தாரின் விவகாரங்களை இலகுபடுத்தி வைக்கும் வகையில் ஒரு சட்ட அறிஞர் (ஃபகீஹ்), சட்டவியல் அபிப்பிராயம் (ஃபத்வா) ஒன்றை அளிப்பாராயின் அவர் சமய விவகாரங்களை எளிமைப்படுத்த முனைகின்றார் எனக் கண்டிக்கப்படுவார். காலத்தின் பரிமாணத்தை அனுசரித்து அதற்கியைந்த வகையில் ஒரு முஸ்லிம் அழைப்பாளர் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்கக் கூடுமாயின் அவர், மேலைநாட்டு நாகரிகத்தில் மூழ்கி, அதனை உயர்த்திப் பிடிக்க முனைகின்றார் எனக் குற்றம் சாட்டப் பெறுவார். இவ்வாறான கண்டனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் இலக்காவோர் இந்த உலகில் வாழ்ந்து வருவோர் மட்டுமல்ல, தம் மீது விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவிக்க இயலாத, மரணித்து விட்டோரும் கூட இவற்றிற்குள்ளாவார். மாற்றுக் கருத்துக்கொண்டோர் எவரும், தாம் ஒரு ஃப்ரீமேஸன், அறிவீனர், பாவி என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்டு கண்டனத்துக்கு உள்ளாக்கப்படுவதை எதிர்பார்க்கலாம்.

இஸ்லாமிய உலகில் வழங்கி வரும் சட்டவியல் கோவைகளை எவ்வளவோ சிரமங்களின் மத்தியில் கோர்வை செய்து பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் பெருமதிப்பினைப் பெற்று விளங்கும் இஸ்லாமிய சட்ட மேதைகள் நால்வரும் கூட, இத்தீவிர தன்மை கொண்டோரின் விஷமத்தனமான தாக்குதல்களிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலவில்லை. உண்மையில் முஸ்லிம் சமூகத்தின் முழு வரலாற்றிலும், வியத்தகு பெருமையை ஈட்டித் தரும் வகையில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான நாகரிகத்தை உருவாக்கித் தந்த ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டின் பின்னரான காலப்பகுதி நியாயமில்லா கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. இக்காலப் பகுதியே சம காலத்துத் தீவினைகள் அனைத்துக்கும், நமது பரிதாப நிலைக்கும் வித்தூன்றிய காலம் என இத்தீவிரவாதிகள் கூறுவர். அவர்களுள்ளும் சிலரது நோக்கில், அக்காலம் பூசல்களும், பிரிவினைகளும், தனியார் அதிகாரப் போட்டியும் நிறைந்த காலம்; மற்றும் சிலருடைய நோக்கில் அறியாமையும், நிராகரிப்பும் நிறைந்த காலம்.

அழிவையே ஊக்குவிக்கும் இவ்வாறான தன்மைகள் நவீனமானவையல்ல. நபி(ஸல்) அவர்களது காலத்திலும் தீவிரத் தன்மை கொண்டோர் இருக்கவே செய்தனர். ஒருமுறை அன்ஸாரிகளில் ஒருவர், போர்ப் பொருட்களின் பங்கீட்டில் சில சாரார்க்குச் சாதகமாக நபிகளார் நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டினார். சமகால தீவிரத் தன்மை கொண்டோரின் மிகப்பெரிய குறைபாடு சந்தேகமாகும். இவர்கள் புனித குர்ஆனையும், சுன்னாஹ்வையும் நன்கு கற்றுப் போதிய தெளிவு பெற்றிருப்பார்களாயின் இவையிரண்டும், தனியாகவும் கூட்டாகவும், முஸ்லிம்கள் அனைவரது இதயங்களிலும் தன்னம்பிக்கை ஏற்படுத்தப்படுவதையும், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் பரஸ்பரம் நம்பிக்கை உடையவர்களாக வாழ வேண்டியதையும் வற்புறுத்துவதைக் காண்பார்கள். மற்றொருவரின் சிறு தவறுகள், பிழைகள் மீது தம் அதிகாரத்தைக் காட்ட முனைதலோ, அவர்களது நற்பண்புகளைக் கருத்தில் கொள்ளாதிருத்தலோ ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்பட்டவையல்ல.

"நீங்கள் உங்களைத் தூயவர்களென (பீற்றி) கொள்ளாதீர்கள். (உங்களில்) தூயவர்கள் எவரென்பதை அவனே நன்கறிவான்." 
(அல் குர்ஆன் 53: 32)

உண்மையில் இஸ்லாம், இரண்டு விஷயங்களை குறித்து கடுமையான எச்சரிக்கைகளை விடுக்கின்றது: இறைவனின் கருணை மீது நம்பிக்கை இழத்தல்; சக மானிடர் மீது சந்தேகம் கொள்ளல்.

"நம்பிக்கையாளர்களே! சந்தேகங்களிலிருந்து அநேகமாக நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் சில விஷயங்களில் சந்தேகிப்பது பாவமாக இருக்கின்றது."
(அல் குர்ஆன் 49:12)

இது தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்:

"சந்தேகத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகமானது உரையாடலில் பொய்யான ஒரு விஷயமாகும்.” (16)

ஏமாற்றுதல், ஆணவம், ஏனையோரை இகழ்ந்துரைத்தல் என்பன சந்தேகத்தின் மூலங்களாக அமைந்துள்ளன. பணிவின்மையின் ஆரம்பமும் இதுவே. இதனை நாம் ஷைத்தானிடம் காணமுடிந்தது. ஆதம்(அலை) அவர்கள் முன்னால் சிரம் பணியும்படி பணிக்கப்பட்ட வேளை ஷைத்தான் மறுத்துரைத்தான்.

"அவரை விட நானே மேலானவன்……"
(அல் குர்ஆன் 38:76)

பின்வரும் ஹதீஸில் குறிக்கப்படும் எச்சரிக்கையை மனதில் கொள்வது நலம் பயக்கும்:

"மக்கள் அழிந்து பட்டார்கள் என யாரேனும் ஒருவர் கூறுவாராயின், செருக்கும் ஆணவமும் காரணமாக, அவ்வாறு கூறியவரே அழிந்து போவர்."
(முஸ்லிம்)

மற்றோர் அறிவிப்பின்படி, "...அவ்வாறு கூறியவரே அவர்களை அழிவுக்குள்ளாக்குகின்றார்." தனது சந்தேகம், தற்பெருமை என்பன காரணமாகவும், இறைவனின் கருணை மீது அம்மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வதன் மூலமும் அவர், இவ்வாறான ஓர் இழிநிலையை உருவாக்கி விடுகின்றார். தற்செருக்கானது, சீர் கேட்டைக் கொண்டு வரும் சாதாரண ஒரு மானிட இயல்பாகும். இதனையே முஸ்லிம் அறிஞர்கள் 'ஆன்மாவின் பாவங்கள்' எனச் சித்தரிப்பர். நபிகளார் இவ்வாறான பாவங்கள் குறித்து நம்மை எச்சரித்துள்ளார்கள்:

"மூன்று பெரும் பாவங்கள் இருக்கின்றன்: திருப்தியடையா பேராசை, அவா, செருக்கு."

உண்மையில்,ஒரு முஸ்லிம் தனது கருமங்கள், செய்கைகள் காரணமாக ஒரு போதும் பெருமை கொள்வதில்லை. ஏனெனில், அவை இறைவனால் ஏற்கப்படுவதற்குத் தகுதியானவையா என அவர் அறிய மாட்டார். தர்மங்கள் செய்வோர் குறித்துக் குர்ஆன் கூறுகின்றது:

"அவர்கள், தங்களுக்குச் சாத்தியமான வரையில் தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய இதயங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றன......"
(அல் குர்ஆன் 23:60)

நன்மையான கருமங்கள் செய்தும், அவற்றை அல்லாஹ் ஏற்காது விட்டுவிடுவானோ என்று அஞ்சுபவர்களைக் குறித்தே இந்த வசனம் என்று ஹதீஸ் தொகுப்புகளின் மூலம் அறிய முடிகின்றது. இப்னு அதாஅ கூறுவார்:

"பணிவுடைமையின் வாசல்களை அல்லாஹ் உங்களுக்குத் திறந்து வைக்கலாம்; ஆனால் ஏற்புடைமையின் வாசல்களை அவன் திறக்காது விடலாம். பணிவின்மையின் ஒரு தரத்தை அவன் உங்களுக்குக் கட்டளையிடலாம்; ஆனால் அதுவே, உங்களை நேர்வழியின் பால் செலுத்துவதாகவும் அமையக்கூடும். அடக்கத்தை உங்களுக்குக் கற்பிக்கும் பணிவின்மையானது, ஆணவத்தையும் செருக்கையும் வளர்க்கும் இறைபக்தியைவிடச் சிறந்தது."

அலீ இப்னு அபீதாலிப்(ரழி) அவர்கள் கூறினார்கள்:

தற்பெருமையை வளர்க்கும் ஒரு நற்செயலை விட, ஒரு மனிதனுக்கு ஏற்படும் பாதகமானது அல்லாஹ்வின் பார்வையில் சிறந்தது."

இப்னு மஸ்வூத்(ரழி) கூறினார்கள்:

"இரு விஷயங்கள் அழிவுக்கு வழியமைக்கின்றன: செருக்கும், நம்பிக்கையின்மையும். முயற்சியும், போராட்டமுமின்றி மகிழ்வை அடைய முடியாது. தற்பெருமை கொண்ட ஒரு மனிதன் முயற்சி செய்ய மாட்டான். ஏனெனில், தான் சிறந்தவன், பூரணமானவன் என்றே அவன் நம்பியிருப்பான். நம்பிக்கையீனனான ஒருவன் முயற்சி செய்ய மாட்டான்; ஏனெனில் அதனால் பயன் ஏதும் விளையப் போவதில்லையென்றே அவன் நம்பியிருப்பான்."

தீவிரத்தன்மையின் உச்ச கட்டமாக அமைவது குறிப்பிட்ட ஒரு குழுவினர், ஏனைய மக்கள் அனைவரதும் பாதுகாப்பு உரிமைகளை மறுப்பது மட்டுமல்லாது, அவர்களைக் கொல்லவும், அவர்களது உடைமைகளை அபகரிக்கவும் முனைவதாகும். அவ்வாறான ஒருவர், தமது குழுவினரைத் தவிர ஏனைய அனைவரையும் நிராகரிப்பாளர்கள் என்றே கருதுவார். இது, அவருக்கும் எஞ்சிய சமூகத்துக்கும் இடையிலான உறவுகள் அனைத்தையும் முறித்து விடுகின்றது. தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல் முதலிய அனைத்து அம்சங்களிலும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் எனப் பெயர் பெற்றிருந்தும் கூட, இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஃகவாரிஜ்கள் இவ்வாறான ஒரு சங்கடத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களது நம்பிக்கைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவர்களது சிந்தனையானது, பிறழ்வும், தீங்கும் கொண்டதாக இருந்தது. தமது நடவடிக்கைகள் அனைத்தும் தவறுகள் ஏதுமில்லாதவை; உன்னதமானவை எனத் தாமே ஒருவகை நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, தாம் நாடாமலேயே அவர்கள் வழி பிறழ்ந்து செல்லலாயினர். அவர்களது பக்திப்பூர்வ தன்மை குறித்து இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்:

"அவர்களது (ஃகவாரிஜ்களது) தொழுகையின் முன்னால் உங்களது தொழுகையும், அவர்களது இரவு வேளைகளிலான வணக்கத்தின் முன்னால் உங்களது இரவு வணக்கமும், அவர்களது குர்ஆன் ஓதுதலின் முன்னால் உங்களது குர்ஆன் ஓதுதலும் எவ்வித மதிப்பும் அற்றவை என்றே நீங்கள் கருதுவீர்கள். இருந்தும் என்ன? அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள்; என்றாலும் அது அவர்களது தொண்டைக் குழியின் கீழ் செல்லாது. மார்க்கத்தின் ஊடாக அவர்கள் செல்வார்கள்; எனினும் எவ்வித பயனும் அவர்களுக்குக் கிட்டாது.
(முஸ்லிம்)

இறைத்தூதர் அவர்கள் மேலும் கூறினார்கள்:

"இஸ்லாத்தைப் பின்பற்றுவோரை அழித்தலையும் சிலைவணங்கிகளைக் காப்பதையுமே தம் கடமையாக அவர்கள் கொள்வார்கள்."
(முஸ்லிம்)

இதன் காரணமாகத் தான், ஒரு முஸ்லிம் அவர்களிடம் அகப்பட்டு, தன்னை அடையாளம் காட்டும்படி வேண்டப்பட்டபோது, தான் ஒரு இணைவைப்பவர் (முஷ்ரிக்) என்றும், 'இறை வேதத்தையும் இறை போதனைகளையும் அறிய ஆவல் கொண்டுள்ளேன்' என்றும் அந்த முஸ்லிம் கூறினார். இதைக் கேட்டதும் ஃகவாரிஜ்கள், அவருக்குப் பாதுகாப்பளித்து, பிரச்சினையின்றி அவர்தம் பயணத்தைத் தொடர உதவுவதாகக் கூறினர். தமது முடிவுக்கு ஆதரமாக அவர்கள் குர்ஆன் வசனம் ஒன்றை ஓதலாயினர்:

"இணை வைத்து வணங்குவோரில் எவரும் உம்மிடம் பாதுகாப்பைக் கோரினால், இறைவனுடைய வசனங்களை அவர் செவியுறும் வரையில் அவருக்கு அபயமளியும். (அவர் அதைச் செவியுற்றும் நம்பிக்கை கொள்ளாவிட்டால்) அவரை அவருக்கு அபயமளிக்கும் (வேறு) இடத்துக்கு அனுப்பி வைப்பீராக! ஏனென்றால் நிச்சயமாக அவார்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றார்கள்."
(அல் குர்ஆன் 9:6)

இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த மனிதர் தான் ஒரு முஸ்லிம் என உண்மையைக் கூறியிருந்தால், அப்போதே அவர் கொல்லப்பட்டிருப்பார்.

வாய்ப்புக்கேடாக சில முஸ்லிம்கள் இன்னமும் இவற்றிலிருந்து படிப்பினையேதும் பெற்றுள்ளதாகத் தெரியவில்லை. ஃகவாரிஜ்களின் பாதையிலேயே இன்னமும் சிலர் வழி நடத்தப்படுகின்றனர் போலத் தோன்றுகின்றது. பாவமொன்றை செய்து உடன் பாவமன்னிப்புத் தேடாதவர் எவரையும் உடனேயே நிராகரிப்புக் (குஃப்ர்) குற்றஞ்சாட்டி நிராகரித்து விடுவர் இவர்கள். ஷரீஆவை அமுல்செய்யாத ஆட்சியாளரும், அவ்வாட்சியாளர்க்கு கட்டுப்பட்டு வாழும் மக்களும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பர். அவ்விரு சாராரையும் நிராகரிப்பாளர்கள் எனப் பிரகடனம் செய்யாத மார்க்க அறிஞர்கள் பெரும் பாதகர்கள்; இவர்களது கருத்தை நிராகரித்து, அங்கீகாரம் பெற்ற ஒழுங்குமுறைகளின் கீழ் சட்டகோவைகளை அமைத்துத் தந்த இஸ்லாமிய சட்டமேதைகளுள் பிரசித்தி பெற்ற நால்வரையும் பின்பற்றியொழுகுவோர் பிற்போக்குவாதிகள்; ஆரம்பத்தில் இவர்களது நோக்கங்களுக்கு ஆதரவாக இருந்து, பின்னர் ஏதோ ஒரு காரணம் கருதி இவர்களை விட்டும் நீங்கிச் சென்று விட்டோர் முர்தத்கள்(17); அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்பர். இவர்களைப் பொறுத்த வரை நான்காம் நூற்றாண்டிற்குப் பிந்தய கால கட்டங்கள் அனைத்தும், அறியாமையும், நிராகரிப்பும் நிரம்பியவை; இறை வணக்கத்தைக் கைவிட்டு சம்பிரதாயச் சிலை வணக்கத்தையே ஊக்குவிப்பவை. (18)

வரம்பு மீறியவர்கள் என இறந்தோர், இருப்போர் அனைவரையுமே குற்றம் சுமத்துவதன் மூலம் இவர்கள் தம்மைத்தாமே பெரும் பாவத்திற்குள் ஆழ்த்திக் கொள்கின்றனர். முஸ்லிம் ஒருவரை நிராகரிப்புக் குற்றம்சாட்டுவது மிகவும் பாரியதொரு விவகாரம் மட்டுமல்ல; பெரும் பாதகங்களை விளைப்பதாகவும் உள்ளது. நிராகரிப்பு குற்றத்திற்கு உள்ளான ஒருவர் கொல்லப்படுவதும் நியாயமான கருமங்களாக அமைந்து விடுகின்றன. ஒரு நிராகரிப்பாளர் என்ற வகையில் அவர் தனது மனைவி பிள்ளைகளிலிருந்து பிரித்து வைக்கப்பட வேண்டியவர். அவருக்கும் ஏனைய முஸ்லிம்களுக்கும் இடையில் எவ்வித நல்லுறவும் நிலவ முடியாது. வாரிசுரிமைகள் எதற்கும் அவர் தகுதியானவர் அல்லர். அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட இயலாது. அவருக்காக ஜனாஸா தொழுகை தொழ முடியாது. இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்:

"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை நிராகரிப்பாளர் (காஃபிர்) எனக் கூறுவாராயின் நிச்சயம் அவ்விருவரில் ஒருவர் அவ்வாறே ஆவார்." 
(புகாரி)

ஆக, இவ்வாறான குற்றச்சாட்டு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் ஒழிய, அக்குற்றச்சாட்டை சுமத்தியவர் மீதே அது திரும்பி வந்து அவர் இம்மையிலும், மறுமையிலும் பெருந்துயர்களை அனுபவிக்கும்படி செய்யும். உஸாமா பின் ஸைத்(ரழி) கூறினார்:

"'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறிய நாயன் வேறு யாரும் இல்லை' என ஒருவர் சாட்சி கூறுவாராயின் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவராகின்றார். எனவே அவரது உயிரும், உடைமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அச்சத்தின் காரணமாகவோ, அல்லது வாளில் நின்றும் தப்பிக் கொள்வதற்காகவோ அவர் அவ்வாறு கூறியிருப்பின், அவர் அதனை இறைவனுடன் தீர்த்துக் கொள்வார். வெளிப்படையானவற்றை நாம் தீர்மானிக்கலாம்."
(புகாரி)

தனது கோத்திரத்தார் யுத்தத்தில் தோல்வியுற்றமை தெரிய வந்ததும் ஷஹாதா(19) கூறிய மனிதரை உஸாமா கொன்று விட்டார். இது தெரிய வந்த வேளை நபிகளார் உஸாமாவை வெகுவாகக் கடிந்து கொண்டார்கள். அம்மனிதர் தனது உயிரைக் காத்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே ஷஹாதா கூறினார் எனத்தான் நினைத்ததாகச் சமாதானம் கற்பிக்க முனைந்தார் உஸாமா, இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்:

"'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறிய நாயன் வேறு யாரும் இல்லை' என அவர் சாட்சியம் கூறிய பின்னரும் நீர் அவரைக் கொன்று விட்டீரா? உஸாமா கூறினார்: அன்றைய தினத்திற்கு முன்னர், நான் இஸ்லாத்தில் இணைந்திருக்கக் கூடாது எனக் கருதுமளவு, நபிகளார் இதனை மீண்டும் மீண்டும் கூறலானார்கள்."

விருப்புடன் மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோர், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட காரணங்களிருந்தால் மட்டுமே அதிலிருந்தும் வெளியேற்றப்படலாம் என அல்-ஷரீஆ கற்பிக்கின்றது. பெரும் பாவங்களான கொலை, பிறன் மனை விழைதல், மது அருந்துதல் என்பன கூட, நிராகரிப்பு (குஃப்ர்) குற்றம் சாட்டப்படுமளவு தீவிரமான பாவங்களல்ல. குற்றம் சுமத்தப் பட்ட அந்த மனிதர் அல்-ஷரீஆவை அவமதிக்க, நிராகரிக்க அல்லது ஏற்க மறுக்க முனையாதவரை நிராகரிப்புக்கு உள்ளானவராக மாட்டார். இதனால் தான் குர்ஆன், திட்டமிட்டுக் கொலை செய்தவன் ஒருவனுக்கும், கொலை செய்யப்பட்டவனது குடும்பத்தில் இறந்து விட்டவனை அடுத்து இருப்பவருக்கும் இடையில் சகோதர பந்தம் ஒன்றினை நிறுவ முனைகின்றது:

".....ஒரு சிறிதேனும் அ(க்கொலையுண்ட)வனுடைய சகோதர (பாத்தியஸ்த)ர்களால், எவரும் மன்னிக்கப்பட்டு விட்டால், மிகக் கண்ணியமான முறையைப் பின்பற்றி (அவனைக் கொலை செய்யாது விட்டு)விட வேண்டும். (பழிவாங்குவதற்குப் பதிலாகக் கொலையாளி ஒரு தொகையைத் தருவதாக ஒப்புக்கொண்டிருந்தால், அந்த நஷ்ட ஈட்டைத் தயக்கமின்றி) நன்றியோடு அவன் செலுத்திவிட வேண்டும்."
(அல் குர்ஆன் 2:178)

மதுபானம் அருந்தியதற்க்காக ஏற்கனவே பலமுறை தண்டிக்கப்பட்டுவிட்ட ஒருவரைக் கடிந்து கொண்டோர் சிலரை நோக்கி இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்:

"அவர் மீது சாபமிடாதீர்கள். அவர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்றார்."
(புகாரி)

மேலும் அல்-ஷரீஆ கொலை, கற்பழிப்பு, மது அருந்துதல் முதலிய குற்றங்களுக்கு வெவ்வேறுபட்ட தண்டனைகளை நியமம் செய்துள்ளது. இக்குற்றங்கள் நிராகரிப்பு என்று கொள்ளப்பட்டிருந்தால் இவைகளுக்கான தண்டனைகள் ரித்தா விதிகளின் கீழேயே நியமம் பெற்றிருக்கும்.

தீவிரத் தன்மை கொண்டோர் தாம் சாட்டும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாகக் கொண்டுள்ள பிரபலமில்லாத, சந்தேகத்துக்குரிய சான்றுகள் அனைத்தையும், இஸ்லாத்தின் அடிப்படையான குர்ஆனும் சுன்னாஹ்வும் பலமிழக்கச் செய்து விடுகின்றன, இவ்வாறான விவகாரங்களை முஸ்லிம் சமூகம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது. மீண்டும் மீண்டும் அவற்றைக் கிளறுதல் விரயம்.

முற்றும்.

குறிப்புகள்:

12.   அனைவராலும் ஏற்கப்பட்டது.
13.   இமாம் அஹ்மதும், அல்-பைஹகானீயும் இப்னு உமரின் ஆதாரத்தின் பேரிலும், தபரீ, இப்னு அப்பாஸின் ஆதாரத்தின் பேரிலும் அறிவித்தன.
14.   அனைவரும் ஏற்று அறிவித்தது.
15.   அலைஹ் அஸ்-ஸலாம் அல்லது அலைஹிம் அஸ்-ஸலாம்: அவர் அல்லது அவர்கள் மீது இறைவன் நல்லருள் பாலிப்பானாக. முஹம்மது(ஸல்) அவர்கள் தவிர்ந்த ஏனைய இறைத்தூதர்கள் பெயர் சுட்டப்படும்போது கூறப்படுவது.
16.   அனைவராலும் ஏற்கப்பட்டது.
17.   ரித்தா (முர்தத்): இறைவனுக்கான அடிபணிதலை மறுத்துரைத்தல்; தான் பிரஜையாயிருக்க்கும் இஸ்லாமிய அரசின் மேலாணையை மறுத்தல்.
18.   பார்க்க: அப்த் அல்-ரஹ்மான் அபூ அல்-ஃகைர்: திக்ரயாதீ மாஅ ஜமாஅத் அல்-முஸ்லிமீன். அல்-தக்ஃபீர் வஅல்-ஹிஜ்ரா.
19.   ஷஹாதா: இறைவனே வணக்கத்திற்குரியவன், முஹம்மது(ஸல்) அவனது தூதர் என்று சாட்சி கூறுதல்.


·          தீவிரவாதம்: குற்றச்சாட்டும் உண்மையும்” எனும் இத்தலைப்பு "நிராகரிப்புக்கும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் இஸ்லாமிய எழுச்சி" எனும் டாக்டர் யூசுப் அல்-கர்ளாவி எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.