Sunday, June 23, 2019

மீண்டும் அபூ தர் ... VII

மீண்டும் அபூ தர் ...

அலீ ஷரிஅத்தி

தமிழில்: சம்மில்
அத்தியாயம் 7
(இறுதி அத்தியாயம்)

இந்தப் பிடிவாதக்கார, திமிரான, இறையச்சமுள்ள, தன்னுணர்வுள்ள மனிதருக்கு எதிராக எந்தத் திருகுதாளங்களும் செல்லுபடியாகாது. பலவந்தம் மட்டுமே எஞ்சியிருந்தது. அவர் உஸ்மானுக்கு எழுதினார்: டமஸ்கஸ் உங்களுக்கு வேண்டுமென்றால் அபூ தர்ரை இங்கிருந்து வெளியேற்றிவிடுங்கள், ஏனெனில் சிக்கல்கள் பெருத்துக்கொண்டிருக்கின்றன, காயம்பட்ட தலைகள் எல்லாம் பிளந்துவிட்டன, ஒரு பெருங்கலவரம் நெருங்கிவிட்டது. ‘மதீனாவுக்கு அனுப்பிவைக்கும்படி உஸ்மான் அவருக்குக் கட்டளையிட்டார்.’

ஒட்டகம் ஒன்றின் முதுகில் பொதிகள் சுமப்பதற்கான மரத்தால் ஆன சேணத்தில் அவரை உட்காரவைத்தனர், அதோடு மதீனாவுக்கு அவரைக் கொண்டுசெல்வதற்காகப் பல காட்டுமிராண்டி அடிமைகளையும் ஈடுபடுத்தியிருந்தனர். டமஸ்கஸ்ஸிலிருந்து மதீனாவரை வழியில் எங்கும் நிற்கக் கூடாது என்று முஆவியா கட்டளையிட்டிருந்தார்.

சவாரிக்காரர் மதீனாவை நெருங்குகிறார், தளர்ச்சியாக, காயமடைந்தவராக. நகரத்தின் அண்மையில், சலாஅ மலையில் அலீயையும் அவருக்குப் பக்கத்தில் உஸ்மானையும் வேறு பல மக்களையும் அவர் பார்க்கிறார். சிறு தொலைவிலிருந்து அவர் கத்துகிறார், “நாசகார, முடிவற்ற ஒரு கலகம் குறித்து மதீனாவுக்கு நான் நற்செய்தி பகர்கிறேன்.”

அபூ தர்ரிடமிருந்து வரும் எவ்வொரு மார்க்கத் தீர்ப்பையும் எவரும் பின்பற்றக் கூடாது என்று கலீஃபா உத்தரவிட்டார். என்றாலும், ஒன்றன் பின் ஒன்றாக, மார்க்கத் தீர்ப்புகளை அபூ தர் வழங்கிக்கொண்டுதான் இருந்தார். டமஸ்கஸ்ஸில் அவர் பார்த்தவை போராட்டத்தில் அவருக்குக் கூடுதல் துடிப்பையும் அதிக துணிச்சலையும் கொடுத்தன. உமருடைய கிலாஃபத் சம்மேளனத்தின் தலைவராக இருந்த அப்த் அல்-ரஹ்மான் இப்னு அவ்ஃப் இறந்ததன் பின் அவரது பூர்வீகச் சொத்துகள், அதாவது எக்கச்சக்கமான தங்கமும் வெள்ளியும், உஸ்மான் முன்னிலையில் அம்பாரமாய்க் குவிக்கப்பட்டன. “அப்த் அல்-ரஹ்மான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார், அவர் வாழும்போதும் நன்றாக வாழ்ந்தார், மரணித்த பின்பும் தனக்குப் பின்னால் இத்துணைச் செல்வத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.” என்று உஸ்மான் கூறியதாக அபூ தர் கேள்விப்படுகிறார்.

கிளர்ச்சியும் ஆவேசமும் அடைந்த அபூ தர் உஸ்மான் வீட்டை ஒண்டியாக ஆக்கிரமிக்கிறார். செல்லும் வழியில், ஓர் ஒட்டகத்தின் எலும்பைப் பார்க்கிறார். அதை எடுத்து தன்னோடு கொண்டுசெல்கிறார். உஸ்மானைப் பார்த்து உரக்கக் கத்துகிறார், “மரணிக்கும்போது இவ்வளவு தங்கம், வெள்ளியை விட்டுச்சென்ற ஒரு மனிதரையா கடவுள் ஆசீர்வதித்திருக்கிறார் என்கிறாய்?”

உஸ்மான் மென்மையாகப் பதில் அளிக்கிறார், “ஸகாத்தை வழங்கிவிட்ட ஒரு மனிதருக்கு மேலதிக (மத) கடப்பாடுகளும் இருக்கின்றனவா என்ன?”

அபூ தர் கின்ஸ் பற்றிய வசனத்தை ஓதிவிட்டுக் கூறுகிறார், “இங்கு பிரச்சினை ஸகாத் இல்லை; தங்கம், வெள்ளியைப் பதுக்கிவைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிட மறுக்கிறார்களே அவர்கள்தான்.”

உஸ்மானுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த, முன்னாள் யூதனான காஅப் அல்-அஹ்பார் என்ற மத குரு கூறுகிறார், “இந்த வசனம் வேதம் வழங்கப்பட்டவர்கள் (யூத, கிறிஸ்தவர்கள்) சம்பந்தப்பட்டது; அது முஸ்லிம்களோடு தொடர்புடையது அல்ல.” 

அபூ தர் அவரைப் பார்த்து இரைகிறார், “யூதனின் மகனே! எங்கள் மார்க்கத்தை எங்களுக்கே கற்பிக்க விழைகிறாயா நீ? உன் தாய் உனக்காகத் துக்கப்படட்டும்!” உஸ்மான் கூறினார், “தனது ஸகாத்தைக் கொடுத்துவிட்ட ஒரு மனிதர் தங்கத்தால் ஆன ஒரு செங்கல்லையும் வெள்ளியால் ஆன ஒரு செங்கல்லையும் கொண்டு மாளிகை ஒன்றைக் கட்டினாலும் அது குற்றம் ஆகாது.” பின்னர் காஅபை நோக்கித் திரும்பி அவரது அபிப்பிராயத்தைக் கேட்கிறார். காஅப் தனது அபிப்பிராயத்தை இப்படி வெளிப்படுத்துகிறார், “ஆம், மாட்சிமை பொருந்தியவரே. நீங்கள் சொல்வது சரிதான்!” அபூ தர் அவரைத் தாக்குகிறார்.

காஅப், அச்சத்தால் உஸ்மான் பின்னால் ஒளிந்துகொண்டதோடு கலீஃபாவின் அடைக்கலத்தில் தன்னைப் பாதுகாத்தும் கொள்கிறார். காட்சி முடிந்தது! ஒட்டுமொத்த வரலாற்று நாடகத்தின் காட்சி! ஒரு புறத்தில் தங்கம், பலவந்தம், அப்த் அல்-ரஹ்மானின், உஸ்மானின், காஅப் அல்-அஹ்பாரின் தோற்றங்கள் பிரதிபலித்த ஆளும் மதம் - எவ்வளவு சரியான, துல்லியமான வாக்கியம்!, தங்கத்தின், பலவந்தத்தின் ஆதரவாளர்கள் மற்றும் அவற்றின் மதம், பலவந்தத்தின் பின்னால் மறைந்திருந்து அதை நியாயப்படுத்தியவர்கள். இவற்றை எதிர்கொள்பவரோ சுரண்டல், எதேச்சாதிகாரம், வெளிவேஷம், வரலாற்றாலும் வரலாற்றின் ஒடுக்கப்பட்ட வகுப்பினரான கடவுள் மற்றும் மக்களாலும் பழிக்கப்பட்ட மத வெளிப்பாடு ஆகியவற்றுக்குப் பலியாகியிருக்கும் அபூ தர்.

  தனி ஆள், நிராயுதபாணி, ஒடுக்கப்பட்டவர் ஆகியவற்றோடு பொறுப்புள்ளவராக, தாக்குபவராக இருந்த அபூ தர் பலவந்தத்தின் அடைக்கலத்திலிருந்து காஅபை வெளியேற்றி ஒட்டகத்தின் எலும்பினால் ரத்தம் பீறிடும் அளவுக்கு அவர் தலையில் கடூரமாகத் தாக்குகிறார்.

உஸ்மான் கூறுகிறார், “எவ்வளவு சலிப்பை உண்டுபண்ணிவிட்டாய் அபூ தர், எங்களைவிட்டுப் போய்விடு.”

அபூ தர் சொன்னார், “உங்களை எல்லாம் பார்ப்பதற்கே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. நான் எங்கு செல்ல வேண்டும்?”

“ரபாதாவுக்கு.”

நபிகளாரால் வெளியேற்றப்பட்ட மர்வான் இப்னு ஹகம், அபூ தர்ரை வெளியேற்றுவதற்காக அமர்த்தப்பட்டிருந்தார். அலீ விவகாரத்தைக் கேள்விப்படுகிறார். வருந்துகிறார். ஹஸன், ஹுசைன், அகீல் ஆகியோரை அழைத்துக்கொண்டு அவரை வழியனுப்ப வருகிறார். மர்வான் அலீக்கு முன்னால் நின்றவராக, “கலீஃபா அபூ தர்ரை வழியனுப்பத் தடை விதித்திருக்கிறார்.” என்கிறார். அலீ, சவுக்கு ஒன்றை பயன்படுத்தி, அவரைக் கடந்து, ரபாதாவரை அபூ தர்ருடன் செல்கிறார். 

ரபாதா, யாத்திரிகர்களின் பாதையில் இருந்த, தண்ணீரோ சாகுபடியோ அற்ற ஓர் சுட்டெரிக்கும் வனாந்தரம்; அது, ஹஜ்ஜைத் தவிர்த்த ஏனைய நேரங்களில் வெறுமையாகவும் நிசப்தமாகவும் ஆகிவிடும். அங்கே தனது கிழிந்த கூடாரத்தை அவர் அமைத்து தன்னிடம் இருந்த ஓரிரு ஆடுகளைக் கொண்டு தனது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறார்.

மாதங்கள் கடந்தன. வறுமை அதிகரித்துக்கொண்டிருந்தது, பட்டினியோ மேலும் திமிரெடுத்தது. ஒவ்வொன்றாக, அவரது ஆடுகள் எல்லாம் மரித்தன, அவரும் அவரது குடும்பமும்கூட வனாந்தரத்தின் தனிமையில் மரணத்தை எதிர்கொண்டனர்.

அவர் மகள் இறக்கிறாள். அதைப் பொறுமையோடு சகித்துக்கொள்ளும் அவர் கடவுளுடைய பாதையின் அர்ப்பணமாக அதைக் கருதுகிறார். சில நாள் கழித்து, பசிகொண்ட ஓநாய் அவர் மகனைத் தாக்குகிறது. தனது பொறுப்பை உணர்கிறார். மதீனாவுக்குச் சென்று உஸ்மானிடம் முடக்கப்பட்டிருந்த தனது ஊதியத்தைக் கோரினார். உஸ்மான் அவருக்குப் பதில் அளிக்கவில்லை. வெறுங்கையுடன் திரும்புகிறார். அவர் மகனின் பிரேதம் விறைத்துக்கிடந்தது. தனது கைகளாலேயே அவரை அடக்கம்செய்கிறார். அபூ தர்ரும் உம்மு தர்ரும் தனிமையாக இருந்தனர். வறுமை, பட்டினி, தள்ளாமை ஆகியன அபூ தர்ரின் உடலை மிகவும் பலவீனப்படுத்தின. ஒரு நாள் தனது வலிமையின் விளிம்புக்கு வந்துவிட்டதாக அவர் உணர்ந்துகொள்கிறார். உம்மு தர்ரிடம் கூறுகிறார், “எழுந்துவா. நமது பசியைத் துளியூண்டு தணிக்கும் அளவுக்காவது ஏதோ சில புல் இதழ்கள் இந்த வனாந்தரத்தில் நம் கண்ணில் தென்படுகிறதா என்று பார்ப்போம்.” ஆணும் பெண்ணும், கூடாரத்தின் பரப்பிலிருந்து வெகு தொலைவில் சென்று தேடியும் எதுவும் கிட்டவில்லை. அவர்கள் திரும்பும்பொழுது அபூ தர் வலுவிழந்துவிடுகிறார். மரணம் அதன் அறிகுறியை அவர் முகத்தில் வெளிப்படுத்தியது. அதைப் புரிந்துகொண்ட உம்மு தர் பதைபதைப்புடன் கேட்கிறார், “உனக்கு என்ன ஆயிற்று, அபூ தர்?”

“பிரிவு சமீபித்துவிட்டது! எனது சடலத்தை வழியில் விட்டுவிட்டு என்னைப் புதைப்பதில் உனக்கு உதவும்படி வழிப்போக்கர்களிடம் கேட்டுப்பார்.”

“ஹாஜிகள் எல்லோரும் சென்றுவிட்டபடியால் வழிப்போக்கர்கள் எவரும் இல்லை.” “அப்படி இருக்காது. எழும்பி மலை உச்சிக்குச் செல். எனது மரணத்துக்குச் சில மக்களாவது வருவார்கள்.”

உம்மு தர், சற்றுத் தொலைவில் சவாரிசெய்த மூன்று குதிரையோட்டிகளை மலை உச்சியிலிருந்து பார்க்கிறார். அவர்களுக்குச் சைகை செய்கிறார். அவர்கள் நெருங்கி வந்தனர்.

“உங்களைக் கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இங்கு ஒரு மனிதர் மரித்துக்கொண்டிருக்கிறார். அவரைப் புதைப்பதில் எனக்கு உதவி செய்து உங்கள் சன்மானத்தைக் கடவுளிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.”

“யார் அவர்?”

“அபூ தர்.”

“நபிகளாரின் தோழரான அந்த மனிதரா?”

“ஆமாம்.”

“எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும் அபூ தர்!”

அவர்கள் அவருக்கு முன்னால் நின்றனர். அதுவரை அவர் உயிரோடுதான் இருந்தார்.  அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார், “உங்களில் அரசாங்கத்தின் தூதுவராகவோ ஒற்றர்களாகவோ இராணுவ வீரர்களாகவோ இருப்பவர்கள் என்னை அடக்கம்செய்ய வேண்டாம். என்னைச் சுற்றி மூடுவதற்கு எனது மனைவியிடமோ என்னிடமோ ஒரு துணியைக் கொடுத்தால், அதுவே எங்களுக்குப் போதுமானது.”

உதவியாளர்களில் அரசாங்கப் பதவி வகிக்காத ஒரு இளைஞர் மட்டும் முன்வந்து கூறினார், “எனது தாயால் நெய்யப்பட்ட துணி ஒன்று என்னிடம் உள்ளது.” அபூ தர் அவருக்காகப் பிரார்த்தித்துவிட்டுச் சொன்னார், “அதை வைத்து என்னைச் சுற்றுங்கள்.”

அவர் மனம் அமைதியானது, எல்லாமே முடிவுக்கு வருகிறது. அவர் கண்களை மூடினார், அவற்றை மீண்டும் திறக்கவே இல்லை. வழிப்போக்கர்கள் அவரை ரபாதாவின் தகிக்கும் மணலுக்கு அடியில் அடக்கம்செய்தனர். அந்த இளம் உதவியாளர் அவரது புதைகுழிக்கு அருகில் நின்றுகொண்டு வாய்க்குள்ளே முணுமுணுக்கிறார், “அல்லாஹ்வின் தூதர் மிகச் சரியாகச் சொன்னார்!”

அவர் தனியாக நடப்பார், தனியாக மரிப்பார், தனியாகவே உயிர்ப்பிக்கப்படுவார்!   

“எப்பொழுது?”

“எழும்புதல் நிகழும் அந்த உயிர்த்தெழுதலின் நாளில்.”

“அதோடு, ஒவ்வொரு சகாப்தத்தின் எழுச்சியில், ஒவ்வொரு தலைமுறைக்கு மத்தியில்.”

“இப்பொழுதும், மீண்டும் ஒரு முறை அபூ தர், அனாதரவாகக் கிடக்கும் வரலாற்றின் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ள எல்லா பிரசித்தவான்களுக்கு மத்தியில், நம் காலத்தில், நம் மத்தியில், தனியாகவே உயிர்ப்பிக்கப்படுவார்.”


முற்றிற்று

Tuesday, June 18, 2019

மீண்டும் அபூ தர் ... VI


மீண்டும் அபூ தர் ...

அலீ ஷரிஅத்தி

தமிழில்: சம்மில்
அத்தியாயம் 6

இஸ்லாத்தின் பாஷையில், முஸ்லிம்களின் பாஷையில் அல்ல, அல்லாஹ்வுடைய பாதை என்பது மக்களின் பாதை. ஏன்? சமூக விவகாரங்கள் பற்றியும் சமூக நிலைப்பாடு பற்றியும் (சித்தாந்த நிலைப்பாடு அல்ல) பேசும் எல்லா வசனங்களிலும் அல்லாஹ்வும் வெகுஜனமும் அல்லது மக்களும் (நாஸ்) ஒரே அணியில் இருக்கின்றனர். இஸ்லாத்தின் கடவுளுக்குத் தனக்கென்று குறிப்பிட்டுச் சொல்லும்படியான நேர்த்திக்கடன், காவுகொடுப்பு, தூபமிடல் அல்லது சாம்பிராணியிடல் எதுவும் கிடையாது. வெகுஜனத்துக்கும் சமூகத்துக்குமானதுதான் (தனிநபருக்கானது அல்ல) கடவுளுக்கானதாக, கடவுளுக்கு மட்டுமே சேருகின்றதாக ஆகிறது. “கடவுளுக்கு நீங்கள் அழகிய கடன் கொடுத்தால் ... (64:17) என்றால், “மக்களுக்கு நீங்கள் அழகிய கடன் கொடுத்தால் ...” என்று அர்த்தம். மால் அல்லாஹ், பைத் அல்லாஹ், லில்லாஹ் எல்லாம் மக்களின் சொத்து, மக்களின் வீடு என்பதாகப் பாரபட்சமில்லாமல் உணரப்பட்டிருக்கிறது சமூகத்தில். “மக்களுக்காகக் கட்டமைக்கப்பட்ட முதல் வீடு புண்ணியமான பெக்காவில் (மக்கா) இருக்கிறது. (3:96)”, அதாவது கஅபா, அது மக்களுக்கானது, ஏனெனில் மக்கள் கடவுளின் குடும்பத்தில் உள்ளவர்கள். இந்த நோக்கில் விஷயங்களைப் பார்க்காதவர்களும் இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதற்குச் சிரமப்படுகிறவர்களும் ஏனைய மதங்கள் தங்கள் இறைவன் குறித்து வழங்கியிருக்கிற ஒரு தெய்வீக உலகப் பார்வை மற்றும் சித்தரிக்கப்பட்ட வடிவங்களின் செல்வாக்கின் கீழ் இருப்பவர்கள். போராட்டம் தொடங்குகிறது.

அபூ தர் நபிகளாரின் நெருங்கிய, ஆத்மார்த்தமான தோழரின் அந்தஸ்தில் இருக்கிறார், அதற்கான உரிமத்தை நபிகளாரே அவருக்கு வழங்கியிருக்கிறார்: “மார்பகமெல்லாம் நிரம்பி வழியும் அளவுக்கு அதிகம் கல்வி கற்ற ஒரு மனிதர் அவர்.”, “அபூ தர்ரைவிட மேலான உண்மையாளர் எவருக்கும் இந்நீலவானம் நிழல் கொடுத்ததில்லை, எவரையும் இந்த இருண்ட பூமி சந்தித்ததும் இல்லை.”, “அபூ தர்ரின் பணிவும் இறையச்சமும் மர்யமுடைய மகன் ஏசுவை ஒத்திருக்கிறது.”, “பூவுலகைவிட விண்ணுலகில் அபூ தர் அதிகம் பிரசித்தமானவர்.”

அபூ தர், இந்த பூமி மீது, இந்தச் சமூகத்தில், தனியாக நடப்பார், தனியாக மரணிப்பார், இன்னும், தீர்ப்பு நாளின் வனாந்தரத்தில், கல்லறைகள் திறக்கும்போது, கூட்டம் கூட்டமாகச் சடலங்கள் எழும்பும்போது, வனாந்தரத்தின் ஒரு மூலையில் தனியாக உயிர்ப்பிக்கப்பட்டவராய் கூட்டத்தில் இணைந்துகொள்வார்!”

மசூதி ஒன்றில் உட்கார்ந்துகொண்டு, ஒன்றன் பின் ஒன்றாக, நடைமுறை வாழ்வில் கைவிடப்பட்டிருந்த வசனங்களையும், பொருத்தமற்றதாக ஆகிவிட்டிருந்த, எவற்றின் பொருத்தப்பாடு கஷ்டங்களையும் தலைவலிகளையும் உண்டுபண்ணுமோ அத்தகைய குர்ஆன் விவகாரங்களையும் அல்லது நபிகளாரின் வழக்கங்களையும் அவர் மக்களிடத்திலே ஓதிக் காட்டுவார்.

உஸ்மான் காலத்தில் காரசாரமாகப் போய்க்கொண்டிருந்த விவாதங்களெல்லாம் குர்ஆனைத் தொகுப்பது, குர்ஆனைச் சீராக்குவது, குர்ஆனின் கையெழுத்துப் பிரதிகளைச் சரிபார்ப்பது, குர்ஆனின் திருத்தமான, மூலப் பிரதி ஒன்றைத் தயார் செய்வது, முடிவற்ற விவாதங்களாய்ச் சுழன்ற குர்ஆன் பாராயணம், எழுத்திலக்கணம், உயிரெழுத்துகள் மற்றும் உச்சரிப்புப் புள்ளிகள், வாசிப்பு, உச்சாடனம், விதண்டாவாதங்கள், இடையூறுகள், உணர்ச்சிவசங்கள், ஆட்சேபணைகள், உடன்பாடுகள் .... அபூ தர்ரோ குர்ஆனிலிருந்து ‘பத்திரப்படுத்துதல்’ (கின்ஸ்)தொடர்பான விவாதத்தை முன்னிறுத்தினார். கின்ஸ் பற்றிய வசனத்தை, அவ்வசனத்தின் முதல் பகுதியை அவர் ஒவ்வொரு கணமும் ஓதிக்கொண்டே இருந்தார்: “விசுவாசிகளே, திண்ணமாக யூத மத குருக்கள் மற்றும் சந்நியாசிகளில் அநேகர் மக்களின் உடைமைகளை வீணாகக் கபளீகரம்செய்து கடவுளின் பாதையைவிட்டும் (அவர்களை) தடுக்கின்றனர்” (9:34)

அவரின் இந்த நடத்தை இடையூறுகளை உண்டுபண்ணிற்று. கலீஃபாவே குர்ஆனை ஒன்றுதிரட்டுவதிலும் தொகுப்பதிலும்தான் ஈடுபட்டிருந்தார்; குர்ஆன் மீது பற்றுறுதி கொண்டவர்கள் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருந்தனர்.

குர்ஆனை நினைவுகூரும்போதெல்லாம் அது கிலாஃபத் பற்றிய ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட நினைவை எழுப்பிவிடுகிறது. கிலாஃபத்துக்கு எதிரான அவநம்பிக்கை, முரட்டுத்தனம், விமர்சனம், தூண்டிவிடல், தாக்குதல், கண்டனம் ஆகியவற்றுக்கு வழிவகுத்த அபூ தர்ரின் குர்ஆன், கலீஃபாவின் அமைப்பின் குரலை ஆட்சேபிக்க வைத்தது, “அபூ தர்ரே! மத குருக்கள் மக்களின் உடைமைகளைக் கபளீகரம்செய்யும் இந்த வசனமும் ‘பத்திரப்படுத்துதல்’ தொடர்பான இந்த வசனமும் மட்டும்தான் குர்ஆனில் இருக்கிறதா?”

எனினும், ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஓர் வேதனை இருக்கும், ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு கோஷம் இருக்கும் என்பது அபூ தர்ருக்குத் தெரியும். குர்ஆன் என்பது வெறுமனே ‘ஒரு புனித வஸ்து’ அல்ல, அது ஒரு ஒளி, ஒரு வழிகாட்டல் என்பதை இனம்காண்பவர்கள் அந்த நாளின் வசனங்களையே சார்ந்திருக்க வேண்டும். (அதாவது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அம்மக்களுடனும் பொருந்தும் வசனங்களை). “என்ன வினோதம்! குர்ஆனை ஓதுவதைவிட்டும் கலீஃபா என்னைத் தடுக்கிறாரா என்ன?” என்று அபூ தர் பதில் அளித்தார். இறை வெளிப்பாடு, ஓரிறைக் கொள்கை மீது விசுவாசம், சிலை வழிபாடு, உயிர்த்தெழுதல், ஆன்மாவின் நித்தியத் தன்மை, முஹம்மதின் நபித்துவம் ஆகியவற்றுக்கெல்லாம் இப்பொழுது வேலை இல்லை, ஏனெனில் இவ்விவகாரங்கள் எல்லாம் ஏற்கெனவே தெளிவாக்கப்பட்டுவிட்டன; இன்றைய விவகாரம், முரண்பாடும் வர்க்க ஏற்றத்தாழ்வும்தான். ஆக, அந்நாளுக்குத் தோதான ஒரு வசனமான இந்த வசனத்தை அடுத்து, மீண்டும், சமூகப் பொருத்தப்பாட்டின் அடிப்படையில் நபிகளாரின் வழக்கங்களை அவர் நினைவுகூரத் தொடங்கினார், நபிகளாரின் வார்த்தைகள் பற்றிப் பேசத் தொடங்கினார்: “மாதங்கள் கடந்துவிடும் ஆனாலும் புனித நபியின் வீட்டில் அடுப்பு எரிவதற்கான எந்த அறிகுறியும் இருக்காது.”

“அல்லாஹ்வின் தூதரது வீட்டில் பெரும்பாலான நேரங்களில் உணவாக இருந்தவை தண்ணீரும் பேரீச்சம்பழங்களும்தான்.”, “நபிகளார் வீட்டுக் கட்டாந்தரையின் சரிபாதி மணல் கம்பளமாக இருந்தது.”, “அடிக்கடி வயிற்றைச் சுற்றிக் கல்லைக் கட்டிக்கொள்வதனூடாகப் பசியைக் கொண்டு தன்னைச் சோதித்தார், பசியின் அமில வினையைத் தான் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக.”, “அவரது ஆடைகள், உணவு, வீடு ஆகியன மசூதியின் ஸஃப்ஃபா (திண்ணை) தோழர்களான எங்களுக்கு ஆசுவாசம் அளித்தன. எங்களுக்கு குடும்பமோ வீடுவாசலோ இருக்கவில்லை, மேலும், பெரும்பாலான நேரங்களில் பட்டினிதான். ஒவ்வொரு இரவும் எங்களில் ஒரு கூட்டத்தார் அவருடன் அமர்ந்து சாப்பிடுவோம். தனது வீட்டில் அவர் உணவு சமைத்தால், தன்னுடன் சேர்ந்து சாப்பிட வருமாறு எங்களுக்கு அழைப்பு விடுப்பார். அங்கு உணவாக இருந்ததெல்லாம் கோதுமை மாவிலிருந்து சமைக்கப்பட்ட கவளமும் பேரீச்சைகளும்தான்.”

“பதுக்கும் பணமெல்லாம் அதன் உரிமையாளருக்கான நெருப்பாக ஆகப்போகிறதே அன்றி வேறில்லை.” என்று அவர் கூறுவார். “அவ்வப்போது அல்லாஹ்வுடைய தூதரின் மனைவிமார் அல்லல்கள், பட்டினியைப் பற்றிப் புலம்பவும் புகார் கொடுக்கவும் செய்வர். அவர்களுடன் அவர் ஒப்பந்தம் செய்துகொள்வார், ‘ஒன்று, இவ்வுலகை நேசித்து என்னை விவாகரத்து செய்யுங்கள் அல்லது என்னையும் பட்டினியையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.’, “நபிகளாரின் ஆருயிர் மகள் வேலை செய்து பட்டினியால் அவதிப்பட்டார், இருந்தும் தங்களுக்கு ஒரு பணியாள் தேவை என்ற, கடவுளின் மிக விருப்பத்துக்கு உரிய படைப்புகளான அலீ மற்றும் தனது மகளின் வேண்டுகோளை, தனது அபிப்பிராயப்படி, அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. (ஃபாத்திமா) ஸஹ்ராவின் வறுமைக்காக அவர் அழுதார், என்றாலும் அவருக்கு ஒரு தீனார்கூட அவர் உதவி செய்யவில்லை.”

கேள்வி மேல் கேள்வி மேல் கேள்வியாய்ச் சிந்தனைகளைத் துரிதமாக நிரப்பும் என்பது தெளிவு: பிறகு எதற்காகக் கலீஃபா உஸ்மான் ரோமத்தால் ஆன அங்கியை அணிந்திருக்கிறார்? கலீஃபாவின் அரண்மனையில் உள்ள வர்ணமயமான விரிப்பில் இனிமையான உணவு பதார்த்தங்கள் எல்லாம் எதற்காகப் பரத்தி வைக்கப்பட்டிருக்கின்றன? பிறகு எதற்காக, கலீஃபாவைத் தெரிவுசெய்த சம்மேளனத்தின் தலைவரும் உஸ்மானைக் கலீஃபாவாக நியமித்தவருமான அப்த் அல்-ரஹ்மான் இப்னு அவ்ஃபின் பாரம்பரியம் மேன்மேலும் வளர்த்தெடுக்கப்படுகிறது? இவரது செல்வங்கள் மலைபோல் குவிக்கப்பட்டபோது, தரையில் இருந்த மக்களைவிட உயரத்தில், பிரசங்க மேடையில் நின்றிருந்த கலீஃபாவையே அது மறைத்துவிட்டது. பாகப்பிரிவினைக்காக இவரது பெரிய தங்கக்கட்டி கோடாலி ஒன்றின் உதவியுடன் உடைக்கப்பட்டது.

பிறகு எதற்காக, கிலாஃபத் சம்மேளனத்தின் ஓர் அங்கத்தினரான ஸுபைர், தனக்குச் சேவகம் செய்பவர்களாகவும் தங்கள் தினக்கூலியை அவரிடம் கொடுப்பவராகவும் இருந்த ஆயிரம் அடிமைகளை தன் வசம் வைத்திருந்தார்? பிறகு எதற்காக, கலீஃபாவின் குடும்ப அங்கத்தினர்களுள் ஒருவரும் டமஸ்கஸ்ஸில் கிலாஃபத்தின் ஆளுநராகவும் இருந்த முஆவியா பச்சை மாளிகையைக் கட்டினார்? அவரைச் சுற்றி இருப்பவர்களும் அவரோடு இணங்கிச் செல்பவர்களுமான துதிபாடிகள், கவிஞர்கள், ‘உலமாக்கள்’ மற்றும் நபித்தோழர்கள் எல்லாம் எதற்காக ‘கற்பனைக் கதைகள்’ சொல்லி அன்பளிப்புகள் பெறுகிறார்கள்? அதோடு, இறைவனின் வேதத்தையும் நபிகளாரின் மரபுகளையும் ஷைஃகைனின் (அபூ பக்கர், உமரின்) வழிமுறைகளையும் பின்பற்றப்போவதாக வாக்குறுதி அளித்த உஸ்மான் எதற்காக சீஸர்கள், மன்னர்களின் மரபுகளை மட்டுமே பின்பற்றிக்கொண்டிருக்கிறார்? பிறகு ஏன் அப்படி? எதற்காக இப்படி? நாள்படநாள்பட மேல்தட்டு மனப்பான்மை, சுரண்டல், ஊதாரித்தனம், வறுமை, தூர விலகல், சமூக-வர்க்க ரீதியான முறிவுகள் அல்லது விரிசல்கள் எல்லாம் அதிகரித்துக்கொண்டே சென்றன. இதனால், இன்னும் விசாலமாக உருவெடுத்த அபூ தர்ரின் பிரச்சாரம் சிறுமைப்படுத்தப்பட்டோரையும் சுரண்டப்பட்டோரையும் மேலும் கிளர்ச்சியடையச் செய்தது. தங்கள் வறுமை என்பது எதோ நெற்றியில் எழுதப்பட்டுவிட்ட இறை நாட்டமோ, தலையெழுத்தின் நியதியும் பரலோகத்தின் விதியுமோ அல்ல, கின்ஸ் (மூலதனத்தின் பதுக்கல்) ஒன்றுதான் அதற்குக் காரணம் என்பதைப் பட்டினியில் உழன்றோர் அபூ தர்ரிடமிருந்து கற்றுக்கொண்டனர்.

செய்ய வேண்டியது என்ன?

கறாரான, இறையச்சமுள்ள அபூ தர்ரைப் பொறுத்தவரை, ஒன்றுமில்லை! ‘நாங்கள் அவற்றை எடுத்துக்கொள்வோம்!’ என்று உஸ்மானை அவர் மிரட்டுவதற்கோ, ‘நாங்கள் தருகிறோம்!’ என்று உஸ்மான் அவரை ஆசைகாட்டுவதற்கோ ‘அவசியம்’ இல்லை. அவரது மனைவி உம்மு தர். இவரும் புனித நபியின் தோழியர்களில் ஒருவர்தான். போராடுகிற, பொறுப்புள்ள ஒரு மனிதர் சகித்தே தீர வேண்டிய இன்னல்களையும் துறவற வாழ்வையும் வறுமையையும் சகித்துக்கொள்வதற்காகத் தனது கணவருக்கு அவர் ஒத்தாசை செய்கிறார். ஏனெனில், இஸ்லாம் (நடைமுறையில்) இருந்த அந்தக் காலகட்டத்தில் பெண் ஒருவர் அதுகாறும் ‘பலவீனமான பிறவி’யாக ஆகியிருக்கவில்லை.

மதீனாவின் ஆழத்தினுள் அபாயம் அதன் பற்களைத் தீட்டிக்கொண்டது. இப்பொழுது ஆட்சி செய்யும் குடியேறிகள், மூத்த நபித்தோழர்களின் புனித பிம்பத்திடம் சரணாகதி அடைந்துவிட்ட, தங்கள் சொந்த துயரத்தையும் பிறரது பிறழ்வையும் சுமந்துநின்ற இழிவுபடுத்தப்பட்டோர் துணிந்துவிட்டனர். உஸ்மான் அபாயத்தை உணர்கிறார். என்ன செய்வது? மதீனாவில் இன்னமும் நபிகளாரின் நினைவு எஞ்சியிருக்கிறது, மக்களுக்கும் அபூ தர்ரைத் தெரியும்.

அவரை டமஸ்கஸ்ஸுக்கு அவர் நாடுகடத்தினார், முஆவியாவிடம் அனுப்பினார். ஆரம்பம் முதல் டமஸ்கஸ் மக்கள் இஸ்லாத்தை பனி உமய்யாக்களிடமிருந்தே கற்றிருந்தனர். அபூ தர்ரைக் கடிவாளமிடுவது முஆவியாவுக்கு மிக இலகுவாக இருந்தது. டமஸ்கஸ்ஸில், ரோமர்களை அடியொற்றி, உஸ்மானைவிட சொகுசான மேல்தட்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார் முஆவியா. ஏற்றத்தாழ்வு, அசுத்தம், ஒடுக்குமுறை, இஸ்லாமிய விழுமியங்களின் மீறல் ஆகியன நிதர்சனமாகவும் அகம்பாவத்துடனும் துலங்கியது. இந்த நேரத்தில்தான், ரோம, ஈரானியக் கட்டடக் கலைஞர்கள் துணைகொண்டு பச்சை மாளிகையைக் கட்டுகிறார் முஆவியா. முடியாட்சியின் முதல் மாளிகை இதுதான்; ஆடம்பரமானது, அழகானது. அதை நிறைவுசெய்வதில் மனத்தை ஒருமுகப்படுத்தியிருந்த முஆவியா தனது மேஸ்திரிகளையும் தொழிலாளிகளையும் மேற்பார்வையிடுவதற்காக அடிக்கொருதரம் அங்கே பிரசன்னமாகிவிடுவார். அபூ தர்ரும் அதுபோல் நாள் தவறாமல் ஆஜராகிப் பின்வருமாறு முழங்குவார்: “முஆவியாவே இந்த அரண்மனையை உன் கைக்காசில் நீ கட்டினால், அது ஊதாரித்தனம். அதையே மக்கள் பணத்தில் செய்தால், அது தேசத் துரோகம்!". பக்குவப்பட்ட, பொறுமையான ஒரு அரசியல்வாதியாக இருந்தால், அவர் யோசித்தது போன்று, தீர்வு ஒன்றைக் காண்பதற்காக இதைச் சகித்துக்கொள்ளத்தான் செய்வார்.

முஆவியா ஒரு நாள் அபூ தர்ரைத் தனது வீட்டுக்கு அழைத்தார். மரியாதை, அன்பின் வரம்புகளையெல்லாம் தாண்டி அவர் உபசரித்தார் என்றாலும் அபூ தர் தனது முரட்டுத்தனமான முகபாவத்தையோ ஆவேசமான தொனியையோ துளியும் குறைத்துக்கொள்ளவில்லை. அறுதியாக, நிலைமை அச்சுறுத்தலின் புள்ளிக்குச் சென்றது:

“அபூ தர்ரே, உஸ்மான் அனுமதியின்றி நபிதோழர்களுள் ஒருவரை நான் கொன்றுவிட்டிருந்தால் அது நீயாகத்தான் இருப்பாய், எனினும் உனது சாவுக்கு உஸ்மானிடம் அனுமதி பெற நான் கடமைப்பட்டிருக்கிறேன். அபூ தர்ரே, நீ செய்வது உன்னை விலக்கிவைக்கிறது, மேலும், ஏழைகளையும் கீழ்த்தட்டு மக்களையும் எங்களுக்கு எதிராக நீ உசுப்பிவிடுகிறாய்.”

அபூ தர் மறுமொழி அளிக்கிறார், “நபிகளாரின் வழக்கங்களையும் நடத்தையையும் பின்பற்றி நடந்துகொள், உன்னை விட்டுவிடுகிறேன். மறுப்பாயானால், என் உடலில் ஒரு இறுதி மூச்சு எஞ்சியிருந்தாலும் அந்த ஒரு மூச்சைக்கூட நபி மரபு ஒன்றை உரைப்பதற்காக நான் பயன்படுத்தியே தீருவேன்.”

அபூ தர்ரின் பிரச்சாரம் பரவியது. தங்களை ஆட்சி செய்யும் ரோமாபுரி ஆட்சி அமைப்பையே இஸ்லாமாக நினைக்கத் தொடங்கியவர்கள் சிறுகச்சிறுக இஸ்லாத்தின் உண்மை முகத்தைக் கண்டடைந்தார்கள். மத விசுவாசத்துடன் நீதியையும் சுதந்திரத்தையும் நாடும் கொந்தளிப்பானது உள்ளத்தில் மூளுகிறது. மதத்தினூடாக வறுமை மற்றும் இழிநிலையின் நியாயத்தை ஏற்றுக்கொண்டவர்கள், முதல் முறையாக அபூ தர்ரிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள்: “வறுமை ஒரு கதவு வழியாக நுழையும்போதெல்லாம், மதம் மற்றொன்றின் வழியாக வெளியேறிவிடும்.”

மசூதியானது கடவுள், மக்கள், அபூ தர்களின் வீடாகவும் போராட்டத்தின் தளமாகவும்தான் இன்னமும் இருக்கிறது. முஆவியாவுக்கு அதன் மேல் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அலீயின் மரணத்துக்குப் பிறகே கடவுளும் கடவுளின் குடும்பமான மக்களும் இல்லாத ஒரு காலி இடமாகவும், கிலாஃபத்தின் தளமாகவும், கிலாஃபத்தின் கைக்கூலி மத குருமாரால் கையாளப்படும் ஒரு பொறியாகவும் மசூதிகள் மாறின! சிறுமைப்படுத்தப்பட்டோர் பேரெழுச்சியோடும் நம்பிக்கையோடும் அவரைச் சூழ்ந்திருந்தனர். உரிமைகளோடு சங்கமித்திருந்த உண்மைகளைப் பற்றி அவர் பேசினார்; நீதியின் துணைவனாக இருந்த ஒரு இஸ்லாத்தைப் பற்றிப் பேசினார்; மக்களுக்கான ஆகாரங்களைப் பற்றியும் சிந்தித்த, மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்த ஒரு கடவுளைப் பற்றிப் பேசினார். கிறக்கத்தில் இருந்த மக்களை அவர் எழுச்சியூட்டியதோடு முற்றுப்பெறாத பச்சை மாளிகையைத் தகர்ப்போம் என்றும் அச்சுறுத்தினார்.

முஆவியா ஜிஹாதுக்காக அபூ தர்ரை சைப்ரஸுக்கு அனுப்பினார். அவர் வெற்றி பெற்றுவிட்டால், முஆவியாவுக்கு அது ஓர் கெளரவமாகவும் வெற்றியாகவும் ஆகிவிடக்கூடும் என்பதோடு இஸ்லாத்தைக் கெளரவிக்கும் ஒரு மரியாதையாகவும் அது இருக்கும்! அபூ தர் கொல்லப்பட்டுவிட்டாலோ அவரது ரத்தத்தால் தனது கைகள் மாசுபடாமலேயே அவரது எல்லா கெடுதலிலிருந்தும் விடுவிக்கப்பட்டவராகிவிடுவார் முஆவியா. (ஜிஹாதின் இப்படிப்பட்ட துஷ்பிரயோகங்கள் காரணமாகத்தான்) ஷியாயிசம் பின்னாளில் தீர்ப்பு ஒன்றை வழங்கியது, “உண்மையான, நீதியான இமாம் தலைமை ஏற்காத ஜிஹாத் தடை செய்யப்பட்டது.” ஆனால், அபூ தர் ஆரோக்கியமாகத் திரும்பிவிடுகிறார். அதோடு, படையணியிலிருந்து தயக்கமில்லாமல் மசூதிக்குச் சென்ற அவர் தனது பணியைத் தொடங்கினார்! முஆவியாவுக்கு அபூ தர்ரைத் தெரியும், அடிமைகளின் விடுதலையையும் வயிறு காய்ந்தோரின் பசியை ஆற்றுவதையும் பற்றி அவர் எந்த அளவு யோசித்தார் என்பது தெரியும். அடிமை ஒருவரை அவர் நியமிக்கிறார், இந்தத் தங்கப் பையுடன் அபூ தர்ரிடம் செல், இதை வாங்கவைப்பதில் அவரை நீ வென்றுவிட்டால், நீ சுதந்திரமானவன்!” அடிமை அபூ தர்ரிடம் செல்கிறார். அபூ தர் மறுத்தபோதும் அடிமை வலியுறுத்தினார், அழுதார், கெஞ்சினார். அபூ தர்ரின் பதிலோ “முடியாது!” என்பதாக மட்டுமே இருந்தது. அறுதியாக அவர் கூறினார், “அபூ தர்ரே, கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். இந்தப் பணத்தை வாங்கிக்கொள், ஏனெனில் இந்தப் பணத்தை உன்னிடம் கொடுப்பதில்தான் எனது சுதந்திரம் இருக்கிறது.” அபூ தர் தயங்காமல் சொன்னார், “இருக்கலாம். ஆனால், இந்தப் பணத்தை உன்னிடமிருந்து வாங்குவதில்தான் எனது அடிமைத்தனம் இருக்கிறது.”

தொடர்ச்சி ஏழாம் பாகத்தில் ...

Sunday, June 9, 2019

மீண்டும் அபூ தர் ... V

மீண்டும் அபூ தர் ...

அலீ ஷரிஅத்தி

தமிழில்: சம்மில்

அத்தியாயம் 5


மூன்று நாள்கள் கழிந்தது; நபிகளார் இறந்துபோகிறார். ‘ஒடுங்கிக் கிடந்த ஆரவாரப் பேச்சுகள்’ எல்லாம் நாலாபக்கங்களிலும் அவிழ்த்துவிடப்படுகிறது. மதத்திலிருந்து நீதி பிறிதொரு முறை பிரிக்கப்பட்டதன் சமிக்ஞையாகவும், வெகுஜனத்தின் குரல் பிறிதொரு முறை ஒடுக்கப்பட்டு மதம் என்பது மேட்டுக்குடி மத குருக்கள், மேல்தட்டு மக்கள், ஆட்சியாளர்கள் ஆகியோரின் பிரத்தியேகப் பயன்பாட்டின் கீழ் வந்துவிட்டதன் சமிக்ஞையாகவும் இந்தப் புரட்சிக்கான உந்துதலின் முழு வடிவமாய்த் திகழ்ந்த அலீ தனது வீட்டில் தனிமைப்படுத்தப்படுகிறார். வனாந்தரத்தின் மனிதரான அபூ தர்; ஆதரவாளரோ எவ்விதப் பணியோ இல்லாத அந்நியனும் எத்தியோப்பிய அடிமையுமான பிலால்; அரபி அல்லாதவரும் விடுவிக்கப்பட்ட அடிமையுமான சல்மான்; கிரேக்கத்திலிருந்து வந்திருந்த ஓர் அயலானான சுஹைப்; கருப்பு-அடிமைத் தாய், தெற்கு-அரேபியத் தந்தை ஆகியோரின் கலப்பினனான அம்மார்;  வறுமையால் பீடிக்கப்பட்ட பேரீச்சை வியாபாரியான மேதம் ... இஸ்லாமியப் புரட்சியின் தலைவருடைய நெருங்கிய கூட்டாளிகளான இவர்கள் மைய அரங்கிலிருந்து வெளியேறினர். பகரமாக, தோழர்களில் மூத்தோரான அப்த் அல்-ரஹ்மான் இப்னு அவ்ஃப், சாஅத் இப்னு அபீ வக்காஸ், ஃகாலித் இப்னு வலீத், தல்ஹா, ஸுபைர், அபூ பக்கர், உமர், உஸ்மான் ஆகியோர் - அறியாமைக் காலத்தின் மேல்தட்டு வகையறாக்களாக இருந்த இவர்கள் - அரசாங்கத்தின் தலைமைத்துவத்தைக் கையில் எடுத்தனர்; சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டனர்; அந்தரங்கமான ஓர் அரசியல் வட்டத்தை உருவாக்கினர்.

ஸகீஃபாவில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு பாணியிலான தேர்தலும் அதிலிருந்து ஆரம்பித்த இஸ்லாத்தின் இந்த உறுதியான, எதிர்பாராத வலதுசாரிச் சாய்வும் அபூ பக்கர் காலத்தில் ஓர் அரசியல் அம்சம் கொண்டதாக மட்டுமே இருந்தது. என்றாலும், உமரின் காலத்தில், அரசாங்க ஊதிய அளவின் அடிப்படையில் முஸ்லிம்களை வகைப்படுத்தியதன் மூலம் தனது பொருளாதார முகத்தை அது வெளிக்காட்டியது. புனித நபியின் மனைவிமாரைக்கூட, திருமணத்துக்கு முந்தைய அவர்களின் வகுப்பை அடிப்படையாகக் கொண்டு அது இரண்டு அளவுகோள்களில் வகைப்படுத்தியது, சுதந்திர ஜீவிகள் அல்லது அடிமைகள்! சுதந்திரமான பெண்களாக இருந்த நபிகளாரின் மனைவிமார் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததோடு இந்தச் சலுகையையும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

ஆனால், உஸ்மானின் ஆட்சிக் காலத்திலோ இந்த (வலதுசாரி) சாய்வு அதன் சிகரத்தை எட்டியதோடு சமூகமும் வகைப்படுத்தப்பட்டது. மேல்தட்டு மக்கள் ஆட்சி அதிகாரத்தின் மீது முழுமையான கட்டுப்பாடு செலுத்தினர்; கிழக்கு மற்றும் மேற்கின் இஸ்லாமிய வெற்றிகள் என்ற ரீதியில் ஈரானின் டிரான்ஸோக்சியானாவிலிருந்து வடக்கு ஆப்பிரிக்கா வரை ஈட்டப்பெற்ற பொருளாதார வளங்கள், யுத்தத்தில் கிடைத்த பொருள்கள், அரசியல் பதவிகள், அநேக நிர்வாகப் பதவிகள் எல்லாம் மதீனாவில் இருந்த ஆட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. நபித்தோழர்கள், முஜாஹிதுகள், குடியேறிகள் மற்றும் உதவியாளர்கள் என்று புரட்சிகர-சித்தாந்திகளாக இருந்த தீவிர ஆதரவாளர்கள் அரசியல்வாதிகளாகவும் அதிகாரம், செல்வங்கள் படைத்த ஆளுமைகளாகவும் உருப்பெற்றனர்;  பொதுவாக இறையுணர்வு மிக்கவர்களாக, ஏழைகளாக, பற்றாளர்களாக, போராளிகளாக இருந்தவர்களிலிருந்து ஆட்சியாளர்களின் வட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது; யுத்தத்தின் மீதமிச்சங்கள், லட்சக்கணக்கான முஸ்லிம்களின் ஏழைகளுக்கான தொகை (ஸகாத்), முஸ்லிம்களின் பாதுகாப்பில் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்கள் செலுத்திய வரி (ஜிஸ்யா) ஆகியவற்றினூடாகப் பெருக்கெடுத்த செல்வங்களின் மூலம் புதிய பூர்ஷ்வா வகுப்பு ஒன்று உருவானது. முஸ்லிம்களின் ஏழைகளுக்கான தொகையும் (ஸகாத்), முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் காஃபிர்கள் செலுத்திய வரியும் (ஜிஸ்யா) ‘ஏழை’ மதீனாவில் அந்தரங்கமாகச் சுழன்றது. இது இஸ்லாமிய மதீனாவிலும், முஸ்லிம் உம்மத்திலும், பத்ர் மற்றும் உஹுது யுத்தங்களின் முஜாஹிதுகளுக்கிடையிலும் மாற்றத்தை உண்டுபண்ணியதோடு இஸ்லாத்தின் உள்ளடக்கத்திலும், அதன் சமூக நிலைப்பாட்டிலும், விளைவாக மதம் பற்றிய புரிந்துணர்விலும்கூட மாற்றத்தை ஏற்படுத்தியது. இஸ்லாத்தை ‘புரட்சிகரச் சித்தாந்தம்’ எனும் வடிவத்திலிருந்து ‘அரசாங்க மதம்’ எனும் வடிவத்துக்கு அது மாற்றியது. ஸகீஃபாவில் வலதுசாரியை நோக்கி பிறழ்ந்து சென்ற இந்தக் கோணல், கால் நூற்றாண்டுக்கும் குறைவான காலத்தில், (ஆரம்பகட்ட கிலாஃபத்தில் ஆளுநராக இருந்த) சுதந்திர ஜீவியான முஆவியாவும், நபிகளாரால் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட மர்வான் இப்னு ஹகமும், அண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாமிய மதகுருவாக ஆகிவிட்டிருந்த காஅப் அல்-அஹ்பார் என்ற யூத மத போதகரும் இஸ்லாத்தின் அபாரமான அரசியல், அறிவுஜீவி முகங்களாக அறியப்படும் புள்ளிக்கு வந்து சேர்ந்தது. நபிகளாரின் கலீஃபாவான உஸ்மான் புனித குர்ஆன் மீது விரிவுரைகள் வழங்கும்படி காஅபைக் கேட்டுக்கொள்வார்; அலீ, அபூ தர் ஆகியோரின் விரிவுரைகளை அவர் பிழையெனக் கருதினார்.

ஈரான் மன்னர், ரோமாபுரியின் சீஸர் ஆகியோரது ஆட்சி அமைப்பின் போலி நகலாக இருந்த தனது புதிய அரசியல், பொருளாதார முறைமையை நியாயப்படுத்துவதற்காக ஏமாற்றி நம்பவைக்கும் எவ்வித முயற்சியிலும் உஸ்மான் ஈடுபடவில்லை. சொல்லப்போனால், அந்த நேரத்தில் அப்படிப்பட்ட ஒரு செயல் வீரியம் மிக்கதாகவும் இருந்திருக்காது. ஏனெனில், இஸ்லாமிய ஆட்சி என்றால் என்ன என்பதை மக்கள் தங்கள் சொந்த விழிகளாலேயே பார்த்துவிட்டனர் என்பதோடு இஸ்லாமிய முலாம் பூசி நியாயப்படுத்த முடியாத அளவுக்கு உஸ்மானின் செயல்பாடுகள் வெட்கித் தலை குனிய வைக்கும் விதத்தில் இருந்தன.

இஸ்லாத்தில் முதல் முறையாகத் தோன்றிய அடுக்கடுக்கான பல நூதனங்களை (பித்அத்) உருவாக்கியவர்தான் உஸ்மான். முதன்முறையாக, தலைவர் என்பவர் ஓர் அரண்மனைவாசி ஆகிறார்; முதன்முறையாக, அதிகாரபூர்வப் பாதுகாவலர்களை அவர் நியமிக்கிறார்; முதன்முறையாக, விசேஷ அரசவையினர் காணக்கிடைக்கின்றனர்; முதன்முறையாக, ஓர் அரண்மனை மேலாளர் அவருடன் இருக்கிறார்; முதன்முறையாக, சாமானிய வெகுஜனத்துக்கும் கலீஃபாவுக்கும் இடையிலான உறவுமுறை ஓர் மத்தியஸ்தரை வேண்டி நின்றது; முதன்முறையாக, பொதுக் கருவூலம் கலீஃபாவின் விருப்பப்படி கையாளப்பட்டது. எந்த அளவுக்கெனில், சாவிகள் வைத்திருப்பவர் மசூதிக்குச் சென்று பொதுக் கருவூலத்தின் சொந்தக்காரர்களான மக்களிடம் பின்வருமாறு அறிவிக்கிறார், “கலீஃபா குறுக்கிடுவதால் சாவிகளை உங்களிடமே கொடுத்துவிடுகிறேன். நான் ராஜினாமா செய்கிறேன். உங்களுக்கு வேண்டுமா?”; முதன்முறையாக, ஓர் அரசியல் சிறைச்சாலை காணக்கிடைக்கிறது; முதன்முறையாக, கலீஃபாவின் அல்லது அவரது முகவர்களின் நடைமுறையைச் சாடினார் என்பதற்காக முஸ்லிம் ஒருவர் கண்காணிக்கப்படுகிறார்; முதன்முறையாக, அரசியல் நாடுகடத்தல் நிகழ்கிறது; முதன்முறையாக, ஒரு மனிதர் (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்) ஆட்சி அமைப்பால் சித்திரவதை செய்யப்படுகிறார்; முதன்முறையாக, அரசியல் ரீதியிலே மக்களை ஏமாற்றுவதற்கான ஓர் உபாயமாக புனித குர்ஆன் பயன்படுத்தப்படுகிறது; முதன்முறையாக, மக்களின் விதியில் தான்தோன்றித்தனமாக விளையாடுவதற்கான கடிவாளம் ஆட்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது, மேலும் எல்லாவித சட்ட ரீதியான, இஸ்லாமியப் பொறுப்புகளிலிருந்தும் அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்கின்றனர்; முதன்முறையாக, கோத்திர ரீதியான உறவுகளும் இரத்த பந்தங்களும் அரசியல், சமூக முன்னேற்றத்துக்கான ஏணிகள் ஆகின்றன; முதன்முறையாக, உயர் பதவிகள் எல்லாம் ஏகபோகம் ஆக்கப்பட்டன, அவை கலீஃபாவுடனான அரசியல் உடன்படிக்கையில் அங்கத்தினர்களாக இருந்தவர்களின் தனியுடைமை ஆயின; பதவியில் அமர்வதற்கான உரைகல்லாக, இஸ்லாமும் இறையச்சமும் இருந்தது போய் இப்பொழுது இரத்த பந்தங்களும் அரசியலும் அந்த இடத்தை நிரப்பின; முதன்முறையாக, வகுப்புகளின் சுரண்டல், முரண்பாடு, ஏற்றத்தாழ்வு, முதலாளித்துவம் (கின்ஸ்), மேட்டிமைவாதம், மூடத்தனமான பெறுமானங்கள், கோத்திர ரீதியான உந்துதல், முதுமை, செல்வ வளம், இனம், வம்சாவளி, ஆளுமை-வழிபாடு, கோத்திரச் சார்புணர்வு ஆகியவை இஸ்லாமியச் சகோதரத்துவம், ஆன்மிக மதிப்பீடுகள், சமூகச் சமத்துவம் ஆகியவற்றைவிட மேலோங்கிச் செழித்தன.

தக்வா, ஜிஹாதிய பின்னணி, நபிகளாருடனான நெருக்கம், குர்ஆனிய அறிவு, தனிமனித தகைமை எல்லாவற்றையும் பொருளாதாரச் சிறப்பந்தஸ்து வெற்றிகொண்டது. இமாமத் என்கிற தலைமைத்துவத்தை ஆட்சி புரிவதற்கான உந்துதலும் புரட்சிகர இயக்கம் ஒன்றை பழமைவாத முறை ஒன்றும் வென்றெடுத்தன; மதம், மனிதம், பொருளியல், அரசியல் ஆகியவற்றில் சிறப்பந்தஸ்தைத் தக்கவைக்கும் வேட்கையானது வெகுஜனத்தை உள்ளிழுக்கும் இஸ்லாமியச் சமத்துவம் மற்றும் சுதந்திரத்தை வெற்றிகொண்டன. சமூகத்தின் அரசியல் விதியில் மற்றவர்கள்போன்ற அதே பொறுப்புணர்வு கொண்ட, கலீஃபா என்ற முறையில் குறுக்கிடுவதற்கான உரிமையைப் பெற்றிருந்த, பெரும் நபித்தோழர்களின் அதே தராதரத்தில் வீற்றிருந்த ஓர் குழப்பமான மனிதர் இவற்றுக்கிடையில் காணக்கிடைத்தார். என்றாலும், பொதுவாகக் கூறினால், உண்மை மீதான வேட்கையை சமரசத்தின் விளையாட்டுகள் வெற்றிகொண்டன; போராட்டத்தை அரசியலும், இஸ்லாமிய உண்மைகளை இஸ்லாமியக் கோஷங்களும் வெற்றிகொண்டன; விசுவாசிகளை மூத்த நபித்தோழர்கள் வெற்றிகொண்டார்கள்; உம்மத்தை வர்க்கமும், மசூதியை கலீஃபாவின் வீடும், மனித கண்ணியத்தைக் கோத்திர மேட்டிமைவாதமும், புதிய புரட்சியைப் பழைய அறியாமையும், மரபை நூதனமும், இறுதியாக, முஹம்மதின் குடும்பத்தை அபூ சுஃப்யானின் குடும்பமும் வெற்றிகொண்டன. 
  
விளைவாக, அலீ நிராயுதபாணி ஆக்கப்பட்டார்! இன்னும், அபூ பக்கரின் தேர்விலும் உமரின் நியமனத்திலும் அலீயின் தோல்வியை முழுமையாக ஒப்புக்கொண்டதன் விளைவாய்த் துயரத்தை அனுபவித்துவந்த அபூ தர் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார். எல்லாமே மாறிய பிறகு இப்பொழுது ஒரு கணம்கூட அவரால் மெளனமாக இருக்க முடியாது: எதேச்சாதிகாரம், தங்கம், பித்தலாட்டம் ஆகிய இந்த அச்சுறுத்தும் திரித்துவம் ஏகத்துவத்தின் அழகிய போர்வையின் பின்னால் இருந்த நபிகளாரின் கலீஃபாவின் வெண்ணாடையில் வடிவம் கொண்டிருந்தது; அது மக்களை வெற்றிகொண்டது;  இந்தத் திரித்துவத்துக்காகத்தான் மக்கள் தொடர்ந்து பலியிடப்பட்டு வந்தனர்.

பொய்மை அவரை எதிர்த்தபோது உண்மைக்குத் துணைநின்றார்; குஃப்ர் எதிர்த்தபோது மதத்துக்குத் துணைநின்றார்; சுரண்டல் எதிர்த்தபோது உரிமைகளுக்கும் சரியானவற்றுக்கும் துணைநின்றார்; இறுதியாக, பிறழ்வு எதிர்த்தபோது நேர்வழிக்குத் துணைநின்றார். இவை மட்டுமல்ல அபூ தர்ரின் செயலுக்கான பெறுமானம். ஒப்பீட்டளவில் புரட்சிகரமான, முஜாஹித் முகங்களுக்கெல்லாம் இடையில் ஓர் தலைசிறந்த, சிறப்பான முகமாக அவர் மிளிர்வதற்குக் காரணம் அவரது போராட்டத்தில் அவர் தேர்ந்துகொண்ட துல்லியமான, தெளிவான நிலைப்பாடே. இதனால்தான் அவர், ஒரு சரியான மதிப்பீட்டின் அடிப்படையில், அனைத்து பிறழ்வுகளுக்குமான முக்கியக் காரணங்களைக் கண்டறிந்தார்; இந்தக் குஃப்ரின், வலதுசாரிகளின், பிறழ்வின் யதார்த்தத்தை அவர் தோலுரித்துக் காட்டினார்.

அவரது போராட்டத்தில் அவர் தெளிவற்ற சொற்றொடர்களிலோ சில்லறைக் கோஷங்களிலோ தற்சாய்வான விவகாரங்களிலோ தேவைகளிலோ துக்கங்களிலோ உறைந்திருக்கவில்லை; நடைமுறைச் சாத்தியமற்றவற்றிலோ, கற்பனைகளிலோ, தத்துவ வகையறாக்களின் வழிபாட்டு இலக்குகளிலோ, பண்டித பாவனைகளிலோ, இறையியலிலோ, அடுக்கடுக்கான கண்டன விவாதங்களிலோ, பிறழ்வை நோக்கிய, தற்சாய்வான விஷயங்களிலோ, அறிவுசார் நுட்பங்களிலோ, அறிஞர்கள், மெய்ஞானிகள், சட்ட வல்லுனர்கள், இறையியலாளர்களின் உணர்வெழுச்சிகளிலோ அவர் அமிழ்ந்திருக்கவில்லை. பின்னாளில் இஸ்லாமியச் சமூகத்தின் பூரா சச்சரவுகள், போராட்டங்களை அந்தந்தத் தளங்களுக்குள் இவை குறுக்கிவிட்டதன் விளைவாக ‘இமாமத்’, ‘நீதி’ ஆகிய இரு முக்கிய முழக்கங்கள் சிந்தனைகளை விட்டும் அகன்றுபோயின.

காரணங்களின் இடத்தில் அவர் விளைவை வைத்துப் பார்க்கவில்லை. ‘ஒருவர் எங்கிருந்து தொடங்க வேண்டும்’ என்பதை அவர் காட்டினார்; போராட்டத்தின் கூரிய முனை எதை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்; பிறழ்ந்துபோன சச்சரவுகளும் நிகழ்வுகளின் தவறான கிரகித்தலும் எதிரியுடனான போராட்டத்தை எதிரி விரும்பும் போக்கிலேயே கொண்டுசென்றுவிடும் என்பதை அவர் கற்றுத் தந்தார். பிறகு என்னதான் வெற்றி என்பது கிட்டியிருந்தாலும், வேதனை எதுவும் ஆறியிருக்காது, எதிரியும் பாதிப்படைந்திருக்க மாட்டார்.  

நீதியை நிலைநிறுத்துவதற்காகத் தனது போராட்டத்தின் பிரதான தடத்தை வகுப்பு வேறுபாட்டுக்கு எதிரான ஒரு போராட்டமாக அவர் நிர்ணயித்துக்கொண்டார். இந்த இரு முழக்கங்களுமே (வகுப்பு வேறுபாடு மற்றும் நீதி) மிக விசாலமானதாக இருப்பதால் கிலாஃபத்தும்கூடத் தனது பிரச்சார வசதிகளைப் பயன்படுத்தி, அதாவது பிரசங்க மேடை, மிஹ்ராபை எல்லாம் பயன்படுத்தி, அவற்றைப் பிரகடனம் செய்யலாம். மட்டுமில்லாமல் அதிகாரபூர்வ, ஆளும் இஸ்லாத்தின் பிரச்சார முகவர்கள், மரபுகளின் பரப்புரையாளர்கள், பிரச்சாரகர்கள், போதகர்கள், உரையாசிரியர்கள், சட்டவியல் நிபுணர்கள், அறிஞர்கள் மூலமாக அவற்றை நியாயப்படுத்தவும் மிகைப்படுத்தவும் செய்யலாம். அதன் பிறகு அவற்றுக்கென்று எந்த மதிப்பும் இருக்காது. தன் போன்றவர்களுக்குப் பாடமாக அமைவதன் நிமித்தம் தங்கள் இஸ்லாத்தை அலீயின் ‘முஹம்மதி-இஸ்லா’மாக ஆக்கிக்கொள்ள அரும்பாடுபடும் அபூ தர் குர்ஆனை நோக்கித் திரும்பினார். தனது போர் கர்ஜனையை அவர் அதிலிருந்துதான் பெற்றார். 

(கின்ஸ்) தங்கம், வெள்ளியைப் பத்திரப்படுத்திக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிட (இன்ஃபாக்) மறுப்பவர்களுக்கு தாள முடியாத வேதனை குறித்து நற்செய்தி கூறுவீராக, அந்நாளில் அவர்கள் நரக நெருப்பில் சுட்டெரிக்கப்படுவார்கள், அவர்களது நெற்றிகளிலும், பக்கவாட்டுப் பகுதிகளிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ‘உங்களுக்காக நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருந்த வஸ்துகள் இவைதான்; ஆதலால், நீங்கள் பதுக்கிக்கொண்டிருந்தவற்றை இப்பொழுது சுவைத்துப் பாருங்கள்!’ (9: 34, 35)

பொக்கிஷங்களைச் சுட்டும் கின்ஸ் என்ற அரபிப் பதத்துக்கு, ‘மூலதனத்தைச் சேமிப்பது’ என்பது பொருள். தங்கமும் வெள்ளியும் முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகள்.

‘செலவிடும் செய’லான இன்ஃபாக், பிளவுபடுதல் என்று அர்த்தமாகும் நஃபாக்கிலிருந்து வருகிறது. இஃப்அல் எனும் வினைச்சொல் வடிவத்திலிருந்து எடுக்கப்பட்ட இது முதல் சொல்லின் அர்த்தங்களான ஒன்றின் பிளவை அகற்றுதல் மற்றும் இல்லாமல் ஆக்குதலுக்கு நேர்மாறான பொருளைத் தருகிறது. முதலாளித்துவத்தாலும் பொருளாதாரச் சுரண்டலாலும் சமூகத்தில் ஏற்படுகிற ஓர் விரிசலை, ஒரு பிளவைத்தான் இவ்வாக்கியங்கள் சுட்டுகின்றன என்பது தெளிவாகிறது. வகுப்பு ரீதியான விரிசல் அல்லது பிளவு, ஏற்றத்தாழ்வு, சமச்சீரற்ற அல்லது சமஅளவு அற்ற நிலையிலான சமூக வாழ்வு ஆகியவையே இங்கு சுட்டப்படுகின்றன.
 தொடர்ச்சி ஆறாம் பாகத்தில் ...

Tuesday, April 23, 2019

மீண்டும் அபூ தர் ... IV

மீண்டும் அபூ தர் ...

அலீ ஷரிஅத்தி

தமிழில்: சம்மில்

அத்தியாயம் 4

மூன்று முட்டாள் சிலைகள், உயர்வு மனப்பான்மை என்னும் ஷைத்தானிய வேட்கையை தங்கள் ‘சிற்பி-வழிபாட்டாளர்க’ளுக்கு உத்தரவாதப்படுத்தியிருந்தன. இதுபோன்ற ஒன்றை அப்பொழுதுதான் முதல் முதலாகப் பார்க்கும் அபூ தர், வியப்பிலும் கோபத்திலும், தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறார், ‘பல தெய்வக் கொள்கையின் குறியீடான இந்த முன்னூற்றுச் சொச்சம் சிலைகள் ஓரிறைக் கொள்கையின் குறியீடான ஆபிரகாமின் வீட்டில் என்ன செய்துகொண்டிருக்கின்றன?’

ஓர் வந்தேரியான அவர், தனிமையில், கொந்தளிப்போடும் தீர்மானத்தோடும் அவசரம்அவசரமாக ஸஃபாவிலிருந்து இறங்குகிறார். குகையைவிட்டு வெளியில் வந்து, ஹிராவிலிருந்து இறங்கி, இறை வெளிப்பாட்டின் முதல் சுடரின் தாக்கத்தால் அன்றைய இரவு கொந்தளிப்போடு எழுந்துவந்த முஹம்மதைப் பார்ப்பதுபோல இருக்கிறது இவரைப் பார்ப்பதற்கு; அல்லது, நிலநடுக்கமானது மலை ஒன்றிலிருந்து அரைத்து வெளிதள்ளும், மக்காவின் ஆழமான பள்ளத்தாக்கின் மீதும் பல தெய்வக் கொள்கை, நயவஞ்சகத்தனம், பாசாங்கு, இழிவு, உறக்கம் ஆகியவற்றின் மீதும் வந்து விழும் ஒரு கல்லைப்போலத் தெரிகிறார் இவர்.

இஸ்லாம் என்பது இன்னமும் மறைந்துதான் இருந்தது அர்கமின் வீட்டில். இஸ்லாத்தின் முழு உலகமும் இந்த வீடுதான். மேலும், அபூ தர்ரின் வருகையோடு உம்மத்தின் நபர்கள் நான்காக ஆகியிருந்தனர். மறைந்து வாழ்தல் – தஃகிய்யா - எனும் நிபந்தனைதான் போராட்டத்தின் இயக்க விசை. கிஃபாருக்குத் திரும்பிச் செல்வதற்காக, எந்தத் தயக்கமுமின்றி, மக்காவிலிருந்து வெளியேறிவிடும்படியும் அடுத்த உத்தரவுக்காகக் காத்திருக்கும்படியும் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால், இந்த ‘வனாந்தரத்தின் குழந்தை’யின் எலும்பும்தோலுமான நெஞ்சம் அத்தகைய தீப்பிழம்பு ஒன்றைத் தன்னுள் மறைத்துவைக்கும் செயலில் மிகவும் பலவீனமாக இருந்தது. தனது விசுவாசத்தின் கோயிலுக்கான ஒரு ஸ்தூபியாகத் திகழ்ந்த உயரமான, ஒல்லியான உடலுடையவராக, உரக்கச் சத்தமிடும் தொண்டையுடையவராக அன்றி வேறெதுவாகவும் இல்லாத அபூ தர்ருக்கு, கிளர்ச்சியைப் பறைசாற்றிய உருவத்தோடும் எரியும் இதயத்தோடும் அகண்ட பாலைவனத்துக்குக் கீழ்ப்படிந்தவராய், சட்டென்று உறைந்துபோய் அபூ தர்ராக மாறியிருந்த அவருக்கு பாசாங்கு செய்வதோ மறைந்து வாழ்வதோ இயலாத காரியம்; தெரிந்ததெல்லாம் கிளர்ச்சி ஒன்றுதான். இப்படிப்பட்ட ஒரு சூழலில் செயலாற்றுவதற்கான திறன் வேண்டும், அவரோ திறனற்றவராக இருந்தார். “இறைவன் எந்த ஒரு ஆன்மாவின் மீதும் அதன் திறனை மீறிப் பொறுப்புச் சாட்டுவது இல்லை” (2:286).

கஅபாவுக்கு முன்னால், பயங்கரமான சிலைகளை நேருக்கு நேர் பார்த்தவராக, குறைஷி நிர்வாகச் சபை இருந்த தார் அல்-நதூஹுக்கு அருகாமையில் நின்றுகொண்டு ஓரிறைக் கொள்கையின் முழக்கத்தை அவர் கூச்சல்போட்டு வெளிப்படுத்துகிறார்; முஹம்மதின் இலட்சியப் பாதையில் தனது விசுவாசத்தை அவர் பிரகடனம் செய்கிறார்; ‘மனிதர்களால் செதுக்கப்பட்டிருக்கும் பேச்சுமூச்சற்ற கற்கள்.’ என்று அந்தச் சிலைகளை அவர் அழைக்கிறார்.

இஸ்லாம் வெளிப்படுத்திய முதல் முழக்கம் இதுதான்; பல தெய்வக் கொள்கைக்கு எதிராக முதல் முறையாக ஒரு முஸ்லிம் கிளர்ச்சி செய்கிறார். பல தெய்வக் கொள்கையின் பதில் தெளிவாக இருந்தது, மரணம்! மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமையப்போகும் ஒரு மரணம். முழக்கமிடும் இந்த முதல் குரல்வளைத் துண்டிக்கப்பட வேண்டும். சிறிதும் தயங்காமல் அவர் மீது பாய்ந்த அவர்கள் அவரது தலை, முகம், மார்பு, பக்கவாட்டுப் பகுதி ஆகியவற்றில் ஆக்ரோஷத்துடன் குத்தினர். அவரது “குஃப்ருக்குச் சமமான” முழக்கங்கள் துண்டிக்கப்படும்வரை குத்துகள் தொடர்ந்தன.

அப்பாஸ் வந்தார். நபிகளாரின் சிறிய தந்தையும் குறைஷி உயர்தட்டு மக்கள் மற்றும் பல தெய்வக் கொள்கையாளர்களான முதலாளிகளின் வகுப்பைச் சேர்ந்தவருமான அவர் அவர்களை பயமுறுத்தும்படி பேசினார், “இந்த ஆள் கிஃபாரைச் சேர்ந்தவர். நீங்கள் இவரைக் கொன்றால், உங்கள் கேரவான்களுக்கு எதிராக கிஃபாரின் வாள்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்ளும்!”

தங்கள் மதத்துக்கும் வாழ்வுக்கும் இடையே அவர்கள் முடிவெடுக்க வேண்டும், கடவுளா சரக்குகளா? அன்பைச் சொரியும் கிப்லாவா பணம் பெருகச் செய்யும் கேரவானா, எது வேண்டும்?

அவர்கள் தயக்கமில்லாமல் பின்வாங்கினர். அபூ தர், ஒரு சிலைபோல, இரத்தத்தால் மாசுபடுத்தப்பட்டு நொடிந்துபோனவராய், வட்டமான ஒரு கும்பலுக்கு நடுவே நின்றிருந்தார். இந்தக் கும்பல், சிரமப்பட்டு எழ முயன்ற, தங்களிடம் சிறைபிடிக்கப்பட்டிருந்த அந்த ஒற்றை மனிதரை அச்சத்துடன் பார்க்கிறது. வட்டத்தின் விட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அவர் எழுகிறார். தனது இரு கால்களின் பிடிமானத்தைக் கொண்டு தன்னை வலுப்படுத்திக்கொள்கிறார். கும்பலின் அடர்த்தி மேலும் அதிகரிக்கிறது; ஏதோ தங்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் அடைக்கலம் தேடுவதுபோல் இருந்தது அது. இங்குதான் வற்புறுத்தல் விசுவாசத்தை அஞ்சுகிறது. அவர் ஒரே முகம்; அவர்களோ முகமற்றவர்கள், ஆளுமையற்றவர்கள். அவர் ஒண்டி ஆள்; அவர்களோ அடையாளமற்றவர்கள். எக்கச்சக்கமான மந்தைகளை எதிர்த்து நிற்பதோ ஒரே ஒரு மனிதர்; ஒரு தனி ஆள். அர்த்தம், முக்கியத்துவம், குறிக்கோள்கள், சுய நிர்ணய உரிமை ஆகியவற்றையும் விசுவாசி ஒருவருக்கு வீரமரணம் கொடையளிக்கும் அற்புதமான, அதிசயம்-போன்ற, தோல்வியற்ற ஓர் வல்லமையையும் விசுவாசத்தால் ஈட்டிய ஒரு தனி ஆள்.

அவர் அவசரமாகப் புறப்பட்டார். ஜம் ஜம் கிணற்றுக்குத் தன்னை இட்டுச்சென்றார். தனது காயங்களை எல்லாம் கழுவினார். தனது இரத்தத்தைச் சுத்தப்படுத்தினார். அடுத்த நாள் மீண்டும் அவர் சம்பவ இடத்துக்கு வருகிறார்; மறுபடியும் மரணத்தின் விளிம்புவரைச் செல்கிறார். அப்பாஸ் வந்து அவரை அறிமுகப்படுத்துகிறார், ‘இவர் கிஃபார் கோத்திரத்தைச் சேர்ந்தவர் ...”. மீண்டும் அடுத்த நாள் அதேபோல். அறுதியாக நபிகளாரே இதில் தலையிட வேண்டி வருகிறது. இம்முறை அபூ தர்ரின் உயிரைக் காப்பாற்றுவது என்று இல்லாமல், கட்டளை ஒன்றின் வாயிலாக, திணறடிப்பும் அபாயமும் சூழ்ந்திருக்கும் இந்த நகரத்திலிருந்து ஓய்வற்ற இந்தக் கலகக்காரரை அகற்றி (இஸ்லாத்தை நோக்கி) கிஃபார் கோத்திரத்துக்கு  அழைப்பு விடுக்கும் பணியில் ஈடுபடுத்துகிறார். அபூ தர் தனது குடும்பத்தையும், சிறுகச்சிறுக, தனது முழுக் கோத்திரத்தையும் இஸ்லாத்தில் பிணைத்துவிடுகிறார். மக்காவில் போராட்ட வாழ்வின் சிரமங்களை முஸ்லிம்கள் அனுபவித்துவந்த நேரத்திலும், அவர்கள் இடம்பெயர்ந்து சென்ற நேரத்திலும், மேலும் மதீனாவில் தனிநபர்மயம் எனும் நிலையிலிருந்து சமூக அமைப்பு ஒன்றை நிறுவும் நிலைக்கு அவர்கள் உயர்ந்த நேரத்திலும், அதன் விளைவாக யுத்தங்கள் மூள ஆரம்பித்த நேரத்திலும் அவர் கிஃபாருடனேயே இருந்தார்.

இந்தத் தருணத்தில்தான் அபூ தர் சம்பவ இடத்தில் தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொள்கிறார். மதீனாவுக்குச் செல்கிறார். அங்கே, அவருக்கென்று உறைவிடமோ வேலையோ இல்லாத காரணத்தால், அந்தக் காலத்தில் மக்களின் வீடாக இருந்த நபிப் பள்ளிவாசலையே தனது வீடாகவும் அவர் ஆக்கி ஸஃப்ஃபா (திண்ணை) தோழர்களுடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். வாழ்வைச் சித்தாந்தத்துக்காக அர்ப்பணிக்கிறார். அமைதி, சிந்தனை, கல்வித் தேட்டம், வழிபாடு ஆகிய தருணங்களிலும், யுத்த தருணத்திலும், யுத்தங்களிலும் இந்த இயக்கத்துக்காக அவர் சேவையாற்றுகிறார்.

நபிகளாரின் தலைமைத்துவத்தின் கீழ் இஸ்லாம், அபூ தர்ரின் எல்லா மானுடத் தேவைகள், சமூக வேட்கைகளையும் பூர்த்திசெய்கிறது; ஒரு புறம் கடவுள், சமத்துவம், மதம், உணவுத் தன்னிறைவு, அன்பு, ஆற்றல் ஆகியவற்றுக்கும், மறுபுறம் இறுமாப்பு, யதேச்சதிகாரக் கொடுங்கோன்மை, ஏற்றத்தாழ்வு, குஃப்ர், பட்டினி, பலவீனத்தையும் இழிநிலையையும் வேண்டிநிற்கும் அவற்றின் மதம் ஆகியவற்றுக்கும் இடையில் ஓரிரைக் கொள்கையை அடித்தளமாகக் கொண்ட இஸ்லாம் போராட்டத்துக்கான கதவைத் திறந்துவிட்டது. சூறையாடும் ஒடுக்குமுறையாளர்களின் மாயக் கதைகளுக்கெல்லாம் இஸ்லாம் முதல் முறையாக ஓர் முடிவு கட்டியது. இவர்கள்தாம், ‘இவ்வுலக வாழ்க்கை வேண்டுமா மறுமை வேண்டுமா ...’ போன்ற கோஷங்கள் மீது மக்களுக்கு விசுவாசத்தை ஏற்படுத்தியிருந்தனர். இதனால், ‘மறுமை’ மக்களுக்கானதாகவும் ‘இவ்வுலகம்’ தங்களுக்கானதாகவும் இருக்கும். இவ்வழியில் அவர்கள் வறுமைக்கு ஓர் தெய்வீகப் புனிதத்துவத்தைக் கற்பித்திருந்தனர்.

இந்த மனிதத் தன்மையற்ற பார்வையில், “வறுமை என்பது குஃப்ர்” என்று சொன்ன ஓர் உண்மைப் புரட்சியை இஸ்லாம் சாத்தியப்படுத்தியது. “வாழ்வாதாரம் இல்லாதவர்கள் பிழைத்திருக்க மாட்டார்கள்.”, “தெய்வீக அருள், (சமூகத் தேவைக்கான) அபரிமிதமான செல்வம், சுபிட்சமான நிலை, நற்குணம் எல்லாம் உலகாயத வாழ்க்கையின் ஓர் அங்கமாகும், மேலும் ‘உணவு’ என்பது கடவுளை வழிபடுவதற்குத் தேவையான ஓர் உள்கட்டமைப்பு.” “வறுமை, இழிநிலை, பலவீனத்துடன் இணைந்து மதம், ஆன்மிகம், இறையச்சம் எல்லாம் ஒரே சமூகத்தில் கலந்திருப்பதா?” அது ஒரு பொய்! இதன் காரணத்தால்தான் அபூ தர்ரின் இறைத்தூதர் ஓர் ஆயுதம் தரித்த இறைத்தூதராக இருந்தார்: அவரது ஓரிறைக் கொள்கை ஓர் தற்சாய்வான, ஆன்மிகம் சார்ந்த, தனிப்பட்ட தத்துவம் கிடையாது. அது இனங்களின் ஒற்றுமை, வகுப்புகளின் ஒற்றுமை, அனைத்து மனிதருக்கும் அவரவர் பங்குக்கும் உரிமைக்கும் ஏற்றார்போல் கிடைக்கும் சம வாய்ப்பு ஆகியவற்றுக்கான இணைபிரியாத உறுதுணையாக இருந்தது. அதாவது, ஓரிறைக் கொள்கையின் உறுதிமிக்க அனைத்துக்கும் அப்பாற்பட்ட அமைப்பு என்பது வெறுமனே வார்த்தைகளினூடாகச் செயல் வடிவம் பெற்றுவிடாது; தூதுச் செய்திக்குப் போர்வாள் பக்கபலமாக இருத்தல் அவசியம்.

இதற்காகத்தான் அபூ தர் தனது தனிப்பட்ட லெளகீக வாழ்வைத் துறக்கிறார். ஏனெனில், பிறரது வறுமைக்காகப் போராடுகிற ஒரு நபர் தனது வறுமையை ஏற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும், மேலும் தனது விடுதலையை உத்தரவாதப்படுத்தியிருக்கும் ஒரு நபரால் மட்டுமே தனது சமூகத்துக்கான விடுதலையைப் பெற்றுத்தரவும் முடியும். கிறிஸ்தவத்தையோ புத்தரையோ ஒத்திருக்கும் ஒரு சூஃபி கட்டுப்பாடாக அல்லாத, இஸ்லாமியக் கட்டுப்பாடான ‘புரட்சிகரமான விசுவாசத்துக்கு’ அழைப்பு விடுப்பவர் அவர். இதனூடாக உலகாயத நலன்களும் பொருளாதாரச் சமத்துவமும் மக்கள் எல்லோருக்கும் கிடைக்கப்பெறும்.

அதனால்தான் இந்தப் புரட்சிகர மதம், ‘இம்மை மறுமை இரண்டையும் சார்ந்த’ இந்த மதம், பலவீனத்தையோ துறவறத்தையோ வயிற்றிலடிப்பதையோ இயற்கையிடமிருந்து அந்நியப்படுவதையோ இயற்கை குறித்து மனிதர்கள் கொண்டிருக்கும்‘இறுதி-நாள்-மயக்க’த்தையோ ஆதரிக்காத இந்த மதம், ‘சுபாவத்தில் புனிதம்மிக்கவர்களாக’, ‘பொருள்முதல்வாத உலகில் இறைவனின் பிரதிநிதியாக’ மனிதர்களை ஆக்கும் ஒரு மதமாக இருக்கிறது! அபூ தர்ரின் தலைவர், அவரது இறைத்தூதர், ஏனைய எல்லோருக்கும் முன்பிருந்தே கடவுளின்/மக்களின் வீடான மசூதியில் வசித்துவருகிறார்; அது முஹம்மது, அலீ, ஸஃப்ஃபா தோழர்களான சல்மான்கள், அபூ தர்கள் போன்றோரின் வீடு.

அபூ தர்ரேகூட மசூதியின் மூலையில் இருந்த ஓர் கூரை வேய்ந்த திண்ணையின் (ஸஃப்ஃபா) கீழ்தான் காணக்கிடைத்தார், தனது வெற்றியின் உச்சத்திலும்; புனித நபிக்கு மிகவும் நெருக்கமான தோழர்களுள் ஒருவராக அவர் ஆகிவிட்டிருந்தார். ஏதேனும் குழாமில் அவர் இல்லையென்றால் நபிகளார் அவரைப் பற்றி விசாரிப்பார்; ஏதேனும் குழாமில் அவர் இருந்தாரெனில் பேச்சுகளுக்கிடையிலும் அவரைத் திரும்பிப் பார்ப்பார். தபூக் போரில், நபிகளாரின் தலைமைத்துவத்தின் கீழ், வீரர்கள் சுட்டெரிக்கும் வடக்குப் பாலைவனத்தைக் கடந்து (கிழக்கு) ரோமாபுரியின் எல்லைகளைச் சிரமத்தினூடாகச் சென்றடைய வேண்டியிருந்த சூழலில், அபூ தர் அவர்களை விட்டும் தூரப்பட்டிருந்தார். அவரது நோஞ்சான் ஒட்டகம் நின்றுவிட்டது. பொழியும் நெருப்பு மழையில் அதை விடுவித்த அவர் தனியாக நடையைக்கட்டினார்! வழியில் சிறிதளவு தண்ணீரைக் கண்டார்; இதுபோன்ற பாலைவனம் ஒன்றில், சந்தேகத்துக்கு இடமின்றி, தாகத்தால் தவித்துக்கொண்டிருக்கும் தனது ‘நண்பரிடம்’ கொடுப்பதற்காக அதை எடுத்துச் சென்றார். மூர்க்கமான பாலைவனத்தின் ஆழத்திலிருந்து  முன்னோக்கி நகர்ந்துகொண்டிருந்த தெளிவற்ற புள்ளி ஒன்றை நபிகளாரும் முஜாஹிதுகளும் பார்க்கின்றனர். அது ஒரு மனிதர்தான் என்பதைச் சிறுகச்சிறுக அவர்கள் உணர்ந்துகொள்கின்றனர்! யார் அது? இந்தக் கனல் வீசும் பாலைவனத்தில் நடந்துவருவது, அதுவும் தனியாக? நபிகளார், பேராவல் ததும்பும் ஓர் உற்சாகத்தில், உரக்கக் கத்தினார், “அவர் அபூ தர்ராகத்தான் இருக்க வேண்டும்!”.  ஒரு மணி நேரம் கழிந்தது. அவர் அபூ தர்ரேதான். முஜாஹிதுகளை எட்டிய அவர் தாகத்தாலும் தளர்ச்சியாலும் மண்ணில் சாய்ந்தார்.

“தண்ணீர் உன்னிடம் இருக்கிறது, ஆனாலும் தாகத்துடன் இருக்கிறாய் அபூ தர்?” என்று நபிகளார் கேட்க அபூ தர் பின்வருமாறு பதில் அளிக்கிறார், “நான் நினைத்ததெல்லாம், இப்படி ஒரு பாலைவனத்தில், தழல் கக்கும் இந்தச் சூரியனின் கீழ், உங்களுக்கு ...”   

“அபூ தர் மீது இறைவன் அருள் பாலிப்பானாக! அவரது வாழ்வியக்கம் தனிமையில், மரணம் தனிமையில், அவர் உயிர்ப்பிக்கப்படுவதும் தனிமையில்!” நபிகளார் கூறினார்.  

தொடர்ச்சி ஐந்தாம் பாகத்தில் ...